நான் ஒன்று நினைக்க…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 29, 2023
பார்வையிட்டோர்: 6,773 
 

என்னை “கஞ்சப்பிரபு” என்று சுற்று வட்டார நண்பர்கள் பேசிக்கொள்வது எனக்கு தெரியும். இருந்தாலும் இதற்கெல்லாம் சங்கடப்பட்டால் ஆகுமா? அவர்கள் கிடக்கிறார்கள், என்று எப்பொழுதும் நினைத்து கொள்வேன்.

அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். மணி நாலு முப்பது, எப்படியும் யாராவது ஒருவர் என்னை தாண்டி இந்த வழியாக காண்டீனுக்கு செல்வார்கள்.

கிட்டத்தட்ட நூறு பேர்களுக்கு மேல் பணி புரிந்து கொண்டிருக்கும் தளம் அது. அனுபவப்பட்டவர்கள் என்னை கண்டவுடன் சட்டென தலை குனிந்து இல்லையென்றால் வேறெங்கோ பார்ப்பது போல என்னை தாண்டி சென்று விடுவர்.

இந்த அனுபவம் இல்லாதவர்கள் என்னை பார்த்து விட்டால், “வாங்க ஒரு டீ சாப்பிடலாம்” சம்பிரதாயமாக கேட்கத்தான் செய்வார்கள். அது போதும் எனக்கு, ஏதோ வேண்டா வெறுப்பாய் எழுவது போல (அதாவது அவர்கள் கூப்பிட்டு விட்டார்களே) என்கிற பாவனையில், (அப்பொழுதுதான் சாப்பிட்டதற்கு பணம் அவர்கள் கொடுப்பார்கள்.

இதில் சம்பிரதாயமான வார்த்தை விழும் “நாந்தானே கூப்பிட்டேன்” (இதை வேண்டா வெறுப்பாக கூட சொல்லியவர்கள் உண்டு)

இப்படியாகத்தான் என் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. அன்று நண்பன் ரவி என்னிடம் மாட்டிக்கொள்ள நேர்ந்து விட்டது. காரணம் நீண்ட விடுமுறையில் இருந்து வேலைக்கு வந்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. என்ன ஆச்சு? என்று நான் விசாரிக்க வேண்டாமா? அதுவும் சரியாக காண்டீன் போகும் நேரத்தில் மாட்டியிருக்கிறான்.

என்னப்பா “லாங்க் லீவுல” இருந்துட்டே. ஒண்ணுமில்லை வீட்டு வேலை கொஞ்சம் இருந்துச்சு, முடிச்சுட்டு வந்தேன். சர்வீஸ் முடியறதுக்குள்ள வீட்டை கட்டிட்டான், மனசு பொறுமினாலும் சிரித்து வைத்தேன். பரவாயில்லை எப்படியோ கட்டிட்டே. அவன் தலையாட்டினான். (மனதுக்குள் வேறு மாதிரி கூட நினைத்திருக்கலாம் பொறாமை பிடிச்சவன், இவனுக்கு ஏற்கனவே பரம்பரையாவே வீடு இருக்கு, இருந்தாலும் பொறாமை)

பேச்சு இழுத்தாலும் “வாங்க காண்டீன் பக்கம்”கூப்பிடுவதாக தெரியவில்லை. நாம் முதலில் வாய் விட்டால் மாட்டிக்கொள்வோம், சரி டீ சாப்பிடபோறேன் வர்றியா? அப்பாடா கூப்பிட்டு விட்டான். மனசு முழுக்க சந்தோசத்துடன் அதே நேரத்தில் அதை வெளிக்காட்டாமல் வேகமாய் என்னுடைய டேபிளுக்கு சென்றவன் அவன் பார்க்காத வகையில் ‘சராய் பாக்கெட்டில்’ இருந்து இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து என் டேபிளின் ‘ட்ராயரை’ திறந்து உள்ளே போட்டு, அதை அடைத்து விட்டு சரி வா போலாம். (முகம் ஏதோ அவன் கூப்பிட்டான், நான் போறேன்) இந்த வகையில் வைத்து கிளம்பினேன்.

கேண்டீனில் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. சூடாக ஏதோ செய்து கொண்டிருந்தார்கள், அதன் மணம் நாசியை வருடியது. என்ன வேணும்? சர்வர் அருகில் வர என்னப்பா வாசனை தூக்கலா இருக்கு?

நைட்டு டிபனுக்கு பலகாரம் தயாராயிட்டு இருக்கு, ரவா பச்சடி, பூரியும் கிழங்கும், போட்டுகிட்டிருக்காங்க.

ரவியின் முகம் சற்று சிந்தனை வசப்பட்டது போல் இருந்தது. நண்பா வீட்டுல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க, பேசாம டிபனை முடிச்சிடலாமுன்னு நினைக்கிறேன், நீ என்ன சாப்பிடறே?

அடித்தால் இப்படி அடிக்கணும் அதிர்ஷ்டம். நீ என்ன சாப்பிடறியோ அதையே நானும் சாப்பிட்டுக்கறேன், சும்மாவா “டீ கிடைக்குமா” என்றவனுக்கு டிபன் கிடைத்தால் விடுவேனா?

ஓகே..நீ நம்ம இரண்டு பேருக்கு ஆர்டர் பண்ணிடு, நான் ‘டீக்கு’ மட்டும்தான் பணம் எடுத்து வந்திருக்கேன். உள்ளே போய் பணம் எடுத்தாறேன்.

அதுக்கென்ன நீ போய் எடுத்துட்டு வா, நான் ஆர்டர் பண்ணிடறேன்.

விறுவிறுவென அலுவலகத்துக்குள் நுழைந்ததை காண்டீனில் உட்கார்ந்தவாறே பார்த்தேன். ஐந்து நிமிடத்தில் வந்து விட்டான்.

இருவரும் நன்றாக சாப்பிட்டோம், இன்னும் ஏதாவது வேணுமின்னா ஆர்டர் பண்ணிக்கோ, ரவி பெருந்தன்மையுடன் சொன்னான். கொஞ்சம் பிகு செய்வது போல அடுத்த ‘அயிட்டத்துக்கும்’ ஆர்டர் செய்தேன்.

எல்லாம் முடிந்து வெளியே பணம் தரும் இடத்துக்கு வந்தோம். வழக்கம்போல கொஞ்சம் பின் தங்கினேன். ரவி கவலைப்படவில்லை, எவ்வளவு ஆச்சு?

எல்லாம் கூட்டி கழித்து ‘நூத்து அறுபது ரூபாய்’ ஆச்சு, என்றார். பாக்கெட்டில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து கொடுத்தான். பாக்கி சில்லறை அவர் எடுத்து கொடுக்கவும், வாங்கியவன் ‘ஒரு நிமிசம்’ என்னிடம் சொல்லிவிட்டு நாற்பது ரூபாயை அருகில் இருந்த பெட்டி கடையில் கொடுத்து அரை பாக்கெட் சிகரெட் வாங்கியவன் அவர் கொடுத்த சில்லறையையும் வாங்கி எல்லாவற்றையும் என் கையில் திணித்தான்.

நான் ஒன்றும் புரியாமல் திகைத்தேன்.

சாரி நண்பா, நான் ஆபிசுக்குள்ள நுழையும்போது யோசிச்சேன், உள்ளே போயி என் டேபிளை திறந்து தேடி எடுத்துட்டு வர்றதுக்கு நேரமாகும், அதனால உன் டேபிள் ட்ராயரை திறந்து பார்த்தேன் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டு இருந்துச்சு, ஒரு நோட்டை மட்டும் எடுத்துட்டு வந்துட்டேன்.

எவ்வளவு ஆச்சுன்னு கணக்கு போட்டு வை, அப்புறமா கொடுத்துடறேன், வரட்டுமா? கேட்டு விட்டு விறு விறுவென அலுவலகத்துக்குள் நுழைந்து விட்டான்.

வாசகர்களுக்கு சிரிப்பு வரலாம், ஆனால் அப்பொழுது எனக்கு வந்ததோ கடும் கோபம், நல்ல வசவு (கெட்ட) வார்த்தைகளைத்தான் மனசுக்குள் சொல்லி என் வயிற்றெரிச்சலை ஆற்றிக்கொண்டேன்.

இனி அவனிடம் டிபன் சாப்பிட்ட காசை வெட்கத்தை விட்டு எப்படி கேட்பது?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *