ஒரு ஊர்ல ஒரு தேர்தல்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 10,802 
 

கிளிவலம் வந்த நல்லூர் என்னை ஆவலுடன் வரவேற்றது. வேறு மாநிலத்தில் அன்றாடப்பாடுகளுடன் ஜீவித்திருந்த என்னைத் தொலைபேசியில் அழைத்தார் அப்பா.

‘‘எலெக்சன்ல மெம்பருக்கு நிக்கிறேன்யா… உடனே வா!’’

ஊருக்குப் போய் இறங்கி யதும், நான் முதலில் சந்தித்த வேட்பாளர் அப்பா அல்ல. அவரது தற்காலிக வைரியான காசிநாதன். என்னைப் பார்த்துவிட்டுப் பிறகு தன் வழியே போனார். ஆனாலும், புறக்கணிக்கும் பாவம் தெரியவில்லை. ‘‘சித்தப்பு… நான்தான்!’’ என்றேன். குலுங்கும் ஆவேசம் முகத்தில் கொப்புளிக்க, மெள்ள நடந்துவந்து என்னைக் கட்டிக்கொண்டார். ஒரு தேர்தல் வந்து பிரித்துவிடக்கூடியதல்ல அந்த இறுக்கம். ‘‘டேய்… சிக்குன்குன்யாடா! ரெண்டு நாளா கண்ணுந் தெரீல, காதுங் கேக்கல… நடக்க முடியலடா… நல்லா இருக்கியா?’’

‘‘ம்… ஆமா, கண்ணே தெரியலியே, எப்படி ஆள் பார்த்து ஓட்டுக் கேட்டு நாம ஜெயிக்கிறது?’’

‘‘ஜெயிச்சா ஊருக்கு நல்லது. தோத்தா நமக்கு நல்லது’’ என்று கிழக்குப் பார்த்து நடந்தார். நான் மேற்குப் பார்த்து நடந்தேன்.

அப்பா எங்கள் புரோட்டாக் கடைக்கு லீவு விட்டுவிட்டு, சேரில் இருந்து கல்லாப்பெட்டி மேல் காலைப் போட்டு அமர்ந்திருந்தார். வலது கால் பெருவிரல் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு கோழி முட்டை இருந்தது. நகம் ரிப்பேராம்.

ஆறாவது வார்டை உடல் பிணியாளர்களுக்கென ஒதுக்கிவிட்டார்களா என்ன? கட்சி வேட்பாளரான கருப்பண்ணன் நலமுடன் வலம் வருவதாகச் சொன்னார் அப்பா. மூன்று வேட்பாளர்களின் வயதையும் கூட்டிப் பார்த்தேன். நூற்று எழுபதுக்கும் ஏழெட்டு மேலாக வந்தது. ஆறாம் வார்டு மொத்தத்தில் முதியவர்களுக்காக ஒதுக்கப்பெற்றுவிட்டது ஊர்ஜித மானது.

இந்திய அரசு மணிமுடி முதல் அடி நுனி வரை ஒரே மாதிரிதான் இருக்கிறது. இது பற்றிய சந்தேகத்தை அப்பா விடம் கேட்டேன். ‘‘அப்படியெல்லாம் கிடையாது. இடை யில பத்துப் பதினஞ்சு வருஷம் உள்ளாட்சித் தேர்தல் நடக்காமயே இருந்தது பாரு. அது கொஞ்சம் எஃபெக்ட் பண்ணுது’’ என்றார். நான் அவரது அரசியல் பார் வையை வியந்தேன்.

இவ்வகையின் அறிதல் முறை சாமான்யமாக வந்ததல்ல. வெளித் திண்ணையில் அமர்ந்து, வருவோர் போவோருக்கு சளையாமல் காபி வைத்துத் தந்து, கலந்துரையாடிப் பெற்ற அறிவாகும். கோவிந்தன் செட்டி யார் கடையில் அம்மா சாசுவதக் கடனாளியாக இருப்பதன் காரணங்களில் காபித் தண்ணியும் ஒன்று.

தேர்தலில் நிற்பதற்காக, பஞ்சாயத்து மற்றும் கிராம அலுவலகத்தின் நிலபுல வரிகள் அனைத்தையும் கட்டியிருப்பார் அப்பா. கோவிந்தன் செட்டியார் கடைக் கடனையும் அடைத் தால்தான் தேர்தலில் நிற்க முடியும் என்றிருந்தால், அப்பா தேர்தலில் நின்றி ருக்க முடியாது.

‘‘சரீங்கப்பா… எலெக்சன் டைம்ல கடை இருந்தா பத்து ஐந்நூறுக்கு ஏவாரமாவுது ஆகும். இப்ப லீவு வுட்டா எப்டி… மாஸ்டர் எங்கே?’’

‘‘மாஸ்டரா… அவரு சம்சாரம், அஞ்சாவது வார்டுக்கு நிக்குது!’’

ஆண்டவன் அளவிலா விளையாட்டுடையவன் என்பதை அன்றைய தினத்துக்கும் உறுதி செய்துகொண் டேன். ‘‘நமக்கு என்ன சின்னம்?’’

‘‘கடிகாரம்’’ & இதைச் சொன்னதற்குப் பிறகு, அவர் இரண்டு மாத்திரை நேரம்கூட எடுத்துக்கொள்ளாமல் கட்டளை இட்டார். மனித மூளையில் திட்டங்கள் தோன்றுகிற வேகத்தை உணர்கிற வர்கள், பிரபஞ்சம் உருவானதற்கான ‘பிக்&பேங்’ தியரியை ஒப்புக் கொள்ளவே செய்வார் கள்.

‘‘நீ ஒண்ணு பண்ணு… எப்படியும் எலெக்சனுக்குள்ள பெங்களூர் போயிட்டுதானே வருவே! அங்கே பதினஞ்சு, இருபது ரூபாய்க்கெல்லாம் வாட்சு கிடைக்கும்ல… ஒரு முந்நூறு வாங்கிட்டு வந்துடு. என்ன ஒரு ஐயாயிரம் ஆகும்’’ என்றார். எனது சொந்தக் கடிகாரத்தின் நொடி முள் தயங்கிவிட்டுப் பிறகு ஓடியது. அப்பாவுக்கே இப்படியான சாத்தியம் இருந்தால், அரசாங்கத்தின் சாத்தியங்களை யோசித்தேன். மலைப்பாக இருந்தது. அப்பா உடனடியாக இயல்பு உலகத்துக்குள் பிரவேசித்தார்.

‘‘சாந்தி ஓட்டு போட வருவாளா?’’

‘‘வருவா. ஒரு பத்தாயிரம் செலவாகும்.’’

‘‘பத்தாயிரமா?’’

‘‘ஆமா, கல்யாணமாகி ஒரே வருஷத்துல அவ செயினை வாங்கி அடகுவெச்சு, நாலு வருஷமா திருப்பித் தராம இருக்கீங்கல்ல. அதை மீட்டுக்குடுத்தா வருவா. இல்லைன்னா இல்ல.’’

‘‘டேய் டேய்… ஜெயிச்சாப் பாத்துக்கலாம்டா!’’ & 38 வயது மகனை 65 வயது தகப்பன் கொஞ்சுகிற காட்சியை உலகம் பார்க்காமல் போயிற்று.

அப்பா கல்லாப் பெட்டிக்குள்ளிருந்து ஆறாவது வார்டின் வாக்காளர் ஜாபிதாவை எடுத்து என் கையில் தந்தார்.

‘‘முந்நூத்திப் பத்து ஓட்டுல, ஒரு நூத்தம்பத எப்படியும் புடிச்சிரணும். புடிச்சிரலாம்.’’

ஜாபிதாவை அவர் கையில் கொடுத்துவிட்டுப் போய் அம்மாவைப் பார்த் தேன். அப்படியே பொழுது ஓடிவிட, காலையில் தனி ஆளாக வீட்டுக்கு ஒரு நடை போய்விட்டு வந்துவிடத் தீர்மானித்ததாக அப்பா விடம் சாயங்காலம் அறிவித்தேன்.

‘‘சரி… போய்ட்டு வா. நம்ம சின்னம் தென்ன மரம்’’ என்றார் அப்பா.

‘‘என்னப்பா, கடிகாரம் என்ன ஆச்சு?’’

‘‘அது அந்த ஆபீஸரு ஏதோ குளறுபடி பண்ணிட்டாப்லப்பா..! சரி, அத விடு. அதெல்லாம் உனக்குப் புரியாது… தென்ன மரம்.’’

‘‘என்னப்பா ஒரு சின்ன விவகாரத்துலகூடவா நம்மால ஸ்ட்ராங்கா இருக்க முடியல?’’

பெங்களூர் போய் கடிகாரம் வாங்கி வரும் கட்டாயத்தில் இருந்து தப்பி யதில் எனக்கு மகிழ்ச்சி. நேரம் நல்ல நேரம். ‘‘சரி… இப்ப எப்பிடி? தேனி, பெரியகுளத்துல எல்லாம் நெறய தென்ன மரங்களை வெட்டிட்டிருக்காங்க. நாப் பது லாரி புடிச்சு ஒரு 300 மரம் கொண்டாந்துரவா?’’

‘‘டேய்… ஓட்டு கேக்கப் போற பக்கம் இப்படிப் பேசிடாதடா. உள்ள ஓட்டக் கொறச்சுறாத!’’

நிராயுதபாணியாக வாக்கு வங்கியின் லாக்கரை உடைக்கக் கிளம்பிவிட்டேன். சாவி, மக்களின் கைகளில் இருந்தது. விடை, பெட்டி உடைபடும் நாளில் தெரியும்.

காலை பதினோரு மணி வாக்கில் வாக்குச் சேகரிக்க அமைச்சர் வருகிறார் என்று கேள்விப்பட்டேன். அடுத்த ஐந்தாவது நிமிடம் நரேந்திரனைச் சந்தித்தேன்.

எங்கள் ஊர் மற்றும் கிராமத்தின் அமைப்பு என்னவென்றால், பனை நெடுங்காலமாகவும் பன்னெடுங்கால மாகவும் மது கிடைத்தே வருகிறது. வாக்காளர்களும் அவர்தம் குழந்தை குட்டிகளுமாக அஞ்சாயிரம் பேர் கொண்ட கிராமத்தில் நூலகம்தான் ஒன்றில்லை. தற்போது கிராமத்தின் மதுக் கடைக்குப் பூவரச மரத்தில் போர்டு தொங்குகிறது. கீழ்க்காற்றில் உதிரும் இலைகள் சில, நாங்கள் புரோட்டா போடும் தோசைக் கல்லில் விழும். குடிமக்கள் அயலானை நேசிப் பது அல்லது ஏசித் தீர்ப்பது என முடிவெடுத்த நாள் முதல், அதன் பலா பலனை அனுபவித்து வருகிறோம். படிப்பதைவிட குடிப்பது நல்லதென அரசு நினைத்திருக்கக்கூடும்.

நூலகக் கோரிக்கையை பிரஸி டென்ட்டுகளாக இருந்த அக்காக்கள், பெரியப்பாக்கள், அத்தைகள், மனதுக்கு நெருக்கமான வார்டு மெம்பர்கள் அனைவரிடமும் கூறியிருக் கிறேன்.

பட்டாசுக் குடோனாக மாறி யிருந்த பழைய கள்ளுக் கடையின் படிக்கட்டில் அமர்ந்து, நானும் நரேந்திரனும் பேசியவாறிருந்தோம். ‘‘நண்பா! நம்ம ஊருக்கு லைப்ரரி வேணும். இன்னிக்கு மினிஸ்டர் கிட்ட பேசப் போறேன்.’’

நரேந்திரன் மந்திரம் போலச் சொன்னான்… ‘‘இப்பொழுதன்றி எப்பொழுது? நமையன்றி வேறு யார்?’’ அந்த நடும் பகலில் தந்தையை மறந்த தனயனானேன்.

குளியாமல் வாக்குச் சேகரித்தவன் வீட்டுக்கு வந்து குளித்து, ஜம்மென்று உடை பூண்டு ஆயத்தமாகிவிட்டேன். சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரு மாகப்பட்டவர் வருகிறாரே! எங்கள் சட்டமன்றத் தொகுதியின் விசேஷம் என்னவெனில், ஜெயித்து எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென்றால் பெயருக்கு முன்னாடியோ பின்னாடியோ ‘சாமி’ இருந்தாகவேண்டும். அமைச்சரைச் சந்திப்பதான ஆயத்த மன ஒத்திகை யில் பதற்றம் கண்டது.

எங்கள் கடைக்கு முன்பாக தார்ச் சாலைக்கு அப்பால், பட்டாசுச் சரத்தை விரித்தான் ராமராஜன். சரத் தின் ஒரு முனைக்கும் எங்கள் கட்டுத்தறியில் கட்டப்பட்டு இருந்த எருமையின் காதுக்கும் பத்தடி இடை வெளி இருந்தது. கழுநீர் ஊற்றிவிட்டு வந்த பெரியப்பா பட்டாசுச் சரத்தை முறைத்தார். ‘‘பட்டாசு வெடிக்கறதைப் பத்தி ஒண்ணும் சொல்லிறாதீங்க. நம்ம ஊர்ல பட்டாசு வெடிக்கிறதுல பல சண்டைக வந்திருக்குது’’ என அறி வுறுத்தினேன். மாட்டுச் சட்டி முதல் மின்னணுச் சப்பட்டை வரை பல தேர்தல்கள் கண்ட அவர் ஒன்றும் பேசாமல் சாப்பிடப் போய்விட்டார். பசித்த வயிற்றுடன் அரசியல் விற்பன்னர் ஆக முடியாது என்பதாக நானும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மெதுவாக ராமசாமியின் சைக்கிள் கடைக்கு வந்தேன். அங்கிருந்து அறு பதடி தூரத்தில் அமைச்சர் வருகைக்கான பந்தல் போடப்பட்டு இருந்தது.

அந்தக் கடையின் சிறப்பு என்ன வென்றால், கூட்டத்துக்கு வந்தவராக வும் காட்டிக்கொள்ளலாம்; கூட்டத்துக்கு வரவில்லை, கடைக்கு வந்தேன் என்றும் காட்டலாம். இப்படியான இடத்தில் டீ டம்ளரும் சிகரெட்டும் பிடித்து அமர்கிறவர்களைப் பார்த்து தான் மைக் மாந்தர்கள், ‘மறைந்திருந்து கேட்கும் மாற்றுக் கட்சித் தோழர்களே!’ என விளிப்பார்கள்.

அங்கே எனக்கு முன்பே இருந்த தம்பி பாஸ்கர் என்னைப் பார்த்து, ‘‘வெளியூர் போறியா?’’ என்றான்.

‘‘இல்ல… மந்திரியப் பார்க்கப் போறேன்.’’

‘‘பாரு.’’

‘‘அதில்லடா… ஊர்ல லைப்ரரி வேணும்னு கேக்கப் போறேன். ஊருக்கு என்ன செய்யணும்னு கேப்பாருல்ல, அப்ப இதைப் பத்தி பேசப் போறேன்.’’

‘‘இது ஆவறதில்ல! குளிச்சு முடிச்சு அயர்ன் பண்ணுன சட்டை வேற போட்டுக்கிட்டு… ம், என்னமோ பண்ணு. உன் தோரணையப் பாத்தா, ஏதோ அவங்க கட்சிக்கு வேல செய்ற மாதிரி இருக்குது’’ என்று சொல்லி விட்டு இடம் விட்டகன்றான். ஒரே கடையில் இரண்டு சிங்கங்கள் அதிக நேரம் இருத்தலாகாது!

நான் கொஞ்ச நேரம் ராம்ஸ் கடையில் இருந்துவிட்டு, பந்தலுக்குள் நண்பராகப்பட்ட நான்காம் வார்டு மெம்பரின் தலை தெரிந்ததால், அருகில் சென்று மெல்லிய குரலில், ‘‘சத்திவேலு! நான் மினிஸ்டரை ஒரு நாலு நிமிஷம் பாத்துப் பேசணும்’’ என்றேன். அவர் இடது கையால் மண் மாதாவைச் சுட்டிக்காட்டி ‘‘இங்கியே பேசு… நான் அவருகிட்டச் சொல்றேன்’’ என்றார். சத்திய ஒளியும் நட்பு உணர்ச்சியும் அப்போது பந்தலின் கீழ் வெண் வெண் வட்டங்களாகச் சிமிட்டிக் கிடந்தன. எனது எதிர்பார்ப்பிலும் அவரது உறுதி மொழியிலும், அந்த நேரம் உலகின் எந்த மாசும் படிந்திருக்க வில்லை.

சற்று நேரத்தில் தாரை தப்பட்டைக் குழு ஒன்று வந்து சேர்ந்து, தட்டி முழக்க ஆரம்பித்தது. கும்பல் தலை தலையாகப் பெருக ஆரம்பித்தது. அமைச்சர் காரில் வந்து இறங்கியபோது ராமராஜ் வெடியைப் போட்டான்.

அமைச்சர் கார் விட்டு இறங்குகை யில், எனக்கும் அவருக்கும் இருபது அடி இடைவெளி இருந்தது. ஒரு ஐம்பது மீட்டருக்கு தப்பட்டை முழங்க நடாத்திக் கூட்டிப்போனார்கள். வெற்றிப் பேரொலியைக் காண எத்தனிக்கும் சேர்ந்திசை தனது வளை யத்துக்கு வெளியே என்னை வைத்தது. இப்போது கட்டளைகளும் அடுத்த செயல் திட்டங்களும் ஒலி பெருக்கி வழியாக வெளிவர ஆரம்பித்தன. அவருக்கான நிரல் அறிவிக்கப்பட்ட போது அமைச்சர் பேசப் போந்தார்.

நானும் அமைச்சரும் சந்திக்கலாமா என வார்டு மெம்பரிடம் கேட்ட அதே இடத்தில் அமைச்சர் நின்று உரையாற்றினார். அவர் கண்களையே பார்த்தவாறு நான் நின்ற இடம் பத்தடி தள்ளி பந்தலுக்கு வெளியே!

மாநிலம் முழுக்க என்னென்ன செய்தோம் எனப் பட்டியலிட்டார். ‘உங்க ஊருக்கு என்ன வேணும்?’ என்று அவர் வினவவில்லை. என் மனக்கோவையில் நான் தண்டவாள மாகி வீழ, அதிகாரம் என்னும் இயந்திரம் என் மீது ஓடுவதாகப் பட்டது. தலையை உதறி கண் மூடிக் கண் விழிக்கையில் அமைச்சர் மறுபடியும் கார் ஏறிவிட்டார். அவர் பேசி முடித்து அமைதி நிலவிய ஓரிரு நொடிகளைப் பயன்படுத்தி நான் ‘கிளிவலம்வந்த நல்லூருக்கு ஒரு நூலகம் வேண்டும்’ எனக் கூவியிருக்க வேண்டும். வேரற்ற தென்னை மரம் போல உறுதியிலிருந்து சரிந்துவிட் டேன்.

வீடு திரும்பும்போது, ராமராஜு வெடி கொளுத்திப்போட்ட இடத் தைப் பார்த்தேன். மண் சிராய்த்த தீற்றல்களுக்கு மேலாகக் காகிதங்கள். திரிகள் போன இடம் தெரியவில்லை. ‘எது உத்தமம்? படிப்பதா, வெடிப் பதா?’ என்கிற கேள்வி சிவப்பும் வெள்ளையுமாய்ச் சிதறியிருக்கக் கண்டேன்.

வீட்டுக்கு வந்தபோது, முகப்பைக் கடையாக மாற்றுவதற்கான முஸ்தீபில் சேர்களை எடுத்துவைத்துக்கொண்டு என் தம்பி, ‘‘உனக்கு அரசியல்னா என்னன்னு நான் சொல்றேன்…’’ என ஆரம்பித்தான்.

‘‘நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். ஆம்லெட்டுக்கு வெங்காயம் வெட்ட லாம். இரு, சட்ட மாத்திட்டு வந்திட றேன்’’ என்று வீட்டுக்குள் நுழைந்தேன். அஞ்சாம் வார்டு வேட்பாளரின் கணவர் புரோட்டாவுக்கான மாவை ஓரமாக உருட்டிக்கொண்டு இருந்தார்.

– அக்டோபர் 2006

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு ஊர்ல ஒரு தேர்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *