எருமைமாடு சொல்வதை நம்ப வேண்டாம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,780 
 

ஒரு நல்ல குடும்பம். அவர்களுக்கு ஒரே பையன். பெற்றோர் அவனுக்கு நல்ல இடத்தில் மணமுடிக்க எண்ணினர். பையனோ தாசி வீட்டில் ஒரு பெண்ணைக் காதலித்தான். பலத்த எதிர்ப்புக்கிடையே அவளைத் திருமணமும் செய்துகொண்டு, பெற்றோருடனேயே நல்ல முறையில் குடும்பம் நடத்திவந்தான்.

அந்தச் சமயத்தில் ஒருநாள், அத் தாசிப் பேண்ணின் பழைய காதலன் அவளிருப்பிடத்தை எப்படியோ கேள்விப்பட்டு அறிந்து யாருமில்லா நேரம் பார்த்து அவள் வீட்டிற்கு வந்து, அவளுடன் பேசிக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கு கூடத்தில் கட்டியிருந்த எருமை மாடு தலையை வேகமாக ஆட்டி ‘ம்மா’ என்று கத்தியது. வந்தவன் உடனே பயந்து, இது எங்கே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று ஒடியே போய்விட்டான். உடனே தாசிப்பெண் எருமைமாட்டின் காலைப்பிடித்துக் கொண்டு கெஞ்சினாள் – இந்தா இதை யாரிடமும் சொல்லிவிடாதே என்று மீண்டும் மீண்டும் கெஞ்சுவதை அந்த நேரத்தில் வந்த அவள் கணவன் பார்த்துவிட்டுக் காரணம் கேட்டான். அவளும் ‘பழைய சிநேகன் ஒருவன் வந்தான் அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன்’ என்ற செய்தியைச் சொல்லிவிட்டாள்.

உடனே இவனும் ‘நம் குடும்பக் கெளரவம், பேர் எல்லாம் கெட்டுப்போகுமே என்று கருதி, இதை யாரிடமும் சொல்லாதே’ என்று, எருமையின் மற்றொரு காலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

வெளியே போயிருந்த தாயும் தந்தையும் வரவே, அவர்களும் இதுவெல்லாம் என்ன என்று மகனை விசாரித்து, செய்தியைத் தெரிந்துகொண்டதும், ‘ஐயோ! எங்கள் மானமே போகிறதே. எங்களைக் காப்பாற்று’ என்று எருமையின் மற்ற இரண்டு கால்களையும் பிடித்துக்கொண்டு கெஞ்சினார்கள்.

எருமை மிரண்டுபோய்க் கயிற்றை அறுத்துக் கோண்டு ஓடியது.

நம்ம வீட்டு எருமை ஊரெல்லாம் போய்ச் சொல்லி விடுமே என்று பயந்து, நாலுபேரும் கூடி என்ன செய்வது என ஆலோசித்தனர்.

உடனே ஒரு தமுக்கு அடிப்பவனைக் கூப்பிட்டு, “எங்க வீட்டு எருமை கயிற்றை அறுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டது. அது எங்கள் மருமகள் அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்ததாகத் தவறாக வந்து சொல்லும். அது உண்மையல்ல. ஆதை யாரும் நம்ப வேண்டாம்” என்று ஊர் முழுவதும் நன்றாகப் பறை அறைந்து சொல்ல ஏற்பாடு செய்தனர்.

எப்படி இச்செய்தி பரவுகிறது பாருங்கள்!

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *