‘சர்வர்’ சந்தானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 8,074 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சினிமாக் கொட்டகையில் ‘இண்டர்வெல்’ நேரம். திடீ ரென்று பெஞ்சு வகுப்பிலிருந்து ஒரு சீட்டிச் சத்தம் கேட்டது. ஒரு ‘பரட்டைத்தலை’ பெஞ்சு மேல் நின்று கொண்டு பால் கனி’ பக்கமாகத் திரும்பி , “டேய்! அதோ பாருடா, சினிமா ஸ்டார் மிஸ் சந்திரா ராணி…” என்றான். உடனே, பத்துப் பதினைந்து பேர் மள மள வென்று பெஞ்சு மீது ஏறி நின்று சீட்டியடிக்கத் தொடங்கி விட்டார்கள். 

அத்தனை கும்பலில், அந்த அரை வெளிச்சத்தில் சினிமா ஸ்டார் சந்திரா ராணியைக் கண்டு பிடித்தது வேறு யாருமில்லை; சர்வர் சந்தானந்தான்! ஓட்டலில் வேலை செய்வது தன்னுடைய தலைவிதி என்றும், தனக்கிருக்கும் ‘பர்சனாலிடிக்கும், திறமைக்கும் தான் சினிமா வானில் மின்னிக் கொண்டிருக்க வேண்டிய ஒரு பெரிய ‘ஸ்டார்’ என்றும் அவன் எண்ணிக் கொண்டிருந்தான். ‘நான் பிறந்த நட்சத்திரம் சரியில்லை; அதனால் நான் ஒரு ஸ்டார் ஆகாமல் இங்கே காப்பி ஆற்றிக்கொண்டிருக்கிறேன்” என்று எல்லோரிடமும் சொல்லுவான். 

அவன் ஆஸ்தியெல்லாம் ஒரு டிரங்குப் பெட்டிதான்; அந்தப் பெட்டிக்குள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, சோப்பு. ஷேவிங் செட், பவுடர் டப்பா . சினிமாப் பாட்டுப் புத்தகங் கள் – இவ்வளவும் இடம் பெற்றிருந்தன. 

டிரங்குப் பெட்டியைத் திறந்தால் பிரபல சினிமா நட்சத்திரங்களின் வர்ணப் படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். 

‘புஸ்’ என்று வளர்ந்து புதர்போல பூத்து நிற்கும் கிராப்பு. சலவையிலிருந்து வந்த மெல்லிய மல்ஜிப்பா . அதற்குள்ளே வலை பனியன். கழுத்தைக் சுற்றிலும் டெக்னி கலர் காசிப் தெரியும் ஒன்று. கழுத்திலே மெல்லிய சங்கிலி ; நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு. 

தினம் ‘டியூடி’ முடிந்தவுடன் அவசர அவசரமாக அவன் தன்னை ஒருவிதமாக ‘மேக் – அப்’ செய்து கொண்டு நைட்ஷோ வுக்குக் கிளம்பிவிடுவான். 

யாராவது உப நடிகர்களோ , ஸ்டுடியோக்களில் வேலை செய்பவர்களோ, அவன் ஓட்டலுக்கு வந்து விட்டால் போதும். சந்தானம் அவர்களை விடவே மாட்டான். ‘வாங்க அண்ணா நீங்க, பாட்டியே தாத்தாவின் பத்தினி’ என்கிற படத்திலே காமெடியனாக நடிச்சிருக்கீங்களே. நான் நேற்றுத்தான் பார்த்தேன்! சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க! படம் சுமார்தான். போட்டோகிராபி ரொம்ப மட்டம். ரிகார்டிங்கும் மோசந்தான். படம் உங்களாலே தான் ஓடறது. எனக்குக் கூட சினிமாவிலே ஆக்ட் பண்ணனும்னு ரொம்பநாளா ஆசை. நீங்க மனசு வைத்தால் …” என்று ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரிப்பான். 
செவ்வாய்க்கிழமையன்றுதான் மனோகரா கபேக்கு வார விடுமுறை. ஆனால் அன்று தான் சந்தானத்துக்கு வேலை அதிகம் காலை ஏழு மணிக்கே புறப்பட்டுவிடுவான்.

கோடம்பாக்கம் ரயில்வே கேட்டுக்கருகே போய் நின்று கொண்டு ஸ்டுடியோக்களுக்குச் செல்லும் கார்களையும், நட்சத்திரங்களையும் சென்ஸஸ் எடுத்துக்கொண்டிருப்பான். அது முடிந்ததும் தி. நகர், காந்தி நகர், கோபாலபுரம் என்று நட்சத்திரங்கள் வாழும் க்ஷேத்திரங்களுக்கெல்லாம் ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவான். 

சினிமா நட்சத்திரங்களின் வீட்டு விலாசங்கள், கார் நம்பர்கள் எல்லாம் டயரியில் எழுதி வைத்துக் கொண்டு தன் நண்பர்களிடம் காது மூக்கு வைத்துக் கதை அளப்பது அவனுடைய எய்ட்டி ஒன் லே சம்பனா தேவியைப் பார்த்தேண்டா . மேக்கப் போடே போறா..ஷூட்டிங்குக்குப் போறாப் போலேயிருக்குடா” என்பான். 

சினிமாப் பத்திரிகைகளில் கேள்வி – பதில் பகுதியைத் துருவித் துருவிப் படிப்பான். தான் எழுதிப்போட்ட கேள்விக்கு பதில் வந்திருக்கிறதா என்று ஒவ்வொரு பத்திரிகையாக வாங்கி பார்த்து ஏமாந்து போவான். 

ஒரு நாள் அவன் டேபிலுக்கு டிபன் சாப்பிட வந்த ஒருவரைப் பார்த்து. “சார், நீங்க சினிமா ஸ்டார் மோகனா தேவியின் பிரதர்தானே” என்றான். 

“என்னை உனக்கு எப்படித் தெரியும், தம்பி?” 

“என்னா சார்! இதுகூடவா தெரியாது வெளியே நிக்குதே சார் , ஸ்டூடிபேக்கர்… அவங்க காரு. ஏன் சார் ! பிளிமத்தை வித்துட்டாங்களா?…. உங்க வீட்டுக் கிருகப்பிரவேசத்துக்குப் பார்ட்டி கொடுத்தீங்களே , அன்னிக்கு நான் வந்திருந்தேன். சார்! எல்லா சினிமா ஸ்டாருங்களையும் பார்த்தேன். பத்மினி ராகினி கூட வந்திருந்தாங்களே, அன்னிக்குத்தான் எல்லா ஸ்டாரையும் சேர்ந்தாப்போலே பார்த்தேன். எல்லார்கிட்டேயும் ஆட்டோகிராப்கூட வாங்கினேன். பாலையாகூட எங்கிட்டே பேசினாரே!” 

“அன்னிக்கு எங்க ஓட்டல் தானே கேட்டரிங். அதுக்கப் புறம் உங்களை வந்து பங்களாவிலே பாக்கவே முடியலீங்க. கூர்க்கா உள்ளேயே விடமாட்டேங்கறான்! ஒண்ணுமில்லே… எனக்கு ஒரு பிக்சர்லே சான்ஸ் வாங்கிக் கொடுக்கணும், சார்! நீங்க மனசு வைத்தால் முடியும். நான் அமெச்சூர் டிராமாவி லெல்லாம் நடிச்சிருக்கேன். நிறையப் போட்டோகூட எடுத்து வெச்சிருக்கேன்…” 

“ஏம்பா ! இந்த சர்வர் வேலை உனக்குப் பிடிக்கலையா. எதுக்கு, சினிமாவிலே சேர்ந்து அவஸ்தைப் படணுங்கிறே?” 

“வாழ்க்கையிலே ஒருதடவையாவது ஒரு படத்திலே யாவது நடிக்கணும்னு ஆசையாயிருக்கு , சார்! இதைப் பார்த்தீங்களா? இத்தனை போஸும் என்னுடையதுதான்…” என்று கூறித் தன் மணிபர்ஸிலுள்ள புகைப் படங்களை எடுத்து அவரிடம் காட்டினான். 

“அப்புறம் இன்னொரு விஷயங்க…. ஷூட்டிங்கே பார்த்த தில்லே நான். ஒரு நாள் ஏற்பாடு பண்றீங்களா?” என்றான் தலையைச் சொறிந்து கொண்டே. எல்லோரையும் போல அவரும் புன்சிரிப்புச் சிரித்தபடியே, ”ஆகட்டும், கவனிக்கிறேன்!” என்று கூறிவிட்டுப் போய்விட்டார். 

சுருட்டை மயிர் இருந்தால் சினிமாவில் சேருவது சுலபம் என்று நினைத்திருந்த அவனுக்கு ஒரு சான்ஸ் கூடக் கிடைக்க வில்லை. தனக்கு ஏற்பட்ட தோல்விகளைக் கண்டு கிராப்பை வேறுவிதமாக வாரிப் பார்த்தான். நாசூக்காக மீசை வைத்துப் பார்த்தான். குங்குமப் பொட்டைச் சிறிதாக்கினான். 

அப்புறந்தான் அவனுக்கு ஒரு ஸ்டூடியோவில் வேலை கிடைத்தது. ஸ்டூடியோ காண்டீனில் சர்வர் வேலைதான். ஆனால், அதற்காக அவன் வருத்தப்படவில்லை. தினமும் ஸ்டூடியோவுக்கு வரும் ஸ்டார்களை நேரில் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லவா? 

– கேரக்டர், 9வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *