சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 4,589 
 
 

ஐயப்ப பக்தர்களைக் கண்டாலே, விண்ணாடம் பிள்ளையவர்களுக்கு மொசலைக் கண்ட வேட்டை நாயாட்டம் கும்மாளக் குஷியாகிவிடும். “சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்” என்று அலம்பறை பண்ணத் தொடங்கிவிடுவார்.

பிள்ளையவர்கள் விண்ணாடத்தால் பேரெடுத்தது மாதிரியே நாத்திகவாதத்துக்கும் பேர் போனவர். ‘பரிசுத்த ஆவியில புட்டு வேகுமா? சரஸ்வதி குடியிருக்கறது உன்ற நாக்குலீன்னா, அவ மூச்சா – ஆயி போறதெல்லாம் உன்ற வாய்க்குள்ளதானா?’ என்றெல்லாம் கேட்கிற பெரியாரின் தீவிர பக்தர்.

ஆசாமிகளையே அந்தப் பாடு படுத்துகிறவர், கருப்போ நீலமோ கட்டிய ஐயப்ப சாமிகளைக் கண்டால் சாமானியமாக விட்டுவிடுவாரா?

“ஏப்பா,… தென்னுமோ படத்துல விவேக்கு சொன்னாப்புடி மனுசருகள்லதான் பொம்பளையும், பொம்பளையும் ஃபயராயிக்கறாங்கொ,… ஆம்பளையும் ஆம்பளையும் எர்த்தாயிக்கறாங்கோன்னு பாத்தா,… சாமிகள்ல கூடவா…? செரி, அந்த ‘சாமி பட’ சமாச்சாரந்தான் அப்புடீன்னு பாத்தா,… அதெப்புடியப்பா ஆம்பளையும், ஆம்பளையும் ஜாயிண்டாயிட்டா கொளந்த பொறக்கும்?” என்று ஐயப்பன் பிறப்பையே கேள்விக்குரியதாக்கி, அடுத்தடுத்த கணைகளை சரமாரியாகத் தொடுப்பார். அதனால், அவரைக் கண்டாலே ஐயப்ப சாமிகள் ஐயோ அப்பா என்று அலறியடித்து ஓடுவார்கள்.

அப்படியாப்பட்ட அவர்களும் அவரின் வீடு தேடி வரவேண்டிய கட்டாயம் ஒரு கட்டத்திலே வரும் என்பதுதான் அவர்களுக்கு எழுதி வைக்கப்பட்ட வெங்கொடுமை. ஒரிஜினல் ஐயப்ப சாமியான சாட்சாத் சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த பூ தெச்சி என்பதால், ட்யூப்ளிக்கேட் சாமிகளான ஐயப்ப பக்தர்கள், கன்னிசாமி அன்னதான பூஜையின்போதும், கட்டுநிறையின்போதும், தெச்சிப் பூவால் பூஜித்து வழிபடுவது நியமம். ஊருக்குள் தெச்சிப்பூ உள்ள ஒரே இடம், விண்ணாடம் பிள்ளையவர்களின் களம்.

பிள்ளையவர்கள் பெரியாரியவாதி என்றாலும், அன்னாரின் திருமதி தெய்வாத்தாள், ஒழலப்பதி கருப்பராயன் முதல் கொடுங்ஙலூர் பகவதி வரை தமிழ் – மலையாள சாமிகள் அனைத்துக்கும் பக்தை. பிள்ளையவர்களின் நாத்திகப் பருப்பு ஊருக்குள் வெந்தாலும் வீட்டில் வேகாது. அங்ஙனம் திருமதியாள் வீடெங்கும் சாமி படங்களை மாட்டி வைத்து, வாசலேகம் நந்தியாவட்டை, செம்பருத்தி, அரளி, தெச்சி, மந்தாரை, துளசி ரகங்களையும் வளர்த்து வந்தாள். அதில் தெச்சியை நாடி வரும் ஐயப்ப பக்தர்கள், பிள்ளையவர்களிடம் வசமாக மாட்டிக்கொள்வது பதிவு.

அன்றைக்கும் அப்படி, ஐந்தாறு சாமிகள் வலிய வந்து சிக்கியிருந்தனர். ஓரிருவர் வந்தால் பிள்ளையவர்களின் விண்ணாடத்தைச் சமாளிக்க முடியாது என்று, அவர்கள் படை திரட்டி வந்ததில் பிள்ளையவர்களுக்கு பெருவேட்டைக் கொண்டாட்டமாகிவிட்டது. ஐயப்ப பக்தர்கள் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, பேட்டை துள்ளிக்கொண்டிருந்தார்.

“ஏனுங் ஐயப்பா,… மிந்தியெல்லாம் சாராயக் கடைல, ‘ஐயப்ப சாமிகளுக்குத் தனி டம்ளர்ல வளங்கப்படும்’னு போர்டு வெச்சிருப்பாங்களே,… இப்பவும் கள்ளுக் கடைக, பாருகள்ல அந்த சவுகரியம் உண்டுங்ளா?” என்று ‘பைண்டு’ (‘ஆஃப்’பைக் குறிக்கும் கேரளக் குடிமகன்கள் மொழி) செல்லத்துரையிடம் போட்டு வாங்கினார்.

“ஏனுங் பகவானே,… உங்குளுக்கு ஒன்னராடம் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) ‘கவுச்சி’ இல்லாம இருக்க முடியாதே…! சரணங் கூப்புட்டு மாலையக் கள்ட்டி வெச்சிட்டு, வேலி சாடீட்டுத்தான் இருக்கறீங்களா?” என்று சகாதேவனின் அந்தரங்க லீலைகளை அம்பலமாக்கினார்.

அன்று மண்டிக்கு ஐப்ரீடு தக்காளி கொண்டு போகிற கெடுவு. தெய்வாத்தாளும், பொம்பளையாளுகளும் தக்காளி பறித்து மக்கிரியில் கொண்டு வந்து வேப்ப நிழலில் கொட்ட; அழுகல், சொத்தை, புழுவெட்டு, கிளி – மயில் கொத்தியது ஆகியவற்றை நீக்கி, கூடைக்குப் பகரம் இப்போது புழக்கத்தில் உள்ள ப்ளாஸ்டிக் பெட்டிகளில் நிரப்பிக்கொண்டிருந்தார் பிள்ளையவர்கள். கண்ணும், கையும் அக் காரியத்தில் கவனமாக இருந்தாலும், மனமும், வாயும் ஐயப்ப தாக்குதல்களிலேயே மையம்கொண்டிருந்தன.

ஆசாமிச் சாமிகள் மீதான டுவாய்க்கித் தாக்குதல்கள் முடிந்ததும் அசல் சாமி மீதான ஏவுகணைத் தாக்குதல்.

“உங்க ஐயப்பன் கால் கட்டுப் போட்டு குத்த வெச்சுக் குக்கீட்டிருக்கறாரே,… அதுக்கு அருத்தம் என்னோன்னு தெரியுமா சாமிகளே…? பொராணத்துல அதுக்குத் தத்துவ விளக்கமெல்லாம் சொல்லி இருப்பாங்கொ. நெசத்துல நடந்ததே வேற! ஐயப்பன்னு ஒரு ஆளு இருந்தது, வாள்ந்ததெல்லாம் வாஸ்த்தவந்தேன். ஆனாட்டி, அவன் ஒரு வளிப்பறிக் கொள்ளைக்காரன். வீரப்பனாட்ட, வால்மீகியாட்ட, காட்டுக்காள ஒளிஞ்சுட்டு கொள்ளை, கொலைன்னு, அதிக்கலம் பண்ணீட்டிருந்தான். கடசீல அவனப் புடிச்சு களுமரத்துல ஏத்தி சிட்சை குடுத்துட்டாங்கொ.

“களுமரம்ன்னா என்னுன்னு தெரியுங்களா? இப்பத்த பசக,… உங்களுக்கெல்லாம் தெரியாது. வங்கொடுமையா அக்குருமம் பண்ற குத்தவாளிகளுக்கு அந்தக் காலத்துல குடுத்த சிட்சை அது.

“வளுக்கா மரம் இருக்குதல்லொ,… அந்த மாற ஒசக்கமான மரம். ஆனாட்டி, இதுல அடிப் பக்கந்தான் பெருசா இருக்கும். மேல போகப் போக சீவி செதுக்கி, உச்சாணீல பெனசக் குச்சியாட்ட கூமாச்சி பண்ணியிருப்பாங்கொ. குத்தவாளிய ‘சேம் சேம் பப்பி சேம்’ ஆக்கி, குத்த வெச்ச மானிக்கு காலக் கையக் கட்டி, அப்புடியே அலாக்காத் தூக்கி களுமரத்து உச்சாணிய மந்தைவாயில சொருகி உட்ருவாங்கொ.

“ஒடம்பு தம் பாரத்துல தன்னால இத்தினி இத்தினியா எறங்கும். களுமரம் ஒடம்புக்குள்ள பூந்து, கொடலு குண்டாமண்டியெல்லாம் பிச்சுட்டுப் போயி, பெடைச்சல்ல களுத்துக்கட்ட முட்டீட்டு வரும். இல்லாட்டி ‘ட்ரெய்ட்டா’ மண்டைக்குள்ளயே ஏறி, தலைச்சோறையும் பிச்சுட்டுப் போகும்.

“இது சட்டுப் புட்டுன்னும் நடக்காதுங் ஐயப்பா. நாளே ஆயிப் போயிரும். வலி பொறுக்க முடியாமப் பெடை பெடைச்சு, சித்தரவதைப்பட்டு, அணு அணுவா சாகோணும். ஐயப்பனுக்கும் அந்த மாறத்தான் சிட்சை குடத்தாங்கோ, அதோட அடையாளந்தான் அவுரு கால் கட்டோட குத்த வெச்சுக் குக்கீட்டிருக்கறதுன்னு, ஆரோ காணம் ஒரு ஆராய்ச்சிப் புஸ்த்தகத்துல எளுதியிருந்தாங்கொ.”

ஐயப்ப சாமிகளுக்கு அது ஏற்புடையதாகவோ, சகிக்கக் கூடியதாகவோ இல்லை. பிள்ளையவர்களோ அல்லது அந்த நூலை எழுதியவரோ, நாத்திக நோக்கில் விடுகிற கட்டுக்கதை என்றே அவர்கள் நம்பினர். ஆனாலும், விண்ணாடத்தாரிடம் வாதிட்டு ஜெயிக்க முடியாதென்பதால், “அது எப்புடியோ இருக்குட்டுங் பகவானே! பூசைக்கு நேரமாச்சு; நாங்க பூப் பொறிச்சுட்டுக் கௌம்பறோம்” என்று விலகி நழுவினர்.

பூஜைப் பூக்களையும் இலைகளையும் ஒயர் கூடையில் சேகரித்துக்கொண்டிருக்கும் அவர்களின் புறமுதுகிலும் கூட பெரியார் பக்தரின் கணைகள் பாய்ந்துகொண்டுதான் இருந்தன.


“ங்கோவ்…! மசால் பில்லு அணப்புல பாருங்கொ உங்க பங்காளி எருமைக பூந்துருச்சூ…” தெய்வாத்தாளின் குரலெடுப்பு அசரீரியாக ஒலித்தது.

“இவ ஒருத்தி! தென்னுமோ அந்த எருமைகதான் என்ற பங்காளீகங்கறாப்புடியல்லொ சொல்றா” என்றபடி பிள்ளையவர்கள் துள்ளியெழுந்தார். அவரது தோட்டத்துக்கும், பாகம் பிரித்துப் பங்காளியாகிப் போன அவரது தம்பியின் தோட்டத்துக்கும் எல்.ஓ.சி.யாக உள்ள பொத்துப்பொளியைத் தாண்டி வந்து, தம்பியின் எருமைகள் இவரது மசால் பில் அணப்பைக் கபளீகரம் செய்துகொண்டிருந்தன.

அறுவடைக் காலமென்பதால் இருவரின் விளை நிலங்களிலுமே பாதிக்கு மேல் வெற்று அணப்புகள்தான். தம்பிப் பிள்ளையின் தக்காளி அழிகாட்டில் எருமைகளை அண்ணாங்கால் போட்டு மேய விட்டுட்டு, கொளுந்தியாளும், மருமகளும் பொம்பளையாட்களோடு பருத்தி எடுத்துக்கொண்டிருந்தனர். அந்த அழிகாட்டிலிருந்தே எருமைகள் எல்.ஓ.சி., மீறியிருந்தன. மூக்கணாங்கயிறு குத்தாத, தளை கவுறும் போட்டுவிடாத எருமைக் கன்றுகள், சூரியனைப் பார்த்து மூக்கைச் சுளித்து, நமைச்சல் ஏற்றி உற்சாகமாகி, “ஒய்ய்ங்க்க்…! ஒய்ய்ங்க் – ஒய்ய்ங்ங்…க்” என மூக்கொலி எழுப்பியபடி கட்டற்று ஓடி வந்ததும் தாய் எருமைகள் பூந்திருந்த மசால் அணப்புக்குள்தான்.

“எப்பப் பாத்தாலும் இவளுகளுக்கு இதே சோலியாப் போச்சு. இன்னைக்கு அந்த எம வாகனங்கள பிரியாணி ஆக்கி, எமன் பொண்டாட்டிக்குப் படப்பு போடாம உடப் போறதில்ல.” கறுவியபடி பிள்ளையவர்கள் விறகுப் பட்டறையிலிருந்து வழுக்க மட்டையை உருவிக்கொண்டார். “ஓடுங்கொ – ஓடுங்கொ,… வெசையாப் போங்கொ.” தெய்வாத்தாளின் அசரீரியும் உஸ்படுத்திவிடவே, நாலு கால் வேகத்தில் ராஞ்சினார்.

இடுப்பு ஒசக்கத்துக்கு செழித்து வளர்ந்திருக்கும் மசால் பில்லை, ஆவலோடும், அவுதியோடும் மேய்ந்துகொண்டிருந்த எருமைக் குடும்பங்கள் மீது ஒற்றைச் செந்நாய்ப் பாய்ச்சல். அவற்றின் முதுகுகளிலும் அன்னை வயிறுகளிலுமாக தொம் தொம்மென்று சத்தமெழுப்பியது வழுக்க மட்டை. ரெட்டைத் தடிப்புத் தோல் கொண்ட அந்த எருமைகளே, ‘ஐயோ…!’ என்று எமன் மனைவியை அபயம் கூப்பிட்டு அலறிவிட்டன.

எமன் சம்சாரம் ரட்சிக்க வந்தாளோ இல்லையோ, இவரின் தம்பி சம்சாரம் பதறியடித்து வந்தாள். தெய்வாத்தாளின் முதல் குரல் கொடுப்பிலேயே எருமைகளின் எல்லை தாண்டலை அறிந்துகொண்டிருந்த அவள், பருத்தியெடுப்பை நிறுத்தி, பெருத்த பஞ்சு மடி தொங்கித் தூளியாட, அதன் வேகத் தடையால் தடுமாறியபடி, அவர்களின் அழிகாட்டினூடாக ஓடி வந்துகொண்டிருந்தாள். பிள்ளையவர்கள், ‘ஒய்ங்க்’ எடுத்துத் துள்ளோட்டமிட்டு மசால் பொத்தையையே துவம்சமாக்கிக்கொண்டிருந்த எம வாகனக் கன்றுகளை செம்மண் கட்டிகள் வீசி விரட்டிவிட்டு, மீண்டும் தாய் எருமைகளைத் தாக்கிக்கொண்டிருக்கையில், “அய்யோ,… மச்சா! அது செனை எருமைங் மச்சா! அதையப் போட்டு அத்தாச்சோட்டு வளுக்கா மட்டைல, அதுவும் அள்ள வகுத்து மேலயே அடிக்கறீங்களே மச்சா!” என்று நெஞ்சு பதைக்க வந்து நின்றாள்.

அவள் வரவைப் பார்த்து தக்காளிக் காட்டிலிருந்து தரிசனமெடுத்து வந்துகொண்டிருந்த தெய்வாத்தாளுக்கு, அவளின் ‘மச்சான்’ என்ற அழைப்பு ஆங்காரத்தைக் கிளப்பியது. மசால் பொத்தையில் எருமைகள் புகுந்ததை விட இப்போது இந்த விஷயமே இவளுக்கு முக்கியமாகியும்விட்டது.

“அதெப்புடீடீ நீயி என்ற பண்ணாடிய மச்சான்னு கூப்படலாம்? குடும்பத்த ரெண்டு பண்ணி பாகம் பிரிக்க வெச்சவளே நீதானடீ? அன்னைக்கே அண்ணனுமில்ல – தம்பியும்மில்ல; செத்தாலுமில்ல – பொளைச்சாலும்மில்லீன்னு அத்துட்டாச்சல்லடீ!? அப்பற எதுக்குடீ மச்சாண்டாரு வரிசை வெக்கற? அதும்மு வார்த்தைக்கு வார்த்தை மச்சான், மச்சான்னு கொஞ்சிக் கொளையறயே,… என்னுமோ நீதான் அவருக்கு முந்தி விரிச்சவளாட்டம்?” என்று கொடுங்ஙலூர் வெளிச்சப்பாட்டம் (சாமியாடி) மாதிரி சன்னதம் கொண்டு ஆடினாள்.

“மச்சாண்டாருன்னு மருகேதி குடுத்துப் பேசுனதுக்கு, முந்தி விரிக்கிற நாயத்துக்கு இளுக்கறயே,… நீயெல்லாம் ஒரு பொண்டாட்டியா?” என்றபடி எருமைகளைப் பொத்துப்பொளிக்கு அப்பால் ஓட்டிக்கொண்டு போனாள் கொளுந்தியாக்காரி.

“ஆமாடி! நாம் பொண்டாட்டியில்ல; நீதாம் பொண்டாட்டி. அதுதான் மச்சான், மச்சான்னு அந்தக் கொஞ்சு கொஞ்சறயே…! உட்டா மசால் பில்லு அணப்புலயே அவுர மல்லாத்துனாலும் மல்லாத்தி, மலையாள வித்தை காட்டிப் போடுவ” என்கவும், எல்லைப் பொளி கடந்திருந்தவளுக்கு போர்க்குணம் மூண்டு விட்டது. ‘செம்மொழிச் செந்தமிழில்’ அந்தவளே இந்தவளே என்று அழிமானக் காடேகம் வீசி விதைக்கலானாள்.

வாளில்லாத கொடுங்ஙலூர் பகவதியாகவே தாண்டவமாடிக்கொண்டிருந்த தெய்வாத்தாளும், தானாரம் தன்னாரம் கொட்டி, பச்சைத் தெறிப் பரணிகளை அள்ளியள்ளித் தெளிக்கலானாள்.

ரெண்டுகளும் ஒண்ணையொண்ணு மிஞ்சும். புழுத்த நாய் கேட்டால், ‘எஞ்சாவுக்கு இவளுகதான் காரணம்’ என்று எழுதி வைத்துவிட்டு, புளிய மரத்தில் தூக்குப் போட்டுக்கொண்டு செத்துவிடும்.

பொம்பளைகள் தெறிக்கு காது கொடுக்க முடியாமல் விண்ணாடம் பிள்ளை விரலடைத்துக்கொள்ளப் போனபோது, பொட்டி ஆட்டோச் சத்தம். யுத்தத்தைப் பெண்களே தொடர விட்டுவிட்டு, அவர் புறமுதுகிட்டார். பூப்பறித்துக்கொண்டிருந்த ஐயப்ப சாமிகள் குழு எப்போதோ போய்விட்டிருந்தது. மிச்சமிருந்த தக்காளிப் பெட்டிகளையும் அவசரமாக நிறைத்து, முக்கால் பாகம் தக்காளிப் பாரமுள்ள ஆட்டோவில் ஏற்றி, ஓட்டுநர் இருக்கையில் தானும் ஒண்டித் தொற்றிக்கொண்டார்.


வேலந்தாவளம் மண்டியில் தக்காளிப் பெட்டிகளை இறக்கிய பிறகு, ஆட்டோ மறுபடியும் ட்ரிப் அடிக்கத் திரும்பிவிட்டது. சாயங்காலம் ஓட்டுநரே வாடிக்கையாள விவசாயிகளின் காலிப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு,

அவரவர் காடு களங்களில் சேர்ப்பித்துவிடுவானாதலால், ஏலம் முடிந்து பணம் வாங்கியதுமே பிள்ளையவர்கள் கிளம்பிவிட்டார்.

ஒழலப்பதி வழி செல்லும் பேருந்துகள், சிற்றுந்துகள் எதையும் ஜங்ஷனில் காணோம். கூவிக் கூவி ஆள் சேர்த்துக்கொண்டிருந்த ஷேர் ஆட்டோவில் போய்விடலாம் என்றிருக்கையில், கன்னிசாமி அன்னதானம் முடிந்து வந்துகொண்டிருந்த ‘பைண்டு’ செல்லத்துரை சாமியும், சகாதேவன் சாமியும் இவரைப் பார்த்துவிட்டு ‘எக்ஸெல்’லை நிறுத்தினர்.

“கட்டுநெறைக்கு ஐயப்பன் கோவில் குருசாமிகிட்டச் சொல்றதுக்குப் போயிட்டிருக்கறமுங் பகவானே! வர்ற வளீல வெச்சு காரியம் தெரிஞ்சுதுங். மண்டீல இருந்தாலும் உங்களையப் பாத்து எச்சரிக்கை பண்ணீட்டுப் போகலான்னு அங்க வர்றக்கு இருந்தம். இங்கயே தட்டுப்பட்டுட்டீங்க” என்ற சகாதேவன், இவரது ஆட்டோப் பயணத்தை ரத்து செய்ய வைத்துவிட்டு, ஒதுக்குப்புறமாக தனியே அழைத்து விவரம் தெரிவித்தான்.

முற்பகலில் நிகழ்ந்த மசால் அணப்புத் தகராறு, மத்தியானம் வீடு திரும்பிய இவரது தம்பி மற்றும் தம்பி மகனிடம் கொளுந்தியாளால் சொல்லப்பட்டிருக்கிறது. அவளே அப்படிச் சொன்னாளோ அல்லது அவர்கள் அப்படிப் புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை; விண்ணாடம்பிள்ளை அவளை முந்தி விரிக்கக் கூப்பிட்டதாக தம்பியும், தம்பி மகனும் ஊருக்குள் தெரிவித்திருக்கிறார்கள். அதற்குப் பழி வாங்கியே ஆகவேண்டும் என்று ஒழலப்பதி ஜங்ஷனில் காத்துக்கொண்டுமிருக்கிறார்களாம். பேருந்திலோ ஆட்டோவிலோ இவர் சென்று அங்கு இறங்கியதுமே, அந்த முச்சந்தியிலேயே வைத்து, இவரைச் செருப்பால் அடிப்பது அவர்களின் திட்டம்.

அதைக் கேட்டதுமே பிள்ளையவர்கள் அந்தம் விட்டுவிட்டார். “அட,… அதைய நாஞ் சொல்லுலயப்பா. நம்ம சம்சாரமும், கொளுந்தியாளுந்தான் வாய்க்கு வாய் வெச்சுட்டாங்கொ. நான், ‘அச்சரம்’ மிண்டுல. ‘எங்கியோ போற மாரியாத்தா – எம் மேல வந்து ஏறாத்தா’ன்ன கோப்புல, சம்சாரம் பேசுன பேச்சுக்கு என்னைய செருப்பால அடிக்கறதா?” என்றார் பரிதாபமாக.

“சம்பவம் தொடங்கறப்போ நாங்களும் களத்துலதானுங்ளே, பகவானே! பொத்துப் பொளிக்காரங்களுக்குள்ள எப்பவும் இருக்கறதுதானேன்னு விட்டுட்டோம். அதுவும்மில்லாம, மஞ்சமாதாக்க ரெண்டு பேரும் பச்சைத் தெறி அர்ச்சனை பண்ணீட்டிருக்கறப்போ – சாமி சரணம் – நாங்க கிட்ட வர முடியுமோ? பூவக் கூட முழுசாப் பொறிக்காம, காதப் பொத்திட்டாக்கும், ‘எஸ்’ (எஸ்கேப்) ஆனோம். பின்ன நடந்தது எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும், மாலை போட்ட எங்கள மட்டுமில்லாம, சாட்சாத் தெய்வங்களையே நீங்க பச்சை, பச்சையா விமர்சிக்கிறவராச்சே! அதனால, கொளுந்தியா மஞ்சமாதாவக் கூப்புட்டிருப்பீங்களோன்னு – சாமி சரணம் – ஒரு சம்சியம் இருந்துச்சு.”

சகாதேவன் சொல்லி முடித்ததும், “இதெல்லாம் சாமி குத்தத்துல வர்றதுங் சாமீ! நம்மள மாற மாலை போட்ட சாமிகள விண்ணாடம் பண்ணுனாலுந் தேவுல,… இவுரு ஐயப்பனையேயல்லொ அந்த மஞ்சமாதாளுகளாட்ட அசிங்கரம் அசிங்கரமாப் பேசிப் போட்டாரு. அதுதேன், முற்பகல்ல செஞ்சது பிற்பகல்லயே வெளைஞ்சிருச்சு” என்றான் பைண்டு.

“இத்தனை காலம் நீங்க பேசுன பேச்சுக்கு ஐயப்பன் குடுக்கற சிட்சையாக் கூட இது இருக்கலாங் பகவானே! சாமி சரணம்!” என்றுவிட்டு சகாதேவன் எக்ஸெல்லைக் கிளப்பிவிட்டான்.

ஒரு வேளை அவர்கள் சொல்வது சரியாக இருக்குமோ என்று அவரது உணர்ச்சி மனம் பேதலித்தது; பகுத்தறிவு மனம் முழித்தது. இரண்டு மனங்களின் வாதப் பிரதிவாதங்கள் முடிவற்று நீண்டதேயல்லாமல் தீர்ப்பேதும் கிடைக்கவில்லை.

“அடிதடி, வெட்டு – குத்துன்னாலும் தேவுல. ஆசுவத்திரீல படுத்தோம், டேசனுக்கும் கோடதிக்கும் நடந்தோம்ங்கறதோட போயிருக்கும். செருப்படி வாங்குனா சென்மத்துக்கும் அவமானம் போகாதே…! என்ன பண்றது?” என யோசித்தபடி வெகுநேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.


நாலே காலுக்கு ஒழலப்பதி ஜங்ஷனில் வந்து நின்ற சிற்றுந்தின் பின் படிக்கட்டுக்கு முந்தைய இருக்கையில் விண்ணாடம் பிள்ளையின் தலை தென்பட்டது. ராமலிங்கம் பிள்ளையும், சதீஷும் பரபரப்புடன் ஆயத்தமாகினர். விண்ணாடத்தார் இறங்கி வந்த பிறகு, முச்சந்தியோர் காணும்படியாக செருப்படி போடுவது என்று திட்டம். ஏற்கனவே வஞ்சினம் கூறிக் கறுவிக்கொண்டிருந்ததால் முச்சந்தியோரும் இந்த அரிய காட்சியைக் காணவே ஆவலுடன் காத்திருந்தனர்.

இறங்க வேண்டிய பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு விண்ணாடம் பிள்ளையவர்கள் நிதானமாக இறங்கினார். செருப்பைக் கழற்றி எடுத்து ஓங்கியபடி அவரை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்த ராமலிங்கம் பிள்ளை மற்றும் சதீஷின் கரங்கள் ஒரு கணம் அந்தரத்தில் உறைந்துவிட்டன. பிறகு பதறிபடி தாழ்ந்து செருப்புகளைக் கீழே போட்டன.

கருப்பு வேட்டி, கழுத்தில் ஐயப்ப மாலைகள், நெற்றியில் விபூதி, சந்தன – குங்குமத்தோடு நின்றிந்த விண்ணாடம் பிள்ளையவர்கள், “சாமி சரணம்; போடுங்க தோப்புக்கரணம்!” என்றார், விஷமச் சிரிப்போடு.

– வாரமலர், 21 ஆகஸ்ட் 2011. புனைப் பெயர்: ஆறாம் தம்புரான்.

கதாசிரியர் குறிப்பு:

வாரமலர் இதழில், ஆங்காங்கே வணிக இதழ் தரப்பின் சிற்சிறு எடிட்டிங்குகளோடு பிரசுரமான இக் கதை, ‘வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது’ என்ற தலைப்பிலான எனது சிறுகதைத் தொகுப்பில் (2016, பழனியப்பா ப்ரதர்ஸ் வெளியீடு) எனது மூலப் பிரதிப்படியே முழுமையாக இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்றிருப்பது, அந்த மூலப் பிரதியின் செப்பனிடப்பட்ட (2022 ஜனவரி) வடிவம். வாசகர்கள் இதையே இறுதிப் பாடமாகக் கொள்ளவும்.

வாரமலரில் சிறுகதைகள் எழுத நான் பயன்படுத்திய பல்வேறு புனைப்பெயர்கள் மேற்படி தொகுப்பு முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *