கொம்புள்ள குதிரை!

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 18,095 
 
 

உலகத்தில் அதிசயமும் ஆச்சர்யமு மான உயிரினங்கள் பல இருக்கின்றன.. அவற்றில் ஒன்று ஒற்றைக் கொம்புள்ள குதிரை என்று அடிக்கடி என் மாமியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். கொம்புள்ள குதிரைகள் இப்பொழுதும் மனிதர்களுக்கு மத்தியில், அழகிய உடை உடுத்தி, மிடுக்கான பேச்சு பேசி, ஒய்யாரமாக குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றன.

கொம்புள்ள குதிரையை கண்டுபிடிப்பது மிக எளிது. தனக்கு எதிரில் உள்ளவர்கள் எல்லாம் பச்சைக் குழந்தைகள் என்று நினைத்துக் கொண்டு, காதில் பெரிய அண்டாவை கவிழ்த்து, அறிவுக் கொழுந்தை ஊற்றுபவர்கள்தான் கொம்புள்ள குதிரைகள். அவர்கள்.. குழந்தைகளை, பெண்களை எப்பொழுதும் வார்த்தை களால் மாடு மேய்த்து, பட்டிக் குள் அடைத்துக் கொண்டே இருப்பார்கள்.

எதிர்வீட்டில் குடியிருக்கும் ஸ்ரீமதி.தைலாஸ்ரீ அத்தைக்கு குதிரை முகமோ.. இல்லை தலையில் கொம்போ கிடையாது என்றாலும், அவர் ஒரு கொம்புள்ள குதிரை என்று எனக்கு அடிக்கடி தோன்றும் (இப்படிச் சொல்வதால் எனக்கும் அவருக்கும் தலைமுடி பறக்க பறக்க நடு ரோட்டில் ஒருநாள் பெரிய சண்டை நடந்தது என்று யாரும் கதை கட்டி விடாதீர்கள்).

கடகடத்த பெரிய லாரியில் இருந்து தட்டு முட்டு சாமான்களோடு இரண்டு மாதத்துக்கு முன்பு குதித்து, பெரிய இரைச்சலோடு என் எதிர்வீட்டுக்குக் குடிவந்த தைலாஸ்ரீ அத்தைக்கு மருமகள் என்று சொல்லிக்கொண்டு ஒரு பெண்ணும் உண்டு. பெயர் பிருந்தா. அவளைப் பார்த்ததும் அநேகமாக எல்லோருக்குமே, பால்குடி மறக்காத, கூச்சப்படும் எட்டு வயசுப் பிள்ளை, வாயில் கட்டை விரல் வைத்து சுவைத்தபடி பாவாடையை இன்னொரு கையில் விழாமல் பிடித்துக்கொண்டு நிற்பதுதான் நினைவுக்கு வரும்.

மருமகள் பிருந்தா இரண்டு குழந்தைகளை பெற்று நெடிதுயர்ந்து நிற்கும் பெண். என்றாலும், அவளை அநியாயத்துக்கு பெப்பர்மின்ட் மிட்டாயை எச்சில் ஒழுக தின்னும் சிறுமிபோல் ஆக்கி வைத்திருந்தார் தைலாஸ்ரீ அத்தை. அத்தை ஊரில் இல்லாதபொழுது, அண்டம் காக்கும் அகிலாண்ட பரமேஸ்வரிபோல, பச்சை உடை உடுத்தி, ‘தாம்.. தூம்..’ என்று நடு வீட்டில் நாட்டியம் ஆடும் மருமகள் பிருந்தா, அத்தையைப் பார்த்ததும் நாணிக் கோணி குனிந்து, தலையால் தரை பெருக்க ஆரம்பித்து விடுவாள்.

‘அந்த எதிர்வீட்டுக்காரி தைலாஸ்ரீ என்பவள் ஒரு கொடுங்கோலி, அவள் தன் மருமகளை அடைபட்ட கதவுக்குள் வைத்து தங்கப் பிடி போட்ட கத்தி வைத்து மிரட்டுகிறாள்’ என்று சொந்தக் கற்பனைகளை பறக்க விட்டு யாரும் தைலாஸ்ரீ அத்தைக்கு மாயாஜாலக் கதையில் வரும் பெண் பூதம் உடுத்தும் கறுப்பு குட்டைப் பாவாடை உடையை போட்டுப் பார்க்கக் கூடாது. குண்டான தைலாஸ்ரீ அத்தைக்கு அது நன்றாகவும் இருக்காது.

உண்மையில், மருமகளுக்கு தலை பின்னி விடுவதும், அவளுக்கு சோறு பரிமாறுவதும், பொட்டு வைப்பதும், பிடித்த உடை வாங்கிக் கொடுத்து, உடுத்தச் சொல்லி ரசிப்பதுமாக.. மருமகளை சொந்தப் பெண்போல பார்த்துக் கொண்டார்.. நான்கு வயது பெண்போல!

‘‘அதை செய்யாதே.. அது உனக்குத் தெரியாது. இதைச் செய்யாதே.. ஐயோ நீ சின்ன பொண்ணு.. உனக்கு தெரியாது.. எதையும் செய்யாதே. சொன்னதை செய்.. சொல்லாக்காட்டி உய்..’’ | என்று வாத்தியாரம்மா பாணியில் மருமகளை ஏவி, அவள் ஏதும் தெரியாத வளாய் மக்கு மடச் சாம்பிராணியாய் போய்விட்டாள். மருமகள் சின்னப் பெண்ணாம். பெரியவர்கள்தான் நல்லது கெட்டது சொல்லி பராமரிக்க வேண்டுமாம்.

தைலா அத்தையோடு தொடர்ந்து ஒரு மணி நேரம் பேசுகிறவர்கள் யாராக இருந்தாலும் தங்களைத் தாங்களே ஒரு குழந்தை என்று நினைத்துக்கொண்டு ‘‘ம்மா.. பசிக்குது.. ங்ஙா குடு!” என்று கால் உதைத்துக்கொண்டு தரையில் புரண்டு அழ ஆரம்பிப்பார் கள். எதிரில் இருப்பவர்களை சிறுபிள்ளையாக்கி விடும் மந்திரம் தைலா அத்தைக்குத் தெரியும்.

தைலா அத்தை எப்பொழுது வந்து தன் மருமகளை ஒரு பச்சைக் களிமண்; மக்குச் சிறு பெண்; கோலம் போடும் செம்மண் என்று சொன்னாலும் நான் மறுப்பு சொல்லாமல் இரண்டு பெரிய அளவு தாம்பாளத் தட்டை எடுத்து ஜைங்.. ஜைங்.. என்று தட்டி ஜால்ரா போட்டுக்கொண்டிருந்தேன்.

பெரிய மனுஷர்களிடம் பெரிய மனுஷர்கள்தான் பயப்படுவார்கள். பெரிய வீரம் சின்னப் பிள்ளைகளிடம் எடுபடுவதில்லை. பிருந்தாவுக்கு தைலா அத்தை மாமியார். ஆனால், தைலா அத்தைக்கு உண்மையில் என் மகள்தான் மாமியார். ஐந்து வயதாக இருக்கும் என் மகள், தைலா அத்தையிடம் மிகவும் ஒட்டுதல்.. என்றாலும் கேள்வி கேட்டு அக்கப்போர் செய்து மண்டை காய வியர்வை சிந்த வைப்பாள்.

எங்கள் வீட்டுக்கு முதன்முதலில் தைலா அத்தை வந்தபொழுது அவரை வாலாட்டி, கால் தூக்கி, வணக்கம் வைத்து வரவேற்றது எங்கள் வீட்டு நாய் ‘கியாங் கியாங்’. (நாயின் பெயரைப் பார்த்தால் அது சீன தேசத்து மலிவு விலை தயாரிப்பு போல தோன்றும். உண்மையில் அது ஒரு மழைக்காலத்தில் இந்தியப் பெற்றோர்களால் உருவாக்கப்பட்டு, அநாதையாக விடப்பட்டது. குட்டியாக வந்த பொழுது அது ‘கியாங் கியாங்’ என்று கத்தியதால், என் மகள் நாயின் வாய்க்கு வந்த பெயரை வைத்துவிட்டாள்.)

தைலா அத்தைக்கு நாய் என்றால் வாய் கொள்ளாத வெறுப்பு. உவ்வே புவ்வே என்று எட்டி நின்றார். தெரிந்தவர்களைப் பார்த்ததும் ‘சௌக்கியமா?’ என்று கேட்பதுபோல நாயை பார்த்தால் ‘கடிக்குமா?’ என்று கேட்பது நமக்கு வழக்கம்தான். தைலா அத்தை வெடவெடப்போடு ‘‘நாய் கடிக்குமா?’’ என்று கேட் டார்.

நான் ‘‘கடிக்காது” என்றேன்.

‘‘அதை எப்படி நம்பறது?’’

என் மகள் ஓடிவந்து, ‘‘அதுக்கு சாக்லெட் சாப்பிட்டு பல்லெல்லாம் சொத்தை. கடிக்காது. காட் பிராமிஸ்” என்றாள். முதன்முதலில் அப்போதுதான் பார்த்துக் கொண்ட தைலா அத்தையும் என் மகளும் ஒட்டிக் கொண்டார்கள்.

நாய் கடிக்காது என்று சத்தியம் செய்த பின்னும் தைலா அத்தை நாயைத் தாண்டி வீட்டுக்குள் வருவதாய் இல்லை. கியாங் கியாங்கிற்கு ஒரு நல்ல குணம். அது வீட்டுக்கு வரும் விருந்தாளியை மட்டுமல்ல, திருடன் வந்தாலும் கடிக்காது. குரைக்கவும் செய்யாது. சதா வாலாட்டிக்கொண்டே இருக்கும்.

இதைச் சொன்னதும் தைலா அத்தை, ‘‘திருடனுக்கு வாலாட்டற நாயெல்லாம் ஒரு நாயா? அதை பேசாம அநாதை ஆசிரமத்துக்கு அனுப்பி விடலாமே” என்று சொன்னார்.

ஆனால், கியாங் கியாங்கிற்கு ஒரு கெட்ட குணம். வீட்டுக்கு வருபவர்கள் கையில் பை, பழம், தட்டுமுட்டு சாமான், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் எதை வேண்டுமானாலும் கொண்டு வரலாம். ஆனால், போகும்போது குண்டூசி கொண்டு போனாலும் வெளியே விடாது. அது அவர்கள் பொருளாகவே இருந்தாலும் வைத்துவிட்டு வெறும் கையோடு போனால்தான் விடும். ‘‘நல்ல நாய் போ” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார்.

வந்த முதல் நாளிலேயே ‘‘இது இப்படி இருக்கணும்.. அது அப்படி இருக்கணும்.. நீ சின்னப் பொண்ணு.. உனக்கு விவரம் பத்தாது” என்று எனக்கு கண்டது காணாதது குறித்து எல்லாம் அரை மணி நேரம் அறிவு சொல்லிவிட்டுத்தான் வெளியே போனார்.

ஒருநாள் தைலா அத்தையிடம் என் மகள் கேட்டாள், ‘‘தைய்யா பாட்டி, காண்டா மிருகம் எப்படி இருக் கும்?”

‘‘காண்டாமிருகம், காண்டாமிருகம் மாதிரி இருக்கும்’’ என்று தையல் அடித்துக்கொண்டே என் மாமியார் சொன்னார். அதுதான் குழந்தைகளிடம் தப்பிப்பவர்களுக்கு அழகு. ஆனால், தைலா அத்தைக்கு, உச்சி மலையில் ஒற்றைக்காலில் நின்று ஞானம் பெற்ற மகா பிக்குனி என்ற எண்ணம். ‘‘நாலு காலு, ஒரு வாலு, ஒரு தலையோட காண்டாமிருகம் இருக்கும்’’ என்றார்.

என் மகள் ஓடிப்போய் எங்கள் வீட்டு நாய் கியாங் கியாங்கை இழுத்துக்கொண்டு வந்து, ‘‘பாட்டி, இது காண்டாமிருகமா?” என்று கேட்டாள். நாய்க்குத்தான் நாலு கால், ஒரு வால், ஒரு தலை இருக்கிறதே! ஐந்து வயதில்லையா? மூளை கொஞ்சம் மொக்கு விட்டிருக்கும் என்று நான் சந்தோஷப்பட்டேன்.

அசடு வழிந்த தைலா அத்தை அடுத்து மிக கவனமாக சொன்னார், ‘‘செல்லம்.. நல்லா கேட்டுக்கோ.. நாலு காலு, ஒரு வாலு, ஒரு தலையோட ஒத்தைக் கொம்பும் இருக்கிறதுதான் காண்டாமிருகம்” எப்படியும் உலகத்தில் ஒற்றைக் கொம்புள்ள நாய் இருக்காது என்று அவர் நம்பியிருக்கலாம்.

கொஞ்சம் நாள் கழித்து என் மகள் ‘‘தைய்யா பாட்டி, நம்ம வீதிக்கு காண்டாமிருகம் வந்திருக்கு” என்று கத்தியபடி வந்தாள்.

எனக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் வீதிக்கு எப்பொழுதாவது தாயத்து விற்பவன் கரடி கொண்டு வருவான். கோயில் விசேஷத்துக்கு யானை வரும். மருந்துக்கு பால் விற்பதற்காக கழுதை கொண்டு வருவார்கள். ஆனால், காண்டாமிருகம் எப்படி வரும்? காண்டாமிருகத்தை கொண்டு வந்து தாயத்து விற்பார்களா?

மகள் அடம் பிடித்ததால், வெளியே போய்ப் பார்த்தோம். அங்கே நிஜமாகவே ஒற்றைக் கொம்பு, நான்கு கால், ஒரு வாலோடு என் மகள் சொன்ன காண்டாமிருகம் நின்றிருந்தது.

உச்சி வானத்தில் இருந்த சூரியன் மட்டும் எட்டு வாட்ஸ் பல்பு போல ஃபியூஸ் போயிருந்தால், தைலா அத்தை என் மகள் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்டிருப்பார். வெட்ட வெளிச்சமாக இருந்ததால், வெட்கப்பட்டு நின்றார். அங்கே ஒற்றைக் கொம்போடு நின்றது காண்டா மிருகமல்ல. ஒரு பசுமாடு. பிள்ளை கேட்ட கேள்விக்கு நம்பகமான தெளிவான பதில் சொல்லமுடியாத அவமானம் தைலா அத்தைக்கு. அந்தப் பசு, ஒற்றைக் கொம்புடன் பிறந்த அதிசயப் பசு இல்லை. விபத்தில் கொம்புடைந்த ஊனமுற்ற பசு. அன்றைக்குத்தான் என் மகளை தன்னுடைய மாமியார் என்று தைலா அத்தை ஒப்புக்கொண்டார்.

தைலா அத்தை தனக்குத்தானே தன்னை ஒரு கிராமத்து விஞ்ஞானி, மருத்துவர், வக்கீல் மற்றும் இன்ஜினீயர் என்று சொல்லிக்கொண்டார். பிரசவத்துக்கு ஆலோசனை தருவதில் ஆரம்பித்து தலைவலி, பல் வலி, காது வலி, திருகு வலிக்கு மருந்து தருவது வரையிலும் கிராமத்தில் செய்திருக்கிறார். மற்றும் சமையல் பக்குவம், சடங்கு சம்பிரதாய நுட்பங்கள் எல்லாம் தெரிந்தவராக இருந்திருக்கிறார். குடும்பப் பிணக்கு, சுணக்கு தீர்க்கும் நாட்டாமையாகவும், விதைப்பது, அறுப்பது, எரு இடுவது போன்றவற்றில் அறிவுரைகளை அள்ளி வழங்கும் வேளாண் விஞ்ஞானி யாகவும் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட பல்துறை கெட்டிக்காரியான தைலா அத்தையின் புத்திசாலித்தனம், என் மகளின் அறிவு முன்பாக முட்டிக்காலிட்டு தரையில் மண்டை இடித்துக்கொண்டது. மகளின் அக்கப்போர் தாங்காமல் தைலா அத்தை ‘‘ஈஸ்வரா என் தலையில் மூளை இருக்கா, இல்லையாடா?” என்று புலம்பியதை நானே கேட்டிருக்கிறேன்.

என் மகள் சின்னச் சின்ன கேள்விகள்தான் கேட்டாள். ‘‘ஈ பறந்து போகுதே… அதுக்கு பெட்ரோல் எங்க போடுவாங்க?’’, ‘‘கொசு ஊசி மட்டும் போடுதே.. ஏன் மாத்திரை எழுதித் தர்றதே இல்ல?’’, ‘‘பட்டாம்பூச்சிக்கு பல் சொத்தையானா அழுமா?’’, ‘‘எறும்பு படுக்கையில ஒன் பாத்ரூம் போகுமா?’’ | போன்ற எளிமையான கேள்விகள்தான்.

பலமுறை என் வீட்டுக்கு தைலா அத்தை வந்து என் மகளிடம் மல்லாடி விட்டுப் போயிருக்கிறார் என்றாலும் ஒரு தினம் மட்டும் மொட்டைத் தலையில் கொட்டையாக எழுதும்படி அழுத்தமான தினமாக இருந்தது. ஒருநாள், நான் வெளியே துணி உலர்த்திக் கொண்டிருக்கும் போது, கிச்சனில் இருந்த பிஸ்கெட் டின்னை எடுத்திருக்கிறார் தைலா அத்தை.

என் மகள் ‘அம்மாகிட்ட கேக்காம எதையும் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டா பேட் கேர்ள்” என்றிருக்கிறாள். தைலா அத்தை, ‘‘உன் அம்மா என்னை விட சின்னவ. அவதான் என்கிட்ட கேட்டுட்டு பிஸ்கெட் சாப்பிடணும்’’ என்று சொல்லிக் கொண்டே பிஸ்கெட்டை கொறித்திருக்கிறார்.

நான் வந்ததும் என் மகள் என்னிடம் முறையிட்டாள். தைலா அத்தை ‘‘பிஸ்கெட் மொறு மொறுன்னு நல்லா இருக்கே.. எங்க வாங்கினே. அடுத்த முறை போகும் போது எனக்கும் ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்துடு’’ என்றார்.

எனக்கு பகீர் என்றது. ‘‘முழுசும் முழுங்கிட்டீங்களா?’’ என்று கேட்டேன்.

‘‘என்னடி ஆச்சி?’’ தைலா அத்தை கேட்க,

நான், ‘‘அது பெட்கேர்’’ என்றேன்.

‘‘அப்படின்னா?”

‘‘அது நாய் பிஸ்கெட், பாட்டி” என்று என் மகள் சிரித்தாள்.

தைலா அத்தை உவ்வே.. அவ்வே.. கிவ்வே.. என்று வாயை ஆங்கில ‘ஓ’, ‘க்யூ’, ‘டபிள்யூ’ போல எல்லாம் வைத்து, வாந்தி எடுத்துப் பார்த்தார். உள்ளே போனது வரவேயில்லை.

‘‘நான் அப்பவே சொன்னேம்மா. அம்மாகிட்ட நாய் பிஸ்கெட் சாப்பிடலாமா வேணாமான்னு கேட்டு சாப்பிடுங்கன்னு. பாட்டிதான் கேக்கல’’& மகள் முறையிட்டாள்.

தைலா அத்தையிடம் நான் மன்னிப்பு கேட்டேன். ‘‘இவ அடிக்கடி நாய்க்கு பிஸ்கெட் போடுறா. அடிக்கடி சாப்பிட்டா நாய் உடம்பு பெருத்து, முடி கொட்டி, சொறி வந்து செத்துடாதா? அதான் ஷெல்ஃபில, கிச்சன்ல வெச்சேன்’’ என்றேன்.

‘‘தப்பு தப்பு! அது அது இடத்தில அது அது இருக்கணும்’’ என்று தைலா அத்தை பிதற்ற ஆரம்பித்தார். கண்ணில் நீர் வந்தது. நாய் பிஸ்கெட் சாப்பிட்டால் கண்ணீர் வருமா? நான் சாப்பிட்டதில்லை. என் வீட்டில் நாய் பிஸ்கெட் மட்டுமல்ல.. கண்டதும் கண்ட இடத்தில் இருக்கும். என் மாமியார் ஒருமுறை பல் விளக்கிக் கொண்டே, ‘‘இது என்ன பேஸ்ட்? மண்ணு மாதிரி இருந்தாலும் நல்லா வாசனையா நொறை நொறையா வருதே” என்றார். அது ஷேவிங் கிரீம்.

நானே ஒரு முறை சோப் ஆயில் என்று நினைத்து விளக்கெண்ணையை தரையில் கொட்டி, தேய்த்துத் தேய்த்துக் கழுவியிருக்கிறேன். என் அத்தை கோலப் பொடியில் உப்புமா செய்த அநியாயங்களும் உண்டு. வீடு என்றால் இப்படி சின்னச் சின்ன பொருள் மாறாட்டம் இருக்கத்தானே செய்யும். இதற்காக கண்ணீர் விட முடியுமா?

கண்கள் இரண்டிலும் நீர் வழிய, ‘‘ராகப்பிரியா எப்படி செத்தானு உனக்கு தெரியுமா? அவ எப்படி அழகா இருந்தானு உனக்கு தெரியுமா? அவ டாக்டருக்கு படிச்சிட்டு இருந்த பொண்ணுன்னு உனக்கு தெரியுமா?’’ என்று தைலா அத்தை பேசப் பேச எனக்கு பயமாகி விட்டது. இது நாய் பிஸ்கெட் தந்த குழப்பம் இல்லை. தைலா அத்தைக்கு வேறு வேதனை இருக்கிறது என்று நான் மௌனமாக எதுவும் பேசாமல் இருந்தேன்.

‘‘உன்னை மாதிரிதான் நானும். கண்டதை கண்ட இடத்தில வெக்கிற பொம்பளையாதான் இருந்தேன். அடுப்பு இருக்கிற இடத்தில அடுப்பும் உடுப்பு இருக்கிற இடத்தில உடுப்பும் இருந்தா மனுசன் நெருப்பில எரிஞ்சி சாக மாட்டான்னு எனக்கு தெரியாது. செருப்பு கிச்சன்ல இருக்கும். பாத்ரூம் பக்கெட், சாமி ரூம்ல இருக்கும். துடைப்பம் பீரோவுல இருக்கும். பட்டுப் புடவை தோசை சட்டி மேல இருக்கும். அதனால ராகப்பிரியா செத்துப் போனா..“

தைலா அத்தை என் முகம் பார்க்காமல் காற்றோடு பேசினார்.. ‘‘டாய்லெட் ஆசிட் இப்ப மாதிரி இல்ல, அப்பல்லாம். தண்ணி கலக்காத வீரியமா இருக்கும். ஒருமுறை ஆசிட் பாட்டில் மூடி தொலைஞ்சதால பெட் ஜார்ல டாய்லெட் ஆசிட்டை ரொப்பி, ஜன்னல் மாடத்தில வெச்சிட்டேன். என் மக காலேஜ் விட்டு வெயில்ல வேர்த்து வீட்டுக்கு வந்தா. வீட்டுல ஃபிரிஜ்ல வெச்ச தண்ணிய பெட் ஜார்ல வெச்சிக் குடிக்கிறது அவ பழக்கம். வந்த மகளுக்கு எத்தனை தாகமா இருந்திச்சோ.. ஆசிட்டை எடுத்து மடக்கு மடக்குன்னு என் கண் முன்னாடியே ரெண்டு வாய் குடிச்சிட்டா. ஆசிட் குடிச்ச வாய் வெந்து அவ கத்தறா.. தடுக்க முடியாம போன நானும் கத்தறேன். வாயெல்லாம் நுரை நுரையா புகை புகையா வருது.

ஒரு மாசம் ஆஸ்பிட்டல்ல இருந்தா. வாய் வெந்து போச்சி. நாக்கு கருகிப் போச்சி. பல் உதிர்ந்து போச்சி. உணவுக் குழாயை அறுத்து எடுத்தாங்க. குடல் கொஞ்சம் அறுத்து எடுத்தாங்க. பிறகு இரைப்பை, கர்ப்பப் பை, ஈரல்னு ஒண்ணு ஒண்ணா ஆபரேசன் பண்ணி எடுத்தாங்க. வாயில ஆரம்பிச்சி அடி வயிறு வரையிலும் என் மகளுக்கு உள்ள ஒண்ணுமே இல்ல.. உடம்புதான் அழிஞ்சி போச்சி.. மூளை நல்லாதானே இருக்கு! என் மக என்கிட்ட ‘நான் பொழைச்சிப்பேம்மா.. நீ அழாத! உன்னால தப்பில்ல.. நீ அழாத’னு சமாதானம் சொல்லறா. நான் எப்படி அழாம இருப்பேன். என் மக வலியோட மல்லாந்து கல் உதைச்சி ரணப்படுறதை நான் பார்த்தேனே.. வீட்டை வித்து, நகையை வித்து ஒரு மாசம் மருத்துவம் பண்ணியாச்சி. பொழைக்கல.. செத்துப் போயிட்டா.

ஒத்தைப் பொண்ணை பறிகொடுத்தேன். பின்னாடி அந்த ஊர்ல இருக்கப் பிடிக்காம ஊர் ஊரா மாறி மாறி இருக்கோம். வாடகை வீட்டுல அது அது எடத்தில அது அதை வெச்சிருக்கேன். என் மகளைத்தான் இருக்கிற எடத்தில காணோம்.”

எனக்கு பகீர் என்றது. தைலா அத்தை வீட்டில் ஒரு அழகான சின்னப் பெண்ணின் புகைப்படம் மாலை போட்டு குத்துவிளக்கேற்றி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அவரது மகள் என்று தெரியும். அவள் மரணம் இப்படி என்று தெரியாது. நான் அதிர்ந்து போனேன். எனக்கும் பிள்ளை உண்டே. ஓடி ஓடி எனக்குத் தெரிந்தவரை வீட்டைச் சரியாக்கினேன்.

தைலா அத்தை கண்ணீர் துடைத்துக்கொண்டு ‘‘புத்தியா பொழைச்சிக்கோ” என்று சொல்லிவிட்டு நாய் பிஸ்கெட் தின்ற வாயை இன்னொரு முறை கொப்பளித்து துப்பிவிட்டு வீட்டுக்குப் போனார்.

பிறகு வெகு நாள் கழித்து மருமகள் பிருந்தாவிடம் கேட்டேன். ‘‘இப்பொழுதும் உன்னை தைலா அத்தை குழந்தை போலத்தான் நடத்துகிறார்களா?” என்று.

‘‘ஆமாம். இப்பொழுதெல்லாம் யார் வீட்டுக்குப் போனாலும் பிஸ்கெட் மட்டும் வாங்கி சாப்பிடவே கூடாது என்று என் அத்தை மிரட்டியிருக்கிறார்’’ என்று சொன்னாள். தைலா அத்தையும் யார் வீட்டுக்குப் போனாலும் பிஸ்கெட்டை மட்டும் சாப்பிடுவதே இல்லையாம்.

– அக்டோபர் 2006

Print Friendly, PDF & Email

3 thoughts on “கொம்புள்ள குதிரை!

  1. கலகலன்னு ஆரம்பிச்சி கடைசியா கலங்க வச்சிடீங்க கதாசிரியரே.. படைப்பு மிகவும் அருமை .. வாழ்த்துக்கள்..

  2. கலகலன்னு ஆரம்பிச்சி கடைசியா கலங்க வச்சிடீங்க காதாசிரியரே.. படைப்பு மிகவும் அருமை .. வாழ்த்துக்கள்..

  3. அருமையான படைப்பு..

    படைப்பாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *