கொக்‍கிகுமாரும், குண்டர்களும்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 26,635 
 
 

ரவுடிகளுக்‍கு பெயர் போன அந்த ஏரியாவில் ஒரு காலத்தில் இரவு 10 மணிக்‍கு மேல் யாரும் நடமாடுவதில்லை. அவ்வளவு பயங்கரமான ஏரியா என புகழ்பெற்றிருந்த அந்த பகுதியில் தற்போது குண்டர்களின் அட்டகாசம் தலைவிரித்தாடிக் ‍கொண்டிருக்‍கிறது. அவர்களை தட்டிக்‍கேட்க ஆளில்லை என்கிற சூழ்நிலையே அங்கு நிலவி வருகிறது. இரவு 8 மணிக்‍கு மேல் பெண்கள் நடமாட்டத்தை அப்பகுதியில் காண முடியாது. இரவு 9 மணிக்‍கு மேல் ஆண்கள் நடமாட்டம் கூட சுத்தமாக இருக்‍காது. அந்த அளவுக்‍கு குண்டர்களின் அட்டகாச ராஜ்ஜியம்அங்கு கொடிகட்டி பறந்தது.

அவர்கள், குண்டர்கள் என்றால் சாதாரண குண்டர்கள் கிடையாது. கெட்டவர்கள், கொலை, கொள்ளையில் ஈடுபடுவர்கள் என்கிற அர்த்தத்திலும் இங்கு குறிப்பிடப்படவில்லை. குண்டர்கள் என்றால் அவர்கள் உண்மையிலேயே குண்டர்கள்தான். அந்த அர்தத்தில் மட்டுமே எடுத்துக்‍ கொள்ள வேண்டும். அவர்களில் இடுப்பு அளவில் 42 இன்ச் அளவுக்‍கு குறைந்த அளவில் எந்த ஒரு குண்டரும் (நோ குண்டன் -குண்டர்ர்ர்) கிடையாது. இந்த மரியாதைக்‍குரிய குண்டர்கள், எந்த நேரத்தில் எந்த இடத்தில் மடக்‍குவார்கள் என்றே தெரியாது. திடீர் திடீர் எனத் தோன்வார்கள். கண்ணிமைக்‍கும் நேரத்தில் கண்முன்னே தோன்றி தங்கள் கைவரிசையை காண்பிப்பதில் அவர்கள் வல்லவர்கள்.

பொரும்பாலும், பலர் இவர்களிடம் சிக்‍காமல் தப்பி ஓடிவடுவது உண்டு. அவ்வளவு தைரியம் படைத்த ஒரு சிலர் மட்டுமே இரவு 9:30 மணிக்‍கு மேல் அந்த பகுதியில் நடமாடக்‍ கூடியவர்களாக இருப்பார்கள். இருப்பினும் பதுங்கியிருந்து கோழியை அமுக்‍குவது போல் பாய்ந்து வந்து அமுக்‍குவதில் வல்லவர்கள் இந்த மதிப்பிற்குரிய குண்டர்கள். பலர் தப்பியோடும்போது எங்கேனும் முட்டிக்‍கொண்டு உயிரை விட்டதும் உண்டு. சென்ற வாரம் கூட செய்தித்தாளில் 3ம் பக்‍கத்தில் அந்த செய்தி வந்தது. ஒரு குண்டர் ஒரு இளைஞனை மடக்‍க நினைத்த பொழுது, வேகமாக இருசக்‍கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அந்த இளைஞன் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்து அடிபட்டு இறந்து போனான். அதை ஒரு பொருட்டாகவே அந்த குண்டர்கள் கூட்டம் எடுத்துக்‍ கொள்ளவில்லை.

இரவு நேரங்களில் தங்கள் வருமானத்தை பெருக்‍குவதற்காக ஏதேனும் விளக்‍கு இல்லாத கம்பத்தின் கீழோ, அல்லது நன்றாக எரிந்து கொண்டிருக்‍கும் விளக்‍கை உடைத்தெறிந்துவிட்டு அந்த இடத்தை இருளாக்‍கிக்‍ கொண்டோ, முகமூடி கொள்ளைக்‍காரனைப் போல பதுங்கியிருப்பார்கள். ஆனால் இவர்கள் முகமூடி கொள்ளைக்‍காரர்கள் கிடையாது. இவர்களுக்‍கும் முகமூடி கொள்ளைக்‍காரர்களுக்‍கும் ஒரு சில வித்தியாசம் உண்டு. ஒரு முகமூடி கொள்ளைக்‍காரனைப் போல் அவரச அவசரமாக இவர்கள் கொள்ளை அடிப்பதில்லை. நின்று நிதானமாக, ஆற அமர பொறுமையாக அலட்டிக்‍கொள்ளாமல் ஷார்ப்பாக சத்தமில்லாமல் செய்வார்கள் இவர்கள். அவர்களைக்‍ கட்டுப்படுத்துவது மிகக்‍ கடினம். அவர்களை கேள்வி கேட்பதற்கு இங்கு ஆளே இல்லை. தாங்கள் வைப்பதுதான் சட்டம் என குரல் உயர்ததி கூச்சமில்லாமல் சர்வாதிகாரம் செய்வார்கள் அவர்கள். அவர்களுக்‍கு அதிகாரமட்டத்தில் மிகுந்த செல்வாக்‍கு உண்டு. அந்த தைரியத்தில்தான் அவர்கள் அப்பகுதியல் இல்லாத ஆட்டமெல்லாம் போடுகிறார்கள்.

அந்த கால திரைப்படங்களில் கொள்ளைக்‍காரர்கள் எல்லாம் தங்களுக்‍கென்று பிரத்யேக ஆடைகள், குறிப்பாக கருப்பு நிற கால்சட்டை, கருப்பு கைவச்ச பனியன் அல்லது கோடு போட்ட பனியன், கன்னத்தில் பெரிதாக மச்சம், கழுத்தில் ஒரு கர்சீப், முதுகுப் பகுதியில் வட்டமாக ஒரு தொப்பி, கழுத்தில் ஒரு கர்சீப் (தேவைப்படும் நேரத்தில் முகத்தை மறைத்துக்‍கொள்வதற்காக) இந்த டிரெஸ்கோட்டை பெரும்பாலும் சரியாக பின்பற்றுவார்கள். அவர்கள் மக்‍கள் குழம்பக்‍ கூடாது என்று நினைத்தார்கள். தாங்கள் அப்பியர் ஆனவுடன், “கொள்ளைக்‍காரன் வந்து விட்டான் தங்களிடம் இருக்‍கும் பொருட்களை எல்லாம் உடனே மறுபேச்சில்லாமல் கொடுத்து விட வேண்டும்” என்பதை ஆளையும் உடையையும் பார்த்தவுடன் மக்‍கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அந்த கால கொள்ளைக்‍காரர்கள் மிகுந்த அக்‍கறை செலுத்தினார்கள். நீளமாக முடி வளர்த்துக்‍ கொள்வது, முகத்தில் கோடு போட்டது போன்று தழும்பு, வண்டு போன்று பெரிய சைஸ் மச்சம், பெரியதாக மீசை என்பது மட்டுமல்லாமல் பார்ப்பவர்களை மிரட்ட முகத்தை கொடூரமாக வேறு வைத்துக்‍கொள்ள வேண்டியிருந்தது அவர்களுக்‍கு.

ஆனால், சற்று வித்தியாசமாக இந்த நிகழ்கால குண்டர்கள் ஒரு வித குறிப்பிட்ட ஆடை வடிவமைப்பை ட்ரெஸ்கோட் என்கிற பெயரில் பின்பற்றுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் (அந்த தொந்தியை வைத்துக்‍ கொண்டு) இன்சர்ட் செய்து கொண்டிருப்பார்கள். இடுப்பில் பட்டையாக ஒரு தோலால் செய்யப்பட்ட பெல்ட் அணிந்திருப்பார்கள். அந்த பெல்டுக்‍கு கட்டுப்பட்டும், கட்டுப்படாமலும் அவர்களுடைய தொந்தி துருத்திக்‍ கொண்டிருக்‍கும். அவர்கள் பெரும்பாலும் உடலை அசைத்து வேலை செய்வதில்லை. சில சமயங்களில் சில பேர் அந்த குண்டர்களை பார்த்ததும் தலைதெறிக்‍க ஓடுவார்கள், அப்படி ஓடுபவர்களை துரத்திச் சென்று பிடிக்‍க வேண்டும் என்கிற பிரயாசை இருந்தாலும் அவ்வாறு அவர்கள் செய்வதில்லை. ஏனெனில் அவர்களால் அவ்வாறு செய்ய முடியாது.

பெரும்பாலும் வாகனங்களில் வருபவர்களைக்‍ கண்டால் இந்த குண்டர்களுக்‍குப் பிடிப்பதில்லை. இரு கைகளையும் பிரித்து ஒரு கால்பந்தாட்ட கோலி, பந்தை பிடிக்‍க முயற்சிப்பது போல் சாலையின் நடுவே வாகனஙக்‍ளில் வருவோரை பிடிக்‍க முயற்சிப்பார்கள். இருசக்‍கர வாகனங்களில் வரும் அப்பாவிகளை அப்படியே கோழி அமுக்‍குவது போல் அமுக்‍கி ஓரம் கட்டி கூட்டிச்சென்று விடுவார்கள். அங்கே ஏற்கெனவே தயார் நிலையில் இருக்‍கும் குண்டர்களுடன் ஒரு சில நிமிடங்கள் விரும்பத்தகாத சம்பாஷனைகள் நிகழும். ஆனால் வாகன ஓட்டிகள் மிகக்‍ கடுமையாக மிரட்டப்படுவார்கள் இந்தக்‍ குண்டர்களால். காதால் கேட்க முடியாது அசிங்கமான வார்த்தைகளால் திட்டப்படுவார்கள். பொதுவாக அலுவலகங்களிலும், மனைவி மார்களிடமும் மரியாதையை இழந்து மனத்துன்பத்துடன் வாழும் அந்த இருசக்‍கர வாகன ஓட்டிகள் கொஞ்சம், நஞ்சம் ஒட்டியிருக்‍கும் மானத்தையும் ஒட்டுத்துணி இல்லாமல் உருவி ஜைன சாமியாரைப் போல் ஆக்‍கிவிடுவார்கள் இந்த குண்டர்கள். அந்த குண்டர்களின் மரியாதையற்ற வார்த்தைகளை கேட்டு நெஞ்சு பொறுக்‍காமல் குமுறி மனவேதனையுடன், தாங்கள் வாங்கும் அற்ப சம்பளத்திலிருந்து, டீ குடிக்‍காமல், சரியாக சாப்பிடாமல், மிச்சம் பிடித்து வைத்திருக்‍கும் சொற்ப பணத்தையும் இழந்து விட்டு கைகளைப் பிசைந்தபடி வேறு வழியில்லாமல் மனம் வெதும்ப வீட்டுக்‍குச் செல்வார்கள்.

அப்பொழுது…

குண்டர்களிடம் பணத்தை இழப்பதற்கும் முகமூடி கொள்ளைக்‍காரர்களிடம் பணத்தை இழப்பதற்கும் ஏதேனும் வித்தியாசமாக உணர்கிறீர்களா? என யாரேனும் கேட்டால் அவர்கள் என்ன பதில் சொல்லியிருக்‍கக்‍ கூடும் தெரியுமா?

பணம் என்று வந்துவிட்டால் அதை யாரிடம் இழந்தால் தான் என்ன? எல்லாம் ஒன்றுதான். உழைப்பை சுரண்டுபவர்கள் அதற்கு வெவ்வேறு வர்ணம் பூசிக்‍கொள்வதால் கொள்ளையின் நிறம் வேண்டுமானால் மாறலாம். ஆனால் கொள்ளை…. கொள்ளைதான். சுரண்டல் சுரண்டல்தான்.

அதிலும் இந்த குண்டர்கள் ஆப்பை சோப்பையாக வரும் இருசக்‍கர வாகன ஓட்டிகளை குறிவைத்துதான் தங்கள் கைவரிசையைக் காட்டுவார்கள்.

யார் நலிந்தவனோ, யாரை அடித்தால் திருப்பி அடிக்‍க மாட்டானோ, யாருடைய தொடைகள் கிடுகிடுவென நடுங்குகின்றனவோ, அவர்களைத் தேடிப்பிடித்து மிரட்டி காசு கரப்பதில் இவர்களுக்‍கு வருடக்‍கணக்‍கில் அனுபவம் உண்டு. இதில் சமீபகாலமாக அவர்களுக்‍கு டார்கெட் வேறு கொடுக்‍கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் குறிப்பிட்ட லகரங்கள் பணத்தை, இந்த அப்பாவிகளிடமிருந்து பறித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக்‍கொண்டு திரிகிறார்கள். அதனால் அவர்களுக்‍கு கூடுதல் சுமை வேறு ஏறிவிட்டது. அவர்கள் தங்கள் பைகளை நிரப்பியது போக தங்கள் எஜமானர்களின் டார்கெட் உத்தரவையும் நிறைவேற்ற வேண்டும் என்பதால் அதிக மன உளைச்சலுக்‍கு ஆளாகுகிறார்கள்.

அதனால், இரவு 9:30 மணிகக்‍கு மேல் ஆங்காங்கே முச்சந்திகளில் இருளான பகுதிகளுக்‍குள் கூடாரம் போட்டு கண்களில் விளக்‍கெண்ணெய்யை ஊற்றிக்‍கொண்டு வசூல் வேட்டை நடாத்துகிறார்கள். 9 மணிக்‍கு மேல் வெளியே வாகனங்களில் செல்பவன் எதையேனும் இழப்பதற்கு தயாராக இருக்‍க வேண்டும்.

ஒரு காலத்தில் கொக்‍கு குமாரு ஆட்சிசெய்த பகுதி இது. அவன் காலத்தில் இரவு 10மணி வரை வெளியில்நடமாட அனுமதி உண்டு. அதற்கு மேல்கொக்‍கு குமாரு தனதுசைக்‍கிள் செயினை வெளியே எடுத்து விடுவான்.

அப்பேர்ப்பட்ட கொக்‍கிகுமாரை வீழ்த்தி அவனது கோட்டையை கைப்பற்றியவர்களே இந்த குண்டர்கள்தான். அன்று கொக்‍கிகுமாரு வீழ்ந்ததைக்‍ கண்டு மகிழ்ச்சி ஆரவாரம்செய்த மக்‍கள் இன்று மனம் வருந்திக் ‍கொண்டிருக்‍கிறார்கள்.

கொக்‍கிக்‍ குமாரு செய்து வந்த சட்ட விரோத கொள்ளைத் தொழிலுக்‍கு சாயம் பூசி, வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டி அழகுப்படுத்தி, அதற்கு அழகு பெயர் சூட்டி, வேறு விதமாக அதே தொழிலை அதே காத்திரத்துடன் இன்று இந்தக்‍ குண்டர்கள் செய்கிறார்கள்.

அது சரி கொள்ளை என்று வந்து விட்டால் கொக்‍கி குமாரு என்ன? குண்டர்கள் என்ன? எல்லோருக்‍கும் கை அரிக்‍கத்தான் செய்யும் என மனதிற்குள் புலம்பிவிட்டு, வேறு வேலைகளை பார்க்‍கத் தொடங்கி விட்டார்கள் அப்பகுதிமக்‍கள்.

ஆனால், எவ்வளவு அடாவடி செய்தாலும் இந்தகுண்டர்களுக்‍கு நகைச்சுவை உணர்வுக்‍கு மட்டும் பஞ்சமே இல்லை.

முழுப் பூசணிக்‍காயை சோற்றில் மறைப்பது சாத்தியமாக விஷயமா என்றால் அது அப்படியொன்றும் சாத்தியமில்லத விஷயம் இல்லை என்று சர்வசாதாரணமாக கூறக் ‍கூடிய தைரியம் படைத்தவர்கள் ஸ்காட்லாந்து ….. காரர்களுக்‍கு அடுத்தபடியக தாங்களே என்று கூறிக்‍கொள்ளக்‍ கூடியவர்கள் இவர்கள் மட்டுமே.

உதாரணமாக…

அவர்களுடைய பிரத்யேக வாகனத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்‍கின்றது.

“………….. உங்கள் நண்பன்” என்று

சிகரட் அட்டையில் சிகரெட் பிடிக்‍காதீர்கள் உடல் நலத்திற்கு கேடு என்று எழுதப்பட்டிருப்பதற்கு நிகரான முரண்பாடு நிறைந்த வாசகம், குண்டர்களின் பிரத்யேக வாகனத்தில் “…….. உங்கள் நண்பன்” என எழுதி வைத்திருப்பது. ஒரு நாட்டின் மக்‍களை எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம் என்பதற்கு உதாரணமே இதுபோன்ற வாசகங்கள்தான். அதோ பார் வெள்ளை காக்‍கா பறக்‍கின்றது என்று கூறினால் மறுபேச்சில்லாமல் அதை ஏற்றுக்‍ கொள்ள வேண்டும், இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்று அறிவித்து விட்டால் வெள்ளைக்‍ காக்‍காவை 95 சதவீதம் சாதாரண மக்‍கள் ஏற்றுக்‍ கொள்ளவே செய்வார்கள். அவ்வாறு பழக்‍கப்படுத்தப்பட்டு விட்டார்கள். இவர்களை உனது நண்பனாக உணர்கிறாயா என 100 பேரிடம் கேட்டுப்பாருங்கள்….

வாழ்க்‍கையை வெறுத்த அல்லது நவீன இலக்‍கியம் பயின்ற அல்லது பின்நவீனத்துவ குணம் கொண்ட ஒரு சிலரை தவிர வேறு யாராலும் அவர்களை நண்பனாக ஏற்றுக்‍கொள்ள முடியாது. இந்த பின்நவீனத்துவ குணம் கொண்டவர்கள் வித்தியாசமானவர்கள். 2020ஆம் ஆண்டு கமல் எடுக்‍கப் போகும் திரைப்படம் எவ்வளவு கேவலமாக இருக்கும் என இப்பொழுதே திட்டமிட்டு விவாதித்துக்‍ கொண்டிருப்பவர்கள் அவர்கள். அதனால் அவர்களை கணக்‍கில் எடுத்துக்‍ கொள்ள வேண்டாம். அவர்கள் ஹிட்லரை தத்துவஞானியாகவும், விவேகானந்தரை மததுவேசம் கொண்டவராகவும், காந்தியை தீவிரவாதி என்றும் கற்பனை செய்து கொண்டிருப்பவர்கள். எனவே அவர்கள் காவல்துறையை நண்பனாக ஏற்றுக்‍ கொள்வதில் திருப்தி அடைந்து விடுவார்கள். சாதாரண அன்றாட வாழ்க்‍கை போராட்டங்களை சந்தித்தபடி வாழ்பவர்களுக்‍கு அது இயலாத காரியம். சாதாரண மனிதர்களுக்‍கு நண்பர்கள் நண்பர்களாகவும், எதிரிகள் எதிரிகளாகவும் மட்டுமே இருக்‍கிறார்கள்.

அப்பேர்ப்பட்ட நண்பர்களை விரோதித்துக்‍கொண்ட கொக்‍கி குமாரை, அப்படி ஒன்றும் அர்னால்ட் ஸ்வாஸ்நேக்‍கரைப் போல் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். எண்ணிப் பார்த்தால் 27 எலும்புகள் அப்பட்டமாகத் தெரியும். அந்த எலும்புகளின் மேல் ஒரு மஸ்லின் துணியைப் போர்ததியதுபோல் தோல் பகுதி காணப்படும். கொக்‍கிக்‍ குமாரு குளிருக்‍கு ஒரு போர்வையை எடுத்து போர்த்திக்‍கொண்டால். ” ஏம்ப்பா 2 போர்வையை போர்த்தியிருக்‍க” என்று பார்ப்பவர்கள் கேட்பார்கள். அந்த அளவுக்‍கு அந்தத் தோல் ஒரு கடினமான போர்வையைப் போல் கொக்‍கிக்‍ குமாரின் உள்ளுறுப்புகளை இந்த உலகுக்‍கு காட்டாமல் பாதுகாத்து வந்தது.

அவரது உடலில் அதிகமான எடை கொண்ட பகுதி தலைமுடி என்று கூறினால் அது மறுக்‍க முடியாத உண்மை. தலைமுடியை புட்டபார்த்தி சாயிபாபாவுக்‍கு போட்டியாக வளர்த்து வைத்திருந்தார். தன்னுடைய உடல் வாகை யாரும் கிண்டல் செய்யும் நோக்‍கில் பார்த்து விடக்‍கூடாது என்கிற ​தாழ்வு மனப்பான்மையினால் கூட அவர் ஒரு ஏரியா ரவுடியாக உருவாகியிருக்‍கலாம்.

அப்படிப்பட்ட கொக்‍கிகுமாரே ஒரு நாளைக்‍கு 5 வசூலுக்‍கு மேல் வருமானம் (கொள்ளை) பார்ப்பதில்லை. வழிப்பறி, திருட்டு, கொள்ளை, இவற்றிற்கெல்லாம் ஆத்திச்சூடி எழுதி வைத்த கொக்‍கி குமாரே தனது தேவை நிறைவடைந்த உடன் திருப்தி அடைந்து விடுவார்.

மேலும் கொக்‍கி குமாரின் ஒரு முக்‍கியமான தொழில் எதிக்‍ஸ் என்னவெனில்,

கடற்கரையோர மீனவர்கள் எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை 40 நாட்களுக்‍கு மீன்பிடி தடைகாலம் கடைபிடிப்பது போல, வருடத்திற்கு 40 நாட்களுக்‍கு கொக்‍கிகுமாரு, திருட்டு, கொள்ளைகளில் ஈடுபடுவதில்லை. மீன்கள் இனப்பெருக்‍கம் செய்யட்டும் என மீனவர்கள் மீன்களை பிடிக்‍காமல் விட்டுவிடுவது போல, பொதுமக்‍கள் ஒரு 40 நாட்களுக்‍கு நன்றாக சம்பாதித்துக்‍ கொள்ளட்டும் என பெருந்தன்மையாக விட்டுவிடுவார் கொக்‍கி குமாரு.

ஆனால் இந்த பெருந்தன்மையோ, விட்டுக்‍கொடுக்‍கும் மனப்பான்மையோ சற்று கூட இல்லாதவர்கள் இந்த குண்டர்கள். தொழில் எதிக்‍ஸ் என்பது கிஞ்சித்தும் இல்லாதவர்கள் இந்த குண்டர்கள். பொதுமக்‍களை மூச்சு விடக்‍ கூட அனுமதிப்பதில்லை.

தனது பிறந்தநாள் அதுவுமாக ஏரியா மக்‍களுக்‍கு கடாவெட்டி பிரியாணி செய்து போட்டிருக்‍கிறான் கொக்‍கி குமாரு. பேட்டைவாழ் மக்‍கள் கோபத்தில் இருந்தாலும் பிரியாணி என்று வந்துவிட்டால், பரம எதிரி பாகிஸ்தானைக்‍ கூட மன்னித்து விடுவார்கள். விநாயகர் சதூர்த்தி அன்றைக்‍கு நெற்றிக்‍ கண்ணைத் திறந்தாலும்…. பக்‍ரீத் அன்றைக்‍கு பச்சைத் தண்ணீர் ஊற்றி அனைத்து விட்டு…. முஸ்லீம் சகோதரர்களை நெஞ்சோடு கட்டி அனைத்து வாழ்த்து சொல்லி மகிழ்வார்கள். சமத்துவம், சகோதரத்துவம், மத துவேசஷமின்மை, போன்ற அனைத்தும் ஒரு பக்‍கெட் பிரியாணியில் மறைந்திருப்பதை மற்ற அதிமேதாவிகள் கேலியாக நினைத்து சிரித்தாலும், கொக்‍கி குமார் போன்ற எதார்த்தவாதிகள், உண்மையை மிக எளிதாக புரிந்து வைத்திருந்தார்கள். பெரும்பாலும் உண்மைகள் எல்லாம் உண்மையில் மிக எளிதாகவே இருக்‍கிறது என்று கொக்‍கி குமாரை தத்துவம் பேசச்செய்யும் அளவுக்‍கு அது மிக எளிதாக இருப்பதால் மற்றவர்களால் கண்டு கொள்ளப்படுவதும் இல்லை.

வருடத்திற்கு ஒருநாள் பிரியாணி விருந்தளித்து வருடம் முழுவதும் வழிப்பறி செய்த கோபத்தை தணித்து விடுவதால், கொக்‍கி குமாரு பேட்டை வாழ் மக்‍களின் ஏற்றுக்‍கொள்ளப்பட்ட, அங்கீகரிக்‍கப்பட்ட, பேடண்ட் உரிமை பெற்ற, உத்தம ரவுடியாக வலம் வந்தான். அடுத்த ஏரியா ரவுடி ஒருவன் பேட்டைவாழ் மக்‍களிடம் கைவரிசையை காட்ட முனைந்தால், ” நீ என்ன பெரிய கொக்‍கி குமாரா, ஓடிப்போய்விடு” என்று மிரட்டும் அளவுக்‍கு கொக்‍கி குமாரு பேட்டைவாழ் மக்‍களின் ச்ச்ச்செல்ல ரவுடியாக இருந்தார்.

ஆனால் குண்டர்களின் ஆட்சியிலோ, ஒரு பிரியாணி கடை முதலாளி கூட பிரியாணி சாப்பிட முடிவதில்லை. அடுப்பிலும், வயிற்றிலும் ஒரு சேர நெருப்பை வைத்துக்‍கொண்டு வியாபாரம் செய்ய வேண்டியிருக்‍கிறது அந்தக்‍ கடை முதலாளிகள்.

பல சினிமாக்‍களில் அரை அடி நீள மீசையை முருக்‍கி விட்டபடி, மூக்‍கை தூக்‍கி வைத்துக்‍கொண்டு கேமராவைப்பார்த்து இதுபோன்ற வசனங்களை அந்த குணடர்கள் பேசி நடித்திருப்பார்கள்…. அதாவது….

“24 மணி நேரமும் மழை என்றும் வெயில் என்றும் பார்க்‍காமல், பொதுமக்‍களுக்‍கு சேவை செய்றவன்தாண்டா நாங்க”

என்று ஆர்ப்பாட்டமான இசையுடன் அந்த வசனம் அமைந்திருக்‍கும். இதில் சில பிராக்‍டிக்‍கலான விஷயங்களை யோசித்து பார்க்‍க வேண்டும்.

24 மணி நேரத்தில் ஒரு மனிதன் குறைந்த பட்சம் 2 வேலையாவது சாப்பிட வேண்டும். மழை வெயில் பார்க்‍காமல் ஒரு மனிதன் ​வேலை செய்வானேயானால் எங்குதான் போய் சாப்பிடுவான். அவர்கள் சாப்பிடாமல் வேலை செய்கிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. அவர்களுடைய இடுப்புக்‍ கச்சை தெறிக்‍கக்‍ கூடிய அளவுக்‍கு சாப்பிடுகிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் எங்கு போய் சாப்பிடுகிறார்கள். அது ஒன்றும் பெரிய ரகசியம் கிடையாது. அதுதான் அந்த பிரியாணிக்‍ கடை….

கம்பனை பேணிப்பாதுகாத்த சடையப்ப வள்ளளைப் போல குண்டர்களை பேணிப் பாதுகாக்‍கும் புரவலர்கள் இந்த பிரியாணிக்‍கடை முதலாளிகள் என்றால் அது மிகையில்லை. பிரியாணி 2 பார்சல் வாங்கிக்‍கொண்டு செலவுக்‍கு சிறிது பணமும் வாங்கிச் செல்லும் பண்பு படைத்தவ உத்தம குணசீலர்கள் இந்த மக்‍களின் நண்பர்கள்…. அதனால் தான் இந்த பிரியாணி கடை முதலாளிகள் கூச்சமே இல்லாமல் ஒரு பிளேட் பிரியாணியை 250 ரூபாய்க்‍கு பொதுமக்‍களிடம் விற்பனை செய்கிறார்கள். குண்டர்களின் தொல்லை இல்லை என்றால் அவர்களால் அதே பிரியாணியை 100 ரூபாய்க்‍கும் குறைந்த விலையில் கொடுக்‍க முடிந்திருக்‍கும்…

பேட்டை வாழ் மக்‍களைப் பொறுத்தவரை, வகைதொகை இல்லாமல் வரி போடப்பட்ட நாடும், குண்டர்களால் குறி வைக்‍கப்பட்ட பிரியாணிக்‍ கடையும் நல்லா இருந்ததாக சரித்திரமே இல்லை.

ஒரு பெரிய வீடும், 2 சின்ன வீடுகளும் வைத்திருந்த (நிஜமாகவே வீடுதான்) கொக்‍கி குமாரு, பிற்காலத்தல் அதில் வரும் வாடகைப் பணத்தை வைத்துக்‍கொண்டு தற்போது நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் தெரிந்து ஒரு பெரிய வீடும், வெளியே தெரியாமல் பல சின்ன வீடுகளும் (நிஜமான வீடு இல்லை) வைத்திருக்‍கும் இந்த குண்டர்களுக்‍கு எங்கிருந்து நிம்மதி கிடைக்‍கும். அவர்களின் நிம்மதி கெட்டால் மக்‍களின் நிம்மதி கெடும். ஆகையால் அவர்களுக்‍கு நிம்மதி கொடுக்‍குமாறு இறைவனிடம் தினமும் வேண்டி வருகிறார்கள் பேட்டை வாழ் மக்‍கள்….

Print Friendly, PDF & Email

2 thoughts on “கொக்‍கிகுமாரும், குண்டர்களும்

  1. சூப்பர் கதை. நக்கலு ம் நையாண்டியும் ஆசிரியருக்கு ப்ரேக்
    பி டிக்கa த வன் டியப்போல ஓடுகிறது . நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *