(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தொழிலாளர்கள் பிரயாணம் செய்வதற்காகவே ஏற்பட்ட அந்த ரயிலில் தொழிலாளி துளசிங்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் தினமும் உட்காருவான். அந்த இடத்தில் ‘ஆடு – புலி’ கட்டம் ஒன்று ஆணியால் செதுக்கப்பட்டிருக்கும். துளசிங்கத்தையும் அவன் தோழர்களையும் தவிர வேறு யாரும் அந்த இடத்தில் உட்காரமாட்டார்கள். தொழிலாளர்களுக் குள்ளே அப்படி ஒருகட்டுப்பாடு.
தலை முழுகினாப்போல் எண்ணெய்ப் பசையற்ற கிராப்பு சந்தனப் பொட்டு. பனியன். பனியனுக்கு மேலே ஓபன் கோட். அதற்கு மேல் வெள்ளைக்கோடு போட்ட சிவப்புக் காசிப்பட்டு. யாரையும் எதிர்த்துப் பேசக்கூடிய முரட்டு முகபாவம்! கையிலே ஒரு டிபன்பாக்ஸ். கக்கத்தில் ஒரு குடை!
துளசிங்கம் வந்து ரயில் ஏறவேண்டியதுதான். ‘ஆடு – புலி’ ஆட்டம் ஆரம்பமாகிவிடும்.
“இன்னா தொள்சிங்கம்! ஏன் கண்ணெல்லாம் ஒரு மாதிரி ‘ஜவ ஜவா’ ன்னு இருக்குது?”
“தெரியாதா ஒனுக்கு? இந்த ஏழுமலை இல்லே ஏழுமலை? அதாம்பா அந்த ஐனாவரத்து ஆளு… சைக்கிள் சாப்லே இருந்தானே அவன்…”
“ஆமா, இப்ப டாணாக்காரனாயிட்டானே, அவன் தானே?…”
“ஆமா; அவனேதான். ராத்திரி செகண்ட் ஷோ பாத் துட்டு சைக்கிள்ளே வரேன். மூலகோத்ரம் வழியா புளியாந் தோப்புலே உழுந்து பாராவதி மேலே மெதிக்கிறேன். இவன் குறுக்கே வந்து மறிச்சிக்கனாம்பா!”
“எந்த பாராவதி? அம்பட்டன் பாராவதியா, இல்லே பலகை பாராவதியா?”
“அட, ஆர்ரா இவன் ஒருத்தன், ஏடாகூடம். ஓட்டேரி பாராவதிப்பா…”
“உம்; அப்பாலே…?”
“அப்பாலே இன்னா? வா, டேசனுக்குங்கறான்.”
“எதுக்கு?”
“சைக்கிள்ளே லைட் இல்லியாம்! இவன் எப்டி இருந்த ஆளு? என்னைப் பார்த்து டேசனுக்கு வான்னு கூப்படறாம்பா? கேட்டுக்கினியா கதையை? போன வெசாயக் கிழமை ரெண்டு ரூபா கைமாத்துக் கேட்டான். இல்லேப்பாண்னேன். அந்த ஆத்திரம்போல இருக்குது; கேசு புடிக்கிறாரு எம்மேலே ‘காத்துலே லைட் அணைஞ்சு போச்சு. இன்னங்கூட சூடு ஆறல் லே’ன்னு சொன்னேன். கேக்கலே. அவன் கையைப் புடிச்சு சுடச் சுட லைட்மேலே வெச்சு ‘பாத்துக்கினியா’ன்னேன்.. கையைச் சுட்டுக்கினு லபோ திபோன்னு கத்தறான்.”
“அப்புறம்…?”
“அப்புறம் இன்னா? எங்கிட்டே விளையாட்னானா? கையைச் சுட்டுக்கினு மரியாதையா நவந்துட்டான்… ஆவட்டும், நீ தாயத்தை உருட்டு..”
உருட்டிய தாயக்கட்டை, ஓடுகிற ரயிலிலிருந்து கீழே விழுந்துவிட்டது. அவ்வளவுதான்? துளசிங்கம் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்திவிட்டான். சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவது அந்த ரயிலில் அடிக் கடி நடைபெறும் சர்வ சாதாரண நிகழ்ச்சி!
ஆனால், அன்று அந்த ரயிலில் புதிதாக வந்த கார்டுக்கு இந்த விஷயம் தெரியாது.ரயில் நிறுத்தப்படவே அவர் பர பரப்புடன் கீழே இறங்கி வந்து, “யார் சங்கிலியை இழுத்தது?’ என்று அதிகாரத்துடன் கேட்டுக்கொண்டே ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாகப் பார்த்துக்கொண்டு வந்தார்.
ஒருவரும் அவருக்குப் பதில் சொல்வதாகக் காணோம். கடைசியாக, துளசிங்கம் இருந்த கம்பார்ட்மெண்டில் வெளியே, ஒரு தகடு துருத்திக்கொண்டிருப்பதைக் கண்ட கார்டு, “யார் இழுத்தது? உண்மையைச் சொல்லிவிடுங்கள். இல்லாவிட்டால் ரயில் போகாது. அபராதம் ஐம்பது ரூபாய்” என்று ஆவேசம் வந்தவர்போல் கோபமாகப் பேசினார்.
துளசிங்கம் தலையை வெளியே நீட்டி, “இன்னாய்யா! இப்ப இன்னாய்யா சொல்றே?” என்று கார்டைப் பார்த்துக் கேட்டான்.
“சங்கிலியை யார் இழுத்தது?” என உறுமினார் கார்டு.
“ஏன்! நான் தான் இழுத்தேன். இப்ப இன்னான்றே?”
“காரணமில்லாமல் சங்கிலியை இழுத்தால் அபராதம் அம்பது ரூபாய்னு தெரியாது உனக்கு?”
“குட்றா இவருக்கு … அம்பது ரூபா வாங்கிக்கினு போவாரு. கன்னிப்பா… யார்ரா இவரு புச்சாக்கிறாரு கார்டு? நம்ப பழைய கார்டு வாசதேவராவ் வல்லியாடா? அதானே பார்த்தேன். ரயிலு நிண்ணதும் ஓடியாந்துட்டாரே! யோவ்! தாயக்கட்டை உளுந்துடுச்சு. வண்டியை நிறுத்தி எடுத்துக் கினேன். இப்ப இன்னாய்யா பூடிச்சு உனக்கு? பித்தளை தாயக் கட்டையாச்சே. போயிடுச்சுன்னா நீ குடுப்பியா? கொடியைக் காட்டி வண்டியை உடுய்யா, சர்தான்; நீட்டா போயிக்கினே இரு. ‘டேய், இவுருக்கு இந்த லயன்லே பழக்கம் இல்லைபோல இருக்குது டோய்! எந்தச் சீமானும் இதுவரைக்கும் நம்பளைப் பார்த்துக் கேள்வி கேட்ட தில்லே…இவரு என்னாடான்னா?”
அன்று பகல் வேளைச் சாப்பாட்டுக்குப் பிறகு வழக்கமாக நடைபெறும் தொழிலாளர்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.
“சகோதரத் தொழிலாளர்களே! இன்று நமது நாட்டை மேல் நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்…ரஷ்யாவைப் பாருங்கள், சைனாவைப் பாருங்கள்…அங்குள்ள தொழிலாளர் கள் ஒவ்வொருவரும் ஒரு கார் வைத்துக் கொண்டிருக்கிறார் கள்…’ என்று தோழர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.
“யோவ்! நிறுத்துய்யா சரிதான்…” – துளசிங்கம் எழுந்து நின்றான்.
“மேல் நாடு, ரஷ்யா, சைனா அதெல்லாம் இருக்கட்டும்யா. அவங்க காருலே போனா நமக்கு இன்னா ஆச்சு? நம் ஊர் விசயம் பேசுய்யா. அரிசி என்னா வெலை விக்குது பார்த்தியா? அதுக்கு ஒரு வழி பண்ணுவியா! சைனாவாம், ரஷ்யாவாம்…”
கூட்டத்தினர் எல்லோரும் துளசிங்கம் கேள்விக்குக் கை தட்டி உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்தார்கள். பிரசங்கி பதில் கூறமுடியாமல் திணறிப்போய் அசந்து உட்கார்ந்து விட்டார்.
“டாய்! துளசியைப் பார்த்துக்கினாயாடா, கேட்டான். பார்த்தியா கேள்வி, சரியான பாயிண்டுப்பா. அரிசிலே மடக் கினான் பாரு! அடுத்த வருஷம் நம்ப சங்கத்துக்கு தொள்சி தாம்பா தலைவரு. கன்னிப்பன் சொகம் இல்லேப்பா…”
“தொள்சிங்கம் வாழ்க!” என்ற கோஷத்துடன் கூட்டம் முடிவடைகிறது.
– கேரக்டர், 9வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.