சின்னவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 59,328 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

புத்தகங்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு, கடியாரத்தைப் பார்த்தான் முருகன். மணி ஒன்பது அடிக்க ஐந்து நிமிடங்கள் இருந்தன.

”சரியான நேரம்தான். இப்பவே புறப்பட்டு மெது மெதுவாக நடந்தால் ஒன்பதரைக்கு ஸ்கூல் போய் சேர்ந்திரலாம். பையன்களோடு பேசி விளையாட நேரம் இருக்கும் முதல் மணி அடிக்க ஐந்து நிமிஷத்துக்கு முன்னாலே வகுப்புக்குப் போகலாம்” என்று எண்ணவும் அவனுக்க உற்சாகம் ஏற்பட்டது.

“அம்மா, நான் ஸ்கூலுக்குப் போறேன்” என்று உரக்கச் சொல்லியபடி வாசல் நடையை அணுகினான் முருகன். அந்த சமயம் திடுதிடுவென்று வந்தார் அண்ணாச்சி ஒட்டமும் இல்லாத, சாதாரண நடையுமில்லாத வேகத்தில் வந்த அவர் படபடப்புடன் காணப்பட்டார்.

“எலே, பசுமாடு அத்துக்கிட்டு ஓடிட்டுதுடா. போ. போயி தேடிப் பத்திக்கிட்டு வா. வடக்கே குளத்துப் பக்கம் தான் போகும். ஒடு ஒடு. சீக்கிரமாப் போ” என்று பெரியவர் உத்திரவிட்டார்.

முருகனுக்கு எரிச்சல் ஏற்பட்டது, “சனியன் பிடிச்ச எழவு. இந்தப் பசுவோட இது ஒரு தொல்லை” என்று அவன் மனம் முணமுணத்தது. “பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. நான் போகணும் அண்ணாச்சி” என்ற தீனக்குரலில் சொன்னான்.

“பள்ளிக்கூடம் பத்து மணிக்கு தாலே! இன்னும் மணி ஒன்பது கூட ஆகலே. அதுக்குள்ளே என்ன அவசரம். போயி பசுவை பத்திக்கிட்டு வா. கடைச் சங்கரனையும் வரச் சொல்லுதேன்” என்று திடமாக அறிவித்தார் அண்ணாச்சி.

மேற்கொண்டு அவன் எதுவும் மறுப்பு பேசமுடியாது. வாய் திறந்தால் போதும். நீ படிச்சுக் கிழிச்சது போதும்லே, மாட்டை, பார்த்துக்கிட்டு வந்து கூடமாட வேலை பழகு!” என்று பெரியவர் கண்டிப்பாகச் சொல்லிவிடுவார்.

முருகனுக்கு அழுகை வந்தது. தயங்கி நின்றான்.

“போலே சீக்கிரம். பசு குளத்துக்குப் போறதுக்க முன்னாலே மறிச்சிரலாம். இல்லேன்னா அது கல்வெட்டாங் குழியைப் பார்த்து ஒடத் தொடங்கிரும்” என்று அண்ணாச்சி அவசரப் படுத்தினார்.

வேறு வழியின்றி, முருகன் புத்தகப் பையை பட்டாசாலைச் சுவர் மூலையில் வைத்து விட்டுக் கிளம்பினான்.

“மாடு தும்போடு தான் போகுது. சங்கரனும் நீயும் அதை மடக்கி, தும்பைப் புடிச்சி இட்டாந்தரலாம்” என்று யோசனை கூறினார் அண்ணாச்சி.

முருகன் வடக்குத் திசையில் ஒடலானான். பின்னாலேயே சங்கரனும் வந்து விட்டான். இரண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான். இவன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். படிக்க வாய்ப்பும் வசதியும் இல்லாததால் அவன் மளிகைக் கடையில் “எடுபிடி ஆள்” ஆக வேலை பார்க்கிறான்.

சங்கரன் வேகமாக ஓடிவந்து முருகனுடன் சேர்ந்து கொண்டான். “இந்த மாட்டோட இது பெரிய தொல்லையாப் போச்சு. அடிக்கடி தும்பை அத்துக்கிட்டு ஓடிஓடிப் போயிருது. நம்ம பாடுதான் திண்டாட்டமா இருக்கு லொங்கு லொங்குன்னு ஓடி, அங்கயும் இங்கயும் அலைஞ்சு, அதை கண்டுபிடிச்ச வீட்டுக்கு இட்டார வேண்டியிருக்கு” என்று அவன் சொன்னான்.

இரண்டு பேரும் ஓட்டத்தைக் குறைந்து “பரும்நடையாக” நடந்து கொண்டிருந்தார்கள்.

“அண்ணாச்சிக்கு வேண்டாத வேலை. வீட்டிலே மாடுகட்டிப் பால் கறக்கணுமின்னு. மத்தவங்களுக்கு அதனாலே வெட்டி வேலையும் அதிக உழைப்பும் தான். அம்மா தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டியிருக்கு. தண்ணி காட்டுறது, தீனிவைக்கிறது, சாணி அள்ளிப்போடுறது, காலை யிலும் சாயங்காலமும் பால் கறக்கிறதுன்னு எத்தனையோ அலுவல்கள். அப்படியும் இது நிறையப் பாலா தருது? வேளைக்கு, அரைப்படி பால் கறந்தால் அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். கள்ள மூதி பாலை இறக்காம எக்கிக்கிடும், அப்புறமா கண்ணுக் குட்டிக்கு கொடுக்கும்” என்றான் முருகன்.

பெரியவர் அவனுடைய அண்ணாச்சி. அவரைப் பற்றி அவன் குறைகூறலாம். ஆனால் தனக்கு அவர் முதலாளி: அவரைக் குறைவாகப் பேசக்கூடாது என்பதை சங்கரன் அறிந்திருந்தான். அவன் மவுனமாகவே உடன் வந்தான்.

முருகன்தான் புலம்பிக் கொண்டே வந்தான்: “இந்த மாடு திமிரு பிடிச்சது. வீட்டிலே அதுக்கு என்ன குறை இருக்கு? புண்ணாக்கு, தவிடு, கொழு கொழுன்னு கழுநித் தண்ணி எல்லாம் நிறையவே அதுக்கு கிடைக்குது. இரண்டு மூணு நாளைக்கு ஒருக்க அம்மா நல்ல பருத்திக் கொட்டையை அரைச்சு தண்ணியிலே கலந்து கொடுக்கிறா. திங்கிற கொழுப்பு, இதாலே சும்மா நிற்க முடியலே. ஒடி ஒடிப் போயிருது நாமதான் வேகு வேகுன்னு அலைஞ்சு திரிஞ்சு லோல் பட வேண்டி யிருக்கு….”

இதற்குள்ளாக இருவரும் வடக்குக் குளத்தை நெருங்கி விட்டார்கள். அது மானா மாரிக்குளம். மழை பெய்தால் தான் அதில் தண்ணிர் கிடக்கும். பெரும்பாலான நாட்களில் வறண்டுதான் காணப்படும். கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்து நிற்கும்.

முருகனுக்கு நண்பர்களோடு அந்தக் குளத்துக்கு வருவதில் தனி உற்சாகம் உண்டு. கருவேல மரங்களில் பிசின் வடிந்து மினுமினுவென்று மிளிரும். அதை சேகரித்து, புட்டிகளில் போட்டு நிரூற்றி, அருமையான கோந்து தயாரிப்பதில் அவனுக்கும் மற்றப் பையன்களுக்கும் தனி மகிழ்ச்சி. கிழிந்த நோட்டு, புத்தகம், மற்றும் கவர்களை ஒட்டக்கூடிய முதல் தரமான பசை அது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.

மழைகாலத்தில், குளத்தில் நீர் பெருகிக் கிடக்கிற நாட்களில், சகலரகமான பையன்களும் அங்குதான் கூடிக் குட்டைப்புழுதி பண்ணுவார்கள். குளத்தின் நடுவில் அகலமான கிணறு ஒன்று இருந்தது. அதற்கு உயரமான சுவர்கள் கட்டப்பட்டிருந்தன. ஒரு மூலையில் துலாக்கல் ஒன்று உயர்ந்து நின்றது. மழைநாட்களில் கிணற்றிலும் தண்ணீர் பெருகிக் கிடக்கும்.

பையன்கள் சுவர் மீதும், துலாக்கல் மீதும் ஏறிநின்று தண்ணிரில் குதித்து விளையாடுவார்கள். ஒரே ஜாலிதான். ஒருவன் நீண்ட குரலில் பாட்டு மாதிரிக் கத்துவான்.

“சென்னை, பாம்பே, கல்கட்டா, செவிட்டிலே ரெண்டு கொடுக்கட்டா” என்று தொபுக்கடீர் என்று குதித்து நீச்சலடிப்பான்.

இன்னொரு பையன்,

“மெட்ராஸ், பாம்பே, கல்கட்டா மேலே விழுந்து கடிக்கட்டா”

என்று கூவியபடி டமாலெனத் தண்ணிரில் குதிப்பான்.

எல்லோரையும் மிஞ்சி விடுவான் ஒரு பெரிய பையன். நாடக மேடையில் கள்ளபார்ட்காரன் ஆடிப்பாடி அட்டகாசம் செய்கிற போது பாடும் பாட்டை அவன் உரத்த குரலில் கத்துவான்.

“கோட்டைக் கொத்தளம் மீதிலேறிக் கூசாமல் குதிப்பேன் – பலபா குதிப்பேன்…

காவலர் கண்டு புடிக்க வந்தால் கத்தியால் குத்திடுவேன்! – ஐசாகத்தியால் குத்திடுவேன்!

ஒரு நீச்சில் கப்பலை பிடிப்பேன் கல்கத்தா துறைமுகம் பார்ப்பேன்”

அவன் நீச்சலிலும் சூரப்புலிதான். நீரில் பல சாகசங்கள் செய்து காட்டுவான்.

தூர நின்று அதை எல்லாம் வேடிக்கை பார்ப்பதில் முருகனுக்கும் அவனைப் போன்ற சிறுவர்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். பொழுது போவதே தெரியாமல் நின்று ரசிப்பார்கள்.

ஆனால், அதெல்லாம் லீவு நாட்களில்! இன்று பள்ளிக்கூடம் உண்டு. கட்டாயம் போக வேண்டுமே! குளத்தில் “கருவக் கோந்” தையும் மற்ற வேடிக்கைகளையும் பார்ப்பதற்கு நேரம் ஏது? மனமும் இல்லை.

முருகனின் பார்வை நெடுகிலும் மேய்ந்தது, பசுவைத் தேடி. “அதோ அங்கே நிற்குது” என்று கத்தினான் சங்கரன். முருகனும் கண்டு கொண்டான்.

இருவரும் எச்சரிக்கையாகத் தான் அதை நெருங்க முயன்றார்கள். ஆனால் அது அவர்களை விட அதிக எச்சரிக்கை உணர்வோடு நின்றது. தன்னைப் பிடிக்கத் தான் பையன்கள் வருகிறார்கள் என்று அது புரிந்துகொண்டது. உடனே எடுத்தது ஒட்டம். ரஸ்தாவில் ஏறி கிழக்கு நோக்கி ஓடியது.

அவுத்து விட்டதாம் கழுதை எடுத்து விட்டதாம் ஒட்டம்கிற மாதிரியில்லா ஓடுது!” என்று வேடிக்கையாகச் சொன்னான் சங்கர்.

முருகன் அதை ரசிக்கும் நிலையில் இல்லை. சவம் கல்வெட்டாங்குழிக்குத் தான் போகும் என்று முனகினான்.

அது அரைமைல் தூரத்துக்கும் அப்பால் இருந்தது, வெம்பரப்பும் வெட்ட வெளியும்தான். புல் நீளம் நீளமாக வளர்ந்து நிற்கும். அங்கங்கே பெரிய பெரிய கற்குழிகள் காணப்படும். எப்பவோ வெடிவைத்துத் தோண்டி, பாறாங் கற்களை பெயர்த்து எடுத்திருந்தார்கள். அதன் மிச்சங்களாக அக்குழிகள் விளங்கின. “கல்வெட்டாங்குழிகள்” என்று பிரசித்தி பெற்றிருந்த அவற்றில் எப்பவும் தண்ணிர் கிடக்கும். எப்பவாவது யாராவது அதில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதும் நடக்கும். அவற்றின் மீது பயப்படுத்தும் கதைகள் கட்டப்பட்டு உலவின. அதனால் சிறுவர்கள் அங்கே போக அஞ்சுவார்கள்.

ஆனாலும் முருகனும் நண்பர்களும் சில சமயம் துணிந்து அந்தப் பக்கம் வருவது உண்டு. உபயோக மற்றுப் போன சைக்கிள் சக்கரம், ரப்பர் வளையம் போன்றவற்றை கம்பியால் அடித்து உருட்டிக் கொண்டு விளையாட்டாக வருவார்கள். ஜாலியாக இருக்கும்.

ஆயினும், ஒடிய பசுவைத் தேடிக்கொண்டு அங்கே வருவது முருகனுக்குப் பிடிக்காத காரியம் தான். என்ன செய்வது? அவ்வப்போது, மனசுக்குப் பிடிக்காத காரியத்தையும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறதே!

இப்பவும் அதே தான் நடந்தது.

வேகமாக ஓடிய மாடு அங்கே ஒரு இடத்தில் ஒய்வாகப் படுத்திருந்தது.

முருகனும் சங்கரனும் ஒவ்வொரு பக்கமாக அதை நெருங்கினார்கள். பசு மிரண்டு எழுந்திருக்கவில்லை. ஒட்டம் அதுக்கே அலுத்துப்போச்சோ என்னவோ!

சங்கரன் அதன் தும்பைப் பற்றினான். முருகன் அதை லேசாகத் தட்டித் கொடுத்தான்.

பசு சாதுவாக எழுந்து நின்றது. அவர்களோடு செல்ல இசைந்தது. நடந்தது.

“இது நல்ல பசுதான். ஆனா சில சமயம்தான் இதுக்கு ஏதோ வெறி வந்திருது. ஒட்டப் பிசாசு இதைப் பிடிச்சிருக்குமோ என்னவோ. பிய்ச்சுக்கிட்டு ஓட ஆரம்பிச்சிருது!” என்று முருகன் சொன்னான்.

சங்கரன் ரசித்துச் சிரித்தான்.

“அய்யா இதை வாய்க்காலிலே குளிப்பாட்டி வருவாகளே! அப்பல்லாம் எவ்வளவு அமெரிக்கையாக நடந்து வரும். ஒட்டப் பேய் பிடிக்கிற போதுதான் நம்மைப் பாடாய்ப் படுத்து” என்றான்.

வாரம் ஒரு தடவை அண்ணாச்சி பசுவை குளிப்பாட்ட வாயக்காலுக்கு இட்டுச் செல்வார். முருகன் கன்றுக்குட்டியைப் பிடித்து இழுத்துச் செல்வான். சிலசமயம் அதுவே அவனை இழுத்துக் கொண்டு ஒடும. அழகான கன்றுக்குட்டி.

சாதுவான பிராணிதான். குளிப்பாட்டி முடித்துக் கரை யேறியதும், அதை பிடித்துக் கொண்டுவர வேண்டும் என்கிற அவசியமில்லை. கன்றுக்குட்டியை முன்னாலேயே நடக்க விட்டு வந்தால், பசு தானாகவே பின்தொடரும், அண்ணாச்சி அப்படித்தான் செய்வார்.

பசு வீடு வந்து சேர்ந்தது. அண்ணாச்சி ஆவலாக அதைப் பிடித்து, தொழுவத்துக்கு இட்டுச் சென்றார்.

முருகன் கடியாரத்தைப் பார்த்தான். மணி 9.45. என்னதான் லேகமாக ஒடினாலும், பள்ளிக்கூடம் சேரும் போது முதல் பீரியட் ஆரம்பமாகியிருக்கும்.

முதல் பீரியட் கணக்கு. வாத்தியார் வயித்திலிங்கம். கண்டிப் பானவர். ஐந்து நிமிடம் வேட்டாகப் போனாலும், பீரியட் பூராவும் வெளியிலே நிற்கச் செய்வார் அல்லது பெஞ்சு மேலே ஏறி நிற்கும்படி செய்வார். அவர் முகசவரம் செய்து கொண்டு வந்திருந்தால், அநியாயத்துக்கு கோபிப்பார். “நிமிட்டாம் பழம்” என்று சொல்லி, அழுத்தமாகச் கிள்ளுவார். நாள் முழுதும் அந்த இடத்தில் எரிச்சல் இருக்கும். இன்னிக்கு அவர் சவரம் செய்து கொள்ளாத நாளாக இருக்கணும், சாமி கடவுளே!

முருகன் உள்ளம் குமைந்தது. “வயித்திலிங்கம் வாத்தியார் சாகாரா, எங்கள் வயித்தெரிச்சல் தீராதா?” என்று பையன்கள் பாடுவார்கள். அவன் மனமும் இப்போது அதை எதிரொலிபோல் முனகியது.

சின்னப் பையனாக இருப்பது ரொம்பமோசமான விஷயம் என்று எண்ணினான் முருகன். வீட்டிலே பெரியவர்கள் திட்டு கிறார்கள். பள்ளிக்கூடத்தில் வாத்தியார்கள் தண்டிக்கிறார்கள். எழுதுவதற்கும் படிப்பதற்கும் ஏகப்பட்ட பாடங்கள் சுமத்து கிறார்கள். வேலைக்குப் போனால் முதலாளிகள் என்று பெரிய வர்கள் சிறுவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். கடவுளே, ஒரு வீட்டில் சின்னவனாக இருப்பதே பெரிய தண்டனைதான். சின்னவர்கள் விரைவிலேயே பெரியவர்களாவதற்கு வழி பிறந்தால் தான் விமோசனம் உண்டு.

முருகன் கண்களில் நீர் பொங்கி வழிந்தது. அழுகையை அடக்க விரும்பாமலும், வாத்தியார் நினைவில் பயந்தபடியும் அவன் வேகமாக ஓடலானான்.

– மகரந்தம், 1998

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *