சந்தேகப் பிசாசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 17, 2023
பார்வையிட்டோர்: 13,164 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தப் பெண்களை ஒரு விளாசு விளாசாமல் விடக் கூடாது என்று துள்ளி எழுந்தேன்!

என் ஆருயிர் நண்பன் மாசிலாமணி வந்து நின்ற அலங்கோலத்தைப் பார்த்ததும் அப்படி வந்தது ஆத்திரம் குமுறிக்கொண்டு!

சினிமாப் படங்களில் வரும் கல்லூரி மாணவன் மாதிரி மடிப்புக் கலையாத ‘பளிச்’ சென்ற உடைகளை உடுத்திக்கொண்டு நாகரிகமாகப் பவனி வந்த அவன்—

மிளகாய் அரைத்த கையும், வெங்காயம் நறுக்கிய தால் எரிச்சல் ஏற்பட்டு கண்ணீர் கசியும் கண்களும், கரி அப்பிய சட்டையும், எண்ணெய் வழியும் முகமு மாகக் “கண்றாவி”க் கோலத்தில் சமையலறையிலிருந்து நேரே வந்து நிற்கும் அநியாயத்தைப் பார்க்கச் சகிக்க வில்லையே!

அரும்பு மீசையின் அழகும், நேர் வகிடு முடியலங் காரமும், வாட்டசாட்டமான உடம்பும், “வளையாபதி” நடையும்-ம்…அந்த மாசிலாமணிதானா என்று இப்பொழுது அடையாளம் கண்டுகொள்ளவே ஐந்து நிமிடம் ஆகிவிட்டதே!

வாயில்லாப் பூச்சியான நண்பன் இப்படி வாட்டி வதைக்கப்படுகிறான். அப்பாவிச் கினேகிதன் ஆட்டி வைக்கப்படுகிறான். பத்தரை மாற்றுத் தங்கக் கம்பி சித்திரவதை செய்யப்படுகிறான்.

இவ்வளவும் அவனுக்கு மனைவியாக வந்துவாய்த்த ஒரு பெண்ணால்!

இமாலயக் கொடுமை!

எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும் என்னால்?

எனவே, ஆவேசத்தோடு பேனாவை எடுத்தேன் – ‘மனோகரா’ வில் சிவாஜி கணேசன் வாள் உருவிய வேகத்தில்!

எழுத ஆரம்பித்தேன் மாசிலாமணியின் பரிதாபக் கதையை!


சென்ற மாதம் ஒரு சுபயோக சுபதின சுபவேளை யில் சிரஞ்சீவி மாசிலாமணிக்கும் சௌபாக்கியவதி சீதாவுக்கும் திருமண வைபவம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

சும்மா சொல்லக்கூடாது-நல்ல லட்சணமான பெண்தான் சீதா! கொஞ்சம் வசதியுள்ள குடும்பம் என்றும் கேள்வி. படித்துமிருக்கிறாளாம் போதாதா?

‘அதிர்ஷ்டக்காரனடா, நீ” என்று மாப்பிள்ளைக் கோலத்திலிருந்தவனைத் தட்டிக் கொடுத்து மகிழ்ச்சி யைத் தெரிவித்துவிட்டு வந்தேன்.

மறுநாளே ஒரு “லாரி” சோகம் கண்ணிலும், ஒரு கப்பல் கவலை முகத்திலுமாக என்னெதிரில் வந்து நின்றான்.

“மலரைக் காட்டிலும் மிருதுவானவள் பெண். கண்ணாடிப் பாத்திரம் போன்றது மனம். நீ குரங்குப்பயல். நெருங்கத் தெரியாமல் நெருங்கி முதல் இரவி லேயே அவதிக்கு ஆளாகியிருக்கிறாய். என்னடா, மாசி?” என்று கேட்டேன்.

“உன் ‘வழ வழா’வை யெல்லாம் கதை எழுதுற திலே வைச்சிக்கடா” என்று சீறினான் அவன். தொடர்ந்து, ‘எப்படி நெருங்கணும்’கிறதுக்கு மட்டும் முப்பது புத்தகங்களைக் கரைச்சுக் குடிச்சிருக்கேண்’டா! அவதி அதனாலே உண்டாகவில்லை. இது வேறொரு விவகாரம்டா” என்றான்.

அந்த விவகாரம் என்னவென்று அறிந்துகொள்ள ஆவல் மிகக் கொண்டேன். மாசிலாமணி சொன்னான்: “என் மனைவியின் சினேகிதி ஒருத்தியாம். உயிருக்கு உயிரானவளாம். பொய்யே பேசமாட்டாளாம் அந்த ‘அரிச்சந்திரி! வைத்த நெருப்புத்தாண்டா குபு குபுன்னு பற்றி எரியுது.”

கூரை வீடு தான் சுலபத்தில் பற்றி எரியும். இவன் குடியேறியது அடுக்குமாடி வீடாயிற்றே…… என்று எனக்கு மூளை குழம்பியது! அதைப் பொருட்படுத் தாமலே அவன் தொடர்ந்தான்:

“அந்த வ. உ.சி. வாசகசாலையில் கிராணி வேலை பார்க்கிற வசுந்தரா என்கிற பெண்ணைக் காதலிச்சே னாம். காதல் கடிதம் எழுதினேனாம், இன்றைக்குச் சாயந்திரம் சீதாகிட்ட இந்தச் சேதிகளைச் சினேகிதி சொன்னாளாம். நேற்று சொல்லியிருந்தால் எனக்குக் கல்யாணமே நடந்திருக்காதுடா.”

அதற்குமேல் பேச முடியாமல் தடுமாறினான். நண்பன்; அழாத குறை, கண்கள் கலங்கி இரண்டு சொட்டுக் கண்ணீரும் உதிர்ந்துவிட்டது. பாவம்!

விவகாரம் விளங்கியது எனக்கு!

“ஏன்னடா, புத்தகம் படிக்கப்போறேன்னு! வாசக சாலைக்கு அடிக்கடி போனதெல்லாம் இதுக்குத்தானா?” என்று முறைத்தேன்.

மாசிலாமணி பதறிப்போனான்.“என்னடா, நீ கூட் இதை உண்மைன்னு நம்புறியே? நீ என்னைப் புரிஞ்சி வைச்சிருக்கிற லட்சணம் இவ்வளவு தானாடா?’

“அப்போ…நீ வசுந் தராவைக் கா தல் பண்ணலியா? “இல்லவே இல்லைடா! உன் கிட்ட எந்த அந்தரங் கத்தையாவது மறைச்சிருக்கேனா இதுவரை?”

“கிடையாது.”

“இதை மட்டும் மறைப்பேனா? அப்பிராணிடா நான்! வாசகசாலைக்குப் போவேனே தவிர அந்த வசுந்தரா கறுப்பா செவப்பான்னு கவனிச்சதில்லை யடா. குமரியா கிழவியான்னுகூடத் தெரியாதுடா! எல்லாமே கட்டுக்கதை, பொய்; கற்பனை, அக்கிரமம்” என்றெல்லாம் பொரிந்து தள்ளினான்.

“தலையிலே அடிச்சுச் சத்தியம் பண்ணவேண்டியது தானே?” என்றேன்.

“இதோ அடிக்கிறேண்டா” என்று கையை ஓங்கி னான். நண்பன்.

சடாரென்று ஒதுங்கிச் சமாளித்தேனோ, தலை தப் பியதோ! எவ்வளவு வேகமாகக் கையை ஓங்கினான் மடையன்!

‘மடையா, என் தலையிலா அடிக்கச் சொன்னேன்? நீ அப்பாவி, ஊமை, தங்கக் கம்பி என்றுதான் நான் நம்பு றேன். உன் மனைவி நம்பனும்டா. அவள் தலையிலே அடிச்சுச் சத்தியம் பண்ணு போடா என்றேன்.

“அட போடா, நீ ஒருத்தன். கிட்ட நெருங்கவே பயமாயிருக்குடா! எரிமலை மாதிரி குமுறுகிறாள். பாம்பு மாதிரி சீறுகிறாள். உண்மையை நானாக ஒப்புக் கொள்ளும் வரையில் பேசவே கூடாது என்கிறாள்டா” என்று ‘ஓ’ வென்று வாய்விட்டே அழத் தொடங்கினான்.

எனக்கும் அழுகை வந்துவிடும் போலிருந்தது.

“அப்படியானால் சில தினங்களுக்கு நீயும் பேசாமல் இருந்து பார். அவள் மனசு தானாக இளகினாலும் இள கும்’ என்று ஒரு வழியாக அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன்.

அன்று முதல் மாசிலாமணி அன்றாடம் என்னிடம் வருவான். சீதாவின் மனசு இளகவேயில்லையாம். “ஏன் மறைக்கிறீங்க? நடந்ததை நடந்திச்சுன்னு ஒப்புக் கொள்ளுங்க போதும்” என்று தினசரி சொல்வாளாம்.

“நடக்காத கதையை நடந்ததாக எப்படியடா ஏற்பது? ஒப்புக்கொள்வதற்கு இதிலே உண்மை என்பது எங்கேடா இருக்கு?” என்று அழுதுவிட்டுப் போவான்.

இந்த விவகாரம் தீர வழி என்ன? இதில் நாம் எப்படித் தலையிடுவது என்பது புரியாமல் நானும் குழம் பிப்போயிருந்தேன்.

ஒரு மாதம் ஆகிவிட்டது.

நேற்று வேலைக்குச் சென்று திரும்பியிருக்கிறான் மாசிலாமணி.

மூஞ்சி ‘உம்’ மென்றிருந்தாலும் மேஜையில் சாப்பாடு தயாராயிருக்கும். இது வாடிக்கை.

இன்றும் வழக்கம்போல் சீ தாவின் முகம் ‘உம்’ மென்று தானிருக்கிறது. ஆனால், வாடிக்கைக்கு மாறாக மேஜை காலியாயிருக்கிறது!

இவனுக்கு அசுரப் பசி. எனவே, வெட்கத்தை விட்டு, அடுப்பங்கரைக்குப் போய்ப் பார்த்தான். அங்கே, பாத்திரங்களெல்லாம் சுத்தமாகக் கழுவிக் காயவைக்கப்பட்டிருந்தன!

வீட்டில் பூனை வளர்க்கவில்லை. வளர்த்தால் அடுப் பில் தூங்கிக் கொண்டிருக்கும்!

ஆண்பிள்ளை அல்லவா மாசிலாமணி? கோபம் கொப்புளித்து வந்தது. “இன்றைக்குச் சமையல் செய்யலியா?” என்று காட்டமாகவே கேட்டான்.

உடனே வந்தது எதிரொலி: “இல்லை.”

‘ஏன் இல்லை?’

‘இரண்டில் ஒன்று இன்று தெரியணும்?’

‘இரண்டாவது, ஒன்றாவது? எவளோ ஒருத்தி புளுகியதை நம்பிகிட்டு அடம் பிடிக்கிறாய். இது நல்லதில்லை.’

‘புளுகியதை நம்புவதற்குக் குழந்தையில்லை நான் எல்லாம் புரியும் எனக்கு. நீங்களாக ஒப்புக்கொள்கிற வரை வீட்டில் சமையல் கிடையாது. வேண்டுமானால் கடையில் போய்ச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். நான் பட்டினி கிடந்தே சாவேன். ஒரு கிளாஸ் தண்ணீர் கூட குடிக்கமாட்டேன்…’

அசல் கண்ணகியின் வைராக்கியம்போலவே யிருந் தது தொனி!

ஒரு நிமிடம் அசந்தே போன மாசிலாமணி மறு நிமிடம் சிலிர்த்தெழுந்தான். அம்புபோல் பாய்ந் தான் சமையற் கட்டுக்கு. அடுப்பைப் பற்ற வைத்தான்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சமையற்கட்டிலிருந்து மண்ணெண்ணெய் நாற்றமும், பானையில் சோறு அடிப்பிடித்துத் தீய்ந்த வாசனையும், கறிகாய்களின் கருகல் மணமும் கதம்பமாகச் சேர்ந்து புகையோடு கலந்து புறப்பட்டு அந்தத் தெருவாசிகள் எல்லாரையும் திணரடித்தது.

அவர்கள் திரண்டு வந்தாலும் வருவார்கள் என்று பயந்துதான் அப்படியப்படியே போட்டுவிட்டு என்னி டம் வந்து சேர்ந்தான்-ஆரம்பத்தில் குறிப்பிட்ட அலங்கோலத்தோடு!


நடந்த கதை இதுதான்.

கதை எதற்காகவெல்லாமோ எழுதுகிறார்கள்.

அதை எதற்காகவோ பத்திரிகையில் போடுகிறார்கள்.

ஆனால், மாசிலாமணியின் இந்தச் சோகக் கதையை எழுதக் காரணம் அவனுடைய இல்வாழ்வில் நான் கொண்ட அக்கறைதான்.

அவன் மனைவியின் பிடிவாதம் தளரவேண்டும். தோழி சொன்னதை நம்பியது முட்டாள் தனம் என்று அவள் உணரவேண்டும். உணர்ந்து மாசிலாமணி யிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ன வேண்டும். பிறகு அவர்கள் இன்பமாக வாழவேண்டும். இந்த நோக்கத் தோடுதான் கதையை எழுதத் தொடங்கினேன்.

கோபத்தோடு எழுத உட்கார்ந்தால், ‘பெண்களே கல்நெஞ்சம் உள்ளவர்கள். வெகு எளிதில் அறிவை இழந்து விடுகிறவர்கள். பிடிவாதகுணம் அவர்கள் கூடப் பிறந்தது. சந்தேகம் அவர்களுக்கு இயற்கை அளிக்கும் சீதனம். பொறாமை அவர்களின் பரம் பரைச் சொத்து. உதாரணத்துக்கு ஒருத்தி என் நண்பனின் துணைவி சீதா…’ என்று காரம் மணம் குணத்தோடு கதை ஆரம்பமாகியது!

‘குற்றமற்ற ஓர் உத்தமனைச் சோகத்தின் உருவ மாக்கி. கவலையின் நிழலாக்கி வேதனைத் தீயில் தள்ளி வேகவிட்டு வேடிக்கை பார்ப்பவள் ஒரு பெண் பிறவியா? அவளுக்கு இதயம் என்பதும் ‘உண்டா?’ என்ற காரசாரமான கேள்விகளுடன் கதை முடிந்தது!

கதையின் பெயர் ‘சந்கேதப் பிசாசு.’

பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு வருமோ வராதோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டுதானிருந்தேன். மறு வாரமே பத்திரிகையில் வந்து விட்டது!

நான் எதிர் பார்த்தபடியே சீதாவும் அதைப் படித்து விட்டாள்!

‘ஆசிரியருக்குக் கடிதங்கள்’ என்னும் பகுதியில் மறுவாரம் வெளிவந்த ஒரு கடிதமே சான்று-சீதா அதைப் படித்தாள் என்பதற்கு!

சீதாவே எழுதியிருந்தாள் அக் கடிதத்தை!

‘உங்கள் பத்திரிகையில் வந்த ‘சந்தேகப் பிசாசு’ என்னும் கதையைப் படித்தேன். எங்கள் கதை தான் அது. அதை எழுதியவர் என் கணவருக்கு உயிருக்குயிரான நண்பராம்! சந்தேகம், பொறாமை, பிடிவாதம், அறியாமை எல்லாம் பெண்களுக்கே சொந்தமானவை என்று சாடுசாடென்று சாடியிருக்கிறார் அக் கதையில். சிரிப்புத்தான் வருகுது!

உத்தம சிகாமணி என்று தன் நண்பரை உண்மையில் நம்பினாலும் சரி, அல்லது என்னை ஏமாற்றுவதற்காக எழுதியிருந்தாலும் சரி-எழுதியவருக்கு ஆழ்ந்த அனுதாபம்!

வ.உ. சி. வசகசாலைக்குப் போகும்போதெல்லாம் பல்லைக் காட்டுவதும் கண்ணைச் சிமிட்டுவதுமாகச் சேட்டை செய்ததால் காதலிப்பது போல் பாவனை செய்து வேடிக்கை காட்டியிருக்கிறாள் வசுந்தரா, என் கணவரை!

பைத்கியக் காரத்தனமாக அதை நம்பிக் காதல் கடிதம் எழுதவும் ஆரம்பித்து விட்டார் இன்றைய என் கணவர் – வசுந்தராவுக்கு!

அந்த வசுந்தரா என் கண்ணான தோழி என்ற விஷயம் தெரிந்ததும் என் கணவர் எல்லாச் சேதிகளையும் கக்கிவிட்டு அசட்டு விழி விழித்தார்!

எப்படியோ பிரச்சினை தீர்ந்தது! “இப்போது என் துணைவர் மெய்யாகவே ஒரு மா-சி-ல்-லா-ம-ணி!’


சிக்கல் அவிழ்ந்து சீராகி விட்டது வாழ்க்கை மாசிலாமணிக்கு! இன்பமாக வாழட்டும்!

ஆனால், அப்பாவி என்று என்னையே நம்ப வைத்தானே, அற்புதமாக நடித்து! அந்தக் குணச்சித்திர நடிப்பைப் பற்றி மனப்பூர்வமாக ‘நாலு வார்த்தை’ சொல்லிப் பாராட்ட வேண்டும் என்று அன்றிலிருந்து தேடித் தேடி அலைகிறேன்-பயலைக் காணவே முடியவில்லை!

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email
சிங்கை பெர்னாட்ஷா சே.வெ.சண்முகம் சே.வெ.சண்முகம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெய்வாசலில் 1933ல் பிறந்தார். 1951ல் சிங்கப்பூருக்கு வந்த இவர், துறைமுகத்தில் பணியாற்றினார். 1961ல் கிடங்குப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்று 1991ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1949ல் எழுதத் தொடங்கிய இவரது முதல் சிறுகதை “வேறு வழியில்லையா?” மதுரையிலிருந்து வெளியாகும் “நேதாஜி” இதழில் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இவர், சிறுகதைகள், தொடர்கதைகள், குட்டிக்கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மேடை நாடகங்கள், வானொலி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *