தெய்வமே கலங்கி நின்ற நேரம்

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 10,692 
 
 

வெளியில் ஆம்புலன்ஸோ, ஃபையர் என்ஜினோ ஏதோ ஒரு அவசர உதவிக்கு வரும் ஊர்தி ஒன்று ஒலி எழுப்பி ஓடி மறைந்த சப்தம் கேட்டு என் தூக்கம் தடைபட்டது. பாவம் யாருக்கு என்ன கஷ்டமோ என்று நினைத்தவாறு மணியைப் பார்த்தேன். மணி இரவு பன்னிரண்டு. பக்கத்தில் குறட்டை ஒலி ஊரைத் தூக்கியது. புரண்டு புரண்டு படுத்தும் மீண்டும் தூக்கம் வரவில்லை.

பக்கத்தில் டி.வி ரிமோட் இருந்ததால் தூக்கம் வரும் வரை ஏதாவது டி. வி. பார்க்க நினைத்தேன். எத்தனை அலைவரிசை இருந்தாலும் தொலைகாட்சியில் உருப்படியாக பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. மாற்றி மாற்றி விளம்பரங்களைப் பார்த்து அலுத்துப் போய் ஏதாவது வீடியோவாவது பார்க்கலாம் என்று தோன்றியது. நல்லவேளை எழுந்து போய் போடும் அளவுக்கு வேலை வைக்காமல் ஏதோ ஒரு ஒளிநாடா டெக்கின் உள்ளே இருந்தது. என்றோ பார்த்து பாதியில் நிறுத்திவிட்ட “கந்தன் கருணை” படம் தொடர்ந்து ஓட ஆரம்பித்தது. சின்னத்திரையில் ஒளவை நாவல் பழத்தை ஊதிவிட்டு முருகருடன் பேசிக்கொண்டிருந்தார்.

“முருகா!!! முருகா!!! ஞானபண்டிதா!!!!
நீயா என்னை இப்படி சோதிப்பது? என்று வியந்தார் ஒளவையார்.

“ஆம், தமிழால் உன்னோடு விளையாடவே யாம் இவ்வாறு வந்தோம்” என்றார் முருகர்.

தொடர்ந்து எதுவுமே தெரியாதது போல முருகர் கேள்வி மேல் கேள்வி கேட்க, ஒளவையும் தன் புலமையெல்லாம் வெளிப்படுத்திப் பாட ஆரம்பித்தார்.
“என்றும் புதியது, பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது……”

“திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது” என்ற எனக்குப் பிடித்த பாடல் வரிகள் வந்தவுடன் நானும் ஒளவையுடன் சேர்ந்துகொண்டேன்.

அதுவரை சுகமான குறட்டை ஒலியுடன் தூங்கிக்கொண்டிருந்த கணவர் தூக்கிவாரிப் போட்டு எழுந்தார். குழப்பத்துடன் “என்ன செஞ்சுக்கிட்டிருக்க?” என்றார்.

“தெரியல!!! பாடிக்கிட்டிருக்கேன்”

“மணி என்ன ஆவுது?”

“என்ன ஒரு பன்னிரண்டரை இருக்கலாம்னு நினைக்கிறேன்”

“அடுத்தவங்கள தூங்க விட மாட்டியா? முருகா, வர வர மனுஷனுக்கு ராத்திரிலேயும் நிம்மதி இல்லாம போச்சே, முருகா, முருகா” என்று புலம்பியவாறு மீண்டும் படுத்து தலையணையை முகத்தின் மேல் வைத்துக்க் கொண்டார்.

நான் மீண்டும் தொலைக்காட்சி பக்கம் திரும்பி பார்ப்பதைத் தொடர்ந்தேன். அப்பொழுது அதனருகில் பள பள என்று ரேடியம் ஒளி போல தோன்றிய ஒளி தொடர்ந்து பிரகாசமானது.

கண்களைக் கசக்கி உற்றுப் பார்த்தால் மயில் மேல் அமர்ந்த முருகர் தெரிந்தார்.

“முருகா!!! நீங்களா?!!!”

“ஆமாம், நானேதான்” என்று புன்முறுவல் செய்தார்.

“என்ன செய்துகொண்டிருக்கிறாய் எனத் தெரிகிறதா?” என்றார் சிறிது கோபம் கலந்த குரலில்.

“கோபம் வேண்டாம் முருகா, நான் சுடாத வீடியோகேஸட் தான் பார்க்கிறேன் முருகா”

“நான் என்ன கேட்கிறேன், நீ எதைப் பற்றி சொல்கிறாய்? அது என்ன சுடாத வீடியோகேஸட் நான் கேள்விப் பட்டதில்லையே?”

“என்ன முருகா இப்படிக் கேட்டுட்டீங்க? சுட்ட பழம், சுடாத பழம் தெரிந்த உங்களுக்கு சுடாத வீடியோகேஸட் பற்றி தெரியாதுன்னு சொல்றது நம்புற மாதிரி இல்லையே!!! படம் வெளியிட்டவங்களே வெளியிட்ட வீடியோ, காசு கொடுத்து வாங்கிப் பார்க்கிறேன் முருகா” என்றேன் தொடர்ந்து “அது சரி, எங்கே இந்தப் பக்கம், தமிழால் என்னோடு விளையாட விரும்பி வந்தீர்களா, முருகா?”

“நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும் என்பதைக் கேள்விப்பட்டதில்லையா நீ?” என்றார் சிறிது கடுப்பு நிறைந்த குரலில்.

“துன்பத்தில் இருக்கும் பக்தர்களை காப்பது என் கடமையல்லவா?”

“இங்கே யாரும் துன்பத்தில் இல்லையே முருகா” என்றேன் குழப்பத்துடன்.

“அதை நீ சொல்லக் கூடாது”

“முருகா, உங்களை நான் சொற்றமிழால் வரிசை படுத்திப் பாடவா?”

“வேண்டாம் விட்டு விடு”

“நான் நல்லாவே பாடுவேன் முருகா”

“அதை நீ சொல்லக் கூடாது.”

“என்ன முருகா கீறல் விழுந்த இசைத்தட்டு போல “அதை நீ சொல்லக் கூடாது”ன்னு திருப்பி திருப்பி அதையே சொல்றீங்க” என்று கண்டனம் தெரிவித்து விட்டு முருகரின் அனுமதி இல்லாமலே,

“முருகா என்றழைக்கவா?
முத்துக்குமரா என்றழைக்கவா?
கந்தா என்றழைக்கவா?
கதிர்வேலா என்றழைக்கவா?
எப்படி அழைப்பேன் உன்னை?
எங்கே காண்பேன்?”
என்று பாட ஆரம்பித்தேன்.

“சரி, கண்ணைப் பரிசோதனை செய்து நல்ல கண்ணாடியாய் மாட்டிக்கொள், எதிரே வந்த பின்பும் எங்கே காண்பேன்? என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது உன் பார்வை.”

“மன்னிச்சுக்கோங்க முருகா, தப்பான சிச்சுவேஷன் பாட்டு பாடிட்டேன்” என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக,

“முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்திக் குருபரன் எனவோதும்…..” என்று பாட ஆரம்பித்தேன்.

“தாயே பராசக்தி” என்றார் அதிர்ச்சி நிறைந்த குரலில் முருகர்.

அந்த அரைகுறை இருளிலும் அவர் முகத்தில் தோன்றிய அதிர்ச்சி எனக்குப் புரியவும் உடனே பாடுவதை நிறுத்தினேன்.

“ஏன் முருகா பராசக்தியைக் கூப்பிடறீங்க?”

“அருணகிரிக்கு அடி எடுத்துக் கொடுத்தபொழுது இந்தக் கொடுமையை நான் எதிர்பார்க்காமல் விட்டுவிட்டேன்”

“என்ன கொடுமை? எது கொடுமை? எங்கே கொடுமை? அது சரி, நீங்கள் ஏன் உங்கள் அன்னையைக் கூப்பிட்டீர்கள் என்று இன்னும் சொல்லல முருகா”

“வள வளவென்று பேசிக்கொண்டே இருக்காதே, என் சிந்தனையைக் கலைக்கிறாய், உன் மனம் புண்படாமல் எப்படி புரிய வைப்பது என்ற யோசனையில் இருக்கிறேன்.”

“ஓஹோ”

“சரி, உனக்குப் பிடித்த பாடகர், என் பக்தன் டி.எம்.எஸ். பாடல் மூலமே புரிய வைக்கிறேன்.”

“என் வீட்டுக்காரருக்கும் அவர் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும் முருகா,
“உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி”
என்ற வரிகள் அவருக்கு மிகவும் பிடித்த வரிகள், எப்போ பார்த்தாலும் அதையே பாடிக்கிட்டிருப்பாரு.”

“குறுக்கே குறுக்கே பேசாதே, உன்னால் எனக்கு கணக்கு தெரியவில்லை என்ற பழி வேறு. என் பக்தன், உன் கணவர் அந்த வரிகளைப் பாடுவதன் காரணத்தை என்றாவது யோசித்தாயா?”

அவருக்கு டி.எம்.எஸ். பாட்டுன்னா பிடிக்கும் அதனாலதான்.”

“இதுதான் நீ புரிந்து கொண்டதா? டி.எம்.எஸ். பாடல்கள் எத்தனை இருக்கிறது, இதை மட்டும் பாடிக்கொண்டிருப்பதன் காரணம் என்ன? நாளையில் இருந்து தினமும் வெண்டைக்காய் சாப்பிடு.”

“சாப்பாட்டுக்கு முன்பா? இல்லை சாப்பிட்ட பிறகா? தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் அவர் அந்த வரிகள் பாடுவதன் காரணம் புரிந்துவிடுமா?”

“நீ வெண்டைக்காயையே முழு உணவாக சாப்பிட்டாலும் பலன் இருக்கப் போவதிலை என்று தெளிவாகத் தெரிகிறது.
அது இருக்கட்டும், என் அன்னையை அழைத்த காரணம் சொல்கிறேன்,
“காஞ்சிப்போன பூமி எல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சிப் போய்ட்டா?
துன்பப் படுறவங்க அந்தக் கவலையை தெய்வத்துகிட்ட சொல்லி முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா?
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?”
என்ற பாடல் நினைவிற்கு வருகிறதா?”

“ஆமாம், ஆமாம் முருகா!!! ‘சோதனை மேல் சோதனை சோதனை போதுமடா சாமி’ என்றப் பாடலின் இடையில் வரும் வசனம் அது, இதுவும் என் வீட்டுக்காரருக்கு மிகவும் பிடித்து அடிக்கடி பாடும் டி.எம்.எஸ். பாடலின் வரிகள்தான்.”

“இவ்வளவு நடக்கிறது, இதற்கு மேலும் இங்கு யாரும் துன்பத்தில் இல்லை என்கிறாய் நீ, கிடக்கிறது விடு, எனக்கு துன்பம் நேரும்பொழுது என் தாயை நான் அழைப்பதன் காரணம் அதுதான்.”

“சாமி உங்களுக்கே ஒரு கஷ்டம்னா உங்க அம்மாவைக் கூப்பிடுறதா சொல்றீங்கன்னு புரியுது, ஆனா ஒன்னு புரியல்லே”

“எது? என் அன்னையை நான் அழைக்க வேண்டிய அளவிற்கு ஏற்பட்ட துன்பம் என்னவென்றா???!!!”

“அட, அது இல்ல முருகா, காஞ்சிப்போன பூமி எல்லாம் அப்படின்னு ஆரம்பிச்சு ஏன் விடு விடுன்னு வேகமா வசனத்த சொல்லி முடிச்சீங்க?
காஞ்சிப்போன பூமி எல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சிப் போய்ட்டா?
துன்பப் படுறவங்க அந்தக் கவலையை தெய்வத்துகிட்ட சொல்லி முறையிடுவாங்க.
இந்தவரிகள சொல்றப்ப கொஞ்சம் சோகமா சொல்லணும்.

‘ஆனா தெய்வமே கலங்கி நின்னா?’ அப்படின்னு சொல்லி ஒரு சின்ன இடைவெளி கொடுக்கணும்.
அப்புறம் ‘அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?’ அப்படின்னு சொல்றப்ப கொஞ்சம் குரல் தழ தழக்க சொல்லணும்.
எங்கே இன்னொருதரம் முயற்சி பண்ணுங்க சரியா வருதான்னு பார்ப்போம்”

“தாயே பராசக்தி” என்றார் மீண்டும் முருகர் அதிர்ச்சி நிறைந்த குரலில்.

இம்முறை முருகரின் மயில் என்னை முறைத்துப் பார்த்து, எனக்குத் தெரியாத மொழியில் கோபத்துடன் ஏதோ அகவி விட்டு, முருகரின் கட்டளைக்கு காத்திராமல் அவருடன் பறந்துவிட்டது.

“முருகா, முருகா நில்லுங்க முருகா, நான் இன்னமும் பாட்ட பாடி முடிக்கலையே, முருகா, முருகா” என்று கூவினேன்.

என் கணவர் என்னை உலுக்கினார். “இப்ப என்ன ஆச்சு, நீயும் என்னைப்போல முருக பக்தையா ராவோட ராவா மாறிட்டியா? ஏன் முருகா, முருகான்னு கத்தற” என்றார்.

அப்பொழுதுதான் படம் பார்த்துக்கொண்டே தூங்கிவிட்டதும், கனவில் முருகர் வந்து பேசிக்கொண்டிருக்கும்பொழுதே இடையில் பறந்து போய்விட்டதும் புரிந்தது. அதை அவரிடம் சொன்னேன்.

“அவரு கொடுத்து வச்சவரு, தப்பிச்சுட்டாரு, நம்மால நினைச்சாலும் முடியுதா சொல்லு? இன்னைக்கு தூக்கம் அவ்வளவுதான்!” என்று புலம்பியவாறு குளியலறையை நோக்கி நடையைக் கட்டினார் அவர்.

5 thoughts on “தெய்வமே கலங்கி நின்ற நேரம்

  1. அடடா தேன்மொழி அம்மா …உங்க சிறுகதை மிகவும் பிரமாதம் அம்மா …..சிரிப்பை அடக்கவே முடியல மா… அருமை ….

  2. இந்தக்கதை மிக அருமையாக இருக்கிறது. நல்ல நகைச்சுவை உணர்வோடு எழுதி இருக்கிறீர்கள். தங்கள் பணி சிறக்க, தொடர வாழ்த்துகள்.

  3. தேமொழி அவர்களின் இந்தக் கதை பல விஷயங்களை சொல்லாமல் சொல்லிச் சிரிக்கும் அவரது தனிப் பாணியை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறது..யாரெல்லாம் சிரிப்பாய்ச் சிரித்தார்கள் என்பது கதையைப் படித்தால் தெள்ளென விளங்குகிறது..சிரித்து சிரித்து வயிறு வலிப்பதால் “வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க” என்றே கந்தர்சஷ்டி கவச வரிகளை பாடத் தோன்றுகிறது..முருகா.முருகா..

    1. அடடா தேன்மொழி அம்மா …உங்க சிறுகதை மிகவும் பிரமாதம் அம்மா …..சிரிப்பை அடக்கவே முடியல மா… அருமை ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *