சயனஸ் மூக்கு!

 

“பளஸ் டூ மாணவர்களே, மாணவிகளே! சயனஸ்’ என்றால் என்ன? டாக்டர் காளிமுத்து பாணியில் கூறுகிறேன், கேளுங்கள்! ஏ… வாலிப வயோதிக அன்பர்களே…! ஆஸ்துமா, ப்ராங்கைடீஸ், மார்பில் சளி, தொண்டையில் கபம், நாசித்துவாரங்களில் கபம், நாசித் துவாரங்களில் நயாகரா நீர்வீழ்ச்சி போன்ற ஜலதோஷ சாம்ராஜ்யத்தின் இருபதாம் நூற்றாண்டு வாரிசுதான் சயனஸ்!’

ஏதோ ஒற்றைத் தும்மல், இரட்டைத் தும்மல் என்று அலட்சியமாக எண்ணிவிடாதீர்கள். ‘சயனஸ்’ உள்ளவனின் நாசித்துவாரங்களிலிருந்து புறப்படும் தொடர்ச்சியான தும்மல்களுக்கு வலையப்பட்டியின் தவில் வாசிப்புக்கு ஈடாக தனி ஆவர்த்தனம் கொடுக்கக்கூடிய தெம்பு உண்டு. சொன்னால் நம்பமாட்டீர்கள். அதி தீவிர சயனஸ்’ உபத்திரவம் உடைய எனது நண்பர் ஒரு சமயம் தும்மிய பொழுது அந்த காலனியில் பவர்கட்’ ஆகி இருளில் மூழ்கியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நண்பரின் பெயர் பம்மல் பார்த்தசாரதி . எங்கள் வட்டாரத்தில் அவரை தும்மல்’ பார்த்தசாரதி என்று விளிப்பது வழக்கம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு திருக்காட்டுப்பள்ளியில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். ஒல்லியாக, ஒடிசலாகத் தோற்றமளிக்கும் தூரத்து உறவினர் ஒருவரைச் சந்தித்தேன். உறவினரிடம் பிரதானமாக இருந்தது அவருடைய திடகாத்திரமான மூக்கு ஒன்றுதான். இதுநாள் வரை அவர் சாப்பிட்ட சத்தான ஆகாரங்கள் அனைத்தும் அவருடைய மூக்கை வளர்ப்பதற்கென்றே பயன்பட்டுவிட்டது போலத் தோற்றமளிக்கும் ‘நாசர் மூக்கு . கார்ட்டூனிஸ்டுகள் கையை அரிப்பெடுக்க வைக்கும் பிரமாண்டமான மூக்கு! அவரது மூக்கில் தூளியைக் கட்டிக் குழந்தையைப் போட்டு ஆட்டலாம். மிஸ்டர் சயனஸ்’ வசதியாகக் குடியேற இதைவிடச் சிறந்த கேந்திர ஸ்தானம் கிடைக்காது. சர்வாதிகாரி சயனஸ் ‘ தனது கொடிய சாம்ராஜ்யத்துக்கு எனது தூரத்து உறவினரின் மூக்கைத் தலைநகரமாக வைத்துக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த பத்து வருடங்களாக சயனஸால் தான் படும் அவஸ்தையை உறவினர் என்னிடம் தும்மியவண்ணம் கூறினார். உறவினரின் தும்மல் சற்றே வித்தியாசமானது. பம்மல் பார்த்தசாரதியைப் போல தொடர்ச்சியாகத் தும்மாமல் வி.ஜி.பி. முறையில் விட்டுவிட்டுத் தவணை முறையில் தும்மினார். போன ஜென்மத்தில் குடும்பக்கட்டுப்பாடு அதிகாரியாக இருந்திருப்பார் போலும்.

இரண்டு தும்மல்களுக்கிடையே போதிய இடைவெளி கொடுத்துத் தும்மினார். உறவினர் நாகரிகம் காரணமாக ஒவ்வொரு தடவையும் தும்மியவுடன் ‘ஸாரி! எக்ஸ்கியூஸ் மி’ என்று கூறி கர்சீப்பால் மூக்கைப் பொத்திக்கொள்வார். சமயத்தில் தும்மல் வலுத்து இரண்டு தும்மல்களுக்கிடையே உள்ள இடைவெளி குறையக் குறைய உறவினரும் ‘ஸாரி எக்ஸ்கியூஸ் மி’ – அவசர அவசரமாகக் கூறியபடியே தும்முவார். இந்த விளையாட்டு ஓர் உச்சத்துக்குச் சென்றவுடன் மனிதர் தனது நாசித்துவாரங்களினாலேயே ‘ஸாரி! எக்ஸ்கியூஸ் மி’ என்று சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

CrazyMohan - Palakara Kadai - 16-picஅது சரி, இந்த சயனஸ்’ ஏன் வருகிறது? எதனால் வருகிறது? மருத்துவர்களிடம் சாதாரணமாகக் கேட்டால் இது ஒரு வகை அலர்ஜி’ என்று கூறி பிரிஸ்கிரிப்ஷன்’ எழுதத் துவங்குவார்கள். சொக்காயைப் பிடித்துக் கேளுங்கள். சயனஸைக் குணப்படுத்த மருந்தே கிடையாது. பேசாமல் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி நழுவி விடுவார்கள். விஞ்ஞான முன்னேற்றம் அடைந்த ‘கம்ப்யூட்டர் யுகத்தில் ஒரு அல்ப சயனஸை’ முறியடிக்க வழியே கிடையாது. சயனஸின் ஆட்சிக்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான பிரஜைகளில் நானும் ஒருவன்.

போகாத க்ளினிக் இல்லை. என் மூக்கைக் காட்டாத டாக்டர் இல்லை. ஒரு டாக்டர் எனக்கு எது அலர்ஜி’ என்று கண்டுபிடிக்க தனது நர்சிங் ஹோமில்’ உள்ள அத்தனை உபகரணங்களையும் என் மீது பிரயோகித்து துருவி, அலசி கடைசியில் சலித்துப் போனார். ஒரு நாள் எனக்கு வெங்காயம்’ அலர்ஜி என்றார்.

வெங்காயம் சாப்பிடாததால் ஆகாரம் கூடியதே தவிர சயனஸ்’ விடவில்லை .

மற்றொரு சமயம் டாக்டர் என்னிடம், ‘எங்கு வேலை பார்க்கிறாய்?’ என்று கேட்டார். சுந்தரம் – கிளேட்டன் தொழிற்சாலையில்’ என்றேன்.

‘உனக்கு இண்டஸ்டிரியல் அலர்ஜி’ என்று கண்டேன் சீதை’ பாவனையில் கூவினார். நான் சாப்பிடும் புவ்வாவுக்கே’ மனிதர் உலை வைத்துவிடுவார் என்ற பயத்தில் நழுவி விட்டேன்.

நாட்டு வைத்தியர் ‘நவகோடி நஞ்சுண்டன்’ அடியேனின் நாசியை அரைமணி நேரம் ஆராய்ந்தார். ஆராய்ச்சி முடிந்ததும் அடியேனின் மூக்கைப் பழையபடி அது இருந்த இடத்தில் பொருத்திவிட்டுப் பக்கத்திலிருந்த ஓலைச் சுவடிகளைப் புரட்ட ஆரம்பித்தார்.

சயனஸ்’ குணமடைய ஏற்ற மருந்தைத்தான் தேடுகிறார் என்று ஆவலோடு இருந்தேன். ஆனால், நவகோடி நஞ்சுண்டனோ சங்க காலத்தில் சயனஸ்’ என்ன பெயர் கொண்டிருந்தது என்பதைக் கண்டு பிடித்து, அதை எனக்கும் கூறி ரோமாஞ்சனப் புளகாங்கிதமடைந்தார். அன்று எனது சயனசுக்குப் புறநானூறு தமிழில் நாமகரணம் சூட்டப்பட்டு புண்யாவாசனம்’ செய்விக்கப்பட்டது.

நவகோடி அளித்த விதவிதமான பொட்டலங்களில் களிம்பு, சூரணம், மாத்திரைகள். (மாத்திரைகள் சின்னதாக கறுப்பு நிறத்தில் இருந்தன. ஒரு மாத்திரையைக் கொளுத்திப் பார்த்தேன். பாம்பு வந்த வண்ணம் இருந்தது. பக்கத்து வீட்டுக்காரர் கூறினார் – நஞ்சுண்டன் தீபாவளி சமயத்தில் பட்டாசுக் கடை வைப்பவர் என்று…) நாட்டு வைத்தியம் தொடர்ந்த நான்காவது மாதத்தில் நெற்றியில் இரண்டு இடங்களில் லேசான வீக்கத்தோடு மேடு தட்ட ஆரம்பித்தது. சாப்பிட்ட கீரை, இலை தழைகளுக்கு ரியாக்ஷனாக கொம்பு முளைக்கிறதோ என்ற பயம் என்னுள் கவ்வியது. நவகோடி நஞ்சுண்டனை நிராகரித்தேன்.

ஆபீஸில் பணிபுரியும் சக ஊழியரின் ஆலோசனையின்படி மயிலாப்பூரில் ஒரு யோகியிடம் சயனஸைப் போக்கிக்கொள்ள ‘யோகாசனம்’ பயின்றேன். புஜங்காசனம், சர்வாங்காசனம், ஹாலாசனம், கமலஹாசனம், சாருஹாசனம் என்று பல ஆசனங்களை யோகி எனக்குக் கற்றுத் தந்தார். படுபாவி சயனஸ்’ பதஞ்சலியின் யோக சாஸ்திரத்துக்கும் பணியவில்லை.

சென்ற மாதத்தில் ஒருநாள் இரவு இந்தக் கொடிய அசுரன் சயனஸை எப்படி அழிப்பது என்ற யோசனையில் கண்ணயர்ந்தேன். அதிகாலை எனக்கு ஒரு அற்புதமான கனவு! சொப்பனத்தில் சுகர், விஸ்வாமித்ரர், ரிஷ்யசிருங்கர், அகஸ்தியர் (கனவில் அகஸ்தியர் ஆறு அடி எட்டங்குலத்துக்கு உயரமாக இருந்தார். ஒருவேளை மாறு வேஷமோ, அல்லது அகஸ்தியர் குள்ளம் என்பதெல்லாம் கர்ணபரம்பரைக் கதைகளோ…. என்னவோ? மொத்தத்தில் ஏ.பி. நாகராஜன் படத்தில் என்.டி.ராமராவுக்கு வரவேண்டிய சான்ஸ்’ சீர்காழி கோவிந்தராஜனுக்குப் போய்விட்டது….) போன்ற வேத கால ரிஷிகள் என்னிடம் வந்து சிலுக்கு ஸ்மிதா சௌக்கியமா?’ என்று சம்ஸ்கிருதத்தில் கேட்டார்கள்.

‘வேத கால ரிஷிகளே! உங்களுக்குமா சிலுக்குத் தனம் தலைக்கேறிவிட்டது?’ என்று செல்லமாக அவர்களைக் கடிந்துவிட்டுப் பின்வருமாறு அவர்களை சம்ஸ்கிருதத்தில் கேட்டேன். (சும்மா சொல்லக்கூடாது. சம்ஸ்கிருதம் எனக்கு சொப்பனத்தில் சரளமாக வருகிறது…) ஓ… ரிஷிகளே! நீங்கள் எல்லோரும் எங்கும் வியாபித்திருக்கும் பரப்பிரம்மத்தையே உங்களது ஞானத்தால் தேடித் தெரிந்து கொண்டவர்கள்…. உங்களால் இந்தச் சிறுவனுக்கு ஒரு காரியம் ஆகவேண்டும். சயனஸ்’ என்றால் என்ன? இந்த நோய் எதனால் வருகிறது? இதை அழிப்பது எப்படி?” எனது இந்தக் கேள்விகளுக்கு கீழ்க்கண்ட பதிலை வேத கால ரிஷிகள் ஒன்று சேர்ந்து எம்.பி. சீனுவாசன் ஸ்டைலில் கோரஸாகச் சேர்ந்திசைத்தார்கள். ‘நரனே… முதலில் ஒன்று தெரிந்து கொள்… நீ நினைப்பது போல சயனஸ்’ ஒரு நோய் அல்ல…. சயனஸ்’ என்று ஏக வசனத்தில் கூறாதே…. சயனீஸ்வரர்’ என்று பயபக்தியோடு கூறு….. சயனீஸ்வரர்’ என்பவர் வேறு யாருமல்ல… சனீஸ்வரரின் ஒரு அம்சமே இந்த சயனீஸ்வரர்’. ஒருவனிடம் சனீஸ்வரர் தங்கும் காலம் ஏழரை ஆண்டுகள் என்றால் சயனீஸ்வரரின் சோதனையைப் பொறுத்துக்கொள்… உனக்கு அவர் அருள்பாலிப்பார்…’ என்று கூறி அனைத்து ரிஷிகளும் ஆசாரமாகத் தும்மினார்கள். வேத கால ரிஷிகளையும் சயனீஸ்வரர் விடவில்லை போலும்.

‘ரிஷிகளே… சயனீஸ்வரர் பிடியிலிருந்து விலக வேறு வழியே கிடையாதா…?’ என்றதற்கு,

‘நரனே… சயனீஸ்வரருக்கு ஒரு ஆலயம் கட்டி அதில் அவரைப் பிரதிஷ்டை செய்து தினமும் அவருக்கு பூஜை, அபிஷேகம் முதலியவை செய்து வாருங்கள் … சயனீஸ்வரர் உங்களைக் குணமாக்குவார்….’ என்று கூறிய ரிஷிகள் என்னிடம், சயனீஸ்வரர் நாமாவளி, தும்மலஷ்டகம், இருமல் அந்தாதி போன்ற தோத்திரப் புத்தகங்களைக் கொடுத்தனர். வியப்பில் என் விழிகள் மலர்ந்தன. கை கால்கள் சோம்பல் முறித்தன. வாய் கொட்டாவி விட்டது. துரோகி நாசி’ மட்டும் வழக்கம் போல தும்ம ஆரம்பித்தான்.

என் கூடவே இருந்து குழி பறிக்கும் கருங்காலி நாசி, கொண்டவனாக என்னை வஞ்சித்து, கடந்த ஆறு வருடங்களாக அந்தச் சாகசக்காரன் ‘சயனஸோடு’ சரசம் புரியும் சண்டாளி நாசி.

அட்டா… சயனீஸ்வரர் குடியிருக்கும் கோயிலை (எனது மூக்கை) அவசரத்தில், ஆத்திரத்தில் சண்டாளி, துரோகி என்று திட்டி விட்டேனே… அபசாரம்…. அபசாரம்…! சயனீஸ்வரா, என்னை மன்னித்துவிடு… வேதகால ரிஷிகள் கனவில் கூறியபடி உனக்கு கோவில் எடுக்கிறேன். இது சாத்தியம்.”

(பி.கு : சயனீஸ்வரர் கோயில் கட்டுவதற்காகத் தேவையான நன்கொடை வசூலிக்க நான் எனது சயனஸ்’ நண்பர்களுடன் வருவேன்… தங்களால் இயன்ற பொருளுதவியைத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும், சயனீஸ்வரர் ஆலயம் கட்டுவதற்காக ‘இளையராஜா’ இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது…. டிக்கெட் விவரம் ரூ. 1000, ரூ.500, ரூ.100, ரூ.50)

- ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம் 

தொடர்புடைய சிறுகதைகள்
கி.மு....கி.பி. - அதாவது கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று காலத்தைக் கணக்கிடச் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதேபோல, உலகில் மாமியார் - மருமகள் சண்டையே இல்லாத காலத்தையும், சண்டை இருந்த காலத்தையும் பாகுபடுத்திக் கூறவேண்டுமானால் அளவுகோலாக ஆ.ஏ.மு. - ...
மேலும் கதையை படிக்க...
ஊதல், உறிஞ்சுதல், உமிழ்தல் என்று மூன்று வகையாகக் கெட்டப் பழக்கங்களை நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஊதல் - அதாவது புகைப் பிடித்தல். இழுக்கயிழுக்க இன்பம் இறுதிவரை பாலிஸியில் சிகரெட்டின் ஃபில்டர் பகுதி வரும் வரை இழுத்து.... இதற்கு மேலும் இழுத்தால் புகைக்குப் பதிலாக ...
மேலும் கதையை படிக்க...
'காயமே இது பொய்யடா' என்ற சித்தர் வாக்குக்கு ஒரு சிறு மாற்றம் தேவை. 'காயமே இது பச்சோந்தியடா!' நீங்க பாட்டுக்கு, காயம் என்றவுடன் படை, சொறி, சிரங்கு , பர்னால், ஜெர்மெக்ஸ் என்று போய்விடாதீர்கள். நான் கூறுவது செந்தமிழ் காயம். அதாவது, உடம்பு! ...
மேலும் கதையை படிக்க...
சர்வாதிகாரி ஹிட்லர் எழுதியதாகச் சொல்லப்பட்ட உலகெங்கும் பரபரப்பு உண்டாக்கிய - ரகசிய டயரிகள் கடைசியில் போலி என்று நிரூபிக்கப்பட்டது உங்களுக்குத் தெரிந்ததே... ஆதாரம்: சர்வதேச செய்திப் பத்திரிகைகள். இதிகாச, புராண, சரித்திர பிரபலஸ்தர்களின் பர்சனல் டயரிகளை நான் படித்துப் பார்த்தது உங்களுக்குத் தெரியாததோ! ஆதாரம்: விடியற்காலையில் ...
மேலும் கதையை படிக்க...
மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒரு கட்டத்தில் கிருஷ்ணரைக் கட்டிப் போடுவதற்காகக் கயிற்றோடு வந்த சகாதேவனின் தலை சுற்றும்படி பார்த்த இடத்திலெல்லாம் பரந்தாமன் தெரிந்தானாம். அதுபோல , கொஞ்ச காலமாகவே சென்னையில் எந்த மூலை முடுக்குக்குச் சென்றாலும் எனக்கு சிலுக்கு ஸ்மிதாதான் ...
மேலும் கதையை படிக்க...
சர்வ சாதாரணமாக 'நீ எப்பவாவது குற்றாலத்துல குளித்ததுண்டோ?' என்று கேட்பது போல் 'நீ எப்பவாவது பேயைப் பார்த்ததுண்டோ?' என்று எனது நெருங்கிய நண்பனின் தாயாதி ஒரு முறை என்னைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார். "அதான் இப்ப என் எதிரிலேயே பார்த்துக் கொண்டே ...
மேலும் கதையை படிக்க...
'காதல் ஒலிம்பிக்ஸ்' - அன்று ஈடன் தோட்டத்தில் கைவசம் இளையராஜா இல்லாததால் டூயட் எதுவும் பாடாமல் ஆதாம் ஏவாளால் மௌனமாகத் துவக்கி வைக்கப்பட்ட காதல் ஒலிம்பிக்ஸ் இன்றுவரை ஜனரஞ்சகமாக விளையாடப்பட்டு வருவது உங்களுக்கெல்லாம் தெரிந்ததே! காதல் ஒலிம்பிக்ஸில் தலைதெறிக்க ஓடி எப்படியாவது கல்யாண ...
மேலும் கதையை படிக்க...
"என்ன சார் சௌக்கியமா?" - அவசர காரியமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக எதிரில் வரும் அறுவைகளிடமிருந்து தப்புவதற்காகவும், அதே சமயத்தில் நம்மோடு இயல்பாக ஊறிய இந்து - சமவெளி நாகரிகத்தை' வெளிப்படுத்துவதற்காகவும் நாம் சகஜமாகக் கேட்கும் ஒரு சாதாரண கேள்வி ...
மேலும் கதையை படிக்க...
இந்த சென்னை மாநகரத்தின் சாலைகளில் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களின் மீது ஏறி விரைந்து செல்லும் கனவான்களே! பாதசாரிகளைப் பழுதாக்காமல், கோழி, வாத்து, நாய் போன்ற வாயில்லா ஜீவன்களின் இறைச்சியை சாலை நடுவே பரிமாறாமல், பயபக்தியோடு சர்வ ஜாக்கிரதையாக ...
மேலும் கதையை படிக்க...
'ஆதிபராசக்தி' படம் பார்க்கப் போவதாக வீட்டில் அண்டப்புளுகு புளுகிவிட்டு 'அனிமல்ஸ் அண்ட் செக்ஸ் லைஃப்' - விலங்குகளின் விரகதாப வாழ்க்கையை விவரிக்கும் சினிமாவை நைட் ஷோ பார்த்து விட்டு நண்பர்களுடன் ராஜகுமாரி தியேட்டரைவிட்டு வெளியே வந்தேன். தங்களது அந்தரங்க வாழ்க்கையை அம்பலமாக்கிய சினிமாவை ...
மேலும் கதையை படிக்க...
மாமியார், மருமகள் உலகமகா யுத்தம்!
மேனரிஸம்
ஊட்டி வரை உளவு!
க்யூவில் வந்தவர்கள்
சிலுக்காணத்தம்மன்!
ஐயோ…பேய்!
காதல் சைகாலஜி
சௌக்கிய மன்னன் பட்டப்பா!
நில் கவனி-கிழவி
அனிமல்ஸ் ஒன்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)