சுத்தம் சுகம் அப்புசாமி

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 13,422 
 
 

கிரீச் கிரீச் என்ற சப்தம். ராத்திரி மணி பன்னிரண்டு. சுவர்க் கோழிகள் அல்ல. அப்புசாமி மும்முரமாக அன்றைய கணக்கை எழுதிக் கொண்டிருந்தார்.

மாவிலைச் சருகுகள் : இருபத்தெட்டரை.

பால் கவர்கள் : மூன்று.

கசங்கிய பொட்டலக் காகிதம் : ஒன்பது.

சிகரெட் துண்டுகள் : ஆறு.

கார் கிளீன் பண்ணின துணிக் கந்தல் : இரண்டரை அடி.

லாட்டரி சீட்டுக் கிழிசல்கள் : ஐம்பத்தேழு.

கதவு லேசாகத் திறந்தது. சீதாப்பாட்டி மிகுந்த அக்கறையுடன்(கணவன் மீது 1%, கரெண்ட் பில் மீது 99%) தலையை நீட்டி.

“மை காட்! இட் இஸ் ட்வல்வ்! பர்னிங் த மிட் நைட் ஆயில்! இன்னுமா நீங்கள் தூங்க வில்லை? உடம்பு எதற்காகும்? சீக்கிரம் படுத்துக்கொள்ளுங்கள். காலையில் ஆறு மணிக்கெல்லாம நீல்கிரிஸில் கல்யாணி குட்டி வந்துவிடுவாள். நீங்கள் அப்போது தூங்கிக் கொண்டிருந்தால் இட் வோண்ட் லுக் நைஸ்”. என்ற சீதாப்பாட்டி. ஆட்டக்காரர் அலற அலற அவுட் கொடுக்கும் அம்பயர் மாதிரி விளக்கைப் படக்கென்று அணைத்துவிட்டுச் சென்றாள்.

மனைவி அந்தாண்டை சென்றதும் அப்புசாமி இன்னொரு படக் உபயோகித்து விளக்கை எரியவைத்துக் கொண்டு கணக்கை ஒருவழியாக எழுதி முடித்தார். ஜன்னலைத் திறந்து தெருவைப் பார்த்தார் ஒரு தரம் -புதிய குப்பை ஏதாவது தென்படுகிறதா என்று.

ஒன்றுமில்லை என்று தெரிந்தது. ‘சுத்தம் சுகம் சுந்தரம்!’ என்று மூன்று தரம் உச்சரித்துவிட்டுக் கண்களை மூடினார்.

அப்புசாமி குப்பைக் கணக்கு எழுத நேர்ந்தது எப்படி?

சில மாதங்களுக்கு முன் பா.மு.கழகத்தில் சில துறுதுறுப்பான புதுக் கிழவிகள், கழக நடவடிக்கைகளை விஸ்தரிக்க வேண்டும் என்ற கருத்தைச் சீதாப்பாட்டியின் முன் வைத்தனர்.

அவர்களுக்கு ஏதாவது வேலை தராவிட்டால் கழகத்தில் உட்கட்சிப் பூசல் ஏற்படக்கூடும் என்று எண்ணிய சீதாப்பாட்டி ‘சுத்தம் சுகம் சுந்தரம்’ என்ற புதுப் பிரிவைக் கழகத்தில் ஏற்படுத்தினாள்.

சம்பந்தப்பட்ட தொண்டுகிழவிகள். அதாவது தொண்டு மனப்பான்மையுள்ள கிழவிகள். ஒவ்வொரு தெருவுக்கும் சென்று, அந்த தெருவிலுள்ளவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘சுத்தம் சுகம் சுந்தரம்’ என்ற கமிட்டியை அமைப்பார்கள். சு.சு.சு வுக்கு ஒரு பிரசிடெண்ட், ஒரு வைஸ் பிரசிடெண்ட், ஒரு காரியதரிசி, ஒரு காஷியர் உண்டு.

தெருவாசிகள் அத்தனை பேரும் சு.சு.சு உறுப்பினர்கள்.

சீதாப்பாட்டி குடியிருந்த தெருவிலும் ஒரு சு.சு.சு. கமிட்டி தொடங்கியது. தெருவிலிருந்த பிரபல ஜவுளி வியாபாரி கெட்டி முத்துவின் பங்களாவில் பச்சைப் பசேல் புல் தரையில் குழுமிய அந்தக் கூட்டத்தில் அப்புசாமியும் பங்கேற்றார்.

ஒரு பணக்காரக் கிழவி தனது பிரச்னையைக் கமிட்டியின் முன் சமர்ப்பித்தாள்.

“ரோடிலே காற்று அடித்தால் போதும். ஏதாவது காகிதம் எங்கள் பங்களா கேட்டுக்குள் பறந்து வந்துவிடுகிறது!” என்றாள். தன் பிரச்னையை அந்த அம்மாள். நியாயமாக, அடக்கமாகத்தான் சொன்னாள்.

ஆனால், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த விதமும், அவளது சாயம் பூசிய கால் கட்டை விரல் நகமும் பயமுறுத்திய விதம் அப்புசாமிக்கு எரிச்சலூட்டியது.

“காற்றடித்தால் காதிதம் பறந்து வராமல் ஏரோப்ளேனா பறந்து வரும் உங்க பங்களா வாசலுக்கு?” என்று உரத்த குரலில் எதிர்க் கேள்விகேட்டு மேற்படி கிழவியையும் கமிட்டியையும் கலகலத்துப் போக வைத்து விட்டார். ஒவ்வொரு யோசனையின் போதும் அதிருப்தி அரசியல்வாதி போல மேஜையைத் தட்டுவதும், விசில் அடிப்பதுமாக தூள் கிளப்பிக்கொண்டிருந்தார்.

அப்புசாமியின் புரட்சிக் குரல் அடிக்கடி கலாட்டா செய்யவும், கமிட்டிக் கிழவிகள் அரசியல் தந்திரத்தைப் பிரயோகித்து அப்புசாமியையே அந்தத் தெருவில் சு.சு.சு. கமிட்டிக்குத் தலைவராக்கி ஏராளமான பொறுப்பையும் உடனடியாக ஒப்படைத்துவிட்டனர்.

சுத்தம் சுகம் சுந்தரம்திட்டதின் முக்கிய அம்சம் :

ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளைத் தினமும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைக்கவேண்டும். சு.சு.சு. கமிட்டியின் ஸ்பெஷல் சைக்கிள் ரிக்ஷா(மோட்டாரில் இயங்குவது) காலை, பகல், மாலை என்று மூன்று வேளைகளிலும் வந்து ஓரொரு வீட்டு வாசலிலும் நின்று பாம் பாம் என்றோ பீங்ங் பீங்ங் என்றோ கிணிங் கிணிங் என்றோ ஒருவகை ஹார்ன் ஒலி எழுப்பும். உடனே வீட்டுக்காரர், தன் வீட்டு பிளாஸ்டிக் பையை வண்டியில் போட்டுவிட வேண்டும், கையோடு, புதிய பைகளை ஓரொரு வீட்டுக்கும் மலிவு விலையில் கமிட்டி சப்ளை செய்யும். மாதா மாதம் இந்தச் செலவுகளுக்காக ஓரொரு வீடும் இருபது ரூபாய் தரவேண்டும்.

கொதித்து வரும் பாலில் தண்ணி தெளித்தார் போல் அப்புசாமி தனக்குத் தலைமைப் பதவி கிடைத்ததும் ஸ்தலத்திலேயே நல்ல பிள்ளையாகிவிட்டார்.

“ஒரு குப்பை விழுகிறது என்றால், அது ஏன் விழுகிறது, எப்படி விழுகிறது, யாரால் விழுகிறது என்பதைக் கண்டுபிடித்துக் களைந்தாலன்றி குப்பைகளுக்கு நீங்கள் குட் பை வைக்கமுடியாது!”
என்று அவர் சொன்னதும். கமிட்டி செட்டப் செய்யவந்த கிழவிக் கூட்டம் பிரமித்துவிட்டது. ‘ஸ்ட·ப் உள்ள ஆசாமிதான். ஒருத்தரைப் பொறுப்பில் உட்கார வைத்தால் தானே அவர் திறமை வெளிப்படும்..’ என்று அவர் காதுபடப் பேசிக் கொண்டதன் விளைவாக அப்புசாமியின் காதுகளில் புகழுரைகள் விழுந்த பகுதிகள் ஜில்லிட்டு ஐஸ் கட்டிகளாக மாறி ராத்திரி வரைக்கும்கூட உருகாமலிருந்தன.

‘சுத்தம் சுகம் சுந்தரம்’ அப்புசாமியின் உயிர்மூச்சான கதை இதுவே.

காலை ஆறுமணி. ஆட்டோ ஒன்று வாசலில் படபடப்பு அடங்கி நின்றது.

“ஹாய்! ஆன்ட்டி! ஹாய்! அங்க்கிள்!”. என்ற குரல் பரட்டைத் தலையும், பரபரப்புமாய், உடம்பெல்லாம் ஏக சுறுசுறுப்புடன், டக்கராக ஒரு ஜீன்ஸ¤ம், மேல் சட்டையும். கையில் ஏராளமான பெட்டிகள், ·பைல்கள், லக்கேஜுகளுடன் ஓர் உருவம் வந்து இறங்கியது.

“நம்ம கல்யாணி! என்ன முழிக்கிறீர்கள்? டோன்ட் யூ ரெகக்னைஸ் ஹர்? கல்லுக்குட்டி என் ஒன்று விட்ட மருமகள்” என்று அப்புசாமிக்கு ஞாபகப்படுத்தினாள் சீதாப்பாட்டி.

“ஆன்ட்டி! கால் காலா! நோ கல்லுகுட்டி, புல்லுகுட்டி!” என்றவள் கையிலிருந்த காலாவதியான ரயில்வே டிக்கெட்டை, “விஷ்ஷ்!” என்று ஒரு சீட்டி அடித்தவாறு பறக்கவிட்டாள்.

அப்புசாமி, “ஆ! கீழே போடாதே!” என்று அலறியவாறு கெட்டிக்கார கிரிக்கெட் வீரர் பவுண்டரி பந்தைக் காட்ச் பிடிப்பதுபோல ஓடி விழுந்து, அந்த டிக்கெட்டை அது கீழே விழும்முன் பிடித்து, வாஷ்பேஸின் அருகே தயாராயிருந்த பிளாஸ்டிக் பையில் போட்டுவிட்டார்.

“அங்கிள்! பிரமாதமாக காட்ச் பண்றீங்களே!” என்று விருந்தாளிப் பெண் அப்புசாமியைப் புகழ்ந்தவாறு கையிலிருந்த நீல சாக்லேட்டை உரித்துக் காகிதத்தைக் கீழே போட்டாள்.

அப்புசாமி பாய்ந்து காகிதத்தைப் பொறுக்கி எடுத்து பிளாஸ்டிக் பையில் சேர்ப்பித்துவிட்டு மூச்சிரைக்க, “இந்தாம்மா கல்லுக்குட்டி! இப்படியெல்லாம் இஷ்டத்துக்குக் குப்பையைக் கீழே போடக்கூடாது. தெரிஞ்சுக்கணும் நீ” என்றார்.

சீதாப்பாட்டி அவளுக்கு விளக்கினாள் புன்னகையுடன். “உங்க அங்கிள்தான் இந்தத் தெருவிலே குப்பைத்தொட்டி தலைவர். ரீஸன்ட்டா எலக்ட் ஆனார். அன் அப்போஸ்ட். ஒரு சின்ன குப்பை நம்ம வீட்டிலோ தெருவிலோ விழந்தால் துடித்துப்போய் விடுகிறார். சுத்தம் சுகம் சுந்தரம் கமிட்டியின் பிரசிடெண்ட் ஆச்சே…”

“கன்கிராஜுலேஷன்ஸ் அங்க்கிள்!” என்று காலா அப்புசாமியின் கையைக் குலுக்கிவிட்டு, “ஆன்ட்டி” தலைக்கு மேலே எனக்கு இன்னைக்கு வேலை இருக்கு! வேர் கான் ஐ ஹாவ் மை ஹேர் கட்?” என்றவள், கையில் அணைத்திருந்த கற்றை கற்றையான காகிதங்களையும் ·பைல்களையும் மேஜை மீது தபதபவென்று போட்டாள்.

அப்புசாமிக்குத் தன்மீது அவற்றைப் போடுவது போலிருந்தது. காலா தலைமுடி வெட்டிக்கொள்ளச் சலூனுக்குச் சென்றதும், “இந்தப் பரட்டை பீடை எங்கிருந்து வந்து சேர்ந்தது? எப்பப் பார்த்தாலும் சாக்லேட்டை உரித்து உரித்துக் கீழே போட்டுக்கொண்டு?.. தெருவை எட்டிப் பார்! சூயிங்கம் காகிதத்தை வரிசையாகப் போட்டுக்கொண்டு போயிருக்கிறாள்! இப்ப நான் போய்ப் பொறுக்கணும்” என்று படபடத்தார். “மறுபடி மறுபடி அவள் சாக்லேட் காகிதம் கீழே போட்டாள்னா கல்தாதான்.”

சீதாப்பாட்டி, “காம் டவுன் சார்… காம் டவுன்..” என்று அப்புசாமியை அமைதிப்படுத்திவிட்டு விவரித்தாள். “காலா நீங்க நினைக்கிற மாதிரி பழைய கல்யாணிக்குட்டி இல்லே.. ஷி இஸ் எ ஜீனியஸ். ஸிஸ்டம்ஸ் ஸா·ப்ட் வேர்லே ஒரு பிரமாதமான ப்ராஜக்ட் பண்ணியிருக்கிறாள். இன் கோ ஆர்டினேஷன் வித் எ விசிட்டிங் புரோபஸர் ·ப்ரம் யு எஸ். ஸிஸ்டம்ஸ் ஸா·ப்ட்வேர்னா உங்களுக்குப் புரிகிறதோ?”

“அவ எதை வேணும்னாலும் பண்ணட்டும். ஆனால் கண்ட இடத்திலே அவள் இப்படிக் குப்பை மாதிரி எல்லாவற்றையும் இறைத்து வைத்தால் நான் பொல்லாதவனாயிடுவேன். என்னை என்ன குப்பை பொறுக்கின்னு நினைச்சுட்டாளா அவள்?”

“டேக் இட் ஈஸி! டோன்ட் பி ஸில்லி!” அமைதிப்படுத்தினாள் சீதாப்பாட்டி. “பெரிய ஜீனியஸ்களெல்லாம் அப்படித்தான் எதையும் ஒழுங்காக ஓர் இடத்திலே வைக்க மாட்டடார்கள்.”

அப்புசாமி செருமினார். “அப்படீன்னா, ஒழுங்கா வைக்கிறவங்களெல்லாம் முட்டாள் கழுதைங்களா… இல்லே, கேட்கிறேன். சுத்தம் சுகம் சுந்தரம் கமிட்டியோட பிரசிடெண்ட் என்கிற முறையில் கேட்கிறேன்… பார்த்தியா! இந்தக் காகிதங்களை அப்படியே கடாசிட்டுப் போய்விட்டாள். காற்றிலே இப்பவே பறக்கிறேன் என்கிறது. எனக்கு வர்ற கோபத்திலே இத்தனையையும் இப்பவே பிளாஸ்டிக் பையில் அடைச்சு வண்டியிலே போட்டு குப்பை மேட்டுக்கு அனுப்பத் தோணுது.”

“மை குட்னஸ்!” என்று அப்புசாமியின் கையிலிருந்து காகிதங்களையும் ·பைலையும் வாங்கி மேஜைமீது வைத்தாள்.

“பதற்றப்படாதீர்கள். அதெல்லாம் அவளோட இம்பார்ட்டன்ட் பேப்பர்ஸ். ஐ ஷல் அரேஞ்ச். நான் எல்லாவற்றையும் சுத்தமா வைச்சடறேன்.”

சீதாப்பாட்டி ·ப்ரிஜ்ஜைத் திறந்து குளுமையாக நுரை ததும்பும் பழரசம் ஒரு டம்ளர் தந்தாள்.

அப்புசாமி மடக் மடக்கென்று குடித்துவிட்டு, உதட்டில் கரை கட்டிய ஜூஸின் நுரையைக்கூடத் துடைத்துக்கொள்ள நேரமின்றி. “இருபத்திரண்டாம் நம்பர் வீட்டிலே ஏதோ கல்யாண நிச்சயதார்த்தமாம் அவுங்க வீட்டிலே இன்னைக்கு விழற ஸ்பெஷல் குப்பைகளுக்கு இன்னும் இரண்டு பிளாஸ்டிக் பை கொண்டு போய்த் தரணும் வேலை சரியாயிருக்கு…” என்று கடமை உணர்ச்சியுடன் தெருக் கண்காணிப்புக்குக் கிளம்பினார்.

மாலை மூன்று மணி. அப்புசாமி களைத்துக் கண் பூத்துக் காய்த்துப் பழுத்து வீடு திரும்பியபோது வீடு ஒரே ரகளையாயிருந்தது.

பீமாராவ், ரசகுண்டு எல்லாரும் அப்புசாமியைக் கண்டதும், பரபரப்புடன் ஓடி வந்தனர்.

“தாத்தா! தாத்தா! எங்கே தொலைஞ்சிட்டீங்க? குடிமுழுகிப் போயாச்சு. பாட்டி நேரே என் வீட்டுக்குக் கார் போட்டுக்கிட்டு வந்து… உங்களை எங்கெல்லாம் தேடறது?”

அப்புசாமி முந்தின நாள் இரவு கண் விழிப்பின் காரணமாக. அடுத்த தெருவிலிருந்து பூங்காவில் ஒரு மரத்து நிழலில் மறைவாகப் படுத்தவர்… ஒரே அடியாகத் தூங்கிவிட்டார். எழுந்து இமைகளைப் பிரித்துக்கொண்டு வீட்டுக்கு வர ஆறு மணி நேரமாகிவிட்டது! வந்தால் இங்கே பூகம்பம், எரிமலை.

“என்னை ஏண்டா ரசம், கிழவி தேடினாள்?” என்று குழப்பத்துடன் உள்ளே நுழைந்ததும் அவர் மேல் சில புத்தகங்கள், பைல்கள் வந்து தாக்கின.

கோயமுத்தூர் ஸா·ப்ட்வேர் ஜீனியஸ் கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள். கைக்கு கிடைத்ததையெல்லாம் தூக்கி அப்புசாமி மேல் அடித்தாள். “யூ! ப்ளடி ரெச்! நீ ஓர் அங்க்கிளா! கோல்ட் ப்ளடட் மர்டரர்! வேர் த ஹெல் என் ·ப்ளாப்பீஸ்? அதெல்லாம் ஸீக்கரெட் ப்ராஜெக்ட். என் ப்ரோக்ராமின் பிரிண்ட் அவுட் கற்றை கற்றையாக இருந்ததே… எல்லாத்தையும் பையில் போட்டு வைத்திருந்தேன். குப்பை மேட்டுக்கு அனுப்பிவிட்டீர்களா என் மேலிருந்த கோபத்தில். கோ டு ஹெல்! எனக்கு அந்தப் பைல் உடனடியாக வந்தாக வேண்டும். ஐ வில் கில் யூ…”

அப்புசாமி குலை நடுங்கிப்போனார்.

இத்தனை கலாட்டாவும் நடந்து கொண்டிருந்த போது சீதாப்பாட்டி அமைதியாகச் சமையலறையில் காப்பி தயாரித்துக் கொண்டிருந்தாள். காப்பியுடன் அமைதியாக வந்தவள்.

“ப்ளீஸ் ·பர்கிவ் ஹெர்… ஷி இஸ் இன் எ ·ப்ரென்ஸி. ஒரேடியாக அப்ஸெட் ஆகி விட்டிருக்கிறாள் நாளைக்குக் காலையிலே பத்து மணிக்கு அவள் பி.ஸி.எஸ் கன்ஸல்டிங் சர்வீஸஸ¤க்குப் போயாகணும். ராத்திரி பூரா ப்ரிபேர் பண்ணணும்னு சொல்லிக்கொண்டு வந்து பார்த்தால் அவள் பையையே காணோம். நீங்க குப்பைத் தொட்டிக்கு அனுப்பிட்டீங்க.”

“அடிப்பாவி!” என்றார் அப்புசாமி. “சுண்ணாம்பு இல்லாமலே வாய் வெந்து போயிடும்டி. நான் ஏன் அந்தப் பீடையோடதை எடுத்துக் குப்பை மேட்டுக்கு அனுப்பறேன்?” என்று அவர் சொல்லி வாய் மூடுமுன்.

“யூ! யூ! யூ! ஒன்லி டிட் இட்!” என்றவாறு காலா அவர் மீது நரிப் பாய்ச்சல் பாய சீதாப்பாட்டி பதறி இருவரையும் பீமாராவின் உதவியோடு பிரித்துவிட்டாள்.

ஜல்லிக்கட்டுக் காளைக்கு இரைப்பதுபோல காலாவுக்கு மூச்சு இரைத்தது. சற்று நேரத்தில் தொப்பென்று உட்கார்ந்து விம்மி அழத் தொடங்கிவிட்டாள். “மை ப்ராஜக்ட்! மை ·ப்யூச்சர் எல்லாம் போச்சு. எவ்ரிதிங் கான்”

சீதாப்பாட்டி மருமாளைத் தைரியமாகத் தொட்டுச் சமாதானப்படுத்தினாள். “காலா… ப்ளீஸ்… லீவ் இட் டு மி. உன் ப்ராஜக்ட், ·ப்ளாப்பி எவ்ரிதிங்.. நான் கொண்டு வந்து சேர்க்கச்சொல்கிறேன். தூக்கக் கலக்கத்திலே அவர், நம்ம வீட்டு கார்ப்பேஜ் பைக்குப் பதிலாக உன்னோட ப்ராஜக்ட் பையை வண்டியில் தூக்கிப் போட்டு இருக்கலாம். சான்ஸஸ் ஆர் தேர். நான் அவரை இப்பவே குப்பை மேட்டுக்குப் போய் நன்றாகத் தேடிப் பார்க்கச் சொல்கிறேன்” என்றவள் அப்புசாமியிடம், “ப்ளீஸ்! ஹாவ் ஸம் பிட்டி! புவர் காலா, ஹெல்ப் ஹெர் கோ டு குப்பை மேடு!” என்றாள்.

“அடியே கிராதகி!” என்று கத்தினார் அப்புசாமி. “நான் காலையிலே பத்து மணிக்கு வெளியே போனவன் பார்க்கிலே பொணம் மாதிரி படுத்துத் தூங்கிவிட்டு இப்பத் தாண்டி வர்றேன்… நடந்தது எதுவுமே எனக்குத் தெரியாது..”

சீதாப்பாட்டி அமைதியாக, “அங்கேதான் யு ஆர் மிஸ்டேக்கன். நீங்க உங்களை மறந்து தூங்கினதாகச் சொல்றீங்க இல்லையா? அது ரொம்ப கரெக்ட்… ஏன்னா மத்தியானம் ஒரு மணிக்கு நீங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போனீங்க. போகிறப்போ வாஷ்பேஸின் கிட்டேயிருந்த பையைத் தூக்கி அப்போ வந்த குப்பை வண்டியிலே போட்டீங்க. உங்களை அறியாமல் தூக்கத்திலேயே இவ்வளவும் நடந்திருக்கிறது… யு ஹாவ் டேக்கன் யுவர் மீல். அதுகூடத் தெரியவில்லை?”

“ஆமாண்டி!” பல்லை நறநறத்தார் அப்புசாமி. “என்னை அறியாமலேயே நான் செத்துட்டேன்னுகூடச் சொல்லுவே.”

அப்புசாமி பேசி முடிப்பதற்குள் புத்தகம் ஒன்று பறந்து வந்து அவரை இரண்டாம் தடவை தாக்கியது.

“ப்ளீஸ்! போய்த்தான் தேடிவிட்டு வந்துவிடுங்களேன். ட்ரை டு ஹெல்ப் ஹெர். அவளுடைய எதிர்காலமே உங்கள் கையில்தான்.”

சீதாப்பாட்டி கெஞ்சினாள்.

காலா தொடர்ந்து போட்ட கூச்சலில் அடுத்த அரையாவது மணியில் அப்புசாமி வள்ளுவர் கோட்டம் எதிரேயிருக்கும் பரந்த பெரிய புராதானமான குப்பை மேட்டில் முழங்கால் அளவுக்கு உள்ளே போய்த் தேடத் தொடங்கிவிட்டார்.

வாலாயமாக அங்கு மேயும் பன்றிகள் நட்புறவோடு அப்புசாமியின் அருகில் வந்து முகர்ந்து பார்த்தன.

தகரம், இரும்பு, எலும்பு என்று ரக வாரியாகக் குப்பைமேட்டில் மாமூலாகப் பொறுக்கிக்கொண்டிருந்த சில பெண்மணிகள், புது ஆள் ஒருத்தன் தங்கள் தொழிலில் போட்டிக்கு வந்ததைக் கண்டித்து. “நைனா! எங்க பொழைப்பிலே மண்ணைப் போடாதே! போயிடு இது எங்க ஏரியா!” என்று எச்சரித்து, அச்சாரமாக சில பழைய சட்டிகளை எடுத்து அப்புசாமியை நோக்கி அன்பளிப்பாக அனுப்பிவைத்தனர்.

அப்புசாமி அவசரம் அவசரமாக அவர்களைக் கும்பிட்டு, “தாய்க்குலமே! கொஞ்சம் பொறுத்துக்குங்க… ஒரு பையிலே ஒரு புஸ்தகம் காகிதமெல்லாம் இருந்தது. மிஸ்டேக்கா வந்துட்டுதாம். அதுமட்டும் இருக்குதான்னு தேடிட்டு ஓடிடறேன்” என்று கொஞ்சி விட்டு, தேடிக்களைத்து, மேலெல்லாம் சேறும் சகதியும் குப்பையுமாக காலிலும், கையிலும் கண்ணாடி, தகரங்கள் குத்தி அடையாளச் சின்னங்கள் இட்ட கோலத்தில் வெறும் கையுடன் போகலாகாது என்று கைக்கு கிடைத்த கன்னா பின்னாக் காகிதங்கள் சிலவற்றுடன் பயந்து நடுங்கிக் கொணடு இரவு ஏழு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தபோது பிரியமான ஒரு ஜோடி மெல்லிய கரங்கள், அவர் கையைப் பற்றின.

“அங்க்கிள்! அங்க்கிள்! ஐயம் டெரிப்ளி ஸாரி அங்க்கிள்! என்னை மன்னிச்சிடுங்க! என்னுடைய ப்ராஜக்ட் பை அல்மைரா பின்னாடியேதான் இருந்தது. நீங்க மத்தியானம் குப்பை வண்டியில் போட்டது அசல் குப்பை போட்ட பைதான். ஆனால், என் ப்ராஜக்ட் பை எப்படி அல்மைரா பின்னால் போயிற்று என்கிறதுதான் எனக்குப் புரியவில்லை” என்று தேன் குரலில் காலா கூறி அப்புசாமி அங்க்கிளிடம் மன்னிப்புக் கோரினாள்.

“எனக்கும் அதுதான் புரியவில்லை” என்றாள் சீதாப்பாட்டி நமுட்டுச் சிரிப்புடன்.

“அடியே! கியவி! உன் வேலையாகத்தாண்டி இருக்கும். நான் சு.சு.சு. தலைவரானதிலே உனக்கு பொறாமை.. பையை ஒளிச்சு வெச்சு என்னை இப்படி இந்தக் காலா மூலம் சித்தரவதை பண்ணிட்டே…” அப்புசாமி கூச்சலிட்டார்.

“ப்ளீஸ்! உள்ளே வந்து குளித்துவிட்டு அப்புறம் கத்துங்கள்! யு ஆர் ஸ்டிங்கிங்” என்றாள் சீதாப்பாட்டி.

“தலை முழுகிடறேண்டி! சு.சு.சு. தலைவர் பதவிக்கும் சேர்த்து முழுகிடறேண்டி! திருப்திதானே?” என்றவாறு அப்புசாமி குப்பைசாமியாகக் குளியலறைக்குள் நுழைந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *