கைலாயத்தில் பனி கொட்டிக் கொண்டிருந்தது. அன்றைய இரவு ’21 நைட்’ என்று நாமகரணமிடப் பட்டிருந்தது. கொட்டும் பனியில் மூஞ்சூறும் மயிலும் புலியும் ஓட்டிக் கொண்டு வந்து சேருவது கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்.
மூஞ்சூறுக்கு பனிக்காலத்திற்கென சிறப்புக் காலணிகள் அணிவித்திருந்தார்கள். பறப்பும் நடையுமாக வரும் மயிலுக்கு விசேஷ உடைகள் இருந்தது. கருடன் பறக்கும்போது சேஷன் குடைபிடித்துக் கொள்வதால் நாராயணனுக்கு சௌகரியமான பயணம்.
எவரெஸ்ட் அருகே ஐராவதம் வழுக்கி விழுந்ததால் இந்திரன் வருவதற்குத் தாமதமாகும் என்று அன்னப்பறவையிடம் சுடச்சுட தகவல் வந்து சேர்ந்ததில் சிவன் கடுப்பானான். ஐராவதத்தைத் தூக்கிச் செல்வதற்கு ராவணன் அனுப்பிவைக்கப் பட்டிருந்தார். தான் மலையைத் தூக்கியது ‘பாரு’வுக்காகத்தான் என்று முனகிக் கொண்டிருந்தான் ராவணன். முரண்டு பிடித்தாலும் எல்லாவித எடை பலுவான காரியங்களுக்கும் இலங்கேஸ்வரன்தான் பணிக்கப்பட்டான்.
மண்ணுலகில் மதிமயக்கும் மகளிர் கண்ணசைத்தால் மாந்தருக்கு மாமலையும் மடுதான் என்பதால் இந்திராணியை தியானம் செய்து கொண்டு ஐராவதத்தையும் இந்திரனையும் தள்ளிக் கொண்டுவந்து ஐராவதத்தைக் கொட்டடியிலும் இந்திரனை தேவலோகத்திலும் நிறுத்தினான் இராவணன்.
ஐராவதத்தை மீண்டும் கிளப்ப முடியவில்லை. வண்டி மக்கர் செய்தாலும் செல்லுமிடங்கள் அடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். காமதேனுவில் கிளம்பிப் போனான் இந்திரன். புதிதாக பூலோகத்தில் இருந்து இறக்குமதியான திலோத்தமையும் சீட்டாட்டக் கச்சேரிக்கு அழைத்துச் செல்லப் பட்டாள்.
காமதேனு தான் வரும் வழியெல்லாம் கேட்பவர்களுக்கு கேட்டதை நல்கியதால் தாமதமாகிப் போனதாக மன்னிப்பு கேட்டு கொண்டான் இந்திரன். தொலைந்துபோன பால்யத்தை ஔவையாருக்கு கொடுத்தருளியதால் நேரம் விரயமனதாக சொல்லியதன் மூலம் கணபதி சமாதானமடைந்தான்.
அருணகிரிநாதருக்கு சகலமும் நல்கி நோய் கொடுத்ததாக சொல்லியதால் முருகனுக்கு சந்தோஷம்.
ஒரு வழியாக இந்திரன், முருகன், கணபதி, ஐயப்பன், சிவன், நாராயணன் ஆகியோர் வட்ட மேஜையில் அமர்ந்தனர். பரபிரும்மன் சீட்டுக்களைப் போடும் டீலராக நடுநாயகமாக இருந்தான்.
கண்ணைக் கவரும் ஆடை அதிகம் இல்லாததால் திலோத்தமை எல்லோரையும் கவர்ந்தாள். தொண்டையில் படாமலேயே கரையும் அப்சொல்யூட் வோட்கா, ·பிரென்ச் நாட்டில் மச்சாவதாரத்துக்கும் முற்பட்ட விண்டேஜ் திராட்சை ரச வைன், பாதாள லோகத்தில் இருந்து மஹாபலி கொடுத்தனுப்பிய தேங்காய் பியர், திரிசங்குவால் மேலும் கீழும் நன்கு ஷேக்கரில் கலந்தடிக்கப்பட்ட விஸ்வாமித்திரனின் புத்தம்புது படைப்புகளில் காக்டெயில்கள் என்று பானங்களைக் கொடுத்துக் கலக்கினாள்.
“இருபத்தொன்று” ஆட்டம் மெதுவாக அருள் வரத் தொடங்கியது. முதலில் ஆளுக்கு இரண்டு சீட்டுக்கள் போட்டு ஆட்டத்தைத் துவங்கினான் பிரும்மம். அனைவரின் சீட்டுக்களும் திறந்தே போடப்பட்டது.
ஒவ்வொரு சீட்டிலும் ஒவ்வொரு எண்கள் இருந்தது. எண் ஒன்றில் ஆரம்பித்து ஒன்பது வரை சீட்டுக்கள் இருந்தது. ஒன்பதைத் தொடர்ந்து வாயு, வருணன், அக்னி என்று என்று படச் சீட்டுக்கள் வந்தது. இந்த மூன்று சீட்டுப்படங்களும் எண் எதையும் தாங்கிக் கொண்டிராவிட்டாலும் பத்து என்னும் தொகையே அவற்றுக்கும் கொடுக்கப்பட்டது. கடைசியாக வந்த பெண் படம் கொண்ட பூமாதேவி என்னும் சீட்டுக்கு மட்டும் பதினொன்று என்று கணக்கு வைத்துக் கொண்டார்கள்.
ஆக மொத்தம் பதின்மூன்று சீட்டுக்கள். நெய்தல், முல்லை, மருதம், குறிஞ்சி என்று நான்கு ரகங்களில் சீட்டுக்கள் இருந்தன. ஒவ்வொரு ரகத்திலும் பதின்மூன்று சீட்டுக்கள். ஆக மொத்தம் நான்கு ரகங்களுக்கும் சேர்த்து ஐம்பத்தி இரண்டு சீட்டுக்கள் இருந்தன.
இந்த 52-இல் இருந்து ஆறு பேருக்கும் இரண்டு இரண்டு கார்டுகளை முதலில் போடுவான் சந்திரன். அவற்றின் கூட்டுத் தொகை இருபத்தொன்றாக இருந்தால், வந்தவனின் தொழுகையாளருக்கு ஒரு வரத்தை காமதேனு கொடுக்கும்.
போடப்பட்ட இரண்டு கார்டுகளின் மதிப்பு இருபத்தியொன்றுக்குக் குறைவாக வரும் பட்சத்தில் பிரும்மனிடம் இருந்து மேலும் சீட்டுக்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். போடப்படும் சீட்டுக்களின் மொத்தக் கூட்டுத் தொகை இருபத்தொன்றைத் தாண்டி விட்டால், அவனின் பக்தருக்கு மற்றவர்கள் துன்பத்தைக் கொடுப்பார்கள்.
ஆட்டம் சுவாரசியமாக நடைபெறுவதால் ஆதரவாளர்களுக்கு அருள்பாலிக்கவும் பக்தர்களுக்கு தரும் தடைக்கல்களை முடிப்பதற்கும் ஒன்பது சிப்பந்திகள் இருந்தார்கள். சூரியன் சந்திரனில் ஆரம்பித்து நெப்ட்யூன், ப்ளூடோ முடிய நாமகரணமிடப்பட்ட இந்த ஒன்பது கோள்மூட்டிகளும் பால்வீதியில் ஆரம்பித்து மரத்தடி முதல் மெக்கா வரை எழுத்தாளர்கள் தோற்றுவிக்கும் நவநாகரிக சூரியன்களில் ஆக்கங்களையும் கேடுகளையும் மாயாவித்து வந்தார்கள்.
யானை தன் தலையில் தானே மண் வாரிப் போட்டுக் கொள்வது போல் கஜேந்திரனை முதலை வாயில் இருந்து காப்பாற்றும் சமயத்திலும் சீட்டாட்டத்தில் மூழ்கியிருந்த காரணத்தால் நாராயணனைத்தான் முதன் முதலாக ‘சீந்தாத சீட்டாட்டக்காரர்கள் காப்பகம்’ என்னும் புனர்பூஜை மையத்தில் சேர்த்து விட்டார்கள். லஷ்மியின் பணத்தினாலும் ஆண்டாளின் அன்பினாலும் சீட்டாட்டத்தை மறந்து அனந்தசயனத்திற்குப் போனான் நாராயணன்.
தங்களின் அரியணைப் போராட்டத்திற்காக ஆயிரக்கணக்கில் மரங்களை வெட்டியதில் வீணாகப் போகவிருந்த மாங்கனிகளால் போட்ட காக்டெயிலை யார் குடிப்பது என்று போதைச் சண்டையில் முருகனும் கணேஷ¤ம் பிஸியாகிப் போனார்கள்.
ஆட்சியில் பங்கு கொடுத்தால்தான் சீட்டாட்டத்தைத் தொடருவேன் என்பதில்தான் ஐயப்பனுடன் இந்திரனுக்கு சண்டை ஆரம்பித்தது. ‘எது தன்னுடைய நிலப்பரப்பு? எங்கு அது முடிகிறது என்று அவனுக்குக் குழப்பம். அப்படியே பங்கு போட்டாலும் ஏற்கனவே வீரப்பன், பிரபாகரன் என்று பல பேர் அடாவடியாக நட்சத்திரவீதி போட்டு கிஸ்தி கட்டாமல் படுத்துகிறார்கள்.
புலிப்படையை கொண்டு வந்து தன்னிடம் இருக்கும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ வைடூரியக் குருவிகள், அரசசபையில் சாயாமல் இருக்கும் சிங், தொல-தொளா சிந்துனி, பாத்ரூம் கிருஷ்ணனிடம் ஆடை உருவப்பட்ட த்ரிஷா போன்ற கலா வித்தகர்கள், காமதேனு.காம், அமுதசுரபி.காம் போன்ற பெட்ரோல் முட்டையிடும் தளங்கள் போன்றவற்றை சுரண்டுவதற்காக முற்றுகையிடுகிறான் என்று இந்திரனுக்குக் கோபம்.
ஐயப்பனோ சிக்கியிருக்கும் யானைகளையும், இந்திரனின் பல மனைவிகளையும், அவன் உண்டாக்கும் மன நாட்டு வானவியல் குளறுபடிகளையும், ரம்பா, ஊர்வசி போன்றவர்களை சுதந்திரமாக அனைத்து தேவர்களும் அனுபவிக்கவுமே முற்றுகையிட்டதாக வாதாட சிவனேயென்று இருந்து விட்டார் சிவன்.
ஆட்டம் முடிந்து போனதால் பூமியில் சொல்லவொண்ணா அமைதி நிலவியது. ஜார்ஜ் புஷ்கள் பிறக்காமல் போனார்கள். அமெரிக்கர்களுக்கு ஞானம் கிட்டியது. இந்தியர்களுக்கு வேலைக்கேற்ற கூலி கிடைத்தது. ஜப்பானிலும் சுனாமிகள் நின்று போனது. கொலம்பியா நாட்டில் கஞ்சா பயிர்கள் அழிந்து போயின. அண்டை வீட்டுடன் சண்டைகள் சமாதானமாகியதால் சட்டப் படிப்பு ரத்து செய்யப்பட்டது. அரசியல்வாதிகள் காணாமல் போயினர். சுருக்கமாக வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்தது.
நிலைமை மோசமாவதைக் கண்ட பிரும்மம் உணர்த்தப்பட்ட மனிதவிருட்சம் அவசரநிலை பிரகடனம் செய்தது. தொலைக்காட்சியில் மக்கள் மூழ்கடிக்கப்பட்டதால் கடவுள்களை நிஜ நாடகமான ரியாலிடி ஷோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
“புத்தம்புதிய சீட்டாட்ட கிளப். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்!” என்னும் அறிவிப்புடன் ‘கோவில் டிவி’ அறிவிப்பை வெளியிட்டது.
கிடைத்த கடைசித் தகவல்களின்படி லஷ்மி, சரஸ்வதி, பார்வதி, துர்க்கை, வள்ளி, தேவயானை ஆகியோர் அஷ்டலஷ்மியை சிப்பந்திகளாக்கிக் கொண்டு விளையாட்டில் சூடு கிளப்புவதாக சரணமடைந்தவர்கள் சொன்னார்கள்.
(திண்ணை அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய கதை)
– ஏப்ரல் 21 2005