பெங்களுரில் இருந்து கார் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறது. டெவேங்கட கிருஷ்ணனை என்னோடு டூருக்கு அழைத்தமைக்காகப் புதிதாக ஒரு ஜோடி செருப்பு வாங்கி என்னையே அடித்துக் கொள்ள வேண்டும். போட்டிருக்கும் பழைய ஜோடியால் ஏற்கனவே அடித்துக் கொண்டாயிற்று.
சுத்தியல் பிடித்தவன் கையும், சொறி சிரங்கு வந்தவன் கையும் சும்மாவே இருக்காது என்பார்கள். புதிதாகக் கார் வாங்கியவன் வாயும் சும்மா இருக்காது என்று இனிமேல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்படா கார் வாங்குவோம் என்று தயாராகக் காத்திருந்த என் மனைவி சுந்தரி, (சத்தியமாகக் காரணப் பெயரில்லை) உடனே மளிகைக் கடை ரோக்கா போல பிள்ளையார் சுழி போட்டுத் துவங்கி ஒரு பெரிய லிஸ்ட்டே கொடுத்து விட்டாள்.
1. டிரைவ்-இன் ரெஸ்ட்டாரெண்ட், 2 டிரைவ்-இன் சினிமா தியேட்டரில் படம், 3. கடற்கரை, 4. மாங்காடு அம்மன் தரிசனம். 5. நட்சத்திர அந்தஸ்து பெற்ற வி.ஜி.பி. தங்கக்கடற்கரை, 6. விமான நிலையம், 7. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, 8. பெங்களூர் டூர்.
“ஏண்டி இதெல்லாம் என்ன ஏதாச்சும் குறுக்கெழுத்துப் போட்டி விடைகளா?” என்ற போது அவளுக்குக் கோபம் வந்து முகம் இன்னும் அசிங்கமாகி விட்டது.
“விளையாடறீங்களா? கார் வாங்கினதும் எங்கெங்கே போகலாம்னு நான் போட்டு வெச்சிருக்கிற பிளான் இது.”
“பெரிய என்ஜினியர் பிளான் போடுகிறாளாம். பெட்ரோல் செலவுக்கு யார் அழுவது? புதுசா கார் வாங்கியிருக்கேன் மாமா” என்று காட்டியதும், என் மரியாதை தர வேண்டாத மாமனார் என்னமோ சந்தையில் மாடு வாங்குவது போல சுற்றி வந்து பார்த்து, கதவுகளைத் திறந்து பார்த்து, பெயிண்ட் உறுதியாய் இருக்கிறதா என்று சுரண்டிப் பார்த்து, சின்னக் குழந்தை போல ஹாரன் அடித்துப் பார்த்து கடையில், இப்ப வர்ற தயாரிப்புல தரம் இவ்வளவு தான் எதிர்பார்க்க முடியும் என்றார்.
எனக்கு எரிச்சலென்றால் எரிச்சல். என்னவோ இவர் வீட்டுக் கொட்டடியில் உரித்த தேங்காய் மட்டைகளைப் போல கார்களைக் குவித்து வைத்திருப்பது போல என்ன ஒரு அகம்பாவம். எனக்குத் திருமணமாகி பன்னிரெண்டு வருஷமாகப் பார்க்கிறேன். அதே சைக்கிள், சீட் கவர் கிழிந்து தொங்கும். டயருக்கடியில் வைத்து நசுக்க எலுமிச்சைப் பழம் கூட வாங்கித் தரவில்லை . இதில் பேச்சு மட்டும் கொடிகட்டிப் பறக்கும்.
ஆனால் இந்தக் குமுறல்களை எல்லாம் சுந்தரியிடம் சொல்ல முடியாது. உடனே ரவுடி சுந்தரியாகி விடுவாள்.
சட்டையைப் பிடிக்காத குறையாக சண்டை போடுவாள். என்றைக்கோ ஒருநாள் என் அம்மா வெள்ளெழுத்து தடுமாற்றத்தால் காப்பிப் பொடிக்கு பதிலாக மூக்குப் பொடியைப் பாலில் போட்டுவிட்ட ஒரு சம்பவத்தை எடுத்துக் கொள்வாள். ஷேக்ஸ்பியர் கொட்டேஷன் போல அதை வைத்துக் கொண்டு பரம்பரை முழுக்க நாறடித்து பேசுவாள். எனவே …
“இவ்வளவு பெரிய லிஸ்ட் போட்டுருக்கியே. இந்த வருஷத்துக்குள்ளே நடக்கற காரியமா இது. பெட்ரோல் எவ்வளவு செலவாகும் தெரியுமா?”
“என்னது, இந்த வருஷமா? இதெல்லாம் இந்த மாசத்துக்கு லிஸ்ட் அடுத்த மாசத்துக்கு வேற லிஸ்ட் தயார் பண்ணிட்டிருக்கேன். யானை வாங்கிட்டு அங்குசம் வாங்கத் தயங்கினா எப்படி?”
“அங்குசம் ஒரு தடவை வாங்கினால் போதும்டி. பெட்ரோல் அடிக்கடி போடணும். ஓட்ட ஓட்ட தீர்ந்துடும்.”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. ரேடியோல விளம்பரம் மட்டும்தான் கொடுக்கலை. மத்தபடி பக்கத்து வீட்ல, எதிர்த்த வீட்ல, என் சொந்தக்காரங்ககிட்டே எல்லாம் லிஸ்ட்டையே காட்டிச் சொல்லிட்டேன். இது என் மானப் பிரச்சினை.” “எனக்குப் பணப் பிரச்சினைடி.” வேணும்னா உங்க வாட்சை வித்துடலாமா? அதான் காருக்குள்ளேயே ஒரு எலெக்ட்ரானிக் வாட்ச் இருக்கே. அதுல டைம் பார்த்துக் கிட்டாப் போச்சு.”
“ஆபீசுக்குள்ளே போறப்ப அதைக் கழட்டி எடுத்துக்கிட்டுப் போகச் சொல்றியா?”
“அதெல்லாம் தெரியாது. நாம் லிஸ்ட்படி எல்லா இடத்துக்கும் போறோம்.”
பேட்ஸ்மேன் எல்.பி.டபிள்யூ. இல்லை எப்படி வேண்டுமானாலும் கத்தட்டுமே. அம்ப்பயர் விரலை உயர்த்தி அவுட் என்று சொல்லிவிட்டால் அவுட்தானே?
என் வீட்டு அம்ப்பயர் தீர்மானமாக முடிவெடுத்ததும் நான் மொனமாக ஆபீஸ் என்கிற பெவிலியனுக்குத் திரும்பினேன்.
நான், சுந்தரி, என் இரண்டு வாண்டுகளுடன் லிஸ்ட்டில் ஏழு வரைக்கும் பதினைந்து நாட்களில் டிக் செய்து முடித்தோம். என் போனஸ் பணம் சோப்புக் கட்டி போல கரைந்து ஒல்லியானது.
“எப்பங்க லிஸ்ட்ல எட்டாவது அயிட்டத்தை டிக் பண்றோம்?”
இரண்டு நாட்களுக்கு முன்பாக இரவில், குறை வெளிச்சத்தில், கட்டிலில், என் அருகில், மெல்லிசான நைட்டியில் என் சுந்தரி கேட்டாள். சாகசக்காரி. சூழ்நிலை அறிந்து சாதிப்பவள். லைட் அண்ட் ஷேட் எஃபெக்டில் சுந்தரி கூட அழகாய் தெரிகிற நேரத்தில் கேட்டால் நோ’ என்கிற பதிலுக்கே இடம் ‘நோ’.
“வர்ற சனி, ஞாயிறு போகலாம் சுந்தரி. வெள்ளி சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சு வந்ததும் புறப்படலாம். ஆனா… பெங்களுர் பயணம். அதனால பெட்ரோல் செலவு அதிகமாகும். கார்ல அஞ்சி பேர் வரைக்கும் போகலாம். இன்னொரு ஃபேமிலியோட சேர்ந்து போனா ஜாலியாக இருக்கும். கம்பெனிக்கு கம்பெனியாச்சு. காசும் பாதி ஷேர் கணக்குப் பண்ணி கறந்துடலாம்” என்றேன்.
“ஐடியாங்க” என்று பல் குத்த முத்தம் தந்தாள். முதலிரவுக்கப்புறம் நானாக ஒரு தடவைகூடக் கேட்டதே இல்லை. சன்ஷேட் மாதிரி துருத்தின் பல்லோடு முத்தம் பெற்றவர்களுக்குத்தான் சுகமான சுருக் தெரியும்.
எந்த ஃபேமிலியை அழைக்கலாம் என்று விவாதிக்கப்பட்டது. எடுத்த எடுப்பில், “உங்க பக்கத்து சொந்தக்காரங்க யாரும் வேணாம்!” என்று வீட்டோ பவரை வீசி வாயடைத்து விட்டு அவள் பக்கத்து சொந்தக்காரர்களாக அலசத் துவங்கினாள்.
அவ வாயாடி, பாத்ரூமுக்குள்ளேர்ந்து கூட பேசிக்கிட்டே இருப்பா. வேணாம். இவ தின்னிப் பண்டாரம். மத்தவங்களுக்குக் கொடுத்தாலும், பரவாயில்லை. தானே திம்பா. இவ வேணாம். அவ ரொம்ப குண்டு. உணபேர் இதை வகைத் தாவரம் இடத்தை அடைச்சுக்குவா. ஒவ்வொரு தடவை அவ இறங்கி வர்றதுக்குள்ளே நாம் அந்த இடத்தைப் பார்த்துட்டே வந்துடுவோம். வேணாம். இவ தூங்குமூஞ்சி. சாய்ஞ்சி என் தோள்ல விழுவா, ஜாக்கெட் எல்லாம் எண்ணெய் ஆய்டும். வேணாம்….
இப்படியாக சுந்தரிக்கு யாரையும் பிடிக்காமல் போய், பார்ட்னர் குடும்பத்தை தேர்வு செய்யும் முழுப் பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது – ஒரே ஒரு நிபந்தனையோடு, அது – அவர்கள் என் பக்கத்து சொந்தக்காரர்களாக இருக்கக் கூடாது.
இந்தக் காலகட்டத்தில் தான் சலூனில் நான் என் பழைய நண்பன் வேங்கட கிருஷ்ணனைச் சந்தித்தேன். டோக்கன் நம்பர் என்று எதுவும் தரப்படவில்லை என்றாலும் முன்னால் வந்து சேர்ந்த வரிசையில் அவன் நான்காவது நபராகவும், நான் ஐந்தவாது நபராகவும் இருந்தோம்.
“இங்க உக்காந்துகிட்டிக்கிறதுக்கு வா ஒரு காபி சாப்பிட்டுட்டு வரலாம்” என்றான் வெங்கி. அப்படித்தான் அழைப்பது. காபி சாப்பிட்டபடி என்னமோ என் மனசை எக்ஸ்ரே எடுத்தவன் மாதிரி வெங்கி சொன்னான். “லீவு விட்டாச்சா? ரெண்டு நாளைக்காவது எங்கேயாச்சும் டூர் அழைச்சுட்டுப் போங்கன்னு பொண்டாட்டியும் பசங்களும் தொணப்பறாங்க! ரயில்லயோ, பஸ்லயோ போனா பெரிய அவஸ்தை மூடே போய்டும். பிரைவேட் டாக்ஸி எடுத்துட்டுதான் போகணும். எவ்வளவு ஆகும்னு விசாரிச்சா மயக்கம் போட்டு விழற மாதிரி சார்ஜ் சொல்றான். என்ன பண்றதுன்னு தெரியலை.”
“எங்க போறதுக்கு பிளான் போட்டே?”
“ரெண்டு நாளைக்கு எவ்வளவு ஊர் போக முடியும்? சும்மா பெங்களூர் மட்டு போய்ட்டு வரலாம்னு நினைச்சேன்.”
ஆகா! பார்ட்டி கிடைத்தது!
வெங்கி, நீ கேட்டதால் எனக்க ஒரு யோசனை வருது. நான் புதுசா கார் வாங்கியிருக்கேன். ரெண்டு ஃபாமிலியா போய்ட்டு வந்துடலாமா? வாடகை எல்லாம் வேணாம். பெட்ரோல் செலவை மட்டும் ஷேர் பண்ணிக்கலாம். என்ன சொல்ற?”
“வொண்டர்ஃபுல்” என்ற வெங்கி வெளிநாட்டு அதிபரை ஏர்போர்ட்டில் வழியனுப்பும் நம் பாரத பிரசிடெண்ட் போல் இதமாக என்னைத் தழுவி விலகினான். வெங்கிக்கு ஒரே ஒரு மனைவி. இரண்டே இரண்டு குழுந்தைகள். ஆக, பயணத்தில் நான்கு பெரிசுகள், நான்கு சிறிசுகள், நான் டிரைவர் ஸீட்டில் அமர, மிச்ச இடம் மற்றவர்களுக்கு தாராளம் என்று குதூகலித்தாள் சுந்தரி.
பயணத் திருநாள் வந்தது. பயணத்தேர் மின்னலடித்து நின்றது. வெங்கி ஆட்டோவில் வந்து இறங்கியபோது திக்கென்றது. அவன் மனைவி, குழந்தைகள் தவிர ஒரு தாத்தா கைத்தடியுடன் இறங்கினார்.
“என் மாமனார்டா, ரிடையராகி இப்ப எங்களோட தான் இருக்கார்” என்று அறிமுகப்படுத்த நான் கட்டாயமாகச் சிரித்தேன். என் மனைவி தனியாய் அழைத்துப் பேச , “என்ன பண்றது சுந்தரி? பொண்டாட்டி, குழுந்தைங்களோட மட்டும்தான் வருவான்னு நினைச்சேன். சரி, அழைச்சுட்டு வந்துட்டான். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.” என்றேன்
வெளியே வந்த நான், வெங்கி, தூள்டா, ஒரே சூட்கேஸ்ல குடும்ப மொத்தத்துக்கும் வேண்டியதை அடிக்கிட்டியே” என்றேன்.
“கிழிஞ்சது போ. ஆறு பெட்டியையும், டிக்கில வெச்சிட்டேன்” என்றான்.
வீட்டைப் பூட்டிக் கொண்டு புறப்பட்டதும், “மைலாப்பூர் போய்ட்டுப் போய்டலாம்” என்றான் வெங்கி.
“எதுக்கு”
“என் தங்கச்சி ஈஸ்வரியையும் அவ புருஷனையும் அங்கே தான் பிக்கப் பண்ணிக்கிறதாப் பேச்சு”
“என்னப்பா இது. இடம் எங்கே இருக்கு?”
“அம்பாஸிடர்ல ஏழு பேர் தாராளமா போகலாம்ப்பா. முன்னாடி மூணு பேர். பின்னாடி நாலு பேர். நாலு குழந்தைகளையும் மடியில வச்சிக்கிட்டாப் போக்க.”
என் மனைவியின் உஷ்ண முறைப்பை நான் முதுகில் உணர்ந்தாலும் ஆஸ் யூஷ்வல் எதுவும் செய்ய இயலாதவனாகி மைலாப்பூரில் அவர்களை ஏற்றிக் கொண்டேன்.
கொஞ்சம் இருமுவார், ஓர சீட்தான் துப்ப வசதி என்று தாத்தாவை ஒரு ஓர சீட்டில் உட்கார் வைத்து விட்டான். நான் வெத்தலை போடறவன் என்று வெங்கி ஒரு ஓர சீட்டில் உட்கார்ந்து கொண்டான். நடுவில் இரு மனைவிமார்கள். முன்புறம் டிரைவர் சீட்டில் நான். எனக்கு அருகில் ஈஸ்வரி கணவன், முன்புற ஓர சீட்டில் ஈஸ்வரி. பிராயணத்தின் போது வாந்தி வருமாம். அதனால் தயாராய் கையில் எலுமிச்சைப் பழம்.
புறப்பட்டபோதே எனக்கு நொந்து போய் விட்டது. பிரயாணம் முழுக்க அவஸ்தையேர் அவஸ்தை. வரிசை எண் போட்டுப் பட்டியலே இடலாம்.
1. தாத்தா இருமினார் என்றால் கார் நடுங்கியது. கல்கியின் பொன்னியின் செல்வன் போல ஆரம்பித்தால் பாகம் பாகமாக இருமிக் கொண்டே இருந்தார். அவருக்கு அடுத்து அமர்ந்திருந்த சுந்தரி முக மூடிக் கொள்ளைக்காரி மாதிரி மூக்கை மூடி துணிகட்டி டஸ்ட் அலர்ஜி என்று பொய் சொல்லிவிட்டாள்.
2. வெங்கி வெற்றிலை டப்பாவைத் திறந்து மடியில் வைத்தபடி, மாடு அசை போடுவது போல போட்டபடி இருந்தான். முன் சீட் முதுகு முழுக்க அவன் விரல் பதித்த சுண்ணாம்பு முத்திரைகள், எங்கே நிறுத்தினாலும் தஞ்சாவூர் வெத்தலை!
3. வெங்கியின் மனைவிக்கு இறை பக்தி இருக்க வேண்டியதுதான். அதற்காக சாலையோரமாக வரை போட்ட , கூரை போடாத ஏதாவது கோயில் அல்லது கோயில் மாதிரி தெரிந்தால் நிறுத்தச் சொல்லி இறங்கிப் போய் துணி முடிச்சி தொங்க விடுவாள். மூன்றாவது குழந்தை ஆணாகப் பிறக்க வேண்டும் என்றால் வேண்டிக் கொண்டு மஞ்சள் துணியில் முடிச்சிட்டு மரத்தில் கட்ட வேண்டும் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அனால் அப்படி எல்லா கோயில்களிலும் கட்டக்கூடாது என்று தெளிவாகச் சொல்லவில்லை போலிருக்கிறது. அங்கங்கே அவள் மடித்துக் கொண்ட விபூதிப் பொட்டலங்கள் தனி லக்கேஜாக வளர்ந்தது.
4. வெங்கியின் தங்கை ஈஸ்வரியிடம் எலுமிச்சைப் பழத்தின் பாச்சா பலிக்கவில்லை. முப்பது கிலோ மீட்டருக்கு ஒரு தடவை உவ்வே என்று அவள் ஜன்னல் வழியாக வாந்தியெடுப்பாள். காரை நிறுத்தி அவளையும், கார் ஜன்னலையும் சுத்தப்படுத்தி தொடர்வோம். வெங்கி சிரித்தபடி பித்த உடம்பு என்பதோடு நிறுத்திக் கொள்வான்.
5. ஈஸ்வரி கணவன் ஒரு தடவை குருவியாக இன்னொருவன் செலவில் சிங்கப்பூர் போய் பதினைந்து நாட்கள் இருந்து திரும்பியிருக்கிறான். அதனால் வலிய தப்புத் தப்பாக இங்கிலீஷில் தத்துவம் பேசுவான். ஃபாரின்ல இப்படி இல்லை என்பான். இவன் போன ஒரே ஃபாரின் சிங்கப்பூர். யாரின் அனுமதியும் கேட்காமல் செயின் செயினாக சிகரெட் பிடித்தபடி வந்தான். காருக்குள் கனவுக் காட்சி ஷூட்டிங் எடுக்கலாம் போல அவ்வளவு புகை மிதக்கும்.
6. போற வழிலதான் என் மச்சினின் வீடு என்று சொல்லி வெங்கி தன் மச்சினன் வீட்டுக்கு எங்களையும் அழைத்துச் சென்று விட்டான். மூன்று மணிநேரம் அதில் வேஸ்ட். இரண்டே முக்கால் மணிநேரம் வீட்டைப் பூட்டிக் கொண்டு சினிமா போயிருந்த மச்சினன் குடும்பம் திரும்பி வரக்காத்திருந்தோம்.
7, 8, 9, 10 என்று நூறு தாண்டி சொல்லிக் கொண்டே போகலாம். சென்னை வந்து அவர்களை வெங்கி வீட்டில் இறக்கிவிட்ட போது வெங்கி என் கையைப் பிடித்துக் கொண்டு, “இந்த ட்ரிப்பை என்னால மறக்கவே முடியாதுப்பா” என்று ஆங்கிலத்தில் சொன்னான்.
அதையே நான் தமிழில் சொன்னேன். காது அருகில் வந்து, செலவு பூரா கணக்கெழுதி நான் எவ்வளவு தரணும்னு போன்ல சொல்லு. மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து மூணு வருஷத்தில் கணக்ன கை முடிச்சிடறேன்” என்று அவன் சொன்னபோது….. எனக்கு கொலை வெறி வந்தது. என் மனைவியின் மங்கல நெற்றி ஞாபகம் ஞாபகம் வர அடக்கிக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் நான் சொன்னேன். “சுந்தரி, ரெண்டு வாரம் கழிச்சி பாலக்காடு, குருவாயூர்னு நாலு நாள் சேர்ந்து போய்ட்டு வரலாமான்னு கேக்கறான் வெங்கி.”
சுந்தரி என்னைக் கோபமாகப் பார்த்தாள்.
“நாளைக்கு ஹிண்டு பேப்பர்ல விளம்பரம் கொடுத்துடுங்க.” என்றாள்.
“என்னன்னு?”
“புதிய கார் விற்பனைக்குன்னு” என்றாள்.
“கூடவே ஒரு வரி சேர்க்கணும் சுந்தரி. கொஞ்சம் சிகரெட் நாற்றமும், வாந்தி நாற்றமும் லேசாக வீசும்” என்றேன் நான்.
சுந்தரியிடமிருந்து இன்னும் கொஞ்ச தினங்களுக்கு பல் குத்தும் முத்தம் கூடக் கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.