(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘கனகு’ என அழைக்கப்படும் திருவாளா அ.கனகசபை என்பவருக்கு திடீரென்று இருந்தாற்போல் ஓர் எண்ணம் தோன்றியது. தானும் ஏன் கதைகள் எழுதக் கூடாது? என்பது தான் அந்த எண்ணமாகும்.
ஏராளமான கதைகளைப் படித்த தன்னால், நூற்றுக் கணக்கான சினிமாப் படங்களைப் பார்த்த தன்னால், எத்தனையோ வாழ்க்கை அனுபவங்களைக் கண்டும் கேட்டும் அறிந்த தன்னால் ‘ஏன் கதைகள் எழுத முடியாது?’ என அவன் சிந்திக்கலானான்.
‘நேற்று முளைத்த கன்றுக் குட்டிகள் எல்லாரும் கதைகள் எழுதிப் பெயரும் புகழும் பெறும் போது, தமிழ்ப் பாடங்களில் விசேட திறமையுடன் எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தியடைந்த தான் கதை எழுதப் புறப்பட்டதில் என்ன தவறிருக்கிறது?’ என அவன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
கதைகள் எழுதி அதன் வருவாயைக் கொண்டுதான் காலத்தை ஓட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவனுக்குக் கிடையாது. ‘நான் அனுப்பும் கதைகளை பத்திரிகைகள் விளம்பரமாக மதிப்பிட்டு அதற்காக பில் அனுப்பாமல் ஏற்றுப் பிரசுரிக்க வேண்டும். சன்மானத்தைக் கூட எதிர்பார்க்க மாட்டேன்’ – இவ்வாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு கனகு கதை எழுதுவதற்காக தன்னைத் தயார் படுத்தலானான்.
கதை எழுதுவதற்கு முன், கதை எழுதுவதற்கான முதலாவது தகுதியெனக் கருதிக்கொண்டு அடுத்த கணமே கனகு தனக்கு ஒரு புனை பெயர் வைத்துக் கொண்டான். ‘கதைவாணன்’ என்பதே எதிர்கால எழுத்துலக் மேதையான ‘கனகு’ என்னும் திருவாளர் அ.கனகசபையின் புனைப் பெயராகும்.
இப்பொழுது கதைவாணன் கதை எழுத அடுத்துத் தேவைப்படும் தங்கு தடையின்றி எழுதக் கூடிய பேனா புல்ஸ்காப் பேப்பர்கள், லோங் என்வலப்புக்கள், முத்திரைகள், வசதியாக இருந்து எழுதுவதற்கேற்ற மேசை நாற்காலிகள் முதலியவற்றையும் தேடிக்கொண்டு இதோ கதை எழுத ஆரம்பித்து விட்டான்-
“கிழக்கு வானத்தில் இருந்து சூரியன் கிளம்பித் தனது யாத்திரையைத் தொடங்கி விட்டான். இரத்தினவேல் இன்னும் எழும்ப மனமின்றிப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்…”
மேற்படி முதல் பந்தியை எழுதிய கதைவாணன், பந்தியின் கருத்தில் மீண்டும் ஆழமாக கவனம் செலுத்திப் பார்த்தான். ‘சூரியன் தன்னைத்தானே தான் சுற்றும் பூமியோ தன்னைத்தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றிவரும். இது தான் புவியியலின் ஆரம்ப பாடம். அப்படி இருக்கும்போது உண்மைக்குப் புறம்பாக சூரியன் கிழக்கு வானத்தில் இருந்து கிளம்பி யாத்திரை செய்வதாக எழுதியது எவ்வளவு தப்பு! இதைப் புவியியல் பேராசிரியர்கள் கண்டால் என் மீது வீண் பழியன்றோ சுமத்துவார்கள்’ இப்படியாக எண்ணியவர் எழுதிய பகுதிகளைக் கிறுக்கி விட்டு வேறு முறையில் கதையை ஆரம்பித்தார்.
‘பொழுது விடிந்து இத்தனை நேரமாகியும் படுக்கையை விட்டெழ மனமின்றிக் கிடந்தார் இரத்தினவேல். அவரை அசைத்து எழுப்ப முயன்ற அவரின் வாழ்க்கைத் துணைவியார் ‘என்ன இன்னுமா துக்கம்? பொழுதின் அருமை தெரியாதவர் போல் – இழந்த காலத்தை மீண்டும் பெற முடியாது என்பதை மறந்தவர் போல் கவலையற்றுக் கிடக்கிறீர்களே! பாடசாலை சென்றுவிட்ட சிறுவர்கள், பால் தந்து விட்டுப் போன வயோதிபன், இவர்களுக்செல்லாம் இருக்கும் பொறுப்பு உணர்ச்சி கேவலம் உங்களிடம் பட்டும் கிடையாதா?’ என்றாள்.’
இப்படிக் கதையை ஆரம்பித்தவன் அடுத்த வினாடி அதையும் வெட்டி விட்டான். அப்படியெல்லாம் ஒரு பெண் பாத்திரம் பேச முடியாது என்பது தான் அதற்கான காரணம். சாதாரண ஒரு குடும்பப் பெண் இப்படியான ஒரு நீண்டதும், அர்த்தமும் அழகும் நிறைந்தது மான அடுக்குத் தொடர் வசனத்தைப் பேசமாட்டாள் – பேசவும் முடியாது என்பது கனம் கதைவாணனின் கருத்தாகும். அப்படிப் பேசுவதாக எழுதிவிட்டால் அது வாழ்க்கையில் இருந்தும் வேறு பட்ட – நடக்க முடியாத விவகாரமாக முடியும் எனவும் அவன் கருதினான்.
அடுத்து அவன் வேறு கதை ஒன்றை வேறு முறையில் எழுதுவது பற்றிச் சிந்திக்கலானான்.
“மனைவி அகால மரணம் அடைந்து விட தந்தைக்குத் தந்தையாய், தாய்க்குத் தாயாக இருந்து, தனது ஒரே மகன் குமாரைக் கவலை என்பதே தெரியாமல் வளர்த்து விட்டவர் குமாரலிங்கம். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல சடார் இப்படித் தன்னை நட்டாற்றில் விடுவான் என்று குமாரலிங்கம் கனவிலும் நினைத்திருப்பாரா?”
சோகக் கதை ஒன்றை எழுத ஆரம்பித்தான். ஆனால் இதிலும் தவறும் அபத்தமும் இருப்பதாகத் தோன்றவே தான் எழுதிய கடதாசியையே, கசக்கிக் குப்பையில் எறிந்து விட்டான்.
ஒரே ஒரு தகப்பன். ஒரே ஒரு மகன். இப்படியாகப் பாத்திரங்களைப் படைத்தது, சிக்கலின்றிக் கதையை நகர்த்துவதற்காக, வேண்டும் என்றே படைத்ததுபோல் அவனுக்குத் தோன்றியது. கேவலம் கதையை உணர்ச் சிகரமாகச் சித்தரிப்பதற்காக மனைவியை இழந்த கணவனையும் சகோதரர்கள் அற்ற மகனையுமா படைத்துக் காட்ட வேண்டும்?
கதைவாணன் புதிதாக ஒரு கடதாசி எடுத்து, புதிதாக, சுடச் சுட ஓர் இலக்கியக் கதை புனையலானார்.
“பூந்தாது சொரியும் அந்தி மாலையினை உடைய சோழனின் அருள் மிகுந்த வெண்கொற்றக் குடை போன்று, அதுவும் இந்த அழகிய உலகிலே தண்ணொளி பரப்புகின்ற…”
இலக்கியக் கதையாவது தனக்குக் கை கொடுக்காதா என்று முயன்றவன் அதிலும் வெற்றிகரமாகப் பின் வாங்க வேண்டி வந்துவிட்டது.
மக்களுக்காக, மக்கள் இலக்கியம் படைக்கப் புறப்பட்ட தான் மக்களில் பலருக்குப் புரியாத மொழி நடையை, சொல் ஆட்சியை கையாளலாமா? ‘பூந்தாது’ என்பதும் ‘வெண்கொற்றம்’ என்பதும், ‘தண்ணொளி’ என்பதும் எல்லாருக்குமா புரியப் போகிறது?
இப்படியாக இரவு பதினொரு மணிவரை முயன்றும் கதைவாணனால் ஒரு கதையின் ஆரம்பப் பகுதியைக்கூட எழுத முடியாமல் போய் விட்டது. தூக்கம் கண்களைத் தழுவியதனாலும், அலுப்பினால் உடல் தளர்ந்து விட்டதனாலும் அவன் தனது கதை எழுதும் திட்டத்தினை அடுத்த நாள் இரவுக்கு ஒத்தி வைத்தான்.
– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.