கல்யாண சமையல் சாதம்..!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 48,825 
 
 

கல்யாணத்துக்கு போரதெல்லாம் குலு மனாலி க்கோ, சுவிட்சர்லாந்துக்கோ டூர் போற மாதிரி ரொம்ப அனுபவித்து செய்ய வேண்டிய விஷயம்.. ! ஆனா அஞ்சு பைசா செலவில்லாம , சில பல விஷயங்களை கரெக்டா நூல் புடிச்ச மாதிரி செஞ்சிட்டா.. மூனு நாள் கல்யாணமா இருந்தாலும் மண்டப வாசத்தையே அனுபவிச்சு வாழ்ந்துட்டு வரலாம்…!

சில கல்யாணத்துக்கு ஒருவேளை ஓடிப்போய் , அரக்க பறக்க தலைய காமிச்சிட்டு வருவோம்…! அப்ப கூட இந்த ரூல்ஸையெல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணினா.. மணக்க மணக்க , சிந்தாம , சிதறாம, தலையச் சொரியாம முதல் மரியாதையோட வயிறும் மனசும் ரொம்ப அனுபவிச்சிட்டு வரலாம்…! சுருக்கமா சொன்னா..!! வைக்கிற மொய்ப் பணத்துக்கு (வைக்கிற பழக்கம் இருந்தா)மேலயே ராஜ உபசாரத்தோட திரும்புவது உறுதி..!

சொந்தக் காரங்க கல்யாணமா இருந்தா.. மொத நாள் நைட்டே மண்டபத்துக்கு போய் இறங்கிட வேண்டியது ரொம்ப முக்கியம்.! கண்டிப்பா முன்னாடி நாலு ப்ளாஸ்டிக் சேர்ல , நாலஞ்சு பெருசுகள் உக்காந்து, பழங்கால கதையடிச்சிண்டிருப்பது சகஜமான வழக்கமான காட்சிதான்..! பக்கத்துல பல பேர் நடந்து நடந்து..!! பலகாலமா தோய்க்காத பெரிரிரிய.. பட்டை பட்டையா கோடு போட்ட பவானி ஜமக்காளம் கெடக்கரதும்… அதை மதிக்காம சின்ன சின்ன வாண்டுகள் அது மேலயே ஓடிப் பிடிச்சு விளையாடிண்டு இருக்கர்தும் ரெகுலரான காட்சிகள்..!

கண்டிப்பா.. மண்டபத்துக்கு போய் இறங்கும் போது.. ஒரு கால் டாக்ஸில போய் இறங்க வேண்டியது ரொம்ப அவசியம் !. இல்லன்னா அட்லீஸ்ட் தெரு முக்குலயாவது ஒரு ஆட்டோ பிடிச்சு போய் எறங்கணும்..! அம்பது ரூபா போய்த் தொலைகிறது.! என்ன பண்ரது..?! அதிமுக்கியமான விஷயம்.. ட்ரைவரிடம் பேரம் பேசக் கூடாது..! எவ்வளவு குடுக்கறீங்கன்னு பார்க்க பல பல பழைய எண்ணெய் இறங்கிய கண்ணாடி போட்ட கண்களும், வைரத் தோடு போட்ட காதுகளும் , வெய்ட் பண்ணின்டு இருக்குன்னு புரிஞ்சிக்கணும்..! அவங்கதான் மண்டபத்துல அரட்டை கமேண்டோ படை.! அந்த மூனு நாளும்.., உக்காந்த இடத்துல இருந்தே நம்மளாட சமூக, பொருளாதார பின்னணியை அக்கு வேறா, ஆணி வேறா அலசி ஆராய்ஞ்சு.. அகில உலகிற்கும் ப்ராட்காஸ்ட் பண்ணிடுவாங்க இந்த கமேண்டோ படை..!

கண்டிப்பா நீங்க குடும்பத்தோட போய் இறங்கின உடனே.. நாலஞ்சு வாண்டுகள் ஓடி லந்து “அத்திம்பேர்.. அத்திம்பேர்.. ஜமுனா அத்த ..எப்படி இருக்கேள்.!” னு காலக் கட்டும்..! “வாடா வாடா சபேசா.!? பிரயாணம்லாம் சௌகர்யமா இருந்ததா.? மெயில்ல வந்தியா.? பஸ்ஸா..? ” னு கேக்க ஆரம்பிச்சிடுவாங்க நம்ம தாத்தாக்கள் க்ரூப்பு.. ஆனா உக்காந்திருக்கிற சேர விட்டு இன்ச் கூட எழுந்துக்க மாட்டாங்க.! நாம யாரோட பேச்சுக்கு பதில் சொல்லிண்டே.. யார்கிட்ட போய் கைய புடிச்சிண்டு குசலம் விசாரிக்கறோம்கரதுதான் இப்ப ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்..! இதை வெச்சுத்தான் மூனு நாளும் நமக்கான அரட்டை பார்ட்னர் கிடைக்கப் போறதுங்கரத நாம மனசுல வெச்சிக்கணும்..!

