(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நேற்றைய தினம் ஒரு தெருவில் எதிர்பாராத வித மாக இரண்டு வாலிபர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டதை நானும் மூன்றாவது ஆளாக நின்று கவனிக்கமுடிந்தது.
முதலாமவன் இரண்டாமவனைப் பார்த்துக் கேட்டான்: “நேற்று நீ எங்கு போயிருந்தாய்? டெலிபோன் பண்ணினேன். உன் வீட்டிலே ஒருவருமே பதிலளிக்கவில்லை.”
இரண்டாமவன் கேட்டான்: “நேற்று என்றால் எத்தனை மணிக்கு?”
முதலாமவன்: “பிற்பகல் சுமார் மூன்று மணிபோல் இருக்கலாம்”
இரண்டாமவன்: “அப்படியா? டெலிபோன் வந்திருக்கும். ஆனால் எங்கள் வீட்டுக் கூடத்தில் அந்த நேரத்தில் றேடியோ உரத்துப் பாடிக்கொண்டிருந்திருக்கும். அந்தச் சத்தத்தில் டெலிபோன் மணி அடித்திருந்தாலும் அது எங்களுக்குக் கேட்டிருக்காது.”
முதலாமவன்: “அது தானே பார்த்தேன். றேடியோச் சத்தந்தான் டெலிபோனில் கேட்டது.”
வானொலிச் சத்தம் தொலைபேசியில் கேட்டதாக முதலாமவன் சொன்னதை இரண்டாவன் நம்பினானோ என்னவோ தெரியவில்லை. ஆனால் அப்படிச் சொன்னது எவ்வளவு பொய் – தவறு என்பதை தொலைபேசிப் பாவனையாளர்களும், தொலைபேசி இயக்கங்கள் பற்றிய அறிவுள்ளவர்களும் புரிந்து கொண்டிருப்பார்கள், தொலைபேசி றிசீவரை இரண்டு பகுதியினரும் எடுத்தால்தான், இரண்டு பகுதியில் எந்தப் பகுதியில் பேசும் பேச்சோ அல்லது வேறு ஒலியோ மறுபகுதிக்குக் கேட்க முடியும். மற்றும்படி தொலைபேசி மணி அடித்துக்கொண்டே இருக்கும்போது இதெல்லாம் சாத்தியமில்லை.
அதெல்லாம் ஒருபுறம் இருக்க, மேலேகண்ட உரையாடலில் – உள்ளது போல் முதலாமவனின் வாதப்படி – அதாவது. மறுபகுதியில் தொலைபேசி மணி அடித்துக்கொண்டே இருக்கும்போது அங்கு நடப்பது இந்தப்பகுதியில் கேட்கும் என வைத்துக் கொண்டால் அது எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதை சிறிது கற்பனைச் செய்து பார்ப்போமா?
சுவை – 1
தணிகாசலம் என்பவர் தனது நண்பர் சுப்பிரமணியம் என்பவரை ஒரு முக்கிய அலுவல் காரணமாக நேரில் காணவேண்டி இருக்கிறது. சுட்பிரமணியம் வீட்டுக்குப் போகுமுன் அவர் வீட்டில் தான் இருக்கிறாரா என்பனத அறியும் நோக்கமாக தணிகாசலம் அவருக்கு டெலிபோன் செய்கிறார்.
சுப்பிரமணியம் வீட்டில் தொலை பேசி மணி அடித்துக் கொண்டிருப்பதும் அதேநேரத்தில் அங்குள்ளவர்கள் பேசிக் கொள்வதும் தனிகாசலத்துக்குப் பின்வருமாறு தெளிவாகக் கேட்கிறது:
“அப்பா டெலிபோன்”
“எடுத்து என்ன வென்று கேள். அவன் தணிகாசலம் பேசினால் ‘அப்பா இங்கை இல்லை’ என்று சொல்லு. அவன் விசரன் வந்தால் ஒரு வேலையும் பார்க்க விடாமல் ‘வளவளா’ என்று அலட்டிக் கொண்டிருப்பான்”.
தணிகாசலத்துக்கு எப்படி இருக்கும்? சுப்பிரமணியத்தின் மகன் தொலைபேசி றிசீவரை எடுத்ததும் எரிமலையாகக் குமுறினார். பழிக்குப் பழி சுப்பிரமணியத்தின் வண்ட வாளங்களை எல்லாம் அக்கு வேறு ஆணிவேறாகப் புட்டுக் காட்டினார் என்பதை வேறு சொல்லவா வேண்டும்?
சுவை – 2
‘பத்மா நகை மாளிகை’ உரிமையாளர் பத்மநாதன் அவர்கள் தனது வீட்டில் இருந்தவாறே தனது நகைமாளிகைக்கு டெலிபோன் செய்கிறார். நகைமாளிகைத் தொலைபேசி நீண்டநேரம் அடித்துக் கொண்டிருக்கிறது. பின்னர் மனேச்சர் மயில்வாகனத்தின் குரலும் கூடவே கேட்கிறது.
“சீச்சி… இந்த தொலைபேசியே ஒரு பெரிய தொல்லையாகப் போச்சுது. சமய சந்தர்ப்பமே தெரியாமல் அலறிக் கொண்டிருக்கிறதே! ஆறுதலாக ஒரு பத்திரிகையோ புத்தகமோ படிக்க முடிகிறதா? எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு இதை அறுத்து எறிய வேண்டும் போலிருகிறது. ம்…அலோ…பத்மா நகைமாளிகை மனேச்சர் பேசுகிறேன்…”
பத்மநாதன் பேசினார் “நீர் மனேச்சர் வேலை பார்த்தது போதும். உம்முடைய கடமை உணர்ச்சியையும் பொறுப்புணர்ச்சியையும் போதியளவு புரிந்து கொண்டேன். கணக்கப்பிள்ளையிடம் சொல்லி உம்முடைய கணக்கைப் பார்த்து வையும். நான் சிறிது நேரத்தில் அங்கு வந்து விடுகிறேன்.”
பத்மநாதன், நகைமாளிகை சென்று மனேச்சர் மயில்வாகனத்துக்கு வேலை நீக்க அறிவித்தல் கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். நாம் அடுத்த சுவைக்கு வருவோம்.
சுவை – 3
சுந்தரமூர்த்தி கடனாகக் கேட்டிருந்த ஆயிரம் ரூபாவை நாளை தருவதாகத் தகவல் தெரிவிப்பதற்காக புண்ணிய மூர்த்தி அவருக்கு டெலிபோன் செய்கிறார். சுந்தரமூர்த்தியும் அவன் மனைவியும் பேசிக்கொண்டிருப்பது புண்ணியமூர்த்தியின் காதுகளுக்குக் கேட்கிறது.
“புண்ணியமூர்த்தி அநேகமாக நீங்கள் கேட்ட பணத்தைத் தருவார் என்கிறீர்களே! அந்தப் பணத்தை எப்படித் திருப்பிக் கொடுப்பீர்கள். அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?”
“திருப்பிக் கொடுப்பதா? அவன் ஒரு பச்சைப் பேயன் நாளைக்கு நாளையின்று என நாட்களைக் கடத்திக் கொண்டு போகவேண்டியது தான். அவனும் இவனிடம் அலைவதைவிட ஆயிரம் ரூபா போனால் போகிறது என்று பேசாமல் இருந்து விடுவான்.”
“அவர் ஏதாவது சட்ட நடவடிக்கை எடுத்தால்..?”
“ஐயாயிரம் பத்தாயிரம் என்று வாங்கியவர்கள் எல்லாரும் கைவிரித்துவிட்ட பின்பும் பேசாமல் இருப்பவன் என்னுடைய ஆயிரம் ரூபாவுக்கா சட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறான்?”
“அது சரி டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருக்கிறதே! எடுத்து என்னவென்று தான் கேளுங்களேன்!”
“அலோ…சுந்தரமூர்த்தி பேசுகிறேன்….”
பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இவைகளை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த புண்ணியமூர்த்தி ‘பச்சைப் பேயன்’ என்பதாலோ என்னவோ சுருக்கமாகவே பேசுகிறார்.
“நான் புண்ணியமூர்த்தி பேசுகிறேன். நீங்கள் கேட்ட பணம் தரமுடியாது.” அடுத்து அவர் ‘டக்’ என்று றிசீவரை வைத்து விடுகிறார்.
இம்மட்டல்ல இன்னும் எத்தனையோ இடங்களில் எத்தனையோ சுவையான சம்பவங்கள் நடைபெறும். மேலே குறிப்பிட்ட தொலைபேசி அழைப்புகள் ‘டிரங்கோலாக’ இருந்தால் இந்த வேடிக்கைகளையெல்லாம் தொலைபேசிப் பரிவர்த்தனை நிலையத்தினரும் அனுபவிக்கலாம்!
– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.