(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சௌபாக்கியவதி தேவகாந்தாரிக்கு அடுத்த வாரம் திருமணம்! ‘டிங்கிரி எஸ்டேட்’டைச் சேர்ந்த சிரஞ்சீவி சிங்காரச்சாமிநாதன் மாப்பிள்ளை!
சாதாரணத் திருமணமல்ல திருமணமல்ல இது-காதல் திருமணம்! வெறும் காதல் அல்ல, இது விசித்திரமான காதல்!
காதலுக்கு விதை ஊன்றியது வானொலி! (கான) மழை பொழிந்து அக்காதல் செடியை வளர்த்தவர்கள் நமது தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்! உதவி புரிந்தவர் வானொலி நிலைய அறிவிப்பாளர்!
காதல் பூத்தது ஆறு மாதங்களுக்கு முன்பு. அது அரும்பாகி மொட்டாகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாகிக் கடைசியில் கலியாணமும் ஆகப் போகிறது!
கரும்பு எங்காவது கசக்குமா? காதல் கதையும் அப்படித்தான்! அதிலும் இது எவ்வளவு அருமையான காதல் கதை தெரியுமா?
‘கர்நாடக தேவகாந்தாரி’ என்று ஓர் இராகம் உண்டு. நமது கதாநாயகிக்குப் பெயர் சூட்டும்போது நல்ல வேளையாகக் ‘கர்நாடகம்’ விட்டுப் போயிற்று. நவநாகரிக தேவ காந்தாரி என்பது நூற்றுக்கு நூறு பொருந்தும் பெயர்!
வயது பதினெட்டு.
ஒற்றைநாடி சரீரம். இரட்டை நாடி சாரீரம். சுமாரான நிறம். கருப்பு மை தடவிய கண்கள், சிவப்புச் சாயம் பூசிய உதடுகள், வெள்ளைப் பவுடர் அப்பிய முகம். விசித்திரமான கொண்டை, வெங்காயச் சருகு ‘நைலான்’ சேலை கட்டிய உடம்பு – கற்பனை செய்து கொள்ளுங்கள் தேவகாந்தாரி எப்படியிருப்பாள் என்று!
கொஞ்சம் பொறுங்கள்; அவளுடைய பற்களைப் பற்றிக் குறிப்பிட மறந்துவிட்டேன்.
மேல்வாய்ப் பற்கள் உதட்டுக்கு வெளியே தாராளமாக நீண்டும் நீண்டும் கீழ்வாய்ப் பற்கள் உள்ளடங்கியும் போனதால் வாயை மூடினாலும் சிரித்த முகம்!
அந்த சிரித்த முகம்தான் அவளைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைகளை ஓட ஓடத் துரத்தியடித்ததாம்!
‘அடக்கம் ஒடுக்கத்தோடு’ அவளை வீட்டுக்குள்ளேயே இருக்கச் செய்வதும் அதே சிரித்த முகம் தானாம்!
‘என்ட்ரேன்ஜில்’ திரும்பத் திரும்ப ‘கோட்’ அடிக்காமல் ‘பாஸ்’ ஆகியிருந்தால் அவள் இப்போது ‘டாக்டர் தேவகாந்தாரி’தான். அப்படி ஆகவேண்டு மென்றுதான் ஆசையோடு அவளை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தார்களாம். என்ன செய்வது? ஆயிரத்தில் ஒருவரின் ஆசை தானே நிறைவேறுகிறது. மற்றவர்கள்-? தேவகாந்தாரியைப்போல் ‘இரண்டுங் கெட்டானா’கிக் ‘காமிக்ஸ்’ படித்துக்கொண்டு காலம் போக்குகிறார்களே!
சாத்திரம் தெரியாது, சரித்திரம் தெரியாது, பண்பாடு தெரியாது, பழக்க வழக்கம் தெரியாது, ருசியாக இருந்தால் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடத் தெரியும். சமையல் தெரியாது, சுருங்கச் சொன்னால் பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு எது எது தெரியவேண்டுமோ அது ஒன்றுகூடத் தெரியாதவர்களாகப் பெருகி வரும் இத்தகைய ‘புதுமைப் பெண்’களில் ஒருத்தி தேவகாந்தாரி.
‘சோத்துக் கடையும் மீக்கடையும் கோப்பிக் கடையும் இருக்கும்போது வீடுகளில் அடுப்பு எதற்காக வேண்டும்?’ என்பது அவள் கேள்வி.
‘காமிக்’ படிக்க உட்கார்ந்துவிட்டாள் என்றால் காதுகளிரண்டும் செவிடாகிப் போகும். வானொலி கேட்க -அதிலும் அவளுக்கு பிடித்தமான ‘நேயர் விருப்பம்’ நிகழ்ச்சி கேட்கத் தொடங்கிவிட்டால் கண்களும் குருடாகிப் போகும்! அவ்வளவு இன்ட்ரஸ்ட்!’
ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி வழக்கம்போல் நேயர் விருப்பம் கேட்டுக்கொண்டிருந்த தேவகாந்தாரி ‘டிங்கிரி எஸ்டேட்டைச் சேர்ந்த சிங்காரச்சாமி விரும்பிக் கேட்டிருக்கும் காதலிக்க நேரமில்லை என்ற பாட்டு…’ என்ற அறிவிப்பை செவிமடுத்ததும் விருட்டென நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
‘காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை…’
எனப் பாடத் தொடங்கியது வானொலிப் பெட்டி. ஆனால் அப்பாடல் சிங்காரச்சாமியின் ஏக்கத் துடிப்பாகவும் இதயத் தவிப்பாகவும் தோன்றியது காந்தாரிக்கு.
ஏன் அப்படித் தோன்றியது? யார் கண்டது? விதியின் விளையாடலாகத்தான் இருக்குமோ, என்னமோ!
இதே பாடலைச் சென்ற சில மாதங்களாக ஒவ்வொரு நேயர் விருப்ப நிகழ்ச்சியின்போதும் விடாமல் கேட்டு வருகிறாரே…இவரைக் காதலிப்பார் யாருமே உண்மையில் இல்லையோ…என்று காந்தாரி எண்ணியதும் அவள் உள்ளத்தில் சிங்காரச்சாமியின்பால் பரிவும் இரக்கமும் சுரந்து பெருகின. உடனே எடுத்தாள் ஒரு நேயர் விருப்பக்கார்டு. விரும்பிக் கேட்டு எழுதினாள் ஒரு பாட்டு.
மறுவாரம் அந்தப் பாட்டு வானொலியில் தவழ்ந்து வந்து சிங்காரச்சாமியின் செவிகளில் தேனொலியாகப் பாய்ந்தது!
‘உன் கதைதான் என் கதையும்
என் கதைதான் உன் கதையும்…’
தனக்காகவே இந்தப் பாட்டு ஒலிப்பதாக சிங்காரச்சாமியின் உள்ளுணர்வு சுட்டிக் காட்டியது. ஏன் அப்படிச் சுட்டிக்காட்டியது? அதுதான் கடவுள் போட்டு வைக்கும் முடிச்சு!
கைகள் பரபரக்க, உள்ளம் கிளுகிளுக்கத் துள்ளி எழுந்து அவன் எழுதிக்கேட்ட பாட்டு இதோ:
‘ஐ லவ் யூ! ஐ லவ் யூ!
ஆசையானேன் உன் மேலே!
கம் நியர், மை டியர்
கண்டதே யில்லை உன் போலே! ‘
இந்தப் பாட்டைக் கேட்டுப் பரவசத்தால் நெஞ்சம் பூரித்த காந்தாரியின் விருப்பம் மறுநாளே வந்தது வானொலியில்:
‘அன்புள்ள அத்தான் வணக்கம்! உங்கள்
ஆயிழை கொண்டாள் மயக்கம்…’
ஆகா ஆகா என்று சிங்காரச்சாமியின் தலையும் சுழன்றது – காதல் மயக்கத்தால்! காலங்கடத்தாமல் வானொலித் தூது அனுப்பிப் ‘பச்சை’யாகக் கெஞ்ச ஆரம்பித்தான் காந்தாரியை!
‘கட்டிக்கோ என்னைக் கட்டிக்கோ – ரொம்பக்
கெட்டிக்கார மாப்பிள்ளை என்னைக் கட்டிக்கோ!’
…இதற்குக் கொஞ்சலான பதிலை ‘வெள்ளை’யாகவே சொல்லிவிட்டாள் காந்தாரி. பாட்டின் வழியே வந்த பதில் பின் வருமாறு:
‘உனக்கு நான் எனக்கு நீ
பொருத்தமான ஜோடி…!’
இதன் பின்னர் அவர்கள் இருவருமாகவே பல பாட்டுக்களை விரும்பிக் கேட்கத் தொடங்கினார்கள், எல்லாமே இரு குரலிசை!
‘நான் உயர உயரப் போகிறேன்
நீயுங் கூட வா!
நான் மயங்கி மயங்கிச் சாகிறேன்
உன் மடியை எனக்குத் தா!’
இதுபோன்ற இனிக்கும் பாட்டுக்களை நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்கு இருவரும் எழுதி எழுதிக் குவித்தார்கள்: கேட்டுக் கேட்டு மகிழ்ந்தார்கள். ‘கேட்ப தெல்லாம் காதல் கீதங்களே!’ காதலர்கள் வேறு எதைக் கேட்பார்களாம்!
‘அன்பே என் ஆருயிரே வாராய்…’ என்று தொடங்கும் பாடலொன்றை அவ்விருவரும் விரும்பிக் கேட்டதை நீங்களும் கேட்டிருக்கலாம் வானொலியில். அதிலே ஆண் மகன் கூறுகிறான்:
‘மின்னல் ஒளிக் கோடுகளால்
மேகமென்னும் வெண்திரையில்
உன்னழகை ஓவியமாய் வரைவேனே!’
அதற்குப் பெண்கள் பதில் சொல்கிறாள்:
‘வெண்ணிலவுக் கிண்ணியிலே
என்னுடைய காதலையே
உண்ணும் மதுவாய்
நிறைத்தே தருவேனே! ‘
காற்று வெளியிடை இப்படியாக அவர்கள் கா தலை எண்ணிக்களித்துக்கொண்டிருந்தபோது, இடையிலே ஒரு சமயம் காந்தாரி ஏதோ நோய்வாய்ப்பட்டு மருத்துவவனையில் ஒரு வாரம் இருக்க நேர்ந்தது. அப்போது நேயர் விருப்ப நிகழ்ச்சியில் அவள் பெயர் வரவில்லை. எல்லா நாட்டு வானொலி நிலையத்திலும் தேடிப்பார்த்து எந்த நிலையத்தின் நிகழ்ச்சியிலுமே அவள் பெயர் வரக் காணாததால் சிங்காரச்சாமி கலங்கிப் போனான். சோகமே உருவமானான்.
‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே’
என்ற பாடலை ஒலிபரப்பச் செய்து தன் மனத் துயரத்தைப் புலப்படுத்தினான்.
அது கேட்ட காந்தாரியும் பதறிப்போய் பாட்டாகவே பதில் அனுப்பி வைத்தாள்:
‘நெஞ்சம் மறக்கவில்லை – அவர்
நினைவை இழக்கவில்லை…’
‘அம்மாடி’ என்று இருவருக்கும் நிம்மதி பிறந்தது. காதல் வனத்திலே மீண்டும் கவலையை மறந்தார்கள். ‘காதலே தெய்வீகக் காதலே’ என்பது போன்ற இரு குரல் கீதங்களில் மெய்மறந்தார்கள்!
காலம் என்பது ஓடிக்கொண்டேயிருப்பது. அல்லவா? காதலர்களாகவே – அதுவும் ஒருவரை யொருவர் காணாமலே கொண்ட அதிசயக் காதல் – எவ்வளவு காலம்தான் இருக்க முடியும்? கல்யாணம் நடைபெற வேண்டாமா?
கல்யாணப் பேச்சை எடுத்ததுமே ‘சிங்காரச்சாமி ஒருத்தர்தான் என் சிந்தையில் குடியிருப்பவர்’ என்று பெற்றவர்களிடம் ‘கண்டிஷனா’கக் கூறிவிட்டாள் காந்தாரி.
‘யாரம்மா அந்தச் சிங்காரச்சாமி? படிச்ச பையனா? லட்சணமாயிருப்பானா? வேலை வெட்டி செய்கிறவனா? அம்மா அப்பா உள்ளவனா’ என்றெல்லாம் கேட்டார்கள் பெற்றவர்கள்.
‘அதெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது. டிங்கிரி எஸ்டேட்டைச் சேர்ந்தவர். நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்கு விடாமல் பாட்டுக் கேட்டு எழுதுகிறவர். அவ்வளவு தான் தெரியும் எனக்கு. நான் அவரைத் தான் கட்டிக்குவேன்.’
பெற்றவர்கள் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாகக் கேட்டார்கள். ‘ஆமா; அந்த டிங்கிரி எஸ்டேட் எங்கேயிருக்கு? அதையாவது சொல்லம்மா?’
‘அதுவும் எனக்குத் தெரியாது அப்பா. எப்படி யாச்சும் தேடிக் கண்டுபிடிங்க அப்பா. நான் உங்க செல்லப் பொண்ணு இல்லையா…’ என்று கெஞ்சினாள் காந்தாரி.
நல்ல கூத்து இது என்று வேறு வழியில்லாமல் தங்கள் புதல்வியின் நேயர் விருப்பக் காதலனைத் தேடிப் புறப்பட்டார்கள் அவளைப் பெற்றவர்கள்!
‘நல்ல கண்றாவி இது’ என்று அலுத்துக்கொண்டே தான் டிங்கிரி எஸ்டேட் சிங்காரச்சாமியை ஈன்றவர்களும் காந்தாரியைத் தேடிக் கிளம்பினார்கள். இரண்டு பக்கமும் ஒரே கதைதான்!
தேடும் வேலையில் இருதரப்பாரும் மும்முரமாக ஈடுபட்டிருந்த காலத்தில் காந்தாரி விரும்பிக் கேட்கும் பாட்டு எது தெரியுமோ?
‘தென்றல் வரும் சேதி வரும்
திருமணம் பேசத் தூது வரும்
மஞ்சள் வரும் சேலை வரும்
மாலையும் மேளமும் கூட வரும்…’
அதேபோல் அங்கே சிங்காரச்சாமீ கேட்டு எழுதும் பாடல் எதுவாயிருக்கும்?
‘ஜாலி லைஃப் ஜாலி லைஃப்
தாலி கட்டினால் ஜாலி லைஃப்!
ஜாலி லைஃப் ஜாலி லைஃப்
தம்பதியானால் ஜாலி லைஃப்!’
ஒரு மாதகால அலைச்சலுக்குப் பிறகு எப்படியோ காந்தாரியின் அம்மா அப்பாவைச் சிங்காரச்சாமியின் தாய் தகப்பனார் கண்டுகொண்டார்கள். கருத்தைப் பரிமாறிக்கொண்டார்கள்!
முறைப்படி பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தார்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளை பார்க்கப் போனார்கள்.
மாப்பிள்ளை சிங்காரச்சாமிக்குச் சப்பை மூக்கு என்பதைப்பற்றியும், அவர் ‘ஙொண ஙொண ‘வென்று பேசுவதைப்பற்றியும் பெண் வீட்டார் ஏதோ ‘கசமுச’ வென்று பேச்செடுத்தவர்கள், பிறகு பரவாயில்லை என்று அடங்கிவிட்டார்கள்!
அதேபோல், தேவகாந்தாரிக்கு வாய்க்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் நெட்டைப் பற்களைப் பற்றியும், அவளுடைய ‘சிரித்த முகம்’ பற்றியும் மாப்பிள்ளை வீட்டார் முதலில் முகம் சுளித்தார்கள். அப்புறம் அதைப்பற்றிய கவலையை விட்டார்கள்!
பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பொருத்தம் வெகு பொருத்தம் என்று இரு தரப்பாரும் ஏகமனதாக ஒப்புக்கொண்டு பாக்கு வெற்றிலை மாற்றிக்கொண்டார்கள்; பரிசம் போட்டார்கள்!
இனி என்ன?
‘நாளும் பார்த்தாச்சு
நல்ல நேரம் குறிச்சாச்சு – இனி
நடக்கப் போகுது திருமணம்!’
இந்தப் பாட்டு சிங்காரச்சாமியும் தேவகாந்தரியும் விரும்பிக் கேட்டதல்ல – என் பங்குக்கு நான் கேட்டு எழுதியது!
உங்கள் பங்குக்கு ஏதாவதொரு பாட்டை விரும்பிக் கேட்டு ஒலிபரப்பச் செய்து அந்த மணமக்களை மகிழ்விக்கலாமே!
– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.