“அடடே..!! பெரியப்பா..சவுக்கியமா.! நாணா டேய் ..! எப்படிரா இருக்க.! முதுகுல கட்டி ன்னயே தேவலயா?ஆத்துக்காரி சவுக்கியமா..? ஜாக்கா மாமி …!! எப்ப வந்தேள் ? மெலிஞ்சிட்டேளே..! மாமா எங்க உள்ள இருக்காளா.? ” னு அத்தன பேரையும் ஒரே சமயத்துல அட்டெண்ட் பண்ணினாத்தான் அந்த ஒட்டு மொத்த க்ரூப்பையே சந்தோஷப் படுத்த முடியும்கரதை மறக்க வேண்டாம்…!

பேச்சு பேசும்போதே.. கையில இருக்கிற பெட்டியை நைஸா ஒரு வாண்டு கிட்ட குடுததுட்டு மாமிய க்கு ரூமக் காட்டுடா விக்கி னு அவன் தாவாகட்டைய புடிச்சி செல்லமா ஒரு கொஞ்சலைத் தட்டி விடணும்.. அதேசைமயம்.. நம்மை முதலில் விசாரித்த பெரியப்பா கையை கெட்டியா புடிச்சிக்கணும்..அப்படியே நாணாவைப் பார்த்து சிரிக்கணும்…! இதை மட்டும் சரியா செஞ்சிட்டா.. உங்களுக்கான பொட்டி படுக்கை வெக்க சரியான இடமும் .. நைட்டு தூங்க ஏசி ரூமும் கட்டாயம் கிடைக்கும்..!

“டேய்..சபேசா..! அலுப்பா வந்திருப்ப..! என் ரூமிலயே சாமான்லாம் வெச்சிடு..!! மாடியில லெஃப்ட்ல ரெண்டாவது ரூம்..! ஏசி ரூம்தான்..! பெட்டு பக்கத்துல ஏசிக்கு கீழ பொட்டிய வெச்சு இப்பவே எடம் புடிச்சிக்கோ.! “ன்னு பெரியப்பாவே ஐடியா தருவது திண்ணம்..!

உடனே அந்த க்ரூப்பை விட்டு உள்ள போயிடக் கூடாது..! ஒரு பத்து நிமிட அரட்டை கட்டாயம் இருக்கணும்..! அதுலயும் முக்கியமா வர வழியிலயே பெண்டாட்டிகிடட யார் யாருக்கு என்ன என்ன நோய் இருக்கு..?! யார் ரீசண்டா பைபாஸ் பண்ணின்டாங்க.?! யார் பையன் அமெரிக்கா போயிருக்கான்.?! யாருக்கு வேல கிடச்சிருக்கு.?! னு விஷயங்களைைசேகரிச்சு வெச்சிண்டா.. இங்க பேசரதுக்கு கன்டென்ட் ப்ரச்சினையே இருக்காது..! கண்டிப்பா பெரியப்பா கைய அழுத்தி பிடிச்ச உடனே “என்ன பெரியப்பா வீக் ஆயிட்டளே.?! . முன்ன மாதிரி பலம் இல்லையே..?!” னு எதையாவது கேட்டு அவங்க மூஞ்சியை மலர வைக்க்வேண்டியது காலத்தின் கட்டாயம்..!

“போறும் சபேசா..! டயர்டா வந்திருப்ப..! ட்ரெய்ன்ல வெயில் எப்படி இருந்தது.?” ன்னு வைர பேசரி பார்ட்டிங்க யாராவது கேட்டா..! டக்குனு உஷாராயிடணும்…! “இல்ல அத்தை..! ஏசிலதான் வந்தோம் வெயிலலெல்லாம் ஒன்னுமில்லை..! ஆனா இப்பெல்லாம் எங்க ட்ரெய்ன்ல ஏசிலாம் ஒழுங்கா ஒர்க் பண்ரது? டெம்ப்பரேச்சர வேற கூட்டி வெச்சிடரானுக…ஏதோ காத்து வந்தா சரின்னு வர வேண்டியதுதான் னு அலுத்துக்கணும்..! ”

அப்படியே பெரியப்பா கைய லூசா விட்டுட்டு.. அவர பிரிய மனமில்லாம .. “இதோ ட்ரெஸ் மாத்திண்டு உடம்ப அலம்பிண்டு வர்ரேன் பெரியப்பா.!” னு சொல்லிண்டே.. மாடி ரூமுக்கு போய்.. பொட்டி படுக்கையெல்லாம் வசதியா பத்திரமா இருக்கானு பார்க்க வேண்டியது ரொம்ப முக்கியம்..! இல்லன்னா நைட்டு தூக்கம் வந்த பாடுதான்.. எங்கியாவது ரேழிலயோ.. மேடை பக்கத்திலயோ.. மேளக்காரங்க பக்கத்திலயோதான் நைட்டு கொசுக்கடியில தூங்க வேண்டி இருக்கும் உஷார்..!

இதுக்குள்ள ரூம்ல பெண்டாட்டிய சுற்றி ஒரு கமேண்டோ படை உக்காந்திருக்கும்..! ஜூனியர் ஆபீசர்.. கர்னல்.. மேஜர்.. டவாலி. முப்படைத்தளபதி னு எல்லா ரேங்க்லயும் இருக்கும் அந்தப் படை..! “இதை எப்ப டீ வாங்கின..? அதை எப்ப டீ வித்த.! இது உனக்கு ரொம்ப மேட்ச் ஆறத டீ.! என்ன வண்டி வெச்சிண்டு இருக்கீங்க.? ஏதாவது ப்ரமோஷன் வந்ததா? வீடு வாங்கிட்டேளோன்னோ.?” னு பல வித அஸ்திர சஸ்திரங்கள் தொடுக்கப் படும்.. பலவிதமான கைத்துப்பாக்கி.., மிஷின் கன், பசூக்கா னு பாய்ண்ட் ப்ளாங்க்ல சடசடன்னு அடிக்கும் இந்த கமேண்டோ படை…! ஆனா கவலப் படாதீங்க.. இந்தப் படையை எப்படி சமாளிக்கணும்னு நம்ம வீட்டு மேஜர் ஜெனரலுக்கு நல்லாவே தெரியும் ..!

பெட்டிய தொறந்து நாப்தலீன் பால்ஸ் மணத்தோட ஒரு டர்க்கி டவலையும்..கவர் பிரிக்காத மைசூர் ஸேண்டில் சோப்பையும் ( இந்த ஐட்டம்லாம் ரொம்ப முக்கியமான விஷயங்கள்..! அலட்சியமா.. வழக்கமான சிகப்பு மலையாளத்துண்டையும் ..தேய்ச்சு.. தேய்ச்சு தேஞ்சு போன , பழைய ரெக்ஸோனாவையும் கொண்டு போயிடாதீங்க ப்ளீஸ்.! ) பொண்டாட்டி கிட்ட இருந்து வாங்கிண்டு மூஞ்சி அலம்ப .. கை அலம்பர இடத்துக்குத்தான் போகணும்… !

சட்டைய கழட்டி ஒய்ஃப் கிட்ட குடுக்கும் போது, மொத நாள் முத்தூட்ல இருந்து திரும்ப எடுத்த கழுத்துச் செய்ன் பள பள ன்னு எல்லார்க்கும் தெரியனும் ..! பாத்துக்கங்க..! யார்கிட்ட பைசா பொரட்டுவீங்க ங்கரது உங்க பாடு..!

” மாப்ள எங்கபோறீங்க..? இதே அட்டாச்டு பாத் ரூம் இருக்கே.?” ன்னு ஜாக்கா மாமி சொன்னா கூட. “இல்ல மாமி..! காத்தாட வெளி பைப்புக்கே போய் அலம்பிக்கிறேன்.” னு சொல்லிடணும்.! ஏன்னா நமக்கு அங்க வேற ஒரு முக்கியமான வேலையும் இருக்கே..?!

கைகாலை அலம்பிண்டு அங்க இருக்கிற யார்கிட்டயாவது சத்தமா குசலம் விசாரிச்சிண்டே அக்கம் பக்கம் பாத்தா.. சமையக் கட்டு தெரியும்.. அங்க நெறைய பேரு லேடிஸும் ஜென்சுமா உக்காந்து கோசும் கத்திரிக்காவும் மலை மலையா வெட்டிண்டு இருப்பாங்க..! அது ல ஒருத்தர்.. வாயெல்லாம் பன்னீர் புகையிலையோட அங்க இங்க நடந்துண்டு அவங்கள வேலைவாங்கிண்டு இருப்பதையும் பார்க்கலாம்..! அவர்தான் நம்ம டார்கெட்..! ஏன்னா அவரதான் சமையல் கான்ட்ராக்டர்..! நம்மள ரெண்டு நாளைக்கு மகிழ்ச்சியடையச் செய்யப் போரதும் அவர்தான்.!

கல்யாணத்துல மிக மிக முக்கியமான விஷயம்னா அது சாப்பாடுதானே.? மாப்பிள்ளையோட முகமும்.. பொண்ணோட முகமும் மறந்து போன பல கல்யாணங்களில் , நெய் ஒழுகிற ரவா கேசரியும், கத்திரிக்கா கொத்சும்தான நம்ம மனசில இன்னும் நிக்கிறது?

மைசூர் ஸேண்டில் சோப்ப தண்ணிய ஒதறிட்டு பாத்து பக்குவமா திரும்ப ரேப்பர்ல நுழைச்சு துண்டுல சுத்திண்டு நைசா நம்ம டார்கெட்ட நோக்கி நகரணும்.!

” மாமா.! நீங்கதான் சமையல் காண்ட்ராக்டா..! பெரியப்பா சொன்னா வாசல்லயே.. சாயந்திரம் காஃபியும் மைசூர் போண்டாவும் அசத்திட்டீங்களாமே?! ” ன்னு கேசுவலா நம்ம ஈட்டிய எடுத்து டைரக்டா அவர் நடு மண்டையில நச்சுனு எறக்கிட்டு அவரையே உத்து பார்க்கணும்…! கண்டிப்பா வெத்திலை போட்ட வாய் பெரிசா விரியும் பாருங்கோ..?! அதுதான் மீன் தூண்டில்ல மாட்ர நேரம்..!

“அது என்ன சார் பெரிய விஷயம்..?” “எல்லாம் பெரியவா ஆசீர்வாதம் !” னு அவர் பதில் சொல்லுவார்.!

“இல்ல மாமா அப்படி ஈசியா சொல்லிடாதீங்கோ..! கை பக்குவம்ங்கரது ஒரு வரப் ப்ரசாதம்.. எக்ஸ்ப்பீரியன்ஸூம் வேணும்..! கடவுள் அனுக்கிரஹமும் வேணும்..! சின்சியாரிட்டி இருந்தா ..தானா கிடைக்கும்னு சொல்லிண்டே..!!” என்ன காண்ட்ராக்ட் ..? பேரு என்ன மாமா” னு கேக்கணும்.!

“பேரா..? எம்பேரு.. வேணு ! தாம்பரத்துல ஜாகை..! நளா கேட்டரிங் னு பேரு.!” ன்னு சொல்லிண்டே..! காய்கறி வெட்ரவர்கிட்ட கண் ஜாடை காட்டின உடனே அவர் மூக்குப் பொடி போட்ட மூக்க சிகப்பு துண்டால தொடைச்சிண்டே பக்கத்துல தேடி. ஜிப் வெச்ச கககத்துல இடுக்கிக்கிற ஹேண்ட் பேக்ல இரு்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்துண்டு வந்து ஓடி நீட்டுவார்..! அதை அலட்சியமா வாங்கக் கூடாது..ரொம்ப முக்கியத்துவத்தோட வாங்கி! அட்ரஸெல்லாம் படிச்சிட்டு..! “ஓ..! சானிட்டோரியமா? அகஸ்த்தியர் ஸ்ட்ரீட் பக்கம்தானா? னு தெரிஞ்ச மாதிரி விசாரிச்சிண்டே கவனமா பர்சுல கார்டை எடுத்து வெச்சிண்டே..! “இன்னொரு கார்டு குடுங்கோ மாமா. ன் ஷட்டகர் பையணுக்கு அடுத்த மாசம் பூணூல் வருது…! அவனாண்ட குடுக்கரேன்!” னு அக்கறையா கேட்டு வாங்கிக்கணும்..!

“சரி மாமா.. காலைல என்ன மெனு.. ? ரவா கேசரி, பொங்கலா? தொட்டுக்க என்ன தேங்கா சட்னி.. கத்திரிக்கா கொத்சா ??” னு விசாரிச்சிண்டே வெட்ர காய்கறியெல்லாம் ஒரு நோட்டம் விடணும்..! ” பூரி போடரேளா மாமா..? உருளக் கிழங்கு வெட்ரேளே ?!” ன்னு அக்கறையா விசாரிச்சா.. வேணு மாமா மனசுல ஆயிரம் பேர் வயலின் வாசிப்பது உறுதி.!

கூடவே.. “கல்யாணம்னாலே சாப்பாடுதான மாமா! வர்ரவா வயிறு நிறைஞ்சாத்தானே மனசும் நெறையும்..?! இப்பெல்லாம் அந்த சின்சியரிட்டியோட யார் இருக்கா சொல்லுங்கோ ?” ன்னு கேட்டுகிட்டே… “வர்ரேன் மாமா..! ஏதாவது வேணும்னா எங்கிட்ட சொல்லுங்கோ.! கண்டிப்பா அனுப்பரேன்னு .. “கூட ஒரு எக்ஸ்ட்ரா பிட்டையும் போட்டுட்டு அங்கிருந்து நகர்ந்துடணும்..!

மண்டப ஹால் மூலைல கண்டிப்பா ஒரு சேர்ல , ஒரு எவர்சில்வர் தட்டுல வெத்திலயும்.. சுண்ணாம்பும்.. நாலஞ்சு களிப்பாக்கும் இருக்கும் .. அதுல நாலஞ்சு வெத்தில பாக்க எடு்த்து சுண்ணாம்பு டப்பாவோட பக்கத்துல ஏதாவது வாண்டு சுத்திண்டு இருந்தா அது கையில திணிச்சி..” சமையல் ரூம்ல வேணு மாமா கிட்ட குடுத்துட்டு வாப்பா!” னு சொன்னீங்கன்னா.. வேணு மாமா கண்ல ஜலம் வருவது உறுதி.! காசா பணமா.. தட்டி விடுங்க..!

நைட்டு எப்படியும் கண்ணசற பனிரெண்டு பனிரெண்டரையாய்டும்…! நம்மளோட வின்டோ ஏசி ..முன்னாடி கவர் போய், தேங்கா நாரு வெளிய தெரிய.., குடல் வெளிய வந்த இரணிய கசிபு குறட்டை விடர மாதிரி..கொர்ருனு உரும… இரணிய கசிபு மடியில …நரசிம்மனா நாம வாயப் பொளந்துண்டு ஏசி கீழ சுவத்தோட ஒட்டிண்டு கெடக்க..!! ரூம் முழுக்க அதுக்கு எசப்பாட்டா நிறைய வைரத் தோடுகளும் , எட்டு கட்டையில ஸ்வரம் பாடும் போது , நாரத கான சபா கச்சேரி மாதிரி.. தூக்கம் எங்கத்த வரும்.? டயர்டுல விடிகாலையில கண்ணசந்தாத்தான் உண்டு..!

ஆனா காலங்காத்தால நாலரை மணிக்கே.. “அடியேய்..! சீதா லஷ்மி எழுந்திருங்கடி.. டைம் ஆறது.. ! மூகூர்த்தம் காலங்காத்தாலயே.!! தெரியுமோல்யோ?!” னு ஏதாவது ஒருவைரத் தோடு மத்தவங்களையும் தூங்க விடாம எழுப்பும்…! சரக்கு புருக்குனு, பட்டுப்பாவாடையோட, ஒன்னு ரெண்டு பெண் குழந்தைகள் கதவத் தொறந்துண்டு, உள்ள வர்ரதும்.. பாத் ரூமுக்குள்ள பாவாடையத் தூக்கிப் பிடிச்சிண்டு ஓடரதும்..! வெளிய போகும் போது கண்ணாடில வாய் லிப்ஸ்டிக் இருக்கா..?! எச்ச பட்டு முழுங்கிட்டமான்னு செக் பண்ணிக்கரதும்..!! சைலண்டா உக்காந்து ரசிக்க வேண்டிய காட்சிகள்..!! வழக்கம் போல விடலப் பசங்க கால விரிச்சிண்டு ஆ ..! ன்னு தூங்குங்கள்…! எழுப்பரதுக்குள்ள அம்மாக்காரிகளுக்கு உயிர் போய் உயிர் வந்துடும் டெய்லி..!

நாம அதே கவர்ல வெச்ச மைசூர் ஸேண்டிலயும்.. டர்க்கி டவலயும் எடுத்துண்டு.. யாரோட ப்ரஷ்ஷூனு தெரியாத , ஏதோ ஒரு குடும்ப ப்ரஷ்ல , (அது நம்ம வீட்டு ப்ரஷ் ஷூங்கர வரைக்கும் சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான் !! ) பேஸ்ட்ட பிதுக்கி்ண்டு அதே குழாயடிக்கு பயணப் பட வேண்டும்.!

” அப்படியே குளிச்சிட்டு வந்திருங்களேன்..!!” என்ற மனைவியின் குரலைக் காதில் வாங்கிக்கவே கூடாது..! இன்னும் குளிர் விடலை.. கெய்சர்ல வெந்நீர் இருப்பதும் கூட உறுதியில்லை என்பதை நினைவில் கொள்க..!

பல்ல தேய்ச்சிட்டு..! (இப்பதான் நம்மளோட முயற்சிகளின் பலனை அனுபவிக்கப் போறோம்.. ..!) நேரா நாம போக வேண்டியது… சமையக் கட்டுக்கு.. வேணு மாமா அங்கதான இருக்கார்?

“என்ன மாமா.. நல்லா தூங்கினேளா.? நீங்க எங்க தூங்கியிருக்கப் போறேள்.? கண்ணெல்லாம் செவந்து இருக்கே? வேல அதிகமா ?”னு வெசனப் பட்டுண்டே…! “நைட்டு வெத்தில பாக்கு சீவல் அனுப்பினேனே..! வந்துதா.?” ன்னு ஒருைபோடு போடும் போது.. வேணு மாமாகண்ல கண்டிப்பா நீங்க ஜலத்த பாக்கலாம் ..! நைட்டு மூனு மணிக்கு அடிச்ச கட்டிங் தெரிஞ்சிடப் போகுது ன்னு வாய்ல வெத்திலையக் கொதப்புவார்.!

“வாங்கோ சார்..! நீங்கதான் அனுப்பினேளோ..? ரொம்ப தேங்க்ஸ் சார்.. !” என்ற வாறே அவர் திரும்பிப் பார்க்கும்போதே.. பெரிய எவர்சில்வர் ஜக்குல.. அரையடி உயர லோட்டாவில கொட்டக் கூழா முதல் பால்ல.! முதல் டிகாக்க்ஷன் இறக்கி ஸ்ட்ராங்கா.. டிகிரி காப்பி , மணக்க மணக்க …நுரை பொங்க..உங்க முன்னால வந்து நிக்குமே?

இத… இத.. இதத்தான நாம எதிர்பார்த்தோம்..!? அந்த காலங்காத்தால அஞ்சு மணிக்கு..கட்டங் கூழா காப்பி குடிக்கர்தெல்லாம்…கஷ்டமே படாம.. பாற்கடலைக் கடையாமலேயே.. தேவாம்ருதம் குடிக்கற மாதிரி.. !

“ரொம்ப தேங்க்ஸ் மாமா னு.. ஒரு வாய் உறிஞ்சிட்டு… ! பசும்பாலா..! செம்மையா இருக்கே திக்கா? பொடி என்ன பொடி..? திரவியமா? லியோவா? நரசுஸா..? காஃபி டே வா .?” னு அவர் எதிர்பாக்காத அஸ்திரங்களை அள்ளிவிடணும் நாம..!

நாம ரசிக்கிறோம்னு தெரிஞ்சா வேணு மாமா மனசு குளிரும்தானே.?

அப்படியே தயாராகிற ஐட்டம்லாம் ஒரு பார்வை பாககணும்..! “ரவா கேசரி ரெடியாய்ரதா மாமா? அடடே வெண் பொங்கலா? எங்க அம்மா கைமணம் அடிக்கிற மாதிரியே ஒரு ப்ரமை மாமா!” ன்னு எக்ஸ்ட்ரா வெடியப் போட்டுட்டு.. “வர்ரேன் மாமா.. ஒய்ஃப் தேடிண்டு இருப்பா…” னு ! சொல்லிட்டு காஃபி சிந்தாம டம்ளரோட வீட்டுக்காரி முன்னால போய் நிக்கணும்..!

“உங்களுக்கு மட்டும் ஏது காப்பி? யார் குடுத்தா.. கமகம னு வாசனை வீசரதே.?” ன்னு நாலஞ்சு வைர பேசரிகள் கேட்கும்..! உடனே ஒரு வாண்டை அனுப்பி…” சமையக் கட்டுல வேணு மாமா கிட்ட நான் சொன்னேன்னு ஒரு ஜக்குல காஃபி கொண்டு வரச் சொல்லுமா.!”ன்னு கம்பீரமா சொல்லி அனுப்பனும் நாம..! “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” னு சொல்லியிருக்கே..!

சொல்லி அஞ்சே நிமிஷத்துல செகப் பு துண்ட வேஷ்டி மேல கட்டிண்டு நம்மாளு வருவார்… ! நம்மள பாத்து ஒரு கம்பீர புன்னகையோட..!

இப்படி எல்லாருக்கும் காஃபி அரேஞ்ச் பண்ணிக் குடுத்துட்டு ..ஒய்ஃப் ப கேஷூவலா ஒரு பார்வை பாக்கும் போது அவ கண்ணாலயே ..” நீங்க கெட்டிக்காரர்தான்னு சொல்லும்போது..!” அடடா…! அஞ்சு பவுன் நகை போட்டாலும் மனைவிங்ககிட்ட இப்படி ஒரு சர்ட்டிஃபிகேட் நம்மால வாங்க முடியுமா?? சொல்லுங்க..?!

காலைல டிஃபன் லயும் உங்களுக்கான பலன் கண்டிப்பா கிடைக்கும்..! பத்த வெச்சிருக்கிற வெடி அப்படியாச்சே.?!

மனைவியோட போய் மொத பந்தியில ஏழு மணிக்கெல்லாம் உக்காந்திடணும்..! வேணு மாமா பார்வையில படர மாதிரி..! நாணா வைப் பத்திலாம் கவலப் படக் கூடாது.! சாப்பிடு் போது அவன பாத்திட்டாலும்..! “டேய் நாணா..! எங்க போன .?. தேடினனே..!” மாமா .. நாணாவ கவனிக்க சொல்லுங்க.”ன்னு ஒரு ரெகமண்டேஷன அள்ளி வீசிட்டு நம்ம வேலயப் பாக்கணும் ஜரூரா..!

கண்டிப்பா வேணு மாமா உங்க பக்கம் வருவார்.. கேசரி எப்படி நெய் கரெக்டா இருந்துதா? ஸ்வீட் அதிகமா குறைவா னு நம்ம கிட்ட ஒப்பீனியன் கண்டிப்பா கேட்பார்..!

“அதெல்லாம் கரெக்டா அளவா இருக்கு மாமா.! உங்க கை பட்டா கேட்கணுமா? அதான்.. காஃபில யே தெரிஞ்சிடுத்தே..? வெண் பொங்கல் எவ்வளவு நேரம் குழையவிட்டேள் ? சூப்பரா வந்திருக்கே.! கத்திரிக்கா பெங்களூர் கத்திரிக்காதானே..?! வெண்ணெயாட்டம்.!!”. னு கேட்கும்போதே.. நம்ம செகப்பு மலையாளத் துண்டு மாமா வந்து நம்ம எலையில வெண் பொங்கல் தலையில ரெண்டு மூனு ஸ்பூன் நெய்ய விடுவார்.. இது நடக்கும்.. நடக்கணும்.! கூடவே ரெண்டு கர கர மெதுவடையும் வந்து விழும்.. நமக்கும் ஒய்ஃபுக்கும்..!

” எப்படீங்க இதெல்லாம் .?!”னு ஆச்சர்யமா வீட்டுக்காரி கண்ணாலயே வாயப் பொளக்கும் போதே..! “நளா கேடடரிங் ! தெரியாது உனக்கு..?! சானிடோரியத்துல ரொம்ப ஃபேமஸ்.! உங்க அக்கா புள்ள பூணலுக்கும் மாமாதான் ! நடராஜன்கிட்ட சொல்லலாம்னு இருக்கேன்.!” னு சொல்லச் சொல்லவே… வேணு மாமா ஜப்பான் ஸ்டைல்ல நம்ம வீட்டுக்காரம்மாவை வணங்குவார்.!

நாம வேணாம் வேணாம்னு சொல்லச் சொல்ல மூனு ரவுண்டு கேசரி. ரெண்டு தடவ பொங்கல்.. நாலஞ்சு மெது வடைன்னு மொசுக்கிட்டு .. லோட்டாவில கொட்டக் கூழ் காபியோட நாம கல்யாணத்தை”யும்” அட்டெண்ட் பண்ண ஹாலுக்குள்ள தம்பதி சமேதராய் நுழையணும்.. ! மறக்காம வேணு மாமா கிட்ட கை குடுத்து பாராட்டிட்டு . .!! அப்படியே மனைவிக்கும் நாலஞ்சு சமையல் டிப்சுகளை வாங்கிக் கொண்டு…!

கல்யாணம்லாம் நாம இல்லாமலேயே நல்லா நடக்கும் .. அதப் பத்தி பெருசா சொல்ல ஒன்னுமில்லை.. ஹோமப் புகையில மந்திரம் சொல்ரது.. தாலிகட்ரது.. கட்டிக்கரதெல்லாம் புரோகிதர் பாடு…! கல்யாண பொண்ணு மாப்ள பாடு…!! அத விடுங்க..!

மதியானம் சாப்பாட்டு நேரம் வரைக்கும்.. நாம ஜாலியா..பெரியப்பா.. நாணா.. ஜாக்கா மாமி. சில பல வைரத் தோடுகள் கிட்டலாம் மாத்தி மாத்தி அரட்டை அடிக்கலாம்..பத்தரை பதினோரு மணிக்கு இன்னொரு காஃபி கன்ஃபார்மா கிடைக்கும்..! தேடிவரும்.. ஆனா இந்த தடவை கொஞ்சம் தண்ணி அதிகமா பல முறை சுட வெச்சதா கூட இருக்கலாம்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.. எல்லாத்துக்கும் வேணு மாமாவ ரொம்ப தொந்திரவு பண்ணக் கூடாதில்லயா?

மதியான சாப்பாட்டுக்கு முன்னாடியே சமையக் கட்டுக்கு போய்.. ” மாமா..! ஏதாவது உதவி வேணுமா?வெத்தில பாக்கு இருக்கா..?! சாப்டேளா? னு குசலம் விசாரிச்சிண்டே.. என்ன மெனுன்னு பாத்துக்கணும்..! உருளக்கிழங்கு கறியா? பருப்பு உசிலி இருக்கில்ல.? மசால் வடை போடரேள் இல்லியா? என்ன பாயசம் ப்ளான் பணணியிருக்கேள்.?! . பால் பாயசமா? பருப்பு பாயசமா? ரசம் தக்காளி ரசமா? மைசூர் ரசமா ?” னு விலா வாரியா விசாரிக்கணும்..! வேணுமாமா கட கடன்னு மெனு கார்ட ஒப்பிப்பார்..! அரிசி அப்பளம்.. மிக்ஸ் ஊறுகா வரை முழு லிஸ்ட் வந்திடும்..!

“நீங்கதான் சார் முத பந்தியில சாப்டு பாத்துட்டு ஏதாவது கரெக்க்ஷன் இருந்தா சொல்லணும்.!” னு செல்லமா..உரிமையா உத்திரவும் போடுவார்..! நாம அங்க வந்திருப்பதன் தலையாய பணியே அதுதானே..?!

சாப்டுட்டு கண்ண சுழட்டுமே..! அதுக்குள்ள வந்திருந்த கூட்டமும் கம்மியாய்டும்..! மறுபடி சாயந்திரம் ரிசப்ஷனுககுத்தான் கூட்டம் வரும்.! மறக்காம பீடா ரெண்டு மூனு எடுத்து போட்டுண்டு .! ஏதாவது ஒரு ஃபேனுக்கு நேரா உக்காந்தருக்கிற கும்பல்ல போய் வசதியா ஒரு சேரப் போட்டுண்டு, அரை மணிநேரம் அரட்டை அடிச்சிட்டு…! சட்டயக் கழட்டி ண்டு நேரா ரூமுக்குள்ளபோய் ஏசிக்கு நேர் கீழ ஆஜராய்ட்டா.. மூனு மூனரைவரை ஒரு குட்டி தூக்கம் போடலாம்.! ஜீரணம் ஆகணுமே!

சரியா மூனரை மணிக்கு நம்ம செகப்பு மலையாளத்துண்டு மாமா வருவார்..! கையில காஃபி ஜக்கோட ..! “எழுந்திருங்கோ.. மூஞ்சி அலம்பிண்டு வாங்கோ..! காஃபி சூடா இருக்கு.!” னு நம்மள எழுப்புவார் பாருங்க..! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சபேச குமாரா…!!! ன்னு மனசுக்குள்ள சொல்லிண்டே.. எழுந்து உக்காந்து வழக்கம் போல பெரிய லோட்டாவில காஃபிய கையில வாங்கும்போதே .. நம்ம செகப்பு மலையாளத்துண்டு கையில பேப்பர்ல சுத்தி வெச்சிருந்த ரெண்டு மூணு மசால் வடைய லாவகமா நம்ம கிட்ட தள்ளிவிடுவார்..!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி.கொன்ன மகற்கு ..! னு ஒரு குறள் கூட இப்ப நம்ம ஞாபகத்துல வரும்..!

நைட்டும் இதே மாதிரித்தான் … டின்னர்ல.. பாதாம் ஹல்வாவும்..குலோப் ஜாமூனும்..! போர்ன்விட்டா கேக்கும் நாம கேக்காமலேயே நாலஞ்சு எக்ஸட்ரா கிடைக்கும்.! வென்னிலா ஐஸ் க்ரீம்கூட வெளுத்து வாங்கலாம்..!

சொல்லப் போனா கல்யாணத்துக்கு நம்மள கூப்பிட்ட கோபால் மாமா வ விட நம்மள நெறைய கவனிச்சிண்டது வேணுமாமா தான்னா அது மிகையில்லை.. !

நிற்க.. நமக்கு நைட் பத்தரை மணிக்கு ட்ரெய்ன்.! அது கண்டிப்பா மறக்காம ஞாபகத்துல இருக்கணும்..! லேட்டாய்ட்டா. ஒய்ஃப் ருத்ர தாண்டவம் ஆடரது உறுதி… இனிமே பேக் டு நார்மல் லைஃப் தான்! மனைவியோட பட்டமளிப்பு விழா நேரம்லாம் முடிஞ்சாச்சு.!

போகும் போது மறக்காம வேணு மாமவை மனைவி சகிதமா பாக்கணும்.! கண்டிப்பா ஷட்டகர் பையன் பூணுல்ல பாக்கலாம்னு அவர சந்தோஷப் படுத்த சொல்லணும்.! வாழ்க உங்க சமுதாயப்பணி ன்னு கிட்டத்தட்ட பரம் வீர் சக்ரா விருது மாதிரி… பத்ம பூஷண் மாதிரி எதையாவது சொல்லிட்டு.”.வர்ரேன் மாமா.!” னு சொல்லும்போது…!

நம்ம செகப்பு மலையாளத்துண்டு உள்ள இருந்து ஒரு ப்ளாஸ்டிக் கவரோட வருவார் பாருங்க.. அதுதான் ஹைலைட்டே…!! கவருக்குள்ள .. பாதாம் ஹல்லாவும். நாலஞ்சு போளியும்…. மசால் வடையும் இருக்கும்..! ட்ரெய்ன் ல போகும் போது நமக்கு பசிக்கும்னு அவருக்குத் தெரியுமே..?!

போகும் போது முடிஞ்சா .. நம்மள கல்யாணத்துக்கு கூப்பிட்ட கோபால் மாமாவுக்கும்.. ஜாக்கா மாமிக்கும். நாணாவுக்கும்..பெரியப்பாவுக்கும.. சில பல வைர பேசரிகளுக்கும் சொல்லிகிட்டு..அப்படியே தெருமுக்கு வரைக்கும் நடக்கணும்!

“ஏன்டா! சபேசா கால்டாக்ஸி சொல்லலியா? “னு பெரியப்பா கண்டிப்பா கேப்பார்.!

“டைம் ஆய்டுத்து பெரியப்பா! தெருமுக்குல ஆட்டோ கிடைக்கும்.! நான் பாத்துக்கரேன் கவலப் டாதீங்கோ…! “ன்னு நாம சொல்லச் சொல்லவே.. “ட்ரெய்ன் ஏறிட்டு மறக்காம ஃபோன் பண்ணுடா.!” ம்பான் நாணா..! “சரிடா வர்ரேன்.!” னு கௌம்பும்போது…!” ஏன் என்ன அவசரம்? நைட்டு இருந்துட்டு நாளைக்கு கட்டு சாதக் கூடை முடிச்சு.. மனோகரம்..திரட்டுப்பால்லாம் வாங்கிண்டு போலாமே..?” ன்னு சொல்லிண்டே ஜாக்கா மாமி வருவா உள்ள இருந்து..!.

“இல்ல மாமி.! அவர்க்கு ஆஃபீஸ்ல ஏதோ முக்கிய மா மீட்டிங் இருக்காம்.. எம்டி வராராம்.. தைவான் ல இருந்து ..! ” னு நம்மள ப்ரொடக்ட் பண்ர ஒய்ஃபை கண்ணாலயே நன்றி சொல்லிட்டு …அப்படியே கண்ணச் சுழட்டி தேடி… மூலையில கெடக்கும் அந்த வெத்திலை பாக்கு தாம்பாளத்துக்கு நம்ம நன்றிய சொல்லிட்டு… நம்மளை சமையக்கட்டுல இருந்து ஔிஞ்சு பாக்கிற வேணு மாமாவுக்கும் மானசீகமா ஒரு நன்றிய சொல்லிட்டு….!” கூட்டமில்லாத டவுன் பஸ் கிடைக்கணுமே ஆண்டவா !!” ன்னு மனசுக்குள்ள வேண்டிண்டே…!

ஒய்ஃபுக்கு பின்னால பவ்வியமா.. பெட்டி படுக்கையத் தூக்கிண்டே ..! “வரும் போதை விட இப்ப வெய்ட் அதிகமா இருக்கே.? சண்டாளி என்னத்த பேக் பண்ணி வெச்சிருக்காளோ.?” ன்னு முணகிண்டே..!!!

நடைய எட்டிப் போடணும்..!!

நாளைக்கு ஆஃபீஸ் இருக்கே..?!?

2 thoughts on “கல்யாண சமையல் சாதம்..!

  1. அருமை பாஸ்கர்.

    ஒரு கல்யாண வீட்டுக்கு போய் வந்த அனுபவம், இந்த லாக் டவுன் காலத்தில் கிடைத்தது.

    வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *