(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நான் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது தேர்வு சமயங்களிலெல்லாம் எனக்கு ஒரு யோசனை தோன்றுவது வழக்கம். அந்த யோசனையைக் கனம் கல்வி அமைச்சர் சட்டமாக்கிச் செயல்படுத்தினால் என் போன்றவர்கள் நன்மை யடையலாமே என எண்ணுவேன்.
ஆனால் அந்த எண்ணம் கடைசிவரை ஈடேறவேயில்லை. இப்பொழுது நான் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து வெகு காலமாகிவிட்டது. இருந்தபோதிலும் முன்பெல்லாம் எனக்குத் தோன்றிய அந்த யோசனையை இப்பொழுதாவது – இன்றைய கல்வி அமைச்சராவது சட்டமாக்கிச் செயல்படுத்தினால் என்ன?
முன்பு நான் படிக்கும் காலத்தில் தேர்வில் சித்தியடைய வேண்டுமானால் ஆறு பாடங்களில் சித்திபெற்றிருக்க வேண்டும் என்றிருக்கும். எனக்கோ ஐந்து பாடங்கள் தான் இருக்கும். அந்த ஒரு பாடம் இல்லாத காரணத்தாலேயே நான் சில சமயம் பரீட்சையில் குண்டுபோட வேண்டி வருவதுண்டு. ஆனால் அதே நேரத்தில் எனது நண்பர்கள் சிலர் அனாவசியமாக தேவைக்கு அதிகமாக ஏழு எட்டுப்பாடங்களில் சித்தி அடைந்திருட்டார்கள்.
அந்தச் சமயத்தில் எல்லாம் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த யோசனை எனக்குத் தோன்றும். அதைக் கனம் கல்வி அமைச்சர் சட்டமாக்கிச் செயல்படுத்தினால் என்ன என்று எண்ணுவேன்.
இன்னும் சில சந்தர்ப்பங்களில் பரீட்சைக்குத் தேறு எதற்சான ஆறு பாடங்களுக்கு ஒரு பாடத்தில் மட்டும் சில புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை இருக்கும். அதாவது முப்பத்தி ஐந்து புள்ளிகள் இருக்க வேண்டிய ஒரு பாடத்தில் முப்பது புள்ளிகள் தான் இருக்கும், அந்தக் காரணத்தினால் கூட நான் ஒருமுறை அதே வகுப்பில் மீண்டும் காலம் கழிக்க வேண்டிய பரிதாபநிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் எனது வகுப்புச் சக மாணவர்கள் சிலரிடம் அளவுக்கதிகமாக எக்கச்சக்கமாக அந்தப் பாடங்களில் புள்ளிகள் இருக்கும்.
அப்பொழுது கூட நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த யோசனை எனது மனத்தில் தட்டுப்படும்.
“மாணவர்கள் தாம் விரும்பினால் தேர்வின் போது ஒருவருக்கொருவர் பாடங்களையோ புள்ளிகளையோ தானம் செய்யலாம் அல்லது கடனாகக் கொடுக்கலாம்’ என்பதுவே அந்த யோசனையாகும்.
மேற்படி எனது யோசனையை அப்போதைய கல்வி அமைச்சர் சட்டமாக்கிச் செயல்படுத்தியிருந்தால் என் போன்றவர்கள் வீணக இரண்டு மூன்று ஆண்டுகளைக் கூடுதலாகக் கல்லூரிகளில் தியாகம் செய்திருக்கவேண்டி வந்திராது. இரண்டு மூன்று ஆண்டுகள் முன்னதாகவே எஸ்.எஸ்.சி. கொம்பிளீற் பண்ணியிருக்கலாம்.
எமது கெட்ட காலம், அப்போதைய கல்வி அமைச்சருக்கு இந்த யோசனை தோன்றவில்லை. இனிமேலாவது இதைச் சட்டமாக்கிச் செயல் படுத்தினால் வருங்கால மாணவ சமுதாயமாவது நன்மை அடையலாம் என்பதை மிக அழுத்தம் திருத்தமாக் கூற விரும்புகிறேன்.
கடன் தானம்!
ஆறு பாடங்களில் சித்தியடைய வேண்டிய இடத்தில் ஒரு மாணவன் ஐந்து பாடங்களில் சித்தியடைந்திருக்கிறான். அவனது நண்பனோ ஏழு பாடங்களில் சித்தியடைந்திருக்கிறான். அப்பொழுது ஐந்து பாட மாணவன் ஏழு பாட மாணவனிடம் ஒரு பாடத்தை கடனாகவோ தானமாகவோ தரும்படி கேட்கலாம். ஏழு பாட மாணவனும் அதற்கு விரும்பினால் சம்மதிக்கலாம். இப்பொழுது இரண்டு மாணவர்களுமே ஆறு பாடங்கள் சித்தியடைந்ததாகக் கருதப்படுவார்கள். ஒரு பாட இல்லாத காரணத்தினால் ஐந்து பாடங்கள் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வில் குண்டு போடுவது தவிர்க்கப்படும்.
இன்னும் ஒரு மாணவன் கணித பாடத்தில் இன்னும் ஒரு பத்துப் புள்ளிகள் பெற்றால் தான் ஆறு பாடங்கள் சித்தியடைந்ததாக முடியும் என வைத்துக்கொள்வோம். அதே சமயத்தில், அவனது நண்பனிடம் அந்தப் பாடத்தில் எழுபது புள்ளிகள் இருப்பதாகக் கொள்வோம். அவன் மட்டும் ஒரு பத்தோ பதினைந்து புள்ளிகளை முன் சொன்ன மாணவனுக்குத் தானம் செய்தால் என்னவாம்? தானம் செய்தவனுக்குக் கணிதத்தில் ஒரு பத்தோ பதினைந்து புள்ளிகள் குறைந்தாலும் இன்னொருவனைத் தூக்கிவிட்ட புண்ணியமும் உண்டாகுமல்லவா?
வேலையில்லாத் திண்டாட்டம்
எனது யோசனை என்னவோ நன்றாக இருந்தாலும் அது சட்டமாகிச் செயல்படுத்தப் பட்டால் படித்தவர்கள் தொகை அதிகரித்து விடும். அரசாங்கம் சமாளிக்கமுடியாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகிவிடும் என்று சிலர் கண்டிக்கலாம்.
ஆனால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். படித்தவர்கள் பெருகிவிட்டால் அவர்களுக்கெல்லாம் அரசாங்கம் வேலைகள் வழங்கித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. இது வரை அப்படி நடந்ததும் இல்லை. அரசாங்க வேலைகளுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்குக் கூட வேலை வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப் படாதபோது எஸ்.எஸ்.ஸி. காரர்களுக்கெல்லாம் வேலைகள் கொடுக்கவேண்டும் என்பது எப்படி நியாயமாகும்?
தவிர, நான் குறிப்பிட்ட யோசனை செயல்படுத்தப் பட்டால் எஸ்.ஸ்.ஸி. காரர்கள் அதிகரித்து விடுவார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அது நூற்றுக்கு நூறு அதிகரிக்கும் என்பதுவும் தவறு. மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டும் என்ற பேராசைக்காரர்களும், ஒருசதம் கூட வீணாக்கக் கூடாது என்ற கஞ்சத்தனம் கொண்டவர்களுமாக எம் மத்தியில் பல மனிதர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அப்படிப் பாடங்கள் புள்ளிகள் போன்றவைகளில் பேராசை கஞ்சத்தனம் காட்டக்கூடியவர்கள் மாணவர்கள் மத்தியிலும் இருப்பார்கள் என்பதை மறுக்கமுடியாது. எனவே திறமைசாலி மாணவர்களிலும் நூற்றுக்குப் பத்தோ பதினைந்து பேர்கள் தான் இத்தகைய தானம் செய்யக்கூடிய பக்குவ நிலையில் இருப்பார்கள்.
நான் கூட இந்த யோசனையைச் சட்டமாக்கிச் செயல்படுத்தச் சொல்லுவது வேலைகளுக்காக அல்ல. இப்பொழுது நாம் எல்லாரும் சதாரண ஒரு மனிதனாக நடமாடுவதென்றாலும் அதற்குக் குறைந்த பட்சம் எஸ்.எஸ்.ஸி. என்ற தகுதியாவது வேண்டும் என்றாகிவிட்டது. இந்தக் குறைந்த பட்சத் தகுதியையாவது இன்றைய மாணவ குலத்துக்குக் கொடுப்பதற்கு நாம் எதற்காகத் தயங்கவேண்டும்? அதற்காகவே இந்த யோசனை.
எனது இந்த யோசனையைச் சட்டமாக்கிச் செயல் படுத்துவது சம்பந்தமாக ஏன் கனம் கல்வி அமைச்சர் கவனம் எடுக்கக் கூடாது?
– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.