சாரதியின் கார் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 20, 2024
பார்வையிட்டோர்: 2,889 
 
 

“ஹலோ, சாரதி அவங்களா?”

“ஆமா, என்ன வேணும் உங்களுக்கு?”

“நான் ஒரு ஆட்டோ கன்சல்டன்ட். பேரு பார்த்தன். உங்களுக்கு கார் கீர் இந்த மாதிரி வாங்க ஏதும் ஐடியா இருக்கா ?. வருஷ கடைசி. நல்ல ஆஃபர் இருக்கு. எஸ்யூவி (SUV) தான் இப்போ நல்ல ட்ரெண்ட். அட்டகாசமா மலையில கூட ஈஸியாப் போலாம். வீட்ல ஏழு பேர் இருந்தா கூட ஜாலியாப் போலாம்”.

“இல்லப்பா, எங்க வீட்ல ரெண்டு பேர் தான் இருக்காங்க. கார் வாங்கணும்னு சின்ன வயசுல இருந்தே எனக்கு ரொம்ப ஆசை.. ஆனால், அப்படியே தள்ளிப் போயிட்டே இருக்கு. என்னப் பண்றது. கொடுப்பினை இல்ல. எஸ்யூவி எல்லாம் நம்ம லெவலுக்கு ரொம்ப பெருசு”.

“அப்ப நீங்க மிட்சைஸ் கார் ஒன்னு வாங்கிடுங்க. ரொம்ப காம்பேக்டா இருக்கும். அதுலயும் நீங்க ஆட்டோமேட்டிக் வாங்கிட்டீங்கன்னா உங்களுக்கு ஈஸியா ட்ரைவ் பண்றதுக்கு ஆகும். பரவாயில்லையா!. இப்பவே உங்க பேர்ல புக் பண்ணட்டுமா? ஒரு ஏழு எட்டு லட்சத்தில் ஆட்டோமேட்டிக் கார் கிடைக்குது”.

“பெட்ரோல் விலை, மெயின்டனன்ஸ்-யை நினைத்தால் பயமா, கவலையா இருக்கு”.

“அப்ப நீங்க பேசாம டூவீலர் வாங்கிடுங்களேன் !. இப்ப நல்ல எலக்ட்ரிக் வண்டிங்க நிறையக் கிடைக்குது”.

“பேட்டரின்னா ரொம்ப பயமா இருக்கு. அப்பப்போ பக்பக்குனு எரிஞ்சி போறது நியூஸ்ல அடிபடுதே.?. வண்டிக்கு கியாரண்டி இருக்கோ இல்லையோ நம்ம உசிருக்கு உத்திரவாதம் இல்லையே ! “.

“அதெல்லாம் சைனா மேக். அப்படி தான் சார். நல்ல பிராண்ட் டிவிஎஸ், பஜாஜ் மாதிரி வாங்கிட்டா தொந்தரவே இல்லை. ஆனா, வண்டி வெல கொஞ்சம் ஜாஸ்தி. ஒன்னரை லட்சம். பெட்ரோல் பத்திக் கவலையே வேணாம். சத்தமில்லாமப் போகலாம். ஒரு பய உங்களைக் கண்டுக்க மாட்டாங்க. ”.

“என்னுடைய யுசேஜ் ரொம்ப கம்மி. வெளியே போறது, வரது ரொம்ப அபூர்வம். அதிகபட்சம் ஒரு நாலஞ்சு கிலோமீட்டர் வாரத்துக்குப் போவோம். அதனால பேட்டரி எலக்ட்ரிக் வண்டி ரொம்ப காஸ்ட்லி ஆகும். அதனால யோசிக்க வேண்டி இருக்கு”.

“அப்போ, நீங்க டூ-இன்-ஒன் சைக்கிள் வாங்கிடுங்க. இம்போர்ட்டட் சைக்கிள் வித் பேட்டரி இருக்கு. ஒரு முப்பதாயிரம் ஆகும். சூப்பரா இருக்கும். பெடலும் பண்ணிக்கலாம். ஜிம்-க்கு போன மாதிரியும் இருக்கும்”.

“நான் சின்ன வயசுல சைக்கிள் ஓட்டினது அவ்வளவு தான். இந்த 61 வயசில சைக்கிள் பேலன்ஸ் பண்ணி நம்ம சிட்டியில ஓட்ட முடியுமா?. டவுட்டா இருக்கு. ஃபாரின் மாதிரி சைக்கிளுக்குன்னு தனி ரூட் போடணும்”.

“குதிரை வண்டி எதாவது ட்ரைப் பண்றிங்களா?”

“அதிலெயெல்லாம் ‘டொங்கு டொங்கு-ன்னு போனா முதுகு தனியா கழண்டிடும். நமக்கல்லாம் சரிப்படாது”.

“ஹலோ, அப்போ உங்களுக்கு ஃபைனலா இன்னொரு சாய்ஸ் இருக்கு. நடராஜா வண்டி தான் உங்களுக்கு. பைசா தொந்தரவு இல்லை. ஆரோக்கியத்துக்கும் ரொம்ப நல்லது. இத விட்டா வேறு எதுவுமில்லை”.

“அது கூட எனக்கு சரிப்படாதுன்னு நினைக்கிறேன். என் டாக்டர் எனக்கு வாக்கிங் தனியாப் பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்கார்”.

“என்ன, டாக்டர் சொல்லி இருக்காரா? எந்த டாக்டர் அந்த மாதிரி சொன்னது?. இருக்கிறதிலேயே நடக்கிறது தான் நல்லப் பயிற்சின்னு எல்லா டாக்டரும் சொல்லுவாங்க?”.

“எனக்கு நரம்பு டாக்டர் தான் சொல்லியிருக்கிறார். வெர்டிகோ (vertigo) என்ற தலைச்சுற்றல் வியாதி இருக்கு. இந்த மாதிரி அப்பப்ப வரும். ஜாக்கிரதையா இருக்கணுமாம் அதனால, தனியா வாக்கிங் பண்ண முடியாது. கூட யாராவது இருக்கணும்”.

“அட பாவமே !. அப்போ டெய்லி நானே உங்க வீட்டுக்கு வந்து உங்களை நடைக்குக் கூட்டிட்டுப் போறேன். எனக்கு பெட்ரோல் சார்ஜ் மட்டும் கொடுத்துடுங்க சார்!”.

அடுத்து என்னச் சொல்லி அவரிடமிருந்து தப்பிக்க முடியும் என்று சாரதி மண்டையைக் குடைந்துக் கொண்டார். உங்களுக்கு எதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

– டிச 2023, குவிகம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *