காதல் சைகாலஜி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 11,907 
 
 

‘காதல் ஒலிம்பிக்ஸ்’ – அன்று ஈடன் தோட்டத்தில் கைவசம் இளையராஜா இல்லாததால் டூயட் எதுவும் பாடாமல் ஆதாம் ஏவாளால் மௌனமாகத் துவக்கி வைக்கப்பட்ட காதல் ஒலிம்பிக்ஸ் இன்றுவரை ஜனரஞ்சகமாக விளையாடப்பட்டு வருவது உங்களுக்கெல்லாம் தெரிந்ததே!

காதல் ஒலிம்பிக்ஸில் தலைதெறிக்க ஓடி எப்படியாவது கல்யாண மெடலை வாங்கிவிட ஒரு ‘ட்ராக்’கில் ஓடும் சம்பந்தப்பட்ட ஜோடியை ஒரு கட்சி என்று வைத்துக்கொண்டால், இவர்களை எப்படியாவது தடுத்து நிறுத்திப் பிரித்துவிட வேண்டும் என்று கச்சம் கட்டிக்கொண்டு குறுக்கே ஒரு ட்ராக்’ போட்டு கிராக்குத்தனமாக ஓடிவரும் காதல் ஜோடியின் பெற்றோரை எதிர்க்கட்சி என்று கொள்ளலாம்.

இந்த விஷயத்தில் மிகவும் கொடுத்து வைத்த ஜோடி ஆதாம் ஏவாள்தான். பிரித்து வைக்க இருவருக்குமே பெற்றோர் இல்லாததால் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஆதாம் ஏவாளால் ஜாலியாக இருக்க முடிந்தது.

சிறுவயதிலிருந்து தன் மகன் ஆசைப்பட்டதையெல்லாம் உடனுக்குடன் வாங்கித் தந்து பாசத்தைப் பீரிட்டடித்த தந்தை. ஏன் அவன் பிரியத்தோடு காதலிக்கும் பெண்ணையே அவனுக்குக் கட்டிவைக்க மறுக்கிறார்?

இந்த ஒரு சைகாலஜிதான் சுத்தமாகப் புரியவில்லை. ஒருவேளை அந்தக் காலத்தில், தான் செய்ய முடியாத ஒரு காரியத்தை (காதல்) தாம் பெற்றவை சர்வ சாதாரணமாகச் செய்கின்றனவோ என்கிற பொறாமையில் எழுந்த வயிற்றெரிச்சலோ? இல்லை, தான் அன்று பெண் பார்க்கும் படலத்தில் சாப்பிட்ட வேகாத உப்புமா கொழ கொழவென்று வாயில் ஒட்டிக்கொண்டு தன்னைப் பேசவிடம் செய்துவிட… அதனால், சாதித்த மௌனத்தைத் தவறாகச் சம்மதத்துக்கு அறிகுறி என்று புரிந்துகொண்டு தனது தலையில் ஒரு தாடகையையோ அல்லது சூர்ப்பணகையையோ பெற்றவர்கள் கட்டிவிட… கைப் பிடித்தவளின் கொத்தடிமையாகத் தனது முப்பது வருட தாம்பத்ய நாராசத்தை (சிலருக்குத் தான் தாம்பத்யம் ஒரு சங்கீதம்…) நினைத்துப் புழுங்கி தான் பெற்ற துன்பம் பெறுக தன் பிள்ளையும்’ என்ற வக்கிரத்தில் தனது மகனின் தலையிலும், ஏதோ தன்னால் இயன்ற அளவு ஒரு ‘மினி’ ராட்சஸியைக் கட்டிவிடப் பார்க்கும் ‘ஸாடிஸம்’ ஆகவும் இருக்கலாம்…. பிள்ளையின் காதல் ஆட்டத்தைக் காதால் கேட்டு அவனுடைய அப்பன் குமுறுவதில் கூட ஓரளவு நியாயம் இருக்கிறது. காற்றையும் தண்ணீரையும் கூடக் காசு கொடுத்து வாங்கவேண்டிய இந்தக் கலிகாலத்தில் அட, இந்த மட்டில் தன் பெண்னையும் காதலித்துக் கை பிடிக்கிறேன்’ என்று ஒரு ராஜகுமாரன் வருகிறானே, பேசாமல் அவனுக்கே கட்டி வைத்துப் பெற்றவர் எகிறி எகிறிக் குதிப்பதுதான் அசட்டுத்தனமாகத் தோன்றுகிறது.

ஐந்து பெண்களைப் பெற்றாலே போதும், அரசன்கூட ஆண்டியாகிவிடுவான். எனக்கு மிகவும் தெரிந்த ஒருவருக்கு பெண்கள் ஏழு . இந்த அழகில் மனிதர் நந்தவனத்து ஆண்டி வேறு.

நான் மட்டும் இவராக இருந்தால் வீட்டு வாசலில் போர்டு தொங்கவிட்டு இதுமாதிரி இவ்விடம் காதலித்துக் கைப் பிடிக்கக் கன்னிகள் உள்ளனர். கட்டிளங் காளைகள் அணுகலாம்’ என்று எழுதி வைத்துவிடுவேன்.

மாறாக, மனிதரோ ஒரு நாள் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் ‘லோயர்’ பாஸ் செய்யச் சென்ற இரண்டாவது மகளின் காதல் ஹையர்’ ஸ்டேஜில் இருப்பதை அறிந்து மகளை வூடுகட்டி’ உதைத்திருக்கிறார் பாருங்கள் – தெருவே கூடிவிட்டது. பெண்ணின் தெய்வீகக் காதலனுக்கே பேசாமல் கட்டித் தந்து சல்லிசாக இரண்டாவது மகளின் திருமணத்தை முடித்து கொள்வதை விட்டுவிட்டு , மனிதர் பாழாய்ப் போன பிரஸ்டீஜில் பிரஷர் குக்கராக மாறிக் கொதித்தார்.

காலையில் எழுந்தால் கண்களில் பட்டது மகளின் கால் கடுதாசு சினிமாவில் வருவது போல மகள் கடிதத்தில் தோன்றி, தான் காதலனோடு நகர எல்லையைத் தாண்டி விட்டதைத் தந்தையிடம் கூறினாள். தந்தையை நம்பினால் காலம் முழுவதும் கன்னிகா ஸ்திரீகளாகி விடுவோம் என்ற பயத்தில், அடுத்த பெண்களும் அக்கா காட்டிய பாதையில் ஆதாம் ஏவாள் விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள்.

நன்றாக யோசித்துப் பாருங்கள். காதல், கல்யாணத்தில் கை கூடினால் கொடுத்து வைத்தவர்கள் பெண் வீட்டார்தான். “உங்க பையன் நம்ம பொண்ணு போல ஆசைப்பட்டதாலதான் நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துண்டேன். என்னால முடிஞ்சது இவ்வளவுதான்” என்று பெண்ணின் தந்தை சாமர்த்தியமாகக் கூறி மாப்பிள்ளையை ஜனவாசத்தின் போது கோவிலிலிருந்து சாத்திரத்துக்கு வாகனத்தில் அழைத்து வராமல் நடத்தியே கூட அழைத்து வந்து விடலாம். முகூர்த்தத்தைக் கெட்டிமேளச் செலவுகூட இல்லாமல் அடக்கி வாசித்துவிடலாம்.

இப்பொழுதிருக்கும் விலைவாசியையும், வரதட்சிணை விவகாரங்களையும் பார்க்கும் பொழுது நியாயமாகப் பார்த்தால் பெண்ணைப் பெற்றவர்கள் காதல் போஷகர்களாக இருக்கவேண்டும். பெற்றோர்கள் சிறுபிள்ளைத் தனமாகக் காதலில் குறுக்கிட்டு அதை ஒரு களேபரமாக்குவது மன்னிக்கமுடியாத குற்றம்.

பாவம், கண்களில் காதல் பாஷ்யம் பொங்க, பெண்கள் கல்லூரி வாசலில் தவம் செய்யும் ரோட் சைட்’ ரோமியோக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். பஸ் ஸ்டாண்டில் நிற்கும் மகளிர் கும்பலில் தனது மதன மோக ரூப சுந்தரி’ எவள் என்று கண்டுபிடிக்க இவனுக்கு ஒரு வருடம் ஆகிவிடுகிறது! இந்த நிலையில் பின்னால் வரப்போகும் பெற்றவர்களின் எதிர்ப்பை உத்தேசித்து முன்னெச்சரிக்கையாக அப்பா, அம்மா இல்லாத அநாதைப் பெண்ணைத் தேடிப் பிடித்துக் காதலித்துக் கை பிடிக்கும் வரையில் இந்த ரோமியோவின் இளமை ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்? காதல் நாம் நினைப்பது போல அவ்வளவு சுலபமான காரியமல்ல. முதலில் நம்மிடம் இணக்கமாகப் பேசும் நங்கை, மெய்யாலுமே நம்மை நேசிக்கிறாளா என்பதைப் புரிந்து கொள்வதே கடினம். ஆசையாகப் பழகிய ஆறாவது மாதத்தில் எனது நண்பனின் கையில், அவனுடைய காதலி’ ரட்சா பந்தனை’ கட்டி மேரே பேட்டா’ என்று வாஞ்சையோடு கூறிக் காலைவாரி விட்டுவிட்டாள்.

காதலில் பல ரகங்கள் உண்டு. சில சோம்பேறிகள் இருந்த இடத்திலேயே அடுத்த வீட்டுப் பெண்ணையே குடிசைத் தொழிலாக சிறிய அளவில் காதலித்துக் கொண்டிருப்பார்கள்.

சிலர், கர்ம சிரத்தையாகப் பத்து மைல் தள்ளி இருக்கும் காதலியின் அந்தப்புரத்துக்குச் சென்று கடனெழவே என்று காதலித்துவிட்டு வருவார்கள். சில அதிர்ஷ்டசாலிகளுக்கு ‘கண்டதும் காதல்’ உண்டாகும். எனது மற்றொரு நண்பன் காணாமலேயே காதலித்தான்!

இவன் இருப்பது சென்னையில், இவன் உள்ளம் கவர்ந்த கள்ளி இருப்பதோ இந்தியாவின் தலைநகரத்தில் கடிதமும் தொலைபேசியும்தான் இவர்கள் காதல் பயிர் வளரக் காரணமான ‘யூரியா அறுபத்தெட்டு ‘ வகை உரமாகப் பயன்பட்டது. நான் பார்க்கும் பொழுதெல்லாம் எனது நண்பர் டெல்லியில் இருக்கும் தனது ‘கண்ணே மணியே ‘வோடு டெலிபோனில் உரையாடிக் கொண்டிருப்பான். மத்திய மந்திரி பட்ஜெட் சமர்ப்பிக்கும் பொழுது ‘இந்திய தொலைபேசி’ சார்பாக நன்றி தெரிவிக்கும் அளவுக்கு டெலிபோன் பில் (S.T.D) கட்டி இருக்கிறான். அந்த ஆண்டில் யார் யாருடனும் எங்கிருந்தும் எப்பொழுது பேசினாலும் எனது நண்பனின் காதல் சம்பாஷணைதான் க்ராஸ் டாக்காக வரும்.

தனது கடிதத்துக்குப் பதில் கடிதத்தைக் கொண்டுவரும் தபால்காரரையே காதலியாகப் பாவித்துக் காமாந்தகாரமாகப் பார்ப்பான்.

போஸ்டல் டிலேயில் ஒருநாள் கடிதம் வருவது தாமதித்துவிட்டால் போதும்; நண்பன் தாடி மீசையோடு வாழ்வே மாயம்’ பாட ஆரம்பித்துவிடுவான். அடுத்த சிகரெட்டைப் பற்றவைக்க முந்திய சிகரெட்டைப் பயன்படுத்தும் அளவுக்குச் சோகத்தில் செயின் ஸ்மோக்கராகிவிடுவான்.

ஆனால், ஒன்று: இந்தக் காதல் சோகத்தின் போது காதலனுக்கு எப்படித்தான் ஒரே நாளில் கருகருவென்று தாடி மீசை முளைத்துவிடுகிறதோ தெரியவில்லை. பதில் கடிதம் வராத பத்து நாட்களும் பைத்தியம் பிடித்தவன் போல இருப்பான். அப்பொழுதெல்லாம் இவனைப் பார்க்கும் பொழுது காதலுக்குக் கண் இல்லை’ என்ற பழமொழியைவிடக் காதலனுக்கு மூளை இல்லை என்ற புதுமொழியே பொருத்தமாகத் தோன்றும்! கடிதம் வந்த மறுவிநாடியே நண்பன் கல்யாணராமனாகிவிடுவான். வாணலியில் போட்ட பஜ்ஜி போல, பளபளவென்று ஷேவ் செய்து கொண்டு பவனி வருவான். இவனது இந்த ரசாயன மாற்றம் மாதத்துக்கு ஒரு முறை தவறாமல் நடக்கும். இரு தரப்பிலும் எதிர்ப்பு இருந்தும் எப்படியோ சமாளித்து நண்பன் இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியைக் கைப்பற்றிவிட்டான்.

ஆயிரம் சொல்லுங்கள் சார்! தாய் தந்தையர் காட்டிய பெண்ணை பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுவிட்டு மணம் புரிந்து, அதனால் அவளைக் காதலித்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தைவிட நாம் தேர்ந்தெடுத்தவளைக் காதலித்து, பின் மணம் புரிவது எவ்வளவோ மேல் இல்லையா! ஆனால், ஒன்று நிச்சயம். காதலி தாரமாகிவிட்டால் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று கூறமுடியாது.

சென்ற வாரம் எனது காதல் நண்பனைப் பார்த்துக் குசலம் விசாரித்தேன். “என்ன வாழ்க்கை போ…முன்பெல்லாம் ஒரு சாதாரண குச்சி ஐஸுக்கே உச்சி குளிர்ந்து என்னோட ஒட்டிப் பழகிண்டு இருந்தவளுக்கு, இப்ப பட்டுப் புடவையும் வைர நெக்லசும் வாங்கித் தந்தாகூடத் திருப்தியே வரதில்லே! எப்ப பாரு, தொண தொணக்கறா. பேசாம கல்யாணம் செஞ்சுக்காம கடைசிவரை காதலிச்சுண்டே இருந்திருக்கலாமோன்னு இப்ப தோணுது!” – நண்பனின் ஆதங்கம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆஃப்டர் ஆல் காதலியும் ஒரு பெண்தானே…! மனைவி என்ற போர்ட்ஃபோலியோ அவளை அடியோடு மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தொடர்ந்து அவள் தாயான ரசாயன மாற்றத்தில் இவனைத் துச்சமாக மதித்துத் தூர எறிவது நிச்சயம்.

ஓ..! அதனால் தான், காதல் புனிதம் கல்யாணத்தால் கெட்டுவிடும் என்று பயந்து அமர காதலர்களான ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு போன்றவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையை டிராஜிடியில் முடித்துக் கொண்டார்களோ…?

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *