ஞாபகம் வருதே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 15,445 
 
 

வழுக்குப்பாறை என்றாலே எங்களுக்கு எங்கிருந்து வருமோ அவ்வளவு சந்தோஷம்!

கிருக்கன் ஜெயராஜ். மம்பட்டி மூக்கன் தெய்வேந்திரன். குள்ள மொக்கராஜ். வெந்தயன் செல்வம். ஒன்றக்கண்ணன் எங்க எல்லாருக்கும் வழுக்குப்பாறை என்றால் ரொம்பவும் இஸ்டம்.

எங்களின் குதூகலம். எங்களின் தேவதை. சந்தோஷத்தை வாரி வாரி வழங்கும் அற்புதம். எங்களின் பால்யத்தோடு கலந்துவிட்ட தோழன் என எங்களுக்கு எல்லாமே வழுக்குப்பாறை தான் !

வழுக்குப்பாறையை நம்பி சறுக்கி விளையாடும் குழைந்தைகளுக்கு எந்த கெடுதலும் நேராது. உடம்பில் எந்த காயத்தையும், உராய்வையும், தீங்கையும் செய்யாது.

எங்களோடு பேசும். எங்களோடு சிரிக்கும். எங்களோடு கொண்டாடும். எங்களின் மொத்தப் பால்யமும் கரைந்த இடம் வழுக்குப்பாறை.

வழுக்குப்பாறை உருவானதே சுவாரஷ்யமானது!

நாங்கள் பள்ளிக்கூடம் விட்டதுமே ஆற்றில் தான் கிடப்போம். கண்கள் சிவக்கும் அளவுக்கு நீச்சல் அடிப்போம். நீச்சலில் தொட்டு விளையாடுவோம். சில நேரங்களில் மீன்கள் பிடித்து வந்து அதில் மசாலா தடவி தீயில் சுட்டுத்தின்போம். இதற்கு தோதாக அமைந்தது வழுக்குப்பாறை அமைந்துள்ள முருகன் கோயில் கரடு தான். இங்கு தான் குறிஞ்சி விறகு நெறையா கிடைக்கும். குறிஞ்சி விறகு தான் ஈசியா ஒடியும். சீக்கிரமா தீப்பிடிக்கும்.

குறிஞ்சி விறகு ஒடிச்சு வந்து அதை சதுரமா மெத்தை மாதிரி அடுக்கி வெச்சு, அதுல மசாலா தடவிய மீன்களை போட்டு, தீ பத்த வெச்சுட்டு ஒண்ணு ரெண்டு மூணுன்னு நூறு வரைக்கும் எண்ணி முடிச்சா மீன்கள் வெந்திருக்கும். பங்கு போட்டு தின்னுட்டு கரட விட்டு இறங்கி ஆத்தக் கடந்தா பள்ளிக்கூடம்.

ஆத்தங்கரையோரம் கருவேலம் மரங்கள் வேலியா அமைஞ்சிருக்கும். அதுல காடை, கவுதாரி, மைனா உக்காந்திருக்கும். நாங்க கல் எடுத்துக்கிட்டு எறிவது போல பாவ்லா (சைகை) காட்டுனா அதுக பறந்து போயி பக்கத்து மரத்துல உட்காரும். அதை விடாம வம்மம் வெச்சு (குறி) விரட்டி விரட்டி போனா கிறங்கிப்போயி அதால பறக்க முடியாம கைக்கு சிக்கிடும். எங்களுக்கு கொண்டாட்டம் தான்!

வெடிதேங்காயும் போடுவோம்

நல்லா முத்தின தெங்காயாக கடையிலிருந்து வாங்கி வருவோம். தேங்காயில் உள்ள மூன்று கண்ணில் ஒன்றில் துளை போட்டு பாதி தண்ணியை குடிச்சிட்டு மீதி தண்ணியுடன், பொரிகல்லை, அவுளு, அச்சுவெல்லம், பிஸ்கெட், முந்திரி பருப்பு, திணை எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கலந்து மாவாக அரைச்சு துளையின் வழியே நல்லா தேங்காயுக்குள் செலுத்தி, அந்த துளையை ஒரு குச்சியால் அடைத்து, தீயில் போட்டுவிடுவோம்.

தேங்காய் தீயில் வெந்ததும் தீயிலிருந்து வெடித்து தேங்காய் பருப்பு மட்டும் தனியா உருண்டையா வெளியே வந்து விழும். அப்படி வெடித்து தனியே வந்து விழுந்த தேங்காய் பருப்பு தீயருகில் ஆவலோடு காத்திருந்த கிருக்கன் ஜெயராஜ் மேல விழுந்ததில், அதன் சூடு தாங்க முடியாததால், குண்டிக்கடியில் போட்டு உட்கார்ந்திருந்த பலகைக் கல்லோடு பின்னாடி நகரவும் முருகன் கோயில் கரடு உச்சியிலிருந்து சருக்கி அடிவாரம் நோக்கி ” ஐயோ… அம்மா…” என்று அலறியபடி சருக்கி விழுந்தான்.

எங்களுக்கு காலும் ஓடல… கையும் ஓடல.. அவனுக்கு என்னாச்சோ ஏதாச்சோங்குற கவலையோடு இறங்கி வந்து பாத்தா குத்துக்கல்லாட்டம் நிக்கிறான், ஜெயராஜ்!.

விழுந்து விழுந்து கெக்கலிப்போடு சிரிக்கிறான். நாங்களும் நல்ல வேளை தலைக்கு வந்தது தலப்பாவோடு போச்சேன்னு சந்தோஷத்துல அவனோடு சேந்து சிரிச்சோம்.

அவனுடம்புல எந்த காயமும் சிறாய்பும் இல்லாதது கண்டு எங்களுக்கு ஆச்சரியம் தாங்கல.

” எனக்கு எவ்வளவு த்ரில்லா இருந்துச்சு தெரியுமா? அத நினைச்சுப் பாக்க பாக்க எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமா?”

அவன் சொல்லச் சொல்ல எங்களால நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல. ஏன்னா வேற ஒருத்தனும் விழுந்தாத்தான், ஜெயராஜ் விழுந்தத பள்ளிக்கூடத்துல சொல்லி கேலி பண்ண மாட்டானுங்கன்னு அவன் பேச்சுல சதி கூட இருக்கலாம்.

உண்மையா? பொய்யா?ன்னு ஒத்தையா? ரெட்டையா? போட்டுப்பாத்தோம். ரெட்டை விழுந்துச்சு! அப்போ… ஜெயராஜ் சொல்றது உண்மைதான்னு முடிவு செஞ்சோம்.

நாங்களும் ஜெயராஜ் மாதிரி சறுக்கி பாக்கணும்னு முடிவு செஞ்சு, ஒரு யோசனை செஞ்சோம்.

நாங்க எல்லாரும் சேர்ந்து பலகைக் கல்லாக நிறையா எடுத்து ஜெயராஜ் சறுக்கின தடத்திலேயே உருட்டிவிட்டோம். உருட்டி விட உருட்டி விட கல் சரிந்த தடம் பார்க்க ஒத்தையடிப்பாதை மாதிரி தெரிந்தது. தூரத்திலிருந்து பாக்கும்போது வெயிலுக்கு வெள்ளை வெளேர்ன்னு மின்னியது. பார்க்க பார்க்க ரம்மியமாக இருந்தது.

நொச்சி இழைகளை பிடிங்கி வந்து, கருவேல மரத்துல நார் உரிச்சு சைக்கிள் சீட்டு மாதிரி முக்கோண சைசுல மெத்தை மாதிரி கச்சிதமா கட்டி கரடு உச்சியிலிருந்து விருமாண்டி முதல்ல சறுக்கினான். ஆச்சரியமா இருந்துச்சு. ஒண்ணும் ஆகல. முருகன் மேல பாரத்தை போட்டு நாங்க எல்லாரும் ஒரு முறை சறுக்கினோம். அவ்வளவு தான் கொஞ்ச நாளுலயே எங்க மயிலாடும்பாறை கிராமத்து நண்டு சிண்டுக பொடிசு பெருசுக என எல்லாத்துக்கும் விளையாட்டு களமா மாறி வழுக்குப்பாறை என பேராயிடுச்சு.

அப்படி ஒரு நாள் சறுக்கி விளையாடும்போது,

இசக்கு பிசகா சறுக்குனதுல மம்பட்டி மூக்கன் தெய்வேந்திரனுக்கு இடுப்பு ஒடிஞ்சுடிச்சு போல, அவனால நேரா உக்கார முடியுல. அவனால நடக்கவும் முடியல.

அவனோட அப்பன் ஆத்தாலுக்கு என்ன பதில் சொல்லுறது? நாளைக்கு அவனால பள்ளிக்கூடம் வரமுடியாதே என்ன பண்ணுறது? எங்க எல்லாத்துக்கும் வீட்டுலயும் அடி விழும். பள்ளிக்கூடத்துலயும் அடி விழும். என்ன பண்ணுறது?

ஒரே கவலையா எல்லாத்தையும் தொத்திக்கிடுச்சு!

அவன ரெண்டு பக்கமும் ரெண்டு பேரு தோழுல தாங்கிக்கிட்டு கை தாங்கலா நடக்க முடியாம நடத்திக்கிட்டு போனோம்.

நாசமாப் போன வயிறுக்கு எங்க வயித்தேறிச்ச தெரியாம வயிறு கிடந்து பசியா பசிக்குது.

வயிறு பசிக்குது ஒருபக்கம். தெய்வேந்திரன் வீட்டுக்கு என்ன பதில் சொல்லுறதுங்குற மனசு பதறுது மறுபக்கம்.

” டேய் எல்லாரும் முதல்ல ஒச்சாண்டித்தேவர் ஓட்டலுக்குப் போவோம். சாப்பிட்டுக்கிட்டே நம்ம பிரட்சனைக்கு என்ன பண்ணலாம்னு யோசனை செய்வோம்”னு நான் சொன்னதும் எல்லாப் பயகளும் சரின்னுட்டானுங்க.

ஓட்டலுல வழக்கமா இருந்த சமையல் மாஸ்டரைக் காணோம். டேய், நம்ம ஆளு இல்ல. எவனோ புது மாஸ்டரா இருக்கான். கொஞ்சமா தின்னனும். காசு பத்தாது. எச்சரித்தேன்.

கிருக்கன் ஜெயராஜ் மசாலா தோசை ஆர்டர் செய்தான். விமாண்டி கல் தோசை ஆர்டர் செய்தான். ஆள் ஆளுக்கு ஒரு ரகம் ஆர்டர் செய்தாச்சு.

வெந்தையன் செல்வம் மட்டும் சப்பளையரிடம் ஏதோ ரகசியம் பேசுவது போல எதையோ ஆர்டர் செய்தான். எங்க எல்லாத்துக்கும் ஆர்டர் செஞ்சது வந்தாச்சு. தின்டாச்சு.

வெந்தையனுக்கு ஆர்டர் செய்தது இப்போது தான் வந்திருக்கு. ஏதோ வித்தியாசமா இருக்கு. இதுவரைக்கும் நாங்க பாத்ததே இல்லை.

” டேய், வெந்தெ இது என்னடா புதுசா ஒரு தினுசா இருக்கு”னு ஜெயராஜ் கேட்டான்.

” என்னமோ சிலோன் புரோட்டாவாம். சரி தின்னு தான் பாக்கலாமேன்னு ஆர்டர் கொடுத்தேன் ”

ஒரு ஓரமா கொஞ்சமா பிச்சு ருசி பாத்தான், ஜெயராஜ்.

” டேய், சூப்பரா இருக்குடா ”ன்னு ஜெயராஜ் சொன்னதுமே, விருமாண்டியும் கொஞ்சம் பிச்சு சாப்பிட்டு ” ஆமாடா ”ன்னு சொன்னதும், நானும் கொஞ்சம் பிச்சு சாப்பிட்டுப் பாத்தேன்.

மம்பட்டி மூக்கன் தெய்வேந்திரனும் இடுப்பு வலியோடும் கால் வலியோடும் எந்திரிக்க முடியாம எந்திரிச்சு வெந்தையன் இழையில் இருந்த சிலோன் புரோட்டாவை கொஞ்சம் பிச்சு வாயில் போட்டான். தின்னு பாத்ததும் படக்குன்னு இழையில் இருந்த மிச்ச சிலோன் புரோட்டாவையும் மொத்தமா எடுத்து வாயில் போட்டுக்கிட்டான். வெந்தையனுக்கு வந்ததே கோபம்.

” வெக்காலி உன்ன கொல்லாம விடமாட்டேன்டா ”னுட்டு வெந்தையன் எழுந்திரிச்சதும், மம்பட்டி மூக்கன் தெய்வேந்திரன் எந்திரிச்சு எடுத்தானே ஒரு ஓட்டம்… உங்க ஓட்டமில்ல… எங்க ஓட்டமில்ல… அப்படி ஒரு பேய் ஓட்டம்!

எங்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு. ”இடுப்பு ஒடிஞ்சவன், நடக்க முடியாதவன் வெக்காலி ஓடுற ஓட்டத்தை பாத்தையா?”

மம்பட்டி மூக்கன் அன்னைக்கு ஓடுனத இப்ப நினைச்சாலும் எங்களுக்கு அடக்க முடியல…சிரிப்பு!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *