கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 1,839 
 

அன்று திங்கட்கிழமை. மயிலாப்பூர்.

அன்று மாலை தான் இறக்கப்போவது பாவம் மூர்த்திக்குத் தெரியாது.

மூர்த்தி காலையிலேயே எப்போதும்போல் சுறுசுறுப்பாக எழுந்து, ஒன்பது மணி அலுவலகத்திற்கு கிளம்பத் தயாரானான். மனைவி மற்றும் ஒரே மகளை நேற்றுதான் ஒரு திருமணத்திற்காக ஸ்ரீரங்கம் அனுப்பி வைத்திருந்தான்.

பாத்ரூமில் கண்ணாடி முன் நின்று ஷேவ் பண்ணிக் கொண்டிருந்தபோது, அவனுக்குப் பின்னால் புஷ்டி மீசையுடன் திடீரென ஒரு புராணகால உருவம் காணப்பட்டது.

அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தான்…

“பயப்படாதே… நான்தான் எமன் மிஸ்டர் மூர்த்தி… இன்றுடன் உன்னுடைய பூலோக நாட்கள் முடிவுக்கு வருகிறது. என்னுடைய சென்னை லிஸ்டில் முதல் ஆளாக நீதான் இப்போது இருக்கிறாய்…”

மூர்த்தி எமனை கையெடுத்துக் கும்பிட்டு “நான் அதற்கு இன்னமும் ரெடியாகவில்லை எமதர்ம ராஜா… என்னை தயை கூர்ந்து விட்டுவிடுங்கள்.” என்றான்.

“நான் வெறும் எமன்தான். மனித ஜாதிதான் என்னை ‘ஐஸ்’ வைக்க தர்மராஜா என்கிற அடைமொழியை சேர்த்துக் கொண்டீர்கள்… சரி போகட்டும் உன்னுடைய கடைசி ஆசை என்ன? தயங்காமல் கேள்.”

மூர்த்தி உடனே சற்று நிதானமாக யோசித்தான். “என்னை மதித்து இவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள். என்னுடன் ஒரு கப் சூடாக ஒரு காபி சாப்பிட வேண்டும். அதுதான் என் கடைசி ஆசை… செய்வீர்களா?”

“பூ.. இவ்வளவுதானா? சரி இப்பவே உன் கையால் ஸ்ட்ராங்கா காபி போட்டுக் கொடு..”

எமன் ஹாலுக்குச் சென்று சோபாவில் அமர்ந்துகொண்டு, தன்னுடைய லேப்டாப்பை மடிமீது வைத்துக்கொண்டு அதைத் திறந்து அதற்கு உயிரூட்டினார். மூர்த்தி சமையலறையில் நுழைந்து காபி போட்டுக்கொண்டே யோசித்தான். அப்போது நல்ல ஐடியா ஒன்று அவனுக்குத் தோன்றியது.

ஈ மெயிலில் எமனிடம் பிரும்மா நிறையக் கேள்விகள் கேட்டிருந்தார். சென்னையின் இந்த வருட இறப்பு டார்கெட் எவ்வளவு? அதில் கொரோனாவில் எத்தனைபேர்? கொரோனா என்கிற பயத்திலும் பீதியிலும் எத்தனை பேர்? டெல்டா ப்ளஸ் பீதியில் எத்தனை? விபத்தில் எத்தனை? தற்கொலை எத்தனை? ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எத்தனை? மற்ற விதமான இறப்புகள் எத்தனை?

மெயிலைப் படித்த எமன், ஆமா இவருக்கு வேறு வேலை இல்லை என்று முணுமுணுத்துக் கொண்டார்.

அப்போது மூர்த்தி ஆவி பறக்கும் இரண்டு கப் காபிகளை எடுத்துக்கொண்டு எமன் முன்னால் வந்து அமர்ந்தான். பில்டர் காபி வாசனை மூக்கைத் துளைத்தது.

வாசனையை தனது பெரிய மூக்கால் ஆசையுடன் உறிஞ்சிய எமன், உடனே காபியை எடுத்துப் பருகலானார்.

“லேப்டாப்பில் என்ன விசேஷம், எமன் ஸார்…?”

“பிரும்மாவுக்கு எப்போதும் டேட்டா (Data) கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்… சென்னையில் இந்த வருட இறப்பு மொத்தம் எத்தனை பேர் என்று கேட்டு, அதற்கான டீடெய்ல்ஸ் கேட்டு என் உயிரை வாங்குகிறார்…”

லேப்டாப்பைத் திருப்பிவைத்து மூர்த்திக்கு தன்னுடைய டேட்டா பேசைக் (Data Base) காண்பித்தார். அதில் மூர்த்தியின் பெயர் முதலில் காணப்பட்டது.

எமன் திடீரென கொட்டாவி மேல் கொட்டாவி விட்டார். அப்படியே சோபாவில் சரிந்து தூங்க ஆரம்பித்துவிட்டார்.

மூர்த்தி தன்னுடைய sonata தூக்க மாத்திரை நன்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டதை உணர்ந்து கொண்டான்.

எப்படியும் எமன் எழுந்திருக்க குறைந்தபட்சம் ஒருமணிநேரம் ஆகும்.

லேப்டாப்பை அருகில் எடுத்து வைத்துக்கொண்டு அதை மெதுவாக ஆராய்ந்தான். 2021 ல் மட்டும் மொத்தம் 9600 இறப்புக்கள் காணப்பட்டன. மாதந்திர டீடெய்ல்ஸ் இருந்தது. அதில் அப்போதைக்கு முதலில் காணப்பட்ட தன்னுடைய பெயரை நீக்கிவிட்டு, டிசம்பர் 31ம் தேதிக்கு கடைசி இறப்பாக தன்னுடைய பெயரைச் சொருகினான். எனவே மொத்த இறப்புத் தொகை அதே 9600 தான். எமனுக்கு தன்மீது சந்தேகம் வராது என்று நினைத்து சந்தோஷமடைந்தான். உடனே மறக்காமல் தன்னுடைய மேனேஜருக்கு போன் செய்து அரைநாள் லீவு சொன்னான்.

ஒன்றரை மணிநேரம் கழித்து எழுந்துகொண்ட எமன், “ஐயாம் ஸாரி மிஸ்டர் மூர்த்தி மிகுந்த அசதியில் நான் சற்று தூங்கிவிட்டேன்…இந்தக் கொரானா பிரியட்டில் எனக்கும் வேலை அதிகம்… உன்னுடைய நல்ல பில்டர் காபிக்கு என்னுடைய நன்றிகள். உன்னோட மனைவியிடமும் மகளிடமும் ஆசைதீர இப்போதே பேசிக்கொள்… கவலைப் படாதே இறப்பு என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதுதான். சிலர் முன்னே; சிலர் பின்னே அவ்வளவுதான்… வரட்டுமா?”

தோளில் லேப்டேப்பை மாட்டிக்கொண்டு உடனே அங்கிருந்து எமன் மறைந்துவிட்டார்.

மூர்த்திக்கு ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும், தன்னுடைய புத்திசாலித் தனத்தால் அடுத்த ஆறுமாத கால அவகாசம் கிடைக்கிறதே என்று சந்தோஷமடைந்தான். இறப்பிற்காக தன்னை பொருளாதார ரீதியாக தயார் நிலையில் வைத்துக்கொள்ள, நிறைய இன்ஷூரன்ஸ்கள் எடுத்துக்கொள்ள முடிவெடுத்தான்.

எமன் மேகங்களுகிடையில் வேகமாகப் பயணித்து தன்னுடைய அலுவலகம் அடைந்தார். விஷ்ணுவிற்கு உடனே டேட்டா அனுப்பியாக வேண்டுமே…

மூர்த்தி போட்டுக் கொடுத்த அருமையான காபி நாக்கில் ஒட்டிக்கொண்டு காபியின் வாசனை இன்னமும் அவரது நாசிகளைத் துளைத்தது. அவன்மீது சற்று இரக்கம் ஏற்பட்டது. பாவம் நல்ல பையன். மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை வேறு.

அப்போதுதான் திடீரென அவருக்கு அந்த நல்ல எண்ணம் தோன்றியது. விஷ்ணுவிற்கு எண்ணிக்கைதான் சரியாக இருக்க வேண்டுமே தவிர, யார் யார் என்கிற பெயர்கள் முக்கியமல்ல…

லேப்டாப்பை எடுத்து வைத்துக்கொண்டு திறந்தார். அன்று இறக்க வேண்டிய முதல் ஐந்து நபர்களில், முதல் பெயரை நீக்கிவிட்டு, இரண்டாவது பெயரிலிருந்து நான்கு பெயரை அப்படியே முன்னேற்றி வைத்துக்கொண்டு, 2021 வருடக் கடைசியில் இருக்கும் பெயரை எடுத்து ஐந்தாவதாகச் சொருகினார்.

அவ்வளவுதான்…

அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த மூர்த்தி, மாலை நான்கு மணிவாக்கில் மார்பை இறுக்கிப் பிடித்துக்கொண்டு வலிக்கிறது என்று கதறினான்.

அருகிலிருந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் எமர்ஜென்சிக்கு மூர்த்தியை தூக்கிக்கொண்டு விரைந்தபோது, அங்கிருந்த ட்யூட்டி டாக்டர், “ஸாரி, மாஸ்ஸிவ் ஹார்ட் அட்டாக்… ஹி இஸ் நோ மோர்…” என்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)