”தோழர், காதலிக்கிறதுன்னா என்னா பண்ணணும்?”- இரண்டாம் ஜாமத் தூக்கத்தில் இருந்தவனை எழுப்பி இப்படி ஒரு கேள்வி கேட்ட கடுப்பைவிட, அந்தக் கேள்வி அவனிடமிருந்து வந்ததுதான் எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. ”ம்… குவாட்டர் அடிச்சுட்டுக் குப்புறடிச்சுத் தூங்கணும்” என்ற என் பதிலை அவன் ரசிக்கவில்லை.
”தோழர், உங்களை வெவரம்னு நினைச்சுத்தானே இதைக் கேக்கேன். நீங்கபாட்டுக்கும் நக்கல் பண்ணுதியளே.”
”எல! நான் சொன்னனா, நான் வெவரம்னு. உம்பாட்டுக்கும் நெனச்சுக்கிட்டா, அதுக்கு நானாடே பொறுப்பு?”
”சும்மா சொல்லுங்க தோழர். காதலிக்கிறவங்க என்னல்லாம் பண்ணுவாங்க?”
”இது என்னல கூறுகெட்டத்தனமா இருக்கு. நான் என்னமோ நெதம் ரெண்டு பிள்ளைவொகூடச் சுத்துத மாறி என்கிட்டக் கேக்க. கழுத, நாமளே சீண்ட ஆளில்லாம நாதியத்துக்கெடக்கோம். இதுல ஊமையன்கிட்ட ஊத்துமலைக்கு வழி கேட்ட மாறில்லா என்கிட்ட கேக்கான்? அது சரி… என்ன திடீர்னு காதலைப்பத்தி எல்லாம் கேக்குத?”
காலக் கொடுமை, அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவன் வெட்கப்பட்டான். நாளது தேதி வரை அவன் வெட்கப்பட்டு நான் பார்த்ததில்லை. இதுதான் முதல் முறை. ஸ்டாலினாகிய அவன் ஏதேதோ காரணத்தால் பெற்றோர் இட்ட பெயரைக் காப்பாற்றும் பொருட்டு, கம்யூனிஸ்ட் இயக்கம் ஒன்றின் மீது பற்றுக்கொண்ட வரலாற்று விபத்து நடந்து ஏழெட்டு வருடங்களாகிவிட்டன.
செய்துங்க நல்லூரில் ஸ்டாலின் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த வக்கீல் ஒருவன், சாக்கடைத் தண்ணீர் பிரச்னைக்காக முன்னொரு காலத்தில் வக்கீல் நோட்டீஸ்விட்டான். ”பக்கத்துலதானே இருக்க. கூப்பிட்டுச் சொல்லலாம்லா? எதுக்கு நோட்டீஸெல்லாம் விட்றீரு?” என்று ஸ்டாலின் கேட்ட யதார்த்தவாதமான கேள்விக்கு, ”அதெல்லாம் உன்னய மாதிரி சாதாரண மனுஷப்பயலுவ செய்யிற வேலை. நான் வக்கீலு. நோட்டீஸ் விட்டாதான் எனக்கு மரியாதை” என்று மிகை யதார்த்தமாக அந்த வக்கீல் சொன்ன பதில்தான், ஸ்டாலினை வக்கீலுக்குப் படிக்க வேண்டும் என்று உத்வேகம்கொள்ளச் செய்தது. இதற்காகக் கடும் முயற்சி செய்து எப்படியோ சீட்டு வாங்கி, வக்கீலுக்குப் படித்துக்கொண்டு இருந்த நான்காவது வருடத்தில்தான் அவன் எனக்கு அறிமுகம் ஆன இரண்டாவது வரலாற்று விபத்து நடந்தது.
கல்லூரிக்கு அருகில் இருந்த பேக்கரி ஒன்றில் நான் மாஸ்டராக இருந்தபோது ஒரு நாள், என் அருகில் நான் வாசித்துவைத்திருந்த ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ கவிழ்ந்துகிடந்தது. ஒரு கையில் பாதி கடித்த எக் பஃப்ஸை வைத்துக்கொண்டு, அதை ஆசையோடு எடுத்துப் பார்த்தான் அவன். இப்படியாக நிகழ்ந்த எங்களது வாசிப்பு நட்பு, மனசுக்குள் நிகழ்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக தோழமையாக உருவெடுத்தது. கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போது என்கூடவே வந்து தங்கிவிட்ட ஸ்டாலின், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு வக்கீலிடம் ஜூனியராக இருக்கிறான்.
”பார்றா… தோழர் வெக்கப்படுறாரு. யாரு ராசா அந்தப் புள்ள?” இன்னும் கொஞ்சம் வெட்கம் சிந்தினான்.
”எதைக் கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே… வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?”
”இது சூப்பரா இருக்கு தோழர். இதே மாதிரி ஏதாவது சொல்லுங்க..”
”கருமம்… அது தபூசங்கர்னு ஒரு ஆளு எழுதின கவிதை. நீ உன் ஆளு யாருன்னு சொல்லவே இல்லையே?”
”ரெண்டு மாசத்துக்கு முந்தி ஊருக்குப் போயிருந்தேன்ல தோழர். அப்ப என் செல்போனை எடுத்து நம்ம பசங்க யாருக்கோ மெசேஜ் அனுப்பியிருக்கானுவ. அது எனக்குத் தெரியாது. அடுத்த நாளு அந்த நம்பர்லேர்ந்து ‘ஷ்லீஷீ வீs tலீவீs?’னு மெசேஜ். ‘மொதல்ல நீ யாருன்னு சொல்லு’ன்னு நான் அனுப்புனேன். இப்படியே மாத்தி மாத்தி ஓடுச்சு தோழர். ரெண்டு நாளு கழிச்சு, ‘நாம ஃப்ரெண்ட்ஸா இருக் கலாம்’னு ஒரு மெசேஜ் அனுப்புதா.”
”ஹூம்!”
”ஒரே வாரத்துல வாடா, போடான்னு பேச ஆரம்பிச்சுட்டா தோழர். எனக்குத்தான் என்ன பேசணும்னே தெரியலை.”
”உலகத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி பாட்டாளி வர்க்கப் புரட்சி செய்யுறதைப்பத்தி பேச வேண்டியதானடே.”
”நக்கல் பண்ணாதீய தோழர். பொம்பளைப்பிள்ளைக கிட்ட இதைப்பத்தியெல்லாம் எப்படிப் பேச?”
”எல்லாம் தெளிவாத்தான் இருக்கீய. நாந்தான் கேணப் பயலாயிட்டேன். சரி, நீ சொல்லு…”
”ஒரு மாசத்துக்கு மேல மாத்தி மாத்தி மெசேஜ்தான். எனக்குன்னா தலைகாலு புரியலை. எங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்குற கொய்யா மரத்துல ஏறி உட்கார்ந்து நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்பிக்கிட்டிருந்தப்போ, எங்க ஐயா பார்த்துட்டாரு.”
”மாட்டினியா?”
”இல்லை தோழர். ‘நாளைக்கு திருச்செந்தூர்ல ஆர்ப்பாட்டம் இருக்கு. அதுக்காவ எல்லாருக்கும் மெசேஜ் அனுப்பிட்டிருக்கேன்’னு சொல்லித் தப்பிச்சுட்டம்லா. ஒரு வாரத்துக்கு முன்னாடி திடீர்னு போன் பண்ணி, ‘நான் உன்னை லவ் பண்ணுதேன். நீ என்ன சொல்லுத?’ன்னு திடீர்னு கேக்கா. கருமம் நம்மளையும் ஒரு புள்ள லவ் பண்ணுதங்கா… இதுல யோசிக்க என்ன கெடக்குங்கீய? உடனே ஓ.கே. சொல்லிட்டேன். ஆனா தோழர், அதுக்குப் பிறகு அவ பேசும்போதெல்லாம் ஒரு வார்த்தையைச் சொல்லுதா… அதுதான் ஒரு மாதிரியா இருக்கு.”
”அப்படி என்னல சொல்லுதா?”
”எதுக்கெடுத்தாலும் ‘போடா லூசு’ங்கா தோழர். பேசும்போதெல்லாம் சொல்லுதா. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. ஆனா, கோவம் மட்டும் வர மாட்டேங்கு.”
அவனுக்குக் கோபம் வந்ததோ இல்லையோ… எனக்குக் கபகபவெனச் சிரிப்பு வந்தது. உள்ளே இழுத்திருந்த சிகரெட் புகை, சிரித்த சிரிப்பில் தொண்டையில் மாட்டிக்கொண்டு இருமலானது.
”விடுறா ஸ்டாலினு. இனிமே நீ ஒப்பேறிடுவ. ஒரு பொம்பளைப்புள்ளை வாயால ‘போடா லூசு’ன்னு சொல்லிக் கேக்குற பாக்கியம் இங்க எத்தனை பேருக்குக் கிடைச்சிருக்கு சொல்லு. கழுத, நானெல்லாம் நாயாப் பேயா அலையுதேன். எந்தப் புள்ள நம்மளைப் பாக்கு? எவனும் போன் பண்ணிச் சொல்லுவாய்ங்களோ என்னவோ… நாம இந்தால நடந்தா, அதுக பத்தடி தூரம் தாண்டி அந்தால போவுதுக. ரெண்டு நிமிஷம் உத்துப் பாத்தா, ‘என்னல பாக்க?’ன்னு கண்ணை உருட்டி, மிரட்டுதுக. நமக்கு வெடவெடங்கு. நீ பாக்கியசாலிதான் போ. ‘ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலயும் ஒரு வர்க்கத்தோட முத்திரை இருக்கு’ன்னு பேராசான் மார்க்ஸ் சொல்லியிருக்காருடே. அந்தப் புள்ள ‘லூசு’ன்னு சொல்லுததுலயும் ஒரு முத்திரை இருந்தாலும் இருக்கும். நல்லா யோசிச்சுப் பாரு.”
”நீங்க லந்து பண்ணுததுலேயே குறியா இருக்கீய.”
”பின்ன என்னடே, என்கிட்டயும்தான் செல்போனு இருக்கு. நானும்தான் ஊருக்குப் போகுதேன். பயகளும்தான் எடுத்துப் பேசுதானுவ. ஆனா, வெவரமா ‘இது இன்னொரு வெளங்காவெட்டிப் பய போனு. இதுக்குப் பிறகு இந்த நம்பருக்கு மறந்தும் பேசிடாத!’ன்னு ஒரு மெசேஜைத் தட்டி விட்டுட்டுத்தான் கௌம்புதானுவ. அதுலயும், sமீஸீt வீtமீனீs, பீவீணீறீறீமீபீ ஸீuனீதீமீக்ஷீsலஎல்லாம் போயி அந்த நம்பரை அடையா ளம் தெரியாம அழித்தொழிப்புச் செஞ்சுட்டுதான் அடுத்த வேலை பாக்கான். அது கெடக் கட்டும். அதான் ‘நீ லூசு… நான் மென்ட்டல்’னு உன் லவ் நல்லாப் போவுது போலருக்கே. அப்புறம் எதுக்குல என்கிட்ட ஐடியா கேக்க?”
”அது வந்து… நான் ஒரே மாதிரியாப் பேசுதனாம். எனக்கு ரொமான்ஸாப் பேசத் தெரியலியாம். ‘லவ் பண்ணுத மாதிரியாப் பேசுத?’ன்னு அப்பப்போ அவமானப்படுத்துதா. எது எதுக்கோ புத்தகம் போடுதானுவ. இந்தக் காதல் கருமத்துக்கு எவனும் ஒரு புத்தகம் போடலியே.”
”நீ எப்பம் புத்தகம் படிச்சு, என்னிக்குக் காதல் செஞ்சு, எங்கேருந்து ஒப்பேற? இதுக்கெல்லாம் கூறு உள்ளவன் எவனையாச்சும் கூட வெச்சுக்கடே.”
நள்ளிரவின் இருளுக்கு வெள்ளையடிப்பது போல அறைக்குள் சிகரெட் புகை பரவிக்கொண்டு இருந்தது. முன்பு லாலா கடை முக்கில் தங்கியிருந்தபோது கூறு உள்ளதாக நம்பப்பட்ட ஒருவன் என்கூட இருந்தான். அவன் கணக்கில் சிவப்புச் சட்டை அணிந்த அத்தனை பேரும் கம்யூனிஸ்ட்டுகள். அவ்வப்போது ”அடுத்த ஞாயித்துக்கிழமை சாயுங்காலம் அஞ்சு மணிக்குப் புரட்சியாமே. கூடவே இருக்கீங்க, ஒரு வார்த்தைகூடச் சொல்லல?” என ஏதோ ‘எந்திரன் ரிலீஸ் ஆகப்போகுதாமே’ எஃபெக்ட்டிலேயே கேட்பான். ரெட்டைப் பாலத்தில் கீழே நின்றுகொண்டு ரயிலுக்கும் பேருந்துக்கும் பாலத்தைக் கடந்து செல்லும் பெண்களுக்கு ஏக்க அம்புகளை வீசுவது அவனது தின வாழ்வின் குறிப்புகள். வீரத்தின் எவ்வித சாயலுமற்ற அவனுக்கு வீர சிங்கம் எனப் பெயரிடப்பட்டதையும், தேவதையின் சாயலையத்த ஒரு தக்கலைக்காரி அவனை மாய்ந்து மாய்ந்து காதலித்ததையும், இவன் எல்லாக் கடலைகளையும் வறுத்து முடித்த பின்பு, ‘அலையுறாளுக…’ என்றபடியே செல்போனில் லைனை கட் செய்வதையும் காணச் சகிக்காமல்தான் இந்த சிந்துபூந்துறைக்கு வந்து சேர்ந்தேன். இதோ இது ஸ்டாலின் முறை.
”அன்னிக்கு ஒரு நாள், ‘நான் நாளைக்கு தென்காசிக்கு வர வேண்டியிருக்கு. நீ அப்படியே பாவூர் வந்துடுதியா. பாப்போம்’னா. நமக்கு அதைவிட வேற என்னா சோலி? வந்தா தோழர். எப்படி இருக்காங்கீய? சரியான அழகு. பாளையங்கோட்டை உண்ணாவிரதத்துல உங்களை உத்து உத்துப் பார்த்தாளே வள்ளியூர்க்காரி, அந்த மாதிரி ஒரு ஃபிகர்.”
”இது என்னல, ‘என் அக்கா சூப்பர் ஃபிகர்’னு வடிவேலு சொல்லுத மாறில்லா இருக்கு.”
”நீங்க வேற… ரெண்டு பேரும் பஸ் ஸ்டாண்ட் ஓரமா நின்னு பேசிக்கிட்டிருந்தமா… அப்பம் பாத்து நம்ம முருகேசன் தோழர் திருநெவேலி பஸ்லேர்ந்து எட்டிப் பார்த்து, ‘என்ன தோழர் இங்க?’ங்காரு. என்னத்தச் சொல்ல? ‘இல்ல… இது வந்து நம்ம தோழர்தான். கூட்டத்துக்குப் போகுதோம்’னு அவளைக் காட்டினேன். அவரும் நம்புத மாதிரி தலையாட்டிக் கிளம்பிட்டாரு. பஸ் போன பிறகு இவ கேக்கா, ‘என்னை ஏன் தோழர்ங்கீய, நான் பொம்பளைப் புள்ளைல்லா?’ங்கா. ‘எந்தக் கூட்டத்துக்குப் போறோம்?’ங்கா அடுத்தது. பொட்டப்புள்ளைவ ஏன் இப்படி கேள்வியாக் கேட்டுக் கொல்லுதாளுக?”
இதெல்லாம் எனக்கெப்படி தெரியும்? ஸ்டாலின் ஓயாத அலைகளாகப் பேசிக்கொண்டு இருந்தான். திடீரென ஆர்வமாகி, ‘அவ என்ன ஹலோ டியூன் வெச்சிருக்கா தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு, ‘பீஷீஸீ’t ணீttமீஸீபீ tலீவீs நீணீறீறீ…’ என மறக்காமல் மெசேஜ் அனுப்பிவிட்டு அந்த வோடஃபோன் நம்பரை டயல் செய்தான்.
‘அக்கம்பக்கம் யாருமில்லாப் பூலோகம் வேண்டும்
அந்திப்பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்’
இந்தப் பாட்டை எனக்காகவே வெச்சிருக்கா தெரியுமா? முதன்முதல்ல நாந்தான் இந்தப் பாட்டைக் கேக்கணும்னு போன் பண்ணச் சொன்னா.”
”எனக்கு ரெண்டு நிமிஷமா காது செவுடு. நீ சொல்லுத எதுவும் கேக்கலை.”
”விடுங்க தோழர்… எனக்கொரு முத்தழகுன்னா, உங்களுக்கு ஒரு மாரியம்மாளோ, பேச்சியம்மாளோ கிடைக்காமலயா போயிடுவா?”
”முத்தழகு… முத்தழகு ஸ்டாலின். நல்லாயிருக்குடே பேரு. இப்பம்லாம் பின் நவீனத்துவக் கவிஞர்கள்கூட, சில்வியா குண்டலகேசி, கேத்தரீன் பழனியம்மாள், ஏஞ்சலின் கோயிந்தசாமி மாதிரி வித்தியாசமாதான் பேர் வெச்சுக்கிடுதாக.”
விடிய விடியப் பேசியும் என்னால் ஸ்டாலினுக்கு ஒரு யோசனையும் சொல்ல முடியாத கையறு நிலையில் இருந்தேன். சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் வரும்? காதலில் கரைகண்ட வேறு சில நண்பர்களிடம் ஆலோசனை பெற்று ஸ்டாலினிடம் சொல்ல, அவனும் சொந்த முயற்சியில் தன் காதலைப் பெருக்கிக்கொண்டு இருக்க… காதல் நதியில் ரொம்ப நாள் வரைக்கும் முங்கி முங்கி எழுந்துகொண்டு இருந்தான் ஸ்டாலின்.
மாதங்கள் சில கடந்த பிறகு அவன் விரல்கள், செல்போனை அழுத்துவதை நிறுத்தியிருந்தன. முத்தழகு சொன்னாளென இடையில் விட்டிருந்த சிகரெட்டை மறுபடியும் பிடிக்க ஆரம்பித்திருந்தான். அவனது செல்போனின் புதிய காலர் டியூன், ‘காதல் என்றால் கவலையா… கண்ணில் நீரின் திவலையா…’ என்று சோகம் சிந்தியது.
”என்னாச்சு ராசா?”
”இல்ல தோழர், அதெல்லாம் சரிப்பட்டு வராது. திடீர்னு போன் பண்றதை நிறுத்திட்டா. நாம போன் பண்ணாலும் கட் பண்ணுதா. ஒரே ஒரு தடவதான் பார்த்திருக்கேன். இன்னொரு தடவப் பார்க்கலாம்னு சொன்னா, இன்னிக்கு, நாளைக்குங்கா. எனக்கென்னமோ இது சரியா வரும்னு தோணலை.”
”அந்தப் புள்ளைக்கு வீட்ல எதாச்சும் பிரச்னையோ என்னவோ?”
”அதெல்லாம் இருக்காது தோழர். இப்பல்லாம் அவ என்னை ‘லூசு’ன்னு சொல்றதில்லை தெரியுமா? ஊடால ஊடால ‘வாங்க, போங்க’ன்னு வேற பேசுதா.”
அடப்பாவி தோழா… காதலில் கவலைப்படத்தான் எத்தனை எத்தனை காரணங்கள்? நீ லூசு என்பதில் அத்தனை திடகாத்திரமான நம்பிக்கையா உனக்கு?
”மார்க்ஸ் சொன்னது சரிதான் தோழர்.”
”எது..?”
”எல்லோரையும் சந்தேகி!”
அந்த வாசகத்தின் இறுதியில் மௌனமாக அவன் உச்சரித்த இன்னொரு வார்த்தை ‘அது முத்தழகாக இருந்தாலும்..!’
– 21-01-09