தோல் இருக்கச் சுளை விழுங்கி

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 7, 2023
பார்வையிட்டோர்: 3,899 
 
 

(1990 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்).

தூங்கும் ஆறு | தோல் இருக்கச் சுளை விழுங்கி

அங்கே சென்றதும் அவர்கள் அந்த ஆற்றைப் பற்றித் தாங்கள் அறிந்ததையும் கேள்விப்பட்டதையும் கதை கதையாகப் பேசிக் கொணடார்கள். ஒவ்வொரு வரும் ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும் அந்தப் பொல்லாத நதி மற்றவர்க்கு ஏற்படுத்திய பொல் லாங்கையெல்லாம் சொல்லிச் சொல்லித் தங்களை உஷார்ப்படுத்திக் கொண்டார்கள். கேட்டு குருநாதரே மனத்தில் திகில் அடைந்து விட்டார்.

‘குருதேவா! இந்த ஆறு எப்படிப்பட்டது என்பதை என் தாத்தா ஒரு பெரிய வியாபாரி. எனக்கு அவர் சொன்னதெல்லாம் அப்படியே நினைவு இருக்கிறது,’ என்று மட்டி ஆரம்பித்தான்.

“என் தாத்தா ஓரு பெரிய வியாபாரி. அவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார். ஒரு சமயம் அவர் இரண்டு கழுதைகளின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இந்த ஆற்றைக் கடந்து அந்தப் பக்கம் போக, தண்ணீரில் இறங்கினார். அவரோடு வியாபாரத்துக்குச் சென்ற அவரது கூட்டாளி ஒருவருடன் ஆற்றில் இறங்கினார்.

நடு ஆற்றிலே வந்தபோது, தண்ணீர் குளு குளு வென்று இருந்ததால் அவர்களுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அது மிகவும் வெப்பமான கோடை காலம். நீண்ட தூரம் வெயிலில் வந்தால் அந்தச் சூடு தணிய, தாங்களும் தங்கள் கழுதைகளும் சுகமாகக் குளிக்கலாமே என்று எண்ணினார்கள்.

ஆற்றிலே தங்கள் உடல்களையும் கழுவிக் கொண் டார்கள். தங்கள் கழுதைகளையும் குளிப்பாட்டி னார்கள். அந்த வெயில் காலத்துக்கு மிகவும் இதமாக இருந்தது அவர்களுக்கு. அதற்கப்புறம்தான் அவர் களுக்கு இந்த நதி எவ்வளவு பொல்லாதது என்று விஷயமே புரிந்தது. அக்கரைக்குப் போய்ப் பார்த்தால் அவர்களுக்கு ஒரே அதிர்ச்சியாகிவிட்டது. அதை நினைத்தால் எனக்கு இப்போதும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது, பயமாகவும் இருக்கிறது” என்று மூச்சு வாங்கச் சற்று நிறுத்தினான் மட்டி.

“என்ன… என்ன நடந்தது அப்படி?” என்று மற்ற சிஷ்யர்களும், அவர்களுக்கு முந்தி குருநாதரும் பரபரப்பாகக் கேட்டார்கள். என்ன நடந்திருக்கும் என்று அறிவதில் அவர்களுக்குள் ஆர்வம் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தது.

“அந்த உப்புப் பொதிகளின் வாய்ப்பகுதிகளை நன்றாக ஊசியாலே கொஞ்சமும் சந்து இல்லாமல் அழுத்தமாகத் தைத்துத்தான் வைத்திருந்தார்கள். ஆனால் தைத்த வாய் தைத்த படியேயிருக்க, பொதி களில் இருந்த உப்புத்தான் மாயமாய் காணாமல் போயி ருந்தது. இந்த ஆறு இருக்கிறதே, இது அவ்வளவு மாய மந்திரம் தெரிந்து வைத்திருக்கிறது! தோல் அப்படியே இருக்க, உள்ளே சுளைகளையெல்லாம் எப்படியோ விழுங்கி விட்டதைப் போல, கோணிவாய் தைத்ததைப் பிரிக்காமலேயே, உள்ளேயிருந்த உப்பு அவ்வளவை யும் திருடித்தின்று ஏப்பம் விட்டுவிட்டது,” என்று வியந்து அப்போதும் பயந்தான் மட்டி, உப்பு போனால் போகிறது. அவர்களை விழுங்காமல் விட்டதே இந்தப் பொல்லாத நதி? விழுங்கியிருந்தால் அவர்கள் கதி?” என்று பயமும் பச்சாதாபமும் கொண்டார் குருநாதர்.

“உப்பைத் தின்றதனால், அவர்களை விழுங்காமல் விட்டுவிட்டது. அவர்களை விழுங்கியிருந்தால் உப்பை தின்றிருக்காது” என்று தன் ஆராய்ச்சி அறிவால் கண்டுபிடித்துச் சொன்னான் பேதை.

“நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன்” என்று ஒத்து ஊதினான் மூடன்.

என் தாத்தாவும் அப்படித்தான் நினைத்தார். அதற்காக ஆண்டவனுக்கு நன்றி செலுத்தினார். ‘கடவுளே…. என்ன உப்பைக் கொடுத்து விட்டு என் உயிருக்கு எந்தத் தீங்கும் வராமல் தடுத்து விட்டாயே… உயிர் கொடுத்த உனக்கு, மொட்டையடித்துப் பூஜை செய்து காணிக்கை செலுத்துகிறேன்’ என்று வேண்டிக் கொண்டார். அதற்கப்புறம் அவர் இந்த ஆற்றின் பக்கமே வந்ததில்லையாம்!”

மட்டி சொன்ன அந்த ஆச்சரியமான, பயங்கரமான கதையை கேட்டு அவர்கள் அடைந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு வெகு நேரம் ஆனது. அப்போது அந்தப் பக்கமாக யாரோ குதிரையின் மேல் சவாரி செய்துகொண்டு வருகின்ற சப்தம் அவர்களுக்கு கேட்டது. நன்றாக உற்றுப் பார்தார்கள்; காதுகளைத் தீட்டிக் கொண்டு கவனித்தார்கள்.

அந்தக் குதிரை வீரன் கொஞ்சமும் அஞ்சாமல் அந்தக் குதிரையை ஆற்றில் இறக்கி, வேகமாக ஓட்டிக் கொண்டு எந்த ஆபத்துமின்றிக் கரையைக் கடந்து விட்டான். இத்தனைக்கும், ஆற்றிலே முழங்கால் அளவுக்குத் தண்ணீர் என்னமாய் ஓடிக்கொண்டிருந்தது! குதிரையோடு வேகமாகப் போனவனை ஒன்றும் செய்யவில்லையே…! ஆறு விழித்திருக்கும் போதே அவன் சுலபமாகக் கடந்து போய்விட்டானே! ஓஹோ நம் குருவுக்கும் இப்படி ஒரு குதிரையிருக்குமேயானால், நாம் இப்படியெல்லாம் கரையிலேயே கலங்கித் தவித்துக் கொண்டிருக்க நேருமா?

அவர்கள் சிந்தனையிலே தங்கள் குருநாதருக்கு ஒரு குதிரை மிக மிக அவசியத் தேவை என்று தோன்றி விட்டது. குரு ஒரு குறையும் இல்லாமல் இருக்கும். முக்கியமான ஐந்து சிஷ்யர்கள் இருந்தாலும், உயர்வான தங்கள் குரு மகானுக்கு இப்படியெல்லாம் குறையும் சங்கடமும் நேரலாமா? முதல் வேலையாக எப்பாடு பட்டாவது குருவுக்கு ஒரு ஒரு குதிரை குதிரை வாங்கியாக வேண்டும் என்று அவர்கள் தங்களுக்குள் பலமாக முடிவு கட்டிக் கொண்டார்கள். தங்கள் முடிவைத் தாங்க முடியாத சந்தோஷத்தோடு குருநாதரிடம் பணிவோடு தெரிவித்துக் கொண்டனர்.

பரமார்த்த குருவுக்கு அதைக் கேட்டதும் பரமானந்தம் ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் அதை அப் பட்டமாக வெளியே காட்டிக் கொள்ளாமல் தமக் குள்ளேயே சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார்.

“குதிரை வாங்குவதைப் பின்னால் பார்க்கலாம். இப்போது முன்னால் உள்ள நதியைத் தாண்ட வேண்டுமே, அதைப் பாருங்கள், போய்ப் பாருங்கள்… இப்போதாவது நதி தூங்குகிறதா இல்லையா? என்று” என்று மிகவும் கவலையோடு கூறினார்.

“இதோ புறப்பட்டு விட்டேன். நானே பார்த்து விட்டு வருகிறேன்” என்று அதே மிலேச்சன், அதே கொள்ளிக் கட்டையோடு ஆற்றை நோக்கி அடிமேல் அடி வைத்து சத்தமின்றி மெதுவாக நடந்து சென்றான்.

அதுவரை அவன் கையிலேயே இருந்து கொண்டிருந்த அந்தக் குச்சியின் முனையிலிருந்து நெருப்பு எப்போதோ உயிரைவிட்டு விட்டிருந்தது.

மிலேச்சன் முன்பு செய்ததைப் போலவே, அந்தக் கட்டையைத் தண்ணீருக்குள் தோய்த்தான். ‘சுரீர்’ என்று முன்போல எந்தச் சப்தமும் வரக்காணோம். கட்டையின் முனையில் நெருப்பு இருந்தாலல்லவா ‘சுரீர்’ என்று ஒலி எழுப்பும்! எனவே மிலேச்சன், சத்தமும் வர வில்லை, புகையும் இல்லை. நதி தூங்குகிறது என்று எண்ணிச் சந்தோஷம் அடைந்தான்.

ஒரே துள்ளலாக, மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக ஓடிவந்து அவர்கள் முன் நின்று, “இது தான் ஏற்ற சமயம்! வாருங்கள் வாருங்கள்! இப்போதே ஆற்றிலே இறங்கி விடலாம். அது நன்றா கத் தூங்கிக் கொண்டிருக்கிறது!” என்று கூறினான்.

அவர்கள் அனைவரும் பரபரப்போடு எழுந்து நின்றார்கள். “பயப்படாமல் வாருங்கள். அது தூங்கும் போதே ஆற்றில் இறங்கி அக்கரைக்குப் போய்விடலாம்” என்று அவர்களைத் துரிதப்படுத்தினான் மட்டி.

அவர்களும் அவசர அவசரமாக, வேகவேகமாகப் புறப்பட்டார்கள். ஆற்றின் அருகே வந்ததும் ஒருவரை யொருவர் கட்டிப்பிடித்தபடி, மெதுவாக, கால்களை எவ்வளவுக் கெவ்வளவு சப்தம் எழாதவாறு தூக்கி வைக்க முடியுமோ, அப்படித் தூக்கி வைத்து, நெஞ்சு படக் படக்கென்று பயத்தால் வேகமாக அடித்துக் கொள்ள, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியோ அந்தக் கரையை அடைந்து விட்டார்கள்.

ஒரே நேரத்தில் அத்தனை பேரும் பெருமூச்சு விட்டுப் பயம் தெளிந்தார்கள். சந்தோஷம் அவர்களைத் தழுவியது. கூடவே ஒரு பயமும் அவர்களைத் தழுவியது. எல்லாருமே ஆபத்து இல்லாமல் கரையை அடைந்து விட்டோமா…. அல்லது யாரையாவது அந்த ஆறு வஞ்சகமாக விழுங்கித் தின்று விட்டிருக்குமா? அப்படி ஒரு பயம்… முதலில் மூடனைத்தான் பலமாகப் பற்றிக் கொண்டது.

ஆறு விழுங்கியது யாரை?

கரையை அடைந்ததுமே அவர்கள் எல்லாருக்கும் கரைகாணாத மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் அது அதிக நேரம் நீடிக்காமல் கரைந்து போய் விட்டது.

”நாம் எல்லாரும் ஆபத்து இல்லாமல் கரைக்கு வந்து விட்டோமா… அல்லது யாராவது காணாமல் போய் விட்டோமா… என்று கண்டு பிடித்தாக வேண்டும். எனக்கென்னவோ பயமாக இருக்கிறது. இதுவோ பொல்லாத ஆறு. அமைதியாக இருந்தாலும் இதன் பொல்லாத்தனம் போய் விடுமா என்ன…? மிகவும் சாது போல் இருப்பவர்களை நம்பித்தான் சுலபத்தில் ஏமாந்து விடுகிறார்கள். நாம் ஆறு பேர் இல்லையா, முதலில் எண்ணிப் பார்த்து விடுகிறேன்” என்று மனம் துடியாய்த் துடிக்க… ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று எண்ணினான் மூடன். இரண்டு தடவை எண்ணிய போதும் ஐந்துதான் வந்தது. அவன் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது.

“ஐயையோ! ஐந்து பேர்தானே இருக்கிறோம். ஒன்று குறைகிறதே, எண்ணினால் ஆறு வர வேண்டாமா?” என்று ‘ஓ’ வென அழுதான் மூடன்.

“அப்படியா! இரு இரு! நான் எண்ணிப் பார்க்கிறேன்” என்று குரு பரபரப்புடன் அவர்களை வரிசையாக நிற்க வைத்து எண்ணிப் பார்த்தார். ஆளைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்தார். ஐந்து பேர்தாம் இருந்தார்கள். ஆறாவது ஆள் எங்கே? ஆற்றோடு போய்விட்டானா?

குருவுக்கும் அழுகை பீறிட்டு கொண்டு வந்தது. யாரோ ஒரு சிஷ்யன் குறைகிறான். ஐயோ அவன் தலை எழுத்து இப்படியா ஆக வேண்டும்! “ஏ! பொல்லாத ஆறே நீ இப்படி எத்தனை பேரை விழுங்கியிருக் கிறாய்?” என்று அடக்க முடியாத அழுகையோடு ஆற்றை நோக்கிச் சபித்தார்.

ஒவ்வொருவரும் எண்ணிப் பார்த்தார்கள். யார் எண்ணியும் ஐந்து பேர்தாம்… ஆறாவது யார்? ஆறு விழுங்கியது யாரை? அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை! யாரோ ஒருவன் ஆற்றுக்குப் பலியாகி விட்டான்! ‘கடவுளே… எங்களுக்கா இந்தக் கதி வரவேண்டும்’. அவர்கள் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு அழுதார்கள்.

தேற்றுவாரின்றி அவர்கள் தேம்பியழுதார்கள். புறப் பட்டபோது ஆறுபேராகப் புறப்பட்டுத் திரும்பும் போது ஐந்து பேராகப் போய்ச் சேர்வது எவ்வளவு பெரிய கொடுமை! கொலை பாதகம் செய்துவிட்டு. ஏதுமே தெரியாததைப் போல் அமைதியாக இருக் கிறதே இந்த ஆறு. இது எவ்வளவு பெரிய வஞ்சகத் தனம். நம்பினவர்களை நாசப்படுத்துகிறதே இதற்கு எவ்வளவு கல் நெஞ்சம்! குரு எண்ணி எண்ணி எண்ணி விம்மினார்.

“பொல்லாத நதியே! உனக்கு நாங்கள் என்ன கெடுதி செய்தோம்? யாருக்குமே நாங்கள் எந்தத் தீமையும் செய்வது இல்லையே… எங்களுக்குப் போய் நீ இப்படி ஒரு தீங்கை இழைக்கலாமா? என்னையே நம்பி என் பின்னால் வந்த என் அருமை சிஷ்யன் ஒரு வனை அநியாயமாக விழுங்கி விட்டாயே… உனக்கு என்ன அவ்வளவு பசியா? அதற்கு நாங்கள் தானா கிடைத்தோம். நாசகார நதியே! இப்படி மோசம் செய்கிறாயே… உனக்கு நல்ல கதி கிடைக்குமா? என் வயிறு எரிகிறது. நீ அழிந்து போவாய். ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் காய்ந்து தேய்ந்து மறைந்து போவாய். என் மனம் படும் வேதனை… என் சிஷ்யர்களின் கண்ணீர் உன்னைச் சும்மா விடாது. அக்கிரமம் செய்தவர்கள் அதிக காலம் வாழ முடியாது. உனக்குச் சீக்கிரமே ஒரு முடிவு வரும்… நீ அழிந்து போவாய்” என்று சரமாரியாக அந்த ஆற்றைக் குருநாதர் நித்தித்தார். கண்டபடி காறித் துப்பினார்.

சிஷ்யர்களும் அவர்கள் பங்குக்குச் சினந்தார்கள். சீறினார்கள்… அழுது புரண்டார்கள்! ஆனால் ஒருவராவது, குரு உள்பட, ஒருவராவது தம்மையும் சேர்த்து எண்ணிப் பார்க்காமல், தம்மை விட்டு விட்டே எதிரேயிருப்பவர்களை ஜாக்கிரதையாகத் தொட்டுத் தொட்டு எண்ணி ‘ஐந்து பேர் மட்டுமே இருக்கிறோம்’ என்று அவதிப்பட்டார்கள். எண்ணுகின்றவன் தன்னை எண்ணிக் கொள்ளத் தவறினால் கணக்கு எப்படிச் சரியாக வரும்? அதுமட்டுமல்லாமல்… யாரைக் காணோம் என்று அவன் பேரையாவது தெரிந்து கொள்ள நினைக்க வேண்டாமா? அந்த நினைப்பே அவர்கள் ஒருவருக்கும் வரவில்லை.

மந்திர சக்தி

அப்போது அந்தப் பக்கமாக ஒரு வழிப் போக்கன் வந்தான். அவர்கள் அழுது துடிப்பதைக் கண்டு பரிதாபப்பட்டான். அன்போடு அருகில் வந்து அவர்கள் அழுவதற்குக் காரணத்தைக் கேட்டான்.

அவர்கள் தங்களைப் பற்றிக் கூறி, தங்களுக்கு நேர்ந்த கதியை விவரித்தார்கள். அவர்கள்தாம் பரமார்த்த குருவும் அவரது பரம சிஷ்யர்களும் என்பதை அறிந்து கொண்டான். அவர்களது அறிவுப் பிரகாசத்தையும் பற்றி அவன் கேள்விப் பட்டிருக்கிறான். நேரில்

பார்த்தது இல்லை. இப்போது அவர்கள் அறிவின் ஆழத்தை நேரில் தானே காண்பதற்குச் சந்தர்ப்பம் வாய்த்து விட்டது.

வழிப்போக்கன் எண்ணிப் பார்த்தான். ஆறு பேர் சரியாகவே இருக்கிறார்கள். அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது. அவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அவர்கள் சரியாக உணரும்படிச் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

“அட பாவமே! ஒரு சிஷ்யனைக் காணோமே!’ என்று பெரிதாக வருந்தி விட்டு ஆனாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு மந்திர தந்திர மெல்லாம் தலைகீழ்ப் பாடம். என்னிடம் யார் ஜம்பமும் பலிக்காது. இந்த ஆறு என்ன… இதன் தாத்தா ஆறாக இருந்தாலும், நூறாக இருந்தாலும் யாரிடம் அதன் சாமர்த்தியம் செல்லுபடியாகும்? என்னிடமா? நடக்கவே நடக்காது. எப்படிப்பட்ட பேய், பூதம், பில்லி, சூனியம், மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான், எதுவும் என்கிட்டே வாலாட்ட முடியாது. அடக்கி விடுவேன் அடக்கி! அபபடியே மடக்கி… ஒடுக்கி விடுவேன். என் மந்திர சக்திக்கு முன்னால் எல்லாமே மண்டியிட வேண்டும்” என்று கூறிவிட்டு அட்டகாச மாகச் சிரித்தான் அந்த வழிப்போக்கன்.

“அவ்வளவு திறமையா உங்களுக்கு?” என்று வாயைப் பிளந்தார் குருநாதர்.

“ஆமாம்! எனக்கு மட்டுமே அவ்வளவு சக்தியை ஆண்டவன் கொடுத்திருக்கிறார். இந்த உலகத்தில் வேறு யாருக்குமே கடவுள் இவ்வளவு பெரிய சக்தியைக் கொடுக்கவில்லை. நான் நினைத்தால், என் மந்திர சக்தியால் இறந்தவர்களை எழுப்பி விடுவேன். இருப்பவர்களை இறக்க வைப்பேன். நாயைப் பேயாக்குவேன்… பேயை நாயாக்குவேன்!” தன் மார்பைத் தட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்று கம்பீரமாகப் பேசினான் வழிப்போக்கன்.

அவன் திறமையில் அதிசயித்துப் போய், அழவும் மறந்து நின்று விட்டார்கள் சிஷ்யர்கள். குருநாதர் ஒரு பெரிய மலையே தம் எதிரே நிற்பதைப் போல் திகைப்போடு பார்த்தார் அவனை. அப்போது ‘திடீர்’ என்று நல்ல வேளையாக ஓர் எண்ணம் அவருக்குள் உதித்தது.

“ஐயா…ஐயா! உன்னுடைய மகாமகா மந்திர சக்தியால் ஆற்றிலே மாண்டு போன அந்தச் சிஷ்யனை மீண்டும் உயிரோடு கரையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இதைச் செய்தால் உனக்குக் கோடி கோடி புண்ணியம் சேரும். என்றைக்கும் நாங்கள் மறக்க மாட்டோம்” என்று கெஞ்சினார் பரமார்த்த குரு.

“நான் மந்திர சக்தியால் ஆணையிட்டால் எதுவுமே அதற்குக் கட்டுப்பட்டுத்தான் தீர வேண்டும். உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. உங்கள் வேதனையை நான் தீர்க்கிறேன். இழந்தவனை இங்கே கொண்டு வந்து விடுகிறேன். அரை நொடியில்… ஆற்றோடு போனவனை அழைத்து விடுகிறேன். என் அற்புத மந்திர சக்தி அப்படிப்பட்டது. ஆனால் அதற்கு நீங்கள் தகுந்த வெகுமதியளிக்க வேண்டுமே!” என்றான் வழிப்போக்கன்.

“ஒருவனுக்கு உயிரையே அளிக்கும் உனக்கு வெகுமதியாக இந்த உலகத்தையே தரலாம். ஆனால் எங்களால் முடியுமா? இந்த உலகம் எங்கள் சொத்தா? ஆனால் ஓர் உயிரைக் காப்பாற்றுகிற புண்ணியம். உனக்கு மட்டுமா… உன் குடும்பத்துக்கு மட்டுமா… உன் குருவுக்கே கூடப் போய்ச் சேரும். குருவுக்குப் புண்ணியம் தேடித்தரும் பாக்கியவன் ஆகிவிடுகிறாய் நீ. கடவுளே உன்னை இப்போது எங்களுக்காகவே அனுப்பி வைத்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். கடவுளின் கருணையே கருணை! கடவுளைப் போலவே அவரது அருளால் இவ்வளவு பெரிய சக்தி படைத்திருக்கிற நீயும் கருணை மிகுந்தவன்! தயவு செய்து மனம் இரங்கி இந்தக் காரியத்தைச் செய். எனக்குத் தெரியும். உனக்கு மிகப் பெரிய மனசு. அதிலே நிறைய இரக்கம் இருக்கிறது. இருந்தாலும் எந்த வெகுமதியும் தராமல் இலவசமாகவே நாங்கள் பலனை அடைந்து விடுவது நியாயமாகாது. உன் மகத்தான மந்திர சக்திக்கும் நாங்கள் மதிப்பளிக்க வேண்டும். உனக்கு கை நிறைய அள்ளி அள்ளித் தரவேண்டும். ஆனால் எங்களிடம் இருப்பதோ கொஞ்சம்தான். வழிநடைச் செலவுக்கென்று மேல் துண்டில் நான்தான் முடிச்சு போட்டு வைத்துக் கொண்டிருக்கிறேன். நாற்பத்தைந்து பணம்தான் இருக்கிறது. உன்னை என் குலதெய்வமாக மதித்து வேண்டுகிறேன். ஒவ்வொரு சிஷ்யனையும் நான் என் உயிராகவே கருதுகிறேன். அன்பு கூர்ந்து, ஆற்றோடு போய்விட்ட, என் அருமைச் சிஷ்யனை உயிரோடு கொண்டு வா… அப்பனே!” என்று மிகமிக உருக்கமாக வேண்டிக் கேட்டுக் கொண்டார் பரமார்த்த குரு.

அதற்குப் பின்னர் வழிப்போக்கன் ‘பெரிய மனம்’ வைத்து அவர்கள் வேண்டிய உதவியைச் செய்வதில் உடனடியாக இறங்கினான். அவன் தன் கையில் பிடித்துக் கொண்டு வந்த அந்தத் தடியைத் தன் தலைக்கு மேலே செங்குத்தாகத் தூக்கிச் சிறிது நேரம் நிறுத்தி னான். அது அவனை விடவும் உயரமாக இருந்தது. முனையில் இரும்பிலே பூண் கட்டப்பட்டிருந்தது.

அந்தத் தடியை அவர்கள் அண்ணாந்து பார்த்தார்கள். ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதைப் புரிந்து கொண்டான் வழிப்போக்கன்.

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? இதுதான் என் அதிசயமான, அதி அற்புதமான, ஆச்சரியமான, அருமையான மந்திரத் தடி. இந்தத் தடியில் தான் மகா மகா மாயா ஜால மந்திர தந்திர சக்தியெல்லாம் மண்டிக் கிடக்கிறது. இப்போது பாருங்கள். நீங்களே இதன் அற்புதச் சக்தியை அறியப் போகிறீர்கள்! ஆனால் நான் சொல்வதைப் போல நீங்கள் செய்ய வேண்டும்: தவறினால் இது சும்மாயிருக்காது!” என்று பெருமை யாகப் பேசினான் அவன்.

“நீ சொல்வதைப் போலவே நாங்கள் செய் கிறோம்.”நீ என்ன சொல்கிறாயோ… அதன் படியே சத்தியமாகச் செய்வோம்” என்று பயபக்தியோடு, உடலை வளைத்து நின்றிருந்தார்கள் ஒவ்வொருவரும்.

“நீங்கள் ஒவ்வொருவராக, உங்கள் தெய்வத்தை மனத்தில் எண்ணிக் கொண்டு, இந்தத் தடியின் முன் வந்து, பணிவாக குனிந்து நிற்க வேண்டும்.”

“அப்படியே செய்கிறோம்!”

“இந்த மந்திரத் தடியால் உங்கள் ஒவ்வொருவர் முதுகிலும் ஒவ்வோர் அடி கொடுப்பேன். முணு முணுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும்”.

“அப்படியே வாங்கிக் கொள்கிறோம்!”

“முதுகில் அடி விழுந்ததும், அவரவர் அவரவருடைய பேரை உரக்கச் சொல்ல வேண்டும்.”

“அப்படியே சொல்கிறோம்!”

“அப்புறம் பாருங்கள். என் மந்திரத்தின் அற்புதச் சக்தியால் அந்த ஆறாவது ஆள் உங்களோடு சேர்ந்திருப்பதை!”

“அப்படியே, ஆஹா! ஆஹா!”

“சரி சரி… ஒவ்வொருவராக நான் சொன்னபடி செய்யுங்கள் அப்படியே!”

“அப்படியே!”

அவர்கள் ஒருவர் பின் ஒருவர் வந்து முதுகில் ஆளுக்கு ஓர் அடி வாங்கிக் கொண்டு, வலியைப் பொறுத்துக் கொண்டு முணுமுணுக்காமல் தங்கள் பெயர்களை உரக்கக் கூறிவிட்டு ஓடிப்போய் வரிசையாகக் குருவின் பக்கத்தில் நின்று கொண்டார்கள்.

முதலில் பரமார்த்த குரு முன்னே வந்து முதுகில் அடிவிழுந்ததும் ‘அடியேன் பரமார்த்த குரு’ என்றார். அவரைப் போலவே ‘அடியேன் மடையன்’ ‘அடியேன் மட்டி’ ‘அடியேன் மூடன்’ ‘அடியேன் பேதை’ ‘அடியேன் மிலேச்சன்’ என்று ஒவ்வொருவரும் சொன்னார்கள்.

வரிசையாக நின்று கொண்டிருந்த அவர்களை வழிப்போக்கன் ஒன்று, இரண்டு என்று ஆறுபேரும் அங்கே இருப்பதை எண்ணிக் காட்டினான்.

“ஆஹா! ஆஹா! அற்புதம்… அற்புதம்!” என்று அவர்கள் வியந்தார்கள். அவர்கள் அடைந்த ஆனந்தத் துக்கு அளவே இல்லை. ஒப்புக் கொண்டபடி நாற்பத் தைந்து பணத்தை முடிச்சவிழ்த்துக் கொடுத்தார் குரு நாதர். வழிப்போக்கன் தன் அதிர்ஷ்டத்தை எண்ணிக் கொண்டு வழிநடந்தான்.

குருவுக்கு குதிரை

சிஷ்யர்களோடு குருநாதர் தம் மடத்துக்குச் சென்று சேர்ந்தார். எல்லோருக்கும் மிகவும் சோர்வாக இருந்தது.உடல் சோர்வைவிட உள்ளத்தின் சோர்வே மேலாக இருந்தது. எப்படியோ வந்த ஆபத்திலிருந்து மீண்டோமே என்ற மகிழ்ச்சி ஒரு பக்கமும், அநியாய மாக ஒரு சிஷ்யனைப் பலி கொடுக்க இருந்தோமே என்ற வேதனை ஒரு பக்கமும்… மொத்தத்தில் அவர்கள் நெஞ்சிலே நிம்மதி கொஞ்சமும் இல்லாமல் போய்விட்டது.

‘தங்களுக்கு ஏன் இந்த தவிப்பும் வாட்டமும், தங்கள் குருநாதருக்கு மட்டும் ஒரு குதிரையிருந்து விட்டால் அந்தக் குதிரை வீரனைப்போல ஆபத்தின்றி ஆற்றைக் கடந்திருக்கலாமே என்று பலவாறு எண்ணிக் கொண்டிருந்தவர்கள், நிச்சயமாக விரைவில் குருவுக்கு ஒரு குதிரை வாங்கியாக வேண்டும் என்று ஒரு திடமான முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அவர்கள் வரும் வழியில் தங்களுக்கு அந்த நதியினால் ஏற்பட்ட கதியைக் கதை கதையாக அளந்து அங்கலாய்த்துக் கொண்டிருந்த போது, அதை ஒரு கிழவி கேட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் கிழவிதான் அவர்களுடைய மடத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்வாள். அவளுக்குக் கண் பார்வை சரியாகத் தெரியாது. ஏறக்குறைய குருடு என்றே சொல்ல வேண்டும்.

அந்தக் குருட்டுக் கிழவி, குடைந்து குடைந்து நடந்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். விஷயம் விளக்கமாகத் தெரிந்த பிறகு அவள் விலா நோகச் சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறாய் கிழவி!” என்று கேட்டார் பரமார்த்த குரு.

“சிரிக்காமல் என்ன செய்வது? நீங்கள் ஆற்றைக் கடந்து கரைக்கு வந்ததும் ஆளை எண்ணிப் பார்க்கிறபோது, உங்களையும் சேர்த்து எண்ணிக் கொள்ளத் தவறிவிட்டீர்கள். ஒருவர் கூடத் தன்னையும் கணக்கில் சேர்த்து எண்ணிக் கொள்ளவே இல்லையே!” என்று மேலும் சிரித்தாள் கிழவி.

“அட, ஆமா!” என்று அசடு வழிந்தார் குரு.

“அடடா, ஆமாம் ஆமாம்!” என்று மொத்தமாகச் சேர்ந்து தங்கள் முட்டாள்தனத்தை ஒப்புக் கொண்டார்கள் சிஷ்யர்கள்.

“அநியாயத்துக்கு ஒவ்வொருவரும் முதுகிலே தடியால் அடிவாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்களே. உங்கள் யோசனை இல்லாத்தனத்துக்கு விலையாக நாற்பத்தைந்து பணம் வேறு கொட்டி அழுதுவிட்டு வந்திருக்கிறீர்களே!” என்று சிரிப்பாய் சிரித்தாள் கிழவி.

“எங்களில் ஒருவருக்குக் கூட அப்படி ஒரு யோசனை தோன்றவே இல்லையே!” என்று அதிசயத்துக் கொண்டார்கள் அனைவரும்.

“இனிமேலாவது இப்படியெல்லாம் யோசனை இல்லாமல் அடியும் வாங்கிக் கொண்டு பணத்தையும் இழக்காதீர்கள். நீங்கள் இதையெல்லாம் மறவாமலிருக்க நான் ஓர் உபாயம் சொல்கிறேன், கேளுங்கள்” என்று கிழவி சொல்லத் தொடங்கி விட்டாள். அவர்களும் அமர்ந்து கவனமாகக் கேட்டுக் கொண்டார்கள்.

“நீங்கள் காட்டுக்குப் போங்கள். அங்கே மூட்டை மூட்டையாய் மாட்டுச் சாணம் கிடைக்கும். அதைச் சேகரித்து வந்து, நன்றாகச் சேர்த்து நன்றாகப் பிசைந்து அடைபோலத் தரையில் தட்டி வைக்க வேண்டும். நீங்கள் எல்லாரும் வட்டமாகச் சக்கரம் போல, சுற்றிலும் நின்று கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மூக்கின் நுனி சாணத்தைத் தொடுமளவுக்கு நன்றாகக் குனிந்து அழுத்தி, பிறகு நிமிர்ந்து சாணத்தில் பதிந்துள்ள குழிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆறு பேருக்கும் ஆறு குழிகள் விழுந்திருக்குமே! எண்ணிப் பார்க்கிற போது, கணக்கு ஒருபோதும் தப்பாதே. இதைவிடச் சுலபமாகச் சரியாக எண்ணிக் கொள்ள வேறு என்ன வழி இருக்க முடியும்?” என்று நிறுத்தினாள் கிழவி.

“இது சரியான உபாயம்தான். ஆனால் உனக்கு இது எல்லாம் எப்படித் தெரியும் கிழவி?” என்று கேட்டார் குருநாதர்.

“எல்லாம் அனுபவம்தான்! பல வருஷங்களுக்கு முன்னால் பத்து பெண்கள் சேர்ந்து, இப்படித்தான் கணக்கைச் சரியாக எண்ணிக் கொண்டார்கள். இதிலே எந்தவிதக் கஷ்டமும் இல்லை; நஷ்டமும் இல்லை! முதுகிலே தடி அடி படவும் வேண்டாம். முடிச்சு போட்டு வைத்திருந்த காசைக் கொடுத்து மூக்கால் அழவும் வேண்டாம். என்ன நான் சொல்வது?”

அந்தக் கிழவியின் அரிய யோசனையை அனைவரும் பலமாகத் தலையசைத்து ஏற்றுக் கொண்டார்கள்.

இனிமேல் எண்ணும்போது தன்னைவிடாமல் ஜாக்கிரதையாக எண்ணிக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்ற பெரிய யோசனையைச் சொன்ன அந்தக் கிழவிக்கு ஒவ்வொருவரும் நன்றி கூறிக் கொண் டார்கள். அத்துடன் பரமார்த்த குருவுக்கு வெகு விரைவில் ஒரு குதிரை வாங்கியே தீரவேண்டும் என்ற வைராக்கியம் அவர்களுக்குள் உறுதியானது.

தங்கள் எண்ணத்தைப் பணிவோடு குருவிடம் சொன்னபோது, அவர் பூரித்துப் போய்விட்டார். சிஷ்யர்களுக்குத் தன்னிடத்தில் உள்ள தாராளமான பக்தியை அவர் மெச்சி மெச்சி மகிழ்ந்து போனார். என்றாலும் அவருக்கு ஒரு கவலை! ஒரு குதிரையின் விலை எவ்வளவு இருக்குமோ? ஆசிரியர் கவலையை உணர்ந்த மாணவர்கள், எவ்வளவு விலையானாலும் குதிரையை வாங்கியேயாக வேண்டும் என்று உறுதி குலையாமல் நின்றார்கள்.

என்ன விலையிருக்கும்? மிஞ்சிமிஞ்சிப் போனால் ஐம்பது பொன்னிலிருந்து நூறு பொன்னுக்குள் தானிருக்கும்! எப்படியாவது சமாளித்தாக வேண்டும். உடனடியாகக் குதிரை வாங்கியாக வேண்டும்! என முடிவெடுத்தனர்.

– தொடரும்…

– பரமார்த்த குரு கதைகள், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *