(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவளுடைய கறுத்த மேனிக்கு அந்த வெள்ளை கவுன் ‘பளிச்’ சென்று இருக்கும். தலையைப் பின்னிக் கொண்டையாக வளைத்துக் கட்டி நர்ஸுக்குரிய பட்டையான வெள்ளைத் துணியை அதன் மீது செருகியிருப்பாள்.
இரு கைகளையும் அடிக்கடி கவுன் பாக்கெட்டுகளில் விட்டுக்கொண்டு ‘வார்டு பாய்’களை விரட்டியபடியே டக்டக்’ கென்று நடந்து செல்வாள். ஆங்கிலமும் கொச்சைத் தமிழும் கலந்த மணிப் பிரவாள நடையில் கீச்சுக் கீச்சென்று கத்தி வார்டையே அதிரச் செய்வாள்.
“ஏ, முனுசாமி! இத்தினி நேரம் எங்கே போயிருந்தே! நீ வரவரக் கெட்டுப் போச்சு. வராண்டா கிளீன் பண்லே; ஏழாம் நெம்பர் பெட் மாத்தலே. இரு இரு டாக்டர் கிட்டே சொல்லி உனக்கு ‘பய்ன்’ போட்டு வெக்கிறேன். அப்பத்தான் புத்திவரும் உனக்கு. போய் அந்த ‘சிரிஞ்சு’ எடுத்துக்கிட்டு வா…டயம் என்ன ஆச்சு தெரியுமா? டாக்டர் வந்தா யாரு டோஸ் வாங்கறது? உனக்கு மூளை இல்லே?…”
“நர்ஸியம்மா…” நோயாளி ஒருவருடைய குரல் இது. “யாரது கூப்டறது? ஏன் தொந்தரவு பண்றே?” மறுபடி யும் ஓர் அதட்டல்.
“நான்தாம்மா… நாலாம் நெம்பர் பெட்…”
“யாரு? பிராக்சர் கேஸா? இன்னா ஓனும் ஒனக்கு?’
“தண்ணி வேணும்மா…”
“தன்னி இல்லே..சும்மா சும்மா தன்னிக் குடிக்காதே. ‘ஸெப்டிக்’ ஆயிடும்.
“அம்மா…”
“யாரது…ஸ்!”
“நான்தாம்மா எட்டாம் நெம்பர்…”
“யாரு? ஸ்ட்மக் ஆபரேஷ்னா? ஒனுக்கு இன்னா ஓனும்?”
“வீட்லேருந்து பலாப்பழம் வந்திருக்குதும்மா, சாப்பிட லாமாம்மா…?”
“நல்ல ஆலு நீ! பலாப்பலம் தின்றே? ஜாக் ஃபுருட்! டாக்டர் வரட்டும் சொல்றேன். வயத்து வலிக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு, பலாப்பலம் சாப்றயா? உன்னை டிஸ்சார்ஜ் பண்ணிடறேன் பாரு; பாய், எங்கே அந்த பலாப்பலம்? எடு இப்படி!இந்தா, இதைக் கொண்டுபோய் என் டேபில் மேலே வை. நீ துண்ணுப்புடாதே! வார்டு பூரா குப்பை! வாட்டர் புடிச்சு வெக்கலே…பேஸின் கொண்டாந்து வெக்கலே. போய் க்விக்கா கொண்டா மேன். ட்வெண்டித்ரீ பெட்டுக்கு ‘பெட் பேன் வேணுமாம்; அடுச்சுக்குது பார். போ, போ…”
“இன்னா நல்லசாமி! சொகமாயிட்டாயா? இப்ப எப்படி இருக்குது மார்வலி?”
“பரவாயில்லம்மா.”
“இந்தா, மருந்து குடிச்சுடு. ராத்திரி பில்ஸ் சாப்டயா? நல்லா தூங்னியா?”
“சாப்பிட்டேம்மா; தூங்கினேம்மா.”
“நல்லாயிடும். அடுத்த மாசம் வேலைக்குப் போகலாம் இவங்கல்லாம் யாரு? மணி ஆறு ஆவப் போவுது. நீங்க எல்லாரும் வெளியே போங்க. விளிடர்ங்க டயம் ஆறு வரைக்குந்தான்: வந்தா கவிக்கா பேசிட்டுப் போயிடணும். கண்டதெல்லாம் பேஷண்டுங்களுக்கு வாங்கிக் கொடுத்துக் கெடுக்கக்கூடாது. அந்த அம்மா கையிலே என்னாது, நல்லசாமி?”
“வேர்க்கடலை உருண்டேம்மா.”
“கிரௌண்ட் நட் கேக்! இவங்களை உள்ளே விட்டதே தப்பு – டயட் பாஸ் இல்லாம இதெல்லாம் யாரு எடுத்துக் கிட்டு வரச்சொன்னது உங்களை – ஆவட்டும் சொல்றேன்-!”
நர்ஸ் நாகமணி, வார்டுக்குள் வருகிறாள் என்றாலே எல்லாருக்கும் பயந்தான். எல்லோரையும் விரட்டிக் கொண்டேயிருப்பாள் அவள்.
அவள் பேச்சுமட்டும் கடுமையாகத்தான் இருக்கும். ரூல் என்றால் ரூல் தான். ரூலுக்கு விரோதமாக எதுவும் நடக்கக் கக் கூடாது அவளுக்கு. அது நோயாளியாக இருந்தாலும் சரி; விசிடர்களாயிருந்தாலும் சரி, வார்டு பாயாக இருந்தா லும் சரி, எல்லோரிடமும் ஒரே கண்டிப்புத்தான்.
“நர்ஸம்மா அப்படித்தான் பேசும். ஆனால் நல்ல மாதிரி” என்பான் வார்டு பாய்.
டூட்டிக்கு வரும்போது இருக்கும் அதட்டலும் உருட்ட லும் டூடி முடிந்து வெளியே போகும்போது அடியோடு மாறி விடும். வேறு நர்ஸிடம் டூடியை ஒப்படைக்கும்போது அந்த நர்ஸை ஒவ்வொரு பெட்டாக அழைத்துக்கொண்டு போய் அந்தந்த கேஸுகளைப் பற்றிய விவரங்களைச் சொல்லிவிட்டுச் செல்வாள். அப்போது அவள் நோயாளிகளிடம் பேசுகிற மாதிரியே வேறு. எல்லோரிடமும் அன்பொழுகப் பேசுவாள். காலையில் நெருப்பு மாதிரி சீறிக்கொண்டிருந்தவளா இப்போது இப்படிப் பச்சை வாழைப்பட்டையாக மாறி விட்டாள் என்று அதிசயிக்கத் தோன்றும்.
“என்ன ஸெவண்டீன்! நான் வரட்டுமா? நல்லா தூங்க ணும்; மருந்து குடிக்கணும். இந்த நாகமணி வார்டுக்கு வர பேஷண்டுங்க நல்லபடியாத்தான் திரும்பிப் போவாங்க” என்று ஒவ்வொரு நோயாளியிடமும் பெருமையாகச் சொல்லி விட்டுப் போவாள். முதலில் விஸிடர்களிடம் கோபமாகப் பேசிவிட்டு அவர்கள் போகும்போது சந்தோஷமாக அனுப்பு வாள். அவர்களோடு வரும் குழந்தைகளுக்கு ஆரஞ்சு, பிஸ்கெட் முதலிய தின்பண்டங்களைக் கொடுத்து, ‘பாப்பா சாப்டு’ என்று கொஞ்சி அனுப்புவாள். யாராவது அவளுக்கு இனாம் கொடுக்க முன் வந்தால் ரொம்பக் கோபம் வந்துடும் அவளுக்கு. “இந்த நாகமணி யார் கிட்டேயும் காசு வாங்கமாட்டா. அந்த வார்டு பாய்கிட்டே கொடுங்க பாவம், புள்ளைக்குட்டிக்காரன்” என்பாள்.
டூடி முடிந்து வேறு உடை மாற்றியதும் நர்ஸ் நாகமணி யின் தோற்றமே அடியோடு மாறிவிடும்.
அவள் கறுப்புதான். ஆனால் நல்ல அழகி. நாகரிகமா கப் புடவையும் ஜாக்கெட்டும் அணிந்து முகத்தில் பவுடர் பூசிக்கொண்டு வெளியே கிளம்பிவிடுவாள்.
மூர்மார்க்கெட்டின் உள் வட்டத்தை ஒரு ‘ரவுண்டு’ சுற்றிவிட்டு இங்கிலீஷ் சினிமா ஏதாவது ஒன்று பார்த்து விட்டுத்தான் க்வார்ட்டர்ஸுக்குத் திரும்புவாள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் சர்ச்! பகலில் தூக்கம்! மாலையில் சினிமா! மறுபடியும் டூடி! இதுதான் நாகமணியின் வாழ்க்கை.
– கேரக்டர், 9வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.