ஏட்டுச் சுரைக்காய்!

 

அறைக் கதவைத் தட்டும் ஒலி கேட்டது.

’ஞாயித்துக் கிழமை கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்க, சே!’ என்று அலுத்துக்கொண்டேன்.

“யாரு?”

பதிலாக மீண்டும் கதவைத் தட்டும் ஒலிதான் கேட்டது.

திறந்து பார்த்தால் வாசலில் தாணாக்காரர் ஒருவர்.

“நீங்கதானே எழுத்தாளர் ஏகலைவன்?”

“ஆமாம், ஏன்?”

“இன்ஸ்பெக்டர் ஐயா உங்களைக் கையோட கூட்டியாரச் சொன்னார்.”

“என்ன விஷயம்?”

“தெரியாது.”

“ஏங்க, ஞாயிற்றுக் கிழமை காலைல பதினொரு மணிக்கு வந்து உடனே வான்னா எப்படி வரமுடியும்? இப்பதான் எழுந்து பல்விளக்கினேன். இன்னும் காப்பி கூட சாப்பிடலை!”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது சார்! இன்ஸ்பெக்டர் சொன்னா செய்ய வேண்டியது தானே என் கடமை?”

“சரி, உங்க பேரென்ன? உங்க அடையாளம் காட்டுங்க?”

“என்ன சார் உங்க கதைல வர்றாப்பல கேக்கறீங்க? என் பேர் ஏழுமலை. அடையாளம் என் சட்டைல இருக்கு பார்க்கலை?”

என் கதைகளைப் பற்றி இவர் பேசியதில் அவரிடம் கொஞ்சம் தோழமை தென்பட்டது.

“என் கதைலாம் நீங்க படிப்பீங்களா? எப்படி யிருக்கு?”

“அதான் நாலஞ்சு பத்திரிகைல வாராவாரம் மாசாமாசம் சிறுகதைன்னும் தொடர்கதைன்னும் வருதே? இதைத் தவிர மாத நாவல். வீட்ல படிப்பாங்க. நானும் உங்க துப்பறியும் கதைகள்லாம் படிப்பேன். எங்க இன்ஸ்பெக்டர் அநேகமா எல்லாக் கதைகளும் படிச்சிருக்கார். அடிக்கடி உங்களைத் தாறுமாறாத் திட்டுவார்!”

“ஏன்? உங்க இன்ஸ்பெக்டர் பேர் என்ன?”

“அதான் அவரைப் பாக்கப் போறீங்கில்ல? நேர்லயே கேட்டுக்கங்க. உங்க கதை பத்தி அவரே சொல்வார்.”

“என்னய்யா புதிர் போடறீங்க? வந்த விஷயம் சொல்லுங்க?”

“அதெல்லாம் தெரியாது சார்! எதுவும் சொல்லாம உங்களக் கூட்டியாறச் சொன்னார் இன்ஸ்பெக்டர். நீங்க வாங்க சட்டுனு…”

முண்டா பனியனை உள்ளே தள்ளிப் பேண்ட் அணிந்துகொண்டு மேலே ஒரு அரைக்கைச் சட்டையை மாட்டிக்கொண்டு என் பேனா, பர்ஸ், செல்ஃபோன், வாட்ச், ஜோல்னாப்பை சகிதம் அறையில் இருந்து மாடிப்படி இறங்கி அவருடன் கிளம்பினேன்.

“பக்கம் தான், நடந்தே போயிடலாம்.” சைக்கிளைத் தள்ளிக்கொண்டே தாணாக்காரர் நடக்கக் கூடவே நடந்தேன்.

“உங்க காவல் நிலையத்துக்கா போறோம்?”

“இல்லை, இன்ஸ்பெக்டர் ஐயா ரூமுக்கு. போற வழியில ஹோட்டல் ஆர்யபவன்ல எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு.”

“நல்லதாப் போச்சு! நானும் அங்க என் காலைக் காப்பிய சாப்டுக்கறேன். அப்புறம் மதியானம் ஒரு மணிக்கு அங்க மீல்ஸ்க்கு வருவேன்.”

ஆர்யபவனில் அவருக்கும் ஒரு காப்பி வாங்கிக் கொடுத்து, என்னைக் கூப்பிட்டு அனுப்பியது அவர்கள் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இல்லை என்றும், நேற்று சென்னையில் இருந்து ஒரு கேஸ் விஷயமாக வந்துள்ள ஒரு காவல்துறை ஆய்வாளர் என்றும் தெரிந்துகொண்டேன். எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் அந்த டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பெயரோ மற்ற விவரங்களோ சொல்ல மறுத்துவிட்டார்.

என் கதைகளைப் படிக்கும் சென்னைக் காவல்துறை ஆய்வாளர் யார்? ஏன் அவர் என்னைத் திட்டவேண்டும்? நேரில் காணவும் வரச்சொல்வது ஏன்? ஏதேனும் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டேனோ என்னும் அச்சமும் எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்னும் சமாதானமும் ஒரே சமயத்தில் என்னுள் எழுந்தது. தாணாக்காரர் ஆர்யபவனில் வாங்கிய பார்சலில் எழுந்த பிரியாணி வாசனை வேறு பசியைக் கிளப்பியது.

***

கோமதி லாட்ஜ்-இல் மாடிப் படியேறி இரண்டாம் மாடியில் நுழைந்தோம். தாழ்வாரத்தில் இரண்டு அறைகளைக் கடந்ததும் தாணாக்காரர் மூன்றாம் அறைக் கதவை ஒரு சமிக்ஞை ஒழுங்கில் தட்டக் கதவைத் திறந்துகொண்டு லுங்கி-முண்டா பனியனில் நின்றது உயரமான, உடல்-வலிவுள்ள, என் வயதொத்த ஓர் உருவம்.

“இவர்தான் எழுத்தாளர் ஏகலைவனா?” என்னை மேலும்-கீழும் பார்த்தார் அந்த டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர். “உள்ளே வாரும். உட்காரும்.”

தாணாக்காரர் தந்த பார்சலை வாங்கிக்கொண்டு அவருக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு என்னை நோக்கித் திரும்பினார் இன்ஸ்பெக்டர். “உங்க கதைகள்ல எங்க போலீஸ் டிபார்மென்ட் பற்றித் தாறுமாறா எழுதறத்துக்கும் ஒரு வரம்பு இருக்கணுமில்ல?”

“அப்படி என்ன எழுதிட்டேன் நான்?”

“என்னவோ உங்க பிரைவேட் டிடெக்டிவ் அருண்தான் ரொம்ப புத்திசாலி மாதிரியும் அவருக்கு உதவி செய்யற எங்க போலீஸ் இன்ஸ்பெக்டர்லாம் மாங்கா மடையன்கள் மாதிரியும் எழுதறீங்களே? உங்க கதைகள்ல நீர் போடற குற்றம் அல்லது கொலை முடிச்சை எங்க ஆளுங்களுக்கு அவிழ்க்கத் தெரியாதுங்கறது உங்க எண்ணமா? எங்க போலீஸ்துறை குற்ற ஆய்வாளர் ஒருவரோட நீர் கூடவே இருந்து நடைமுறை அனுபவமா ஏதாவது துப்பு துலக்கியிருக்கிறீரா? நான் உங்க எல்லாக் குற்றவியல் கதைகளையும் நாவல்களையும் படிச்சிருக்கேன். நீர் போடற முடிச்சும் அதை அந்த அருண் அவிழ்க்கிற விதமும் நல்லாத்தான் இருக்கு, இல்லேங்கல. வணிகம் சார்ந்த பத்திரிகை, பதிப்பகங்களுக்கு எழுதற போது, என்னதான் எங்க போலீஸ் இமேஜ் மக்கள் மத்தியில மங்கியிருந்தாலும் எங்க துறைகள்ல இருக்கற நல்ல விஷயங்களையும் திறமைகளையும் ஹைலைட் பண்றது உங்க மாதிரி புகழ்பெற்ற ஒரு எழுத்தாளருக்குப் பொறுப்பு இல்லயா? எங்க டிபார்ட்மென்ட் இமேஜை கெடுதுன்னா அதுக்கு மூல காரணமான அரசியல்வாதிகளைப் பத்தி எழுத தைரியம் இருக்கா உமக்கு?”

எண்ணையில் விழுந்த வடகமாகப் பொரிந்து தள்ளிய இன்ஸ்பெக்டரின் முகபாவங்களைக் கண்கொட்டாமல் பார்த்தேன். சட்டென்று என்னுள் பொறி தட்டியது.

“டேய், ராஜேந்திரா!” என்றேன். “எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து! எப்படீடா இவ்வளவு உயரமானே? எப்ப இன்ஸ்பெக்டர் ஆனே? வத்தலக்குண்டு ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் நான் திருச்சில காலேஜ் படிக்கப் போனேன். நீ மிலிட்டரில சேர்ந்துட்டதா இல்ல கேள்விப் பட்டேன்?”

“என்னய்யா வாடா-போடான்னு ஆரம்பிச்சுட்டே? என்ன உளர்றே?”

“ராஜேந்திரா, வாணாம்! எனக்கு முதுகைக் காட்டி நீ உங்க தாணாக்காரட்ட பேசினபோதே உன் பின் கழுத்தில் இருந்த தழும்பை வெச்சுக் கண்டுபிடிச்சுட்டேன். அடுத்து நீ படபடன்னு பேசினபோது உன் குரல் காட்டிக் கொடுத்திருச்சு! சொல்லு, ராஜேந்திரா, எப்ப போலீஸ் வேலைல சேர்ந்தே? என்ன விஷயமா சிவகங்கை வந்திருக்கே?”

“அடப்பாவி, கண்டுபிடிச்சிட்டியே! துப்புத் துலக்கறதில எனக்கு டிபார்ட்மென்ட்ல நல்ல பேர்னா, நீ என்னை விடப் பெரிய ஆளா இருப்பே போலிருக்கே? வா, முதல்ல சாப்டுட்டு அப்புறம் பேசலாம். உனக்கும் எனக்கும் பிடிச்ச சேவையும் விஜிடபிள் பிரியாணியும் கான்ஸ்டபிள் மூலமா வாங்கி வெச்சிருக்கேன். நம்ம ரெண்டுபேரும் ஸ்கூல் ஃபைனல் படிச்ச போது வத்தலக்குண்டு வெங்கடேஷ் கபேல அடிக்கடி சாப்பிடுவோம், ஞாபகம் இருக்கா?”

“அதெல்லாம் ஒரு காலம் ராஜேந்திரா!” என்றேன், பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்து ஒரு கவளம் வாயில் இட்டபடி.

“அதுசரி, சீனிவாசன்–நண்பர்கள் மத்தியில சீனு–உன் பேர் இல்லையா? அப்புறம் எப்படி ஏகலைவன்னு புனைப்பெயர் செலெக்ட் பண்ணினே?”

“நாட்டியம், நடிப்பு, ஓவியம் மாதிரி நுண்கலைக்கு ஒரு தனிப்பட்டவரோ நிறுவனமோ குருவாக இருப்பது வழக்கம் இல்லையா? ஒரு எழுத்தாளருக்கு அப்படி ஒரு குரு கிடையாது. யாரும் இப்படித்தான் எழுதனும்ணு சொல்லித்தர முடியாது. ஒரு எழுத்தாளன் தன் துறை மற்ற துறைகளில் உள்ள கலைஞர்களை நோக்கி ஆராய்ந்து ஏகலைவன் மாதிரி தானே உருவாகிறான். அதனால்தான் இந்தப் பெயர்.”

அரட்டை அடித்துக்கொண்டே ஒருமணி நேரம் சாப்பிட்டோம். ராஜேந்திரனுக்கு மிலிட்டரியில் வேலை கிடைக்காததால், அவன் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றதும் மனுப்போட்டதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டு, சீக்கிரமே இன்ஸ்பெக்டர் பிரமோஷன் பெற்று, அவனுக்கு வாய்த்த கேஸ்களில் திறமையாகத் துப்புத் துலக்கியதால் ஒரு டிடெக்டிவ் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்று, சென்னை போலீஸ் டிவிஷனுக்கு மாற்றலாகி வந்ததாகச் சொன்னான். பரஸ்பர குடும்பநலன் விசாரிப்புகளுக்குப் பிறகு நான் விடைபெற்றுக் கிளம்ப முயன்றபோது என்னைத் தடுத்து நிறுத்தினான்.

“ஐயா எங்க கிளம்பிட்டீரு? உங்க ஏட்டுச் சுரைக்காயை வெச்சுக் கறிபண்ண முடியுமான்னு பார்க்கவேண்டாம்? சமீபத்தில திருப்பூர் மில் ஓனர் ஒருத்தர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வந்தது தெரியுமா?”

“தெரியும்”, என்றேன். “அதன் பின்னணியில ஒரு பழம் தின்னு கொட்டை போட்ட அரசியல்வாதி இருப்பதா கிசுகிசு கூடப் பார்த்தேன்.”

“அதேதான். அந்தக் கொலையைச் செஞ்சவன் இந்த ஊர்ல தங்கி இருக்கறதா எங்களுக்கு இன்டல். இன்னொரு ஹிட்டுக்காக வந்திருக்கான்னு எங்களுக்கு சந்தேகம். அவனும் அவன் கூட்டாளி ஒருத்தனும் நாட்டுத் துப்பாக்கியோட அலையறதா செய்தி. இன்னிக்கு நைட்டு என்னோட சேர்ந்து துப்பு துலக்குகிறீர். உம்ம மூளை எனக்கு உதவும். முதல்ல அவன் நடமாட்டம் இருக்குன்னு உறுதிப்படுத்திப்போம். அதுக்கப்பறம் ஒரு போலீஸ் படையை வரச்சொல்லி ரெண்டு பேரையும் பிடிப்போம். என்ன உன் முகத்தில ஈயாடலை?” என்றான்.

எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!

- ‘இலக்கிய வேல்’ ஜூலை 2015 

தொடர்புடைய சிறுகதைகள்
"பூக்காரி வந்து பூவைப் போட்டுட்டுப் போய்ட்டா போலிருக்கே, நீங்க பார்க்கலையா?" என் கணவரிடம் இதுதான் பிரச்சினை. வீட்டு வாசல் வரை அமைந்த திறந்தவெளியில் மாலையில் காலார நடந்துகொண்டே புத்தகம் படிப்பவர் சுற்றிலும் நடப்பதை முற்றிலும் மறந்துவிடுவார்! நுழைவாயில் இரும்புக் கதவின் ஈட்டிக் கம்பியில் மாட்டியுள்ள ...
மேலும் கதையை படிக்க...
[ஓர் இளம் தம்பதியினரின் மென்மையான உணர்வுகளை--ஊடல்களை சித்தரிக்கும் இனிமையான சிறுகதை.] (’மனைமாட்சி’ என்று நான் தலைப்பிட்டிருந்த இந்தக்கதை, ’அவன் அவள்...’ என்ற தலைப்பில், கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு சி.க. இதழில் பிரசுரமாகியது; அட்டைப்படக்கதையாக என்று ஞாபகம். இங்கு நான் பதிவது எடிட் செய்யப்படாத ...
மேலும் கதையை படிக்க...
"மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு!" ராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக் கழற்றத் தோன்றாமல் அவசரமாக அந்த ஏர்-மெய்ல் உறையைப் பிரித்தேன். ராதாவும் என்னுடன் சேர்ந்து கடிதத்தின் வரிகளில் கண்களை ஓட்டினாள். "...உங்களுடைய ’மைக்ரோ மோஷன் பிக்சர்ஸ்’ ...
மேலும் கதையை படிக்க...
முரளிதரன் ஒரு நெடிய பெருமூச்சுடன் எழுந்துகொண்டான். கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். பேண்ட்டின் பின்புறம் படிந்திருந்த உலர்ந்த புல் துணுக்குகளைத் தட்டிவிட்டான். வலது கையில் கட்டியிருந்த டிஜிடல் கடிகாரத்தில் அவன் எப்போதோ அமைத்திருந்த அலாரம் ’கீங்க்கி...கீங்க்கி...’ என்று சிணுங்கியது. "எழுந்திரு மோகனா! மணி ஆறே-காலாச்சு, ...
மேலும் கதையை படிக்க...
பாட்டிலைக் கவனமாகத் திறந்து, சாய்த்து, பியர் கிளாஸையும் சாய்த்து, அதன் உட்சுவர் வழியே பொன்னிற பியரை வழியவிட்டு முக்கால் பங்கு நிரப்பிய வாசுதேவன், "கோபி, உன் சவாலை நான் ஏற்கிறேன்" என்றான். "சும்மா இரய்யா, அவன் ஏதோ விளையாட்டுக்குச் சொல்றான்" என்றான் ஸ்டீபன், ...
மேலும் கதையை படிக்க...
வீட்டின் சின்னத் தோட்டத்தில் ஒரு பெரிய பங்கணபள்ளி மாமரம். ஒவ்வோர் ஆண்டும் அது எங்கள் நாக்குத் தினவைத் தீர்த்துவைக்கும். அதுவும் போன வருடம் நாங்கள் ஒரு மாம்பழம் கூடக் கடையில் வாங்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! முன்னொரு காலம் நாங்கள் லாயிட்ஸ் சாலையில் ...
மேலும் கதையை படிக்க...
யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம் ’ப்ராஹ்மண-பந்து’ ['யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்' என்பது அந்தணர்கள் தம் குலதர்மமாகப்பட்ட, வள்ளுவர் குறிக்கும் அறுதொழில்களையும், இந்த நாளிலும் தம்மால் இயன்ற அளவு செய்து வருவது அவர்களுக்கு உத்தமாக அமையும் என்பதாகும்.] "பாட்டி பாட்டீ, நோக்கு நான் ஹெல்ப் பண்ணறேன்", என்றான் ஆறு வயதுப் பேரன். ...
மேலும் கதையை படிக்க...
சைதாப்பேட்டை டாட்*ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில் ஒருவருக்கொருவர் ’காய் விட்டுக்கொண்டு’ பிரிந்தோம். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் மறந்தே போனோம். என் வாழ்வில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
ராமானுஜம் அலுவலகம் கிளம்ப சைக்கிளை சாய்த்து வலதுகாலால் பெடலைத் திருப்பி வசதியாக ஏறி அமர்ந்தபோது அவர் மனம் ’ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...’ என்றது. இது மட்டுந்தானா இன்னும் இருக்குது சாமி... கமலா, டேப் ரிகார்டரை சின்னதா வெச்சுக்கச் சொல்லு ரமாவை! தெரு முழுக்க அலர்றது." "சரின்னா. நீங்க சகுனம் ...
மேலும் கதையை படிக்க...
பூவே சுமையாகும் போது…
அவன் அவள்…
பெண்மையின் அவலங்கள்
முகம் தெரியாப் பகைவர்கள்
மானுடம் போற்றுதும்
கைக்கு எட்டியது!
பாட்டியும் பேரனும்
திருட்டுப் பட்டம்!
புதிய கோணங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)