குதிரைக்கு லாயம்

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 409 
 
 

(1990 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்).

குதிரைக்கு லாயம்

இலவசமாகக் கிடைத்த குதிரையினால் ஏராளமான கஷ்டங்கள் ஏற்பட்டுப் போனதை எண்ணி எண்ணி வேதனைப் பட்டார் பரமார்த்த குரு. தமக்குக் குதிரை வேண்டும் என்பதற்காக அல்லவா தங்கமான சிஷ்யர்களும் துன்பப்பட்ட வேண்டியதாகிவிட்டது. என்று மிகவும் துக்கப்பட்டார் குரு.

அவலட்சணமான குதிரைதான் என்றாலும் பணச் செலவு ஏதும் இல்லாமல் கிடைத்ததே என்று பார்த்தால், அடுத்தடுத்து வீண் செலவுக்கு வழி செய் கிறதே என்று வெகுவாக அங்கலாய்த்துக் கொண்டார் அவர். தெய்வமே! இப்படி எல்லாமா எங்களைச் சோதிக்க வேண்டும் என்று புலம்பினார்.

இப்படியெல்லாம் தம்மையே நொந்து கொண் டிருந்தவர்க்குத் திடீரென்று ஞான விஷயத்தைப் பற்றிய சிந்தனை வந்துவிட்டது. உடனே அவர் தம் சிஷ்யர் களை அருகே அழைத்தார். அன்போடு தம் எதிரே அமரச் செய்து ஞானோபதேசம் செய்ய ஆரம்பித்தார்.

“அன்பும் பண்பும் கூடிய சிஷ்யர்களே! இந்த உலக வாழ்க்கையை ஆழ்ந்து நோக்கி ஆராய்ச்சி செய்தால், எல்லாமே சூன்யமாகத்தான் தோன்றுகிறது. எல்லாமே முயல் கொம்பு போலவும் கானல் நீர் போலவும் தாம் என்று கருத வேண்டியதாக இருக்கிறது.

இந்த உலக வாழ்க்கையில் தீமை கலவாத நன்மையோ, கசப்பு கலவாத இனிமையோ, துன்பம் கலவாத மகிழ்ச்சியோ காண முடியவில்லையே! பாருங்களேன்… பணம் கொடுத்து வாங்காதது மகிழ்ச்சி என்றால், அந்த குதிரையினால் நமக்கு எவ்வளவு துன்பம் வந்துவிட்டது! துளியளவு தேனை பெறுவதற்கு எத்தனை தேனீக்கள் நம்மைக் கொட்ட வருகின்றன. நெல்லுக்கு உமி உண்டு. கனிக்குத் தோலும் கொட்டை யும் உண்டு. இவையெல்லாம் இயல்பானவைதாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அனுபவிக்கிற சந்தோஷத்தை விட துன்பமே அதிக அளவாக இருக்கிறது.

எனக்குக் குதிரையேற அவ்வளவு அதிர்ஷ்டம் ல்லை என்றே தோன்றுகிறது. எல்லாம் விதி! விதிக்கு எதிராக நடக்க முடியுமா? முடியாதே! ஆகவே இனி இந்தக் குதிரை எனக்கு வேண்டவே வேண்டாம்! இதை முன்பு இருந்த இடத்துக்கே கொண்டு போய் விட்டு விடுங்கள்” என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார் பரமார்த்த குரு.

அவர் அவ்வாறு கூறியதும் சிஷ்யர்கள் அனைவரும் அப்படியே பதறிப்போய்விட்டார்கள். குருநாதர் ஏன் இவ்வாறு வருத்தப்பட வேண்டும். அந்தக் குதிரைக்குத் தான் தோஷ நிவர்த்தி செய்தாகிவிட்டதே என்று கவலைப்பட்டார்கள்.

“எங்கள் உயிருக்கும் மேலான குருநாதரே! தாங்கள் இப்படியெல்லாம் மனம் தளர்ந்துவிடக் கூடாது. இந்தக் குதிரைக்கு இருந்த தோஷத்தைத்தான் வள்ளுவப் பண்டாரம் இதன் காதை அறுத்துக் காத தூரத்துக்கு ஓட்டி விட்டானே! இனி ஒரு நஷ்டமும் ஏற்படாது. தைரியமாக இருங்கள். இது என்ன நாம் தேடிய குதிரையா? தெய்வாதீனமாக இலவசமாகக் கிடைத்த குதிரையல்லவா? தெய்வத்தின் திருவருளுக்கு எதிராக நாம் போகலாமா? தெய்வமே பார்த்து அனுப்பியதை நாம் திருப்பி அனுப்பினால் அது தெய்வ குற்றம் ஆகிவிடாதா? தாங்கள் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள். இனி ஏதும் கஷ்டம் வராது. கவலையை விடுங்கள்” என்று சீடர்கள் அன்போடு ஆசிரியரைத் தேற்றினார்கள். குருமகானும் ஒருவாறு சமாதானம் அடைந்தார். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னார்.

“இனி இந்தக் குதிரையை இரவில் கட்டிப் போடாமல் மேயவிட்டு விடக் கூடாது. இல்லையேல் அன்றைக்கு நேர்ந்ததைப் போலத்தான் மோசம் வந்து சேரும்” என்றார் குரு.

“கட்டியே வைப்போம்!” என்றார்கள் சிஷ்யர்கள்.

“எங்கே கட்டி வைப்பது? இடம் எங்கே இருக்கிறது?”

“மடத்துக்குப் பின்னால் ஒரு லாயம் கட்டுவோம்!” என்றான் மிலேச்சன்.

“எப்படிக் கட்டுவது?” பேதை கேட்டான்.

“இப்படிக் கேட்டால் எப்படி? நான் வெளியே போய் ஆலமரத்துக் கொம்புகளை வெட்டி வருகிறேன். அந்தக் கொம்புகளை வைத்து அழகான ஒரு லாயம் கட்டி விடுவது!” என்று உறுதியான தொனியில் உரக்கவே உரைத்தான் பேதை.

“அப்படியே ஆகட்டும்” என்றார் ஒருவாறு மனம் தேறிய பரமார்த்த குரு.

பேதை கோடரியை எடுத்துக் கொண்டு, ஒரு பெரிய ஆலமரத்தைக் குறி வைத்துக் கொண்டு புறப்பட்டுப் போனான்.

வழியோரத்தில் இருந்த அந்தப் பெரிய ஆலமரத்தை அவன் ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறான். அங்கே போய் நின்று அதை ஏற இறங்க ஒரு முறை நோட்டம் விட்டான்.

சரசரவென அம்மரத்தின் மேல் ஏறி, ஒரு பெரிய கிளையைக் கோடாரியால் வெட்டத் தொடங்கினான். அந்தக் கிளை உயர்ந்து வளர்ந்து ஒழுங்காயிருந்தது.

பேதை அந்தக் கிளையின் நுனிப் பக்கமாக அமர்ந்து கொண்டு அடிப் பக்கத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக ஒரு வேதியர் வந்து கொண்டிருந்தார். அவர் மரம் வெட்டும் சப்தம் கேட்டு அண்ணாந்து பார்த்தார். அங்கே பேதை விசித்திரமான முறையில் கிளையை வெட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். அப்போது அவன் ஏறக்குறைய பாதி பாகம் வெட்டிவிட்டிருந்தான். இன்னும் இரண்டொரு வெட்டில் கிளை துண்டாகிவிடும். அவனும் கிளையோடு கீழே விழுந்து விடுவான்.

பதறிப்போனார் பார்த்தவர்! இப்படியும் ஓர் ஆளா? என ஆச்சரியப்பட்டார்.

“அடடே! யாரையா அது! இப்படி உட்கார்ந்து வெட்டினால், விழப்போகிற கிளையோடு நீயும் விழுந்து விடுவாயே?” என்று எச்சரித்துக் கூவினார் அவர்.

“என்ன ஓய்… வழிப் போக்கரே! இப்படியெல்லாம் அபசகுனமாக, அமங்கலமாகப் பேசிக் கொண்டு இங்கே நிற்காதீர். உம் வழியைப் பார்த்துப் போம்!” என்று பேதையும் மரத்தின் மேலிருந்து கத்தினான்.

“ஓ! இவன் சரியான முட்டாள் போலிருக்கிறது. வனுக்கு எவ்வளவு தான் சொன்னாலும் கேட்டுக் கொள்ள மாட்டான்” என்று அவர் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

தானே பட்டு அனுபவித்தால்தான் தெரியும். ‘பட்டறி கெட்டறி பத்தெட்டிறுத்தறி’ என்று தமக்குள் முணுமுணுத்துக் கொண்டே அந்த வேதியர் போன, சில நிமிடங்களுக்கெல்லாம், கிளையோடு கீழே விழுந்துவிட்டான் பேதை.

வேதியர் சொன்ன ஆரூடம்

மரக்கிளையோடு விழுந்த பேதைக்கு நல்ல வேளையாக பலமான அடி ஏதும் படவில்லை. என்றாலும் ‘அந்த வேதியர்’ சொல்லிவிட்டுப் போனது அவன் நெஞ்சி சுருக்கென்றுபட்டது. “நான் கீழே விழுந்துவிட நேரும் என்று, விழுவதற்கு முன்பாக, முன்கூட்டியே எப்படியோ தெரிந்து வைத்துக்கொண்டு சொல்லிவிட்டாரே! அவர் சிறந்த பண்டிதராகத்தான் இருக்க வேண்டும். இனி நடக்கப் போவதைச் சரியாகச் சொல்லக் கூடிய திறமை அவரிடம் ரொம்ப இருக்கிறது.

அவர் சொன்னால் பலிக்கிறது. அவரை விடக் கூடாது. அவரிடம் முக்கியமான ஓர் ஆரூடம் கேட்க வேண்டும்” என்று துடிப்போடு எழுந்து அவரைக் கூவியழைத்தபடியே ஓடினான் பேதை.

அந்த வேதியர் மெதுவாகத்தான் நடந்து கொண் டிருந்தார். ஆகவே அதிக தூரம் சென்று விடவில்லை அவர். தன் பின்னாலிருந்து கூவிக் கொண்டு வந்தவனைத் திரும்பிப் பார்த்தார்.

“அடடே! மரம் வெட்டிக் கொண்டிருந்த புத்தியில்லாத மிருகம் அல்லவா இவன்? ஏன் என்னை அழைக்கிறான்” என்ற அவர் குழம்பினார். துஷ்டனைக் கண்டாலும், அறிவே இல்லாதவனைக் கண்டாலும் தூர விலகியிருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவன் அவரை நெருங்கிவிட்டான்.

பேதை அவரை நோக்கி, ஒரு பெரிய கும்பிடு போட்டான். அப்போதுதான் அவருக்குச் சற்றுப் பயம் தெளிந்தது.

“ஐயா! நீர் ஒரு பெரிய வித்துவான். சகல கலையும் தெரிந்த சாஸ்திரி. நீர் சொன்னபடியே நான் மரக்கிளையோடு சேர்ந்து கீழே விழுந்துவிட்டேன். நல்ல வேளை தப்பித்தேன். உம் வாக்கு பலிக்கிறது. ஆகவே எனக்கு இன்னும் ஓர் ஆருடம் கூறவேண்டும்” என்று வேண்டினான் அவன்.

“ஆரூடமா? என்ன ஆரூடம்?” அவர் புரியாமல் கேட்டார்.

“ஐயா! நான் பரமார்த்த குருவின் சிஷ்யன். அவர் மீது எனக்கு அதிக அன்பும் அக்கறையும் உண்டு. பாவம் அவருக்கு வயதாகிவிட்டது. தளர்ச்சி வந்துவிட்டது. எனக்கென்னவோ பயமாயிருக்கிறது!”

“என்ன பயம்? ஏன் பயம்?”

“அவர் சீக்கிரம் செத்துவிடுவாரோ என்று பயப்படுகிறேன். அப்படி ஏதாவது ஆகிவிடுமோ? அப்படியானால் அவர் எப்போது சாவார்? எப்படிச் சாவார்? சாவதற்கு முன்னே ஏதாவது அடையாளம் தெரியுமா? தயவு செய்து இதையெல்லாம் ஆரூடமாக நீங்கள் எனக்குச் சொல்லவேண்டும்!” என்று உருக்கமாக வேண்டிக் கொண்டான்.

வேதியருக்கு என்ன சொல்வது என்றே புரிய வில்லை. விட்டால் போதும் என்று இருந்தது அவருக்கு. எதையாவது சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட வேண்டும் என்று எண்ணினார்.

ஏதேதோ சொல்லிப் பார்த்தும் பேதை விடாப் பிடியாக நின்றதால் எதையாவது சொல்லிவிட்டுப் போய்விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் வேதியர். அவன் தொந்தரவு தாங்காமல் கடைசியாக ‘ஆசன சீதம் ஜீவன் நாசம்’ என்றார். அதற்கு விளக்கம் கேட்டான் பேதை.

“அய்யா! உன்னுடைய குருநாதருக்கு எப்போது ஆசனம் குளிர்ந்து போகிறதோ அப்போதே அவருக்குச் சாவு நிச்சயம் என்று அர்த்தம்” என்றார் வேதியர்.

“ஓஹோ! குருவுக்கு ஆசனம் குளிர்ந்து காணப்பட்டால் அது அவர் செத்துப் போவதற்கு அடையாளமா?” என்று அவன் தன்னையே கேட்டுக் கொள்வதைப்போல் பேசிக் கொண்டான். விட்டால் போதும் என்று வேதியரும் ஓட்டமாக நடந்து போய்விட்டார். வெட்டிய மரக்கிளையை மடத்துக்கு இழுத்துப் போக, ஆலமரத்தை நோக்கி நடந்தான் பேதை.

அவன் மனத்தில் அந்த வேதியர் சொன்ன அந்த வாசகம் அப்படியே பதிந்துவிட்டது.

“ஆசன சீதம் ஜீவன் நாசம்!”

அதை அடிக்கடி தனக்குள் சொல்லிக் கொண்டே மரக்கிளையை இழுத்துக் கொண்டு மடத்துக்குச் சென்றான்.

கிளையை மடத்தின் பின்னே கிடத்திவிட்டு அவன் குருவை நோக்கி ஓடினான். தான் அந்த சாஸ்திரியிடம் கேட்ட ஆரூடத்தை ஆதியோடு அந்தமாக அக்கறை யோடு கூறினான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் குருவுக்கு இடி விழுந்ததைப் போல் வேதனை மிகுந்துவிட்டது. அவர் எதை எதையோ எண்ணிக் கலங்கினார்.

“அந்த சாஸ்திரி அதிகம் கற்றவராகத்தான் இருக்க வேண்டும். அவர் வாக்கு பொய்க்காது என்றுதானே தெரிகிறது. அவர் சொன்னபடியே பேதை சிறிது நேரத்திலேயே மரக்கிளையோடு விழுந்திருக்கிறானே தரையில்! அதனால், எனக்கு அவன் சொன்ன ஆரூட மும் உண்மையாகத்தானே நடக்கும்?” என்று கவலை கொண்டார். குரு அவரும் தமக்குள் ‘ஆசன சீதம் ஜீவன் நாசம்’ என்று அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டார்.

“இனி நான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கையிருந்தால் பிழைக்கலாம். இனி ஒருபோதும் கால் சுத்தி செய்யவே கூடாது. அதற்கு மேல் எல்லாவற்றிற்கும் ஆண்டவன் விட்ட வழி. வேறு என்ன செய்ய முடியும்?” என்று புலம்பினார் குரு.

எதை எடுப்பது, எதை விடுப்பது?

வேதியரின் ஆரூடத்தைக் கேட்டதற்குப் பிறகு, பரமார்த்த குரு பரம ஜாக்கிரதையாக இருந்து வந்தார். அதற்கப்புறமும் அவர் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். என்றாலும் அந்த ‘ஆசன சீதம் ஜீவன் நாசம்’ வாசகத்தை மறக்கவே இல்லை.

இதற்கிடையே அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு விட்டது. வெளியே எங்காவது தேசாந்தரம் சென்று திரும்பினாலன்றி, பணத்துக்கு வழி ஏற்படாது போல் தெரிந்தது. எனவே குரு, சிஷ்யர்களை அழைத்துக் கொண்டு தேசாந்தரம் புறப்பட்டார். பல ஊர்களுக்கும் போனால் அங்குள்ள அவரது பழைய சிஷ்யர்களும், பரிதாபப்படுபவர்களும் ஏதாவது பண உதவி செய்வது வழக்கம். ஆகவே, நம்பிக்கையோடு அவர்கள் பயணம் தொடங்கினார்கள்.

ஓரளவு வெற்றிகரமாகப் பயணத்தை முடித்து அவர்கள் மீண்டும் மடத்துக்குத் திரும்பி வரும்போது குருநாதர் மிகவும் சோர்வுற்றுப் போனார். குதிரை மீது. சரியாக உட்கார முடியாமல் சாய்ந்தாடியபடி அமர சங்கடப்பட்டுக் கொண்டு வந்தார். அவர் தலைப் பாகையைத் தடுக்க, அது பின்பக்கமாகக் கீழே சரிந்து விழுந்துவிட்டது. அதைச் சிஷ்யப் பிள்ளைகள் எடுத்துக் கொண்டு வருவார்கள் என்று அசட்டையாக இருந்து விட்டார். அவருக்கிருந்த களைப்பு அப்படி.

வெகுதூரம் சென்றதும், அவருக்குத் தலைப்பாகை நினைவு வந்தது. “எங்கே என் தலைப்பாகை? தாருங்கள்” என்று சிஷ்யர்களைக் கேட்டார்.

“அது எங்கே விழுந்ததோ அங்கே தான் கிடக்கும்” என்றார்கள் சிஷ்யர்கள்.

அவருக்குப் பொல்லாத கோபம் வந்துவிட்டது. ஒரேயடியாக எரிந்து விழுந்தார்.

“என்ன நினைத்துக் கொண்டீர்கள்! கீழே விழுந்தால் அதை எடுத்து வைக்க வேண்டாமா? இதற்கெல்லாம் கூட நான் சொல்ல வேண்டுமா? உடனே ஓடிப்போய் தேடிக்கொண்டு வாருங்கள்!” என்றார்.

மடையன் தேடிக்கொண்டு ஓடினான். சிறிது நேரத்தில் தலைப்பாகையை எடுத்துக் கொண்டு திரும்பினான். வரும் வழியில் இளகியதாக பச்சைப் பசேலென்று ஏதோ ஒன்றைப் பார்த்துவிட்டான்.

“ஆகா! இது நம் குதிரை போட்ட லத்தியல்லவா? கீழே விழுந்து கிடக்கிறதே! கீழே விழுந்த எதையும் எடுத்து வைக்க வேண்டும் என்று குருநாதர் கண்டிப் பாகச் சொல்லவில்லையா?”

மடையன் உடனே சற்றும் தாமதியாமல் அந்தக் குதிரை சாணத்தைக் குருநாதரின் தலைப்பாகையில் வைத்து எடுத்துக் கொண்டு வந்து மிகவும் பணிவாக, குருவின் முன் நீட்டினான்.

அதைக் கண்டதும் குருவுக்குக் கடுங்கோபம் வந்து விட்டது. “சீச்சீ! இதென்ன அசிங்கம்! குதிரை லத்தியை குருவின் ஆடையில் கொண்டு வருவதா? சே! சுத்த மோசம்!” என்று கோபித்துக் கொண்டார் குரு.

அதற்குச் சிஷ்யர்கள் எல்லாரும் முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு சிணுங்கிக் கொண்டார்கள்.

“என்ன இது? கீழே விழுந்ததை எல்லாம் எடுக்க வேண்டுமென்று சொன்னதும் குருதான். எடுத்து வந்தால் கோபிப்பதும் குருதான். எப்படித் தான் நடந்து கொள்வது? குரு சொல்லைத் தலை மேற்கொண்டு நடந்தாலும் தவறாக இருக்கிறதே. இதற்கு என்னதான் செய்வது?” என்று அவர்கள் நொந்து கொண்டார்கள். அது குருநாதரின் செவிகளிலும் விழுந்தது.

“இது தெரியாதா? கீழே விழுவதில் எதை எடுக்க வேண்டும், எதை எடுக்கக் கூடாது என்று பகுத்தறிந்து நடந்து கொள்ள வேண்டும் அல்லவா?” என்றார் குரு.

“எங்களுக்கு ஏன் குருதேவா, இந்த வம்பெல்லாம். எதை எதை எடுக்க வேண்டும், எதை எதை எடுக்கக் கூடாது என்று எழுதிக் கொடுத்து விடுங்களேன்!” என்று கேட்டார்கள் சிஷ்யர்கள், குருவும் அவர்கள் கேட்டுக் கொண்டபடியே எழுதிக் கொடுத்துவிட்டார்.

அதற்குப் பிறகு சிறிது தூரம் சென்றதும், சதுப்பு நிலப் பகுதியாக இருந்தது. தரை ஈரமாக வழுக்கிவிடக் கூடியதாக இருந்தது. குருவின் நொண்டிக் குதிரை ஓரிடத்தில் சறுக்கி விழுந்து விட்டது. அதன் மேல் ஏறியிருந்த குருநாதரும் குதிரைமீதிருந்து கீழே விழுந் தார். விழுந்தவர் அப்படியே உருண்டு அருகிலிருந்த ஒரு பள்ளத்தில் தலைகீழாகச் சாய்ந்து விட்டார்.

சிஷ்யர்கள் அவ்வாறே செய்தார்கள். குரு பள்ளத்தில் இருந்தபடியே அவஸ்தைப் பட்டுக் கொண்டு, “நான் கீழே விழுந்தாலும் எடுக்க வேண்டும்” என்று எழுதிக் கொடுத்தார். எழுதும் போதும் உபாதையால் அவர் கை நடுங்கியது. உள்ளம் அழுதது.

பள்ளத்திலே விழுந்து சேறும் சகதியுமாக இருந்த அவரை, எழுதிக் கொடுத்த பிறகே சிஷ்யர்கள் மேலே தூக்கினார்கள். பின்பு அவர் உடலைச் சுத்தப்படுத்தி வேறு உடைகள் உடுத்திக் குதிரைமேல் ஏற்றி விட்டார்கள். பிறகு மெதுவாக, மடத்தை நோக்கி நடந்தார்கள்.

ஆசனோஷ்ணம்

பரமார்த்த குரு குதிரையிலிருந்து பள்ளத்தில் விழுந்ததற்குப் பின்னர் பல நாள்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தார். அவர் உடலில் பட்ட அடியைவிட உள்ளத்தில் பட்ட அடியே பலமாக இருந்தது. நாளுக்கு நாள் அவர் உடல் மோசமாகி வந்தது. கவலை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அந்த வேதியன் சொன்ன ஆரூடம் அவர் நினை வுக்கு வந்து பயமுறுத்திக் கொண்டேயிருந்தது. அதை நினைக்கக்கூடாது என்றுதான் நினைப்பார். அப்படி நினைக்கிறபோதே அந்த நினைப்பு வந்து நெஞ்சைப் பிசையும்.

பள்ளத்திலேயிருந்த பரமார்த்த குருவைத் தூக்கி, சுத்தம் செய்து மீண்டும் குதிரையின்மேல் ஏற்றியபோது அவருடைய இருப்பிடம் (ஆசனம்) குளிர்ந்திருந்ததைக் கவனித்து விட்டார் அவர். ஒரே கவலையாகப் போய் விட்டது. சிஷ்யர்களுக்கும் சொல்லாமல் வேதனைப் பட்டார் குரு. அவர்கள் ஒரேயடியாக அதை மறந்து விட்டவர்கள் போல் தோன்றினார்கள். நினைவுபடுத்தி அவர்களையும் கவலைக்குள்ளாக்குவானேன் என்று கருதினாரோ என்னவோ? மடத்துக்குப் போய் சேர்ந்த போதும் அவர் அதைப்பற்றி அவர்களிடம் சொல்லவே இல்லை.

அன்றிரவு அவருக்கு உறக்கம் வரவில்லை. உடலில் வலி! தள்ளாத வயதில் பள்ளத்தில் விழுந்தால் தாங்க முடியுமா? ஆனால் அவர் பள்ளத்தில் விழுந்ததால் உடம்பு அதிர்ந்துபோய் வலி எடுக்கிறது என்று நினைத்ததைவிட ஆருடக்காரர் சொன்னது பலிக்கும் காலம் வந்துவிட்டதோ என்று பயந்ததுதான் அதிகமாக இருந்தது.அதற்கு ஏற்றாற்போல் ஆசனம் வேறு சீதமாக அதாவது நனைந்து குளிர்ந்து காணப்பட்டது. சேறும் சக்தியுமாக இருந்த பள்ளத்தில் விழுந்ததனால் அப்படி ஆயிற்று என்ற நினைப்பே அவருக்கு வராது போயிற்று.

இரவெல்லாம் உருண்டு புரண்டு படுத்தார். ஒரு நிமிஷம் உறங்கவில்லை. பயம், வெறுப்பு, பெரு மூச்சு… இப்படியே கிடந்தார். பொழுதும் விடிந்தது. குருநாதர் சிஷ்யர்களை விளித்தார்.

அவர்கள் ஓடோடி வந்து குருவின் அருகே கவலையோடு நின்றார்கள். அவருடைய கண்கள் குழிவிழுந்தும் பஞ்சடைந்தும் முகம் வாடி வதங்கி வெளுத்துப் போயும், உதடுகள் வறண்டு நாக்கில் கொஞ்சமும் ஈரப்பசையே இல்லாமலும் உருமாறி, மரண அவஸ்தையோடு கிடப்பதாக அவர்கள் பயந்தார்கள்.

குருநாதர் வாயை மெதுவாகத் திறந்து பேசிய போது அவர் நா குழறியது. ஆகவே அவர்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது விளங்கவில்லை. அவருக்கு மேல்மூச்சு வாங்குவதைக் கண்டு அவர்களுக்குத் தங்கள் மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது. அவர் கண்கள் மிரள மிரளப் பார்த்ததைக் கண்டு அவருக்கு நினைவு மங்கி, புத்தி பேதலிக்கிறதோ என்று நினைத்தார்கள்.

சிறிது நேரத்தில் அவர் சற்றுத் தெளிவாகவே பேசினார். சிஷ்யர்களுக்கு அவர் பேச்சு புரிந்தது.

“அருமை சிஷ்யர்களே! எனக்கு அந்திம காலம் நெருங்கிவிட்டதாக உணர்கிறேன். இனி என் ஆத்மா இந்த உடலில் தங்கப் போவதில்லை. ஆகவே நீங்கள் எனக்குச் சமாதிக் குழியைத் தோண்டுங்கள். அதிலே என்னைப் பக்குவமாக இறக்கி வையுங்கள். நல்லடக் கத்துக்கு வேண்டிய எல்லாக் காரியங்களுக்கும் தகுந்த ஏற்பாடு செய்து வையுங்கள்.”

குருநாதர் அவ்வாறு குழறிக் குழறிக் கூறி முடித்த போது அவர் கண்கள் மட்டுமல்ல… சிஷ்யர்கள் கண்களும் குளங்களாகவே ஆகியிருந்தன.

அவர்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “என்ன குருநாதரே, இப்படிச் சொல்லிவிட்டீர்? உங்களுக்கு இப்போது என்ன ஆயிற்று? அந்த ஆரூடக்காரன் ஆசன சீதம் ஜீவன் நாசம் என்று சொன்னானே…! அப்படி ஆசன, சீதம் ஆனால் தானே ஆவி போவதற்கு அடையாளமாகும்?” என்று கேட்டார்கள்.

“ஆமாம். பள்ளத்திலே விழுந்தபோது ஆசனம் அதாவது என் இருப்பிடம் நனைந்து குளிர்ந்திருந்தது. அதற்குக் காரணம் பள்ளத்திலிருந்த நீரும் சேரும் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள்தான் நன்றாகத் துடைத்து என்னைக் குதிரையில் ஏற்றிக் கொண்டு வந்தீர்களே! அதற்கப்புறமும் என் இருப்பிடம் அதிகமாகக் குளிர்ந்து போய்விட்டது. அதை நான் உங்களுக்கு அப்போது சொல்லவில்லை. ஆரூடக்காரன் சொன்னது போல் அந்த அறிகுறி பள்ளத்தில் விழுவதற்கு முன்பே ஏற்பட் டிருக்குமோ என்று பயமாக இருக்கிறது. இருந்தாலும் சாவைத் தடுக்க முடியுமா? சாவின் அடையாளங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்ட பிறகும் சாந்தியோடு இருக்க முடியுமா? ஆகவேதான் சாவுக்குப் பிறகு சாந்தியடைய சடங்குகளை எல்லாம் சரியாகச் செய்து வையுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் குரு.

அவர்களுக்கும் குரு சொல்வது உண்மை என்றே தோன்றியது. அதனால் பயமும் கவலையும் கொண் டார்கள். இருந்தாலும் அதை குருவுக்குக் காட்டிக் கொண்டால் அவர் கவலை மேலும் அதிகமாகிவிடும் என்று கருதினார்கள். அவருக்கு அன்புடன் ஆறுதலாகப் பல வார்த்தைகளைச் சொல்லித் தேற்ற முயன்றார்கள். எனினும் அதில் தோற்றுப் போனார்கள். குருவுக்குக் கவலை குறையவில்லை. அவர் சொன்னபடி செய்தாலாவது அவருக்குச் சற்று நிம்மதி ஏற்படும் என்று நினைத்தார்கள். அதற்கு முன்பு கடைசி முறையாக அவர் மனத்தை மாற்ற முயல்வதற்கு அவர்களுக்கு ஒரு வழி தெரிந்தது.

அடுத்த ஊரின் சகுன சாஸ்திரக்காரன் ஒருவன் இருந்தான், அவன் பெயர் அசேதனமூர்த்தி. அவன் மகன் அசங்கதன். தங்கள் குருவைப் பிடித்துள்ள சனியை நீக்கி அவர் மனதை மாற்றுவானா பார்க்கலாம் என்று அவனை அழைத்து வந்தார்கள்.

அசங்கதன் குத்திக் குடைந்து சிஷ்யர்களிடமிருந்து எல்லா விஷயங்களையும் கேட்டறிந்து கொண்டான். நேராகக் குருவிடம் வந்தான்.

“குருமகானே! உங்களுக்கு வந்த குறை என்ன? ஏன் இப்படி வாடிப்போய்க் கிடக்கிறீர்கள்? உடல் உபாதையா? மன வருத்தமா? மறைக்காமல் என்னிடம் சொல்லுங்கள். அதை நான் நீக்காமல் விடமாட்டேன்! பெரிய சுவாமி! நான் அறியச் சொல்லுங்கள்” என்று பிரியமாகக் கேட்டான் அசங்கதன்.

அசங்கதன் கேட்டதற்கெல்லாம் குரு சொன்ன ஒரே பதில், ‘ஆசன சீதம் ஜீவன் நாசம்’ என்ற வாசகமே!

“அப்படியா? அந்த பிராமண ஆரூடக்காரன் சொன்னதுதானே இது, ஆசன சீதம் ஜீவன் நாசம் அப்படியானால் நானும், ‘ஆசனோஷ்ணம் அவனுக்கு நாசம்’ செய்யப் பண்ணுகிறேன். அவனை எனக்குக் காட்டுங்கள்! அவனுக்கு ஒரு பூஜை செய்து, அவனால் உங்களுக்கு வந்த தோஷத்தையெல்லாம் தீர்த்து வைக்கிறேன். அவனை எனக்குச் சீக்கிரம் காட்டுங்கள். நான் செய்வதைப் பாருங்கள்” என்று சினந்து கூறினான் அசங்கதன்.

“நீ என்ன பூஜை செய்வாய் அவனுக்கு?” என, தன் ஐயந்தெளிய அசங்கதனைக் கேட்டான் மூடன்.

“என்ன பூஜையா? அது உலக்கை பூஜை!” என்று உறுமினான் அசங்கதன்.

“உலக்கை பூஜையா? விளக்கமாகச் சொல்லேன்! இப்படி ஒரு பூஜையை நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே?” என்றார் பரமார்த்த குரு.

“இது இந்த மதத்தில் நடைபெறும் பூஜை, அந்த மதத்தில் நடைபெறும் பூஜை என்று எந்த மதத்தையும் சுட்டிச் சொல்ல முடியாது, இது ஒரு விசித்திரமான பூஜை. அதைப் பற்றி எனக்குத் தெரியும்…”

“முதலில் அதைச் சொல்” என்று ஆர்வம் துடிக்கக் கேட்டார்கள் சிஷ்யர்கள்.

அசங்கதன் உலக்கை பூஜையைப் பற்றிக் கூற ஆரம்பித்தான்.

உலக்கை பூஜை

செட்டியார் ஒருவர் சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவராக வாழ்ந்து வந்தார். அவர் பலசரக்குக் கடை வைத்து, நியாயமாக வியாபாரம் செய்து பணம் சம்பாதித்து வந்தார். சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியைச் சிவபக்தர்களுக்குத் தினமும் அன்னதானம் செய்வதில் செலவிட்டு வந்தார்.

அவரே நேரில் கண்டு சிவபக்தர்களை வருந்தி வருந்தி வீட்டுக்கு அழைத்து வந்து, உபசாரம் செய்து உணவளித்து மகிழ்வார். அவருக்குக் குழந்தை ஏதும் இல்லை. வாய்த்திருந்த மனைவியோ நல்லவள்தான். இருந்தாலும் தினந்தினமும் வடித்து வடித்துக் கொட்டி, அடியார்களுக்கு அமுது படைத்தும் அவள் அடிவயிறு கனக்க ஒரு குழந்தையும் உருவாகவில்லை. ஆகையால், அவளுக்கு அலுத்துப் போய்விட்டது. தர்மம் செய்வதில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. என்றாலும் அதைக் கணவனுக்குக் காட்டிக் கொள்ளவில்லை. கணவனுக்குத் தெரிந்தால் அவர் வருத்தப்படுவார்; கோபிப்பார் என்று பயந்தாள்.

பண்டாரங்களுக்கு உணவு சமைத்துப் பரிமாறுகிற தொந்தரவிலிருந்து மீள வேண்டும் என்று பல நாள்களாக அவள் யோசித்து வந்தாள். ஒருநாள் அவளுக்கு ஓர் உபாயம் தோன்றியது. அதன்படி, நடை முறைப்படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, சிவபக்தரான ஒரு பண்டாரம் அவள் வீட்டுக்கு வந்தான்.

“தாயே! செட்டியார் என்னை இங்கே அனுப்பி வைத்தார். நான்கூட ஏதும் கேட்கவில்லை. அவரே கூப்பிட்டுச் சொல்லியனுப்பினார். நான் சீக்கிரம் போகவேண்டும். உங்கள் திருக்கரத்தால் அன்னம் அளியுங்கள்” என்று கேட்டான் அந்தப் பண்டாரம்.”

“அப்படியா? செட்டியார் தான் அனுப்பினாரா?” என்று ஏதோ சிந்தித்துக் கொண்டே கேட்டாள் அவள்.

“ஆமாம் தாயே! இந்தச் சிவபக்தன் பொய் சொல்ல மாட்டான்! செட்டியார், கடையிலே சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு வீட்டுக்கு வர நேரமில்லை. அதனால்தான் எனக்கு விலாசம் சொல்லியனுப்பினார். போடு தாயே! நான் போகவேண்டும்” என்று அவசரப்படுத்தினான். அவள் “போடுகிறேன்… போடுகிறேன்…! நன்றாகப் போடு கிறேன். சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். இதோ.. இப்போதே எல்லாம் தயார் செய்துவிடுகிறேன்… இதோ வருகிறேன்” என்று உள்ளே சென்று, ஒரு பாயைக் கொண்டுவந்து திண்ணையில் விரித்தாள்.

“இங்கே திண்ணையில் அமர்ந்து சற்றுச் சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள். சில நிமிஷங்களில் அன்னம் படைத்து விடுகிறேன்” என்று உள்ளே போனாள் செட்டியார் மனைவி. பண்டாரம் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு திண்ணையில் கம்பீரமாக அமர்ந்து விட்டான்.

செட்டியார் மனைவி வீட்டு முற்றத்தை நன்றாய்ப் பெருக்கினாள். சாணத்தைக் கரைத்துத் தெளித்து மெழுகினாள். தன் கால்களையும் கைகளையும் சுத்தம் செய்தாள்.

பிறகு, நெல்லைக் குத்துகிற உலக்கையை ஒரு மூலையிலிருந்து எடுத்து வந்தாள். அதை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து ஈரம் போகத் துடைத்தாள். அதற்கு விபூதியைப் பூசினாள். தன் நெற்றியிலும் பூசிக் கொண்டாள்.

அந்த உலக்கையை நடு வாசலில் கிடத்தினாள். அதற்கு எதிரே தரையில் விழுந்து மூன்று முறை வணக்கம் செய்தாள். ஏதோ மந்திரங்களை மெல்லிய குரலில் முணுமுணுத்தாள். மீண்டும் அந்த உலக்கையை நன்றாகத் துடைத்தாள். பழையபடி முன்பிருந்த மூலையிலே கொண்டுபோய் சாத்தினாள்.

திண்ணையில் அமர்ந்திருந்த பண்டாரம் அவள் செய்வதையெல்லாம் உற்றுக் கவனித்துக் கொண்டிருந் தான். அவள் அவன் எதிரே வந்ததும், “இது என்ன பூஜையம்மா? இப்படி ஒரு பூஜையை நான் இதுவரை எங்கும் கண்டதில்லையே!” என்று கேட்டான்.

“ஐயா! இது எங்கள் குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு செய்கின்ற பூஜை. இது உண்மையில் விசேஷமான பூஜைதான். அதன் மகிமையை இன்னும் சற்று நேரத்தில் நீங்களே காணப் போகிறீர்கள்” என்றாள் அவள்.

அவள் அப்படிக் கூறிவிட்டு, உள்ளே போகும் போது பண்டாரத்தின் செவிகளில் விழும்படியாகவே “இந்த உலக்கை பூஜை உன் தலை மேலே தானே வந்து விடியும்” என்று முணுமுணுப்பாகச் சொல்லிக் கொண்டு போனாள். அவன் காதுகளில் விழ வேண்டும் என்றே அப்படிப் பேசினாள்.

அந்த வார்த்தை அவன் செவிகளில் விழுந்ததும் ‘அந்த உலக்கையாலே தன் தலையிலே அடிக்கப் போகிறாள்; அதுதான் உலக்கை பூஜைபோல் இருக்கிறது’ என்று பயந்து நடுங்கினான்.

அவள் உள்ளே ஓர் உள்ளே ஓர் அறைக்குள் போனதும், அதுதான் சமயம் என்று அவன் தப்பித்தேன், பிழைத் தேன் என்று அங்கிருந்து ஓட்டமாக ஓடிப் போனான்.

சற்று நேரத்தில் செட்டியார் கடையிலேயிருந்து திரும்பி வந்தார். தாம் அனுப்பி வைத்த பண்டாரம் எங்கே என்று மனைவியைக் கேட்டார்.

அவள் அவருக்கு உண்மையைச் சாமர்த்தியமாக மறைத்துச் சாதுரியமாகப் பதில் சொன்னாள்.

“அந்தப் பண்டாரம் இங்கே வந்தார். நான் அன்போடு வரவேற்றேன். அவர் உலக்கையைத் தரவேண்டுமென்று கேட்டார். நான் செட்டியார் வந்து விடுவார், அவர் வந்ததும் அவரைக் கேட்டு விட்டுத் தருகிறேன் என்றேன். பாயை விரித்துப் போட்டு அமரும் என்றேன், அவர் ஏதோ கோபமாக உடனே இங்கிருந்து போய்விட்டார்!”

மனைவி சொன்ன பதிலைக் கேட்டதும் கட்டுக் கடங்காமல் கோபம் வந்து விட்டது செட்டியாருக்கு.

“அடி அற்பப் பெண்ணை! அந்தப் பண்டாரம் உலக்கையை எதற்காகக் கேட்டாரோ? நான் தானே அனுப்பி வைத்தேன். கேட்டால் கொடுக்க வேண்டியது தானே! என்னை என்ன கேட்டு விட்டுத் தருவது? பாவம்… அந்தச் சிவபக்தர் எவ்வளவு கோபத்தோடு போனாரோ! சரி… சரி… கொண்டு வா… அந்த உலக்கையை! நான் போய் இதைக் கொடுத்துவிட்டு அவரை அழைத்து வருகிறேன்” என்று கூவினார் செட்டியார்.

மனைவி உடனே உலக்கையைக் கொண்டு வந்தாள். அதைக் கையில் எடுத்துக் கொண்டு செட்டியார் அந்தப் பண்டாரத்தைத் தேடிக்கொண்டு ஓடினார்.

சற்று தூரத்தில் மெதுவாகப் போய்க் கொண்டிருந்த அந்த பண்டாரத்தைப் பார்த்து விட்டார் செட்டியார். உரக்க, உரக்க, கூவியழைத்துக் கொண்டே பரக்கப் பரக்க ஓடினார்.

ஒரு தெரு முடுக்கில் சென்று திரும்பிப் பார்த்த பண்டாரம், செட்டியார் கையில் உலக்கையோடு தன் பின்னே ஓடி வருவதைப் பார்த்தான்.

“ஐயய்யோ! உலக்கை பூஜையை தலையிலே முடிக்க அந்தச் செட்டியாரே அதைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறாரே” என்று விழுந்தடித்துக் கொண்டு வேகமாக ஓடினான்.

பண்டாரத்தை எப்படியும் திருப்பி அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் செட்டியார் வேகமாக ஓட, அந்த உலக்கை அடியிலிருந்து தன் தலை தப்ப வேண்டுமே என்று பண்டாரம் அதி வேகமாக ஓடினான்.

எவ்வளவு ஓடியும் பண்டாரத்தைப் பிடிக்க முடிய வில்லை. அதற்கு மேலும் ஓட முடியவில்லை செட்டியாரால். அவரது தொந்தியும் தொப்பையுமான பருத்த உடல் அதிக நேரம் ஓட இடம் கொடுக்க வில்லை. அன்றைக்கு அந்தச் சிவபக்தருக்கு அன்னம் கொடுக்க முடியவில்லையே என்று சஞ்சலப்பட்டுக் கொண்டு அவர் வீட்டையடைந்தார்.

இதுதான் உலக்கை பூஜை. உங்களுக்கு ஆரூடம் சொன்ன அந்த வேதியனைப் பார்த்து, இப்படித்தான் உலக்கை பூஜை நடத்த வேண்டும். அப்புறம்தான் அவனுக்கு ஆசனோஷ்ணம் பிடிக்கும். அவன் நாசமா வான் குருவே! நீங்கள் கவலைப்பட வேண்டாம். எல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று தைரியம் ஊட்டினான் அசங்கதன்.

“நீ சரியான ஆளப்பா. மிகவும் வேடிக்கையாகப் பேசுகிறாய். ஆரூடக்காரன் ஆசன சீதம் என்றான் நீ என்னடாவென்றால் ஆசன உஷ்ணம் என்கிறாய். ஒரே குழப்பமாயிருக்கிறது!” என்றார் குரு.

‘ஐயா! நான் இப்போது வேடிக்கைகாகச் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கிறேன். அந்த ஆருடப் பிராமணன் சொன்னது வாஸ்தவமே. ஆசனத்தில் குளிர்ச்சி கண்டால் அது சாவுக்கு அடையாளம்தான். ஆனால் வேறு காரணத்துக்காக ஆசனம் குளிர்ந்து போவதும் உண்டு. அதைக் கவனித்து அறிய வேண்டும். தண்ணீரிலும் சேற்றிலும் விழுந்ததால் இருப்பிடம் குளிர்ந்தால் அது இறப்புக்கு அறிகுறியாகாது. தண்ணீர் பட்டு நனைந்து போவதில் அதிசயம் என்ன இருக்கிறது? ஆகவே நீங்கள் வேறு எதையோ எண்ணி வீணாகக் கலங்கிக் கொண்டிருக்க வேண்டாம். தண்ணீரிலோ, சேற்றிலோ விழாமலும் வேறு காரணங்களால் நனையாமலும் இருக்கும்போது ஆசனத்தில் சீதம் கண்டால், அப்போதுதான் உயிருக்கு ஆபத்து வந்துவிட்டது என்று அச்சப்பட வேண்டும். மற்றதற்கெல்லாம் பயந்து சாவது அபத்தம்” என்றான் அசங்கதன்.

அவன் அவ்வாறு சொன்ன வார்த்தைகள் குருசுவாமிக்கு மிகவும் ஆறுதலையளித்தன. அதற்குப் பின் அவர் பல நாள் ஓரளவு நிம்மதியாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

இறுதி யாத்திரை

ஒரு நாள் இரவு வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அதற்கு நடு ஜாம நேரத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார் பரமார்த்த குரு.

அந்த மடத்தின்மேல் கூரையிலே ஓரிடத்தில் சற்று ஒழுக ஆரம்பித்தது. மழைத்துளி குருவின் படுக்கையில் விழுந்து கொண்டிருந்தது. அவரது ஆசனத்துக்குப் பக்கத்தில் படுக்கையில் விழுந்த மழைத் துளிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஈரமாக்கிக் கொண்டிருந்தன.

நல்ல உறக்கத்தில் இருந்த குருவுக்கு மழை பெய்ததோ படுக்கையில் ஒழுகியதோ, ஏதும் தெரியாது மழை முற்றுமாக நின்றுவிட்ட போது மழைத்துளிகள் விழுவதும் நின்றுவிட்டன. ஆனால் படுக்கையில் ஈரம் போகவில்லை.

குருநாதர் தம்மை மறந்து குறட்டைவிட்டபடி படுக்கையில் உருண்டு புரண்டு படுத்துக்கிடந்தார். நனைந்திருந்த படுக்கை அவர் ஆசனத்துக்கு அருகே ஆடைகளில் ஈரத்தை ஏற்படுத்திவிட்டது.

‘ஜில்’லென்று உறைத்ததும் திடுக்கிட்டுக் கண் விழித்துக் கொண்டார் பரமார்த்தகுரு. ஜில்லிட்ட இடத்தில் தொட்டுப் பார்த்தார். அப்படியே திடுக் கிட்டுப் போய், எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

ஆசனத்தில் சீதமாகி இருக்கிறதே! ஆபத்து வந்து விட்டதே! என்ற அவதி அலைக்கழித்தது அவரை.

ஆரூடக்கார பிராமணன் சொல்லியிருந்த வார்த்தை களும் அசங்கதன் கூறிய வார்த்தைகளும் அவர் செவிகளில் போட்டியிட்டுக் கொண்டு ஒலித்தன.

“ஐயோ! எனக்குச் சாவு நெருங்கிவிட்டது.” என்று ஆசனத்தை அடிக்கடி தொட்டுப் பார்த்து வருந்தினார்.

குரு விழித்துக் கொண்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் சிஷ்யர்களும் ஒருவர் பின் ஒருவாக விழித்து எழுந்து, குருவின் அரற்றலைக் கேட்டு ஓடிவந்தார்கள்.

விஷயம் புரிந்தது அவர்களுக்கும். குருவின் இருப் பிடம் குளிர்ந்துவிட்டது. இனி அவ்வளவு தான் என அவர்கள் அழுது புலம்பினார்கள். அந்த சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர்களும் ஓடிவந்தார்கள்.

அப்போது குருவின் முகத்தில் பயமும் பீதியும் கலந்து, சவக்களையாகவே அவர்களுக்குத் தெரிந்தது. ஆகவே வந்தவர்களும், பரமார்த்த குருவுக்கு அந்திம காலம்தான் என்ற அந்த முடிவுக்கே வந்து விட்டார்கள்.

குருவை அக்கறையோடு விசாரித்தார்கள். அவரும் தமக்கு ஆசன சீதம் ஏற்பட்டுவிட்டதை மறைக்காமல் மறுக்காமல் சொல்லி மனம் புழுங்கினார். கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது அவருக்கு.

அடிக்கடி அவர் உதடுகள், ‘ஆசன சீதம் ஜீவன் நாசம்’ என்றே உச்சரித்துக் கொண்டிருந்தன.

அன்றிலிருந்து அவர் உடல் நிலை நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டே வந்தது. அவரால் வாயைத் திறந்து பேசக்கூட முடியாத அளவுக்குச் சோர்வும் சோகமும் கப்பிக் கொண்டன.

அவர் நிலையைப் பார்க்கப் பெறாதவர்களாய் சிஷ்யர்கள் ஐவரும் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருந்தார்கள்.

ஒரு நேரத்தில் பரமார்த்த குரு, ஆயாசமாக அயர்ந்து கண்களை மூடியிருந்ததைப் பார்த்து, அவர் உயிரையே விட்டுவிட்டார் என்று ‘ஓ’வென சிஷ்யர்கள் ஓலமிட்டுக் கதறினார்கள்.

“கடவுளே! எங்கள் குருநாதரை உன்னிடத்துக்குக் கூப்பிட்டுக் கொண்டாயா? எங்கள் தெய்வம் எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதா? குருவே! இனி உங்களை நாங்கள் எங்கே காண்போம், எப்படி காண்போம், என்று காண்போம்?” என்று தலையில் அடித்துக் கொண்டு, ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக்கொண்டு ‘ஓ’வென்று கூவி ஓயாமல் அழுது கிடந்தார்கள் சிஷ்யர்கள்.

பிறகு, சவ அடக்கத்திற்கு வேண்டிய சடங்குகளை மடமடவென்று கவனிக்க முற்பட்டார்கள். அந்த மடத்திலே ஒரு பெரிய தொட்டியிருந்தது. அந்தத் தொட்டி நிறைய நீரைக் கொட்டினார்கள். பரமார்த்த குரு சவமாகிவிட்டார் என்றே எண்ணி அவரைத் தண்ணீர்த் தொட்டியில் போட்டார்கள்.

ஐந்து சிஷ்யர்களோடு மேலும் பலர் சேர்ந்து அவர் உடலைத் தண்ணீரில் அமுக்கித் தேய் தேய் என்று தேய்த்துக் கழுவினார்கள். அவ்வாறு கழுவும்போது குருவுக்குச் சற்று மயக்கம் தெளிந்தது.

அந்த நேரத்தில்தான் மீண்டும் அவர் முகத்தைத் தண்ணீர்த் தொட்டியில் நன்றாக முக்கித் தேய்த்தார்கள். மயக்கம் தெளிந்தாலும், மூச்சுவிட முடியாமல் திணறினார் பரமார்த்த குரு.

கைகளையும் கால்களையும் பலர் சேர்த்து சேர்த்துப் பிடித்துக் கழுவிக் கொண்டிருக்கவே குருவினால் சைகைமூலம் கூடத் தாம் சாகவில்லை என்று காட்ட முடியாமல் போய்விட்டது.

கடைசியில் பாவம், பரமார்த்த குரு அநியாயமாகத் தண்ணீர்த் தொட்டியிலே மூச்சுத் திணறி வாழ்க்கையை முடித்துக் கொண்டார். சிஷ்யர்களும் சூழ்ந்து இருந்தவர் களும் தங்கள் அறியாமையினால் அவர் உயிரை எடுத்துவிட்டார்கள்.

பிறகு, அவர் உடலை நன்கு அலங்கரித்து, பூக்களால் தேரைப் போலச் செய்து, அதில் அமர்த்தி, அமர்க்களமாக இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார்கள். பெருந்திரளான மக்கள் பிரேத ஊர்வலத்தில் கவலையோடு கலந்து கொண்டனர்.

தாரைசங்கு, தப்பட்டை ஒலிமுழங்க பரமார்த்த குரு கடைசி யாத்திரை புறப்பட்டார். சிஷ்யர்கள் குலுங்கி குலுங்கி அழுதபடி, குருவைச் சுமந்து சென்றனர். பாடையைத் தூக்கிச் சென்ற பாதையெல்லாம் பூக்களைச் சொரிந்து கொண்டே சென்றார்கள்!

‘ஆசன சீதம் ஜீவன் நாசம்’ என்ற வாசகத்தையும் ஏதோ மந்திரோபதேசம் போல் அடிக்கடி சொல்லிக் கொண்டே சென்றார்கள்.

ஆழமாகத் தோண்டியிருந்த குழியிலே தங்கள் அருமையான குருநாதரை அடக்கம் செய்த்துவிட்டு, அடக்க முடியாத துயரத்தோடு நடக்க முடியாமல் தள்ளாடியபடி மடத்தை அடைந்தார்கள்.

பரமார்த்த குருவையும் அவரது பரம சிஷ்யர்களையும் பற்றி அந்தப் பக்கத்து மக்கள் காலம் காலமாகக் கதை கதையாக இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

– முற்றும் –

– பரமார்த்த குரு கதைகள், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *