கும்பிடுசாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 18,420 
 

‘கும்பிடுசாமி’ என்றதும் ஏதோ ஊர் பக்கம் இருக்கும் காவல் தெய்வம் என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர். கும்பிடுசாமி என்பவர் என்னுடைய சித்தப்பா. அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது யாருக்கும் நினைவிலில்லை. எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து அவரை ‘கும்பிடுசாமி’ என்றே அனைவரும் அழைக்கின்றனர். அதற்கு முன்பிருந்தே அவர் கும்பிடுசாமிதானாம். நாங்களும் அப்படிதான் அழைப்போம்.

அவரை யாரும் உறவுமுறை சொல்லி, அப்பா என்றோ, மாமா என்றோ, சித்தப்பா என்றோ அழைக்கமாட்டார்கள். அவருடைய மகனே அவரை ‘கும்பிடுசாமி’ என்று தான் அழைப்பான். அவர் எப்போதும் கும்பிட்டுக்கொண்டே இருப்பது தான் அதற்கு காரணம்.

அவர் கை குழந்தையாக இருந்த போதே இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிடுவாராம். எல்லோரும் அவர் பக்திமான் என்று சிலாகித்து போயிருக்கிறார்கள். அவரை பள்ளியில் சேர்த்த போதுதான் அவர் பக்திமானும் இல்லை சக்திமானும் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. முதலில் வகுப்பறையில் அவர் அவ்வப்போது கும்பிடுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். இரண்டாம் வகுப்பு பள்ளித் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர், திடிரென்று பென்சிலை கீழே போட்டுவிட்டு கும்பிடத் தொடங்கி இருக்கிறார். வகுப்பாசிரியர், கூட்டல் கணக்கிற்கு பதில் தெரியாமல் கடவுளை வேண்டுகிறார் என்று அமைதியாக இருந்திருக்கிறார். இவர் கிட்டத்தட்ட அரைமணி நேரம் கும்பிடுவதைப் பார்த்து அவருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இப்படி கும்பிட்டால் கடவுள் பத்தாம் வகுப்பு கேள்விக்கே பதில் சொல்லியிருப்பாரே, இவன் ஏன் இன்னும் கும்பிடுகிறான் என்று யோசித்தவர் இவரை கும்பிடுவதை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். இவர் கேட்காததால், இரண்டு கைகளையும் விலக்கி விட்டிருக்கிறார். மீண்டும் இவர் கும்பிட்டிருக்கிறார். எத்தனை முறை விலக்கினாலும் இவர் மீண்டும் மீண்டும் கும்பிட்டிருக்கிறார். செய்ததை செய்யும் குரங்குப் பிள்ளை. அவ்வளவுதான் தாத்தாவிற்கு செய்தி அனுப்பிவிட்டிருக்கிறார்கள். அதன்பின் தாத்தா அவரை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவில்லை.

வீட்டில் வசதி இருந்ததால் அவர் கும்பிட்டு கும்பிட்டு தூங்கி இருக்கிறார். கும்பிடுசாமியாகவே இருந்தாலும் திருமணம் செய்துவைக்க வேண்டுமே, திருமணம் என்றால் வேலைக்கு போகவேண்டுமே என்று யோசித்த தாத்தா அவருக்கு ஏற்றார் போல் ஒரு வேலையை தேர்ந்தெடுத்திருக்கிறார். அது ஒரு துணிக்கடையில் வருபவர்களை வாசலில் நின்று வரவேற்க்கும் வேலை.

நாள் முழுக்க கும்பிட்டுக் கொண்டே இருந்தால் போதும். ஆனால் சில மாதங்கள் மட்டுமே அவரால் அந்த வேலையில் நீடிக்க முடிந்தது. அந்த கடை முதலாளியின் மகன் வெளிநாட்டிலிருந்து கும்பிடும் பொம்மைகளை இறக்குமதி செய்து கடையின் முன் நிற்க வைத்துவிட்டான். அந்த பொம்மைகள் கும்பிட்டுக் கொண்டே தலையையும் ஆட்டி இருக்கின்றன. கும்பிடுசாமியால் கும்பிட மட்டுமே முடியும். வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று தாத்தா எண்ணியிருக்கிறார்.

கும்பிட்டுக் கொண்டே இருக்கும் அடுத்த வேலை எது? தாத்தா யோசித்தக் கொண்டிருந்த நேரத்தில் அந்த ஊர் சட்டமன்ற உறுப்பினர் தலையில் தேங்காய் விழுந்து இறந்து போக, ஊருக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. தாத்தாவிற்கு யோசனை பிறந்தது.

“வாக்காள பெருமக்களே…” அந்த சுயேட்ச்சை வேட்பாளர் பேசிக்கொண்டே போகும் போது, அருகில் கும்பிடுசாமி கும்பிட்டுக் கொண்டே வருவாராம். ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் கும்பிடுகிறாரோ அதற்கு ஏற்றார்போல் தினப்படியும் உண்டாம். ஆனால் இவர் கும்பிடுவதை கவனித்த மக்கள் அனைவரும் இவரையே சுற்றி வரத் தொடங்கியிருக்கின்றனர். வேட்பாளருக்கு, எங்கே இவர் அரசியலில் குதித்துவிடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது. கும்பிடுக்கு அந்த வேலையும் போயிற்று.

தாத்தா மருத்துவரிடம் போயிருக்கிறார். ஏதேதோ புரியாத நோய் பெயர் சொல்லி மருத்துவர் நிறைய காசை பிடிங்கிக் கொண்டிருக்கிறார். கும்பிடு சாமியிடம் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை இதெல்லாம் காத்துகருப்பின் வேலையாக இருக்குமோ என்று பயந்த அப்பாயி மாசி பெரிய கருப்புசாமியிடம் போய் முறையிட்டிருக்கிறார். தன் மகனை அண்டிய காத்து ஓட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கிடா வெட்டியிருக்கிறார். ஊரில் ஆடுகளுக்கு பற்றாக்குறை வந்ததுதான் மிச்சம்.

கல்யாணம் பண்ணிவைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சேலத்தில் ஒரு ஜோசியர் சொல்ல, உத்தியோகம் இல்லாமலிருப்பதும் புருஷலட்சணம்தான் என்று அப்பாயி முடிவெடுத்திருக்கிறார்.

ஊரில் யாரும் கும்பிடுக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை. மேலும் அவரை பலரும் கேலி பேசியிருக்கிறார்கள். அதனால் தாத்தா, குடும்பத்தோடு மெட்ராசிற்கு குடி புகுந்திருக்கிறார். தாம்பரம் அருகே ஒரு கிராமத்தில் வசித்து வந்த போது, கும்பிடு சாமி கும்பிட்டுக் கொண்டே இருப்பது மரியாதைக்காக என்று தவறாக புரிந்துகொண்ட அந்த ஊர் பஞ்சயாத்து தலைவர், இவ்வளவு மரியாதையான மனிதனை தவறவிடக் கூடாது என்று முடிவுசெய்து தன் கடைசி மகளை கும்பிடு சாமிக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். தாத்தாவிற்கு உள்ளுக்குள் சந்தோசம் என்றாலும், எப்படி மகன் தாலிக் கட்டுவான், அவன் கும்பிட்டுக் கொண்டே இருப்பானே என்று பயந்திருக்கிறார். தன் பையனிடம் இருக்கும் பிரச்சனையை தன் (சம்மந்தி) சமப்பந்தியாகப் போறவரிடம் சொல்லிவிடலாம் என்று யோசித்திருக்கிறார். அப்போது தான் தெரிந்திருக்கிறது, பஞ்சாயத்து தலைவர் பகுத்தறிவு கட்சியை சேர்ந்தவர் என்பது. தாத்தாவிற்கு பெரும் மகிழ்ச்சி. தாலி கட்டவேண்டிய பிரச்சனை இல்லாமல் பகுத்தறிவு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

பஞ்சயாத்து தலைவரின் குடும்பம் மிகப் பெரியது. வசதி படைத்தது. திருமணத்திற்கு பின்பு கும்பிடுசாமி தன் மனைவியை கும்பிட்டுக் கொண்டே இருந்ததைப் பார்த்து அவர்கள் அலமந்து போயிருக்கிறார்கள். தாங்கள் அனைவரும் செல்லமாக வளர்த்த பெண்னை வழிப்படும் ஆண்மகன் கிடைத்துவிட்டதாக எண்ணிய பெண்ணின் சகோதரர்கள் தங்களின் பெயரிலிருந்த ஒரு பெரிய துணிக் கடையை கும்பிடு சாமியின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

“இது என்னையா பேரு. கும்பிடுசாமி. இந்த பேருக்கு எப்படி ரிஜிஸ்தர் பண்றது?” சொத்தை பதிவு சைய்யும் போது பதிவாளர் கேட்டிருக்கிறார். அவ்வளவுதான் கும்பிடுசாமியின் மச்சான்கள் அனைவரும் அந்த அரசு அதிகாரியை அடிக்கப் போயிருக்கிறார்கள். பயந்த அதிகாரி, கும்பிடுசாமி என்று பெயரிலேயே சொத்தை பதிவு செய்ய அது அன்று முதல் அவரின் சட்டப்பூர்வமான பெயர் ஆனது. மேலும் கும்பிடுசாமிக்கு ஒன்றென்றால் அவருடைய ஐந்து மச்சான்களும் வருவார்கள் என்ற செய்தி ஊரில் வேகமாக பரவியிருக்கிறது. எல்லோரும் கும்பிடுசாமியை ஒரு குட்டி டான் போல பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

“கோன் ஹே ஒ. எனக்கே பாக்கனும்போல இருக்கே…” என்று பம்பாயில் சோட்டாராஜன் சொல்லும் அளவிற்கு கும்பிடு அண்ட் கோ-வின் செல்வாக்கு பரவியிருக்கிறது.

அந்த அதிகாரத்தோடு அவர் வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த வியாபாரமும் செய்யத் தெரியாது என்ற உண்மை தாத்தாவிற்கும் அப்பாயிக்கும் மட்டுமே தெரியும். அதனால் தாத்தா புத்திசாலித்தனமாக கும்பிடுசாமியை கல்லாவிற்கு அருகில் அமரவைத்துவிட்டு, கல்லாவில் கும்பிடுசாமியின் மச்சான் ஒருவரை அமர வைத்துவிட்டார். கும்பிடு சாமி கும்பிடுவதை பார்ப்பதற்காக நிறைய ஜனங்கள் அங்கே வரத் தொடங்க, அவருடைய ஸ்தாபனம் விறுவிறுவென வளர்ந்திருக்கிறது. கும்பிடுசாமி அந்த இடத்தில் அமர்வதுதான் ராசி என்று தாத்தா எல்லோரையும் நம்பவைத்துவிட்டார். பஞ்சாயத்து தலைவர்தான் பகுத்தறிவுவாதி. அவருடைய மகன்கள் எல்லாம் ராசிபலன்(வியா)வாதிகள். டிவியில் ராசிபலன் பார்த்துவிட்டு குரு இன்று எந்தக் கட்டத்தைப் பார்க்கிறார் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து வியாபார முதலீடுகள் செய்யக்கூடிய அளவிற்கு ஜோஷிய ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் அவர்களும் கும்பிடுசாமி அங்கே அமர்வதால் தான் வியாபாரம் நடக்கிறது என்று நம்பி அவரை அங்கேயே விட்டுவிட்டனர். கல்லாவிற்கு பக்கத்திலிருக்கும் இருக்கை கும்பிடுசாமியின் நிரந்தர இருக்கையாகிப் போனது இப்படிதான்.

சூரியன் உதித்து மறைய, கும்பிடுசாமிக்குப் பிள்ளைகள் பிறக்க, மெட்ராஸ் சென்னையாக, தாம்பரத்தை சுற்றியிருந்த கிராமங்கள் அபார்ட்மென்ட்களாக மாறிப்போக, அவரின் வியாபாரமும் பெருக கும்பிடுசாமி (மிகப்)பெரிய மனிதராக உருவெடுக்கத் தொடங்கியிருக்கிறார். கும்பிடுசாமியின் பிள்ளைகள் வளர்ந்து அமெரிக்காவில் வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட கடையில் கும்பிடுசாமி கும்பிடுவதை படமாக்கி சுவற்றில் மாட்டிவிட்டான் அவருடைய மகன். அந்த படத்தைப் பார்க்கவே பல அமெரிக்கர்கள் வருகிறார்களாம்.

இன்று கும்பிடுசாமிக்கு நிறைய வயசாகிவிட்டது. ‘கும்பிடுசாமி டெக்ஸ்டைல்ஸ்’ உலகம் முழுக்க பரவிவிட்டது. இன்னும் அவர் கும்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அவர் மனைவி இன்று வரை தன் கணவன் தன்னை வழிபடுவதாக நினைத்து வருகிறார். அவர் குடும்பத்தார் அவர் கும்பிடுவதுதான் ராசி என்று நம்பி வருகின்றனர். மக்கள் அவரை தேடி வந்து பார்க்கின்றனர். அவரிடம் நிறைய பணம் சேர்ந்துவிட்டது. அவருக்கு திநகரில் பெரிய பங்களா இருக்கிறது. வீட்டில் பல வெளிநாட்டு கார்கள் நிற்கின்றன. எந்த கட்சி அடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்று முடிவுசெய்வதே அவர்தான் என்று பேசிக் கொள்கிறார்கள். தமிழக அரசியலில் அவருக்கு தெரியாத ரகசியம் எதுவுமில்லை என்பது கூடுதல் தகவல்.

மேலும், கும்பிடுசாமி என்ற பெயரில் ஆதார் அட்டை வைத்திருக்கிறார். அதை தன் மொபைல் நம்பரோடும் வங்கிக் கணக்கோடும் இணைத்துவிட்டார் (அதனால் அவர் சேவைத் துண்டிக்கப் படவில்லை). அவர் இப்போது வெறும் கும்பிடுசாமி இல்லை. ‘கும்பிடுசாமி அண்ணாச்சி’. ஆனால் அவருடைய உண்மையான பெயர் என்ன என்பதுதான் யாருக்கும் நினைவிலில்லை.

– ஜனவரி 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *