தாட்சண்யப் பிரகிருதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 23, 2022
பார்வையிட்டோர்: 6,618 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசகர்களுக்கு

இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறோமே ? என்றும், சில இடங்களில் இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது. இப்புத்தகம் முதன் முறை வெளியானபோது இதைப் படித்த ரசிகமணி டி. கே. சி. அவர்கள் என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மிக அருமையான கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். எதிர் காலத்தில் நான் ஒரு சிறந்த நகைச்சுவை ஆசிரியராக விளங்குவேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னே வாழ்த்தியிருந்தார்கள். இச்சமயம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சவி செலுத்துகிறேன்.
மயிலாப்பூர்
சாவி
14-4-1964

தாட்சண்யப் பிரகிருதி

ராமநாதன் சென்னையிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்டான். அவன், ரெயில்வேயில் மெயில் ஸார்ட்டராக இருந்ததால் அடிக்கடி டில்லிக்கும் சென்னைக்கும் போய்வரச் சௌகரியமாயிருந்தது.

சென்னை வாசிகளும் டில்லி வாசிகளும் ராமநாதனைத் தங்களுடைய இலவசத் தபால்காரனாகவும் கூட்ஸ் வண்டியாகவும் உபயோகித்துக் கொண்டார்கள். அதாவது டில்லியிலிருக்கும் தங்கள் பந்துக்களுக்கு இவன் மூலமாய்த் தபால், கரிவடாம், துணி, அப்பளக்குழவி முதலிய குடும்ப சாமான்களை அனுப்பி வந்தார்கள்.

orr-5598_Dakshanya-Prakruthi_0001-picராமநாதன் பொறுமைசாலி. இல்லாவிட்டால் பட்டணத்திலுள்ள சாமான்களில் முக்கால்வாசியை டில்லியிலும் டில்லியிலுள்ள சாமான்களைப் பட்டணத்திலும் கொண்டு வந்துசேர்ப்பானா? அத்துடன் அவனுக்கு இரண்டு ஊர் மனுஷ்யர்களும் வேண்டியவர்கள். தாட்சண்யப்பட்ட மனிதர்கள் சொல்லும்பொழுது எப்படி மாட்டேனென்பது ? அநேகமாக ராமநாதனுக்கு மாதத்தில் நாலைந்து பிரயாணம் கட்டாயம் உண்டு. ஒவ்வொரு பிரயாணத்திலும் அவன் கொண்டு போகும் சாமான்கள் மூன்று குடும்பத்திற்கு ஆகும்.

ஒரு தடவை ராமநாதனுக்கு அசாத்தியக் கோபம் வந்து விட்டது. அவனுக்குக் கோபம் வந்ததில் தவறென்ன? தளரார் சாமான்களையெல்லாம் கொண்டுபோய் டில்லியில் வைப்பதற்குத்தானா அவனுக்கு இந்திய சர்க்கார் சம்பளம் தருகிறார்கள்? இருந்தாலும் அவன் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, ‘பரோபகாரம் இதம் சரீரம்’ என்று நண்பர்களுக்கு உதவிக்கொண்டிருந்தான்.

ராமநாதனுடைய குடும்பம் சென்னையில் இருந்தது. டில்லியில் குடித்தனத்தைப் போடலாகாதா என்றால் அங்கே வாடகை எல்லாம் அதிகம். ரெயில்வேயில் இனாம் சவாரி இருப்பதால் சென்னைக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தான்.

‘சரி; இந்தத் தடவை டில்லிக்குப் போகும் போது யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ரகசியமாய் ரயிவேறி விடவேண்டியதுதான்’ என்று தீர்மானம் பண்ணி யிருந்தான்.

எனவே, மனைவி சிவகாமுவைக் கூப்பிட்டு, “ஏய்! நான் புதன் கிழமை டில்லிக்குப் புறப்படுகிறேன். யாரிடமும் சொல்லி விடாதே. பத்திரம்!” என்று சொல்லிவிட்டு, ஊரார்களிடம் தான் டில்லிக்குப் போக ஒரு மாதம் ஆகு மென்று பொய் சொல்லி ஏமாற்றி விட்டான். அதில் ஒருவர், “ரொமநாதா! நீ எப்போது போனாலும் சரிதான்; போகும் போது என் மாப்பிள்ளைக்கு ஒரு டப்பி விபூதி வைத்திருக் கிறேன். ஞாபகமாய் எடுத்துக்கொண்டு போகணும்” என்று அப்பொழுதே முன்கூட்டிச் சொல்லி வைத்து விட்டார்,

மறுநாள் புதன் கிழமை. சிவகாமு பக்கத்து வீட்டு சுப்புலக்ஷ்மியிடம் ஏதோ வேலையாகப் போயிருந்தாள்.

சுப்புலக்ஷ்மி, “ஏண்டி சிவகாமு! உங்காத்திலே என் றைக்கு டில்லிக்குப் போகிறார்?” என்று கேட்டாள்.

சிவகாமு, “அதென்னமோம்மா, யாரிடமும் சொல்ல வேண்டாம்னு சொல்லியிருக்கார். நாளைக்குத்தான் போகப் போகிறார். நீ போய் யார் கிட்டேயும் சொல்லி வெச்சுடாதே. உனக்கு ஏதாவது கொடுத்தனுப்ப வேண்டுமானால் என்னிடம் சொல்லு ; ரகசியமாய் அனுப்பிவிடுகிறேன்” என்றாள் சிவகாமு

“ஒண்ணும் இல்லே; ஒரு வீசை நல்லெண்ணெய் வாங்கி வெச்சிருக்கேன். அதை டில்லியிலே இருக்கிற என் அண்ணாவிடம் கொடுத்து விடவேண்டும். அவ்வளவு தான்” என்று சொல்லி எண்ணெய் டின்னையும் எடுத்து வந்து சிவகாமுவிடம் கொடுத்தாள்.

புதன்கிழமை வந்தது. ராமநாதனுக்குப் பரம சந்தோஷம். பிரயாணம் ஒரு விபூதி சம்புடம் ஒரு வீசை நல்லெண்ணெயோடு மட்டும். ஸ்திரப்பட்டதைக் குறித்து மிகவும் சந்தோஷப்பட்டுக்கொண்டான்.

பகல் மூன்று மணிக்கு ரயிலுக்கு மாப்பிள்ளை போலக் கிளம்பினான். இது வரை அவன் இந்தமாதிரி மூட்டை முடிச்சு இல்லாமல் போனதே கிடையாது. பரம சந்தோஷத்துடன் ரயிலடிக்குச் சென்ற, ராமநாதனுடைய முகம் வெளுத்தது.

கீழ்க்கண்ட பேர்கள் பின் வரும் சாமான்களை வைத்துக் கொண்டு ராமநாதனிடம் டில்லிக்குக் கொடுத்தனுப்பத் தயாராய்க் காத்துக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.

ரகசியம் ரகசியம் என்று ராமநாதன் டில்லிபோகிற விஷயம் கிட்டத்தட்ட ஊர் பூராவும் பரவிவிட்டது. ஒரு ஸ்திரீயின் காதில் பட்ட ரகசியம் இந்தக் கதியாயிற்று!

பக்கத்துத் தெரு சுந்தரேசய்யர் ராமநாதனிடம் இரண்டு வீசை காப்பிப் பொடியைக் கொடுத்துத் தன் பேத்தியிடம் சேர்த்துவிடச் சொன்னார். அதைத் தவிர ஒரு பொட்டலம் கற்கண்டைக் கொடுத்துத் தான் கொடுத்ததாகத் தன் பேரனிடம் கொடுக்கச் சொன்னார்.

அடுத்த தெரு அம்முப்பாட்டி முறுக்கு, சீடை, அப்பளம், வடாம், பொரிவிளங்காய் முதலிய பக்ஷணங்களைக் கொடுத்து, தன் அருமைப் பெண்ணிடம் சேர்க்கச் சொன்னாள்.

பாலகிருஷ்ணன் தன் தாத்தாவுக்கு ஐந்து பலம் பட்டணம் பொடியும் ஒரு ஜோடி செருப்பையும் கொடுத் தனுப்பினான்.

லீவிலிருந்த டில்லி போஸ்ட் ஆபீஸ் கிளார்க் அனந்த ராமய்யர், ‘என் ஆபீஸ் துரைக்கு நாய்க்குட்டி என்றால் உயிர். நம்ம பக்கத்து ராஜபாளையம் நாய்க்குட்டி ஒன்று கிடைத்தது. இதைக் கொண்டு போய் மெள்ள அவரிடம் சேர்த்துவிடு. மெயில் ஸார்ட்டிங் வண்டியிலே இந்தக் குட்டி பிரயாணம் செய்வது நல்லது’ என்று ஒரு ஜந்துவைக் கொண்டு வந்து விட்டார். அவர் அதைக் ‘குட்டி’ என்று சொன்னாரே யொழிய அது நாலைந்து குட்டி போட்டிருக்கு மென்று ஊகிக்கக்கூடியதாயிருந்தது. ரயில்வேக்காரனுக்கு ஐந்து ரூபாய் காசு தராது ஏமாற்றும் சாகஸத்தை என் னென்பது? ஏகாம்பரய்யர் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கும் கொஞ்சம் மண்ணெண்ணெயும் தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இவ்வளவையும் ராமநாதன் வாங்கி ரயிலில் மெயில் வானில் அடுக்கிக் கொண்டான். எல்லோருக்கும், “ஆஹா, பேஷாய்க் கொடுத்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டுக் குறிப்பிட்ட தன் வண்டியில் போய் உட்கார்ந்தான். அவனுக்குக் கோபம் கோபமாய் வந்தது. இவ்வளவு சாமான் மகளையும் கொண்டு போய்ச் சேர்ப்பதென்றால் லேசாயிருக்கிறதா? அவன் பேசாமல் ரயிலில் படுத்துத் தூங்கினான். ஊரார் தந்த வஸ்துக்களும் அந்த ஜந்துவும் ஒரு மூலையில் கதம்பமாய்க் கிடந்தன. டில்லி ஸ்டேஷனுக்கு முன் ஸ்டேஷனில் ராமநாதன் கண் விழித்து எழுந்தான். அனந்த ராமய்யர் அனுப்பிய அந்த நாயைக் காணவில்லை. அதன் பக்கத்தில் வைத்திருந்த செருப்பையும் காணோம். எழுந்து ஸ்டேஷனில் இறங்கிப் பார்த்தான். நாய் செருப்பைக் கௌவிக்கொண்டு பிளாட்பாரத்தின் கோடியில் ஓடிக் கொண்டிருந்தது. துரத்திக்கொண்டு போய்ப் பிடித்து வரலாமென்றால், அதற்குள் வண்டி புறப்பட்டு விட்டது. இந்தத் தர்ம சங்கடத்திற்கு என்ன செய்வது?

டில்லியில் ரயிலைவிட்டு ராமநாதன் இறங்கியது தான் தாமதம். அவரவர்கள், ‘என் தாத்தா என்ன அனுப்பினார ? என் பாட்டி என்ன அனுப்பினாள்?’ என்று ரயிலடிக்கே வந்து விட்டார்கள். எல்லோரையும் பட்டாளம் போல அழைத்துக் கொண்டு அருகிலிருந்த கூட்ஸ் ஷெட்டுக்குப் போய் அவரவர்கள் மூட்டையையும் சாமானையும் பிரித்து வைத்தான்.

சுந்தரேசய்யரின் பேத்திக்குக் கொடுத்திருந்த காப்பித் தூளும், பாலகிருஷ்ணன் தந்திருந்த மூக்குத்தூளும் ஒன்றாய்ச் சேர்ந்து ஒரே கதம்பமாய்க் கிடந்தது. பாலகிருஷ்ணன் தாத்தாவையும், சுந்தரேசய்யரின் பேத்தியையும் ராமநாதன் கூப்பிட்டு, ‘வேணுமானால் இந்தப் புது ‘மிக்சரை’ச்’ சல்லடை போட்டுச் சலித்துப் பிரித்து எடுத்துக்கொள்ருங்கள்’ என்று அலட்சியமாகச் சொன்னான்.

பாலகிருஷ்ணன் தாத்தா, “ஏண்டா ராமநாதா? என் பிள்ளை செருப்பு அனுப்பினானே, அது எங்கே?” என்று கேட்டார்.

“செருப்பா? அனந்தராமய்யர் அனுப்பிய அந்தத் திருட்டு நாய் அதைக் காலில் மாட்டிக் கொள்ளாமல், வாயில் மாட்டிக் கொண்டு முந்தின ஸ்டேஷனிலேயே இறங்கி ஓடி விட்டது. மெள்ளப் போய் அதைக் கண்டுபிடித்து அதவிடம் செருப்பை வாங்கிக்கொள்ளும்! அப்படியே சௌகரியப்பட்டால் அனந்தராமய்யர் நாயையும் அழைத்து வந்து விடுங்கள்” என்றான் ராமநாதன்.

அம்முப்பாட்டி தந்த பக்ஷணத்திலெல்லாம் ஏகாம்பரய்யரின் மண் எண்ணெய் கலந்து நறுமணம் வீசியது.

இப்படி அமர்க்களமாயிருந்த லக்கேஜிலிருந்து அவரவர்கள் தத்தம் சாமான்களை எடுத்துக்கொள்வதற்குள் மணி மூன்றாயிற்று.

ராமநாதனைப் பிடித்த சனியன் அன்றோடு சமாப்தியாயிற்று. அதுமுதல் அவனிடம் யாரும், ‘சாமான் எடுத்துப் போகிறாயா?’ என்று கேட்டதே கிடையாது.

– மௌனப் பிள்ளையார், இரண்டாம் பதிப்பு: ஏப்ரல், 1964, மங்கள நூலகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *