சௌக்கிய மன்னன் பட்டப்பா!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 19,092 
 

“என்ன சார் சௌக்கியமா?” – அவசர காரியமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக எதிரில் வரும் அறுவைகளிடமிருந்து தப்புவதற்காகவும், அதே சமயத்தில் நம்மோடு இயல்பாக ஊறிய இந்து – சமவெளி நாகரிகத்தை’ வெளிப்படுத்துவதற்காகவும் நாம் சகஜமாகக் கேட்கும் ஒரு சாதாரண கேள்வி இது.

மனைவியின் தலைவலிக்கு (நமது தலை வலிக்கும் சில சமயங்களில் தலைவலி வருகிறதே!) தைலம் வாங்கச் செல்லும் நாம், அறியாமையில் அசிரத்தையாகக் கேட்கும் இந்தக் கேள்வி வேலியில் செல்லும் ஓணானை வேட்டியின் மீது அசட்டுத்தனமாக எடுத்துப் போட்டுக்கொள்வதற்கு சமமாகும்.

எதிரில் வந்த அறுவை, “என்ன சார் சௌக்கியமா?” என்று நாம் கேட்பதற்காகவே இதுநாள் வரை ‘பகீரதத் தவம்’ செய்து காத்திருந்தவர் போல, நம்மைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்.

நாம் விசாரித்தது நண்பரின் சௌக்கியத்தை . ஆனால், நண்பரோ ‘கற்பை வில்லனிடம் பறிகொடுத்த தமிழ் சினிமா கதாநாயகி’ பாவத்தில் புலம்புவார். அப்போது அவருடைய முகத்தில் ‘தேவதாஸ்’ நாகேஸ்வரராவின் ‘உலகே மாயம்’ ஜாடை தெரியும்.

தனது மூன்றாவது மகளின் ஜாதகத்தில், செவ்வாய் தோஷம்’ இருப்பதில் ஆரம்பித்து தனது இடுப்பு வலி வரை ஒன்றுவிடாமல் கூறி தனது அனுதாபத்தைச் சம்பாதிக்க விரும்புவார். வெளிப் பார்வைக்கு நமது வதனம் நண்பரைத் தேற்றுவது போல கனமான வருத்தத்தோடு அனுதாபத்தை வெளியிடும். ஆனால், நமது உள் மனம் உற்சாகத்தோடு நண்பரின் அசௌக்கியங்களைக் கேட்டுக்கொள்ளும்!

அமெரிக்க ஜனாதிபதி ரீகனிலிருந்து நாம் அன்றாடம் சந்திக்கும் ராமன், ராபர்ட் , ரஹீம் வரையில் ஒரு பயலுக்காவது சௌக்கியத்துக்குச் சரியான ‘ஸ்பெல்லிங்’ தெரியவில்லை என்ற எனது ஆதங்கத்தை பால்ய நண்பன் பட்டப்பா’ ஒருவன் தான் நிவர்த்தி செய்தான்.

‘சௌக்கிய மன்னன்’ பட்டப்பாவை சென்ற மாதம் ஒரு திருமண மண்டபத்தில் சந்தித்தேன்.

மூகூர்த்த சாப்பாட்டை மூக்கு பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு அதனால் வந்த அசௌக்கியத்தை ஏப்பமாக வெளியிட்டபடி கை கழுவச் சென்றபோது, பாட்டிகளோடு போட்டி போட்டுக் கொண்டு பீன்ஸ், கொத்தவரங்காய் போன்ற கறிகாய்களைப் பதவிசாக நறுக்கிக் கொண்டிருந்தான் பட்டப்பா. என்னைக் கண்டதும் எழுந்து வந்தான். “என்ன பட்டப்பா, சௌக்கியமா இருக்கியா?” – வழக்கமான கேள்வி வாயிலிருந்து. வாயில் குதப்பிய வெற்றிலைப் புகையிலை கலந்த வண்ணக் கலவையைத் துப்ப மனமில்லாமல், பட்டப்பா தனது சௌக்கியத்தைக் கண்களால் ‘சிக்னல்’ செய்தான். எப்பொழுதும் சிரித்த முகம்’ என்பார்களே, அது பட்டப்பாவுக்குப் பொருந்தும். ஒரு மாதிரி நெளிந்து கொண்டிருக்கும் உதடுகளோ , விசேஷமான பல் வரிசையோகூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பட்டப்பாவின் சாமுத்ரிகா லட்சணத்தைச் சிறிது விவரிக்கிறேன். கேளுங்கள்…

குடுமியா அல்லது கூந்தலா என்று தீர்மானிக்க முடியாதபடி இடுப்புவரை நீண்ட முடிக்கொத்தோடு சோமாபுரிக்கு மன்னனாகக் காட்சியளிப்பான் பட்டப்பா . சிறு வயதில் நண்பர்களின் கோரிக்கையை அங்கீகரித்து, சில நாட்கள் ரெட்டைப் பின்னல் பின்னிக்கொண்டு பூவும் வைத்துக்கொண்டு பெருமாள் கோயில் சந்நிதித் தெருவில் ஒயிலாக நடப்பான். பின்புறமிருந்து பார்ப்பவர்களுக்கு, செல்வது பட்டப்பாவா அல்லது பட்டம்மாவா என்ற சந்தேகம் வரும்.

புதிதாகப் போடப்பட்ட ரயில் பாதையைப் போல், இரண்டு புருவங்களும் இணைந்து அடர்த்தியாக இருக்கும். சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதை ‘டைரக்டோரியல் டச்சாக’ பட்டப்பாவின் நாசித்துவாரங்களுக்கு உவமையாக ‘வீராணம்’ குழாய்களைக் கூறலாம். பட்டப்பாவின் செவிமடல்களின் முன்பு கடுக்கன்’ இருந்த இடத்தில், இரண்டு பெரிய துவாரங்கள் இருக்கின்றன.

பட்டப்பா சர்வரானால் பென்சிலை வசதியாக அத்துவாரங்களில் சொருகிக் கொள்ளலாம். இத்தனையும் மீறி பட்டப்பாவின் முகத்தில் ஒரு தேஜஸ்’ தென்படும். சந்தோஷமும் சௌக்கியமும் நிரந்தரமாகக் கொப்பளிக்கும் அவனது முகத்தைப் பார்க்கும் போது சில சமயம் நமக்கே பொறாமை வரும்.

பட்டப்பா ஒரு ஆலிவர் ட்விஸ்ட்’ பட்டப்பாவின் தாய் இறந்து போவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு பட்டப்பாவின் தந்தை இறந்து போனார். அந்த இரண்டு மணி நேரத்தில் நிகழ்ந்த ஒரே ஒரு சுபநிகழ்ச்சி பட்டப்பாவின் ஜனனம். தாய் மாமன் தேசிகனின் குடும்பத்தில் பட்டப்பா அகதியாகக் குடியேறினான்.

பாகவதத்தில் கிருஷ்ணருக்கு ஒரு கம்சன்… இங்கு பட்டப்பாவுக்கு ஒரு தேசிகன். தேசிகனைச் சொல்லிக் குற்றமில்லை. திருமணத்தின் போது பேச்சுக்குச் சொல்லப்படும் வாழ்த்தைத் திடமாக மனதில் கொண்டு அதனால் பதினாறைப் பெற்று (எட்டு

ஆண் குழந்தைகள், ஏழு பெண் குழந்தைகள். பதினாறாவது ஆணா, பெண்ணா என்பது தேசிகனின் மனைவி பிரசவித்தால்தான் தெரியும்) பல்லைக் கடித்துக்கொண்டு பெருவாழ்வு வாழ நவீன குசேலன் தேசிகன் திண்டாடிக் கொண்டிருந்த காலம் அது. தனது கோபதாபங்களை வெளியிடுவதற்குத் தாய் மாமன் தேசிகன், மருமான் பட்டப்பாவின் முதுகை மிருதங்கமாக்கிக் கொள்வான்.

பட்டப்பாவும் தாய் மாமன் அடிப்பதற்கு வசதியாகப் புறமுதுகு காட்டிக்கொண்டு சிரித்தபடி இருப்பான். துச்சாதனன் இழுக்க இழுக்கத் திரௌபதியின் வஸ்திரம் வந்து கொண்டே இருந்தது போல, தேசிகன் எவ்வளவுதான் அடித்து நொறுக்கினாலும் பட்டப்பாவின் முகத்திலுள்ள சிரிப்பு மறையாது. சிரிப்பு பட்டப்பாவின் முகத்தில் ரேகையாகவே படர்ந்து இருக்கும். அதற்காகப் பட்டப்பாவைத் தேசிகனின் கொத்தடிமை என்று தவறாக எண்ணிவிடாதீர்கள். அடிபடும் நேரத்தில் தாய் மாமனைப் பழிவாங்கப் பட்டப்பா திட்டம் தீட்டி விடுவான்.

தேசிகனின் புத்திர சிகாமணிகளுக்கு மிட்டாய் என்று கூறி பர்கோலாக்ஸ்’ மாத்திரைகளைக் கொடுத்து, அவை வயிற்றுப் போக்கால் அவதிப்படுவதை வேடிக்கைப் பார்த்து வஞ்சம் தீர்த்துக் கொள்வான்.

ஞாபகசக்தியில் பட்டப்பா, அப்புவை (யானை) விடக் கூர்மையானவன். வில்லிவாக்கம் ‘நாதமுனியில்’ ஆரம்பித்து அடையாறு ஈராஸ்’ தியேட்டர் வரை ஒன்றுவிடாமல் குறிப்பிட்டு அவற்றில் தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் பெயரையும் துல்லியமாகக் கூறுவான்.

அந்நாளில் பிரபலமான இந்திப் பாடல்களை முகேஷ் போல மூக்கால் பாடிக் காட்டுவான். கேட்பதற்கு இந்தி போலவே இருக்கும். ஆனால், அவன் பாடிய பாடலில் ஒரு வரியில் கூட இந்தி வார்த்தைகள் இருக்காது என்பதுதான் ஆச்சரியம்!

எங்கள் பள்ளியில் பாடங்களைத் தவிர ‘தக்ளி நூற்றல், தறி போடுதல், ராட்டை சுற்றுதல்’ போன்ற craft வகுப்புக்களும் உண்டு. பட்டப்பா ராட்டை சுற்றுவதை ஆட்டன்பரோ பார்த்திருந்தால் அவனையே பால காந்தியாகத் தனது படத்தில் பயன்படுத்தி இருப்பார்.

இடது கை, வலது கை இரண்டினாலும் வில்லை விடும் தேர்ச்சி பெற்றிருந்தால் அர்ச்சுனனுக்கு சவ்யஸாஸி’ என்ற பெயர் உண்டு. பட்டப்பா கிரிக்கெட்டில் ஒரு சர்வஸாஸி’. இதுதவிர புட்பால், ஹாக்கி, கேரம், செஸ், கோலி விளையாட்டு, பம்பரம் போன்ற எந்த விளையாட்டிலும் பட்டப்பாவை வெல்ல அந்நாளில் எவரும் கிடையாது. அன்று பட்டப்பாவோடு விளையாடித் தோற்ற பலர், இந்நாளைய சாம்பியன்களாகத் திகழ்கிறார்கள்.

விளையாட்டுத் தவிர சில வீர விளையாட்டுகளில் பட்டப்பா ‘கெட்டப்பாக’ இருந்தான். கிங்காங், தாராசிங் மல்யுத்தத்தில் போடும் கத்திரிப் பிடி களைப் போஸ்டரில் பார்த்துவிட்டு வந்து அதை எதிர்வீட்டு உப்பிலியிடம் முயன்று வென்றும் விட்டான். கத்திரிப் பிடி’ போடத் தெரிந்த பட்டப்பாவுக்கு அதை எடுக்கத் தெரியவில்லை. உப்பிலி மூச்சுத்திணறி நீலமாகிக் கொண்டிருந்தான். பால்கார நாயுடு வந்தாரோ உப்பிலி பிழைத்தான். எக்கச்சக்கமாகக் கத்திரிப்பிடி போட்டதால் பட்டப்பாவின் இரு கைகளும் மூன்று நாட்களுக்கு ‘எஸ்’ போல இருந்தது.

பட்டப்பா எங்களுக்கு பாலன்ஸ்’ மந்திரம் உபதேசித்து சைக்கிள் விடக் கற்றுக் கொடுத்த தட்சிணாமூர்த்தி. இன்று வரை அவனுக்குச் சொந்த சைக்கிள் கிடையாது. ஆனால், இன்று எங்களில் பலர் கார் வைத்திருக்கிறோம்.

பட்டப்பாவால் எதையும் பொறுத்துக்கொள்ள முடியும். அதர்மம் (அவன் பாஷையில் அழுகுணி ஆட்டம்) ஒன்றைத் தவிர. எங்கள் பள்ளி மைதானத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் சைக்கிள் விடுவதாகச் சவால் விட்டான் ஒருவன். மாலையில் கூட்டம் கலைந்ததும் அவன் சைக்கிளை நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பதைப் பட்டப்பா வேவு பார்த்துக் கண்டுபிடித்து அம்பலமாக்கினான். எங்கேயெல்லாம் அழுகுணி ஆட்டம் நடக்கிறதோ அங்கேயெல்லாம் பட்டப்பா அவதாரம் செய்வான்!

எங்களுக்கெல்லாம் திருப்புமுனையாக இருந்த எஸ்.எஸ்.எல்.ஸி., பட்டப்பாவுக்கு மட்டும் தடையாகி எங்களை அவனிடமிருந்து பிரித்தது. அவனோடு பழகிய நாங்கள் நல்ல வேலைகளில் இருக்கிறோம். நான் அறிந்து பட்டப்பா உத்தியோகத்துக்கு இதுநாள் வரை சென்றதில்லை. ஒரே ஒரு தடவை பலரின் வற்புறுத்தலுக்கு இணங்கி பட்டப்பா ஒரு வேலையில் சேர்ந்தான். வேலை முழுதாகப் பார்த்தது ஒரே ஒரு நாள்தான். மறுநாள் ஆறு மணி நேரம் லேட்டாகப் போனதால் பட்டப்பாவை டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள். அவன் வேலை பார்த்த அந்த ஒரு நாளில் கூட, பட்டப்பா அவசியம் போகவேண்டிய பல விசேஷங்கள் நடந்துவிட்டன. இப்படி உலகக் காரியங்களைக் கவனிக்க விடாமல் அப்படி என்ன உத்தியோகம் வேண்டிக் கிடக்கிறது என்ற வெறுப்பில், ஆபீஸ் ஆசையைத் துறந்து நிரந்தர நாடோடியாகத் திரிய , மனதால் சன்யாசம் வாங்கிக் கொண்டான்.

நீங்கள் கேட்கலாம். இந்த விலைவாசியில் இப்படியொரு ஜன்மம் எப்படித்தான் சௌக்கியமாக இருக்கிறது என்று.

பட்டப்பாவின் அன்றாடத் தேவைகள், இரண்டு கவளம் மோர் சாதம் ; எட்டணாவுக்கு வெற்றிலை, சீவல், புகையிலை. இப்படிக் கவலைகள் ஏதுமின்றி இருக்கும் பட்டப்பா ஒரு பரப்பிரம்மமா, இல்லையா?

விவேகம் அவனிடம் விளையாட்டாக அமைந்துவிட்டது. நமது தேவைகள் பல, பட்டப்பாவுக்குக் கிடையாது. அபீசுக்குச் செல்லாததால் நாம் அணியும் ஆடம்பர உடைகள் அவனுக்கு அனாவசியம். ‘மவுண்ட் பேட்டன்’ வந்தாலும் சரி, மாலின் மன்றோ ‘ வந்தாலும் சரி, பட்டப்பா வேடிக்கை பார்க்க நாலு முழ வேட்டியில் தான் செல்வான்.

அவசரமாகச் சென்று முடிக்கவேண்டிய காரியங்கள் ஒன்றும் இல்லாததால் பட்டப்பாவுக்கு நம்மைப் போல காரோ, பஸ்ஸோ , ஸ்கூட்டரோ தேவையில்லை. செல்லுமிடம் திருப்பதியோ, திருவல்லிக்கேணியோ – பட்டப்பா வினோபா’ காட்டிய வழியில் நடப்பான். முப்பத்தைந்து வயதாகியும் பட்டப்பா திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, மனைவி கிடையாது; எனவே, பட்டுப் புடவை கிடையாது: அதற்கு மாட்சாக ரவிக்கைத் துண்டு கிடையாது. வைர நெக்லெஸ், எட்டு கல் பேசரி கிடையாது; மிக்ஸி, பிரஷர் குக்கர் கிடையாது; குழந்தை கிடையாது. எனவே, அமுல் கிடையாது. அழுகை கிடையாது… கல்யாணத்தை ஒதுக்கியதில் பட்டப்பா பல லாபங்களை முதலீடு செய்யாமலே அடைந்துவிட்டான். இப்பொழுது புரிகிறதா, பட்டப்பாவின் ‘சௌக்கிய ரகசியம்’ என்னவென்று!?

திருமண மண்டபத்தில் பட்டப்பா என்னைப் பார்த்து, “டேய், கராச்சி டெஸ்ட் மாட்ச் பார்த்தியோ?” என்று கேட்டான். நான் ஆபீசுக்குச் செல்வதால் திங்கள், செவ்வாய் போன்ற வேலை நாட்களில் டி.வி. பார்க்கமுடியாது என்று அவனிடம் கூறினேன்.

“சொந்தமாக டி.வி. வச்சுண்டுருக்கே! என்ன பிரயோஜனம்? கிரிக்கெட் மாட்ச் பார்க்க முடியலை. அஞ்சு நாளும் நான் கீழ் வீட்டு டி.வி-யில் அமர்க்களமா பார்த்தேன். ஒரு தொந்தரவு கிடையாது. கீழ் வீட்டுப் பசங்கள்ளாம் ஸ்கூலுக்குப் போயிட்டாங்க…. மாமா ஆபீசுக்குப் போயிடுவார்…” – பட்டப்பா சொல்லச் சொல்ல, எனக்கு நாபிக்கமலத்திலிருந்து உதித்த வயிற்றெரிச்சல் வாய் வழியாகப் புகையாக வந்தது.

“பாகிஸ்தான் அம்ப்பயர்ஸ் ரொம்ப அழுகுணி ஆட்டம்ப்பா ….” என்றான் பட்டப்பா.

பட்டப்பா ஒன்று கூறினால் அது சரியாகத்தானிருக்கும்.

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *