நாய் வில்லர்கள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 24, 2021
பார்வையிட்டோர்: 14,866 
 
 

பொமரேனியன், ராஜபாளையம், அல்சேஷன், ஆதிசேஷன், அனந்தசேஷன் – என்று செல்லமாக வளர்ப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, நாய்களின் மீது துவேஷம் காட்டிய என் போன்றோர் மீது தயவுசெய்து பழக்கதோஷத்தில் பாயாதீர்கள் !

தெருவில் செல்லும்போது எதிரில் வரும் நாய், நான் உனது தோழன்’ என்று வாலை ஆட்டி வெள்ளைக் கொடி காட்டிய பின்பும் கால்களின் ஆடுசதை நடுங்க வலசம்மாவை விட வேகமாக ஓடும் எங்கள் மீது அனுதாபம் காட்டுங்கள்.

குரைக்கும் நாய் கடிக்காது’ என்ற கொள்கையை, பல நாய்கள் தேர்தல் வாக்குறுதிகளாக நினைத்து மறந்து விட்டன. சில நாய்கள் குரைப்பதைப் பார்க்கும்பொழுது பேசாமல் அவை குரைக்காமல் லேசாகக் கடித்துவிட்டுப் போனால் கூட தேவலாம் போலிருக்கிறது! அதுவும் என் போன்ற பயந்த சுபாவம் உள்ளவர்களைப் பார்த்துவிட்டால் எப்படியோ கண்டுபிடித்துவிடும் இந்த பைரவர்களுக்குப் பரம சந்தோஷம்.

சில போக்கிரி நாய்கள் மேலே விழுந்து கடிக்காமல் ஒரு பத்து இருபது அடி இடைவெளி விட்டு, குரைப்பு என்ற பெயரில் பேமானி… சோமாறி… கசுமாலம்’ என்று கெட்ட வார்த்தைகளை நாய் பாஷையில் மொழிபெயர்த்து நம்மை வசை பாடிக்கொண்டே வீதி முனை வரை வந்து வழியனுப்பிவைக்கும். பயந்து ஓடினால் துரத்தி வந்து பதம் பார்க்கும். நின்றாலோ ஒருவேளை நிதானமாக ஆற அமரக் கடித்தாலும் கடிக்கலாம். ஓடவும் முடியாமல், அதேசமயம் நிற்கவும் பயந்து வீதியைத் தாண்டி விடும் வெறியில் அசுரத்தனமான வேகத்தோடு நடப்பவர்களைப் பார்க்கும்பொழுது ஏஷியாட்டில் நடந்த வாக்கிங் ரேஸ்’ நினைக்கு வரும்.

குரைக்காத நாய்கள் ஒருவேளை ஊமையாக இருக்கலாம் அல்லது அன்றைய தினத்தில் மௌன விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், நாய்கள் நம்மைப் பார்த்துக் குரைத்தாலும் குரைக்கா

விட்டாலும் நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. பால், ரொட்டி, பிஸ்கட் என்று நாம் நாயை என்னதான் சைவமாக்கினாலும் அவற்றின் ஆதார ஆகாரம் அசைவம்தான்.

முக்கியமாக, தன்னைக் கண்டு நடுங்குபவர்களின் ஆடுசதை அவற்றுக்கு மிகவும் இஷ்டமான நாஷ்டா’.

நாய் துரத்தினால் ஓடாதே’ என்பார்கள். அதை நம்பாதீர்கள். நாய் துரத்தியும் ஓடாதவர்கள் தமது இரு கால்களின் ஆடுசதைகளையும் பிளேட்டில் வைத்து இந்தா, பிரியாணி என்று சமர்ப்பிப்பதற்குச் சமானமாகும்.

நான்கு ஐந்து மாதங்களே நிரம்பிய பால நாய்கள் சிலசமயங்களில் நம்மிடம் வந்து நமது காலைப் பிரதட்சிணம் செய்து கொண்டே வம்புக்கிழுக்கும். இந்தச் சிறுவனிடம் நான் புறமுதுகு காட்டுவதா’ என்ற அசட்டுத் தைரியத்தில் அதைக் கல்லால் அடித்து விரட்ட முயலாதீர்கள்.

அருகாமையில் உள்ள குப்பைத் தொட்டிகளில் டின்னர்’ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் குட்டி நாயின் பெற்றோர்கள் தாம் ஈன்றெடுத்த மகனை இம்சிக்கும் உங்கள் மீது பாயக்கூடும்.

கூடியவரையில் சிறிய நாய்களோடு சிநேகம் வைத்துக்கொள்வது நல்லது.

இந்தச் சிநேகம் மாதா – பிதா நாய்களின் நன்மதிப்பைப் பெறுவதற்கு உபயோகப்படலாம். சாதாரணமாக நாய்களின் மொத்த ஆயுள் பத்து அல்லது பதினைந்து வயதுதான்.

இன்று பார்ப்பதற்குச் சாதாரணக் குழந்தையாகத் தோற்றமளிக்கும் குட்டிகள், ஓரிரு வருடங்களில் ஆண்மை அடைந்து அட்டகாசமாக வளர்ந்துவிடுகின்றன. பால் மணம் மாறாப் பருவத்தில் தன்னை இம்சித்தவர்களைப் பற்களுக்கு இடையே வைத்துப் பார்க்க ஆசைப்படுகின்றன.

நமது தெரு நாய்தானே!’ என்று அலட்சியப்படுத்தாதீர்கள். பக்கத்துத் தெருவில் அதற்கு ஒரு காதலியோ அல்லது ஆசை நாயகியோ இருந்தாலும் இருக்கலாம். அதனால்தான் கூறுகிறேன், ‘உனது தெரு நாயை நீ ஊட்டி வளர்த்தால்… பக்கத்து தெரு நாய் உன்னிடம் லூட்டி அடிக்காது.’

‘நாய் வாலை நிமிர்த்தினேன்’ என்று யாராவது கூறியதை நம்பியவர்கள் காதிலே பூ’ வைத்திருப்பவர்கள் என்றால் வாலை ஆட்டும் நாய் நம் மீது பாசத்தைப் பீரிட்டு அடிக்கிறது’ என்பதை நம்புபவர்கள் காதிலே பிருந்தாவன் கார்டனையே வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஜிம்மி ஜிம்மி…. உங்கம்மா அடிக்கடி வாலை ஆட்டுகிறாளே… இதன் உண்மையான அர்த்தம் என்ன?’ என்று எனது நண்பன் வீட்டு நாய்க்குட்டி ஜிம்மியின் கழுத்துப் பட்டையைப் பிடித்து ஒரு நாள் தீர விசாரித்தேன்.

“தலைவரே! நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். உங்களில் சிலருக்குக் கண் சிமிட்டுவது போல வேடிக்கையான ‘மானரிசங்கள் இருப்பது போன்றே, வாலை ஆட்டுவது எங்களில் பலருக்கு மானரிசம்.’ மற்றபடி வாலுக்கும் எங்கள் வாய்க்கும் எந்தவித கனெக்ஷனும் கிடையாது” என்று நாய் மழலையில் நவின்றது ‘ஜிம்மி’.

“ஆஃப்டர் ஆல் ஒரு நாலு கால் ஜந்துவுக்கு இவ்வளவு முக்கியத்துவமா” என்று நீங்கள் கேட்கலாம். நாய்களிடம் நான் பட்டபாட்டை தேவர் பிலிம்ஸ் கேட்டால் ‘நாய் மேல் ஆணை’ என்று படமே எடுத்துவிடுவார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், நான் இரவு ஷிப்டை முடித்துவிட்டுத் தனியாக ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தேன். மவுண்ட் ரோடு ஜெமினி சந்திப்பில் கிட்டத்தட்ட பத்து நாய்கள். சிலதுக்கு இந்தி வில்லன் நடிகர்கள் ஜாடை இருந்தது. நடு இரவில் உனக்கு இங்கு என்ன வேலை நபும்சகா?’ என்ற பாவத்தில் அவை என்னைப் பார்த்து பற்களால் கேட்டன.

நான் ஸ்கூட்டரை ஸ்லோ செய்து ஓரமாக நழுவப் பார்த்தேன். அதற்குள் எனது பின்னே நாற்பது கால் பாய்ச்சலில் பத்து நாய்கள் துரத்த ஆரம்பித்தன. அன்று சோழவரம் நடந்திருந்தால் நான்தான் முதலில் வந்திருப்பேன்.

கவர்னரின் முன்னேயும் பின்னேயும் பக்கவாட்டங்களிலும் ‘பைலட்’ வருவது போல எனது நாலு பக்கங்களிலும் நாய்கள் சூழ்ந்து கொண்டு குரைத்துக்கொண்டே துரத்திய வண்ணம் ஸ்டெல்லா மாரிஸ்’ வரை வந்து, ஓடிய ஆயாசத்தில் நின்று “இன்று போய் நாளை வா…” என்று கூறிவிட்டு, பழையபடி தமது பாசறையான ஜெமினி சந்திப்புக்குத் திரும்பின.

ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு எதிரே பார்த்தால்…… ஸ்டெல்லா மாரிஸ் அருகே என்னை வரவேற்க ஒரு சைன்யமே காத்துக் கொண்டிருந்தது.

ஜெமினியிலாவது பரவாயில்லை. மொத்தம் இருந்ததே பத்துதான். ‘ஸ்டெல்லா மாரிஸ்’ வாயிலில் கிட்டத்தட்ட நாற்பது நாய்கள்… நாய்களின் உற்பத்தி ஸ்தானமே இதுதானோ என்று சந்தேகம் வரக்கூடிய அளவுக்கு விதவிதமான நாய்கள்… எனது அடுத்த ரிலே ரேஸ்’ ஸ்டெல்லா மாரிஸில் ஆரம்பித்து மியூசிக் அகாடமி வரை தொடர்ந்தது.

“ரிலே ரேசின் மூன்றாவது கட்டத்தில் பங்கு கொள்வதற்காக மற்றுமொரு பட்டாளம் மியூசிக் அகாடமி வாயிலில் காத்திருந்தது.

இதுவரை நடந்த துரிலே ரேஸ் என்றால் மியூசிக் அகாடமியிலிருந்து நடந்தது க்ராஸ் கண்ட்ரி ரேஸ்’! மியூசிக் அகாடமியிலிருந்து என்னை விரட்ட ஆரம்பித்த நாய்கள், கல்யாணி ஆஸ்பத்திரி வரை தொடர்ந்தது.

அன்றைய இரவு நான் நிஜமாகவே நாய் படாத பாடுபட்டேன்! ஒரு வழியாக வீடு திரும்பிய எனக்கு , ஸ்கூட்டரில் வந்தும் கூட என்னமோ ஜெமினியிலிருந்து ஓடி வந்தது போலவே ஒரு களைப்பு! உறங்கியதும் சொப்பனத்திலும் என்னை நாய்கள் விடவில்லை. வீடு முழுவதும், பெரியதும் சிறியதுமாகப் பல்வேறு அளவுகளில் பல ஜாதி நாய்கள் அடைத்திருப்பது போல ஒரு கனவு.

மறுநாள் காலை எழுந்ததும் முதல் வேலையாக ‘நாயாய் அலைந்து’ புசுபுசுவென்று பார்ப்பதற்கு லட்சணமான ஒரு வாண்டுவை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். நாய் வளர்த்தால் தான் நாய் பயம் போகுமோ என்று உள்ளூர ஒரு சபலம்.

சம்பல் கொள்ளைக்காரர்களே எதிரில் வந்தாலும் குரைக்காமல், “என்ன! சம்பல் சார்… சௌக்கியமா…” என்று கேட்கும் அளவுக்கு அதை ஒரு சாந்த சொரூபியாக வளர்த்தேன்.

ஜிம்மி, ஜிக்கி என்று பெயர் வைத்து இதையும் மற்ற நாய்களில் ஒன்றாக மாற்றவேண்டாம் என்ற எண்ணத்தில் எனது நாய்க்கு ‘சேஷஹோமம் நடத்தி புண்யாவாசனம் செய்வித்து சீமாசு என்று பெயர் வைத்தேன். காலையில் எழுந்ததும் சீமாசுவுக்கு விபூதி இட்டு சுவாமியைக் கும்பிட வைத்தேன். அதன் காதுப்படப் பல சுலோகங்களை உரத்துக் கூறினேன். நாள் கிழமைகளில் சீமாசுவைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். பூணூல் ஒன்றுதான் போடவில்லை. மற்றபடி அனைத்து ஆசார அனுஷ்டானங்களும் சீமாசுவுக்கு அத்துபடி. குடிப்பதற்கு அமுல் அல்லது ஃபாரக்ஸ் – அதுவும் தட்டில் அல்ல; டம்ளரில் ஊற்றித் தருவேன். சீமாசு, தானே டம்ளரில் ஆற்றிக் குடிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றான்.

சீமாசுவுக்குத் தெரிந்த ஒரே நண்பன் எனது தங்கை வளர்க்கும் பூனை. (பூனையின் பெயர் பரமசிவம்) பூனையோடு சேர்ந்து வளர்ந்ததால் சீமாசு குரைப்பதைக் குறைத்துக்கொண்டு மியாவ் சொல்ல ஆரம்பித்தது.

இரண்டு வருடங்கள் சீமாசு இப்படியாக வெளிநாய் உலகமே தெரியாமல் வளர்ந்தான். வந்தது ஆபத்து. நான் அஜாக்கிரதையாக இருந்த ஒரு சமயத்தில் சீமாசுவுக்குப் பக்கத்து காலனி நாயோடு கெட்ட சகவாசம் ஏற்பட்டது. பக்கத்து காலனி நாய் சீமாசுவுக்குச் சுயதரிசனம் செய்வித்தது.

சீமாசு விழித்துக் கொண்டது. ஒரு நாயான தன்னைச் சேயாக வளர்த்து ஜாதி மாற்றம் செய்வித்த என்னோடு சீமாசு சிறிது நாட்கள் முகம் கொடுத்துப் பேசாமல் இருந்தது. பக்கத்துக் காலனி நாய் ஒவ்வொரு சமயங்களில் தனது மகளையும் கூட்டி வந்து சீமாசுவைக் காமாந்தகாரனாக்கியது. வளர்த்த கடா… சாரி வளர்த்த நாய் மார்பில் பாய்ந்தது. நான் வெளியூர் சென்றிருந்த ஒரு சமயத்தில் சீமாசுவுக்கும் பக்கத்து காலனி பைங்கிளிக்கும் திருட்டுக் கல்யாணம் நடந்தது. ஊரிலிருந்து திரும்பிய எனக்கு அதிர்ச்சி.

சீமாசு கட்டிய பெல்ட்டோடு இரவோடு இரவாக சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டதாக என் மனைவி கூறினாள்.

இப்பொழுதெல்லாம் கூட்டமாக நாய்கள் குரைத்துக்கொண்டு எதிரே வந்தால் நான் பயப்படுவதில்லை … மாறாக, அந்தக் கூட்டத்தில் என் சீமாசுவைத் தேடுகிறேன். செல்ல நாய் வளர்க்கும் வாசகர்களே! ஒரு வேண்டுகோள். தயவு செய்து என் சார்பாக உங்கள் வீட்டு நாய்களிடம் எனது சீமாசுவைப் பற்றிக் காதில் போட்டு வையுங்கள். ஒருவேளை அவற்றின் கண்களுக்கு சீமாசு தென்பட்டால் உடனடியாக எனக்குத் தெரிவியுங்கள்… ப்ளீஸ்….!

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *