கின்னஸில் கிச்சா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 3,129 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழ்ப் புத்தாண்டுக்கு டி.வி.யில் போட்ட ‘லிஃப்டில் மாட்டிக் கொண்டு கின்னஸில் இடம்பெற்ற’ மௌலியின் நாடகத்தை ரசித்த நமது கிச்சாவை, கின்னஸ் ஆசை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது! கின்னஸ் புத்தகத்தில் ‘அட, அட்லீஸ்ட் அச்சுப்பிழையாகவாவது தன் பெயர் இடம்பெறாதா…?’ என்ற ரீதியில் கிச்சாவுக்கு உண்டான அல்ப ஆசை, அன்று சாயங்காலத்துக்குள் கின்னஸ் புத்தகத்தின் அட்டைப் படத்தையே தான் எப்பாடுபட்டாவது அலங்கரித்து விடவேண்டும் என்ற அளவுக்கு வெறியாக மாறி விசுவரூபம் எடுத்தது. உடனடியாக, கி.உ. சாதனைகளை நிர்ணயிக்கும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள விரும்பிய கிச்சா, ‘கீப் ரெடி தி கின்னஸ் புக்… ஐ’யாம் கமிங் ஷார்ட்லி’ என்று எனக்குத் திருவல்லிக்கேணியிலிருந்து டெலிபோனில் டெலிகிராம் அடித்துவிட்டு, கூடவே வந்தும் சேர்ந்தான்.

கிச்சா கேட்ட அந்தப் பத்து வருடப் பழைய கின்னஸ் பதிப்பை இப்போது என் வீட்டில் தேடிக் கண்டுபிடிப்பது என்பது எக்ஸிபிஷனில் தொலைந்துபோன குழந்தையைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் கஷ்டமான காரியமாகப் பட்டதால், நைஸாக நான் ஜகா வாங்க, ‘நானே தேடுவேன்’ என்று ரெய்டுக்கு வந்த இன்கம்டாக்ஸ் ஆபீஸரின் ஆவேசத்தோடு அந்தப் புத்தகத்தைத் தேட ஆரம்பித்த கிச்சா சரியாக அரைமணி நேரத்தில், என் வீட்டார் காணாமல் போய்விட்டதாகக் கைகழுவி விட்டுவிட்ட எனது தாத்தாவின் வெள்ளிச் சுண்ணாம்பு டப்பா, என் தம்பி குழந்தைக்குக் கோயம்புத்தூர் அத்தை கொடுத்த கொலுசு, பத்து வருடங்களாகப் பூட்டியே கிடக்கும் மொட்டைமாடி ரூம் சாவி, பாட்டியின் பல்செட், இதுதவிர இரண்டு சவுரிகள், காபி ஃபில்டர், மூணு சக்கர சைக்கிளின் மூன்றாவது சக்கரம்… இப்படி ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட காணாமல் போன நானூத்தி முப்பது பொருள்களைக் கண்டுபிடித்து, கடற்கொள்ளைக்காரன் போல கொண்டு வந்து கொட்டினான். கொட்டிய பொருள்கள் மீது குப்புற விழுந்து நீச்சல் அடித்துத் தேடியதில், அந்த கின்னஸ் புத்தகமும் இருந்தது!

பெத்த பிள்ளையைப் பாலூட்டிச் சீராட்டி வளர்க்கும் தாயின் கரிசனத்தோடு ஏழு, எட்டு அடிக்கு விரல் நகம் வளர்க்கும் விவஸ்தைக் கெட்டத்தனம், முத்தமிட்டபடி வாரக்கணக்கில் போஸ் கொடுக்கும் போக்கிரித்தனம், பார்சல் பேப்பரைக் கிழியாமல் பிய்த்துப் பிரித்து எடுப்பதுபோல பூமாதேவி பொறுமையோடு ஆப்பிள் தோலை உரிக்கும் திறமை போன்ற வேலைவெட்டி இல்லாத மனிதர்களின் சாதனை முயற்சிகள் என அந்தப் புத்தகத்தில் போட்டிருந்தவை கிச்சாவுக்கு ஊக்கம் அளித்து உசுப்பிவிட்டன. கிச்சாவுக்கு வீரத் திலகம் இட்டு அவன் கின்னஸ் சாதனை படைக்க ஆசீர்வதித்த எச்சுமிப் பாட்டி, “இதெல்லாம் என்ன புடலங்காய் சாதனை! எம்பேரன் கிச்சா பொறந்த நாள்லேர்ந்து அஞ்சு வயசு வரை செஞ்ச சின்ன வயசு சாதனைகளைச் சொல்ல ஆரம்பிச்சா, கின்னஸ் மாதிரி சின்னஸ்னு ஒரு புத்தகம் போட வேண்டி வரும்’ என்று கூறியவள், கிச்சா படைத்த பாலகாண்டப் பிரதாபங்களைப் பட்டியல் போட ஆரம்பித்தாள்.

