குடியிருக்க ஓர் இடம் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 9, 2022
பார்வையிட்டோர்: 15,954 
 
 

நான் குடியிருந்த வீட்டைக் காலி செய்யும்படி வீட்டுக்காரன் வெகு கண்டிப்பாகச் சொல்லி மூன்று மாதங்களுக்கு மேலாகியும், நான் வீட்டைக் காலி செய்யக்கூடவில்லை. வேறு வீடு கிடைத்தால் அல்லவா காலி செய்வதற்கு? நானும் எங்கெல்லாமோ தேடிப் பார்த்துவிட்டேன்; எங்கேயும் வீடு காலியாவதாகத் தெரியவில்லை. எனவே, “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்களேன், தயவுபண்ணி” என்று தினம் பத்துத் தடவை வீட்டுக்காரன் காலில் விழுந்து கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தச் சமயத்தில் ஊரிலிருந்து வந்த என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு அபூர்வமான யோசனை சொல்லிக் கொடுத்தார். அதாவது, ‘மாஜிஸ்ட்ரேட் கோர்ட்’டுக்குத் தினம் போய் வந்தால், யாருக்கு நீண்ட நாள் சிறைவாச தண்டனை கிடைக்கிறதென்று தெரிந்து கொள்ளலாம் என்றும், அந்த ஆசாமியின் வீட்டுக்கு வாடகைக்குப் போய்விடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த யோசனை ரொம்பவும் சரியானதென்று எனக்கும் தோன்றியதால், நான் அன்று முதல் தினந்தவறாமல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போய் வரும் வழக்கத்தை ஆரம்பித்துக்கொண்டேன். நல்லவேளையாக, முதல் வாரத்துக்குள்ளாகவே நான் எதிர்பார்த்த பலனும் கிட்டிவிட்டது. ஆமாம்! ஒரு பாங்கியில் நுழைந்து கொள்ளையடித்த குற்றத்துக்காக வேலாயுதம் என்ற ஆசாமிக்கு இரண்டு வருஷக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் எனக்கு ஒரே குதூகலமாகிவிட்டது. ‘மாஜிஸ்ட்ரேட் நீடூழி வாழட்டும்!’ என்று அவரையும் வாழ்த்திவிட்டு, அங்கிருந்த ஒரு சிப்பந்தியை அணுகி, “கைதி வேலாயுதத்துடன் அவசரமாக ஒரு நிமிஷம் பேச வேண்டுமே!” என்றேன்.

“அதற்கென்ன! பேஷாகப் பேசுங்களேன்!” என்று அவர் என்னை அழைத்துக்கொண்டு போய் வேலாயுதத்தின் முன்னால் நிறுத்தினான்.

“வேலாயுதம்! உங்களுக்கு இம்மாதிரி தண்டனை கிடைத்ததைப் பற்றி நான் ரொம்பவும் வருத்தப்படுகிறேன்” என்று கண்ணில் நீரை வரவழைத்துக்கொண்டு கூறி னேன்.

ஆனால், அவன் சற்றுக்கூட மனம் கலக்கமடைந்தவனாகத் தெரியவில்லை. “தண்டனைஅடைந்த நானே சந்தோஷத்தோடு இருக்கும்போது நீங்கள் ஏன் சார் வருத்தப்பட வேண்டும்?’ என்று என்னைக் கேட்டான்.

எனக்கு அந்தக் கேள்வி மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கவே, “உங்களுக்கு என்னமாக சந்தோஷம் ஏற்படமுடியும்?” என்று கேட்டேன்.

“என்னைப்போல் நீங்களும் குடியிருக்க வீடு கிடைக்காமல் திண்டாடிவிட்டுக் கடைசியில் உங்களுக்கு இம்மாதிரி இரண்டு வருஷம் நிம்மதியாகக் குடியிருக்க ஒரு சிறை கிடைத்தால், அப்போது தெரியும் ஏன் சந்தோஷம் உண்டாகாதென்று!” என்றான்.

“அப்படியானால் காலி செய்ய உமக்கு வீடு எதுவும் இப்போது இல்லையா?” என்று கேட்டேன்.

“வீடு இருந்தால், நான் ஏன் சார் அநாவசியமாக ஒரு திருட்டுக் குற்றத்தில் வேண்டுமென்றே மாட்டிக்கொண்டு இங்கே வருகிறேன்? ஏன் சார் முழிக்கிறீங்க? உங்களுக்கும் வீடு அகப்படாமல் தவிக்கிறீர்களா, என்ன? அட! ஒன்றுக்கும் பயப்படாதீர்கள் சார்!” என்று அவன் எனக்குத் தேறுதல் கூறினான்.

– ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’. ( இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’ 25 ஏப்ரல் 1956 இல் காலமானார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *