கவிஞனின் குறும்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 26, 2022
பார்வையிட்டோர்: 9,455 
 

இரவு இரண்டு மணிக்கு மேல் இருக்கலாம், சட்டென விழிப்பு வர எழுந்து பாத்ரூம் போவதற்காக வெளியே வந்தேன். எங்கள் ஹாஸ்டலில் இதுதான் பிரச்சினை. நான்கு ரூம்களுக்கு பொதுவான கழிப்பறை, ஆனால் இரண்டிரண்டாக இருக்கும். அதனால் காலையில் அவ்வளவு சிரமம் இருக்காது. ஒரு அறையில் மூன்று மாணவர்கள் உண்டு. தனித்தனி கட்டில், புத்தக அலமாரி உண்டு. இந்த நடு இராத்திரி எழுந்து பாத்ரூம் செலவது ஒன்றுதான் சிரமம், நல்ல வேளை நாங்கள் இரண்டாம் தளத்தில் இருப்பதால், தூக்க கலக்கத்தில் சுவற்றை பிடித்துக்கொண்டாவது பாத்ரூமை அடைந்து விடலாம்.

என்னடா இவன் ஒரு பாத்ரூம் கதையை இவ்வளவு விலா வாரியாக விவரிக்கிறானே என்று யோசிக்கிறீர்களா? அங்குதான் விஷயம் இருக்கிறது, எங்களால் காத்தவராயன் என்று அழைக்கப்படும் கார்த்தியின் “ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி” காதலை பற்றி நினைத்து எங்கள் காதில் பூ சுற்றிய கதை இது..

ஒற்றை பல்ப் வெளிச்சம் தந்து கொண்டிருந்தாலும், தூக்க கலக்கத்தில் தடுமாறி சென்றவன் இடையில் யார் மீதோ மோதி கீழே விழப்போனவன் சமாளித்துக்கொண்டு, யார் இந்த வேளையில் இப்படி உட்கார்ந்திருப்பவன்?திருடனோ என்று குழம்பி பயந்து ஒரு வழியாக அடையாளம் கண்டுபிடித்தால் நம்ம காத்தவராயன்.!

டேய் இங்க உட்கார்ந்து என்ன பண்ணறே? நான் அவனை இடித்ததில் எந்த சலனம் இல்லாமல், மடியில் ஒரு கிளீப் வைத்த அட்டையும் அதன் மேல் பேப்பரையும் வைத்து கையில் ஒரு பேனாவுடன் ஆகாயத்தை பார்த்து உட்கார்ந்திருந்தான்.

நான் கேட்டது அவன் காதில் விழாதது போல் உட்கார்ந்திருக்கவும், மீண்டும் பயந்து குனிந்து அவனை உலுக்கினேன். டேய் காத்தவராயா? என்னாச்சு? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கே? அடுக்கடுக்காய் கேள்விகள் இலவசமாய் என் வாயில் இருந்து வெளியேறின.

இத்தனை கேள்விகள் கேட்டும் அவன் உஸ்..என்று வாயில் விரலை வைத்து சைகை காட்டி விட்டு குனிந்து அந்த பேப்பரில் ஏதோ எழுதினான்.

எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது, அட்டையை பிடுங்கி பார்க்க நான்கைந்து வரிகள் எழுதியிருந்தது. என்ன இது?

கவிதை, கவிதை, இரண்டு முறை சொன்னவன், சே என் மூடை கெடுத்துட்டே, சலித்துக் கொண்டான்.

ஏண்டா இந்த நேரத்துல வந்து இங்க உட்கார்ந்துட்டு மூடை கெடுத்துட்டேன்னு சொல்றே? கோபத்துடன் கேட்டேன்.

லுக்..ஒரு கவிஞனுக்கு கால நேரம் கிடையாது, திடீருன்னு முழிப்பு வந்துடுச்சு, அப்ப எனக்கு கவிதை வரி தோணுச்சு, லைட்டை போட்டுட்டு உள்ள உட்கார்ந்து எழுதுனா, பசங்க சண்டைக்கு வருவானுங்க, அதுதான் இங்க உட்கார்ந்து எழுதலாமுன்னு வந்தேன். அதுல கூட சிவ பூஜையில கரடி மாதிரி வந்துட்டே.

ஏண்டா இப்ப என்னை கரடிங்கறே? சரி இப்ப என்ன அப்படி முக்கியமான வரி வந்துருச்சு, அதை சொல்லு.

அப்படி வா வழிக்கு என்பது போல் பார்த்தவன் கேளு

“வான வில்லாய் தெரிகின்றாய்’

கொடிகளை போல் வளைகின்றாய்

சந்திரன் போல் ஒளிர்கின்றாய்

எப்படி என்பது போல் பார்த்தான்.

அது சரிடா இப்படி வர்ணிக்கற அளவுக்கு அப்படி யாரை வர்ணிக்கறே?

அதை மட்டும் சொல்ல மாட்டேன்.கண்டிப்பா சொல்லனும்னா என் பக்கத்துல உட்காரு. இன்னும் நாலஞ்சு வரிதான் முடிச்சுடறேன்.

முதல்ல வந்த வேலைய முடிச்சுட்டு வந்துடறேன்.வேகமாய் பாத்ரூமுக்குள் சென்று விட்டு வெளியே வந்தவன் யோசித்தேன், எப்படியும் தூக்கம் வர அரை மணி நேரமாவது ஆகும், அதுவரை இவன் கூட இருந்துதான் பார்ப்போமே. முடிவு செய்தவன் அவன் அருகிலேயே உட்கார்ந்து கொண்டேன்.

அவன் இப்படி ஆகாயத்தை பார்த்து திடீரென்று ஒரு வாக்கியத்தை சொல்லி எப்படி இருக்குது என்பான், எனக்கு புரிந்தது போல் வெற்று தலையை மட்டும் ஆட்டுவேன். அவன் மனசில்லாமல் பார்ப்பது போல் பார்ப்பான். சரி பாராட்டித்தான் வைப்போமே, சூப்பர்டா என்று சொன்னவுடன் அவன் அடைந்த பிரகாசம்…. அடடா

அதற்குள் எங்கள் பேச்சு சத்தம் கேட்டு நான்கைந்து பேர் வெளியே வர, நானே முன் நின்று காத்தவராயன் கவிதை எழுதிக்கிட்டு இருக்கான், அவனை தொந்தரவு பண்ணாதீங்க, சொல்லி எல்லாம் முடிஞ்சவுடன் யார் அந்த பொண்ணுன்னு சொல்லுவான். தேவைங்கறவங்க மட்டும் அவன் கூட உட்கார்ந்து கவிதைய கேளுங்க, மத்தவங்க, போய் படுங்க.

சிலருக்கு இரண்டு மனசுடன் தவிப்பதும் தெரிந்தது, தூக்கமும் வேண்டும், அதே நேரத்தில் காத்தவராயனின் மனம் கவர்ந்தவள் யாரென்றும் தெரிய வேண்டும் மனமில்லாமல் போய் படுத்தவர்கள் சிலர் மட்டுமே. மற்றவர்கள் காத்தவராயனுடன் ஆகாயத்தையும், அவன் எழுதுவதையும் தூக்க கலக்கத்துடன் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

எப்படியோ அவன் எழுதி முடிக்க ஒரு மணி நேரமாகி விட்டது. எழுதி எல்லோரிடமும் வாசித்து காட்டினான். நாளைக்கு இதை வெட்கத்துடன் ஒரு பெண்ணின் பெயரை சொன்னான். இதுவரை பேசியிருக்கியா? ஹூஹூம், வெறும் பார்வையோடு சரியாம்.

யாருக்கும் தெரியவில்லை, புரியாமல் பார்க்க, அவன் அவள் ஏதோ கல்லூரியில் படித்து கொண்டிருப்பதாக சொன்னான்.

காலையில் அவனுடன் நாங்கள் நான்கைந்து பேர் உடன் செல்ல, அவன் ஏதோ பெரிய காரியம் செய்பவன் போல் வந்தவன் ஒரு இடம் வந்தவுடன் அப்படியே விறைத்து நிற்க, நாங்கள் உஷாராகி யார் என்று ஆவலுடன் பார்த்தால்

பத்தாவதோ பனிரெண்டாவதோ படிக்கும் பையன், இவனிடம் வந்தவன் அண்ணா ரெடியா? என்று கேட்டான். இவன் கையில் இருந்த பேப்பரை அவன் கையில் கொடுத்தான் அவன் வாங்கி படித்து பார்த்து ரொம்ப நல்லாயிருக்கு, தேங்க்ஸ் அண்ணா என்றான்.

எனக்கு கடும் கோபம். கொண்டா அந்த பேப்பரை உன் வயசுக்கு இதெல்லாம் தேவையா? வாங்கி பார்க்க “பாரதத்தின் பன்னிரு கைகள்” தலைப்பிட்டு கவிதை எழுதி இருந்தது.

காத்தவராயனை முறைத்து பார்த்தேன். ஏண்டா நேத்து ஏதேதோ கவிதை சொன்னியேடா?

நான் கவிஞன், உங்க கிட்ட சொன்னது வேறே, எழுதுனது வேறே. உங்களை எல்லாம் தொந்தரவு பண்ணாம தனியாத்தானே உட்கார்ந்து எழுதிகிட்டு இருந்தேன். இடையில வந்து இடைஞ்சல் பண்ணுனே, எனக்கும் போரடிச்சுகிட்டு இருந்துச்சி,அதான் உங்களை எல்லாம் பக்கத்துல உட்கார வச்சுகிட்டேன்.

இவனை நம்பி “நான்” மட்டும் ஏமாறாமல் இன்னும் நாலைந்து பேரை ஏமாற வைத்து விட்டதால், அவர்கள் என்னை முறைத்தனர்.

நான் மெல்ல நழுவினேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *