பகவதி அம்மன் கோயிலின் மார்கழி மாத இரவு நேரத் தப்படிப்புப் பறைச் சத்தத்தின் துள்ளல் துல்லியமாகக் கேட்கும் தூரத்தில் அந்த அலுவலகம் இருக்கிறது. கிராம நிர்வாக அலுவலகம். அதன் வடக்குப் பக்க ஜன்னலைத் திறந்துவைத்தால், கோயிலின் மஞ்சள் பூசிய 3 கலசங்களைப் பார்க்கலாம்.
சாவடி இருந்த இடம், முன்பொரு காலம் தொழுவம் என்று அழைக்கப்பட்டு, பவுண்டுப் பொட்டியாக இருந்தது. வேலி மீறி மேய்ந்த கால்நடைகளை நியாயம் கோரி அடைத்துவைக்கும் இடம், திடீரென ஒரு பருவத்தில் ‘பகுதி மேம்பாடு நிதி’யில் கட்டடமாக உருவெடுத்தது.
எருமை முதல் எறும்பு ஈறாக எண்பதினாயிரம் ஜீவராசிகளும் எழுந்துவிட்ட காலை 10 மணிக்குப் பேருந்தில் இறங்கி சாமிதுரை அலுவலகத்துக்கு வருவார். கிராம நிர்வாக அலுவலர். அவருக்கு 2 உதவியாளர்கள். இளங்காலை, இமைசோரான் என்ற பெயருடைய இவர்களைத் தோட்டி, தலையாரி, தண்டல் ஆகிய பெயர்களிட்டுப் பேசிக்கொள்வார்கள். நேரில் பார்க்கையில் பேரைச் சொல்லி விளிப்பார்கள். அழகான பெயர்களைக் கௌரவித்தது போலவும் ஆயிற்று.
சாமிதுரை அலுவலகத்துக்குள் நுழைந்ததும் வடக்கு ஜன்னல் ஓரமாக கால்படிக் கொள்ளளவுள்ள ஒரு எவர்சில்வர் டம்ளரை வைத்து மதுக்குடுக்கையின் கழுத்தைக் கோழி முறிப்பது போலத் திருகி ஊற்றி, அரைக்கு அரை என்கிற அளவில் நீரிட்டு நிரவினார் இளங்காலை. சாமிதுரை அகம் மகிழ்ந்து அங்கம் குளிர்ந்தவராக அதை ஒரே வாயில் சரித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார். ‘இன்ப லோகமே வந்து ஆடுதே’ என்று பாடல் மனதுக்குள் ஓடியது. அறுத்த தர்பூசணி மாதிரி முகம் மினுங்கியது.
அவரது ஏகாந்தத்தின் தேன்கூட்டில் கல் எறிகிற மாதிரி ஒருத்தர் சாதிச் சான்றிதழ் கையெழுத்து வாங்குவதற்காக உள்ளே நுழைந்தார். அவர் தன் கோரிக்கையைப் பணிவான மொழிகளால் தெரிவித்தார். வருகிறவர் பேசுகிறவற்றைக் காதில் ஏற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் சாமிதுரைக்கு எப்போதும் இருந்ததில்லை. சாமிதுரை, ”அதை எடு!” என்றார். பல நாட்களாக உதவியாளர்களாக வேலை பார்த்ததில், அவர் ‘அதை எடு’ என்று சொன்னால், எதை எடுப்பது என்று இருவருக்கும் தெரியும். அவர்களை ஏவிவிட்ட இடைவெளியில், வந்திருந்தவரிடம் வினா தொடுத்தார் சாமிதுரை.
”உங்க பேர் என்ன?”
”மகாலிங்கம்.”
தொழுவத்து ஆடுகளைப் போல கால நினைவற்ற சஞ்சாரம் சாமிதுரையின் மனதில் எழுந்தது. ”டி.ஆர்” என்று உச்சரித்தார். பழைய கதாநாயகன் ஒருவரின் இனிஷியல் அது. பிறகு ராகமிட்டுப் பாடினார். ”சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று கூறி…”
இமைசோரான் குறுக்கிட்டார். ”சார்! இவரு நமக்குத் தெரிஞ்சவர்தான். அதே கேஸ்ட்தான். கையெழுத்துப் போட்டுக் குடுங்க!”
சாமிதுரை கையெழுத்திட்டார். வெளியேறிய மகாலிங்கம், இமைசோரானின் கையில் 100 ரூபாயைத் தந்தார். அது பரிமாற்ற முறையில் ஒரு பாட்டிலாக மாற, சில நிமிடங்கள் ஆயிற்று.
மகாலிங்கம் இதற்காக ஒரு கோழியை விற்றிருந்தார். இவ்விதம் கோழி தன் இன்னுயிர் ஈந்து எஜமான் சாதியைக் காப்பாற்றிவிட்டது.
கிராம நிர்வாக, வருவாய் அலுவலர்கள் பொதுவாக தேநீர்க் கடை வந்தமர்ந்து டீ குடிக்க மாட்டார்கள் என்பதை அறிவீர்கள். சாமிதுரை பொறுப்பேற்று வந்த உடனே அலுவலகத்தில் இருந்த நீல நிற ஃபிளாஸ்க் உத்யோகம் இழந்துவிட்டது. இந்த ஊரின் தேநீர்ச் சுவையை அறியாதது அவர் நாக்கு.
சாமிதுரை இரண்டாவது சுற்று முடிந்த பின் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். இளங்காலையும் இமைசோரானும் அவர்களுக்கிடையே பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும், தனிமை உணர்வு தறிகெட்டு எழுந்தது சாமிதுரைக்கு. தான் ரசிகனாகவும் படிப்புக்காரனாகவும் இருந்த பழைய காலத்தை அசைபோட்டதில் வினோத ரச மஞ்சரி மனதில் இழையோடியது.
”ச்சே… சிங்கபுரியிலேயே இருந்திருக்கலாம். மகேந்திரபுரிக்கு வந்தது தப்பாப் போச்சு!” அடுத்த மிடறை அவருக்கு இளங்காலை வழங்கினார். அதைக் குடித்ததும் சாமிதுரைக்குச் சிரிப்பு பொங்கியது.
”சிங்கபுரியை சிம்மவர்மன் ஆண்டான். மகேந்திரபுரியை மகேந்திரவர்மன் ஆண்டான்.”
அந்த உரையாடல் நீடிக்க முடியாமல் கையில் உரப்பையுடன் ஒருவர் நுழைந்தார். எலந்தை முட்கள் கீறிய தடமும் எருக்கஞ் செடிகளை உரசிய தடயமும் அவரது கால்களில் இருந்தன.
சாமிதுரை, ”வாங்க… உட்காருங்க” என்று எதிரில் அமரவைத்தார். இரு உதவியாளர்கள், குழந்தைகள் தவிர அவர் யாதொரு ஆறாம் அறிவினரையும் ஒருமையில் அழைப்பதில்லை. உட்கார்ந்த நபர், ”சார், ஒரு முக்கிய மான விஷயம்” என்றார் பீடிகையுடன்.
”இங்கே எல்லாம் முக்கியமான விஷயம்தான்.”
”இல்லீங்க சார், அது வந்து…”
உரப்பையை மெதுவாகத் திறந்து சாமிதுரைக்குக் காட்டினார், புது நபர்.
”எதுக்குங்க வால் கயிறை பையில போட்டு எடுத்துக்கிட்டு வந்திருக்கீங்க?”
பையில் இருந்த பொருளைப் புது நபர் இப்போது வெளியே எடுத்தார். ”சார், இது கயிறு இல்லீங்க சார்.”
26 அங்குல அளவில் அவரது கையில் பாம்பு இருந்தது. மொண்ணைப் பாம்பு. எழவும் அழவும் திராணியில்லாமல் தனது இருக்கையில் ஆழமாகத் தன்னை ஊன்றிக்கொண்டார் சாமிதுரை.
”என்னங்க நீங்க?”
புது நபர் பாம்பைச் சுருட்டி பையில் போட்டார். சாமிதுரையின் சுவாச கோஷம் மீண்டும் சத்தமிட ஆரம்பித்தது. உதவியாளர்கள் திக்கித்து தகரக் கதவுக்கு வெளியே நின்றுகொண்டனர்.
”சார், இது கடிக்காது. கவலைப்படாதீங்க சார்!”
”ஏய்யா உயிர எடுக்கறே?” – பயத்தில் பன்மைப் பண்பை சாமிதுரை தவறவிட்டார்.
”சார், காடு கரடெல்லாம் ஒரு வாரம் சுத்தி இதைப் புடிச்சேன் சார்.”
”எதுக்கு?”
”ரெண்டரைக் கிலோ பாம்பு இருந்துச்சுன்னா, 30 ஆயிரம் ரூபா கிடைக்கும்னு சொன்னாங்க.”
”யாரு சொன்னாங்க?”
”நிறையப் பேர் சொன்னாங்க.”
”சரி, அத நம்பி இதைப் புடிச்சிட்டீங்களா?”
”ஆமாங் சார். புடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் ஒரு பயலும் வாங்க மாட்டேங்கறாங்க சார்.”
”அதுக்கு நான் என்ன பண்ணணும்?”
”நீங்க வித்துத் தரணும். கமிஷன்கூடத் தந்திடறேன்.”
எல்லோர்க்கும் எல்லாமும் ஏற்பாடு செய்து தரத்தானே நிர்வாக அலுவலகங்கள் இருக்கின்றன. சாமிதுரை மெய்யாலுமே ஆவன செய்ய ஆலோசித்தார்.
”நீங்க நம்ம கிராமம்தானா?”
”ஆமாங் சார், குமாரிபாளையம்.”
”பேரென்ன?”
”மொண்ணைப் பாம்பு சார். ரெண்டு தலைப் பாம்புன்னும் சொல்லுவாங்க.”
”யோவ், உம் பேரென்னய்யா?”
”வேலாங்காட்டு நல்லசிவன்.”
”சரி நல்லசிவம், விசாரிச்சுப் பாத்து வித்துடுவம்… இத எங்கே பிடிச்சீங்க?”
”சடையப்பன் புதூர்ல சார்.”
சாமிதுரை ஒரு கணம் நெற்றியைச் சுருக்கினார்.
”அந்த ஊர் கிழவப்பாளையம் பஞ்சாயத்துல வரும்ல?”
”சார், கரட்டுலதா தேடிப் புடிச்சேன். இத பாருங்க காயம்!”
காயங்களை ஒரு சாட்டையடிக்காரன் மாதிரியான தோரணையில் நல்லசிவம் வெளிப்படுத்தினார். உடுக்கை ஒலிப் பின்னணி மட்டும் இல்லாத குறை.
”அது பச்சைக்காளி வலசு ஃபாரஸ்ட் ஏரியாவுல வரும்ங்க.”
”பச்சக்காளி வலசா, பாச்சலூரான்னெல்லாம் பாம்புக்குத் தெரியாதுங்க சார். பத்தஞ்சு கூடவோ குறைச்சலோ விக்கறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க சார்.”
”நீங்க வேற நல்லசிவம். மானைப் புடிச்சவன், பூனை பிடிச்சவன் அவ்வளவு பேரும் உள்ள போய்க்கிட்டிருக்காங்க. கொஞ்சம் இருங்க, ஒரு ஏற்பாடு பண்றேன்.”
உரையாடலின் சகஜபாவம் கண்டு உதவியாளர்கள் உள்ளே வந்திருந்தனர். சாமிதுரை இளங்காலையிடம், ”நீ போய் நம்ம மெம்பர்களைக் கூட்டியா” என்றார்.
12 வார்டு மெம்பர்கள் இருந்தாலும், அவர் நம்ம மெம்பர்கள் என்று குறிப்பிட்டது 2 பேரைத்தான். இளங்காலை அவர்களை அழைத்து வர உற்சாகமாக ஏகினார். அவர்கள் இருவரின் வருகை என்பது மீதியுள்ள மொத்தப் பகலையும் மாயநதியின் அமிழ்தல் கட்டினுள் வைத்து மாலையை மதுவந்தியாய்ப் பூக்கச் செய்யும் என அவர் அறிவார்.
சற்று நேரத்தில் சரவணனும் பரதனும் வந்து சேர்ந் தனர். முறையே ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி உறுப்பினர்கள். குறித்த நேரத்துக்கு முன்பே மதுக் கடை திறக்கும் குறிப் பிட்ட சிலரில் இருவர். அவர்கள் வருகிற நேரத்துக்கு உண்மையில் ஆகாத வெயில் அடித்து தூறல் மழை பெய் திருக்க வேண்டும். அப்படி ஒரு காக்கை – நரி கல்யாணக் கூட்டு. ஆனால், அடிக்கடி அவர்கள் கூடுகிறார்கள் என்ப தால் மேக மண்டலம் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டது.
இந்த பரதன் ஓர் ஒப்பந்ததாரர். கட்டுமானப் பணி களைவிட, குழி தோண்டுகிற வேலையை விரும்பி எடுத்துச் செய்கிறவர். தூர் வாருதல் என்கிற பிரிவில் வேலை எடுத்துச் செய்கிறவர்.
சரவணன், சகாய சம்பந்தன். அசகாய வேலைகளுக்கு எத்தனிக்கிறவர். சில மர்மத்து மராமத்து வேலைகளின் மூலம் அனைவருக்கும் அவசியமானவர் என்கிற தோற்றத்தை ஊரில் ஏற்படுத்தியிருக்கிறார். லாபங்களில் இருந்த விழுக்காடு விகிதங்களைப் பெற்றுக்கொள்ளும் அதே நேரம், பிறரின் அழுக்காற்றிலிருந்து தப்பும் தன்மை அறிந்தவர்.
இருவரும் வந்ததும் சாமிதுரை எழுந்து வரவேற்றார். மர மேஜையின் இழுப்பறை காடியில் விலா எலும்பு இடித்துக் கொள்ளுமாறு விநோதமாக எழுந்து பின் சுதாரித்து நின்றவர், ”வாங்க, இத வெளியில் வெச்சுப் பேசிக்குவோம்!” என்றவாறு வெளியே நடந்தார்.
சாவடியின் வடக்குப் புறத்தில் சதுர வடிவ மேல்நிலைத் தொட்டி இருக்கிறது. அதன் கீழ் குளிர்ப்பரப்பில் நடந்து வந்தவர்கள், அதன் கிழக்குப் பக்கம் வந்து நாழி ஓடுகள் வேய்ந்த கட்டடத்துள் நுழைந்தனர். நாழி ஓட்டுக் கட்டடத்துக்கு வெளியே இப்போது கறுப்பு நிற சின்டெக்ஸ் தொட்டி ஒன்று 24 மணி நேரமும் நீர் வழங்குகிறது. இது கிராமச்சாவடிக்கு வாட்டர் பாக்கெட் வாங்கும் செலவினத்தை மிச்சப்படுத்துகிறது. நாழி ஓட்டுக் கட்டடத்துக்கு முன் பக்கம் திண்ணை, மண் வெற்றிடம், அதில் இரு தென்னை மரங்கள், ஒரு வேப்பமரம் அவ்வளவும் உண்டு. பனிக் காலத்தில் மழை பெய்யும் பருவக்கோளாறில் புற்கள் மண்டி பச்சை கிடக்கிறது.
நாழி ஓட்டு வீட்டின் தாழ்வாரம் தாண்டிய கதவு வெகுநாளாகப் பூட்டப்பட்டுக் கிடக்கிறது. உள்ளே ஒருவேளை பாதாள மூலி படர்ந்து, வேதாளம் குடியிருக்கலாம். ஒரு காலத்தில் ரேஷன் கடையாக இருந்த இடம் இது.
வேப்ப மரத்தின் கீழ் அனைவரும் நின்றபோது திண்ணையில் குடிபொருட்களை வைத்துக்கொள்ளும் ஏற்பாடு.
விஷமில்லாப் பாம்பின் விஷயத்தை சரவணனுக்கு, பரதனுக்கு சாமிதுரை தெரிவித்தார். கிராமத்து மராமத்தார்கள் இருவரும் பாம்பைப் பார்க்க ஆர்வமானார்கள். உரச் சாக்குக்குள் உருண்டிருந்த பாம்பை நல்லசிவன் எடுத்து நீட்டினான்.
ஊறு நேராத தொனியில் ஒரு தங்கப் பாளத்தைக் காட்சிப்படுத்துவது போல நல்லசிவனின் செய்கை இருந்தது. ”இப்படி வெச்சிருந்தா இது தினம் கால் கிலோ எடை குறையுமேய்யா!” என்று பரதன் பாம்பின் நுட்பத்தை வியந்து, நல்லசிவனுக்குப் பயத்தை மூட்டினார்.
”எதுக்குங்க இந்தப் பாம்புக்கு இவ்வளவு விலை?” என்று சாமிதுரை சந்தேகம் கிளப்பினார்.
இமைசோரான் இதமான குரலில் குறுக்கிட்டு, ”என்னமோ எய்ட்ஸூக்கு இதுல இருந்து மருந்தெடுக்கறதாப் பேசிக்குறாங்க” என்று தண்ணிச் சங்கம் விடை காண முடியாததைத் தனி ஒருவராகத் தீர்த்துவைத்தார்.
சரவணன் குரலைத் தாழ்த்தி வெளிப்பாட்டில் ரகசிய அடர்த்தியைக் கூட்டினார்.
”இந்தப் பாம்புக ஜாலக்கம் பயங்கரமாத்தான் இருக்கு. எய்ட்ஸூக்கு மொண்ணப் பாம்புல இருந்து மருந்தா?”
எல்லோரும் ஏக காலத்தில் வெடித்த சிரிப்பில் வேப்ப மர அணில் பதிலுக்குச் சாடி மறுபடி சாடி மண்ணில் ஓடியது.
”ஏப்பா, எடை போட்டுட்டியா?” என்றார் பரதன்.
நல்லசிவனின் முகத்தில் பூசணிக்கொடிபோல பூரணித்துச் சோகம் படர்ந்து கொடியோடியது. ”அதையேங் கேக்கறீங்க. எடை போடலாம்னுதான் உங்க ஊருல புதுக் கடைக்காரரு கடைக்குப் போனேன். படிக்கல்லு எடுத்து மண்டையப் பொளக்க வந்துட்டாரு.”
”ஆமா! பாம்பு, பல்லி, தேளு, பூரான நிறுக்கவா மளிகைக் கடைல தராச வெச்சிருக்காங்க. எதுக்கும் நீயரு நாலடி தள்ளியே நில்லுப்பா” என்றார் சாமிதுரை.
”இது ஒண்ணும் பண்ணாதுங்க!”
”இது ஒண்ணும் பண்ணாது. நீ ஏதாவது பண்ணுவியா?”
பாம்பு பிடித்தவருக்கு பாயின்டைப் பிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. ”பாம்பு விக்கட்டுமுங்க. படையலப் போட்டுர்றேன்.”
”ஏப்ப, இதென்ன பருப்புத் தேங்காயா பட்டுனு வித்துப்போறதுக்கு. சரி சரி, ஏற்பாடு பண்ணுவோம்” என்ற சரவணன், செல்போனை எடுத்து எண்களைத் தட்ட ஆரம்பித்தார்.
இந்தத் தருணம் இளங்காலைக்கு முக்கியமானது. ”முப்பது இல்லாட்டாலும் ஒரு இருபதுக்குக் குறையாம முடிச்சிடலாம்” என்று நல்லசிவனை ஆக்கிரமித்தார். நல்லசிவன், பட்டாபட்டி டவுசருக்குள்ளிலிருந்து பணத்தை எடுக்கும் உள்சக்தி நோக்கி உந்தப்பட்டான். மது வகை மது உவகையாக மாறும் நிலை வரை, பாட்டிலில் இருந்து பாண்டத்தில் விழுந்து தொண்டைக்கும் கீழாகப் போகும் வரை சரவணனும் பரதனும் மாறி மாறி செல்போன்களில் பேசி நல்லசிவனுக்கு நம்பிக்கை தந்தார்கள்.
முட்டை வியாபாரி முதல் முருங்கைக்காய் மண்டி வரை பேசினார்கள். மொண்ணைப் பாம்பு விற்பனை பற்றி தங்களிடம் கூறியது யார் என்கிற தகவல் அறிக்கை மட்டுமே அவர்கள் தந்தார்கள்.
முதல் சுற்றின் கடைசி விழுங்கலை முடித்த பரதன், ”சரவணா, எதுக்கும் கண்வலிக்கா வாங்கற ஆட்கள்கிட்டே பேசிப்பாரு. ஏன்னா, அதுதான் பாய்சன் மேட்டர். ஒரு வேளை அவங்களுக்கு லிங்க் இருக்கும்” என்றார்.
சரவணன் கடைசியாக அதற்கு முயற்சித்தும் தோதான தகவல் கிடைக்கவில்லை.
”நீ நாளைக்கு வா. எதாச்சும் விசாரிச்சு வைக்கிறாம்” என்று சரவணன், நல்லசிவனிடம் கூறினார்.
நல்லசிவன் உரமிழந்த மனதுடன் உரப்பையைத் தூக்கிக்கொண்டு ஊர் நோக்கிப் பயணமானார்.
”இந்தக் கருமம் புடிச்சது எதைத் தின்னு தொலைக்கும்னு தெரியலியே. தவளையோ கோழிக்குஞ்சோ குடுத்துப் பாக்க வேண்டியதுதான். தவளைன்னா செலவில்லை. கோழிக்குஞ்சுன்னா அலைச்சலில்லை” என அவர் முனகிக்கொண்டார்.
சாமிதுரை ஆசுவாசமாகி, ”அப்பாடா! இந்த மெட்டுக்கு ஏதோ தாட்டிவிட்டுட்டீங்க. பாம்பு, பல்லின்னு எத்தனையைச் சமாளிக்க வேண்டிருக்கு.”
பரதன் ”அதுபோகட்டும் விடுங்க சார்… இதா இத சாப்பிடுங்க” என்று டிரவுசர் பாக்கெட்டில் இருந்து 375 மி.லி. அளவுள்ள குப்பியை எடுத்தார்.
சாமிதுரை கண் நட்டுப் போய்ப் பார்த்தார். பாதி இறக்கிய ஒயின்ஸ் ஷாப் ஷட்டரைப் போல கண் இமைகள் தாழ்ந்திருந்தன. ஆனாலும் மீதியுள்ள பார்வையிலிருந்து மோக ஒளி தாவி வந்து மதுக்குப்பி மேல் குடை விரித்தது.
சின்டெக்ஸ் டேங்குக்குச் சென்று இரண்டு லிட்டர் கொள்ளவுள்ள பிளாஸ்டிக் பாட்டிலில் இளங்காலை தண்ணீர் பிடித்து வந்தார்.
டம்ளரைக் கையில் எடுக்கும் முன் சாமிதுரை, ”என்னை என்ன பண்ணச் சொல்றீங்க… குடிச்சுக் குடிச்சே சாகச் சொல்றீங்களா?” எனச் சிணுங்கினார்.
கீழ்த்திசை மாரியம்மன் கோயில் கோபுர இண்டு ஒன்றிலிருந்து கிளம்பி வந்த காகம் ஒன்று வேப்ப மரத்தின் கிளையில் அமர்ந்தது. பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதை உணர்வதுமில்லை. நாளைக்கெனச் சேமிப்பதுமில்லை.
சரவணன், ”சார், ஒரு மேட்டர் பரதன் சொல்றாரு” என்றார். ‘எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?’ என்று மனதுக்குள் ஓடிய துன்ப கீதத்தைத் துணுக்குற்று நிறுத்திய சாமிதுரை, ”சொல்லுங்க சார்… சொல்லுங்க சார்” என்றார்.
”இல்ல சார்… நீங்க ஒரு கையெழுத்துப் போடணும்.”
”எதுக்கு?”
”சந்தைப்பேட்டை தெக்குக் கேட்டில் இருந்து சம்பான் காட்டுப் பதி வரைக்கும்.”
”இது எது நாம முன்னால பேசவே இல்லையே? என்ன ஸ்கீம் அது?”
”நம்ம ‘புதுசா போட்றா’ ஸ்கீம்தான் சார். நம்ம உலக மகாநதி குளத்துல தூர் வார்றதுக்கு சாங்ஷன் ஆச்சுல்ல. அது பொக்லைன் விட்டு வாரி முடிச்சாச்சு. நீங்க அதை வந்து பாக்கலியா? ரெண்டு சைடும் குழி பறிச்சாச்சு. ஒரு பத்தடித் தடம் நீளமா பதிக்குப் போக ரோட்டுக்கு எடம் விட்டுருக்கு. அதைத்தான் ‘மண் தடம்’ போட்டதா எழுதி புதுசா ஒண்ணு ஏற்பாடு பண்ணிக்கலாம்னு ஒரு ஐடியா. பிரசிடென்ட் கேட்டுட்டு வரச் சொன்னாரு.”
”நான் என்னதேம் பண்ணித் தொலைக்கறது போங்க” – சாமிதுரை சடைந்துகொண்டார்.
”என்னங்க சார்! நீங்க பாத்துப் பண்றதுதானுங்க சார். உங்களால முடியாததா? மத்த பக்கத்து அரேஞ்ச்மென்ட் எல்லாம் முடிச்சுர்றோம். ஏறக்குறைய நாளைக்கு மறு நாள் முடிஞ்சுரும். நீங்களும் போட்டுட்டாப் போதும்.”
”அதுக்கென்ன போட்டுட்டாப் போகுது” – கடைசி விழுங்கலை முடித்த மறு கையில் சிகரெட்டைப் பொருத்தி, உதட்டில் செருகினார் சாமிதுரை. பிறகு பெருமிதக் குரலில் பேசினார்.
”இங்க பாருங்க பரதன். நீங்க எங்க கையெழுத்துப் போடச் சொன்னாலும் போடறேன். ஒண்ணு உறுதீங்க… இங்க இருந்து சம்பளத்தத் தவிர ஒரு காசு நான் வீட்டுக்குக் கொண்டுபோறதில்ல. அது உங்களுக்குத் தெரியும்.”
”தெரியும்ங்க சார். உங்களை மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க.”
உச்சிக் குளிரல் வாக்கியங்களைக் கேட்டுக்கொண்டே வந்து அலுவலகத்தில் தன் ஆசனத்தில் அமர்ந்தார். தலைதொங்கிக் கிடந்தவர் 20 நிமிட ஓய்வுக்குப் பின் மணி பார்த்தார். மணி ஐந்தரை ஆகியிருந்தது. இளங்காலையும் இமைசோரானும் நழுவல் குறிப்புகளை வெளிப்படுத்தினார்கள்.
சாமிதுரை, ”ஏப்பா நான் கிளம்பறேன். நீங்களும் பூட்டிட்டு கடை கண்ணிகளுக்குப் போய்ட்டு, அப்படியே வீட்டுக்குப் போங்க. நாளைக்குக் காலைல வாங்க” என்றார்.
”சார்! நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைங்க சார்.”
”தொலையுறது போ… அப்போ திங்கக்கிழமை வாங்க!”
அலுவலகத்தில் இருந்து 120 மீட்டர்கள் நடந்து வந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறினார். பேருந்தின் பாய்ச்சலில் ஊர் பின்னே நகர்ந்தது. பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு கண்களை மூடினார். தனக்குத்தானே புன்னகைத்தார். மனதுக்குள் முணுமுணுத்தவாறு தூங்கிப் போனார்.
‘மகேந்திரபுரியை மகேந்திரவர்மன்தான் அரசாள்வான், மண்ணுள்ளிப் பாம்புகளை விற்கவோ, வாங்கவோ முடியாது!’
– 14-01-09