பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா, இல்லையா என்று சிவனுக்கும் நக்கீரருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட ‘இல்லை‘ என்ற நக்கீரர் கூற்றை ஏற்க மறுத்த சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறக்க , ‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்கிறார் நக்கீரர்.
நேத்து திருவிளையாடல் பாத்த எஃபெக்ட். இல்லைன்னா இதெல்லாம் படிச்சு நியாபகம் வச்சுக்கிற வயசெல்லாம் தாண்டியாச்சே.
இப்போ எதுக்கு இதெல்லாம்…? எங்கள் வீட்டு சமையலறைக்கு இயற்கையான ஒரு மணம் இருக்குன்னு என்னோட தீர்மானமான முடிவு…
என்ன மணம்னு கேட்கத் தோணுமே…
பை டிஃபால்ட்… ஒரு தீஞ்ச , அடிப்பிடிச்ச வாசன…அது எப்படித்தான் ஒரு நாளப்போல அந்த வாசன வருமோ..?
“அடியும்பிடிக்கல ..முடியும்பிடிக்கல.. உங்க மூக்குலதான் ஏதோ கோளாறு…”
மஞ்சுவின் ரெடிமேட் பதில்…
‘எனக்கு கண் சரியா தெரியல , காது கேக்கல , மூக்கு சரியில்ல…’
ஒரு E.N.T..யப் பாத்தே ஆகணும்… மஞ்சுவோட டையக்னோஸிஸ்……
“மஞ்சு…எவ்வளவு நேரம்தான் கிச்சன்லயே இருப்ப…? நாம இரண்டு பேர் தானே…எதையோ சமச்சோம்னு பேர் பண்ணிட்டு வெளில வா…!”
எனக்கு சமையலறைக்குள் போவதற்கு பயமாகத்தான் இருக்கும்..
மஞ்சுவின் தங்கை சஞ்சுவின் கணவன் நரேன் எனக்கு ஜஸ்ட் ஆப்போஸிட்…பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ‘என்ன சாம்பார்? என்ன கறி..?”
“இன்னைக்கு எண்ண கத்திரிக்காயா…? கொஞ்சம் கிண்ணத்துல தரியா…”
“இன்னும் கொஞ்சம் வதக்கணும்…கறிப்பொடி போறாது…”
சமையல் முடிவதற்குள் பாதி அவன் வயிற்றுக்குள்…நூறு கமென்ட்ஸ்…
“இருந்தா நரேன் மாதிரி இருக்கணும்…சமைக்கவே ஆசையா இருக்கும்…உங்கள மாதிரி ஒரு மைல் தள்ளி உக்காந்திட்டே வாசன பிடிச்சு குத்தம் மட்டும் சொன்னா சமைக்கிற ஆசையே போய்டும்…”
“சமைக்கிற ஆசையா..? அது இருக்கா..? எனக்கு தெரிஞ்சு மஞ்சு ஏதோ உயிர் வாழறதுக்காக மட்டுமே சமைக்கிறதாத் தான் தோணும்…
சஞ்சுவைக் கேட்டால் தெரியும்…சமையல் தெரிஞ்ச கணவனை சமாளிப்பது எவ்வளவு சங்கடம் என்று…
மஞ்சு கணக்கில் புலி..நானும் படிப்பில் கெட்டிக்காரன் தான்.. அவளைப் பெண் பார்க்கப்போனபோது அவள் சோடாபுட்டி கண்ணாடிவழியாக அவனைப் பார்த்து ஒரு அளவான புன்னகையை உதிர்த்தபோதே அவளை ரொம்ப பிடித்து விட்டது… இவள் நிச்சயம் புத்திசாலியாக இருப்பாள்… தன்னுடைய குதர்க்க புத்திக்கு இவளால்தான் ஈடுகொடுக்க முடியும் என்று தீர்மானித்து விட்டான்…
ஆனால் போகப்போக புரிந்து விட்டது.. மஞ்சுவின் ஐ.க்யூ…அவனுக்கு எட்டாத உயரம் என்று..அதற்காக அவனை ஒருநாளும் மட்டம் தட்டி பேசியதே இல்லை… ஆனால் நடுநடுவில் அவன் காலை வாரி விடத் தயங்க மாட்டாள்…
இரண்டு பேருமே அரசாங்க உத்தியோகம்..இப்போது கை நிறைய பென்ஷன்… குழந்தைகள் எல்லா வீட்டையும் போல வெளிநாடுகளில் வாசம்.
மீண்டும் தனிக்குடித்தனம்.. ஆனால் மஞ்சுவுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது… அநாவசிய பேச்சு இருக்காது..எல்லாமே அர்த்தத்துடன் தான்…
“மஞ்சு! பேப்பர் வந்துதா..?”
“பேப்பரா..? நீங்கதான் வாசல்லியே குறுக்கும் நெடுக்குமாக நடந்துட்டு இருக்கீங்களே…?? உங்களைத் தாண்டி , உங்களுக்குத்தெரியாம ஒரு ஈ, காக்கா உள்ள வர முடியுமா…?”
“சரி..காப்பி கொண்டு வரேன்.. அதுவரைக்கும் குடிச்சிட்டு இருங்க….”
“நோ! நோ! பேப்பர் வரட்டுமே…”
மஞ்சுவுக்கு இது மட்டும்தான் இன்னைக்கு வரைக்கும் புரியாத புதிர்… எத்தனை தடவ போட்டாலும் சரியா வராத ‘பெர்ம்யூட்டேஷன். காம்பினேஷன்…’
நியுஸ் பேப்பர்…காப்பி… டாய்லெட்…
முக்கோணக் காதல் மாதிரி…
எந்த ஆர்டர்லயும் பொருந்தி வரமாட்டேங்குதே..
“கொடி அசைந்ததும் காற்று வந்ததா…??காற்றுவந்ததால் கொடி அசைந்ததா…?”
பேப்பர் படிச்சாத்தான் காப்பி இறங்குமா?
காப்பி இருந்தால்தான் பேப்பர் படிக்க முடியமா…?
இல்ல..இந்த இரண்டும் இருந்தால்தான் டாய்லெட் போக முடியுமா…?
பேப்பர எடுத்துட்டு பாத்ரூம் போறவங்கள பாத்திருக்கோம்…காப்பி குடிச்சுகிட்டே பேப்பர் படிக்கிறவங்களையும் பாத்திருக்கோம்…
நல்லவேளை! இந்த மூணும் சேந்து இருக்கணும்னு கண்டிஷன் போடாதவரை. எப்படியோ , ஒழிந்து போகட்டும்…!
ஒருவழியாக பேப்பரும் வந்தது..
“மஞ்சு..இப்போ காப்பி கொண்டு வா…மஞ்சு..ஒரு நிமிஷம்..நீயும் ஒரு டம்ளர் காப்பி கலந்து எடுத்துட்டு வாயேன்…இரண்டு பேரும் சேர்ந்து உக்காந்து காப்பி குடிச்சிட்டு பேப்பர் படிச்சா நல்லா இருக்குமே…”
“வெரி குட் ஐடியா…! இதோ அஞ்சு நிமிஷத்துல வரேன்…”
“இந்தா முதல்ல சப்ளிமென்ட்ட படி.. நான் ஹெட்லைன்ஸ் பாத்துட்டு தரேன்…”
மஞ்சுவுக்கும் இது பிடித்திருந்தது..
படித்து முடிக்கும்போது மணி எட்டாகிவிட்டது..
“ரொம்ப ஜாலியா இருகில்ல…?”
“ஓக்கே…பசி வயத்த கிள்ளுது… இன்னைக்கு என்ன ப்ரேக்ஃபாஸ்ட்…?”
“தெரியலியே.. வாங்க கிச்சன்ல போய் பாப்போமா…?”
“தெரியலயா. ? கிச்சனுக்கு போய்ப்பார்த்தா…? யாரு இருக்கா…?”
“எனக்கும் தெரியாது.. நான் உங்களோட உக்காந்து பேப்பர் படிச்சிட்டிருந்தேனே…”
அடிப்பாவி… எப்படி என்னை பொறியில் சிக்க வைத்து விட்டாள்…?
“இப்போ டிபனுக்கு என்ன வழி..?”
“வழி இல்லாம என்ன…?
ஒண்ணு இனிமே என்ன பேப்பர் படிக்க கூப்பிடாதிங்க..
இரண்டு… வெளியில இருந்து டிபன் வர வழச்சிடுங்க…
மூணு… நான் பேப்பர் படிக்கிறேன்…நீங்க டிபன் பண்ணுங்க..
நாலு.. இரண்டு பேரும் சீக்கிரமே எழுந்து ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணி வச்சிட்டு சேந்து உக்காந்து காப்பி குடிச்சிட்டு பேப்பர் படிக்கலாம்… இல்ல பேப்பர் படிச்சிட்டே காப்பி குடிக்கலாம்…
யோசிச்சு வைங்க..!”
அஞ்சாவது ஒண்ண மறந்துட்டா போல இருக்கு…
ஸ்கிப் ப்ரேக்ஃபாஸ்ட்…
இதுதான் மஞ்சு..!
மஞ்சுவின் தங்கை சஞ்சுவும் , நரேனும் எங்களுடன் வந்து பத்து நாள் இருக்கலாமா என்று ஃபோன் பண்ணி கேட்டாளாம்.
“கண்டிப்பா வரட்டும்… நீதான் ‘நரேன் மாதிரி ஒருத்தன் கிடைக்க கொடுத்து வைக்கணும்னு அடிக்கடி சொல்லுவியே..உடனே வரச்சொல்ல வேண்டியதுதானே…”
சஞ்சுவின் பையனுக்கு திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆனபின் அவர்களும் தனிக்குடித்தனம் தான்…
சஞ்சு மஞ்சு மாதிரி ஒரு அறிவு ஜீவி கிடையாது…மஞ்சுவுக்கு இடது பக்க மூளையென்றால் சஞ்சுவுக்கு வலது பக்க மூளதான் நன்றாக வேலை செய்யும்.
சமையல் , தையல், கைவேலை என்று எல்லாவற்றிலும் பின்னி எடுத்து விடுவாள்.. நரேனும் அவளுக்கு சரியான ஜோடி தான்… அவர்கள் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும்…
“அக்கா.. நான் வந்திட்டேனில்ல..இனிமே நீ கிச்சன் பக்கமே வராத… நரேனும் நானுமா சமச்சிடுவோம்….”
“இரண்டு நாள் போகட்டும் சஞ்சு…நீயும் நரேனும் அவரோட உக்காந்து பேப்பர் படிச்சிட்டே, காப்பி குடிச்சிட்டு ரிலாக்ஸாக இருங்க…அவருக்குத்தான் கம்பெனி இல்லையேன்னு ஏக்கமா இருக்கு…”
“அக்கா…நான் பேப்பரப் பாத்தே வருஷக்கணக்காகுது…எனக்கு அதெல்லாம் சரிப்படாது….வா..நானும் நீயும் சேந்தே சமைக்கலாம்…”
கொஞ்சம் கொஞ்சமாக சமையலறையிலிருந்து வரும் மணத்தில வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சது…
முதல்ல அடிப்பிடிச்ச வாசனையக் காணம்…வத்தக் குழம்பு மணமணத்தது.. என் மூக்குதான் சரியாகிவிட்டதா? இல்லை உண்மையாகவே புதுப் புது ஐட்டெங்கள் தயாராகிறதா..? ஒண்ணுமே புரியல…
காலையில நானும் நரேனும்தான் காப்பி குடிச்சிட்டே பேப்பர் படிக்கிறோம்..
ஒரு மூணு நாளைக்கப்புறம் நரேன் மெள்ள ஆரம்பிச்சான்…
“மனோ ! இந்த காப்பியையா இவ்வளவு வருஷமா வாய மூடிட்டு குடிச்சிட்டு இருக்கீங்க…?”
எனக்கு ஒரு வினாடி ரொம்பவே அவமானமா போய்ட்டது..
இவன் என்ன சொல்ல வரான்…?
“வாய மூடிட்டு எப்படி குடிக்கிறது ?? தொறந்திட்டுதான்…”
எனக்கே கொஞ்சம் அசட்டுத்தனமாய் தோணியது…
“இது ஃபில்டர் காப்பி இல்லியே…”
“நாங்க எப்பவுமே இன்ஸ்டன்ட் தான்…”
“எனக்கு தொண்டையில எறங்க மாட்டேங்குது.. சாயங்காலம் போய் நல்ல கும்பகோணம் காப்பி பவுடர் வாங்கிட்டு வரேன்…சஞ்சு காலைல எழுந்து டிக்காஷன் போட்டுடுவா…அதக் குடிச்சு பாரு…”
இரண்டு நாள்தான் சஞ்சு போட்டாள்.. அப்புறம் அது மஞ்சு தலையில் தான் இறங்கியது…
அதுதான் பிள்ளையார் சுழி….அதிலிருந்து வீட்டிலேயே சாம்பார் பொடி, ரசப்பொடி , புளிக்காச்சல் , பொடிகளில் ஆரம்பித்து வத்தல் , வடகம் வரை போய்விட்டது…
அக்கா தங்கைகளிடம் கொஞ்சம் கொஞ்சமாக அன்னியோன்யம் குறையத் தொடங்கினமாதிரி ஒரு தோணல்…
எனக்கு மஞ்சுவைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது… அவளுக்கு எப்போதுமே அடுப்படியே கதியாய் இருப்பது பிடிக்காது. புத்தகம் படிப்பது , எழுதுவது , வாக்கிங் போவது என்று ஏதாவது செய்து கொண்டிருப்பாள்..
இப்போதெல்லாம் நரேனும் அடிக்கடி சமையலறைக்குள் புகுந்து விடுகிறான்…
“பொடி போட்ட சாம்பாரையே தினமும் சாப்பிட அலுப்பு தட்டல…? சின்ன வெங்காயத்த உரிச்சு , அரச்சு விட்டுப் பண்ணினாத்தான் சாம்பார்..இன்னிக்கு நான்தான் சமைக்கப் போறேன்…”
சமையலறை யுத்த பூமியாக மாறியது…
பாத்திரங்கள் உருளும் சப்தத்தையும் மீறி , மஞ்சு , சஞ்சுவின் உரத்த குரல்கள் வித்தியாசமாய் ஒலித்தது…
மஞ்சு என்னிடம் தனியாக புலம்ப ஆரம்பித்தாள்.
“நீதானே சொன்ன.. இருந்தா நரேன் மாதிரி இருக்கணும்னு”
சஞ்சுவும் நரேனும் இதற்கெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை…
போக வர நன்றாக நொறுக்குத்தீனியை அசைபோட்டுக் கொண்டு, சாப்பிடுவதற்காகவே ஜன்மம் எடுத்தது போல , வேறு பொழுது போக்கு இல்லாமல் ஜாலியா இருந்தார்கள்…
நாங்களோ உயிர் வாழ்வதற்காக உண்ணும் ஜாதி…
இதற்கும் வந்தது ஒரு சோதனை! இல்லை ..விடிவுகாலம் என்றே சொல்லலாம்…
முதல் நாள் ராத்திரி சஞ்சு நரேனின் பேரன் கிரணின் பேரைச் சொல்லி தடபுடல் விருந்து… மூன்று இனிப்பு வகைகள்… வெரைட்டி ரைஸ்.. தயிர் வடை…
எல்லாவற்றையும் அமுக்கி அமுக்கி உள்ளே தள்ளின களைப்பில் ஆழ்ந்த நித்திரை.
காலையில் சமையலறையிலிருந்து தடாலென்ற சத்தம்… நரேன். , மாமா… சீக்கிரம் வாங்க…!
சஞ்சுவின் அலறல்…
உள்ளே மஞ்சு மயங்கி விழுந்து கிடக்கிறாள்…
டாக்டர் சபரீஸ்வரன் முழு டெஸ்ட்டும் எடுக்கச் சொன்னார்.
“போன மாசம் கூட எல்லா ரிப்போர்ட்டும் நார்மலா இருந்துதே… ஏதாவது ஸ்ட்ரெஸ்ஸா.?? இல்ல டயட்ல உப்பு, காரம் , சக்கரை தூக்கலா…?”
எதைச் சொல்வது? எதை. விடுவது?
“ஏன் டாக்டர்…எனிதிங் சீரியஸ்…?”
“இப்ப இல்ல…இதே மாதிரி போனா சீரியஸ் ஆக வாய்ப்புண்டு…!”
“என்ன சொல்ல வரீங்க..?”
“சுகர், பி.பி…, கொலஸ்ட்ரால் எல்லாம் பார்டர்ல இருக்கு…மருந்தெல்லாம் தேவையில்லை… டயட் கன்ட்ரோல் , உடற்பயிற்சி, வாக்கிங்….ரெகுலரா பண்ணுங்க…. ஒரு மாசம் கழிச்சு ஒரு செக்கப் ரீபீட் பண்ணிடலாம்….நத்திங் டு ஒர்ரி……”
வீட்டிற்கு வந்ததும் , நரேன் இதைக் கேட்டுவிட்டு பெரிதாகச் சிரித்தான்…
“மனோ. இப்போ டாக்டர் கிட்ட போனாலே இதத்தான் சொல்றாங்க.. சஞ்சுவுக்கு கூட எல்லாம் பார்டர்லதான் இருக்கு..இதுக்காக எதையுமே சாப்பிடாம இருந்தா நாக்கு செத்துப் போகும் மனோ…”
ஆளே செத்துப் போகும் போது நாக்கும் கூடச் சேந்து சாகத்தானே போறது…
ஆமாம்.. முன்னெல்லாம் புடவையில மாங்கா பார்டர் , டெம்பிள் பார்டர்னுதான் பாத்திருக்கோம்..இப்போ என்னடான்னா , சுகர் , பி.பி.., கொலஸ்ட்ரால் எல்லாம் பார்டர்ல வந்திடுத்து போலிருக்கு… கலிகாலம்….!
மஞ்சுவும் நானும் இனிமேல் தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டோம்.. ஆனால் இவர்களை எப்படி கிளப்புவது…?
“நரேன்.. நாளையிலிருந்து பழையபடி மஞ்சுவே சமைக்கட்டும்… ஒரு மாசத்துக்கு நோ டு ஸ்வீட்.. காரம்… கும்பகோணம் காப்பி… நடுவுல நொறுக்கு தீனி கட்… சாரி.. !டாக்டர் கண்டிப்பா டயட்ல இருக்கணும்னு சொல்லியிருக்கார்..
நீயும் , சஞ்சுவும் வேணா அப்பப்போ வெளியில் சாப்பிட்டுவிட்டு வாங்க.. எங்களுக்கு நோ அப்ஜெக்க்ஷன்…”
நரேனுக்கு பேஸ்த்தடித்தது…
இரண்டு நாட்கள் வாழ்க்கையே உப்பு சப்பில்லாமல் மாறியது மாதிரி நரேன் விட்டத்தையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான்…
மூன்றாம் நாள்….
ஃபோனில் கத்தி பேசியபடி என் எதிரே வந்து உட்கார்ந்தான்..
“ஓ அப்படியா…எப்போ…? நானும் சஞ்சுவும் வெளியூர்ல இருக்கோம்..இதோ உடனே கெளம்பி வரோம்.. கவலைப் படாதீங்க…”
“என்ன நரேன்…?”
“என்னோட அத்தைக்கு உடம்பு சரியில்லையாம்..என்ன உடனே பாக்கணுமாம்.. நாங்க இன்னைக்கு ஊருக்கு கிளம்பணும்…”
மீசையில் மண் ஒட்டாமல் கிளம்பப் பார்க்கிறான் என்று புரிந்து விட்டது…
சஞ்சுவுக்கு ஒன்றும் புரியவில்லை…
“அத்தையா…? என்ன உடம்பு…நல்லாத்தானே இருந்தாங்க..நேத்து கூட பேசினேனே..”
“நேத்து கத நேத்திக்கு… இன்னிக்கு கதையைப் பாப்போம்..உடனே கெளம்புற வழியப் பாரு…”
நரேனும் சஞ்சுவும் இல்லாமல் வீடே வெறிச்சோடிக் கிடந்தது…
பழையபடி அடுப்படியில் இருந்து தீய்ந்த வாசனை…ஆனா இப்போ அதுவே மனசுக்கு இதமா, மூக்குக்கு சுகந்தமா…எப்படி?
இது போதும் எனக்கு…
சில மனிதர்கள்…சில நியாயங்கள்…