1955 ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் கின்னஸ் புத்தகம் பிரசுரமான அன்றுதான் நமது கிச்சா பிரசவமானான்.

இருபத்தைந்து பவுண்ட் இரண்டு அவுன்ஸ் எடையில் பிறந்த கிச்சா, கனமான குழந்தை என்ற சாதனை படைத்ததோடு, பிறந்த இரண்டாவது மாதத்திலேயே அவனுக்கு அரிசிப் பல் முளைக்க

ஆரம்பித்துவிட்டதால், சரியாக ஐந்தாவது மாதத்தில் பிரஷ்ஷால் தேய்க்கும் அளவுக்கும் கிச்சாவுக்குப் பெரிசு பெரிசாகக் கடைவாய்ப் பல், சிங்கப்பல் என்று முப்பத்திரண்டு பற்களும் முளைத்துவிட்டதாம்.

தவழ்தல், தத்தித் தத்தி நடத்தல் போன்றவற்றையெல்லாம் ஓரம்கட்டி விட்டு ஒரேயடியாக ஏழாவது மாதத்தில் உத்தரத்தில் கட்டிய தூளியிலிருந்து எழுந்து அதைப் பிடித்தபடி டார்ஜான் கணக்கில் ஆடி மேஜைக்குத் தாவி சேர் வழியாகத் தரைக்குக் குதித்து சமையல் அறைக்கு வந்து, ‘பாட்டி, பால் ரெடியா?’ என்று கிச்சா கேட்டது இன்றும் பசுமையாக நினைவில் இருப்பதாகப் பெருமையோடு கூறினாள் எச்சுமிப் பாட்டி.

‘இனி எல்லோரும் என்னை ‘கின்னஸ் கிச்சா’ என்று அழைக்கச் செய்வேன்’ என்று வீறுகொண்டு எழுந்தான் கிச்சா.

வெற்றிலை, சீவல், புகையிலை போட்டு வெகுதூரம் துப்புவதில் ஆரம்பித்து திருவல்லிக்கேணியிலிருந்து திண்டிவனம்வரை கை எடுக்காமல் கோலி ஆடிக்கொண்டே போகும் வரையில் கிச்சா தான் செய்யவிருக்கும் சாதனைகளைச் சொல்லச் சொல்ல… ஆயிரம் ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டும் அளவுக்குப் பக்கம் பக்கமான லெட்டரில் விடிய விடிய எழுதி கின்னஸின் லண்டன் அட்ரஸுக்குப் போட்டேன். அதிர்ஷ்ட வசமாக அப்போது இந்தியாவுக்கு வந்திருக்கும் ஒரு கின்னஸ் அதிகாரியை அடுத்த வாரமே அனுப்புவதாகவும் கிச்சாவைத் தயாராக இருக்கும்படியாகவும் லண்டனிலிருந்து பதில் தகவல் வந்தது.

சொன்னபடி வந்த கின்னஸ் அதிகாரியின் நேரடி மேற்பார்வையில் கிச்சாவின் அதிரடி கின்னஸ் சாதனைகள் ஒரு சுபயோக சுபதினத்தில் ஆரம்பமானது.

முதல் சாதனையாக எச்சுமிப் பாட்டி வார்த்து வார்த்துப் போடும் தோசைகளை விடாமல் தின்று காட்டுவதாகக் கூறிவிட்டு, ஏற்கெனவே ‘தோசை’ என்றால் என்ன என்று புரியாமல் குழம்பிக் கிடந்த கின்னஸ் அதிகாரியிடம், ‘சவுத் இண்டியன் ஆம்லெட் வித்அவுட் எக்’ என்று கூறி மேலும் குழப்பிய கிச்சா, திடீரென்று நினைவுக்கு வந்தவனாக அவரிடம், ‘சாதாவா? மசாலாவா? கின்னஸுக்கு எது ஓகே?’ என்று

கேட்டு பாயைப் பிறாண்ட வைத்தான். பின்னர், எச்சுமிப் பாட்டி அரை ” மணியில் வார்த்துப் போட்ட ஐம்பது தோசைகளை, தொட்டுக்கொள்ள சட்னி, மிளகாய்ப் பொடிகூடப் போட்டுக் கொள்ளாமல் அப்படியே சாப்பிட்டுவிட்டு ‘போதுமா’ என்பதுபோல அவரைப் பார்த்தான். ஐம்பது தோசை சாப்பிட்ட கிச்சாவைவிட அரை மணியில் அத்தனை தோசைகளை வார்த்துப் போட்ட எச்சுமிப் பாட்டியின் பெயர்தான் கின்னஸில் வர வாய்ப்பு இருக்கிறது என்று அதிகாரி கூறி, கிச்சாவின் முதல் சாதனையை நிராகரித்தார். நொந்துபோன கிச்சா, சத்தத்தை ‘டெஸிபெல்’ அளவில் காட்டும் மீட்டரை ரெடியாகக் கையில் எடுத்து வைத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு கின்னஸ் ஏப்பம் விட்டுக்காட்ட முடிவு செய்தான். ‘ரெடி… ஸ்டார்ட்’ என்று அதிகாரி சொன்னதும், அதிக அளவு தோசை தந்த அஜீரணத்தை லண்டனில் உள்ள மேலதிகாரிகளுக்கே கேட்கும் அளவுக்கு அசுரத்தனமாக ஒரு ஏப்பம் விட்டான். கிச்சாவின் துரதிர்ஷ்டம், வாசலில் கட்டிய எருமை மாடு அந்தச் சமயம் பார்த்து கழுநீர் தண்ணியைக் குடித்த குஷியில் போட்ட ‘யம்மாவ்’ சத்தம், கிச்சாவின் ஏப்பச் சத்தத்தை ‘அஸ்வத்தாமா அதஹ… குஞ்சரஹ’வாக அமுக்கியது.

விக்கிரமாதித்த கிச்சாவை மீண்டும் முயற்சிக்குமாறு கின்னஸ் அதிகாரி கேட்டுக் கொள்ள, கிச்சா விட்ட இரண்டாவது ஏப்பம் பலவீனமாக அபலைப் பெண்ணின் விசும்பலாக வெளிப்பட, அவனது இரண்டாவது சாதனையும் பிசுபிசுத்தது. பத்தாத குறைக்குக் கிச்சாவை வெறுப்பூட்டுவதுபோல அந்த அதிகாரி ‘வாசல் எருமை’யின் சொந்தக்காரக் கோனாரிடம் அதன் குலம் கோத்திரங்களை விசாரித்துவிட்டு, ஆப்பிரிக்கக் காட்டு எருமையைவிட நான்கு ஐந்து டெஸிபெல் கூடுதலாகக் கனைத்த கோனாரின் எருமைக்கு கின்னஸ் புத்தகத்தில் கால்நடைகள் அத்தியாயத்தில் இடம் தருவதாகக் கூறிவிட்டு கிச்சாவை ‘நெக்ஸ்ட்’ என்ற ரீதியில் நக்கலாகப் பார்த்தார்.

அடுத்ததாக, கின்னஸ் அதிகாரியைப் பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றான் கிச்சா. பெருமாள் சந்நிதியில் பத்து தரம் விடாமல் அங்கப்பிரதட்சணமாக உருண்டு சுற்றி அசத்திக் காட்டி கோயிலைவிட்டு வெளியே வந்த கிச்சாவை, பழிவாங்குவதுபோல படபடக்கும் வெயிலையும் தகிக்கும் தார்ரோட்டையும் பொருட்படுத்தாமல் ஒருவன் ‘கோவிந்தோ’ போட்டபடி திருவல்லிக்கேணியையே அங்கப்பிரதட்சணமாகச் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து வியந்த கின்னஸ் அதிகாரி, தனது டைரியில் ‘அங்கப்பிரதட்சணம்‘” என்பதற்கு எதிராக சற்று முன்பு எழுதிய கிச்சாவின் பெயரை ஆக்ரோஷமாக அடித்துவிட்டு, அந்த இடத்தில் ‘கோவிந்தோ’ என்று எழுதிக் கொண்டார்.

உடனே கிச்சா, ‘இந்த கோவிந்தா என்ன பெரிய பிரமாதம்… இதைவிட நான் ‘அங்கப்பிரதட்சணிங்’ சாதனை செஞ்சு காட்டறேன் பாருங்க’ என்று தன்னுடைய ஃபுல் கைச் சட்டையைச் சுருட்டி சவால் விட்டான். அது என்ன ‘அங்கப்பிரதட்சணிங்’ என்று அதிகாரி குழம்ப, ‘கடற்கரையில் ஜாகிங், வாக்கிங் போற மாதிரி அங்கப்பிரதட்சணிங்’ என்று விளக்கம் தந்தான் கிச்சா. கின்னஸ் அதிகாரியை அடுத்த நாள் அதிகாலை (அதி இருட்டு?) நேரத்தில் கடற்கரைக்கு அழைத்துப் போனான். போட்டிருந்த பாண்ட், சட்டையோடு பிளாட்பாரத்தில் படுத்து அண்ணா சமாதியிலிருந்து தன் அங்கப்பிரதட்சணத்தைத் தொடங்கினான். கடலில் குளிக்கப்போகும் ஏகப்பட்ட எருமை மாடுகளைப் பார்த்துப் பயந்து நடுங்கியவாறே கின்னஸ் அதிகாரியும் கூடவே நடந்து வந்தார்.

கடற்கரையில் அதிவேகமாக வாக்கிங் போகும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பல வி.ஐ.பி.க்கள், இருட்டில் பிளாட்பாரத்தில் உருண்டு வரும் கிச்சாவின் உருவம் கண்ணுக்குத் தெரியாமல் கால் தடுக்கிக் கீழ விழ, ஏகக் குழப்பமாகி வேடிக்கை பார்க்கக் கூட்டம் சேர்ந்து அங்கு ‘டிராஃபிக் ஜாம்’ ஆனது. ஒரு கட்டத்தில் போலீஸ் வந்து பப்ளிக் பிளேஸில் பிரச்னை உண்டாக்கியதாக அஞ்சாறு செக்ஷன் பேர்களைச் சொல்லி கிச்சாவின் மீது குற்றம்சாட்டி கிச்சாவை எழுப்பி கட்டாயமாக இழுத்துச் செல்ல, கிச்சாவின் ‘அங்கப்பிரதட்சணிங்’ ‘அரைகுறை பிரதட்சணிங்’ ஆக முடிவு பெற்றது.

வெற்றிலை, சீவல்,புகையிலை குதப்பி எச்சிலை வெகுதூரம் துப்பிக் காட்டிச் சாதனை படைக்க எண்ணி, வீட்டுத் திண்ணையில் இருந்து கீழே விழுந்துவிடும் அளவுக்கு எம்பி, நாபிக் கமலத்திலிருந்து உத்வேகத்தை நாக்குக்குக் கொண்டுவந்து உதடுகளை அழகு காட்டுவதுபோல கோரமாகக் குவித்து கிச்சா காறித் துப்பிய புகையிலைச் சாறு ஆல்மோஸ்ட் ‘எச்சில் துப்பல் கின்னஸ் சாதனையை முறியடிக்கும் சமயத்தில், அசம்பாவிதமாக, அங்கு வந்த மணவாள ஐயங்காரின் மயில்கண் வேட்டியில் கறை போட்டது.

‘பழிக்குப் பழி… ரத்தத்துக்கு ரத்தம்’ டைப் மணவாள ஐயங்கார் ‘புகையிலைக்குப் புகையிலை’ என்று முடிவு செய்து சாவகாசமாக வெற்றிலை, சீவல் புகையிலை போட்டு நாக்கு உதிரும் அளவுக்கு நாராசமாகக் குறிவைத்துத் துப்ப, உமிழ்ந்த புகையிலைச் சாறு குங்குமம் இட்டது போல கிச்சாவின் நெற்றியில் சிவப்பாக ஒட்டிக் கொண்டது. மணவாள ஐயங்காரின் துல்லியமான துப்புதலுக்கு கின்னஸ் ஒப்புதல் அளிப்பதுபோல அந்த அதிகாரி கைதட்டி ஆரவாரம் செய்தது கிச்சாவுக்கு வயிற்றெரிச்சலைத் தந்தது.

இப்படியாக அந்த ஒரு வாரத்தில், ஒரே சமயத்தில் பம்பரம், கில்லி, கோலி விளையாடுதல், வேட்டியை விடாமல் மடித்துக் கட்டி, அவிழ்த்து மறுபடி மடித்துக் கட்டி என்று ஏழு மணிநேரம் செய்து காட்டுதல், போட்ட சொக்காய் பனியன் சொட்டுகூட நனையாமல் ஷவரில் தலைக்கு மட்டும் குளித்தல், கால்பிடிப்பு பிய்ந்துபோன சிங்கப்பூர் செருப்பைப் போட்டுக் கொண்டு செருப்பு நழுவாமல் அதிவேகமாக நடத்தல் என்று ஐநூறுக்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைக்கான முயற்சிகளை அந்த அதிகாரிக்குச் செய்து காட்டினான் கிச்சா.

அதையெல்லாம் கர்மசிரத்தையாகக் குறித்துக் கொண்ட அவர், ஊருக்குப் போய் லெட்டர் போடுவதாக, பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரர் போல சொல்லிவிட்டு லண்டன் போனார்.

செய்து காட்டிய ஐந்நூறுக்கும் மேற்பட்ட அயிட்டங்களில் ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்று கின்னஸில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த கிச்சாவுக்குப் போன வாரம் லண்டனிலிருந்து கடிதம் வந்தது. வந்த கின்னஸ் அதிகாரி கடிதத்தில், ‘தாங்கள் செய்து காட்டிய சாதனை முயற்சிகளை மேலிடத்துக்கு விவரமாகக் குறிப்புகளோடு காட்டினேன். தங்களது முயற்சிகள் எதுவுமே கின்னஸ் புத்தகத்தில் போடும் அளவுக்கு உருப்படியான அயிட்டங்கள் அல்ல என்று மேலிடம் முடிவுசெய்ததை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இருந்தாலும் கின்னஸில் இடம்பெற வேண்டும் என்ற ஒரே லட்சியத்துக்காக உலகில் இதுவரை யாரும் தங்களைப் போல ஐந்நூறுக்கும் அதிகமாக முயற்சிகளை மேற்கொண்டதில்லை. தங்களுடைய இந்த லட்சிய வெறியையே ஒரு மாபெரும் கின்னஸ் சாதனையாக மேலிடம் கருதுகிறது. அந்த வகையில் உங்கள் பெயர் கின்னஸில் இடம்பெற மேலிடம், கின்னஸ் கமிட்டிக்கு உங்கள் பெயரைச் சிபாரிசு செய்துள்ளது. மற்ற விவரங்கள் அடுத்த கடிதத்தில்’ என்று எழுதியிருந்தார்!

கின்னஸில் இடம்பெறுவதற்காக ஒரு வாரம் செய்த முயற்சிகள் தோல்வியுற்று முட்டாளான தன்னை நினைத்து அழுவதா, இல்லை, முயன்றதையே சாதனையாகக் கருதி கின்னஸில் போட சிபாரிசு செய்த அவர்களை எண்ணிச் சிரிப்பதா என்று கிச்சாவுக்குச் சுத்தமாகப் புரியவில்லை!

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *