சொல்லாதே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 8,589 
 
 

முடி வெட்டும் உருமனுக்கு தூக்கம் வரவில்லை.

உடல் பஞ்சு வைத்தால் பற்றி எரியும் அளவுக்கு தீத்தனல் போல் தகித்தது. காய்ச்சலுக்கு ஊர் மக்களுக்கே மருந்து கொடுக்கும் மருத்துவச்சியான அவரது மனைவி விருமி கணவனின் நிலை கண்டு மிகவும் கவலை கொண்டாள். ‘உடம்பில் என்ன பிரச்சினை?’ என கேட்டால் வாயே திறக்க மறுக்கிறார். மற்றவர்கள் முன் பேசுவதற்கு கூட வாயை திறக்க பயப்படுகிறார். விடியும் வரை காய்ச்சலுக்கான கசாயத்தை குடிக்க மறுத்ததால் உடம்பில் தடவும் மருந்தைத்தடவியும் காய்ச்சல் நிற்கவில்லை. கொஞ்சும் மனைவி கெஞ்சிக்கேட்டும் ஒரு வார்த்தை கூட பேசாததால் விடிந்ததும் உள்ளூர் மந்திரவாதியை அழைத்து வந்து மந்திரித்தும் பலனில்லை.

உருமனைப்போல் ஊரில் பேச ஆளில்லை. பேசிக்கொண்டே இருப்பார். ‘தூங்க வேண்டும் பேச்சை நிறுத்து’ என மனைவி திட்டிய பின்னும் போர்வைக்குள் புகுந்து கொண்டு தனக்குத்தானே சிறிது நேரம் பேசிவிட்டுத்தான் உறங்குவார். அப்படிப்பட்ட மனிதர் இன்று பேசாமல் இருப்பது ஊர் மக்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

‘பேய் ஏதாவது மிரட்டியிருக்குமா?’ என்றால் இரவில் சுடுகாட்டு வழியாக செல்லவில்லை. காலையில் ராஜாவுக்கு குல தெய்வ வேண்டுதலுக்காக மொட்டையடிக்கப்போவதாக அரண்மனையிலிருந்து வந்த ஆட்களுடன் சென்றவரை அதே ஆட்கள் வீடு வரை திரும்பக்கொண்டு வந்து விட்டு விட்டுத்தான் சென்றனர். ‘அரண்மனையில் ஏதாவது பார்த்து அதிர்ச்சியாகி விட்டாரோ?’ என பல வகையில் சிந்தித்தாள் விருமி. 

‘தூக்கம் வராமலும், வாயை மற்றவர்கள் முன் திறக்காமலும் இருக்கும் தன் நிலைமை உலகில் யாருக்கும் வரக்கூடாது’ என நினைத்து வேதனை கொண்டார் உருமன். 

பெண்களைப்போல முடி வளர்த்திருந்த மன்னர் தனக்கு ஆண் வாரிசு வேண்டுமென குலதெய்வத்தை வேண்டி குழந்தை பிறந்ததால், வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மொட்டையடிக்க முடிவு செய்து உருமனை அழைத்திருந்தார். மொட்டையடிக்கும் போது ராஜாவின் காதுகள் மட்டும் கழுதையின் காதுகளைப்போல இருந்ததைப்பார்த்து அதிர்ச்சியோடு ஆச்சர்யப்பட்டுப்போனார் உருமன்.

அப்போது உருமன் அருகே வந்து காதில் கிசுகிசுத்த மந்திரியார் ‘ராஜா காது கழுதைக்காதுங்கிற விசயத்தை நாட்டு மக்களிடம் சொல்லிவிடக்கூடாது. உன் மனைவியிடம் கூட சொல்லிவிடக்கூடாது. மீறி சொன்னால் மரண தண்டனை நிச்சயம்’ என எச்சரித்ததுதான் பேசாமலிருப்பதற்க்கு காரணம் என்பதை நினைவு படுத்திப்பார்த்த போது உடம்பெல்லாம் வியர்த்தது.

‘இந்த நிலை தொடர்ந்தால் வாழ்வதே கடினம். மனைவியிடமாவது சொல்லி விட்டால் தான் வெளியில் எப்போதும் போல பேச முடியும். உயிரே வாழ முடியும்’ என யோசித்தவனாய் உறங்கிக்கொண்டிருந்த மனைவியை எழுப்பி உண்மையை வாயைத்திறந்து கூறி விட்டார்.

கணவர் பேசி விட்டது மகிழ்ச்சியாக இருந்தாலும் கேட்ட விசயத்தை உடனே யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும். இல்லையேல் தலையே வெடித்து விடும் போல் இருந்தது விருமிக்கு.

இந்த செய்தியை மனிதர்கள் யாரிடமும் சொல்லக்கூடாது என கணவர் சத்தியம் வேறு வாங்கிக்கொண்டார்.

சத்தியத்தையும் மீற முடியாமல், சொல்லாமலும் இருக்க முடியாமல் தலை பாரம் அதிகமாகிக்கொண்டே போக வீட்டின் முன் செடி வைப்பதற்க்காக தோண்டி விட்ட குழியில் சொல்லி விட்டு நிம்மதியானாள்.

ஒரு நாள் மன்னரின் மகனுக்கு காதுகுத்து வைபவம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது வாத்தியம் இசைப்பவர் வாத்தியத்தை ஓர் அடி‌ அடித்ததும் ‘டொம்’ என்பதற்கு பதிலாக ‘ராஜா’ என்றதும் ராஜா உள்பட அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். மேலும் அடித்தபோது ‘காது, கழுதை, காது’ என ஒலிக்க, ராஜாவின் முகம் கோபத்தில் தீத்தனல் போல சிவந்து போனது.

மொட்டையடித்த பின் விக் வைத்து காதுகளை மறைத்திருந்த ராஜா மந்திரியை உஷ்ணமாகப்பார்த்தார். மந்திரி அங்கே அமர்ந்திருந்த உருமனை எரிப்பது போல் பார்த்தார். உருமன் தன் மனைவியை கடுங்கோபத்துடன் பார்த்தார். விருமி பக்கத்து வீட்டுக்காரரை அடிக்கப்போனாள்.

உருமனுக்குப்புரியவில்லை. “பக்கத்து வீட்டுக்காரரை எதற்க்காக அடிக்கப்போனாய்?” என தன் மனைவி விருமியைப்பார்த்துக்கேட்டார்.

“நீங்க சொன்ன விசயத்தை நம் வீட்டுத்தோட்டத்தில் செடி வைக்கும் மண் குழியில் தான் சொன்னேன். அதில் நம் மகன் வைத்து வளர்த்த செடியை பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்த மாடு சாப்பிட்டு விட்டது. அதை நான் கோபத்தில் அடித்ததால் இறந்து விட்டது. இறந்த மாட்டின் தோலில் இந்த வாத்தியத்தை செய்ததால் உண்மை வெளிப்பட்டு விட்டது” என அழுதவாறு உண்மையைக்கூறினாள் விருமி.

இச்செய்தி வெளிப்பட முதற்காரணகர்த்தாவான உருமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. யாரை வெளியில் விட்டாலும் இச்செய்தி நாட்டு மக்களிடம் பரவிவிடும் என்பதால் அரண்மனையில் இருப்பவர்களைத்தவிர வெளியிலிருந்து

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். 

பிரச்சினைக்கு முக்கியக்காரணமான வாத்தியக்கருவியை நெருப்பில் போட்டு எரித்தனர். அதன் புகை வானத்தில் இருந்த மேகத்தில் கலந்து மழை பெய்யும் போது இடித்த இடி ‘ ராஜா காது கழுதை காது’ என ஒலித்ததால் நாடெங்கும் இச்செய்தி எளிதாக பரவியது. இடி இடித்த வானத்தையோ, அதைக்கேட்ட நாட்டு மக்களையோ சிறைவைக்க இயலாது என்பதை அறிந்த மன்னர் காத்தவராயன் , உருமன் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *