ஒரு கொரோனா டைரிக்குறிப்பு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 30, 2021
பார்வையிட்டோர்: 20,878 
 

கொரோனா முதல் அலை ஆரம்பம். வருடம் 2020 மார்ச் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 11மணி.

கொரோனா ஒரு கொடிய நோய், சீனாவில் இருந்து இறக்குமதி ஆன இந்த கொள்ளை நோயில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சன் டிவியில் பிரெஞ்சு தாடி வைத்த டாக்டர் ஒருவர் விவரித்துக் கொண்டிருக்கும் போது, அபார்ட்மெண்ட் செக்ரேட்டரி தேவசகாயம் போன் செய்தார்.

“சுரேஷ் சார், வணக்கம், ஈவினிங் அஞ்சு மணிக்கு நம்ம ஜெனரல் பாடி மீட்டிங் இருக்கு, வாட்ச்மேன் அவுட் போஸ்ட் கிட்டக்க. கொரோனா விழிப்புணர்வு சம்மந்தமா பேசலாம் வாங்க.”

“கண்டிப்பா வர்றேன் சார்”

“அப்புறம் சுரேஷ், கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க, பக்கத்து தெருவுல ஒருத்தருக்கு கொரோனா வந்துடுச்சாம். தெருவே ஒரே அல்லோகலப்படுது. போற வழியையே அடைச்சிட்டாங்க. நீங்க வேற தனியா இருக்கீங்க, சாப்பிட கொள்ளன்னு அடிக்கடி வெளியே போயிட்டு வர்றீங்க, அதான் சொன்னேன்”

“ஓகே, சார். தேங்க்ஸ்.”

நான் வசிப்பது சென்னை மேற்கு மாம்பலத்தில் கௌதம் அபார்ட்மெண்ட்ஸ். ஏழு தளங்கள் கொண்டது. நான் இருப்பது மூன்றாவது மாடி 7சி. தன்னந்தனியாக வசிக்கிறேன். மனைவி நான்கு மாத கைக்குழந்தையுடன் இருப்பது நாகர்கோவிலில், அவளது வீட்டில். நான் பணிபுரிவது நந்தனம் ஒரு தனியார் நிறுவனத்தின் உற்பத்தி சார்ந்த தொழில்நுட்ப பிரிவில்.

காலையில் எழுந்ததிலிருந்து கொஞ்சம் தலைவலி. வெறும் பிரெட் டோஸ்ட் செய்து ஆம்லெட் என்று காலை டிபன் சட்டென்று முடிந்தது. கொஞ்சம் மூக்கடைத்தாற்போல இருந்தது. லேசாக உள் ஜுரம். கொஞ்ச நேரம் ஆவி பிடித்து விட்டு ஜண்டு பாம் மிதமாக தடவி அக்கடாவென்று வாட்ஸ்அப் மேய்ந்தால் அதில் புதிதாக ஒரு பார்வேர்ட்.. கொரோனா வராமல் இருக்க மேலும் ஒரு கஷாயம். கொஞ்சம் இஞ்சி, பூண்டு, அப்புறம் மிளகு, கிராம்பு, சோம்பு, இத்துடன் பட்டை மற்றும் எலுமிச்சை சேர்த்து…

அட..இதெல்லாம் போட்டு செய்வது தானே பிரியாணி, மதிய சாப்பாட்டுக்கு அதையே ஸ்விக்கியில் ஆர்டர் செய்வோம் என்று எல்லா ஞாயிற்றுக்கிழமை போல இன்றும் முடிவெடுத்தேன். டெலிவரி பாய் கொண்டு வந்த பார்சல் பாக்கெட்டை பத்திரமாக ஆள்காட்டி விரல் மட்டும் உபயோகித்து செத்துப் போன எலியை வாலை பிடித்து வெளியே கொண்டுபோய் போடுவது போல் வீட்டுக்குள் கொண்டு வந்து இரு பாத்திரங்களில் மாற்றி பத்திரமாக கையை சோப்பு போட்டு கழுவி..(‘ஏங்க, ஸ்விக்கில ஆர்டர் செய்யும் போது பத்திரம், யாருக்கோ பீட்ஸா டெலிவரி பாய் மூலமா கொரோனா வந்துச்சாம்..’ மைதிலி வாய்ஸ்)

நன்றாக பிரியாணியை மைக்ரோ ஓவனில் சூடு செய்து விட்டு, தட்டில் பரிமாறிய பின் முதல் வாய் ருசியில் ஏதோ வித்தியாசம் தெரிய, உடன் செல்போனில் கோபமாக இடது கையால் ஸ்விக்கியில் பிரியாணிக்கு சிங்கிள் ஸ்டார் ரேட்டிங் கொடுத்தேன். அடுத்த வாய் காரமான கத்திரிக்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டதும் விஷயம் தெளிவானது. என் நாக்கு தான் ருசி இழந்து விட்டது. பதட்டம் அதிகமாகி உடன் எங்கள் சக தோழர், எம்பிபிஎஸ் படிக்காமலே இலவச அலுவலக ஆஸ்தான மருத்துவராக செயல்படும் ஆல்-இன்-ஆல் சுப்புவை தொடர்பு கொண்டேன்.

சுப்பு போன் செய்து மதியம் ஒரு மணிக்கு எனக்காக அப்போலோ டாக்டருடன் ஜூம்ல் காணொளி ஆலோசனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். டாக்டர் பெயர் ஷ்யாம் சுந்தர். இருப்பு கொள்ளாமல் லிங்கை அரை மணி நேரம் முன்னதாக கிளிக் செய்ய ஏற்கனவே அந்த பக்கம் ஆன் ஆகியிருந்தது.

“சார், தெரியுதா?” ன்னு அங்கிருந்து சத்தம் கேட்க,

“தெரியுது, ஒரு கட்டில், அதுக்கு மேல முண்டா பனியன் ஒன்னு, அப்புறம் ரெண்டு பூமர் ஜட்டிகள், ஒரு டீ ஷர்ட். சார், பிரண்ட் கேமராவை ஆன் பண்ணுங்க.”

“இப்ப?”

“மூக்கு மட்டும் தான் தெரியுது. கொஞ்சம் போன கீழ தள்ளி வைங்க. ஆங்.. இப்ப தெரியுது. யார் அது, தம்பி.. கொஞ்சம் போய் டாக்டரை கூப்பிடுங்க.”

“சார் நான் தான் டாக்டர் ஷ்யாம் சுந்தர்..”

“வேற சீனியர் டாக்டர் யாரும் இல்லையா?”

டாக்டர் ஷ்யாம் சுந்தர் முறைத்தான். “சார், நான் இப்ப தான் எம்பிபிஎஸ் முடிச்சுட்டு இங்க இன்டெர்ன் ஜாயின் பண்ணி இருக்கேன். உங்க பேக்கேஜ் பட்ஜெட்டுக்கு நான் தான் அவைலபிள். சரி சொல்லுங்க. உங்களுக்கு உடம்புக்கு என்ன பண்ணுது”

டாக்டர்னா எப்பவும் மொதல்ல இதைத் தான் கேட்கனும்னு படிக்கும் போதே சொல்லிக் கொடுத்துடுவாங்களோ என்று முணுமுணுத்தபடி, “உடம்புக்கு பண்ணுவதை விட மனசு தான் என்னவோ பண்ணுது டாக்டர்” என்றேன்.

“சார் அதுக்கு நீங்க ஒரு மனோதத்துவ டாக்டரைத் தான் பாக்கணும்”

‘அட, முளைச்சு ரெண்டு இலை விடல, (நோட், மூணு இலை கூட இல்லை) கிண்டலா? நல்லா வருவடா நீ’ என்று கருவியபடி (மனசுக்குள் தான்),

“லேசா ஜுரமா இருக்கு, தலை பாரமா இருக்கு”

“மூச்சு விட கஷ்டமா இருக்கா?”

“இதுவர தெரியல..இப்ப நீங்க சொன்ன பிறகு மூச்சு விடுவதைப் பத்தி நினைச்சுப் பார்த்துட்டே மூச்சு விடும் போது கொஞ்சம் மூச்சு விடுவது சிரமமா இருக்குற மாதிரி தான் இருக்கு.”

“ஏன் திடீர்னு கமல் மாதிரி பேசுறீங்க. ஒன்னும் புரியல. சரி, அப்புறம்?”

“அப்புறம் ருசியே தெரியல.”

“ருசி தெரியலயா, கஷ்டம் தான், மதியம் என்ன சாப்பிட்டீங்க”

தயங்கியபடி, பிரியாணி, என்றேன்.

“என்னது, பிரியாணியா. என்ன பிரியாணி.. சிக்கனா மட்டனா?”

“சிக்கன்”

“பாய் தம் பிரியாணியா, ஹைதராபாத்தா, செட்டிநாடு பிரியாணியா?”

“இல்ல சார், திண்டுக்கல் தலப்பாக்கட்டி”

“தொட்டுக்க என்ன இருந்தது?”

“கத்தரிக்க்கா சட்னி, வெங்காய பச்சடி”

“எதில ஆர்டர் பண்ணீங்க.. சொமோட்டாவா, ஸ்விக்கியா?”

“ஸ்விக்கி சார்”

“என்ன ஆபர் இருந்துது… டிஸ்கவுண்ட் எவ்வளவு?”

“சார்,என்ன நடக்குது இங்க.. நீங்க நிஜமாவே டாக்டர் தானா?”

“ஓ…. ஒகே! சாரி. பிரியாணி என்றதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். தலப்பாக்கட்டி பிரியாணி ஸ்பைசியா நல்லா காரசாரமா தான் இருக்கும், அதுவே உங்களுக்கு டேஸ்ட் தெரியலன்னா, ஐ டவுட் கண்டிப்பா இட் இஸ் கோவிட் பாசிட்டிவ் கேஸ்..”

இவன் என்னைப்போல் ஒருவன். பிரியாணி ஆர்வலன். வேறு ஒரு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் இந்த பையன் எனக்கு ரொம்பவும் திக் பிரெண்ட்ஸ் ஆயிருப்பான்.

ஆனால் இப்போது என்னுடைய நிலைமை வேறு. அவன் சொன்னதை கேட்ட பின் எனக்கு கண்கள் இருண்டு கொண்டு வந்தது.

“டாக்டர், அப்ப அவ்வளவு தானா! என்ன காப்பாத்த முடியாதா.. எதுவும் செய்ய முடியாதா…நான் போய்ச் சேர வேண்டியது தானா?”

“சுரேஷ் சார் அவசரப்படாதீங்க, இன்னும் கொரானான்னு உறுதியாகல..ஒரு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுப்போம், உங்க வீட்டுக்கே வந்து எடுக்க ஏற்பாடு பண்ணிடலாம். உங்க அட்ரஸ் சொல்லுங்க”

ஆர்டிபிசிஆர் என்றால் விசிஆர் போல எதோ பெரிய எக்யூப்மென்ட். கொண்டு வருவார்கள். எப்படி தேவசகாயம் கண்ணில் படாமல் டெஸ்ட் செய்வது என்று யோசித்து டெஸ்ட் எடுக்க வரும் பையனுக்கு முன்கூட்டியே போன் செய்து கார் பார்க்கிங் அருகில் வர சொல்லியிருந்தேன். ஜீன்ஸ் அணிந்து ஸ்டைலாக வந்தவன் என்னை ஒரு கார் மீது சாய்வாக நிற்க வைத்தான் பிறகு பேக் பாக்கிலிருந்து ஒரு பெட்டியை திறந்து நீள பஞ்சு பொதிந்த பிளாஸ்டிக் குச்சிகள் இரண்டு எடுத்து “இப்ப ஆ.. சொல்லுங்க” என்றான். ஆ! என்றதும்,

“என்ன சார் சாப்பிடீங்க, பிரியாணி வாசனை வருது..”

கேட்டுக்கொண்டே ஓரு குச்சியை வாய்க்குள் நுழைத்து மேலும் கீழும் அசைத்து எடுத்தான். அதை ஒரு பிளாஸ்டிக் குப்பியில் பத்திரப்படுத்தினான்.

“இப்போ மூக்கை காட்டுங்க”

மூக்கையும் ஆ காட்ட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று இப்போது தோன்றியது. கண்ணில் விரலை விட்டு ஆட்டுவது என்று சொல்வார்கள். அதை விட பெரிய கொடுமை இது.

தம்பி இதுக்கு மேல நீ என் மூக்குல இந்த குச்சியை சொருகினா தொண்டை வழியா வெளியே வந்திடும்னு சொல்ல நினைத்தேன். முடியவில்லை.

“ரிசல்ட் எப்போ வரும்?”

“நெகட்டிவ் னா லேட்டா வரும். பாசிட்டிவ் சீக்கிரமே வரும். அப்போல்லோ ஸ்பெசல் லாப் மூலம் டெஸ்ட் செய்யறோம். அதனால ஆறு மணிக்குள்ள வந்திரும்”

“லேட்டாவே வரட்டும். அவசரமில்லே. ரிசல்ட் எப்படி தெரியும்?”

“எஸ்எம்எஸ்ல வரும் சார். எப்படியும் அதுக்கு முன்னாடியே கார்ப்பரேஷன் ஆளுங்க தட்டி அடிக்க, நோட்டீஸ் ஒட்ட வருவாங்க. அப்ப தெரிஞ்சிடும்”

ஏனோ ‘நாடகம் விடும் நேரம் தான்.. உச்சக்காட்சி நடக்குதம்மா’ என்ற வாழ்வே மாயம் கமல் பாட்டு திடீரென்று ஞாபகம் வந்தது.

சரியாக ஐந்து மணிக்கு டொங் என்றது செல்போன் மெசேஜ் ஒற்றை சத்தம். இதய துடிப்பு சற்றே நிற்க, பாசிட்டிவ் என்ற வார்த்தை செல்போன் திரையில் மங்கலாக தெரிந்தது.

மைதிலிக்கு உடனே போன் செய்து என் வங்கிக் கணக்கு மற்றும் ஏடிஎம் பாஸ்வேர்டு போன்ற விவரங்கள் தெரிவிக்க, அவள் மெரிசலானாள்.

“என்னங்க சொல்றீங்க. உங்களுக்கு கொரோனாவா. அப்பவே சொன்னேன், நான்வெஜ் சாப்பிடரத குறைங்கன்னு… கேட்டீங்களா?”

“என்னடி சொல்ற? அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?”

“கமலா மாமி சொன்னாங்க. அசைவம் சாப்பிட்டா கொரோனா வருமாம். .நான் அம்மனுக்கு வேண்டிக்கறேன். சரியானா முப்பாத்தம்மன் கோவிலுக்கு நீங்க நாலு வெள்ளிக்கிழமை தொடர்ச்சியா வருவீங்கன்னு, அடுத்த ஆடி மாசம் வரைக்கும் நான்வெஜ் சாப்பிட மாட்டீங்கன்னும் வேண்டிக்கிறேன்”

“ஏண்டி, சுத்தி சுத்தி அதே டாபிக் வந்துடுவியே. சரி இனிமே நான் தயிர் சாதம் மட்டும் சாப்பிடுறேன். போதுமா?”

“திருந்த மாட்டீங்களே.. உங்க ஹெல்த்க்காக தானே சொல்றேன். சரி. அப்பப்போ போன் பண்ணுங்க. உடம்ப பாத்துக்கோங்க. நாம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம். இப்படி ஒரு வியாதி உங்களுக்கு வர.. கடவுளே!”

சென்னை மாநகராட்சி ஆட்கள் வந்து அப்பார்ட்மென்ட் கேட் அருகே நோட்டீஸ் ஒட்டி தட்டி கட்டத் தொடங்கியதும் தேவசகாயத்தின் குரல் கீழே உச்சஸ்தாதியில் கேட்டது. .

“அவரைத் தான் ஹாஸ்பிடல் கொண்டு போறீங்களே. அப்புறம் எதுக்கு இதெல்லாம்..”

“சார் இதெல்லாம் கவர்மெண்ட் ரூல்ஸ்.. சட்டப்படி தான் நாங்க செய்றோம்.”

என்னை சந்திக்கவோ என் பிளாட் அருகே வரவோ யாருக்கும் துணிவில்லை. கார்ப்பரேஷன் நபர் ஒருவர் மட்டும் வந்து “சார், ஒரு பத்து நாளுக்கு தேவையான துணிமணி எடுத்துக்கோங்க” என்றார்.

“துணி சரி, மணி என்னது, காசா?’

“இப்பக் கூட உங்களுக்கு எளக்காரம் தான் சார். மாஸ்க்க கொஞ்சம் இறுக்கமா போடுங்க, மொபைல் மறக்காம எடுத்துக்கோங்க.”

மொபைல் கையில் எடுத்ததும் ரிங் அடித்தது. தேவசகாயம்..

“என்ன சார், காலைல பேசிட்டு இருக்கும் போது கூட ஒரு வார்த்தை சொல்லலையே.”

“என்ன செய்ய சார். எனக்கே இப்ப அப்பார்ட்மெண்ட் வாசல்ல தட்டி அடிக்கும் போது தான் ரிசல்ட் வந்தது.”

“என்னவோ சுரேஷ் சார், உங்களுக்காக கடவுள் கிட்டே வேண்டிக்கிறோம். நல்லா சரியானப்புறம் பொறுமையா டிஸ்சார்ஜ் வாங்கிட்டு வாங்க. அவசரப்படாதீங்க.”

அவர் கவலை அவருக்கு. வெளியே யாரிடமோ ஈவினிங் மீட்டிங்கை அர்ஜெண்ட் எக்ஸ்ட்ராடினரி மீட்டிங்காக மாற்றி உடனடியாக அபார்ட்மெண்ட் முழுக்க பியூமிகேஷன் செய்ய வேண்டிய அவசியத்தை விளக்கிக் கொண்டிருந்தார்.

அப்பார்ட்மெண்ட் வாசலில் கேட்டை மறித்துக் கொண்டு ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது. என்னை வழியனுப்ப யாரும் வரவில்லை. நான் சொல்லி விட்டு கிளம்பவும் யாரும் இல்லை.

அலுவலகம் செல்லும் போது பலமுறை நான் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி இருக்கிறேன். ஆனால் அதற்கு உள்ளே எப்படி இருக்கும் என்று கூட இதுவரை நேரில் பார்த்ததில்லை. நினைத்தது போல் இல்லாமல் மிக சாதாரணமாக இருந்தது. படுத்துக்கொள்ள ஒரு சிறிய ரெக்ஸின் படுக்கை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கண்ணில் தெரியாதபடி பிளாஸ்டிக் திரை இருந்தது. துணிமணி கொண்ட பையுடன் மிகுந்த கூச்சத்துடன் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏறி படுக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.

அபார்ட்மெண்ட் முழுக்க லேசாக ஜன்னல் திறந்து வைத்து பீதியுடன் வேடிக்கைப் பார்த்தது. தெரு நாய்கள் ஆம்புலன்சை சுற்றி வந்து பயங்கரமாக குரைக்கத் தொடங்கின. இருப்பு கொள்ளாமல் ஆம்புலன்ஸ் டிரைவர், “சார் என் பேர் மணி. கிளம்பலாமா?” என்று கேட்டான்.

“மணி, இதுக்கெல்லாம் ராகு காலம் எமகண்டம் பாக்க அவசியம் இல்ல. சட்டுனு கிளம்புப்பா”

“வாட்டமா படுத்துக்கோ சார்.”

“இல்லப்பா, பிரச்சினை இல்லை. உட்கார்ந்தபடியே இருக்கிறேன்”

“அதுக்கு இல்ல சார், அப்பத்தான் நாள் சைரன் போட முடியும்.”

“பரவால்லப்பா. அவசரம் இல்ல. சைரன் இல்லாம மெதுவாவே ஒட்டு.’

“சார், புரிஞ்சிக்கோ. எனக்கு சைரன் போட்டாத்தான் வண்டி ஓட்ட வரும்.”

ஆம்புலன்ஸ் படுக்கையில் படுத்ததும் மூச்சை அடைப்பது போலவும், நெஞ்சு வலி வருவது போலவும் இருந்தது.

வண்டி தெரு முனை தாண்டி மெயின் ரோடு வந்ததும் ஆம்புலன்ஸ் டிரைவர் மணியின் செல்போன் கணீரென்று ஒலித்தது. காலர் டியூன்..

“நான் பிழைப்பேனோ.. மூச்சு வாங்குதே, நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே..

டட டா டட டட்டட்டா ய்ங். டட டா டட டட்டட்டா ய்ங் .”

“மணி…தயவுசெய்து அந்த போனை எடுத்து தொலை. இல்ல ஆப் பண்ணு.”

தனுஷின் காதல் வயப்பட்ட பாட்டின் ஆரம்ப வரிகள் என்னைப் போன்ற ஒரு கொரோனா நோயாளிக்கென்றே எழுதி வைத்தது போல் அபசகுனமாக அல்லவா ஒலிக்கிறது. சே!.

‘சார், டூட்டில போன் எடுக்க கூடாது. ஆஃப் பண்ணவும் கூடாது. ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்.’

‘அடக் கஷ்டமே, உன் காலர் டியூனையாவது அப்புறமா மாத்தி தொலை.’

“ஏன் சார், நல்ல சாங் சார்.”

ஆம்புலன்ஸ் அரசு பொது மருத்துவமனை வந்து சேர்ந்த போது வாசலில் போலீஸ் ஜீப், வாகனங்கள் என்று ஒரே கூட்டம்.

“என்னப்பா மணி, இங்க மினிஸ்டர் யாராவது அட்மிட் ஆயிருக்காங்களா?”

“சார், விளையாடாத.. உனக்கோசரம் தான் இதெல்லாம்”

சரியாக இறங்கும் நேரம் பார்த்து மணி “சார், ஏதாவது பாத்து செய்யுங்க!” என்றான். ஒரு நூறு ரூபாய் நோட்டை திரை ஓட்டை வழியாக நுழைக்க, “அய்யோ சார், அந்த பெட் மேல வெச்சிடுங்க, அப்புறமா அதை சானிடைஸ் பண்ணிட்டு எடுத்துக்கறேன்” என்றான். நாய் விற்ற காசு குரைக்காது. ஆனால் கொரோனா தொற்று காசு கண்டிப்பாக கடிக்கும்.

ஆம்புலன்சில் இருந்து என்னை ஒரு வீல் சேருக்கு மாற்றினார்கள். அங்கே கொரோனா ஸ்பெஷல் வார்டில் நான் தான் முதல் அட்மிஷனாம். அதற்குத் தான் இந்த கூட்டமும் ரிப்பன் கட்டிங்கும்.

பெரிய தனி வார்டு. குட்டியாக ஒரு கலைஞர் டிவி கூட ஓரமாக இருந்தது கண்ணில் பட்டது. ஹாஸ்பிடல் போலவே தெரியவில்லை. என்னைப் பார்க்க வந்த டாக்டர்கள் எல்லாம் நாசா விஞ்ஞானிகள் போல உடை அணிந்திருந்தார்கள். அவர்கள் மிதந்து வருவது போல் இருந்தது. ஏதேதோ கேள்விகள் கேட்டார்கள். அருகில் வராமல் தூர நின்று பேசினார்கள். கடந்த ஒரு வாரம் எங்கேயெல்லாம் போனீர்கள். யாரையெல்லாம் பார்த்தீர்கள் என்று விரிவாக லிஸ்ட் போட்டு கொடுக்கச் சொன்னார்கள். மருந்து கொஞ்சமாக கொடுத்தார்கள். யார் பெரிய டாக்டர் யார் சின்ன டாக்டர் என்று புரியவில்லை. கவச உடையில் எல்லோரும் ஒரே மாதிரி இருந்தார்கள்,

“டாக்டர், இங்கே நர்சம்மா யாரும் இல்லையா?”

டாக்டர்கள் கூட்டம் நடுவில் இருந்து ஒரு பச்சை கவச உடையணிந்த உருவம், “ஹலோ, நான் நர்ஸ் தான்.. ” என்றது.

உணவு கொண்டு வருவது அட்டண்டர் கதிர். அவன் முக கவசம் மட்டும் தான் அணிந்திருந்தான். “தம்பி, பாரம்ல நான் சாப்பாடு நான்வெஜ்னு டிக் செஞ்சிருந்தேன்.”

“சார், இது நான்வெஜ் தான், முட்டை இருக்கு பார், வெஜ்ன்னா ஒரு கிண்ணம் கொண்டகடலை சுண்டல் எஸ்ட்ரா.”

“கதிர், கேரளாவில் கொரோனா வார்டுல நான்வெஜ்க்கு சிக்கன் சூப் அப்புறம் பிஷ் ப்ரை எல்லாம் தராங்களாம்..”

அட்டண்டர் கதிர் என்னை முறைத்தபடி டேபிளில் உணவுத் தட்டை டொக்கென்று வைத்து விட்டு சென்றான். எனக்கென்னவோ அவன் முறைத்த போது மைதிலி முறைத்த மாதிரியே தோன்றியது.

மறு நாள் கதிர் வந்த போது, “கதிர், அந்த டிவிய கொஞ்சம் ஆன் பண்ணுப்பா” என்றேன்.

“எந்த டிவி சார்.. அது மானிட்டர்..”

“அதுல கேபிள் வராதா?”

“அது உனுக்கு திடீர்னு மூச்சு இஸ்துகிச்சின்னா உன்ன கனெக்ட் பண்ற மானிட்டர். சினிமால பாத்தது இல்ல. மேல கீழன்னு கிறுக்குனா ஒகே.. கோடு நேரா போச்சுன்னா..”

“தெரியும், காலி.. அம்பேல்னு அர்த்தம்..”

அதிக நேரம் சந்தித்த நபர்கள் யார் என்ற லிஸ்டில் முதலில் சடகோபன் பேரைத் தான் எழுதினேன். நல்ல சந்தர்ப்பம் இது. போன மாதம் ரெண்டு நாள் லீவுக்கு லாஸ் ஆப் பே போட்ட சிடு மூஞ்சி எச்ஆர் அவர். ஏற்கனவே எப்போதும் மூக்கை உறிஞ்சி கொண்டே இருப்பார். அவர் வீட்டுக்கு ஒரு நாளாவது தட்டி அடிக்கட்டும்.

.சீப் கவச உடை டாக்டர் இரண்டு நாட்கள் கழித்து வந்து எனக்கு மைல்டு வைரஸ் அட்டாக் தான், அதனால் பயமேதும் இல்லை என்றார்.

ஆறு படுக்கைகள் கொண்ட அந்த வார்டில் ஒரு வாரத்தில் இன்னும் நான்கு பேர்கள் வந்து சேர்ந்தார்கள். அதில் எண்பது வயது தாண்டிய பெரியவர் ஒருவர் ஒரு இரவு உணவின் போது மூச்சுத் திணறி இறந்து போனார். எனக்கென்னவோ அவர் சாப்பிடும் போது கொண்டைக்கடலை சுண்டல் தொண்டையில் சிக்கி இறந்திருப்பார் என்று தோன்றியது. கதிரிடம் இதைச் சொன்ன போது “சார், நீ என் வேலைக்கே ஆப்பு வெச்சிடுவ போல இருக்கு” என்று முறைத்தான்.

அங்கிருந்த எல்லா நாட்களும் வித்தியாசம் இல்லாமல் முந்தைய நாளின் ஜெராக்ஸ் நகல் போலவே இருந்தது.

பதினைந்து நாட்கள் கழித்து கதிர் ஓடி வந்தான். “சார், நாளைக்கு உனக்கு ரிலீஸ்” என்றான்

“என்னது ரிலீசா..”

“அதான் சார், டிஜ்ஜாரஜ்”

எங்களில் நான்கு பேரை மட்டும் டிஸ்சார்ஜ் செய்வதாக மாலையில் செய்தி வந்தது. நாங்கள் முற்றிலும் குணமாகி விட்டதாக கூறி சிடீ ஸ்கேன் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் சான்றிதழ்கள் தந்தார்கள். கதிர் வந்து “சார் போறச்ச நம்மள கொஞ்சம் கவனி” என்றான். கவச உடை அணியாமல் எங்களை எதிர் கொண்டு உணவு தந்த ஒரே மாவீரன் அவன் தான். அதனால் அவனை நன்றாகவே கவனித்தேன். முதல் முறையாக மாஸ்க்கை கீழே இறக்கி முழு முகம் காட்டி சிரித்து “டாங்க்ஸ் சார்” என்றான்.

எங்களை வழியனுப்ப மாவட்ட கலெக்டர் வந்திருந்தார். பழக்கூடை தந்து தள்ளி நின்று போட்டோ வீடியோ எல்லாம் எடுத்துக் கொண்டார். டாக்டர்கள், நர்சுகள் எல்லாம் கையெல்லாம் தட்டி பிறகு கை கூப்பி ஆம்புலன்ஸில் ஏற்றி வழி அனுப்பி வைத்தார்கள்.

அபார்ட்மெண்ட் வாசலில் என்னை இறக்கி விட்ட பின் ஆம்புலன்ஸ் சென்றது. வாசலில் எங்கள் அப்பார்ட்மென்ட் நபர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ஏனோ எல்லோரும் என்னை ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதாகவே தோன்றியது. அடுத்த சில நொடிகளில், செல்போன் மணி அடித்தது. பேசியது தேவசகாயம்.

“சுரேஷ் சார், வெல்கம் பேக். ஒரு முக்கியமான விஷயம், போகும் போது படியில ஏறிப் போய்டுங்க. லிப்ட் வேண்டாம். தேர்ட் ப்ளோர் தானே, அட்ஜஸ்ட் பண்ணிக்கனும். கொஞ்ச நாளைக்கு ஹோம் க்வாரண்டைன் பண்ணிக்கோங்க. உங்களுக்கு வேண்டியது எல்லாம் வாங்கி தர ஒரு வாட்ச்மேன் தனியாக ஏற்பாடு செய்றேன்.”

மறுநாள் காலை அலுவலகத்தில் எச்ஆர்க்கு போன் செய்து பணியில் மீண்டும் சேருவது குறித்து பேசினேன்.

“சொல்லுங்க..”

“சார், நான் சுரேஷ் பேசறேன். கொரோனா நெகட்டிவ் ஆயிடுச்சு.”

“நீங்க எந்த சுரேஷ்?”

சுரேஷ் என்ற பெயர் இருப்பவர்கள் கண்டிப்பாக பெரிய நிறுவனங்களில் வேலையில் சேரக்கூடாது. முதலில் சேர்ந்த சுரேஷ் நான் தான்… அதற்கப்புறம் சேர்ந்த சுரேஷ் அடையாளம் தெரிய வேண்டி குண்டு சுரேஷ் என்று அழைக்கப்பட்டான். அதற்கடுத்து சேர்ந்த சுரேஷை புது சுரேஷ் என்று அழைத்தார்கள்.

“நீங்க கே. சுரேஷா?”

“இல்ல சார். வெறும் சுரேஷ்”

“அப்படின்னா வி. சுரேஷா?”

“அதில்லை சார், முதலில் சேர்ந்த சுரேஷ்.”

“கொஞ்சம் இருங்க, பக்கத்தில விசாரிக்கிறேன்.’

“சாரி சார், உங்களுக்கு கொரோனா வந்ததால கே.சுரேஷ் னு சொல்லிட்டாங்க.”

(அடப்பாவிகளா, கொரோனா சுரேஷ்னு பேர் வெச்சிட்டீங்களா!)

“எனிவே, நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு ஒரு பத்து நாள் கழிச்சு ஜாயின் பண்ணுங்க. அவசரமில்லை. உங்களுக்கு ஸ்பெஷல் லீவ் வித் பே சாங்ஷன் ஆயிருக்கு. முடிஞ்சா ஒர்க் ப்ரம் ஹோம் பண்ணுங்க.”

“சார், நான் இருக்குறது, மேனுபாக்சரிங் டிவிஷன்ல. எப்படி ஒர்க் ப்ரம் ஹோம்?’

“பரவாயில்லை, வீடியோ கால் போட்டு மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாமே.”

போன மாசம் ரெண்டு நாள் லீவு கேட்ட போது ‘இம்பாசிபிள்’ என்றவன் இதே எச்ஆர் தான்.

போனை கட் செய்ததும் மைதிலி லைனில் வந்தாள். “ஏங்க, வீட்டுக்கு வந்திட்டீஙகளா.”

“ஆமா, என்ன, சொல்லு..”

என்ன இருந்தாலும் என் தர்மபத்தினியிடம் எந்த குறையுமில்லை. கொரோனா சிகிச்சை நேரத்தில் தினமும் குறைந்தபட்சம் மூன்று முறையாவது போன் செய்து பல விதமான வாட்ஸ்அப் யோசனைகளை சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஏங்க, உங்களுக்கு கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா?”

“ஏன், என்ன ஆச்சு, ரெண்டு வாரமா நான் முட்டையைத் தவிர வேற ஒன்னும் சாப்பிடலயே.”

“அச்சோ! அதில்லை. உங்கள் வாட்ஸப் ப்ரொபைல் போட்டோல என்னத்த போட்டிருக்கீங்க”

“அது வந்து…”

“ஏங்க.. உங்களுக்கு கலெக்டர் பழக்கூடை ஏதாவது அவார்டுக்காகவா கொடுத்தார். அதப் போயி பெருமையா போட்டிருக்கீங்க.. என் பிரென்ட்ஸ் ஒவ்வொருத்தரா போன் செய்து விசாரிக்கிறாங்க. அசிங்கமா இருக்கு. நீங்க வேணும்னா அந்த போட்டோவை சட்டம் போட்டு உங்க ரூமுல மாட்டி வச்சுக்கோங்க. கமலா மாமி வேற நீங்க ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகிற வீடியோவை பாலிமர் நியூஸ் டிவில பாத்திட்டு விவரமா கேக்கறா.”

“சரி மைதிலி அத மாத்திடறேன். அப்புறம் நீ எப்ப இங்க வர?”

“அது ஒரு ரெண்டு மூணு மாசம் ஆகட்டுங்க.. அப்பா வேற இந்த நிலைமைல நீ கைக்குழந்தையோடு அங்க போவாதேன்னு சொல்றார்.”

அப்பார்ட்மென்டில் எல்லோரும் என்னை பார்த்து உடன் வழி விட்டார்கள். கை காட்டி ஏதோ குசுகுசு என்று பேசிக் கொண்டார்கள்.

தேவசகாயம் நாட்டாமை விஜயகுமார் போல அப்பார்ட்மென்ட் கூட்டங்களிருந்து என்னை கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு தள்ளி வைத்தார்.

அலுவலகத்தில் என்னை சக ஊழியர்கள் ரொம்ப நாட்கள் முற்றிலுமாக தவிர்த்தார்கள்.

இதுவும் கடந்து போகும்

***

கொரோனா இரண்டாம் அலை. வருடம்2021ஏப்ரல் மாதம், ஒரு திங்கட்கிழமை. காலை ஒன்பது மணி.

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

படுக்கையில் இருந்து எழுந்து மணி பார்த்தால் ஒன்பதரை. தலை பாரமாக இருந்தது. வாய் கொஞ்சம் கசந்தது. கொஞ்சம் ஜலதோஷம் போல் அறிகுறிகள் அல்லது ஒருவேளை கொரோனாவாக இருக்குமோ. ஏற்கனவே தொற்று வந்து மீண்டவரை மறுபடி கொரோனா தாக்க நேரலாம். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று போன வாரம் தான் சன் டிவியில் நமது விருந்தினர் நிகழ்ச்சியில் டாக்டர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். சரி லீவு போட்டு ஒரு டெஸ்ட் எடுத்து பார்த்து விடுவோம் என்று எச்ஆர்க்கு போன் செய்தேன்.

“சொல்லுங்க”

“சார், நான் மேனுபாக்சர் டிவிசன் சுரேஷ் பேசறேன்”

“எந்த சுரேஷ்?”

“கே சுரேஷ், கொரோனா சுரேஷ்”

“அட நீங்களா! சொல்லுங்க, உங்க டிவிசன்ல மொத்தம் ஐந்து பேருக்கு ஏற்கனவே கொரோனா வந்தாச்சு, இன்னுமா உங்களை அப்படி கூப்பிடறாங்க..”

“அத விடுங்க சார், உடம்பு கொஞ்சம் சரியில்ல. கொரோனா சிம்ப்டம்ஸ் இருக்கு. ஒரு நாள் லீவு குடுங்க. டெஸ்ட் பண்ணி பாத்துட்டு வந்துடறேன்.”

“உங்களுக்கு ஏற்கனவே கொரோனா வந்துட்டு போயிட்டதால பிரச்சனை இல்ல. அதெல்லாம் இருக்காது. உங்களுக்கு நல்ல ஆன்டிபாடி இருக்கு.”

“சார், கொரோனாவுக்கு அப்புறம் கொஞ்சம் வாக்கிங் போறது நிறுத்தினதால வெயிட் போட்டுட்டேன். ஆனா அதுக்காக என் பாடி ஆன்ட்டி மாதிரி இருக்குன்னு சொல்லாதீங்க”

“மிஸ்டர், உங்களுக்கு இம்யுனிட்டி இயற்கையா இருக்கும்னு சொன்னேன்.”

“ஓ..சாரி சார்.”

“சுரேஷ், உங்க டிவிஷன்ல காலைல இருந்து இதுவரை ஆறு பேர் லீவ் கேட்டிருக்காங்க. அஞ்சு பேர் ஏற்கனவே ஹோம் கோரன்டைன்ல இருக்காங்க. அதனால..”

“சொல்லுங்க சார்”

“இளங்கோ மட்டும் தான் ஆபீஸ் வந்திருக்கார். அவரை நாங்க வீட்டுக்கு அனுப்பிடறோம். நீங்க இப்பவே கிளம்பி வாங்க. அதே போல மத்த ஆறு பேரையும் வரச் சொல்லியிருக்கோம் இங்கயே டெஸ்ட் ஏற்பாடு பண்ணிடறோம். டெஸ்ட் பாசிட்டிவ் வந்தா இங்கயே வேலை செய்துகிட்டே கோரன்டைன்ல இருக்கலாம். ஆபீஸ் செலவுல சாப்பாடு, மருந்து, கபசுர குடிநீர் எல்லாம் குடுத்திடலாம். சரியா..”

போனை கட் செய்துவிட்டு அதிர்ச்சியுடன் உறைந்து நின்ற அந்த சமயம் எனக்கு மைதிலி போன் செய்தாள்.

“என்னம்மா சொல்லு”

“ஏங்க நீங்க இன்னும் ஆபீஸ் போகல..’

“போகனும். ஒன் அவர் பர்மிஷன். கொஞ்சம் உடம்பு சரியில்ல..”

“அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. கவலப்படாதீங்க. நான் சொல்ற மாதிரி பண்ணுங்க. நாலு துளசி இலையை பச்சை தண்ணியில போட்டு தினம் குடிங்க. கொரோனா அண்டாது. ஆனா துளசி தீர்த்தம் சாப்பிட்ட அன்னைக்கு நான்வெஜ் கண்டிப்பா சாப்பிடாதீங்க.”

“யார் சொன்னாங்க இந்த வைத்தியம், கமலா மாமியா?”

“இல்ல இல்ல… வாட்சப்ல வந்தது. கமலா மாமிக்கு ரெண்டு நாள் முந்தி கொரோனா வந்து சென்னைல மியாட் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்கா.”

“கமலா மாமி எப்போ நான்வெஜ் சாப்பிட்டா?”

“குதர்க்கமா பேசாதீங்க வைங்க போனை..”

குளிக்க பாத்ரூம் சென்று பைப்பை திறந்தால் தண்ணீர் வரவில்லை. தேவசகாயத்துக்கு போன் அடித்தால் ரிங் போனது. ஆனால் யாரும் போன் எடுக்கவில்லை. கீழ் பிளாட் சங்கரனை விசாரித்தேன்.

“சார் உங்களுக்கு விஷயம் தெரியாதா? தேவசகாயத்துக்கு கொரானாவாம்.. அவர் வீட்டுல தன்னைத் தனிமைப் படுத்திட்டு இருக்கார்.”

“அடக்கஷ்டமே! ஆனா அவர் போன் எடுக்கலியே.”

“அப்படியா, இருங்க. இதோ நம்ம வாட்ச்மேன் கிட்ட கொடுக்கறேன் கேளுங்க”

“வணக்கம் சார், தேவசகாயம் சார் காய்கறி வாங்க பழமுதிர்சோலை வர போய் இருக்கார். இப்ப வந்துடுவார்.”

“என்னது?”

‘ஆமா சார், நல்லா மாஸ்க் போட்டுக்கிட்டு சமூக இடைவெளி விட்டு அடிக்கடி சோப்பு போட்டு கைய கழுவினா போதும். கொரோனா வராது. இதை சார் தவறாம பண்றாராம். அதனால அவர் கிட்ட இருந்தும் கொரோனா யாருக்கும் பரவாதுன்னு சொன்னார் சார்.’

அடப்பாவிகளா!

நான் திரும்பத் திரும்ப வருவேன்னு சொல்லு!

– 24.08.2021

Print Friendly, PDF & Email

0 thoughts on “ஒரு கொரோனா டைரிக்குறிப்பு

  1. Good! you have nature fluency and a wealth of knowledge.Nice to see such Tamil writing. Please keep it up.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *