சிசு-வதா சித்ரவதா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 28, 2022
பார்வையிட்டோர்: 4,093 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிச்சா வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த மாருதியை வாயைப் பிளந்தபடி பார்த்துவிட்டு உள்ளே நுழைந்த நான், வீட்டின் நடுக்கூடத்தில் கழுத்தில் டை சகிதம் கோட்டு, சூட்டு அலங்காரத்தில் வெத்து சிகரெட் பைப்பை ஸ்டைலாக வாயில் கடித்தபடி உட்கார்ந்திருந்த கிச்சாவின் பந்தாவைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அடுத்த சில விநாடிகளில் உள்ளிருந்து தடுக்கு வேட்டி-கம்-தொப்பை தெரியும் குட்டை சொக்காய் அணிந்து மஃப்டியில் மற்றொரு கிச்சா வந்தான்! பத்தாத குறைக்குப் பவளக்கொடியாக உள்ளிருந்து வந்த இரண்டாவது கிச்சாவைத் தொடர்ந்து மூன்றாவதாக ‘டிட்டோ கிச்சா ஜாடையில் நான்கு வயது ரெட்டைவால் ரெங்குடு ஓடிவந்தபோது ‘மூன்றுக்குமேல் எப்போதும் வேண்டாம்’ என்று கத்தவேண்டும் போல் இருந்தது!

கேமரா ட்ரிக்கில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய கிச்சாவின் இந்த ட்ரிபிள் ஆக்ஷன் காட்சியை நேருக்கு நேர் பார்த்த பாதிப்பால் கட்-அவுட் உயரத்துக்கு எனது புருவங்கள் உயர்ந்து போய்விட்டன!

நான் முதலாவதாகப் பார்த்த கோட்டு சூட்டுக்காரரை, கிச்சாவின் பெரியப்பா பையன் நாச்சா என்கிற நாராயணசாமி என்றும், இரண்டாவது, மூன்றாவதாக வந்த கிச்சாக்களில் மஃப்டி கிச்சாவை அசல் ஐ.எஸ்.ஐ. கிச்சா என்றும், ரெட்டை வாலை, நான் முதன்முதலாகப் பார்த்த நாச்சாவுக்கு மூன்றாவதாகப் பிறந்த கடைக்குட்டிப் பாச்சா என்கிற பாஸ்கர் என்றும் ‘விசுத்தனமாக’ அறிமுகக் குழப்பம் செய்து, என்னைப் பாயைப் பிறாண்ட வைத்தாள் எச்சமிப் பாட்டி!

ஒரு பெரிய கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக உத்தியோகம் பார்க்கும் நாச்சா என்கிற நாராயணசாமி, டிரான்ஸ்ஃபர் என்ற பெயரில் இந்தியா மேப்பில் இல்லாத ஊர்களுக்கெல்லாம் துரத்தியடிக்கப்பட்டு அங்கெல்லாம் கர்மசிரத்தையாக வேலை செய்துவிட்டுத் தற்சமயம் மாற்றலாகி சென்னைக்கு வந்திருக்கிறார்.

தன்னுடைய மகன் பாச்சாவின் எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக சென்னையில் நாயாக அலைந்து ஸ்கூல் ஸ்கூலாக ஏறி இறங்கியதில், ஆபீஸ் டிரான்ஸ்ஃபரே தேவலாம் போல ஆகிவிட்டது நாச்சாவுக்கு. பாச்சாவை எப்பாடுபட்டாவது சென்னையில் பிரபலமாக இருக்கும் ஃபைவ்-ஸ்டார் பள்ளிக்கூடமான ‘சிசு-வதா’ சீனியர் செகண்டரி ஸ்கூலில் சேர்க்க ஆசைப்பட்ட நாச்சா, தனக்குத் தெரிந்த முன்னாள், அந்நாள், இந்நாள் எம்.எல்.ஏ., எம்.பி.-க்களைப் பார்த்தார். ‘முதல்வரிடம் கூறி ராஜ்யசபாவில் வேண்டுமானால் உங்கள் பிள்ளைக்கு ஸீட் வாங்கித் தருகிறோம், சிசு-வதாவில் மட்டும் அட்மிஷன் கேட்காதீர்கள்’ என்று எல்லோரும் ஏகமனதாகக் கையை விரித்துவிட்டார்கள். குறுக்குவழியில் சேர்க்கலாமென்றால் பள்ளி நிர்வாகிகள் சீர்-செனத்தி, வரதட்சணை லெவலில் டொனேஷன் கேட்கத் தொடங்கினார்கள்!

எனவே, மகனின் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் நியாயமான முயற்சியில் இறங்கிய நாச்சாவை இந்தச் சமயம் பார்த்து கம்பெனியில், ஒரு கான்ஃபரன்ஸில் பங்கேற்க லண்டனுக்குப் போகுமாறு கண்டிப்புக் கட்டளையிட்டு விட்டார்கள்.

அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்குவதில் ஆரம்பித்து ஃபீஸ் கட்டுவது வரை குழந்தைகளின் பெற்றோர், அதிலும் குறிப்பாக, அப்பா கூடவே இருந்தால்தான் சிசு-வதாவில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். இதனால், தான் ஊரில் இல்லாதபோது தனது மகன் பாச்சாவுக்குத் தாற்காலிகத் தந்தையாக நடிக்கத் தன்னைப் போலவே இருக்கும் கிச்சா சாவை வற்புறுத்திச் சம்மதிக்க வைக்கவே தற்சமயம் நாச்சா திருவல்லிக்கேணி வந்துள்ளார். இதற்கு எச்சுமிப் பாட்டியின் அங்கீகாரமும் கிடைத்துவிடவே களத்தில் இறக்கப்பட்டான் கிச்சா!

முதல் காரியமாக மேக்கப் எத்திராஜை விட்டு கிச்சாவுக்கு கோட்டு, சூட்டு, டை, நரைத்த தலை என்று நாச்சாவின் வேஷம் போடப்பட்டது. ‘மாமா’ என்று கிச்சாவை அழைத்துப் பழக்கப்பட்ட சிறுவன் பாச்சாவை, ‘அப்பா’ என்று சொல்ல வைப்பதற்குள் எச்சுமிப் பாட்டிக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. ‘மாமா”, “அப்பா” என்று மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்த அவன், ஒரு கட்டத்தில் கிச்சாவை ‘மாமாப்பா’ என்று சொல்லும் நிலையில் செட்டில் ஆகிவிட்டான்!

அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்க சிசு-வதா ஸ்கூலுக்குச் சென்ற கிச்சா, அங்கு வாசலில் இருந்த வாட்ச்மேனிடம் அதுபற்றி விசாரிக்க, அவர் கிச்சாவைத் தரதரவென்று இழுத்துப் போய் ‘அங்கே பார்’ என்று காட்ட, அவர் காட்டிய இடத்தில் திருப்பதி தர்மதரிசனம் க்யூவைப் போல, அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்க அப்பாக்கள் க்யூவில் கால்கடுக்க நின்றுகொண்டிருந்தனர்.

இப்படி க்யூவில் நிற்பதைத் தவிர்க்க எண்ணிய கிச்சா, சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு வாட்ச்மேனிடம் ரகசியமாக ‘சினிமா தியேட்டர் மாதிரி பிளாக்குல அப்ளிகேஷன் ஃபார்ம் கிடைக்குமா…?’ என்று கேட்க, தீயை மிதித்தவர் போல வெகுண்டெழுந்த வாட்ச்மேன், கிச்சாவைப் பார்த்து ‘நீயெல்லாம் படிச்ச ஆளா?’ என்று பதிலுக்குக் கேட்டார்! கிச்சா நாக்கைக் கடித்துக் கொண்டு சுதாரித்தபடி, க்யூவில் தனக்கு முன்னிருந்த அப்பாவிடம் ‘அப்ளிகேஷன் ஃபார்ம் எப்போ தருவாங்க?’ என்று கேட்க, அதற்கு அவர் ‘என்னிக்குத் தருவாங்கன்னு கேளுங்க சார். நான் முந்தா நேத்துலேந்து நிக்கறேன்…’ என்று கூறி கிச்சாவை மிரள வைத்தார்.

அப்ளிகேஷன் ஃபார்முக்காக க்யூவில் நாள்கணக்கில் நிற்பவர்களுக்காக அவரவர் வீட்டிலிருந்து சாப்பாடு, காபி, டிபன் என்று வந்து வந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்த கிச்சாவுக்கு நாக்கில் ஜலம் ஊறியது! இது போதாதென்று பல் தேய்த்து வாய் கொப்பளிப்பது, பெட்ஷீட் விரித்துப் படுப்பது, பக்கெட் தண்ணீரில் மொண்டு மொண்டு குளிப்பது போன்ற விவகாரங்களைக்கூடச் சிலர் கூச்சமில்லாமல் க்யூவிலேயே நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்த கிச்சாவுக்கு ‘இப்படி ஒரு படிப்பு பாச்சாவுக்குத் தேவைதானா?’ என்று தோன்றியது!

மறுநாள் காலை சுமார் ஏழு மணிக்கு வெறித்தனமாக ஓடிவந்த வாட்ச்மேன், ‘கோட்டையை எதிரி நாட்டு மன்னன் முற்றுகை இட்டுவிட்டான்’ என்ற ரீதியில் அப்ளிகேஷன் ஃபார்ம் கொடுக்கப் போவதைப் புரளி கிளப்பிவிடுவது போல பரபரப்பாகக் கூறி, ஓய்ந்து கிடந்த க்யூவை உசுப்பிவிட்டார். உணர்ச்சிவசப்பட்ட அப்பாக்கள் அங்குமிங்கும் ஓடியதில் ஒழுங்காக இருந்த க்யூ, ஆர்,எஸ்,டி,யூ என்று இஷ்டத்துக்கு வளைந்து சிதறிக் கச்சடாவாகியது. அடிதடி க்யூவில் எப்படியோ இடம்பிடித்து ‘அன்பே வா’, ‘அடிமைப் பெண்’ படங்களை ரிலீஸான முதல் நாளிலேயே முதல் காட்சி பார்த்த அனுபவசாலியான கிச்சா, வாட்ச்மேன் கிளப்பிய ரகளையை வாகாகப் பயன்படுத்திக் கொண்டு, ‘தே… சீ… கசமாலம், பகுள்ள குத்துவேன்… சாவுக்கிராக்கி…’ என்றெல்லாம் வீரவசனம் பேசி ஸ்கூல் அட்மிஷன் க்யூவில் இந்த வசனங்களை சற்றும் எதிர்பாராத அப்பாக்களைத் திகைக்க வைத்து க்யூவில் முண்டியடித்து முன்னேறி, எல்லோரும் கைவிட்ட கௌண்ட்டருக்குள் லாகவமாகத் தலையை விட்டு நுழைத்து முதல் அப்ளிகேஷன் ஃபார்மை வாங்கினான்!

அவசர அவசரமாக கோழிக் கிறுக்கலில் அப்ளிகேஷன் பாரத்தைப் பூர்த்தி செய்த கிச்சா, சுமார் ஏழு மணி நேரம் இன்னொரு க்யூவில் நின்று, கௌண்ட்டரை அடைத்தபடி குந்தியிருந்த பிரமாண்டமான டீச்சரிடம் அப்ளிகேஷனை ஒப்படைத்தான். பிரமாண்டமா டமான உருவத்துக்குத் துளிக்கூடச் சம்பந்தம் இல்லாத சன்னமான கீச்சுக்குரலில் அந்த டீச்சர் நாளை மறுநாள் இன்டர்வியூவும் டெஸ்ட்டும் இருப்பதாகக் கூற, ‘பையனை (பாச்சா) அதுக்குள்ள தேத்தி வுட்டுடறேன்’ என்று பெருமையாக கிச்சா மார்தட்ட, பதிலுக்கு அந்த டீச்சர் ஒரு மாதிரி கிச்சாவைப் பார்த்து, ‘மிஸ்டர்… இன்டர்வியூவும் டெஸ்ட்டும் பையனுக்கு இல்லை… உங்களுக்குத்தான்’ என்று கூறி சாடிஸ்ட்டிக்காக ஒரு புன்னகை புரிந்தாள். க்யூவில் பொழுதுபோகாமல் தடிதடியான புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்த அப்பாக்கள், வரப்போகும் பிள்ளைகளின் எல்.கே.ஜி. அட்மிஷனுக்காகத் தங்களைத் தயார்செய்து கொண்டிருந்தார்கள் என்பது அப்போதுதான் கிச்சாவுக்குப் புரிந்தது!

இன்டர்வியூ மற்றும் டெஸ்ட்டுக்காக கிச்சா இரண்டு நாள்கள் தலைகீழாக டி.ஸி.பி.ஏ. என்று சொல்லிப் பார்ப்பது, வாய்ப்பாடு ஒப்பிப்பது, நர்ஸரி ரைம்ஸ் பாடிப் பழகுவது என்று தன்னைத் தயார் செய்துகொண்டான். அடிஷன், சப்ஸ்ட்ராக்ஷன் கற்றுக்கொள்ள பக்கத்துத் தெரு பத்மனாப ஐயங்காரோடு கம்பைண்ட் ஸ்டடி செய்தான்.

குறிப்பிட்ட நாளன்று இன்டர்வியூவுக்கு அப்பா நாச்சா கோலத்தில் கிச்சா, பையன் பாச்சாவோடு கிளம்பினான்.

முதலில் பாச்சாவை இன்டர்வியூ செய்த தக்காளி பிரின்ஸிபாலினி அவனிடம் ‘எங்கே ஏ,பி,சி,டி சொல்லு பார்க்கலாம்…’ என்று நைச்சியமாகக் கேட்க, சிங்கராச்சாரி தெரு சகவாசத்தால் அழுகும் அளவுக்குப் பிஞ்சிலேயே பழுத்த பாச்சா, பட்டென்று எழுந்து நின்று, ‘ஏ,பி,சி,டி உன் அப்பன் தாடி… வாடி… போடி… லண்டன் லேடி…’ என்று கூறி கிச்சாவின் மானத்தை வாங்கினான்!

பாச்சாவைக் குரோதத்தோடு பார்த்த அந்தத் தக்காளி லேடி, ஒரு தனியறைக்குக் கிச்சாவை அழைத்துச் சென்று இன்டர்வியூவைக் காட்டமாக ஆரம்பித்தாள். எத்தியோப்பியாவின் தலைநகரம், எலி வாலின் நீளம், ஆப்பிரிக்கக் காட்டில் பறக்கும் ஈயின் கனம், அர்ஜென்டைனா அதிபருக்கு எத்தனை தங்கை – தம்பிகள் போன்ற கேள்விகளை அதிரடியாகக் கேட்டு கிச்சாவைத் திக்குமுக்காடச் செய்தாள். கிச்சா உத்தேசமாக அளித்த விடைகள் ஓரளவு சரியாக இருக்கவே, மிரண்டுபோன சிசு-வதா பிரின்ஸிபாலினி சாமர்த்தியமாக கிச்சா ச்சாவை மடக்க எண்ணி, ‘செவன் ப்ளஸ் ஃபோர் எவ்வளவு?’ என்று கேட்க… கிச்சா பயத்தில் நடுங்கிப் போய் வாய்தவறி ‘லெவன்…’ என்று சரியாகக் கூற, அதற்கு அவள் ‘செவன் ப்ளஸ் ஃபோர் லெவன் என்று எப்படிக் கூட்டினாய்?’ என்று அமைதியாகக் கேட்க… கிச்சா கேள்வியே புரியாமல் விழித்தான்.

‘மிஸ்டர், விடை மட்டும் தெரிஞ்சுட்டா போதாது… வழிமுறை எப்படின்னு சொல்லத் தெரியனும். நியூமேத்ஸ் போயி இப்ப ப்ராண்ட் நியூ மேத்ஸ் வந்துவிட்டது தெரியாதா உங்களுக்கு? கேளுங்க. மொதல்ல செவனை மூன்றரை மூன்றரையா ரெண்டா பிரிச்சுக்கணும். அப்புறம் அதுல ஒரு பாதி மூன்றரையை மனசுல வெச்சுண்டு, மீதிப் பாதி மூன்றரையை விரல்ல வெச்சுக்கணும். பிறகு கூட்ட வேண்டிய ஃபோரை நாலா பிரிச்சு ஞாபகத்துல வெச்சுக்கணும். மனசுல உள்ள மூன்றரையோட ஞாபகத்துல உள்ள . நாலும் ஒரு பங்கைக் கூட்டி, அதுலேர்ந்து வர விடையோட விரல்ல உள்ள மூன்றரையைக் கூட்டி…’ என்று அவள் தொடர்ந்து ஒரு ஆர்டினரி கூட்டலுக்கு அரை மணி நேரம் வியாக்கியானம் செய்தாள்.

‘ஏழும் நாலும் பதினொண்ணு என்பதற்கா இவ்வளவு அமர்க்களம்?’ என்று வியந்த கிச்சா, சிசு- வதாவில் சேரப் பலி ஆடு போலக் காத்திருக்கும் பாச்சாவுக்காகப் பரிதாபப்பட்டான்.

அடுத்ததாக, கிச்சாவோடு சேர்த்து ஐந்து அப்பாக்களுக்கு ரிட்டன்-டெஸ்ட் வைக்கப்பட்டது. ஐந்தில் நான்கு பேருக்குத்தான் இடம் என்றும் அந்தத் தக்காளி அறிவித்தாள். தானும் பாஸாக வேண்டும், அதே சமயத்தில், ஐந்தில் ஒருவரை ஃபெயிலாக்கவும் வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைப் புரிந்துகொண்ட கிச்சா, அதற்காக ஆயத்தமானான். தனக்கு முன் அமர்ந்து தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த ஒரு புத்திசாலி அப்பாவை அரித்துப் பிடுங்கி, நைஸாக அவர் பேப்பர்களை வாங்கி காப்பியடித்த கிச்சா, காரியம் முடிந்ததும் அவர் எழுதிய பேப்பர்களைக் கசக்கி வாயில் போட்டு விழுங்கினான். கிச்சாவின் இந்தப் பச்சைத் துரோகத்தை எதிர்பார்க்காத அந்த அப்பாவி அப்பா, கதறக் கதற அழுதபடி பரீட்சை ஹாலைவிட்டு வெளியேறினார். கிச்சாவோடு சேர்த்து அந்த நான்கு பேருக்கும் அட்மிஷன் வழங்கப்பட்டது.

‘ஒரு டெர்முக்கு சிசு-வதாவுல ஃபீஸ் இருநூறு ரூபாதான்…’ என்று பிரின்ஸிபாலினி கூற, இவ்வளவு குறைவாக ஃபீஸ் இருக்கிறதே என்ற சந்தோஷத்தில் கிச்சா உள்பட நால்வரும் புல்லரிப்பதற்குள், ‘சிசு-வதாவுல ஒரு வருஷத்துக்கு மொத்தம் இருபது டெர்ம்ஸ் உண்டு…’ என்று அப்பாக்களைப் பேயறைய வைத்தாள் தக்காளி லேடி.

இதுதவிர, ‘ஸ்கூலுக்குப் பக்கத்து வீடாக இருந்தாலும், ஸ்கூல் பஸ்லதான் ஸ்கூலுக்கு வந்து போகணும்…’ என்று கூறி, அதற்கும் ஒரு டெர்முக்கு இருநூறு ரூபாய் என்றாள். ‘பஸ்ஸுலயே பாடத்தை நடத்தினா, ஸ்கூல் ஃபீஸை மிச்சம் பிடிக்கலாமே?’ என்று அசடு வழிய ஐடியா தந்த கிச்சாவை ஆக்ரோஷமாகப் பார்த்துவிட்டு, அவன் கையில் எல்.கே.ஜி. படிப்புக்குத் தேவையான பத்து கிலோ நோட்டுப் புத்தகங்களைத் திணித்தாள்.

மேலும் தொடர்ந்தவள், ‘ஸ்கூல் துணிக் கடைக்காரர்கிட்ட துணி வாங்கி, ஸ்கூல் டெய்லர்கிட்ட அதைக் கொடுத்து தைச்சுக்கிட்ட யூனிஃபார்ம்தான் போட்டுக்கணும். ஸ்கூல் ஆபீஸ்ல வாங்கிய கூப்பனைக் கொடுத்து, ஸ்கூல் கான்டீன்ல உணவுப் பொட்டலம் வாங்கி மதியம் சாப்பிடனும்…’ என்று அடுக்கிக் கொண்டே போனவள், ‘படிப்பை மட்டும் நீங்க வீட்டுல சொல்லித் தந்துடனும்…’ என்பதைச் சொல்லாமல் சொன்னாள்!

எது எப்படியோ, லண்டனுக்குப் போன தனது பெரியப்பா மகன் நாச்சாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய சந்தோஷத்தில் கிச்சா வீடு திரும்பவும், வீட்டு வாசலில் மாருதியில் வந்து இறங்கிய நாச்சா, ‘என்னைப் பாதி கான்ஃபரன்ஸுல திருப்பி அனுப்பிட்டா. பழையபடி உ.பி.-யில் உள்ள பிலிதகடி பகடிப்பூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டா. அதனாலே பாச்சாவை அங்க ஹிந்தி மீடியத்துல சேர்க்கணும். நல்லவேளை, சிசு-வதாவுல நீ இன்னும் ஃபீஸ் கட்டலையே?’ என்று கேட்டுவிட்டு, அன்றிரவே பாச்சாவோடு பிலிதகடி பகடிப்பூருக்குப் பயணமானார்.

பாச்சாவின் அட்மிஷனுக்காகத் தான் பட்ட கஷ்டம் விழலுக்கு இறைத்த நீராக வீணானதில் கிச்சாவுக்குச் சற்று வருத்தம்தான்!

உங்களில் யாருக்காவது நாச்சாவின் பிள்ளை பாச்சா உருவச்சாயலில் பிள்ளையிருந்து, சிசு-வதாவில் சேர்க்க விரும்பினால் கிச்சாவை அணுகலாம். நாச்சாவுக்குப் பதிலாக கிச்சா நாச்சாவாக நடித்து பாச்சாவுக்குப் பதிலாக உங்கள் பிள்ளையை பாச்சாவாக நடிக்கச் சொல்லி அட்மிஷன் வாங்கித் தரத் தயாராம்.

டொனேஷனில் ‘டென் பர்சண்ட் கமிஷன் கிச்சாவுக்குக் கொடுத்தால் போதும்!

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *