(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒருவன் பிசாசுகளின் பாணியில் முடி வளர்த்த பரட்டைத் தலையன். மற்றவனுக்கு மூன்று தங்கப் பற்கள் முளைத்திருந்தன. பார்த்தால் நல்லவர்களாக வும் தோன்றவில்லை. கெட்டவர்கள் போலவும் தோன்றவில்லை. நடுத்தரம்!
இடம்: கோலாலம்பூர் ரயில் நிலையம். நேரம்:சாயங்காலம்.
‘ஆள் வருதுடாசீக்கிரம் அதைக் கழட்டிச் சட்டைப் பைக்குள்ளே போடு. ம் சீக்கிரம்’ என்று ஒருவன் சொல்ல, மற்றவன் தன் கைவிரலில் அணிந் திருந்த ஒரு மோதிரத்தை ‘விருட்’டென்று உருவி எடுத்துச் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டான்.
ஒரு மலாய்க்காரர்—‘டிப் டாப்பாக உடை தரித்தவர் – அவ்வழியே வேகமாக நடந்து சென்றார். செல்லும்போது இவர்களை நோக்கி, உண்மையாகவே ‘ஆயிற்றா?’ என்று ஒரு கேள்வியைப் போட்டார். இவர்கள் ஆயிற்று என்றார்கள்.
ஆயிற்றாமே? என்ன ஆயிற்று?
அவருக்குத் தெரியாமல் மோதிரத்தை என் மறைத் தார்கள்? என்ன மோதிரமாயிருக்கும் அது? விலையுயர்ந்ததோ? அதைக் குறிப்பிட்டுத்தான் அப்படி விசாரித்தாரோ?
விவகாரம் என்னவாயிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள ஆவல் உண்டாயிற்று. எழுந்து அவர்களுக்கு முன்னால் போய் நின்றேன்.
‘சிங்கப்பூர் வண்டிக்குக் காத்திருக்கிறீர்கள் போலி ருக்கு?’ என்று என்னிடம் வினவினான் அவர்களில் ஒருவன்.
‘ஆமாம் நீங்கள் எந்த வண்டிக்கு?’ என்று கேட்டுக் கொண்டே அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தேன். ‘பினாங்கு போகவேண்டியவர்கள் நாங்கள்’ என்று பதில் வந்தது.
ஒருவன் பிசாசுகளின் பாணியில் முடி வளர்த்த பரட்டைத் தலையன். மற்றவனுக்கு மூன்று தங்கப் பற்கள் முளைத்திருந்தன! பார்த்தால் நல்லவர்களாக வும் தோன்றவில்லை, கெட்டவர்கள் போலவும் தோன்றவில்லை. நடுத்தரம்!
சண்டை மூண்டால் அவர்களிருவரையும் சமா ளிக்க முடியும் என்று எனக்குத் தோன்றியதால் நேரடியாகவே விசாரணையில் இறங்கினேன்.
‘சற்றுமுன் இந்தப் பக்கமாய்ப் போன மலாய்க் காரரைக் கண்டு எதற்காகப் பயந்தீர்கள்? அவருக்குத் தெரியாமல் மோதிரத்தை ஏன் ஒளித்தீர்கள்?’
‘அதைப்பற்றி உனக்கென்ன அக்கறை?’ என்று பரட்டைத்தலை சீறியது. ஆனால் தங்கப்பல் சாந்தமாகப் பதில் கூறியது.
‘நீங்கள் எங்களைத் தப்பாக நினைத்துவிட்டீர்கள் போலும். விவரத்தைக் கேளுங்கள். அந்த மோதிரத்தை விலைக்கு வாங்கிக்கொள்ளத் துடிக்கிறார் மலாய்க்காரர். ஆனால் முழு விலையையும் அவரால் தர வசதியில்லையாம். இப்போது பாதித் தொகையையும், அடுத்த மாதம் பாக்கியையும் தருகிறேன் என்கிறார். நாங்கள் அதற்கு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவரோ விடாப்பிடியாக அதைக் கேட்கிறார். வேறு ஒருவரிடம் மோதிரத்தை விற்றுவிட்டோம் என்று சொன்ன பிறகும்கூட விடமாட்டேனென்கிறார். நம்ப மறுக் கிறார். உண்மை தானா என்று சற்று முன்புகூட அதைப் பற்றித்தான் அவர் கேட்டார்!’
மோதிரத்தை மறைத்து வைத்ததற்கான காரணம் தெரிந்ததும், மலாய்க்காரரின் மனத்தைக் கவர்ந்து விட்ட அந்த மோதிரம் எப்படிப்பட்டது என்று பார்க்க ஆசை எழுந்தது.
‘அதை நான் பார்க்கலாமா?’ என்று கேட்டேன். சுற்றுமுற்றும் கவனித்துவிட்டு அதைப் பயபக்தி யோடு எடுத்து என்னிடம் தந்தான் தங்கப்பல்.
‘பத்து அக்கி’ என்று குறிப்பிடப்படும் அக்கிக்கல் பதித்த சாதாரண மோதிரம் அது. ‘ஐம்பொன்’ என்பர்களே-அந்த உலோகக் கலப்பில் உருவானது! பழசாகவுமிருந்தது!
‘என்ன விலைக்கு மலாய்க்காரர் கேட்டார் இதை?” என்றேன்.
‘இருநூறு வெள்ளிக்கு’ என்றது தங்கப்பல்.
திகைத்தே போனேன்.
‘ஒரு வெள்ளிக்குக்கூட இதில் உலோகமில்லை. இருபது அல்லது முப்பது காசுக்கு விற்கிற அக்கிக்கல் இது. இதன் விலை இருநூறு வெள்ளியா?’ என்று வியந்தேன்.
‘இந்த அக்கிக் கல்லின் மகிமை உங்களுக்கெல்லாம் தெரியாது. ஜாவாக்காரர்களுக்குத்தான் தெரியும்’ என்றது தங்கப்பல்.
‘என்ன மகிமை?’ என்றேன்.
‘இந்த ஆள்கிட்ட இதையெல்லாம் சொல்லி என்ன பயன்?’ என்று அலட்சியமாகக் கூறினான் பரட்டை. ஆனால், பரட்டையைப் பொருட்படுத்தாமல் தங்கப்பல் அந்தக் கல்லின் மகிமையைச் சொல்லத் தொடங்கினான்.
‘அக்கிக்கல் பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும். அதை உற்றுக் கவனிப்பவர்களுக்கு ஓர் உண்மை விளங்கும். ஆனால், அவ்வுண்மையை விளங்கிக் கொள்பவர் கொஞ்சம் பேர்தாம்!
‘என்ன உண்மை?’
‘பளிங்குபோல் வழுவழுவென்று இருக்கும் அக்கற் களைக் கூர்ந்து நோக்கினால் உள்ளே பல வண்ணங்கள், வண்ணக் கோடுகள் வண்ணச் சித்திரங்கள் எல்லாம் தென்படும்.’
அவன் கையிலிருந்த மோதிரத்தை வாங்கி அதில் பதித்திருந்த அச்கிக் கல்லை உன்னிப்போடு பார்த் தேன். என்ன ஆச்சரியம்! வட்ட வட்டமான நீல நிறக் கோடுகளின் மத்தியில் இளஞ் சிவப்பு வண்ணத் தில் தாமரைப் போன்ற பூவொன்று மலர்வது தோற்றம் அழகாக அமைந்திருந்தது! வியப்புடன் வினவினேன். ‘இச்சித்திரம் இதில் எப்படி உருவானது?’
‘யாரும் உருவாக்கவில்லை. தானாக உருவானது! ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இதை வாங்கும் போது வெறும் நீல நிறமும் நடுவில் ஒரு சின்னப் புள்ளியும்தாம் இருந்தன. நாள் ஆக ஆகக் கோடு களும் பூவும் உண்டாயின! உயிரோட்டமுள்ள கல்லில் தான் இத்தகைய அதிசய மாறுதல் நிகழும். இது போன்ற அபூர்வக் கற்கள் நல்ல அதிர்ஷ்டம் உள்ளவர் களுக்குத்தாம் கிடைக்கும்!’
‘அப்படியா’ என்று வாயைப் பிளந்த நான், ‘இம் மாதிரிக் கற்களை வைத்திருப்பவர்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும்?’ என்று கேட்டேன்.
‘பலவகை நன்மைகள் உண்டு. ஒவ்வொரு கல்லின் உயிரோட்டத்தையும் அதனுள் வளரும் உருவ அமைப் பையும் பொறுத்து அதற்கேற்றவாறு பயன் கிட்டும். உதாரணமாக பச்சை நிறத்தில் அலைகள் திரள்வது போன்ற உருவமுள்ள கல் வைத்திருப்பவர்களுக்குப் பணத் தட்டுப்பாடு ஒருபோதும் ஏற்படாது. கருப்பு வண்ணத்தினிடையே வெள்ளைப் புள்ளிகள் உள்ள கல் நமக்கு வரும் ஆபத்துக்களை தவிர்க்கும்! வெண்மை யான கல்லில் மின்னல் கோடுகள் பாய்வது போன்ற சித்திரமிருந்தால் அதை அணிந்திருப்பவருக்கு நெருக் கடியான கட்டங்களில் அருமையான யோசனைகள் உதிக்கும்! இதுபோல், காதல் கைகூடுவ தற்கு உதவும் கல் உண்டு! பேய் பிசாசுகளைத் துரத்தும் கல் உண்டு! நோய் நொடிகள் வராமல் தடுக்கும் கல் உண்டு! விரோதிகளை வசியப்படுத்தும் கல் உண்டு! ஜாவாக் காரர்களுக்குத்தாம் இக் கற்களைப்பற்றி அதிகமாகத் தெரியும். ஜாவாவில்தான் இவை அகப்படுகின்றன வாம்.’
‘இருக்கட்டும், உன்னிடமிருக்கும் கல் எந்தக் காரி யத்தில் நலந் தரக்கூடியது?’ என்று குறுக்கிட்டேன்.
‘இது மிகமிக அபூர்வமான ஒரு கல். இந்த வகைக் கல் இலட்சத்தில் ஒன்றுதான் கிடைக்கும். இது குறிப்பாகப் பெண்கள் வைத்திருக்க வேண்டியது. இதை வைத்திருக்கும் பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் நோவு என்பதே இராது!’
‘உண்மையாகவா?’ என்று என்னை மறந்து கூவி விட்டேன்!
‘சத்தம் போடாதீர்கள். அதோ மறுபடி அந்த மலாய்க்காரர் வருகிறார்’ என்று எச்சரித்தான் பரட்டை.
அந்த மோதிரத்தை என் கைக்குள் வைத்து மூடிக் கொண்டேன். மலாய்க்காரர் அப்பால் சென்றதும், ‘இருநூறு வெள்ளிக்கு இதை எனக்குத் தருகிறீர்களா?’ என்று ஆவலுடன் கேட்டேன்.
பரட்டையும், தங்கப் பல்லும் ஒன்றையொன்று ஏதோ பேச்சுப் பார்த்துக்கொண்டன. கண்ணால் பரிமாற்றம் நடந்தது. பிறகு ‘சரி’ என்று சம்மதித்தார்கள்.
மோதிரத்தை வாங்கிப் பத்திரமாய் வைத்துக் கொண்டேன். பிறகு, ‘இப்போது என் கையில் வெள்ளி கிடையாது. இங்கே காசிப்பிள்ளை கம்பத்தில் உறவினர் வீட்டில் என் மனைவி இருக்கிறாள். அவளிடம் வெள்ளி இருக்கிறது. நான் இப்போதே சென்று அவளிடம் மோதிரத்தைக் காண்பித்து இதன் மகிமை களைத் தெரிவித்தால் உடனே வெள்ளி தருவாள். வாங்கிக்கொண்டு உடனே வந்துவிடுகிறேன், என்ன சொல்கிறீர்கள்?’ என்றேன்.
முன் பின் பழக்கமில்லாத என்னை எப்படி நம்புவது என்பதுபோல் தயங்கினார்கள். உடனே என் ‘மணி பர்ஸை’ எடுத்துத் திறந்து அதனுள் ‘பத்திரமாய்’ வைத்திருந்த சிவப்புக் கல் மோதிரம் ஒன்றை அவர்களிடம் காட்டி, ‘நான் வெள்ளி கொண்டுவந்து தரும் வரை இந்த மோதிரம் உங்களிடம் இருக்கட்டும், சரிதானே?’ என்றேன்.
‘இது என்ன மோதிரம்?’ என்றான் பரட்டை.
‘இதுவா? இது ஓர் அற்புத ஒளி படைத்த நாக இரத்தினக் கல் மோதிரம். இதன் அருமை உங்களுக்கெல்லாம் தெரியாது’ என்றேன்.
‘நாக இரத்தினமா!’ வியந்தார்கள் இருவரும். ‘ஆமாம்’ என்றேன் அழுத்தமாக.
‘நாகப்பாம்பு வாய்க்குள் வைத்துப் பாதுகாக்கு மாமே, அதுவா?’
‘அதுவே தான், பிறந்ததிலிருந்து எந்த உயிரையும் தீண்டாத ஒரு நாகப் பாம்பின் விஷமாகப்பட்டது, பல வருஷங்களுக்குப் பிறகு ரத்னக் கல்லாக விளைந்துவிடும். அப்போது அப் பாம்புக்கு இறக்கைகள் முளைத்துப் பறந்து திரியும். அது இரவில் இரை தேடும்போது மாத்திரம் ரத்தினத்தை வாயிலிருந்து கக்கி எடுத்துத் தரையில் வைக்கும். அந்தச் சமயத்தில் அது நமக்குத் தெரிந்தால் உடனே காளைமாட்டின் சாணத்தை அள்ளி அந்த ரத்தினக் கல்லின்மேல் கொட்டி மூடிவிட வேண்டும். நாகம் இரை தேடிவிட்டுத் திரும்பி வந்து பார்க்கும்போது ரத்தினம் அதற்குத் தென்படாது. உடனே துடிதுடித்துச் செத்துப் போகும். பிறகு ரத்தினம் நமக்குத்தான். உயிருக்குத் துணிந்து அஞ் சாமல் இந்த ரத்தினம் எடுக்க வேண்டும். கொஞ்சம் அசந்தால்…தொலைந்தோம்! சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது இதை எவ்வளவோ சிரமப்பட்டு எடுத்து வந்தேன். ஊரிலேயே ஆயிரமாயிரம் ரூபாய் தர முன் வந்தார்கள் இதற்கு. விலைக்கு விற்கமாட்டேன் என்று மறுத்துவிட்டு கொண்டுவந்தேன். இரவில் இதன் பிரகாசத்தைப் பார்க்க இரண்டு கண்கள் போதா! தண்ணீருக்குள் இதைப் போட்டால் தண்ணீர் செந்நீராக மாறும். அவ்வளவு ஒளி மிகுந்தது இது…அதிருக்கட்டும், நேரமாகிறது நான் ஓடிப் போய் மனைவியிடம் வெள்ளி வாங்கி வரட்டுமா?’
‘சீக்கிரம் வந்துவிட வேண்டும்’ என்று நாகரத்தின மோதிரத்தை வாங்கி வைத்துக்கொண்டான் தங்கப்பல்!
நான் அங்கிருந்து கிளம்பி ஊருக்குள் சென்று பஸ் ஏறிச் சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன்!
‘இதை அணிந்துகொண்டால் உனக்குப் பிரசவ வேதனையே இருக்காது’ என்று அக்கிக்கல் மோதிரத்தை என் மனைவியிடம் நீட்டினேன் பெருமையோடு!
அவள் ஒருமாதிரியாக என்னைப் பார்த்துக் கொண்டே ‘எவ்வளவுக்கு இதை வாங்கினீர்கள்?’ என்றாள்.
‘இருநூறு வெள்ளிக்கு!’ என்றேன்.
‘கோலாலம்பூருக்கு போய்ப் பணத்தைப் பாழாக்கி விட்டு வந்திருக்கிறீர்கள்? உங்களை நன்றாக ஏமாற்றி யிருக்கிறார்கள்! பிரசவ நோவு கடவுள் தருவது. அதை யாராலும் தடுக்கவே முடியாது—’ என்று அவள் சொல்லும்போது குறுக்கிட்டு, நடந்த கதையை விளக்கினேன்.
‘அப்படியானால் அந்த நாக ரத்தினக்கல் மோதிரம் உங்களுக்கு ஏது?’ என்றாள்.
‘நாகமாவது ரத்தினமாவது! நடைபாதையில் பத்துக் காசுக்கு வாங்கியது அது!’ என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்!
அக்கிக் கல்லின் அற்புதத்துக்குப் பதிலாக நாகரத்தினக் கல்லின் அற்புதம்! அவன் சொன்ன கதைக்குப் பதிலாக நான் சொன்ன கதை, எப்படி?
– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.