காசுநாதன் என் எதிர் வீட்டு நண்பர். ரொம்பவும் உஷார் பேர்வழி. இப்போதெல்லாம் செல்போன் மூலமா நெறைய நிதி (பைனான்ஸ்) மோசடி நடக்குதுன்னு ஞானம் பெற்ற அவரை யாரும் ஏமாத்தறது லேசுப்பட்ட காரியம் இல்ல. நிஜமாவே அவரோட வங்கியிலிருந்து யாராவது பேசினா கூட ‘சார், எனக்கு காது கொஞ்சம் மந்தம், நானே நேரிலே வரனே’ என்று ஜகா வாங்கிடுவார்.
மோசடி ஆசாமி மறுபக்கம் இங்கிலீஷில் பேசினால், இவர் தமிழில் ‘அமுத தமிழில் பகிரவும்’ என்பார். தமிழில் யாரவது பேசினால், தெலுங்கில் செப்புவார். கன்னடத்தில் பேசினால் ‘கொத்தில்லா (தெரியாது)’ என்பார். மோசடி ஆள் ‘ உங்களுக்கு எந்த மொழியில் பேசினால் நன்று?’ என்று வினவினால் இவர் ‘என் தாய்மொழி சௌராஷ்டிரா, அதில பேச முடியுமா?’ என்று எதிர் சொல்வார். சில சமயம் ஆவல் முந்திக்கொள்ள, தமாஷாக உரையாடலை தொடர்வார். ஒருமுறை, லோன் ஆசாமி, குறைந்த வட்டி என்று ஆரம்பிக்க காசுநாதன் ‘என் வயசு தொன்னுதொன்பது ஆவுதப்பா. எவ்வளவு லோன் வேணா கொடு. வசூல் பண்றது உன் பாடு’ என்று சொல்ல போனில் மறுமுனையில் இவரை வசைபாடுவது கேட்டது. இதை நண்பர் வட்டாரத்தில் சொல்லிச் சொல்லி சிரிப்பார்.
அப்பேர்ப்பட்ட பலே காசுநாதன், எப்படி அவ்வளவு பெரிய காசைப் பறிகொடுத்தார் என்பது எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. அவரே அழாக்குறையா வந்து என்னிடம் முறையிட்டார்.
“நரசப்பா, மோசம் போயிட்டேன். சொளையா ரெண்டு லட்சம் போயிடுச்சு. ஒருத்தன், என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பேசினான். அஞ்சு லட்சம் லோன் அஞ்சு பர்சன்ட் வட்டி, நோ டாகுமெண்ட்ஸ், லிங்க் அனுப்பறேன்னான். லிங்க்-யை அழுத்தக்கூடாதுன்னு நினைத்துக் கொண்டே எதோ ஞாபகத்தில் ‘டச்’ பண்ணிட்டேன். கொஞ்ச நேரத்தில், டக்டக்கென்னு பத்து தடவையில் மொத்தம் ரெண்டு லட்சம் போயிடுச்சு”.
அவரைப் பார்க்க கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருந்தது. கூல்டவுன்-னு சொல்லி அவரை சிறிது ஆசுவாசப்படுத்தினேன்.
‘சைபர் கிரைம் செல்’-னு ஒன்னு இருக்கு. உடனே போய் ஃபாலோ பண்ணச் சொல்லலாம். அதிலே ஒரு இன்ஸ்பெக்டர் எனக்கு
கொஞ்சம் பழக்கம். நீ போன், பேங்க் டீடெயில்ஸ் எல்லா எடுத்திட்டு வா. டோன்ட் ஒரி. பணம் கண்டிப்பாக் கிடைக்கும்’.
இன்ஸ்பெக்டர் போனில் இருந்த மெசேஜ் எல்லாம் விவரமா பார்த்தார். மோசடி ஆளு பேசினதா சொன்னிங்க இல்ல. என்ன பேசினார் என்று கேட்க, காசுநாதன் உடனே விவரித்தார்.
“அது அப்படியே ரிகார்ட் பண்ணியிருக்கு”. போனில் அந்த ஆடியோவை ஸ்பீக்கரில் போட்டுக் காண்பித்தார். அதைக் கேட்ட எனக்கு தூக்கி வாரிப்போட்டது. உடனே, இன்ஸ்பெக்டரிடம் என் அனுமானத்தை தெரியப் படுத்தினேன்.
என் பக்கத்து வீட்டு கோபால்சாமி மகன் ரங்கசாமியை ‘அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்’ என்று சொல்லி ஹைதராபாத்திலிருந்து அவசரமாக வரவழைத்தோம். போலீஸ் முறையாக ரங்கசாமியை விசாரிக்க, அவன் செய்யும் தகிடுதத்த வேலைகளை ஒப்புக்கொண்டான். இருபத்துநான்கு மணி நேரத்தில் அவன் குற்றவாளிகளையும் கூண்டோடுப் பிடிக்க முடிந்தது.
பக்கத்து வீட்டு கோபால்சாமி தான் கொஞ்சம் அதிர்ந்து போனார், அதையெல்லாம் கேட்டு. தன் மகன் இப்படி எல்லாம் செய்வானா என்று ஷாக் ஆனார்.
நடந்தது இப்படி தான். நண்பர் காசுநாதன் ரிக்கார்ட் செய்த ஆடியோவைக் கேட்ட எனக்கு அந்த வாய்ஸ் பக்கத்துக்கு வீட்டு நண்பரின் மகன் ரங்கசாமி தான் என்று ஊர்ஜிதம் ஆனது. தெரிந்தவர்கள் தவிர்த்து, பொதுவாக காசுநாதனை, ‘காசிநாதன்’ என்று தான் தவறுதலாகக் கூப்பிடுவார்கள். ரங்கசாமி வாய்ஸ் எனக்கு ரொம்ப பழக்கம். மேலும், ரங்கசாமியின் “காசுநாதன்’ என்று தெளிவான உச்சரிப்பு அவனை அடையாளப்படுத்த உதவியது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, காசுநாதன் தன் ஆபிசில் கூட லோன் போடுவதில்லை என்று சபதமெடுத்தான்.
– June 2023, MyVikatan