கன்னித்தீவும் கவித கோபாலும் – கதை

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 36,816 
 
 

ராஜகோபால் தன் வாழ்க்கையை எண்ணி வியந்துகொண்டு இருந்தான். அவனை ‘ராஜகோபால்’ என்று அழைப்பதைவிட ‘கவித கோபால்’ என்று அழைப்பதுதான் சரி. ஒரு மனிதன் தன் அன்றாடங்கள் அனைத்தையும் கவிதைகளாக்கிக்கொள்வது, ‘என்ன இசம்’ என்று தெரியவில்லை. ஆனால், அதுதான் கோபாலின் திறமை. அவன் ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதிதான். ஆனால், அவனுக்குள் இருப்பவனோ ஒரு மகாகவி!

காலையில் எழுந்ததில் இருந்து படுக்கையில் விழுகிற வரைக்கும் கோபாலால் குறைந்தது 500 கவிதைகள் எழுதிவிட முடியும். இந்த உலகத்தின் கவிதை பற்றிய புரிதல் அனைத்தையும் மாற்றி அமைக்கப்போகிற ‘கவி மீட்பனாக’ தன்னை உணர்ந்துகொண்டவன் அவன். தான் எழுதுகிற எல்லாவற்றையும் ‘கவிதை’ என்று வாதிடுகிற நவீனகால ஒல்லிக்குச்சிக் கவிஞன் கிடையாது. தன்னால் கவிதையாக மட்டும்தான் சிந்திக்கவே முடியும்; தான் எழுதுவதும் சொல்வதும் கவிதையாக மட்டும்தான் இருக்க முடியும் என்று நம்புகிறவனும் வாழ்கிறவனும்தான் ‘கவித கோபால்’. அவனுக்கு வியர்க்கும்போதுகூட கவிதையாகத்தான் வியர்க்கும். அவன் ஒருமுறை மது அருந்திவிட்டு வாந்தி எடுத்தபோது, ‘நீ கவிதயா வாந்தி எடுத்த கோபாலு’ என்று கூட இருந்தவன் சொன்னான். அந்தளவுக்கு அவன் நின்றால் கவிதை, நடந்தால் கவிதை. ஓர் உதாரணம் பாருங்கள்…

கன்னித்தீவும் கவித கோபாலும் - கதை

தினமும் காலையில் எழுந்ததும் மார்க்கெட் தாண்டிப் போய் டீ குடிக்க வேண்டும் கோபாலுக்கு. இவனும் அறைத்தோழன் பரசுவும் போகிறபோது, காய்கறிகளை இறக்கிக்கொண்டு இருந்தார்கள்.

சட்டென்று சொன்னான் கோபால்…

‘மிளகாய்…
அழகாய்! ’

அவ்வளவுதான்… இரண்டே வார்த்தைகள். வெறும் எட்டே எட்டு எழுத்துகள். இந்த இரண்டு வார்த்தைகளை அடுத்தடுத்து எத்தனை டெசிபலில் உச்சரிக்க வேண்டும் என்றுகூட கோபாலுக்குத்தான் தெரியும். அவன் கவிதையாகவே வாழ்கிறவன் அல்லவா? கூட வந்த பரசுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால், டீ, தம் வாங்கித் தரப்போகிற கோபாலைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்கிற கரிசனத்துடன் சொன்னான், ‘மச்சி… இதையெல்லாம் எழுதிவெக்காம காத்தோட கலக்குறதை நினைச்சாத்தான் எனக்குத் தாங்கலை!’

சிரிக்கிறான் கோபால். இந்த உலகத்திடம் இருந்து அவன் எதிர்பார்ப்பது இப்படியான சின்னச் சின்ன ‘கொம்பு சீவல்’களைத்தான்!

போன மாதம் நாகர்கோவிலில் இருக்கும் பெரிய டாக்டர் ஜோன்ஸ் தங்கராஜின் மருத்துவமனையில் காத்திருந்தபோது சட்டென்று இரண்டு வரிகள் தோன்றியதே. இல்லை… மின்னல் வெட்டியதே!

‘டாக்டர்…
ஆக்டர்! ’

கன்னித்தீவும் கவித கோபாலும் - கதை2

அவ்வளவுதான்… அவ்வளவேதான். இதைச் சொன்னபோது சகபணியாளன் மூர்த்தி மேலோட்டமாக, ‘இதென்ன… ரெண்டும் ரெண்டு வார்த்தை. இதைப் போய் கவிதங்கற?’ என்றான்.

அதற்கு விளக்கம் சொன்னான் ‘கவித கோபால்’. ‘இன்னிக்கு டாக்டர்கள் நிறைய பேரு நடிக்க வர்றதும், டாக்டர்கள் தங்கள் நோயாளிகளிடம் பாசிட்டிவ்வா நடிக்கிற நடிகர்கள்ங்கிறதும், நடிகர்கள் பலர் டாக்டர் பட்டம் வாங்குறதும், நடிகர்கள் தங்களோட மகன் மற்றும் மகளை டாக்டருக்குப் படிக்க வெக்கிறதும், டாக்டரோட மகனும் மகளும் நடிக்க வர்றதும்போல பலப்பல அம்சங்கள்… இந்த ரெண்டு வார்த்தைகளின் அர்த்தங்களோட நீட்சியின் வழியா எல்லையற்றதா விரிந்து பரவி பற்றிப் படர்வதை உணரணும் மச்சி’ என்றான். இதைக் கேட்டதும் மூர்த்தி அசந்தேவிட்டான்.

கவிதைக்கு என்றே தன்னை ஒப்புக்கொடுத்தவன் வாழ்க்கையில், காலாகாலத்தில் காதல் வந்தால் என்னாகும்? கவிதை இன்னும் பீறிடும்தானே! அந்த அதிசயத்தை நிகழ்த்தவே சரளாவை, கோபால் சந்திக்கும் ஒரு தற்செயல் சம்பவம் நடந்தது. சரளாவைப் பார்த்த முதல் கணத்திலேயே கோபாலுக்கு உள்ளேயும் வெளியேயும் அதிர்வு உண்டாகி, இரண்டாகி நூறானது. இப்படியாகப்பட்ட ஒருத்தன் எப்படியாகப்பட்ட ஒருத்திக்காகக் காத்திருப்பானோ, அதே நபரை முதன்முதலாகப் பார்த்தபோது ஏற்பட்ட அதிசய அதிர்வுதான் அது. உள்நாக்கு வரை உலர்ந்து தலைசுற்றுவது போல இருந்தது அவனுக்கு. இதுதான் இதேதான்… அவன் கவிதைகளை எழுவதற்கான மனநிலையும்கூட!

அம்மாவின் சேலையைப் பிடித்துக்கொண்டு போகும் குழந்தையைப் போல, சரளா பின்னாலேயே கோபால் தன் மனசையும் உடம்பையும் செல்லவிட்டபோது மகிழ்ந்ததைவிட மிகவும் மகிழ்ந்தது, சரளா ஒரு செவிலி என்று தெரிந்துகொண்டபோதுதான். ‘தி.மு.க.-அ.தி.மு.க.’ மாதிரி நாகர்கோவிலில் இரண்டே டாக்டர்களின் ராஜாங்கம்தான். ஒருத்தர், ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட ஜோன்ஸ் தங்கராஜ். அடுத்தவர் ரத்தினசாமி. ஜோன்ஸ் இளமை மிடுக்கானவர்; ரத்தினம் அனுபவச் சிங்கம். இரண்டு பேருக்கும் தொழிலில் போட்டி பொறாமை வருவதற்குக்கூட நேரமில்லாதபடி பயங்கர பிஸி.

அந்த ரத்தினசாமி டாக்டரின் ஆஸ்தான செவிலிதான் சரளா. ‘எப்படி இத்தனை நாள் நம் கண்ணில் படாமல் தப்பிச்சா?’ என்று யோசித்துக்கொண்டே தன் அறைக்குத் திரும்பியவன், முதன்முதலில் சரளாவைக் காதலிப்பதை பரசுவிடம்தான் சொன்னான்.

சாயங்காலம் சங்கமித்த வேளையில், ‘கண்டிப்பா அவ உனக்குக் கிடைப்பா’னு நல்ல வார்த்தை சொன்னான் பரசு. ரெண்டு ரவுண்டு உள்ளே சென்றதும் கோபால் ஆவேசமா சொன்னான், ‘எனக்குத் தெரியும்டா பரசு… அவ எனக்குக் கண்டிப்பா கிடைப்பானு… ஏன்னு சொல்லு?’ அப்போதுதான் மிச்சரை தன் வாய்க்குள் தள்ளிய பரசு, புடைத்த வாயுடன் கோபாலை திருட்டு முழியுடன் ஏறிட்டான்.

‘கிடைக்காம..? எதுகையும் மோனையும் சேர்ந்துதானேடா ஆகணும்.’ அப்படின்னு போட்டானே ஒரு போடு!

கன்னித்தீவும் கவித கோபாலும் - கதை3

கோபாலின் தவம் கடுமை ஆயிற்று. சரளாவைப் பார்ப்பதற்காகவே ரத்தினசாமி டாக்டரை வாரத்துக்கு மூன்று முறை பார்க்கத் தொடங்கியவன், மெள்ள அதைக் குறைத்துக்கொண்டு, தினமும் இரண்டு முறை அவரைப் பார்க்கப் போனான். ஒரு கட்டத்தில், ‘இவன் நம்மகிட்டேதான் வேலை பார்க்குறானோ?’ என்று அந்த டாக்டருக்கே குழப்பம் வந்ததுவிட்டது. ஒரு முறை இவனை மார்க்கெட் பக்கத்தில் பார்த்தவர், ‘இங்கே என்ன சுத்திக்கிட்டு இருக்கே… ஒர்க்கிங் டைம்ல?’ என்று கேட்டாரே பார்க்கலாம்!

டாக்டர் இல்லாத தருணங்களில் சரளாவை 150 விதமாகப் பார்த்து 200 விதமாகச் சிரிப்பான். அவள் தன்னை மின்னல் மாதிரி கடந்து போகிற அந்த அரை நொடிக்குள்ளே ஒரு கவிதையைச் சொல்லிவிடுவான். அவளிடம் இருந்து ரியாக்ஷனே வராது. ஆனாலும், கவிதைப்பட… ச்சீ… கவலைப்பட மாட்டான். நேற்றுகூட ராத்திரி சரளா வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும்போது கோபால்…

‘காலைப் பற்றி
நாளை உன்
காலைப் பற்றி! ’

– இந்த மாதிரி சொன்ன ஒரு கவிதையைக் கேட்டுவிட்டு அவள் ஜஸ்ட் லைக் தட் கடந்து போய் விட்டாள். தன் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை கோபால். ஆனாலும் அவளிடம் ஒருவார்த்தைகூடப் பேச மாட்டான். அவளும் அவனைப் பார்த்து அவ்வப்போது சிரிப்பதோடு சரி. இதையெல்லாம் கேட்டுவிட்டு கண்ணீர் மல்க ஆறுதல் சொல்கிற பரசுவிடம் சிரிப்பான் கோபால். ‘அவ கன்னித்தீவு. நான் சிந்துபாத். அவ்வளவு சீக்கிரமா முடியக் கூடாது. முடிஞ்சா நல்லா இருக்காதுடா பரசுப்பயலே…’ என்பான்.

சரளாவின் போன் நம்பரை எப்படியோ தெரிந்துகொண்டான் கோபால். ஒரு துரதிருஷ்டவசமாக சாயங்காலத்தில் கோபால் தன் ஊழியன் அல்ல… ஒரு மெடிக்கல் ரெப் என்று கண்டுபிடித்த டாக்டர் ரத்தினசாமி, ‘இனிமேல் என் மருத்துவமனை பக்கமே வரக் கூடாது’ என்று கடித்துத் துப்பிவிட்டார். முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு மனசைத் தொங்கப் போடாமல் எப்படியோ சமாளித்து தன் அறைக்கு வந்து சேர்ந்தான் கோபால்.

‘பரசு…, மனசு ஒரு பாம்புடா. அது ஒரு இடத்துல இருக்காது. நெளிஞ்சுக்கிட்டே இருக்கும்…’ என்ற கவிதையைச் சொல்லி முடித்த உடனே, அதுவரைக்குமான அன்றைய கவிதைகளை எண்ணிக்கொண்டு இருந்த பரசு, உடனே, ‘போதும் ராஜு… நூறாயிடுச்சி…’ என்றான்.

‘நூறுதானேடா… இன்னும் ஆயிரம் சொல்வேனே!’ என்று பெருமிதமாகச் சொன்னான் கோபால். ‘நீ சொல்வே. மன்த் எண்ட். காலையில சீக்கிரம் கிளம்பணும்ல… தூங்கு!’ என்று சற்றுக் கடுமையாகவே சொல்லிவிட்டுப் படுத்தான் பரசு. அவனையே சில நிமிடங்கள் உற்றுப்பார்த்துவிட்டு,

‘கோவம்…
பாவம்! ’என்று சொன்ன பிறகே தூங்கப் போனான் கோபால்.

‘மன்த் எண்ட்’ என்பது மெடிக்கல் ரெப்களுக்கு மாதாந்திர ராட்சஸம்,

‘ஓடுகிற மாட்டை
விரட்டுகிற சாட்டை

மன்த் எண்ட்’ என்பான் கோபால். இந்த வாக்கியத்துக்காகவே யூனியனிஸ்ட் தேவராஜனுக்கு அவன் மேல் ரொம்ப மரியாதை. அதை அடிக்கடி நினைத்து ‘நல்லா சொன்னீங்க நண்பா’ என சிலாகிப்பார்.

கோபால் வேலை செய்வது இந்தியாவின் நம்பர் ஒன் கம்பெனி என்பதால், சலுகையும் சம்பளமும் கை, பைகளை நிறைக்கும். ஆனால், ‘டார்கெட்’ என்ற ஒற்றை வார்த்தை உயிரை உருகவைத்துவிடும். மாதக் கடைசியில் உக்கிரமாக வேலைபார்க்க வேண்டி இருக்கும்.

கோபாலின் கெட்ட நேரம், ஏரியா மேனேஜர் மாற்றலாகி, அந்த இடத்துக்கு வந்த புது மேனேஜர் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை ராத்திரிகூட வேலை வாங்குவாராம். இன்னொரு மகா வருத்தமான விஷயத்தை பரசு சொன்னான், ‘சரளா யார் கூடவோ பைக்ல நெருக்கமா சிரிச்சுக்கிட்டே போறதைப் பார்த்தேன் கோபாலு…’ என்றான்.

ஒரு மனிதனுக்கு மாதக் கடைசியில் இப்படியா சோதனை மேல சோதனை வர வேண்டும்.

‘இறைவனே மதம் மாறினால்
பாவம்…
மனிதன் என்ன செய்வான்? ’

என்கிற கவிதை, இந்தச் சூழலுக்குப் பொருந்திப்போகிற மாதிரிதான் தோன்றியது கோபாலுக்கு. கண்ணில் கவிதை மாதிரி நீர் முட்டிக்கொண்டு துளிர்த்தது.

கோபால் ஒரு முடிவு எடுத்தான். இன்று எப்படியாவது சரளாவிடம், தன் காதலை காதலாகவே சொல்லி, அவளின் மௌனத்தைக் கலைத்துவிட வேண்டும். எத்தனை கவிதைகள் சொல்லியிருப்பேன்? ஒரு நாளைக்கு சராசரியாக ஐம்பது கவிதைகள் எஸ்.எம்.எஸ்ஸாக தினமும் அனுப்பியிருக்கேன். எப்போதாவது சரளாவிடம் இருந்து ஒரு ஸ்மைலி வரும். அவ்வளவுதான். ஒரு வார்த்தையை அவள் வாய்க்குள் இருந்து வாங்குவது எத்தனை கஷ்டம். ஏன் எதற்கு என்று தெரியாமல் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.

காலையில் இருந்து தங்கிலீஷில் நூறு கவிதைகளையாவது அனுப்பி இருப்பான் சரளாவுக்கு. வழக்கம்போலவே மூன்று ஸ்மைலிகள்தான் பதில்களாக வந்தன. தன் அறையில் தலைகாணியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுகை என்று சொல்ல முடியாத ஓர் உணர்வில் இருந்தான். அன்று 30-ம் தேதி. மாதக் கடைசி. புது மேனேஜர் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீனிவாசன் காலையில் இருந்து நாலைந்து முறை செல்பேசியில் அழைத்துவிட்டாலும் கோபால் அவற்றுக்கெல்லாம், ‘நான் டாக்டர் கேபினில் இருக்கேன்’ என்று பதில் அனுப்பிக்கொண்டு இருந்தானே ஒழிய, அட்டெண்ட் பண்ணவில்லை. கடந்த ஒரு மாத ரிப்போர்ட்டை உடனே அனுப்பச் சொல்லி வந்த மேனேஜர் குறுஞ்செய்தியை மதிக்காமல், அப்போதைய தன் அத்தனை வேதனையையும் ஒரு குறுஞ்செய்தியாக டைப்பினான் கோபால்.

‘இரக்கமே இல்லாத சரளா… இன்னிக்கு உங்கிட்டே இருந்து முடிவு தெரியாம நான் போறதா இல்ல. என் மேனேஜர் ‘மன்த் எண்ட்’னு கால் மேல கால் பண்ணிட்டு இருக்கான். அவனை உலகத்துல இருக்கிற எல்லா கெட்ட வார்த்தையாலயும் திட்டி முடிச்சுட்டேன். வேலைக்குப் போகவே பிடிக்கலை. மன்த் எண்டாவது இயர் எண்டாவது… என் கம்பெனி எக்கேடும் கெடட்டும். எனக்கு என் வேலை முக்கியமே இல்லை. நீதான் முக்கியம். உன் சிரிப்பு முக்கியம். உன் காதல் முக்கியம். உனக்கு இரக்கமே இல்லையா? தினமும் வேலையைக்கூட கவனிக்காம உனக்கு ஆயிரக்கணக்கான கவிதைகளை அனுப்பியும் இரக்கம் வர மாட்டேங்குதே? இந்த எஸ்.எம்.எஸ். பார்த்துட்டு வழக்கமா வர்ற ஸ்மைலி வந்ததுன்னா, நான் விஷத்தைக் குடிச்சுருவேன். இது வெறும் குறுஞ்செய்தி இல்லை. என் காதல். என் மனசு. இது புரிஞ்சா, விளக்கமாப் பதில் சொல்லு. கொல்லாதே!’ – இந்த எஸ்.எம்.எஸ்-ஐ அனுப்பிவிட்டு உடனே நல்ல பிள்ளையாக மேனேஜர் கேட்ட ரிப்போர்ட்டை அவருக்கு அனுப்பிவைத்தான்.

கொஞ்ச நேரம் காலாட்டிக்கொண்டு படுக்கையில் படுத்தபடி மின் விசிறியையே பார்த்துக்கொண்டிருந்தான். மேனேஜர் இரண்டு முறை அழைத்தார். அட்டெண்ட் செய்யவே இல்லை. ‘முதலில் சரளா… மை ப்யார்… பிறகுதான் எல்லாம்’ என்று இருந்த கோபாலின் செல்லில், சரளாவிடம் இருந்து வந்த ஒரு குறுஞ்செய்தி எட்டிப்பார்த்துச் சிரித்தது. அது பீட்சாவையும் குழாய்ப்புட்டையும் சேர்த்துப் பிசைந்தது போல ‘மலையாங்கில’ பாணியில்ல் இருந்தது.

‘கோபால் சார்… நிங்களிடமிருந்து எத்தனையோ எஸ்.எம்.எஸ். வந்திருக்கு. எனக்கு ஒண்ணுகூடப் புரியலை. ஏன்னா, எனிக்கு தமிழ் அறியில்லா. ஞான் ஒரு மலையாளி. அதான் உங்களுக்கு நான் ஸ்மைலியா பதில் அனுப்பும். பக்ஷே இன்னிக்கு நீங்க அனுப்பின மெசேஜ் என்னால படிக்க முடிஞ்சது. ஆனா, அதை எனக்கு ஏன் அனுப்பினதுனு புரியல்லை. எதுக்கு சாரோட சேல்ஸ் ரிப்போர்ட்டை எனிக்கு அனுப்பிச்சு? எனிவே… இன்னும் நீங்க உங்க சேல்ஸை இம்ப்ரூவ் செய்யணும்.’

‘என்ன நக்கலடிக்கிறாளா? சேல்ஸை இம்ப்ரூவ் செய்யணுமாம்’ என்றபடி கோபால் தன் செல்லை எடுத்து நோண்டினான். ‘அட ஆமாம்… சேல்ஸ் ரிப்போர்ட்டை போய் மடத்தனமாக சரளாவுக்கு அனுப்பியிருக்கிறேன்’ – தனக்குத்தானே வாய்விட்டுச் சிரித்தவன், திடீரென்று முகம் மாறினான். அதற்கு முந்தைய தன் காதல் குறுஞ்செய்தி யாருக்குப் போனது? செண்ட் நம்பர் ‘ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீனிவாசன்’ என இருந்தது. சேல்ஸ் ரிப்போர்ட்டை சரளாவுக்கும் காதல் ரிக்வெஸ்டை மேனேஜருக்கும் அனுப்பி இருப்பதை உணர்ந்தவன், தன்னைத்தானே பார்த்து ரெண்டு வரி சொல்லிக்கொண்டான்…

‘சூப்பு…
ஆப்பு.’

அதுதாங்க ‘கவித கோபால்’!

– அக்டோபர் 2013

Print Friendly, PDF & Email

2 thoughts on “கன்னித்தீவும் கவித கோபாலும் – கதை

  1. வாவ் சூப்பர் பிரமாதமா இருக்கு ஆத்மார்த்தி
    வாவ் அருமை அருமை
    கவிஞர் ஆரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *