கூழுக்கொரு கும்பிடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,172 
 
 

ஒரு மாபெரும் பொறுப்பை சீதாப்பாட்டி அப்புசாமியிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக உள்ளே படுத்திருந்தாள்.

ஆடி மாசம் என்றாலே சீதாப்பாட்டிக்கு ஓர் அலர்ஜி. விடியற்காலையிலே ஒலிபெருக்கி மூலம் எல்.ஆர்.ஈஸ்வரி, வீரமணி, வீரமணி ஜூனியர், மகாநதி ஷோபனா, மீரா கிருஷ்ணா, தேவி போன்றவர்களின் பக்திப்பாடல்கள் ‘ரொய்ங்ங்ங் ‘ என்று காதில் பாயும்.

‘கூழு ஊத்தறோம்’ என்று கையில் ரசீது புத்தகத்துடன் கோஷ்டி கோஷ்டியாக வந்து கொண்டிருப்பார்கள். ‘ஒன்றே அம்மன், ஒருவனே வசூலிப்பவன்’ என்றிருந்தால் பரவாயில்லை, ஒரே அம்மனுக்குப் பற்பல கோஷ்டிகள், பற்பல நிற, பற்பல சைஸ் ரசீது புத்தகங்களுடன், பற்பல வேளைகளில் வந்து, பற்பல விதமாக பஸ்ஸரை அழுத்துவார்கள்.

போலி ரேஷன் கார்டுகளைக் கண்டுபிடிப்பது போன்ற கடினமான வேலை இன்னொன்று உண்டு என்றால், அது ஆடி மாசத்தில் அசலாகக் கூழ் ஊத்துகிற கோஷ்டி எது என்று கண்டுபிடிப்பதுதான்.

ஜனத்தொகையில் கணிசமான ஒரு பகுதியினர் திரண்டு நோட்டும் கையுமாக, ரசீது புத்தகமும் கையுமாக மிரட்டாத குறையாக ஆடி வசூலுக்கு வரும்போது அவர்களை ஆடித் தள்ளுபடி என்று தள்ளுவது கஷ்டமான காரியம்தான். கும்பலைப் பார்த்து மிரண்டு போய், பத்தோ, இருபதோ காணிக்கை கொடுத்து அனுப்பி விடுவது தான் சீதாப்பாட்டியின் வழக்கம். இப்படி மாஸைக் கண்டு பயந்து காசைச் கொடுக்கும் காம்ப்ளக்ஸ¤க்கு இடம் தரக்கூடாது என்று நினைத்துக் கொள்வாள்.

அசல் பக்த கோஷ்டி எது?

கண்டுபிடிக்கும் மகத்தான பொறுப்பை இந்தத் தடவை கணவனிடம் ஒப்படைத்தாள். ஐந்நூறு ரூபாயை அப்புசாமியிடம் தந்து, “ஆடி வசூலுக்கு வருகிறவங்களை, அவர்கள் வசூலிக்கிறது கூழ் ஊத்தறதுக்குத்தானா, விச் டெம்பிள் தே பிலாங், பர்ட்டிகுலர் அட்ரஸ்லே அந்தக் கோவில் இருக்கிறதா என்றெல்லாம் பார்த்து, ஜினுவைன் கேஸ்களுக்குப் பணம் கொடுங்கோ. எனக்கு ரசீதுங்களை ஒழுங்கா சப்மிட் பண்ணுங்கோ…” என்றாள்.

பணியினை ஒழுங்காகச் செய்ய அப்புசாமிக்கு சர்வீஸ் சார்ஜாக நூறு  ரூபாய் தனியாகத் தருவதற்கும் சீதாப்பாட்டி ஒப்புக்கொண்டாள்.

கூர்க்கா மாதிரி அப்புசாமி ஒரு ஸ்டூலை வாசலில் போட்டு உட்கார்ந்து கொண்டார். சுய பாதுகாப்புக்காக நீளமான கைத்தடியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.

காலையிலிருந்து ஒன்பது மணி வரை, கலெக்ஷனுக்கு ஒருத்தருமே வரவில்லை. கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு அடைக்கு அலைகிற மாதிரி, சிஷ்யன் கிடைப்பானா என்று குரு தவிக்கிற மாதிரி, பிரிந்த கட்சித் தலைவர். கூட்டாளிக் கட்சிக்கு ஏங்குகிற மாதிரி டொனேஷனை ரெடியாக வைத்துக்கொண்டு வசூலுக்கு வருகிறவர்களுக்காகக் காத்திருந்தார் அப்புசாமி.

பதினொரு மணி சுமாருக்கு ஓர் ஆட்டோ வந்து படபடப்புடன் நின்றது. மூணு பேருக்கு உரிய வாகனமானாலும் நாலு பேர் அதிலிருந்து இறங்கினர். வாட்ட சாட்டமான வலுவான நாலு ஆட்கள், “வணக்கம் சார்!” என்று அப்புசாமிக்குக் கும்பிடு போட்டார் ஒருத்தர். நடிகர் குள்ளமணியின் ஜாடையில், அவரைவிட அரை அங்குல உயரம் கூடுதலாக இருந்தார். அவர்தான் தலைவர் போலும்.

தனக்குக் கடமையைச் செலுத்தும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தவராக அப்புசாமி உஷாரானார். “வணக்கம்” என்றார் சற்று இறுக்கமாக. வந்திருந்தவர்களை அவரது மனசு வேகமாக எடை போட ஆரம்பித்தது.

இவர்கள் அசல் கோஷ்டியினர் தானா? ஓர் அனைத்துக் கண்ணோட்டத்தைக் கும்பலின் மீது பாய்ச்சினார்.

“வணக்கம் அய்யா” என்றார் குழுத் தலைவர். அப்புசாமி, “அதுதான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே… எந்த அம்மன் கோவிலைச் சேர்ந்தவங்க நீங்க?” என்றார் ரேஷன் பதிய வருகிறவர் அவசரப்படுவது போல.

 

தலைவர் சிரித்தார். “ரத்தக் காட்டேரியம்மன் சேவா சமிதிங்க.”

அப்புசாமி அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தார். “ரத்தக் காட்டேரி சேவா சம்திங்கா? ‘சம்திங்’குன்னா இன்னா தெரியுமா உங்களுக்கு?” என்றார்.

“என்னங்கோ… ஸம்திங்னா இன்னான்னு இந்தக் காலத்திலே தெரியாம இருக்கும்ங்களா? சம்தின்னு சொன்னேங்க” என்றார் குழுத் தலைவர்.

“ஓ! சமாதியா? தெளிவாய்ப் பேசணும்ய்யா. எப்போ கூழ் ஊத்தப் போறீங்க..?”

“கூழா? இருங்க, கேட்டுச் சொல்றேன்” என்று தலைவர் தனது சகாக்களிடம் சென்று சிறிது பேசிவிட்டு வந்தார்.

அப்புசாமிக்கு க்ளூ கிடைத்து விட்டது.

‘அய்ய! மாட்டிகினானய்யா… இவுங்க அசல் ஆளுங்க இல்லே… அசல் ஆளாயிருந்தால், ‘கூழ் எப்போ ஊத்தப் போறீங்கன்னதும் ‘டாண்ணு’ சொல்ல வேண்டியதுதானே? இது என்ன ஏதாவது கட்சி விவகாரமா, மேல் மட்டக் குழு, கீழ்மட்டக் குழுவைக் கூட்டி ஆலோசிக்கிறதுக்கு?”

தலைவர் சொன்னார் – “வந்து… வர்ர ஞாயிறு… அதாங்க நாளை மறுநாள்… ஊத்திடறதா இருக்கோம்…”

“எவ்வளவு பேருக்கு ஊத்தப் போறீங்க?”

“அதை எப்படிங்க கரெக்டாச் சொல்ல முடியும்?”

“செரி. குணுசாச் சொல்லுங்க” என்றார் அப்புசாமி.

“குணுசான்னா…கொஞ்சம் இருங்க…” என்று உபதலைவரை அந்த ஆள் கலந்து கொண்டு வந்தார்.

“குணுசா நூறு பேருக்கு.”

“குணுசான்னுட்டு, கரிட் ·பிகரா நூறுங்கறியே. குணுசுன்னா மின்னே, பின்னேயாச் சொல்லணும்… ·பிராடு பண்றதுக்கும் தெரிஞ்சிருக்கணுமய்யா…”

“·பிராடா? இன்னாபா இந்த ஆளு இன்னா இன்னாவோ ·பிராடு கீடுன்னு சொல்றாரு?” தலைவர் உபதலைவரிடம் விரைந்தார்.

உபதலைவர் வந்தார்… “இன்னாபா பெரிசு? ·பிராடு கீடுன்னு பேசற வேலை எங்க கைலே வெச்சுக்காதே… அம்பது வருசமா நடக்குது எங்க சமிதி…” என்றார் கோபமாக.

“அட தெரியுதுங்க… உங்க சமிதி… சமாதியெல்லாம்… ஒவ்வொருத்தரும் இப்படித்தான் பீலா வுடுவாங்க. சரி.. சரி… கோவில் எங்கிருக்குது… பிளாட்பாரம் கோவிலா… கொஞ்சம் பெரிய கோவிலா… அட்ரஸ் கிட்ரஸ் உண்டா? நோட்டீசுலே இருக்கிறது அசல் அட்ரஸ்தானா?” என்று அப்புசாமி கிடுகிடுவென்று தன் கேள்விகளை வீசினார்.

“யோவ்! பெரீவரு! வாயை ரொம்ப வுடாதே. ரத்தக்காட்டேரி அம்மன் கோவில் பஸ் ஸ்டாப்பிங்குன்னே ஒரு ஸ்டாப்பிங் இருக்குதுய்யா கசுமாலம்.”

அப்புசாமி அலட்சியமாகச் சிரித்தார். “ஸ்டாப்பிங் இருக்கும்… கோயில் கீதா? இப்ப போனாப் பார்க்க முடியுமா?”

“ஒனக்கு ஒண்ணும் அப்படியெல்லாம் நிரூபிக்கத் தேவையில்லே…” தலைவர் வெகுண்டார்.

“அய்தலக்கிடி கும்மா! அப்படிப் போடுன்னானாம்!” என்றார் அப்புசாமி. “ஜகா வாங்கிறியா கண்ணு! ஒங்க மாதிரி மோசக்காரங்க எத்தினி பேரை நான் பார்த்திருப்பேன்.”

“யோவ்! வாயைக் கழுவுய்யா. ஆடிட்டர் வெச்சுக் கணக்கு பார்த்து வரவு செலவுங்களை பொஸ்தகத்திலே பிரிண்ட் கொடுத்திருக்குய்யா வருசா வருசம். இத பாரு போன வருச வரவு செலவு…” அச்சடித்த வரவு செலவு காகிதத்தைக் காட்டினார்.

“ஊம்… இது ஒரு தினுசு பித்தலாட்டம். அச்சுலே வந்துட்டா அசல்னு அர்த்தமா? ஐந்நூறு ரூவா நோட்டெல்லாம் கூட ரொம்ப் பேர் அச்சடிச்சு வுட்டுகினே இருக்காங்க… அதெல்லாம் நிஜமா?” என்றார் அப்புசாமி தெனாவட்டாக. தனது கடமையை அபாரமாகச் செய்வதாக எண்ணமேற்பட்டு விட்டதால் உற்சாகமாகக் கேள்விகளை வீசினார்.
 

“யோவ்! எங்களைப் பார்த்தா கள்ள நோட்டு அடிக்கிறவங்களாட்டமா கீது?” என்றார் தலைவர் கோபமாக.

“கள்ள நோட்டடிக்கிறவன் கழுத்திலே போர்டா மாட்டிக்குவான். சரி… சரி… இன்னா கூழ் ஊத்தப் போறீங்க?”

“கூழ்னா கேவுரு கூழ்தான்?” என்றார் தலைவர்.

அப்புசாமி தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

“கூழ் எப்படிச் செய்வீங்க? போன வருஷம் எப்படிச் செஞ்சீங்க? கொஞ்சம் சொல்லு பார்ப்போம்.”

“கூழ் எப்படிச் செய்யிறதின்னு என்னியக் கேட்டா… அதுக்கு ஆளு இருக்குது. ஓட்டேரி வரதம்மா தோட்டம் கனககிரி கீறாரே… அவுருதான் வழக்கமா வந்து கூழு காய்ச்சுவாரு…”

“யோவ்” என்றார் அப்புசாமி எடக்காக. “அந்த டகல்பாஜித்தனமெல்லாம் வேணாம். கனககிரி, கத்திரிக்காகிரின்னு கீரி, பாம்பு கதையெல்லாம் வுடாதே. என் காது பெரிசா இருக்குதேன்னு பூ சுத்துறியா வாத்யாரே. கூழ் ஊத்தறதுக்குன்னு வசூலுக்கு வர்றீங்க… ஆனால் கூழ் செய்யறது எப்படின்னு தெரியாதா…”

உபதலைவர் அருகில் வந்தார்.

“கூழுதானே? நான் சொல்றேன்யா… என்னைய கேளு… தலைவருக்கு அதெல்லாம் தெரியாது.”

“ஓ! நீதான் வக்காலத்தா? சரி கூழு காச்ச இன்னா இன்னா வேணும்?”

“வந்து… கேவுரு! அப்புறம் உப்பு… வந்து அடுப்பு…”

“யோவ்! நீங்க செய்யறது பிராடுயா. கேவுரு கூழோடு இன்னாவோ முக்கியமாக் கலப்பாங்களே அது என்ன?”

“அதுதான் உப்பு.”

“உப்பைத் தவிர இன்னொண்ணு முக்கியமா போடுவாங்க… சொல்லுங்க… அஞ்செழுத்து சாமான்…”

“வந்து… வந்து.. புரியலையே” என்றார் தலைவர்.

“புரியாது. வெங்காயமய்யா வெங்காயம். நல்லா அரிஞ்சி ஒரு கை போடணும். சரி. ஞாயிற்றுக் கிழமை கூழ் ஊத்தறீங்க? மாவு காத்தாலே தயார் பண்ணுவீங்களா, மொத நாள் ராத்திரியா?”

“இந்த டீடெய்லெல்லாம் அந்த ஓட்டேரி கனககிரிக்குத்தான் தெரியும். அவுருதான் கில்லாடி கூழ் காய்ச்சறதிலே.”
 

அப்புசாமி இளக்காரமாய்ச் சிரித்தார். “அவுரு கூழ் காய்ச்சறதிலே கில்லாடி. நீங்க? ஊரை ஏமாத்திப் பணம் புடுங்கறதுலே கில்லாடி… கூழாய்யா ஊத்தறீங்க கூழு! புளுகாண்டிங்களா? ஞாயித்துக் கிழமை கூழ் ஊத்தறதுன்னா வெள்ளிக் கிழமையே மிஷின்லே கேவுரைப் போட்டு அரைச்சி, நல்லா கரைச்சு புளிக்க வைக்கோணும். அப்புறம் சனிக்கிழமை தண்ணியை நல்லாக் கொதிக்க வெச்சி அரிசியைப் போடணும். ஒரு கிலோ கேவுருக்கு முக்கா கிலோ அரிசி… அரிசி நல்லா கொதிச்சு சோறாகிற சமயம், இந்தக் கேவுரு கரைசலைக் கொட்டி நல்லாக் கெளறு… கெட்டியாகிற வரை நல்லாக் கிளறிட்டு… நைட் அப்படியே மூடி வெச்சுடணும். ஞாயித்துக் கிழமை காத்தாலே கூழுலே கையைப் பிசைஞ்சு, கொஞ்சம் தயிரையும் வுட்டுக் கலக்கி, பதமாத் தயாரிக்கணும்டா முண்டங்களா! அப்புறம் வெங்காயத்தைப் பொடியா அரிஞ்சி மேலே போட்டு வெச்சுடணும். கூழுக்கு வஞ்சனம் முக்கியம். ஒரு முருங்ககீரை துவட்டலு, இல்லாட்டி கத்திரிக்காயை நல்லா கீசி, மொச்சைக் கொட்டையையும் போட்டு ஒரு கறி பண்ணிட்டா… தூக்குமுய்யா… தூக்கும். பாத்திரத்திலே கூழு… எலைலே வஞ்சனம்… தானும் குடிச்சி எல்லாருக்கும் ஊத்தணும்…”

“இன்னா வாத்யாரே!” என்று அசந்து போனார் குழுத் தலைவர். “இம்மாம் டீடெய்லா சொல்றியே…”

“பின்னே… ஒங்க மாதிரி கூழ் ஊத்தறேன்னு வர்ற ·பிராடுப் பசங்களை செக்கிங் பண்ண எல்லா டீடெய்லும் கேட்டுத்தானே வெச்சுக்கணும்…”

அடுத்த கணம் அப்புசாமியின் மூக்கின் மீது ஒரு பேரிடி இறங்கியது. இத்தனைக்கும் மழை, கிழை எதுவுமில்லை.

“அய்யோ!” என்று அப்புசாமி மூக்கைப் பிடித்துக் கொண்டு மல்லாந்தார். மூக்கு உடைந்து ரத்தம் ஒரே ஆடிப்பெருக்காக ஓடியது.

“இன்னா தில்லு இருந்தால், எங்களை ·பிராடு, ·பிராடுன்னு வாய்க்கு வாய் சொல்லிக்கினு இருக்கே… ஏறுடா நாயி இப்ப வண்டியிலே… உன்னைக் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போறோம்…”

“ஐயோ! ஐயோ! சீதே! சீதே! கொலை! கொலை! என்னைக் கொலை பண்றாங்க…” அப்புசாமி கூவினார்.

சீதாப்பாட்டி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தாள். ஷவரின் ஜோவென்ற சத்தத்தில் அப்புசாமியின் அலறல் காதில் விழவில்லை.

குளித்து முடித்து வெளியே வந்தபோது, அப்புசாமியின் முனகல் சத்தமே கேட்டது.

“சீதே! ஐயோ சீதே! எங்கியோ சுவத்துக் கோழியைத் தேடற மாதிரி அங்கேயும், இங்கேயும் பார்க்கிறியே… இங்கே விழுந்து கிடக்கிறேனே… இங்கே பாருடி… ஐயோ! ரத்தம்!” அலறினார் அப்புசாமி.

தனது ரத்தத்தைப் பார்த்து தானே பயந்து மயக்கமாகி விட்டார்.

இரண்டு நாளாயிற்று.
 

அப்புசாமியின் மூக்கு எக்ஸ்ரேயை டாக்டர் வெங்கடேசன் அவருக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

“பார்த்தீங்களா? மூக்கு எலும்புலே லேசாக ஒரு கீறல் தெரிகிறதில்லையா? அதுதான் ·ப்ரேக்சர்.”

“டாக்டர்! என் மூக்கு வளராதா டாக்டர்?”

வெங்கடேசன் சிரித்தார். “மூக்கு இருக்கிற சைஸில்தான் இருக்கும்… உள்ளே எலும்புதான் வளரும். அதற்கு ரெண்டு மாசம் ஆகும். அதுவரை ஜாக்கிரதையாக மூக்கைப் பார்த்துக்கணும்… அநாவசியமா மூக்கை எந்த விஷயத்திலும் நுழைக்காதீங்க…”

மூன்றாம் நாள் அப்புசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

வீட்டுக்கு அழைத்துப் போக சீதாப்பாட்டி வந்தாள். அப்புசாமியின் மூக்கின் மேல் பயங்கர பிளாஸ்திரி போட்டிருந்தது.

“சீதே! கடமையைச் செஞ்சவனுக்கு கிடைச்ச பரிசைப் பார்த்தியா? ஏன் இவ்வளவு நேரம்? என் மூக்கைவிட முக்கிய விஷயம் அப்படி என்ன உனக்கு?” என்று கோபித்தார்.

“அம்மன் கோவில் கூழ் ஊத்தற நிகழ்ச்சியிலே பார்ட்டிசிபேட் பண்ணிட்டு வர்றேன். ரத்தக் காட்டேரி அம்மன் கோவில்! அட! அட! வொண்டர்·புல் கோவில். ஐம்பது வருஷமா இருந்து வர்ர கோவில். அம்மன் உட்கார்ந்திருக்கிற போஸ் அபாரம்! பேருதான் ரத்தக் காட்டேரியே தவிர, டிவைன் கிரேஸ் அந்தக் கண்ணிலே வழியறது பாருங்கள்….” சீதாப்பாட்டி ஸ்டைலாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

“கோவில் நீட்னா அவ்வளவு நீட். அங்கங்கே கியூ வரிசை அரேஞ்ச்மெண்ட். அப்புறம் லேடீஸ¤க்கு தனி லேடி வாலண்டியர்ஸ்… கோவில்காரர்கள் சோஷியல் சர்வீசும் செய்யறது ஒரு ப்ளஸ் பாயிண்ட். லாஸ்ட் இயர் முதியோர் இல்லத்துலேருந்து அதனோட இன்மேட்ஸை வர வழைத்து எல்லோருக்கும் புடவை, வேட்டி வாங்கித் தந்திருக்காங்க.”

“சீதேய்!” பல்லைக் கடித்தார் அப்புசாமி.

“அந்த ரத்தக் காட்டேரி அம்மன் ஆளுங்கதான் என் மூக்கை உடைச்சி மல்லாத்திட்டாங்க… நீ அதே கோயிலை ஓகோன்னு புகழுறே…” என்றவர் ஞாபகம் வந்தவராக ஜிப்பாப் பையைத் தடவிப் பார்த்து, “ஐயையோ! நீ கொடுத்த ஐந்நூறு ரூபாய்! வெச்சிருந்தேனே… தாராவந்து போச்சே” என்று பதறினார்.

“டோன்ட் வொர்ரி. அது தொலையலை. உங்க பையிலிருந்து எடுத்து ரத்தக்காட்டேரி அம்மன் கோவில் உண்டியல்லே போட்டுட்டேன். அம்மன் பணம் உங்களுக்கு எதற்கு?” என்று புன்னகைத்தாள்.

“மூக்கை உடைச்சிகிட்டேனே… அதுக்கு ஒண்ணும் துட்டு கிடையாதா?”

“ஸாரி ஜென்டில்மேன். உங்களுக்கு நான் கொடுத்த போஸ்ட்டை, நீங்க துஷ்பிரயோகம் பண்ணியிருக்கீங்க. பக்தி, காட் ·பெய்த் என்கிறதெல்லாம் ரொம்ப சென்சிடிவ் விஷயங்கள். எந்தப் பிரிவினருடைய ·பீலிங்க்ஸ¤ம் ஹர்ட் ஆகாத மாதிரி விசாரிக்கணும். அதர்வைஸ், எத்தனை மூக்கு உங்களுக்கு இருந்தாலும் உடைஞ்சிகிட்டுதான் இருக்கும்… போய் ஆட்டோவில் ஏறிக்குங்க…”

“ஆட்டோவா?” திகைத்தார் அப்புசாமி. “சீதேய்! கார்தான் கொண்டு வந்திருக்கியே…”

“நான் எங்க கிளப்புக்கு அவசரமாப் போகணும். கிளப்புலேயே ஆடிக்கூழ்… ஐ மீன் புவர் ·பீடிங் செய்கிறோம். ஸீயூ” பாட்டி புறப்பட்டாயிற்று.

அப்புசாமியையும், அவரது மூக்கையும் குலுக்கி எடுத்துக் கொண்டு ஆட்டோ புறப்பட்டது.

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் (பி:சூன் 1, 1932) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *