(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“சும்மாத்தானே இருக்கீங்க! பல்லாங்குழி ஆடலாம் வரேளா!” என்பாள் ஸப்ஜட்ஜ் சாம்பசிவத்தின் சம்சாரம் ஜானகி அம்மாள்.
“கேசுகளைப் படிச்சு ஜட்ஜ்மெண்ட் எழுதி வைத்துட லாம்னு பார்த்தேன்…”
“பரவாயில்லை, ஞாயிற்றுக்கிழமையிலேகூட என்ன கோர்ட் வேலை வேண்டியிருக்கு? கொஞ்ச நேரம் பல்லாங்குழியோ. பரமபதமோ ஆடலாம், வாங்க” என்பாள் ஜானகி அம்மாள். மனைவியின் உத்தரவுப்படி சாம்பசிவம் பல்லாங்குழி மணையை யும் அதற்கு வேண்டிய காய்களையும் எடுத்துக்கொண்டு வந்து உட்காருவார்.
பல்லாங்குழி ஆட்டத்தில் தோல்வி சாம்பசிவத்துக்குத் தான்; காரணம் அவருக்கு ஆடத் தெரியாது என்பதல்ல. வெற்றியைத் தம் மனைவிக்கே விட்டுக்கொடுத்து அவளிடம் நல்ல பெயர் சம்பாதித்துக்கொள்ள வேண்டுமென்பது தான்!
திருமணம் ஆனதும் எல்லோரையும் போல் அவர் மனைவி யைத் தம்முடைய வீட்டுக்கு அழைத்து வரவில்லை. அவள் பெரிய இடத்துப் பெண்ணாகையால் அவளைத் தம்முடைய வீட்டுக்கு அழைத்து வருவதற்குப்பதிலாக அவரே அவளுடைய வீட்டுக்குப் போய் ‘மனைவிக்குப் புருஷ’னாக வாழ்ந்து வந்தார். ஊராருங்கூட சாம்பசிவத்தைப் பற்றிப் பேசும்போது ‘ஜானகி அம்மாள் ஹஸ்பெண்ட்’ என்றுதான் சொல்லுவார்கள். தம்மை அவ்வாறு அழைப்பதில்தான் அவருக்கும் திருப்தி!
தம் மனைவியைப்பற்றியோ அவருடைய அதிருஷ்டத்தைப் பற்றியோ அவர் பேச ஆரம்பித்துவிட்டால் முகத்தில் பெருமை கூத்தாட மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார் அவர்.
“எல்லாம் அவளுடைய அதிருஷ்டம்தான், ஸார்! நான் என்ன செய்தேன்? வக்கீலுக்குப் படித்துப் பாஸ் பண்ணினேன். அவளுக்குத் தாலி கட்டினேன். அவ்வளவுதான்; படிப்படியா முன்னுக்கு வந்தேன். இந்த ஸப் ஜட்ஜ் உத்தியோகம், கார், பங்களா எல்லாம் அவள் அதிர்ஷ்டத்துக்கு ஏற்பட்டதுதான்” என்பார் மகிழ்ச்சியுடன்.
உத்தியோகத்தில் பணம் சேர்த்து, பங்களா கட்டியதும் அந்தப் புதிய பங்களாவுக்கு *ஜானகி நிவாஸ்’ என்று தம் மனைவியின் பெயரையே சூட்டினார்.
“ஜானகி! இன்றைக்குக் கோர்ட்டுக்கு எந்த டிரஸ் போட்டுக்கொண்டு போகட்டும்? ஜானகி, இன்றைக்கு எத்தனை மணிக்கு மாத்திரை சாப்பிடட்டும்?” என்று மனைவியின் அபிப் பிராயத்தைக் கேட்காமல் எதையுமே செய்ய மாட்டார். இப்படி எதற்கெடுத்தாலும் ஜானகி நாமஸ்மரணந்தான் அவருக்கு!
அந்தப் பங்களா வாசலில் பிச்சைக்காரர்கள் வந்தால் “ஐயா” என்று அழைக்கமாட்டார்கள். “அம்மா, தாயே” என்றுதான் கூப்பிட்டுக்கொண்டு வருவார்கள். ‘ஐயா’ என்று கூப்பிடாமல் ‘அம்மா’ என்று கூப்பிடும் பிச்சைக்காரர்களை அவர் மனத்துக்குள்ளாகவே ‘புத்திசாலிகள்’ என்று எண்ணிப் பாராட்டுவார்.
யாராவது ‘யாசகம்’, ‘டொனேஷன்’ என்று வந்தால் சாம்பசிவம் அவர்களிடம் “அம்மாவைப் பார்க்க வந்தீர் களா? உள்ளே இருக்காங்க; போய்ப் பாருங்க” என்பார்.
கார் டிரைவர், அவரிடம் வந்து சம்பள உயர்வு கேட்டால், “போடா முட்டாள், அம்மாவைப் போய்க் கேளுடா” என்பார்.
சாம்பசிவத்திற்கு அந்த வீட்டைப் பொறுத்தவரையில் எந்த விவகாரமும் தெரியாது. எல்லாம் அந்த அம்மாளுடைய ‘மானேஜ்மெண்ட்’தான்.
“என் ‘ஒய்ப் இருக்காளே, ரொம்ப சாமர்த்தியம். நாலா து பாரம் வரை படிச்சிருக்காள். இங்கிலீஷிலே அட்ரஸ்கூட எழுதுவாள்; கேஸ் கட்டெல்லாங்கூடப் படிச்சு விஷயத்தைத் தெரிஞ்சுக்கிறாள். இன்னும் கொஞ்ச நாள் போன ஜட்ஜ் மெண்டேகூட எழுதிவைத்து விடுவாள்போல் இருக்கிறது…” என்பார்.
“இன்றைக்கு ஓர் இடத்திலே கல்யாணம், போயிட்டு வரு வோம்,வறேளா?” என்பாள் ஜானகி அம்மாள். ஸ்ப்ஜட்ஜ் பதில் பேசாமல் மனைவியுடன் புறப்பட்டுச் செல்வார். கலியாண வீட்டில் எல்லாரும் ஜானகி அம்மாளைத்தான் விசாரிப்பார்கள். ஜானகி அம்மாள் தன் ஹஸ்பெண்டை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைப்பாள். கலியாண வீட்டிலிருந்து மறுபடியும் வீடு திரும்பப் போகும் நேரம் சாம்பசிவத்துக்குத் தெரியாது, மனைவி எப்போது புறப்படப் போகிறாள் என்பதை தெரிந்துகொள்ள அடிக்கொரு தடவை மனைவி இருக்கும் திக்கை ஜாடையாக கவனித்துக் கொண் டிருப்பார். கடைசியில், “புறப்படலாமா? கார் டிரைவரைக் கூப்பிடுங்கோ” என்பாள் ஜானகி அம்மாள்.
“யாரது, உங்களைத்தானே, இன்றைக்குச் சபாவிலே சங்கீதக் கச்சேரியாம். போவோம் வறேளா?” என்பாள் ஜானகி அம்மாள்.
“சங்கீதமா? அதெல்லாம் எனக்கொண்ணும் அவ்வளவா தெரியாது…
“பரவாயில்லை, வாருங்கோ, எனக்கு யாரும் துணை இல்லே…”
“சரி!” என்பார் அவர்;
கச்சேரியில் போய் உட்கார்ந்துகொண்டு தம் மனைவி தலையாட்டுகிற இடங்களையெல்லாம் கவனித்து அந்த இடங் களில் தாமும் ரசிப்பதுபோல் பாவனை செய்வார்.
சாம்பசிவம் வீட்டில் எப்போதும் குழந்தைகளும் குட்டி களும் ஜேஜே என்று இருக்கும். எல்லாம் ஜானகி அம்மாளின் உறவுக்காரர்கள்தான். சாம்சிவத்துக்குத் தம்முடைய உறவினர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துவரத் தைரியம் ஏது? மனைவி வகை பந்துக்களின் குழந்தைகள் அழுதால்கூட அவருக்குக் கோபிக்க உரிமை கிடையாது. குழந்தைகளின் தொந்தரவு அதிகமாகப் போனால், “சும்மா இருக்கப் போகிறீர்களா? இல்லே, ‘அம்மா’வைக் கூப்பிடட்டுமா?” என்றுதான் மிரட்டுவார்.
“ஜானகி! இந்த வருஷம் ஸம்மருக்கு நாம் ஊட்டிக்குப் போகலாமா?” என்று தயங்கியபடியே கேட்பார்.
“நீங்க ஒண்ணும் வேண்டாம்; உங்களுக்கு ஆஸ்துமா, உடம்புக்கு ஒத்துக்காது. இந்த வருஷம் நானும் என் தம்பி யும் போயிட்டு வரோம். நீங்க பங்களாவைப் பார்த்துக் குங்க…” என்பாள் அந்த அம்மாள்.
“சரி, நீ சொல்றதும் சரிதான். ஆஸ்துமா அதிகமாயிடுத் துன்னா யார் கஷ்டப்படறது? நான் பங்களாவைப் பார்த்துக் கறேன். நீ ஜாக்கிரதையாப் போயிட்டுவா. மப்ளர், பிளானல், சட்டை,போர்வையெல்லாம் ஞாபகமா எடுத்துக்கொண்டு போ” என்பார்.
– கேரக்டர், 9வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.