கையெழுத்து வேட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 1, 2022
பார்வையிட்டோர்: 2,704 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசகர்களுக்கு

இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத்துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு.கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறோமே? என்றும், சில இடங்களில் இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது. இப்புத்தகம் முதன் முறை வெளியானபோது இதைப் படித்த ரசிகமணி டி. கே. சி. அவர்கள் என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மிக அருமையான கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். எதிர் காலத்தில் நான் ஒரு சிறந்த நகைச்சுவை ஆசிரியராக விளங்குவேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னே வாழ்த்தியிருந்தார்கள். இச்சமயம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சவி செலுத்துகிறேன்.

சாவி,
மயிலாப்பூர்,
14-4-1964


கையெழுத்து வேட்டை

“இது என்ன ஜாதி மாம்பழம்? புளிப்பு, நார் எல்லாம் இருக்குமா?” என்று கேட்டான் நாகராஜன்.

பழக் கடைக்காரன் பழங்களைத் துணியால் துடைத்துக் கொண்டே, “சாமி, இது ருமானி ஜாதி; கற்கண்டு மாதிரியிருக்கும். காலையில் ஒரு விலை சொல்லி எடுத்துப் போங்க” என்றான்.

“அப்படியானால் கற்கண்டு விலைக்குக் கொடுப்பாயா?” என்று கேட்டு நாகராஜன் தன் ஹாஸ்யத் திறமையை அவனிடம் காண்பித்துக் கொண்டான்.

“என்ன விலைக்கு எடுப்பீங்க, சாமி?” என்று கேட்டான் வியாபாரி.

“நீதான் சொல்லேன், நூறு என்ன விலைக்குக் கொடுப்பாய்?”

“உங்களுக்கு எத்தனை பழங்கள் வேண்டும்?”

“அதைப்பற்றி உனக்கென்ன? விலையைச் சொல்லேன்!”

“சரி சாமி; நூறு எட்டு ரூபாய் ஆகும்.” ‘

“ஐந்து ரூபாய் என்று போட்டுக்கொண்டு எனக்கு அரை டஜன் பழம் கொடுப்பாயா?” என்று கேட்டான் நாகராஜன்,

“பழம் வாங்கற மூஞ்சியைப் பாருடா!” என்று கடைக்காரன் தன்னுடைய வேலைக்காரப் பையனைப் பார்த்துக் கூறினான். அந்தப் பையனும் பழம் வாங்க வந்த நாகராஜனுடைய முகத்தை உற்றுப் பார்த்தான்.

இது நாகராஜனுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியது. கொஞ்சம் சூடாகப் பேச ஆரம்பித்தான். இப்படியாகக் கடைக்காரனுக்கும் நாகராஜனுக்கும் தர்க்கம் முற்றுகிற சமயம் பார்த்து அந்த இடத்தில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. நாகராஜன் திரும்பிப் பார்த்தான். காரின் பின் ஸீட்டில் தேவிகாராணியைப்போல் ‘டிரஸ்’ செய்துகொண்டு உட்கார்ந்திருந்தாள் ஒரு ஸ்திரீ.

கார் சட்டென்று வந்து நின்ற வேகத்தில் அவள் காதில் அணிந்திருந்த பெரிய பெரிய குண்டலங்கள் முன்னும் பின்னும் ஊசலாடின. நாகராஜன் சண்டையெல்லாம் மறந்து, தான் இருப்பது பூலோகமா அல்லது தேவலோகமா என்றுகூடப் பிடிபடாமல் ஸ்தம்பித்து நின்றான். அவனுடைய கை சட்டென்று கலைந்திருந்த தன் கிராப்புத் தலையைத் தடவி ஒழுங்குபடுத்தியது.

இதற்குள் காரிலிருந்த ஸ்திரீ ஒரு தோல் பையிலிருந்து இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கடைக்காரனிடம் கொடுத்து, “இந்தா, நேற்றுக் கொடுத்தாயே ருமானி, அந்த ஜாதிப் பழத்தில் நூறு பழம் கொடு” என்றாள்.

கடைக்காரன் நாகராஜனை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சிரித்து விட்டுப் பழங்களை எண்ணி ஒரு கூடையில் போட்டான்.

நாகராஜனுடைய மனம் அந்த ஒரு நிமிஷம் படாதபாடு பட்டது. ஆயிரம் சந்தேகங்கள் தோன்றி மறைந்தன.

“இந்த ஸ்திரீயை எங்கோ பார்த்திருக்கிறோம். அடிக்கடி பார்த்தது போலல்லவா ஞாபகம் இருக்கிறது? ஒரு வேளை……ஆமாம்……சந்தேகமில்லை ; அவளேதான். ஸினிமா நக்ஷத்திரம் மிஸ்.கே.பி.மோஹினிதான். சந்தேகமே இல்லை” என்று எண்ணினான்.

உடனே தன்னுடைய கையெழுத்து வேட்டைப் புஸ்த கத்தை எடுத்து அவளிடமிருந்து ஒரு கையைழுத்து வாங்கி விடுவதென்று தீர்மானித்தான். ஆனால் பின்னோடு ஒரு யோசனை குறுக்கே தோன்றி அந்த எண்ணத்தைத் தடுத்தது.

ஒரு வேளை, இவள் மிஸ்.மோகினியாயிராவிட்டால், என்ன செய்வது?”


மிஸ் கே.பி.மோஹினி அநேக தமிழ்ப் படங்களில் நடித்துப் பிரசித்தி அடைந்திருந்தாள். மிஸ் மோஹினி நடித்த படம் வந்ததென்றால், நாகராஜன் குறைந்த பக்ஷம் நாலு தடவையாவது பார்க்காமல் விடுவதில்லை. அவன் தயாரித்து வைத்திருக்கும் ‘ஸினிமா ஸ்டார்’ போட்டோ ஆல்பத்தின் முதல் பக்கத்தில் மிஸ் மோஹினியின் படத்தைத்தான் ஒட்டி வைத்திருக்கிறான். மிஸ் மோஹினி என்றால் அவனுக்கு அவ்வளவு உயிர்! அவளுடைய கையெழுத்து தன் வசம் இல்லாத குறை ஒன்றுதான் அவனை வெகுநாளாக வாட்டி வந்தது. அதற்கும் இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.

நாகராஜன் பகவானை வாயார வாழ்த்தி மனமாரப் புகழ்ந்து, “கடவுளே, இவள் மிஸ் கே.பி.மோஹினியாயிருக்கட்டுமே!” என்று வேண்டிக் கொண்டான்.

எதற்கும் அவளையே கேட்டு விடுவதுதான் புத்திசாலித்தனம் என்று தீர்மானித்து நாகராஜன் தைரியமாகக் காரின் சமீபத்தில் நெருங்கி, “தாங்கள் தானே மிஸ் கே. பி.மோஹினி..” என்று கேட்டவாறே தன் சட்டைப் பையிவிருந்த ஒரு நோட்டுப் புஸ்தகத்தை எடுத்தான். அதை அவள்முன் நீட்டி, “ஒரு கையெழுத்து” என்று கெஞ்சிப் பேனாவைக் கொடுக்கப் போனான்.

காரிலிருந்த ஸ்திரீ அவனை அலக்ஷியமாகப் பார்த்து, “யார்…” என்று கம்பீரமாகக் கேட்டாள்,

orr-5608_Kaiyezhuthu-Vettai_0002-pic

“கே.பி.மோஹினி..” என்று நாகராஜன் ஓர் அசட்டுச் சிரிப்புடன் இழுத்தான். இதற்குள் அவனுடைய கையும் பின்னுக்கு இழுத்துக்கொண்டது.

காரிலிருந்த ஸ்திரீக்கு இதைக் கண்டதும் சிரிப்பு வந்து விட்டது. அதை ஒருவாறு அடக்கிக்கொண்டு ஒரு ஸினிமாப் புன்னகை புரிந்துவிட்டு, நான் கே.பி.மோஹினி இல்லை; நான் அவருடைய தங்கை!” என்றாள்.

நாகராஜன் பெரிய ஏமாற்றத்துடன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான். இதற்குள் கடைக்காரன் நூறு மாம்பழங்களை எண்ணிக்கொண்டு வந்து காரில் வைத்து மீதிச் சில்லறையையும் கொடுத்துவிட்டுப் போனான்.

நாகராஜன் உற்சாகமிழந்தபோதிலும் முயற்சியை விடவில்லை. அந்தக் கார் நம்பரைக் குறித்து வைத்துக் கொண்டான். அது ஒரு டாக்ஸி என்பதைக்கூட அந்தச் சமயம் அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. கார் வந்த வழியே பறந்து சென்றதும் நாகராஜன் குழம்பிய மனத்துடன் பக்கத்துக் கடைக்குப் போய் அரை டஜன் புளிப்பு மாம்பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கிப் போனான்!

மறுதினமே நாகராஜன் எப்படியும் கே.பி.மோஹினியை நேரில் போய்ப் பார்த்து ஐந்து நிமிஷமாவது அவளுடன் பேசி ஒரு கையெழுத்தை வாங்கிவிடுவதென்று முடிவு செய்தான். அதற்கு ஒரே ஒரு தடங்கல் ஏற்பட்டது. மிஸ் கே.பி.மோஹினியின் விலாசம் தெரியாதே! அதற்கென்ன செய்வது ? புத்திசாலியான நாகராஜனுக்கு மோஹினியின் விலாசத்தைக் கண்டுபிடிப்பதுதானா ஒரு பிரமாதமான காரியம்?

தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றில் யார் எந்த ஸினிமா நக்ஷத்திரங்களின் விலாசத்தைக் கேட்டாலும் தெரியப்படுத்துவதென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார் அதன் ஸினிமா ஆசிரியர். நாகராஜனுக்கு அப்போது அந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. உடனே, “ஐயா ஆசிரியரே, மிஸ் கே.பி.மோஹினியின் விலாசத்தைக் கொஞ்சம் தயவு செய்து தெரிவிக்க முடியுமா?”என்று ஒரு கடிதம் எழுதிக் கேட்டான். அந்தப் பத்திரிகையின் ஸினிமா ஆசிரியரும் அடுத்த வாரமே ரொம்ப சந்தோஷத்தோடு விலாசத்தைப் பிரசுரித்திருந்தார்.

காரில் பறந்து சென்ல ஸ்திரீ தன் வீடு சென்றதும். “அம்மா…அம்மா…” என்று அவசரமாகக் கூப்பிட்டாள்.

“ஏன்!” என்று அவளுடைய தாயார் கேட்டுக் கொண்டே வந்தாள்.

“இன்று பழக்கடையில் யாரோ ஒருவன் என்னை அடையாளம் கண்டுகொண்டு, ‘தாங்கள் தானே கே.பி.மோஹினி?’ என்று கேட்டுக் கொண்டே ஒரு கையெழுத்துப் போட்டுக் கொடுக்கச் சொன்னான். என் பாடு பெரிய ஆபத்தாய்ப் போய்விட்டது. நான் என்ன செய்தேன் தெரியுமா? சாமர்த்தியமாக, ‘நானில்லை மோஹினி; நான் அவளுடைய தங்கை’ என்று சொல்லித் தப்பித்துக் கொண்டு பறந்து வந்து விட்டேன். எனக்கு ரொம்ப அவமானமாகப் போய் விட்டதம்மா. கையெழுத்துப் போடக்கூடத் தெரியாமல் இருக்கிறேனே என்று மிகவும் லஜ்ஜையாக இருக்கிறது. கையெழுத்துப் போடத் தெரிந்திருந்தால் இப்படி அவனை ஏமாற்றிவிட்டு வந்திருக்கவேண்டியதில்லை அல்லவா?” என்றாள்.

“பரவாயில்லை; கையெழுத்துப் போடத் தெரியாமலேயே நீ இவ்வளவு பணம் சம்பாதிக்கிறாயே, அதுவே போதும்” என்று தாயார் தேறுதல் கூறினாள்.

வாரப் பத்திரிகையில் வெளி வந்த விலாசத்தை எடுத்துக்கொண்டு நாகராஜன் பஸ் ஏறிப் பூந்தமல்லிரோடுக்கு மிஸ் கே.பி.மோஹினியைப் பார்க்க ஓடினான். எப்படியும் பார்த்துப் பேசி, “ஒரு கையெழுத்து வாங்காவிட்டால் என் பெயர் நாகராஜனா?” என்று எண்ணிக்கொண்டு போனவன். மேற்படி விலாசத்தில் மிஸ் மோஹினி இல்லாததைக் கண்டு மனமுடைந்து வீடு திரும்பினான். பாவம், அவனுக்கு என்ன தெரியும்?

வாரப் பத்திரிகையில் தன்னுடைய விலாசம் வந்திருந்ததைச் சொல்லக்கேட்ட கே.பி.மோகினி அலறிப் புடைத் துக்கொண்டு, “ஐயையோ, அம்மா! என் விலாசம் ஒரு வாரப் பத்திரிகையில் போட்டிருக்கிறதாமே! எல்லாரும் சொல்கிறார்களே! அன்று என்னைப் பழக்கடையில் சந்தித்த, பயித்தியம் தான் விலாசத்தைக் கேட்டிருக்கவேண்டும். நாளைக்கே அவன் இங்கு வந்து கையெழுத்தைப் போடு என்று என் பிராணனை வாங்கினால், நான் என்ன செய்வது? உடனே இந்த வீட்டை மாற்றியாக வேண்டும்” என்றாள்.

அன்றைக்கே, நாகராஜன் வருவதற்குள்ளாக மிஸ் மோகினி அந்த வீட்டைக் காலி செய்து வேறு வீட்டுக்குப் போன விஷயம் அவனுக்கு எங்கே தெரியப் போகிறது?

– மௌனப் பிள்ளையார், இரண்டாம் பதிப்பு: ஏப்ரல், 1964, மங்கள நூலகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *