குழந்தையின் தண்டனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 27, 2023
பார்வையிட்டோர்: 10,912 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஜோதிக்கு உடம்பு நெருப்பாட்டம் கொதிக்குதுங்க…’

சேதியைச் சொல்லும்போது என் மனைவியின் உதடுகள் துடித்த துடிப்பும் கலங்கிய கண்களும் வாடிய முகமும் நிலைமையின் கடுமையை எனக்கு உணர்த்தின. பதறிப் போனேன்.

ஜோதி எங்கள் செல்லக் குழந்தை! ஓராண்டு பூர்த்தியான உயிர்ச் சித்திரம்! அழகு விக்கிரகம்!

வீட்டுக்குள் பாய்ந்தோடினேன். தொட்டிலில் படுத்துக் கிடந்த ஜோதியைத் தொட்டுப் பார்த்தேன். கை வைக்க முடியவில்லை. கடுமையான கடுமையான காய்ச்சல். இந்தப் பிஞ்சு உடம்பு எப்படித்தான் அதைத் தாங்கிக் கொள்கிறதோ?

ஓவியப் பூவிழிகள் மூடியிருந்தன. மூச்சு விடுவதற் குத் திணறிக் கொண்டிருந்தாள். வாடிய கீரைத் தண்டுபோல் துவண்டு கிடந்த செல்வ மகளை அப்படியே வாரி எடுத்துத் தோளில் சாய்த்துக்கொண்டு வெளியேறினேன். வாடகைக் கார் ஒன்றில் மருத்துவ மனை நோக்கிப் பறந்தேன்.

என்னையும் முந்திக்கொண்டு என் எண்ணம் எங்கோ பறந்தது. அன்றொரு நாள் நாங்கள் செய்யவிருந்த காரியத்தை அகக் கண்முன் கொண்டுவந்து காண்பித்தது. அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் என்னைத் தடுமாற வைக்கும் அந்தக் காரியம் என்ன?

காலையில், அலமாரியைத் திறந்து உடுப்புகள் எடுத்தேன். ஜோதி நிரம்ப அறிவுள்ள குழந்தை! அப்பா வெளியில் புறப்படப் போகிறார் என்பதை உடனே அறிந்து கொண்டாள்!

என்னைச் சுற்றிச் சுற்றி வந்து என் கால்களைக் கட்டிக்கொண்டு ப்பா…ப்பா…நீ…’ என்று ஏதோ பேசியபடி இருந்தாள். அந்த இனிமையான மழலைப் பேச்சுக்குப் பொருள்… ‘அப்பாகூட நானும் வருவேன்!’ என்பதாகத் தானிருக்கும்!

‘நீ வீட்டிலேயே இரு’ம்மா, வரும்போது உனக்குச் ‘சாக்லெட்’ வாங்கி வரேன்’ என்று சொல்லிக் கொண்டே சப்பாத்துக்களை அணிந்தேன்.

தன்னை வீட்டில் இருக்கச் சொல்லுகிறார் அப்பா என்பதையும் எப்படியோ புரிந்துகொண்டு விட்டாள் ஜோதி. கோபம் வந்துவிட்டது. ‘தொரு புரு தொரு புரு’வென்று பெருவாரியாக என்னென்னமோ சொல்லி என்னைத் திட்டிவிட்டுத் தரையில் விழுந்து அழுது புரளத் தொடங்கினாள்.

அவள் அம்மா ஓடி வந்து தூக்கி இடுப்பில் வைத் துக்கொண்டு கெஞ்சு கெஞ்சென்று கெஞ்சிச் சமா தானப்படுத்த வேண்டிய தாயிற்று!

அப்படியும் ஒரு வழியாக அழுகை மட்டுமே நின்றது. முகம் ‘உம்’மென்று தானிருந்தது.

‘ஜோதிக்கண்ணு, அப்பாவுக்கு ‘டாட்டா’ சொல்லு! சிரிச்சுக்கிட்டுச் சொல்லணும்! எங்கே?…’

இப்படிக் கேட்டுக் கொண்டதற்காக அம்மாவின் கன்னத்தில் ‘பட் பட்’டென்று இரண்டு அறைகள் விழுந்தன!

‘பார்த்தீர்களா, ஜோதி என்னை அறையறதை!’ என்று என்னிடம் முறையிட்டாள் என் மனைவி. எனக்குச் சிரிப்பும் வியப்பும் தாளவில்லை. நான் சிரித்ததும் ஜோதிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

பச்சரிசி போன்று முளைத்திருக்கும் நான்கு பற்களை யும் வெளிக்காட்டி மோகனமான சிரிப்பைச் சிந்தி கையசைத்து ‘டாட்டா’ காட்டினாள்!

அந்த மோகனச் சிரிப்பு என் கண்களில் நிறையும் போது நெஞ்சில் ஏதோ ஒரு நினைவு தோன்றிச் சுருக் கென்று தைத்ததை உணர்ந்தேன்.

என்ன அது?


‘சாதாரணமான காய்ச்சல்தான். பயப்பட வேண்டியதில்லை’ என்றார் டாக்டர். மூன்று மருந்துப் பொட்டலங்களும் ஒரு சின்னச் சீசாவில் கொஞ்சம் தண்ணீர் மருந்தும் தந்து மூன்று வேலைக்குக் கொடுக்கச் சொன்னார்.

என் உள்ளத்தில் அமைதி பிறந்தது.

டாக்டர் ஒரு சீனர். குழந்தையின் பெயரைப் பிறப்புச் சான்றிதழில் உற்றுக் கவனித்துக்கொண்டே, ‘நாகா…ஜோதியா இவள் பெயர்!’ என்று வினவினார். ‘நாகா அல்ல. நாக… நாக ஜோதி’ என்று விளக்கினேன்.

‘ஓ!, நாக’ என்பதற்கு எனக்கு அர்த்தம் தெரியும். ‘ஜோதி’ என்றால் என்ன?’ சிரித்துக்கொண்டே கேட்டார்.

ஜோதி என்றால் ஒளி என்பதைக் கூறினேன்.

அவர் கண்களில் ஆச்சரியம் மலர்ந்தது. ‘பொருத்தமான பெயர் வைத்திருக்கிறீர்கள்! குழந்தையின் கண்களில் பிரகாசமான ஒளி தெரிகிறது!’ என்று புன் முறுவல் பூத்தார். தொடர்ந்து, ‘தலைமயிர் சுருள் சுருளாகச் சுருண்டிருப்பது எவ்வளவு அழகாயிருக் கிறது!’ என்றார் அதன் பட்டுக் கன்னத்தைத் தடவிக் கொண்டு.

அந்தப் புகழ்மொழி என் காதுகளில் தேனெனப் பாய்ந்தபோது என் இதயத்தில் தேள் ஒன்று கொட்டி னாற்போலிருந்தது.

ஏன் அப்படி?


‘தலையில் குல்லா வைக்காமல் குழந்தையை வெளியே கொண்டு போகக்கூடாது என்று உங்களுக்கு எத்தனை தரம் சொன்னாலும் மறந்து விடுகிறீர்களே?’ என்று கடிந்துகொண்டாள் என் துணைவி.

குல்லா வைக்காவிட்டால் குழந்தையின் சுருண்ட கூந்தல் வெளியே தெரியுமாம். தெரிந்தால் கண் திருஷ்டி பட்டுவிடுமாம்! உண்மைதானே அது!

‘டாக்டரின் கண் திருஷ்டி பட்டிருக்கும். அவ ருடைய காலடி மண் கொஞ்சம் வேணும்-திருஷ்டி சுற்றிப் போடுவதற்கு. போய் எடுத்து வாங்க!’ என்றாளே பார்க்கலாம்!

மருத்துவமனையில் மண் தரை ஏது? கண்ணாடி மாதிரி ‘பளபள’வேன்று சலவைக்கல் பதிந்திருக்கும் தரையில் காலடி மண் எப்படி அள்ளுவது? காலடித் தூசி கூடக் கிடைக்காதே!

‘நம்ம ஜோதியின் சுருட்டை முடியைப் பார்த்து டாக்டர்கூட மயங்கிவிட்டார்’ என்று இவளிடம் சொல்லியிருக்கக் கூடாது?

‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் சுஞ்சு’ என் பார்கள். எங்கள் ஜோதிக்கிளி உண்மையில் ஒரு பொன் குஞ்சுதான்! இறைவன் பொன்னெடுத்துப் படைத் திருப்பான்! பூவாலே செய்திருப்பான்!

‘எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் எவருடைய பொல்லாத பார்வையும் ஜோதியை எதுவுமே செய்ய முடியாது. ஏனென்றால்—’

ஏனென்றால் என்பதைத் தொடர்ந்து நான் என்ன சொல்லப் போகிறேன் என்று அறிய என் மனைவி என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

‘அதுதான் உனக்கும் தெரியுமே!’ என்று சொல்லி விட்டு, ஜோதியை வாஞ்சை ததும்ப நோக்கினேன்..

‘எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தீர்கள்?’ என்று ஜோதி எங்களைப் பார்த்துக் கேட்பதைப்போல் எங்கள் இருவருக்குமே ஒரு பிரமை.

இருவர் மனத்தையும் ‘சுரீர்’ரென்று ஒருவித வலி உணர்ச்சி ஊடுருவிச் சென்றது.

எதனால் அது?


ஜோதிப் பாப்பாவுக்குக் காய்ச்சல் பூரணமாக நின்றுவிட்டது!

தத்தித் தத்தி நடக்கத் தொடங்கிவிட்டது தங்கப் பாப்பா! அதன் பஞ்சுப் பாதங்களைப் பாவாமல் பாவி நடை பயிலும் பாங்கில் நெஞ்சை அள்ளும் சிங்கார நடனம் தெரிந்தது.

பிஞ்சுக் கைகளைக் குவித்து விரிக்கும்போது மிருது வான சிவந்த விரல்களில் ஜீவன் ததும்பும் அற்புத நாடகம் நடந்தது!

ஆரஞ்சுப் பழச்சுளை போன்ற அமுத இதழ்களின் நளினமான நெளிவுகள் ஆயிரம் இன்பக் கதைகள் கூறின!

சிந்தையைக் கொள்ளைகொள்ளும் சின்னச் சின்ன சுடர் விழிகள் இரண்டும் தெய்வீகச் சித்திரங்களாகி முறுவல் பூத்தன!

செந்தமிழின் தீஞ்சுவையையும் மிஞ்சும் மழலை மொழியில் யாழிசையும் குழல் ஒலியும் தோற்கும் தேவகானம் பெய்தது!

பால் நிலவு ஜோதியையும், சுவரில் பாலமுருகன் குழந்தைக் கண்ணன் உருவப் படங்களையும் மாறி மாறிப் பார்த்துப் பூரித்துப் புளகாங்கிதம் அடைந் தேன்.

அப்போது ஒரு சிந்தனை…

குழந்தையும் தெய்வமும் ஒன்று. ஆண் குழந்தை என்றோ பெண் குழந்தை என்றோ இதில் பாகுபாடு குறிப்பிடப் படவில்லை. ஆனால், தெய்வத்தை முருகன் உருவிலும் கண்ணன் வடிவிலும் மாத்திரமே காண் கிறோம். பெண் குழந்தைத் தோற்றத்தில் ஏன் தெய்வம் சித்தரிக்கப்படவில்லை.

இத்தக் குறையைப் பொறுக்காமல்தான் மகாகவி, பாரதியார். சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே!’ என்று குழையக் குழையப் பாடினாரோ?

கடவுள்களையும் குழந்தையையும் பார்த்து என்ன சிந் தனையில் மூழ்கிவிடடீர்கள்?’ என்று கேட்டாள் என் மனைவி. நான் பதில் பேசாமல் இருக்கவே, என் நெஞ்சில் அடிக்கடி ஏற்படும் ‘அந்த உறுத்தல்’ இருப்ப தாக எண்ணிக்கொண்டு, ஒரு பெரு மூச்சை நெட்டு யிர்த்தபடி அவள் தொடர்ந்து பேசினாள்:

‘செய்யக்கூடாது. செய்தீர்கள். இப்போது அதையே நினைத்து நினைத்து வருத்தப்படுகிறீர்கள். இருக்கிற குழந்தைகள் போதும் என்று தடுப்பு மாத்திரை சாப்பிட்டு வந்தபோது மாத்திரையை ஏமாற்றிவிட்டு ஜோதி உண்டாகினாள்! உண்டான பிறகு அதை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று எதை எதையோ தின்னச் சொன்னீர்கள், என்னென் னவோ செய்து பார்த்தீர்கள். எதுவும் பலிக்கவில்லை. தங்கச் சிலையாட்டம் ஜோதி பிறந்தாள்! கொள்ளை அழகோடு வளர்ந்து நம் நெஞ்சங்களைக் கவர்ந்து கொள்கிறாள்! வேண்டா வெறுப்பாகப் பிறந்தவள் வேண்டி விரும்பிப் பெற்ற மற்றப் பிள்ளைகளைக் காட்டி லும் அதிகமான அன்பையும் பாசத்தையும் நம்மிட. மிருந்து பெற்றுக் கொள்கிறாள். வேண்டாம் என்று நாம் நினைத்த குற்றத்துக்கு இப்படித் தண்டனை வழங்குகிறாள் போலிருக்கிறது!’

அம்மா சொல்வதை ஆமோதிப்பதுபோல் செல்லக் கண்ணு ஜோதி அழகாகச் சிரித்து எங்களைச் சொக்க வைக்கிறாள்!

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *