தரமணியில் கரப்பான்பூச்சிகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 24, 2011
பார்வையிட்டோர்: 14,221 
 
 

என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் என் பெயரை மறந்து போயிருப்பீர்கள். அல்லது கேட்டிருக்கவே மாட்டீர்கள். காரணம் நான் பெயரோடு பெரும்பாலும் அறிமுகமாகிக் கொள்வதேயில்லை. என் அடையாளமாக இருப்பது கரப்பான்பூச்சிமருந்து விற்பவன். அதுவும் ஜெர்மனியின் புகழ்பெற்ற பூச்சிக் கொல்லி நிறுவனமான வில்ஹெம் ஒபேரின் விற்பனைப் பிரதிநிதி என்ற அடையாள அட்டையிருக்கிறது. ஆகவே அது உங்களுக்குப் போதுமானது. எனக்கே கூட என்னுடைய பெயர் தற்போது கொஞ்சம் அசௌகரியமாகவே இருக்கிறது.

பெயரைப் பொறுத்தவரை அது என்னோடு ஒட்டிக் கொள்ளவேயில்லை. வேலை மாறும்போது அதுவும் மாறிக் கொண்டேயிருக்கிறது. சிறுவயதிலே எனக்கு அந்தச் சந்தேகம் உண்டு. அடுத்தவர்களுக்காக ஏன் நான் ஒரு பெயரை வைத்துக் கொண்டிருக்கிறேன். என் பெயரால் எனக்கு என்ன நன்மை. அது தேவையற்ற ஆறாவது விரல் ஒன்றை போல ஏன் கூடவே ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று. உலகில் பெயரில்லாமல் எவ்வளவோ பொருட்கள் இருக்கின்றன. நம் கண்ணிலும் படுகின்றன. அதை நாம் ஒரு போதும் பெரிதாகக் கருதியதேயில்லை. அப்படி நானும் இருந்துவிட்டுப் போவதில் என்ன தவறிருக்ககூடும்.

என்றாலும் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குப் பெயர் வேண்டியிருக்கிறது. ஏதாவது ஒரு பெயர் போதும். அது ஒற்றை எழுத்தாகக் கூட இருந்தாலும் அங்கீகரித்துவிடுகிறார்கள். அதனால் ஒபேர் நிறுவனம் எனக்கு உருவாக்கிய கரப்பான்பூச்சி மருந்து விற்பவன் என்ற பெயரே போதுமானதாகயிருக்கிறது. அதை நான் ஆங்கிலத்தில் சொல்லும் போது தமிழை விடக் கூடுதலான ஒரு நெருக்கத்தை நீங்கள் அடைகிறீர்கள். கரப்பான்பூச்சிகளைக் கூட காக்ரோஷ் என்று தான் பெரும்பான்மை வீடுகளில் சொல்கிறார்கள். கரப்பான்பூச்சி அளவில் கூட தமிழ் ஒட்டிருப்பது மாநகரவாசிகளுக்குப் பிடிப்பதில்லை போலும்.

என்னைப் பற்றி அறிந்து கொள்வதில் உங்களுக்கு விருப்பம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால் எனக்கு இரண்டு மணி நேரம் பணியிடை ஒய்வு இருக்கிறது. ஆகவே அதைப் போக்கி கொள்வதற்காகவே உங்களிடம் இதைச் சொல்கிறேன்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயிற்சிப் பணியாளராக இருந்த போது நெசப்பாக்கம் பகுதியின் முன் உள்ள பெட்ரோல் பங்க் முன்னால் தினமும் காலையில் சந்தித்துக் கொள்வோம். எங்களுக்கு தலைவராக இருந்தவர் மணிநாராயணன். அவர் கரப்பான்பூச்சிமருந்து விற்பதில் தமிழகத்திலே மூன்றாவது ஆளாக சாதனை படைத்தவர்.

நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இருநூறு ஸ்பிரே விற்க வேண்டும் என்பதை அவர் இலக்காக வைத்திருந்தார். ஆகவே காலை ஏழு மணிக்கு குழு குழுவாகப் பிரித்து பணியிடத்திற்கு அனுப்பிவிடுவார். அவரிடம் கரப்பான்பூச்சிகள் காலை ஏழு மணிக்கு எழுந்து கொள்ளுமா அல்லது உறக்கத்தில் இருக்குமா என்ற சந்தேகத்தை நான் ஒரு போதும் கேட்க முடிந்ததேயில்லை.

அவர் தனது கறுப்பு சூட்கேஸில் மாநகரின் வரைபடத்தை நான்காக மடித்து வைத்திருக்கிறார். அந்த வரைபடத்தில் நகரின் ஒவ்வொரு பகுதியும் ஒரு வண்ணத்தில் தனித்துப் பிரிக்கபட்டிருக்கும். எந்தப் பகுதியில் கரப்பான்பூச்சிகள் அதிகமிருக்கும். அங்கே எத்தனை பேர் போக வேண்டும் என்று வட்டமிட்டிருப்பார்.

ஒரு நகரை கரப்பான்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தனித்தனியாக பிரித்திருப்பது எவ்வளவு பெரிய விந்தை. அதை மணி நாராயணன் உணர்ந்திருப்பாரா?

அவர் கறாரான முகத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு பேசுவார். அது கூட வயதான ஒரு கரப்பான்பூச்சி பேசுவது போலதானிருக்கும். அவர் இளைஞராக இருந்த காலத்தில் சென்னையில் அதிக கரப்பான்பூச்சிகள் இருந்திருக்க கூடும். அதில் பெரும்பகுதியை ஒழித்து ஒரு இனத்தின் அடிவேரைப் பாதியாக அழிந்த பெருமை அவருக்கு உண்டு.

அன்று நெசப்பாக்கம் பகுதிக்குள் நாங்கள் ஆறு பேர் பிரித்து அனுப்பபட்டோம். புதிதாக வளர்ந்து வரும் பகுதி என்பதால் அது இன்னமும் ஒரு கிராமத்தின் சாயலை கொண்டிருந்தது. பால்மாடுகள், சாலையில் நின்று குளிப்பவர்கள், சிறிய ஒட்டுவீடுகள், முருங்கைமரங்கள், வறட்டி தட்டி விற்பவர்கள், மரப்பெஞ்சு போட்ட தேநீர்கடைகள், நகரப் பேருந்துகள் உள்ளே வராத சாலைகள், முட்டுச்சந்துகள், என்று கலவையாக இருந்தது. நான் அதன் தென்பகுதியில் உள்ள பனிரெண்டுவீதிகளை மதியத்திற்குள் முடித்துவர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.

எந்த வீட்டின் கதவை முதலில் தட்டுவது என்று புரியாமல் நடந்து கொண்டேயிருந்தேன். எங்கள் பணியில் முதல் சத்ரு நாய்கள். அது தெருநாயாகவோ, வளர்ப்பு நாயாகவோ எதுவாக இருந்தாலும் அதற்கு எங்களைப் பிடிப்பதேயில்லை. எங்களைக் கண்டு வாய் ஒயாமல் குறைக்கின்றன. கடிக்கப் பாய்கின்றன. இதே நாய்கள் பெண் விற்பனையாளரைக் கண்டு மட்டும் குலைப்பதில்லை. வாலாட்டுகின்றன. அது என்ன பேதம் என்று தான் புரியவேயில்லை. நாய்கள் மனிதர்களுடன் பழகி அவர்கள் சுபாவத்தையேக் கொண்டிருக்கின்றன. ஒரு நாய் கூட நாய் போல நடந்து கொள்வதில்லை என்பது தான் நிஜம்.

இதனால் நான் நாய்களை வெறுக்க ஆரம்பித்தேன். சீனாவில் மாநகரங்களில் நாய்கள் வளர்க்கவோ. வீதியில் அலையவோ அனுமதிக்கபடுவதேயில்லை என்று ஒருநாள் காலைபேப்பரில் வாசித்தேன். அது தான் என் வாழ்நாளின் கனவும் கூட. ஆனால் நகரவாசிகள் நாய்களை நேசிக்கிறார்கள். எவரோ தெருநாய்களுக்கு கூட உணவளித்து அதன் வம்சவிருத்தியை அக்கறையோடு கவனித்து கொள்கிறார்கள். இந்த விசயத்தில் எனக்கு மக்களை புரிந்து கொள்ள முடியவேயில்லை.

விற்பனையாளராக நான் பணியில் சேர்ந்த போது ஒருவார காலம் ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து எங்களுக்குச் சிறப்பு பயிற்சி கொடுக்கபட்டது. அதில் எத்தனை விதமான வண்டுகள், பூச்சிகள், எறும்புகள் வீட்டிற்குள் புகுந்துவிடுகின்றன என்று புகைப்படத்துடன் பெரிய கேட்லாக் ஒன்றை எங்களுக்கு தந்தார்கள்.

என்னால் நம்பவே முடியவில்லை. நானூற்று பதினாறு விதமான பூச்சிகள் நம்மோடு சேர்ந்து வாழ்கின்றன. கரப்பான்பூச்சிகளில் தான் எத்தனை விதம். நிறத்தில் வடிவத்தில் ஒன்றோடு ஒன்று மாறுபட்டவை. கண்ணில் பார்க்கும் போது நாம் அதை இவ்வளவு துல்லியமாக வேறுபடுத்தி அறிய முடியவில்லை. அத்தோடு கரப்பான்பூச்சிகளுக்கு தனியான பெயர்கள் இல்லை என்பதால் அதை நாம் பொதுவான ஒன்றாகவே கருதுகிறோம்.

அந்தப் பூச்சிகளின் புகைப்படங்களைப் பார்த்த போது நாமும் சிறு பூச்சிகள் போல தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அந்தப் புகைப்படத்தை உண்மையில் நான் நேசித்தேன். ஒவ்வொரு கரப்பான்பூச்சியையும் நேரில் பார்த்து அறிமுகம் செய்துகொண்டுவிட வேண்டும் என்பது போல ஆசைப்பட்டேன். ஆனால் அவர்கள் அதை எப்படிக் கொல்வது. எங்கே அவை ஒளிந்து கொண்டிருக்கும். எவ்வளவு நேரத்தில் ஒரு கரப்பான்பூச்சி செத்துப் போகும் என்பதிலே கவனமாக இருந்தார்கள்.

உண்மையில் கரப்பான்பூச்சிகளைக் கண்டு ஏன் மக்கள் பயப்படுகிறார்கள். அது கடித்தால் விஷமா என்று சக ஊழியரைக் கேட்டேன். அவர் அது ஒரு பொய். பல காலமாக இந்தப் பொய்யை நாம் வளர்த்துக் கொண்டே வந்துவிட்டோம். அந்தப் பொய்யில் தான் நமது சம்பாத்தியம் அடங்கியிருக்கிறது என்று சிரித்தபடியே சொன்னார்.

என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சமூகம் ஏன் கரப்பான்பூச்சிகளை வெறுக்கிறது. கண்ணில் பட்டாலே அருவருப்புக் கொண்டுவிடுகிறது. என்ன பகையிது. ஏன் இவ்வளவு வெறுப்பும் அசூயையும் என்று ஐந்து நாளும் யோசித்தேன். அப்படியும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எங்களது பயிற்சி வகுப்பை நடத்த கல்கத்தாவில் இருந்து வந்திருந்த மோகித்சென் வங்காள உச்சரிப்பிலான ஆங்கிலத்தில் நீங்கள் ஒவ்வொரு வீட்டின் கதவைத் தட்டியதும் சொல்ல வேண்டிய முதல் பொய் எது தெரியுமா என்று கேட்டார். நாங்கள் அமைதியாக இருந்தோம்.

அந்தப் பொய் அற்புதமானது. அது எந்த வீட்டையும் திறக்ககூடிய சாவியைப் போன்றது என்று கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டமாகச் சொன்னார். அவரது பொய்யைக் கேட்க ஆவலாக இருந்தோம்.

உங்களது முதல் பொய் இது தான். உங்கள் அருகாமையில் விஷமான கரப்பான்பூச்சிகள் பெருகிவருவதாக அறியப்படுகிறது. அவை கடித்தால் விபரீதமாகிவிடும். அதிலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள நீங்கள் ஏன் எங்கள் தயாரிப்பைப் பரிசோதித்து பார்க்க கூடாது என்பதே.

இந்தப் பொய்யை நீங்கள் உணர்ச்சிவசப்படமால், கண்களில் மிகுந்த அன்பும் வாஞ்சையோடும் சொல்லிச் சொல்லி பழகவேண்டும். காரணம் புதிய மனிதர்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் கண்களைத் தான் மக்கள் கவனிக்கிறார்கள். என்றார்

அதைக் கேட்ட போது எனக்கு எரிச்சலாக வந்தது. எந்த மனிதனும் அடுத்தவனின் உதடை ஏன் கவனிப்பதில்லை. கண்கள் ஒரு போதும் பொய் சொல்வதில்லை. உதடுகள் தான் பொய் சொல்கின்றன. ஆனால் அதை மக்கள் ஏன் இவ்வளவு அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள். எனக்கு என்னவோ அடுத்தவரின் பொய்கள் மீது நாம் உள்ளுற ஆசை கொண்டிருக்கிறோமோ என்று தான் தோன்றுகிறது.

அன்று எங்கள் பயிற்சி வகுப்பில் நாங்கள் நாற்பத்தி ரெண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்து கண்களில் அன்பு ஒழுக உங்கள் வீட்டின் அருகாமையில் விஷமுள்ள கரப்பான்பூச்சிகள் பெருகிவிட்டன .எங்கள் தெளிப்பானை உபயோகித்து அவற்றைக் கொல்லுங்கள் என்று நேசத்துடன் சொல்லிப் பழகினோம்.

மிக அபத்தமான நாடகம்ஒன்றில் பாத்திரமாகிவிட்டதைப் போல இருந்தது. ஆச்சரியமான உண்மை என்னவென்றால் நான் பதினைந்து நிமிசங்களிலே அந்த வேஷத்திற்கு கச்சிதமாக பொருந்தி போய்விட்டது. நான் அதைச் சொல்லும் போது அந்த வீட்டில் கரப்பான்பூச்சிகள் ஒடுவது என் கண்ணில் நிஜமாக தெரிவது போல இருக்கிறது என்று மோகித் சென் பாராட்டினார்.

பொய்கள் எளிதாகப் பழகிவிடுகின்றன. உண்மையைச் சொல்வதற்கு தான் நிறைய நடிக்க வேண்டியிருக்கிது. அந்தப் பயிற்சிகாலத்தில் மக்களைப் பயமுறுத்த வேண்டியதே நாங்கள் திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய வேலை என்று அறிவுறுத்தபட்டது.

அது எளிதான ஒன்றில்லை. மக்கள் எப்போது எதைக் கண்டு பயப்படுவார்கள் என்பது மாபெரும் புதிர். ஆனால் கரப்பான்பூச்சிகளைச் சொல்லி பெண்களை எளிதாக பயமுறுத்திவிடலாம். ஆகவே ஆண்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் தான் நாங்கள் கதவைத் தட்ட வேண்டியிருந்தது.

பெண்கள் கரப்பான்பூச்சி குறித்து விதவிதமான கற்பனையை கொண்டிருக்கிறார்கள் என்பதை என் பணி அனுபவத்தில் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். வேறு எந்தப் பூச்சியை விடவும் கரப்பான் அந்த அளவில் துரதிருஷ்டசாலி . அதைப் பெண்கள் வெறுக்கிறார்கள். அழித்து ஒழிக்க பணம் செலவழிக்கிறார்கள். பெண்களால் வெறுக்கபடுவது அழிந்து போவது இயற்கை தானே.

நான் பெண்களிடம் கரப்பான்பூச்சி பற்றி விதவிதமாக பொய் சொல்லப் பழகியிருந்தேன். குறிப்பாக அவர்கள் குளியல் அறையில் வந்து ஒளிந்து கொள்ளும் கரப்பான்பூச்சிகள் ஒருவிதமான பச்சை நிறத் திரவத்தை உமிழ்கின்றன என்றும் அது உடலில் பட்டால் உடனே தோலில் புள்ளிபுள்ளியாக உருவாக துவங்கிவிடும் என்றும் மிரட்டினேன். அதை அவர்கள் அலட்சியப்படுத்தினால் ஒரு மாத காலத்தில் உடலெங்கும் நோய் பரவி அகோரமாகிவிடுவார்கள் என்றும் சொல்வேன்.

இந்தப் பொய் ஒரு பிரம்மாஸ்திரம் போன்றது. அதிலிருந்து எந்தப் பெண்ணும் தப்பவே முடியாது. ஒரு பெண் இந்தப் பொய்யைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதாள். அப்படி அவள் உண்மையில் கரப்பான்பூச்சிகளால் கடிபட்டிருக்கிறாள் என்றும் அந்த சந்தேகத்தை நான் உறுதி செய்துவிட்டதாகச் சொல்லி உடனடியாக எனது தெளிப்பானை வாங்கி கொண்டதுடன் இதற்கு என்னவிதமான சிகிட்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கறையோடு கேட்டாள்.

இதற்காக நான் கூடுதலாக கொஞ்சம் அழகுக்கலை குறிப்புகளை வாசிக்க வேண்டிய அவசியமிருந்தது. அதற்கு நான் பெரிய சிரமம் ஒன்றும் எடுக்கவில்லை. பழைய பேப்பர் கடைகளில் உள்ள ஐந்தாறு வருச பழைய பெமினா, ஈவ்ஸ் வீக்லி போன்ற இதழ்களைப் புரட்டி அதில் வெளியான அழகுகுறிப்புகளை மனதில் நிறுத்தி வைத்துக் கொள்வேன்.

உண்மையில் ஒரு கரப்பான்பூச்சி கொல்லி விற்பவன் எவ்வளவு நுட்பமாக பணியாற்ற வேண்டியிருக்கிறது என்பதை நீங்களே நினைத்து பாருங்கள். அந்தப் பெண் நான் சொன்ன அழகுகுறிப்பை நிச்சயம் பயன்படுத்தத் துவங்கியிருப்பாள். எல்லா அழகு குறிப்புகளும் பயத்திலிருந்து உருவானவை தானே.

கரப்பான்பூச்சி பற்றிய பொய்களை மக்கள் சந்தேகம் கொள்வதேயில்லை. பூச்சிகள் கொல்லப்படும் போது மக்கள் நிம்மதி அடைகிறார்கள். கரப்பான்பூச்சிகள் எவ்வளவு காலம் உயிர்வாழ கூடியவை. அதில் ஆண் பெண் என்று வேறுபாடு இருக்கிறாதா? வயதாகி செத்த கரப்பான்பூச்சி என்று ஒன்றாவது உலகத்தில் இருக்குமா என்று எவரும் என்னிடம் கேட்டதேயில்லை

நான் இந்தப் பணியில் ஆரம்ப நாட்களில் வீட்டின் காலிங்பெல்லை அடிக்க கூச்சப்பட்டிருக்கிறேன். காலிங்பெல் மீது கை வைத்தவுடனே எனது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிடும். வீட்டிலிருந்து எந்த வயதில் யார் வெளியே வருவார்கள் என்று மனதில் ஒரு கற்பனை உருவம் தோன்ற ஆரம்பிக்கும். பெரும்பாலும் என் கற்பனை பொய்யாகிவிடும். அரிதாக ஒன்றிரண்டு முறை நான் நினைத்தது போலவே மெலிந்த உடலும் நெளிகூந்தலும் தூக்கம் படிந்த முகத்தோடு பெண்கள் வந்திருக்கிறார்கள்.

நான் பயிற்றுவிக்கபட்ட கிளி போல சொல்வதை அவர்கள் காதுகள் கேட்டுக் கொள்வதில்லை. சலிப்புடன் வேண்டாம் என்றோ, ஏன் காலிங்பெல்லை அடித்தேன் என்று கோபபட்டோ கதவை மூடிவிடுவார்கள். மூடிய கதவிற்கு வெளியில் சில நிமிசங்கள் நின்று கொண்டிருப்பேன். அப்போது மனதில் சில விபரீதமான எண்ணங்கள் தோன்ற துவங்கும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, என்று கரும்புகை சுழல்வதை போல தீவினைகள் என் மனதில் புகைய ஆரம்பிக்கும். பிறகு அது தானே அடங்கி ஒடுங்கியதும் இறங்கிப் போய்விடுவேன். பூச்சிமருந்து விற்பவன் வேறு என்ன செய்ய முடியும்.

விற்பனைப் பிரதிநிதி என்பவன் பொதுவெளியில் அலையும் ஒரு நடிகன். நாடகக் கதாபாத்திரம் ஒன்று தான் எப்போது மேடையில் நுழைவோம் என்று திரையின் பின்னால் நின்றபடியே காத்துக் கொண்டிருப்பது போன்ற மனநிலை தான் தினமும் எனக்கு நேர்கிறது.

ஒவ்வொரு நாளும் பூச்சிமருந்துகளுடன் தெருவில் நடந்து போகத் துவங்கியதும் எந்த வீட்டின் கதவை முதலில் தட்டுவது என்று குழப்பமாக இருக்கும். எனது சக ஊழியர்கள் ஒவ்வொருவரும் இதற்கான தனியான வழிமுறை ஒன்றை வைத்திருந்தார்கள்.

மூத்த விற்பனையாளரான சங்கரன் எப்போதுமே வலதுபக்கம் உள்ள வீட்டைத் தான் முதலில் தட்டுவார். எல். கோவிந்துவிற்கு ஒன்பது ராசியான எண் என்பதால் எட்டுவீடுகளை தவிர்த்துவிட்டு ஒன்பதாவது வீட்டில் யாரும் இல்லாமல் போயிருந்தால் கூட அதைத் தான் முதலில் தட்டுவார். நான் இப்படி எந்த பழக்கத்தையும் உருவாக்கி கொள்ளவில்லை. மாறாக நான் நடக்க துவங்குவேன். சில நேரம் வீதியின் கடைசி வரை கூட நடந்து கொண்டேயிருப்பேன். மனதில் நடிக்கத் துவங்கு என்ற குரல் கேட்க ஆரம்பிக்கும். அது உச்சத்திற்கு எட்டியதும் சட்டென ஏதாவது ஒரு வீட்டு கதவை தட்டிவிடுவேன்.

பகல்நேரங்களில் திறக்கபடும் வீடுகளை கவனிக்கிறேன். எல்லா வீடுகளும் அலங்கோலமாகவே இருக்கின்றன. ஒழுங்கின்மை, கவனமின்மை பீடித்திருக்கிறது. தேவையற்ற பொருட்கள் குவிந்துகிடக்கின்றன. பயத்தோடு தான் கதவைத் திறக்கிறார்கள். சில வீடுகளில் கதவை திறப்பதேயில்லை. ஆனால் குரல் மட்டும் வெளியே கேட்கிறது. அப்படித் திறக்கப்படாத கதவுகளை பொய் சொல்லி திறக்க வைப்பதே எங்களது சாமர்த்தியம்.

ஆகவே கதவின் முன்னே நின்றபடியே நான் சுகாதாரத் துறையில் இருந்து வந்திருப்பதாக பொய் சொல்லுவேன். உடனே கதவு திறந்துவிடும். மக்கள் அரசாங்கத்திற்கு பயப்படுகிறார்கள். எவ்வளவு மேன்மையான குணமது. அவர்களிடம் சுகாதாரத் துறை இந்தப் பகுதியில் கரப்பான்பூச்சிகள் பெருகிவிட்டதாக அடையாளம் கண்டுள்ளது என்று கறாரான குரலில் சொல்வேன். அவர்கள் கலக்கத்துடன் அது தன்னுடைய தவறில்லை என்பதுபோலவே கேட்டுக் கொள்வார்கள். என்னிடம் உள்ள குறிப்பு நோட்டில் அந்த வீட்டோர் பற்றிய விபரங்களை கேட்டறிந்து மறுநாள் எனது சகாக்களில் ஒருவனை அங்கே அனுப்பி தெளிப்பானை விற்பது வழக்கம்.

மக்கள் தங்களை விட சிறிய உயிரினங்கள் எல்லாவற்றையும் வெறுக்கிறார்கள். கொன்றுவிட துடிக்கிறார்கள். அதில் குழந்தைகள் கூட விதிவிலக்கில்லை. எந்தக் குழந்தையும் ஒரு எறும்பைக் கூட நேசிக்கவில்லை. எறும்பை தலைவேறு உடல்வேறாக பிய்த்து கொல்வதில் எவ்வளவு ஆனந்தம் கொள்கின்றன. இவ்வளவு ஏன், அழகிகளாக நாம் கொண்டாடும் பெண்கள் வன்மத்துடன் பூச்சிகளை கட்டையால் அடித்துக் கொல்வதை நீங்கள் அருகில் இருந்து பார்க்க வேண்டும். எவ்வளவு ஆவேசம். எவ்வளவு ஆத்திரம்.

ஆண்கள் பூச்சிகளுடன் வாழ்வதில் அதிக பேதம் காட்டுவதில்லை. எப்போதாவது அதைக் கண்டு சலித்து கொள்கிறார்கள். சில வேளைகளில் அதைக் கட்டுபடுத்த முடியாத தனது ஆண்மையை நினைத்து கோபம் கொள்கிறார்கள். ஒன்றிரண்டு மெல்லிதயம் படைத்த ஆண்கள் மட்டுமே பூச்சிகொல்லிகளை உபயோகிக்கிறார்கள். இது பொது உண்மையில்லை எனது கண்டுபிடிப்பு.

கரப்பான்பூச்சி மருந்து விற்பவர்கள் இப்படி நிறைய கண்டுபிடிப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு உதாரணம் சொல்கிறேன். கரப்பான்பூச்சியைக் கொன்ற பிறகு பெரும்பான்மை மக்கள் அதன் மீசையைப் பிடித்து மட்டுமே தூக்கி வெளியே எறிகிறார்கள். காரணம் மீசையின் மீதுள்ள தாங்கமுடியாத வெறுப்பு. மனிதர்கள் எவராவது இப்படி மீசையைப் பிடித்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்களா?

பெரும்பான்மை வீட்டுப் பெண்களின் கவலை எல்லாம் எனது தெளிப்பானை எவ்வளவு மலிவாக வாங்கிவிட முடியும் என்பதே. நாங்களே அந்தத் தந்திரத்தை நுகர்வோருக்கு அளித்திருந்தோம். எங்கள் பூச்சி மருந்து தெளிப்பானின் விலை பனிரெண்டு ரூபாய் முப்பது காசுகள். அதை நாங்கள் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். வீடு தேடி வரும் சலுகை என்று அதை ஐம்பது ரூபாய் குறைத்து இருநூற்றுக்கு விற்பனை செய்கிறோம். அதை அடித்துபேசி விலை குறைக்கும் பெண்களிடம் உங்களுக்காக மட்டும் நூற்று ஐம்பது என்று விற்பனை செய்வோம். அப்படி வாங்கிய பெண் அளவில்லாத சந்தோஷம் கொள்வதை என்னால் காண முடிந்திருக்கிறது. ஒரு கரப்பான்பூச்சி மருந்தை விலை குறைத்து வாங்கிவிட்டது எளிய செயலா என்ன?

ஒரேயொரு முறை ஒரு பெண் என்னிடம் எனது தெளிப்பானால் எவ்வளவு கரப்பான்பூச்சிகளை கொல்ல முடியும் என்று கேட்டாள். எங்கள் பயிற்சிகாலத்தில் இந்தக்கேள்வியை நான் கேட்டிருந்தால் நிச்சயம் கைதட்டு கிடைத்திருக்கும். மொகித்சென் அதற்கான விடையை உடனே சொல்லியிருப்பார். ஆனால் அன்று அந்தபெண் கேட்டதற்கு என்னிடம் பதில் இல்லை. உடனடியாகப் பொய் சொல்லவும் முடியவில்லை.

நான் சமயோசிதமாக உங்கள் வீட்டில் உள்ள அத்தனை கரப்பான்பூச்சிகளையும் கொல்ல முடியும் என்று மட்டுமே சொன்னேன். உடனே அந்த பெண் எறும்புகளை இதனால் கொல்ல முடியுமா என்று கேட்டாள். எறும்புகள் ஈக்கள், பொறிவண்டுகள், விளக்குபூச்சிகள் என அத்தனையும் கொல்ல முடியும் என்று சொன்னேன். அவள் பல்லியைக் கொல்ல முடியுமா என்று மறுபடியும் கேட்டாள். பல்லியைக் கொல்வது பாவம் என்று மட்டுமே சொன்னேன். அவளும் அதை உணர்ந்து கொண்டவளை போல தலையாட்டிவிட்டு பணத்தை எண்ணித் தந்தாள். அந்த பணத்தில் ஒரு கிழிந்து போன ஐம்பது ரூபாய் இருந்தது. அதை என்னிடம் தந்திரமாக தள்ளிவிட்ட திருப்தி அவளுக்கு இருந்திருக்கும். ஒருவேளை அதற்காகவே இந்த தெளிப்பானை அவள் வாங்கியிருக்கவும் கூடும்.

மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள் என்பதே என் அனுபவம். அவர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள். அதை வளர்த்து கொள்ள விரும்புகிறார்கள். அடுத்த தலைமுறைக்கு கற்று தருகிறார்கள். ஏமாற்றியதை பற்றி பெருமை பேசுகிறார்கள்.

ஒரு நாள் ஸ்ரீனிவாசா திரையரங்கு அருகாமையில் உள்ள வீட்டின் கதவை தட்டினேன். மதியமிருக்க கூடும். பெரும்பான்மையினர் மதியத்தில் உறங்கிவிடுகிறார்கள். மனிதர்கள் உறங்கும் போது உலகம் அமைதி அடைகிறது என்று காலண்டர் தாளில் ஒரு வாசகம் படித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதனால் நாங்கள் மதியம் இரண்டு முதல் நான்கு வரை வேலை செய்வதில்லை. எங்காவது ஆசுவாசப்படுத்திக் கொள்வோம். அன்று நான்கு மணிக்கு சற்று முன்பாக அந்த வீட்டின் கதவை தட்டியிருந்தேன். வயதான ஒருவர் கதவைத் திறந்தார். அவரிடம் நான் பூச்சிமருந்து விற்பனையாளன் என்று சொன்னதும் அவர் உள்ளே வரச்சொன்னார். அந்த வீடு அழுக்கடைந்து போயிருந்தது. சுவெரங்கும் மழைநீர் இறங்கிய கறை. மூடிக்கிடந்த ஜன்னல். அதில் ஒரே போல நாலைந்து உபயோகமற்ற பல்துலக்கிகள். அறையெங்கும் பழைய நாளிதழ்கள். வார மாத இதழ்கள், புத்தகங்கள். குப்பை போல குவிந்து கிடந்தன. அவர் அதற்கு ஊடாகவே ஒரு சாய்வு நாற்காலியை போட்டிருந்தார். அருகாமையில் துருப்பிடித்து போன ஒரு கட்டில் அதன் மீது முழுவதும் வெவ்வேறு விதமான புத்தகங்கள், அடியிலும் கட்டுகட்டாக பழைய நாளிதழ்கள். கயிற்றுகொடியில் பழுப்பேறிய வேஷ்டி பனியன்கள் காய்ந்து கொண்டிருந்தன. நிச்சயம் அவரிடம் எளிதாக ஒரு தெளிப்பானை என்னால் விற்றுவிட முடியும் என்று தோன்றியது.

நான் தூசியால் ஏற்பட்ட அசௌகரியத்தை பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தேன். அவர் ஒரு நாளிதழ் கட்டைக் காட்டி அதில் ஏறி என்னை உட்காரச் சொன்னார். நான் அதில் உள்ள தூசியை கையால் தட்டியபோது நாசியில் காரமேறித் தும்மல் வந்தது. எனது தெளிப்பானை வெளியே எடுத்து விளக்கம் சொல்ல ஆரம்பித்தேன்.

அவர் அதைப் பிறகு பார்த்து கொள்ளலாம். தான் நிச்சயம் ஒன்றை வாங்கி கொள்கிறேன் என்றபடியே எனக்கு திருமணமாகிவிட்டதா என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். குடிக்கிற பழக்கமிருக்கிறதா என்று கேட்டார். இல்லை என்று அவசரமாக மறுத்தேன். அவர் தலையாட்டிக் கொண்டு கேலியான தொனியில் இதுவரை எவ்வளவு கரப்பான்பூச்சிகளை கொல்ல உதவியிருக்கிறாய் என்று ஆங்கிலத்தில் கேட்டார். அது என்னை குத்திபார்ப்பது போல இருந்தது.

அது உபயோகமில்லாதவை அழிக்கபட வேண்டியவை தானே என்று கறாராக சொன்னேன். அவர் தலையாட்டிக் கொண்டார். பிறகு என் அருகில் இருந்த ஒரு பேப்பர்கட்டை காட்டி அதை பிரிக்கும்படியாக சொன்னார். நான் குனிந்து எடுத்து அதை பிரித்தபோது 1978 வருசம் நவம்பர் 7ம் தேதி பேப்பரை எடுக்கும்படியாக சொன்னார். எதற்காக இவற்றை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறார் என்று புரியவில்லை.

பளுப்பேறி எழுத்து மங்கிப் போயிருந்த ஒரு பேப்பரை எடுத்து நீட்டினேன். அதன் ஆறாம்பக்கத்தை உரக்க படி என்று சொன்னார். பிரித்து பார்த்த போது அதில் ஒரு கரப்பான்பூச்சி படமிருந்தது. சப்தமாக படித்தேன். மடகாஸ்கரில் காணப்பட்ட ராட்சச கரப்பான்பூச்சியது. அது ஐந்து அங்குல நீளமுடையது. முப்பது கிராம் எடை கொண்டது அதை கரப்பான்பூச்சிகளின் டைனோசர் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவர் அதை கவனமாக கேட்டு கொண்டிருந்துவிட்டு இது போல ஒன்றை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார். இல்லை என்றேன்.

இது நம் ஊரில் இருந்து அழிக்கபட்ட இனம். நான் பார்த்திருக்கிறேன். நான் இதை பற்றி மறுப்பு எழுதி அனுப்பினேன். அது பத்திரிக்கையில் வரவேயில்லை என்று சொன்னார். நான் அமைதியாக இருந்தேன். அவர் விஞ்ஞானம், வானவியல், ஜோசியம், ஜன்ஸ்டீன் குவான்டம் தியரி, ரிச்சர்ட் டாவ்கின்ஸ் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்கு நிறைய வேலையிருக்கிறது என்று எழுந்து கொள்ள முயன்றேன்.

அவர் தனது பர்சில் இருந்து இருநூறு பணத்தை எடுத்துத் தந்து தெளிப்பான் எனக்கு வேண்டாம். நீயே உபயோகபடுத்தி கொள். உனக்கு நேரமிருந்தால் என்னோடு வந்து பேசிக் கொண்டிரு. ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு தெளிப்பானை வாங்கி கொள்கிறேன். காரணம் நானே ஒரு கரப்பான்பூச்சி போல தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது வயது எழுபத்தியாறு. பனிரெண்டு வருசமாக இந்த அறையை விட்டு வெளியே போவதே கிடையாது. பிள்ளைகள் அமெரிக்க போய்விட்டார்கள். யாரும் என்னைத் தேடி வருவது கிடையாது.

நான் முப்பது வருசம் அறிவியல் ஆய்வுதுறையில் வேலை செய்திருக்கிறேன். பதவி, சம்பாத்தியம், உறவு, பெயர் புகழ் எல்லாம் பொய். மயக்கம். எதுவும் நமக்கு கை கொடுக்கபோவதில்லை. முதுமை ஒரு நீண்ட பகலை போலிருக்கிறது.

பழைய நாளிதழ்களை திரும்ப திரும்ப படிப்பதில் எனக்கு ஆனந்தமாக இருக்கிறது. இந்த செய்திகள் யாவும் நடந்து முடிந்துவிட்டவை தானே. ஆனால் அவற்றை பற்றி கற்பனை செய்து கொள்ளும்போது ஏனோ மிக சந்தோஷமாக இருக்கிறது. உனக்கு நேரமிருந்தால் என் வீட்டு கதவை நீ எப்போதும் தட்டலாம், ஒரு வேளை நீ வரும்போது நான் செத்துகிடந்தால் இந்த புத்தகத்தின் உள்ளே கொஞ்சம் பணமிருக்கிறது. எடுத்து செலவுசெய்து எரித்துவிடு. என்று சொன்னார்.

நான் உண்மையில் பயந்து போய்விட்டேன். அவர் தந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவரைச் சந்தித்த பிறகு நான் சென்ற வீடுகளில் எதிலும் ஒரு தெளிப்பானை கூட விற்பனை செய்ய முடியவில்லை. மனதில் அவரது குரல் என்னை வதைக்க துவங்கியது. அவர் என்னை மிகவும் பாதித்திருந்தார். இதற்காக அன்றிரவு நானும் செல்வரத்தினமும் குடிப்பதற்காக சென்றோம்.

ஒயின்ஷாப்பின் மதுக்கூடங்களில் அதிக கரப்பான்பூச்சிகள் வளர்க்கபடுகின்றன. அவற்றை குடிகாரர்கள் நேசிக்கிறார்கள். போதையில் பேச ஆள்கிடைக்காத போது கரப்பான்பூச்சிகளோடு பேசுகிறார்கள். சேர்த்து குடிக்கிறார்கள். நான் போதையேறி செல்வரத்தினத்திடம் நமது மேலாளராக உள்ள மணிநாராயணைக் கொல்ல வேண்டும். அவன் ஒரு பெருச்சாளி போல நம் உழைப்பை தின்று ஊதிக் கொண்டு வருகிறான் என்று கத்தினேன். அவன் கட்டுபடுத்த முடியாமல் அழுதான். விற்பனை பிரதிகள் அழுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை நானும் அறிவேன். ஆகவே அவனோடு சேர்ந்து அழுவதற்கு முற்பட்டேன். என்னால் அப்படி பொது இடத்தில் அழ முடியவில்லை. செல்வரத்தினம் அழுவதை கண்ட ஒரு குடிகாரன் அவன் மீது அன்பாகி தனது மதுவை பகிர்ந்து கொண்டான்.

அப்போது எனது இருக்கையின் அருகில் உள்ள செங்கல் சுவரில் ஒரு கரப்பான்பூச்சி நின்றபடியே என்னை பார்த்து கொண்டிருந்தது. அது என்னோடு பேச விரும்புகிறதோ எனும்படியாக அதன் பார்வையிருந்தது. நான் என்ன பேசுவது என்று புரியாமல் அதை தவிர்க்க துவங்கினேன். என்றாவது இப்படியொரு இக்கட்டு உருவாக கூடும் என்று எனக்கு தெரியும். ஆனால் அதை இந்த நிலையில் என்னால் எதிர்கொள்ளமுடியவில்லை. ஆகவே நான் கோபத்துடன் கரப்பான்பூச்சிகளை விரட்டியடிங்கள் என்று கத்தினேன்.

அங்கிருந்த பணியாளர்கள் எவரும் அதைக் கேட்டுக் கொள்ளவேயில்லை. அந்த பூச்சி திமிரோடு என்னை பார்த்து கொண்டிருந்தது. எனக்கு குற்றவுணர்ச்சியானது. நான் உடனே அந்த இடத்திலிருந்து வெளியேறி தனியே நடக்க ஆரம்பித்தேன்.

குற்றவுணர்ச்சி என்பது ஒரு மோசமான வியாதி. அதை ஒரு போதும் வளர விடவே கூடாது. இல்லாவிட்டால் அது நம்மை வாழவிடாமல்செய்துவிடும். நீண்டநேரம் கடற்கரை சாலையில் சுற்றியலைந்துவிட்டு அறைக்கு திரும்பினேன். உறக்கம் கூடவேயில்லை. சுழல்விசிறியை பார்த்தபடியே படுத்துகிடந்தேன். நான் படித்திருக்கிறேன் என்பது தான் பொது இடங்களில் அழமுடியாமல் என்னை தடுக்கிறது என்பதே அன்றிரவே கண்டுபிடித்தேன்.

அந்த வயதானவரை திரும்பச் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே அதன்பிறகு நான் தரமணி பகுதிக்கு வேலையை மாற்றம் செய்து கொண்டுவிட்டேன். அது வசதியானவர்கள், மென்பொருள்துறை சார்ந்த அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் உள்ள பகுதி. ஆகவே எளிதாக விற்பனையில் சாதனை படைத்து பதவிஉயர்வு பெற்றுவிடலாம். தரமணியில் பூச்சிமருந்துவிற்பதற்கு பெரிய போட்டியே இருந்தது.

நான் காய்களை நகர்த்தி அந்த இடத்தை பிடித்து கொண்டுவிட்டேன். மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தரமணியில் பொருட்கள் விற்பது எளிதாகவே இருந்தது. தரமணியில் கரப்பான்பூச்சிகள் கூட ஆங்கிலம் பேசுகின்றன. அவை மற்ற பகுதியில் காணப்படுவது போல பயந்து ஒடுவதில்லை. மெதுவாகவே செல்கின்றன. அங்கே எளிய இதயம் கொண்டவர்கள் அதிகமிருக்கிறார்கள். ஆகவே நான் ஒரு நாளில் ஐநூறு தெளிப்பான்கள் வரை கூட விற்க முடிந்தது. அத்துடன் தெளிப்பான்கள் அறிமுகத்திற்கு என்று தொலைபேசியில் நேரம் குறித்துவிட்டு விற்க போகலாம். கரப்பான்பூச்சி பற்றி பேசுவதை ரசித்து கேட்கிறார்கள்.

அப்படியொரு நாள் சீவியூ டவர்ஸ் உள்ளே ஒரு வீட்டிற்கு தெளிப்பான் அறிமுகம் செய்ய போய்விட்டு திரும்ப வெளியே வந்த போது குடியிருப்பின் காவலாளி என்னைப் பிடித்து கொண்டுவிட்டான். பதிவுபுத்தகத்தில் நான் கையெழுத்து இடவில்லை என்பதைக் காரணம் காட்டி என்னைத் திருடன் என்று அவன் சந்தேகபட துவங்கினான்.

நான் அடையாள அட்டைகள், தெளிப்பான்களை காட்டிய போதும் நம்பிக்கை கொள்ளவேயில்லை. என்னைப் பிடித்து போலீஸில் ஒப்ப்படைப்பதன் வழியே தனது வேலையில் முன்னேற்றம் காண அவன் விரும்புகிறான் என்று புரிந்தது. நான் அதற்கு என்னை ஒப்பு கொடுத்தேன். நன்ழ்ஸ்ண்ஸ்ஹப் ர்ச் ற்ட்ங் ச்ண்ற்ற்ங்ள்ற். எவ்வளவு அழகான வாசகம்.

அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று என்னை ஒப்படைத்தான். நான் ஏதாவது திருட முற்பட்டேனா என்று காவலர்கள் அவனிடம் விசாரித்தார்கள். அவன் நீண்ட விளக்கம் தந்து கொண்டிருந்தான். மாலை வரை என்னை காவல்நிலையத்தில் உட்கார வைத்திருந்தார்கள். காவல்நிலையத்திற்குத் தேவைப்படுகிறது என்று இரண்டு தெளிப்பான்களை இலவசமாக வாங்கி கொண்டு என்னை இரவில் வெளியே அனுப்பிவைத்தார்கள். அன்று இந்த வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் உண்டானது.

யாரிடமாவது ஆலோசனை கேட்கலாம் என்று நினைத்தேன். மணிநாரயணன் நினைவு வந்தது. அவரிடமே கேட்டால் என்னவென்று இரவோடு அவர் வீட்டிற்கு போய் நின்றேன். அவர் வீட்டின் வரவேற்பரையில் உட்கார வைத்து குடிப்பதற்கு பில்டர் காபி தந்தார். சுவரில் மிகப்பெரிய தொலைக்காட்சியிருந்தது. அதி நவீனமான சோபா, அலங்காரமான சுவர் ஒவியங்கள். மீன்தொட்டிகள். கரப்பான்பூச்சிகள் அவரை சுகபோகமாக வாழவைத்து கொண்டிருக்கின்றன.

மணிநாராயணன் என் பிரச்சனைகளைக் கேட்டு சிரித்தபடியே நீ ஏன் குற்றவுணர்ச்சி கொள்கிறாய். நீயா கரப்பான்பூச்சிகளை கொல்கிறாய். அது ஜெர்மன் நிறுவனத்தின் வேலை. நாம் வெறும் அம்புகள். கர்த்தா அவனே என்று பகவத்கீதை போன்ற நீண்ட உரையை வழங்கினார். நான் அவரிடம் உங்களைப் போல நான் ஆக வேண்டும் அதற்கு என்ன செய்வது என்று நேரடியாக கேட்டேன்.

அவர் சிரித்தபடியே மனிதர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய பயம் எப்போதும் அதிகம். அதன் ஒரு அடையாளம் தான் கரப்பான்பூச்சி. அது ஒருவேளை நம்மை கடித்துவிட்டால் என்னசெய்வது என்ற பயமிருக்கிற வரை நாம் சந்தோஷமாக இருக்கலாம். ஆகவே எந்த வீட்டின் கதவை தட்டும்போதும் உன்னை ஒரு தேவதூதனைப் போல நினைத்துக் கொள். அவர்களை மீட்பதற்காகவே நீ வந்திருப்பதாக நம்பு. இரண்டு மாசத்தில் நீ மேலே போய்விடுவாய் என்றார்.

எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள். மறுநாளே இதை நடைமுறைபடுத்த துவங்கினேன். என் பேச்சில் கண்களில் புதிய நம்பிக்கை பீறிட்டது. என் சொற்களை நகரவாசிகள் நம்பினார்கள். ஒரு ஆள் ஒரே நேரம் மூன்று தெளிப்பான்களை வாங்கினான். அந்த அளவு நான் பேசி மயக்க தெரிந்து கொண்டுவிட்டேன். ஆங்கிலம் ஒரு வசதியான மொழி. அதில் தான் எவ்வளவு லாவகம், எவ்வளவு சூட்சுமம்.

மணிநாராயணன் சொன்னது உண்மை. நான் இலக்கை மீறி விற்றுச் சாதனை செய்திருந்தேன். அலுவலகமே விடுமுறை தந்து ஒய்விற்காக ஒரு வார காலம் கோவாவிற்கு அனுப்பி வைத்தது. கூடுதல் சம்பளம். வாகன வசதிகள். அத்தோடு இப்போது எனக்குக் கிழே ஆறு பேர் வேலை பார்க்கிறார்கள். நான் மணிநாராயணன் இடத்தை ஒரு வருசத்தில் அடைந்துவிடுவேன். இயற்கை மனிதர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அது நிஜம்.

உங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் கரப்பான்பூச்சிகள் இருக்ககூடும். அவற்றை அலட்சியமாக பார்க்காதீர்கள். அவை ஒழிக்கபட வேண்டியவை. என்னை அறிந்து கொண்ட உங்களுக்காக நாற்பது சதவீத சிறப்புசலுகை விலையில் தெளிப்பான்களை தருகிறேன். விருப்பம் இருந்தால் நீங்கள் என்னை எப்போதும் அழைக்கலாம். வீடு தேடி வந்து இலவசமாக விளக்கம் தர தயாராக இருக்கிறேன்.

1 thought on “தரமணியில் கரப்பான்பூச்சிகள்

  1. ஸ்.ரா எப்போதும் தான் ஒரு அறிவாளி என்பதை நிரூபித்து கொண்டே இருக்கிறார்.. கதைகள் வெறும் கதைகள் அல்ல; அவை கூறுவது வாழ்க்கை சூழல் என்பார்கள்.. அதை ஒவ்வொரு முறை ஸ்.ரா வின் கதைகளை படிக்கும் பொது உணர்கிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *