துப்பறிபவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 3,217 
 
 

(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கணபதி ஏதாவது ஒரு புஸ்தகத்தைப் படித்தால் அதே மயமாக ஆகி விடுவான். ஒரு வாரம் வரையில் அவனுடைய பேச்சில் அந்தப் புஸ்தகத்துச் சரக்கு அடிக்கடி வெளிவரும், கதையைப் படித்தால் அந்தக் கதா பாத்திரங் களுள் ஒருவரைப் போல நடந்து கொள்வான். 

துப்பறியும் நாவல்களில் அவனுக்கு ருசி தட்டத் தொடங்கியது; கானன்டாயில் எழுதியஷெர்லக்ஹோம்ஸைப் படித்தான். அவனே ஒரு ஷெர்லக் ஹோம்ஸ் ஆகிவிட்டான். இன்னும் பலர் எழுதிய கதைகளையும் படித்தான். அப்புறம் அவனுடைய ஊகங்கள் விரிய ஆரம்பித்தன. அவன் யாரைச் சந்தித்தாலும் அவனுடைய ஊக சக்தியைக் காட்டுவதில் தவறுவதில்லை. 

“நீ ஏன் அவ்வளவு வேகமாக நடந்தாய்?” என்று நம்மை ஒரு கேள்வி கேட்பான். 

“நான் நடக்கவில்லை” என்று சொல்லிப் பாருங்கள் “நீ சொன்னாலும் நான் நம்புவேனா? அதோ பார்! உன் வேஷ்டித் தலைப்பு டாரென்று கிழிந்திருக்கிறது. நீ எங்கோ அவசரமாகப் போகிறாய். உன்னை அறியாமல் டாரென்று வேஷ்டி கிழிகிறது. வீட்டிற்கு வருகிறாய்; உன்னுடைய மனைவியோ அம்மாவோ பார்த்து, “ஏன் இப்படிக் கிழித்துக் கொண்டாய்? என்று கேட்கிறாள். அப்பொழுதுதான் உனக்கு வேகமாக நடந்தது ஞாபகத் துக்கு வருகிறது-” இப்படியே கதை சொல்ல ஆரம்பித்து விடுவான். 


ஒரு நாள் ஒரு புது நண்பரை நான் என்னுடன் அழைத்துக் கொண்டு கணபதியின் வீட்டிற்குப் போனேன். என்னுடன் வந்த நண்பர் நெட்டையானவர்: சிறிது கூனலுடையவர். கணபதியின் வீட்டிற்குப் போனபோது அவன் ஏதோ ஒரு துப்பறியும் நாவலைப் படித்து முடித்த சமயம். நாங்கள் போனவுடன் அவன் எங்களை வாருங் களென்று சொல்லக்கூட இல்லை. 

“துப்பறிபவன் என்றாலே ஒரு தனி மனிதன்; அவன் மூளையே அபாரம்” என்றான் அவன். 

என்னுடன் வந்த நண்பர் என்ன நினைத்தாரோ அறியேன். அப்புறம் உட்கார்ந்தோம். 

“இவர் உன்னுடைய நண்பர்; என்னுடைய நண்பரும் ஆகப் போகிறார்” என்றான் கணபதி- 

”ஆம்” என்றேன் நான். 

தான் துப்பறியும் சாமர்த்தியத்தில் இந்த விஷயமும் ஒன்றென்று அவன் திருப்திப்பட்டுக் கொண்டான். 

“உங்களுடைய மனைவி மிகவும் குட்டையானவள் அல்லவா?” என்று கேட்டான் கணபதி. 

என்னுடைய நண்பர் ஒன்றும் சொல்லாமல் சிரித்தார்.

“ஆமாம். நெட்டையாக இருப்பவர்களுக்குக் நெட்டையானவர்களே மனைவிகளாகக் கிடைக்கிறார்களா? உங்களுக்கு மிகவும் இளமையிலேயே கல்யாணம் ஆகியிருக்க வேண்டும்” என்று மற்றொரு ஜோஸ்யத்தைச் சொன்னான். வந்தவர் அதற்கும் பதில் பேசவில்லை. சிரிப்பதோடே நின்று விட்டார். 

“உங்களுடைய உருவம் குட்டையும் தெட்டையுமாக இருந்தாலும் உங்கள் இருவர் மனமும் ஒத்து இருக்கும். உங்கள் மனைவியின் யோசனைகளை நீங்கள் அன்போடு ஏற்றுக் கொள்ளும் தன்மை உடையவர்கள்.” 

நண்பர் சிரித்த வண்ணமாக இருந்தார். எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. 

இவையெல்லாம் எப்படித் தெரிந்தன?” என்று கேட்டேன். 

“இதென்ன பிரமாதமா? ஊகத்தால் அறிந்ததுதான். துப்பறிபவர்கள் எவ்வளவோ சூட்சமமான விஷயங்களை எல்லாம் கண்டு பிடித்து விடுகிறார்கள்.” 

“என்ன காரணங்களால் இந்த விஷயங்கள் உனக்குத் தெரிந்தன?” 

“காரணம் சாதாரணந்தான். நான் சொல்லும்போது ஆச்சரியமாகவே இருக்கும்; கொஞ்சம் மூளையை உபயோகித்துப் பார்த்தால் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிய வரும். 

நான் மூளையில்லாதவனென்று அவன் நினைத்து அப்படிச் சொன்னானென்று நீங்கள் எண்ண வேண்டாம். தன்னுடைய மூளை அவ்வளவு சிறந்ததென்பதை வேறு வகையாக அவனால் தெரிவித்துக் கொள்ள முடியவில்லை! 

“சொல்கிறேன் கேள் : இவரைப் பார்த்தவுடனே இவருடைய நெட்டையான ஆகிருதியில் ஒரு சிறு கூனல் தென்படுகிறது. இது உடம்பிலே உண்டானதல்ல. குனிந்து குனிந்து பழகியதால் இப்படியாகி யிருக்கிறது. குனிந்து குனிந்து பேசிக் கொண்டிருந்தால் இப்படித்தான் ஆகும். இவர் மிகவும் சுவாரஸ்யமாகத் தினந்தோறும் ஒருவரோடு பேச வேண்டுமென்றால் அவர் இவருடைய மனைவியாகத்தான் இருக்க வேண்டும். அவளோடு தினந் தோறும் குனிந்து குனிந்து பேசும்படி அவள் குட்டையாக இருப்பதனால்தான் இவருக்குக் கூனல் உண்டா யிருக்கிறது. கூனல் விழ வேண்டுமானால் பல வருஷங்கள் குனிந்து கொண்டு பேசிய வழக்கம் இருக்க வேண்டும் ; அதனால் இவருக்கு இளைய வயசிலேயே அந்தக் குட்டையான மனைவி இவரோடு வாழத் தொடங்கி யிருக்க வேண்டும். இவ்வளவு சிரத்தையாக இவர் குனிந்து பேசுவதும் அவள் வார்த்தைகளைக் கேட்பதுமாக இருப்பதில் இவருடைய மனவொற்றுமையும் விளங்கவில்லையா ? இதை முட்டாள் கூட ஊகித்து விடலாமே.” 

மறுபடி என்னை முட்டாளென்று அவன் திட்டுவதாகச் சந்தேகம் கொள்ளாதீர்கள்! 

”உங்களுக்குக் குழந்தைகள் உண்டோ?” என்று கணபதி அவரை நோக்கிக் கேட்டான். 

“அதையும் நீயே சொல்லிவிடேன்” என்றேன் நான். 

“அது ஒரு பிரமாதமான காரியமல்ல. இவருக்குக் குழந்தையே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். குழந்தை இருந்தால் இவர் இவ்வளவு சந்தோஷத்தை வெளியிடும் முகத்தோடு இருக்க மாட்டார்” என்று சொல்லி விட்டு, “ஏன்? நான் சொல்வது எப்படி?” என்று வெற்றி கொண்ட தொனியில் கேட்டான். 

“நீங்கள் கடைசியில் சொன்னது பரம வாஸ்தவம். எனக்குக் குழந்தைகளே இல்லை.”

“சந்தோஷம். மற்ற விஷயங்களில்கூட அவ்வளவு அதிக வித்தியாசம்…” 

“வித்தியாசமென்ன? நான் பிரம்மசாரி! எனக்குப் பெண்டாட்டியும் இல்லை ; பிள்ளைகளும் இல்லை.” 

“பார்த்தீர்களா? அப்பொழுதே நினைத்தேன். இவர் முகத்தில் அதிகச் சுருக்கமில்லையே! என்ன இருந்தாலும்: பெண்டாட்டி நகைக்கும் புடைவைக்கும் நச்சுப்பண்ணாமல் இருப்பாளா? இவர் பிரம்ம சாரியாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தேன். ஆனாலும் இப்போது தான் என்ன? இவருக்குப் பிள்ளைகள் இல்லையென்பது மட்டும் நிச்சயமாகிவிட்டது.” 

அவனோடு மேலே என்ன பேசுவது?

– 1932-42, கலைமகள்.

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *